ஓம் நமோ Dash!-மனிதன் இல்லைன்னா கடவுளே இல்லை!-4
கடவுள் இல்லை தான்! = நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை!
* ஆகா! கடவுள் இல்லாட்டா, நாம யாருமே இல்லை-ன்னு தானே சொல்லணும்?
* நாம இல்லாட்டா, கடவுளே இல்லை-ன்னு மாத்திச் சொல்லுறியே?
ஏன் கேஆரெஸ் எப்பமே இப்பிடி டகால்ட்டி பண்ணுற? கெட்ட பேரு வாங்கிக்குற? சாஸ்திர விரோதி பட்டமெல்லாம் ஒனக்குத் தேவையா? :)))
அட, "நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை"-ன்னு சொல்லுறது நான் இல்லீங்க! ஆழ்வார் தான் அப்படிச் சொல்றாரு! :) மேலப் படிங்க.....
சென்ற பதிவில் "நாரணம்" என்பது சங்கத் தமிழ்ச் சொல்லே-ன்னு பார்த்தோம் அல்லவா?
அதை மேலும் சான்றளித்துச் செவ்வியாக்கும் வண்ணம், நம் இராம.கி ஐயா, அருமையான ஆய்வுப் பதிவு ஒன்றை இட்டிருக்கார்! இதோ! தட்டாது வாசித்துப் பாருங்கள்! Very Analytical & Unbiased!
தொல்காப்பியர் காலம் தொட்டே...
* சேயோனாகிய முருகனும்
* மாயானோகிய திருமாலும்
தமிழ்க் கடவுள் என்னும் சிறப்பு பெறுகின்றனர் என்று சில, பல, பலப் பல பதிவுகளில், அவ்வப்போது பார்த்து வந்துள்ளோம்! மெல்லிய எதிர்ப்புகளுக்கு இடையிலும்! :)
தமிழகத்தில், வேறு சில அவைகளில்,
டாக்டர் மு.வ, இராசமாணிக்கனார், அரங்கண்ணல், மு.மு. இஸ்மாயில் போன்றவர்களால், மாலவனும் தமிழ்க் கடவுளே என்று இதே கருத்து எழும்பிய போது,
சில ஏக போக போங்காளர்களும், "பகுத்தறிவாளர்களும்" கூட அதற்கு எதிர்ப்பு காட்டியுள்ளனர்!
இந்த எதிர்ப்புகள் பகுத்தறிவின் பாற்பட்டதா? = இல்லை! "பகூத்" அறிவின் பாற்பட்டது! :)
"பகூத் அறிவு" என்றால் இந்தியில் "நிறைய அறிவு"-ன்னு பொருளாம் :)))
தமிழ் இலக்கியங்களையும், தமிழர் நாகரிகத்தையும், சங்க கால இறை இயலையும்,
"உள்ளது உள்ளபடி" வாசித்தால், இந்த "பகூத்" அறிவு கொறைஞ்சி, பகுத்தறிவு வளரும்! :)
தொல்காப்பியர், இன்னும் இரண்டு நிலத்துத் தெய்வங்களான வேந்தனையும், வருணனையும், கூடவே காட்டினாலும், அவர்களை வெறுமனே நிலத்தின் அடையாளமாகத் தான் காட்டுகிறார்! மக்கள் அடையாளமாகக் காட்டவில்லை!
அவர்கள் இருவரும் அடையாளமாகவே நின்று விடுகின்றனர்! மக்களோடு கலக்கவில்லை! ஆனால் மாயோனும் சேயோனும் அப்படி அல்ல!
வீங்குநீர் அருவி வேங்கடமும், சீர்கெழு செந்திலும்
திருவேங்கடம், திருவரங்கம், திருவேரகம் (சுவாமிமலை), செந்தில் (திருச்செந்தூர்) என்று மாயோன்/சேயோன் ஆலயங்கள் சங்கத் தமிழில் காட்டப்படுகின்றன!
அவை இன்றளவும் உள்ளன! மாயோனுக்கும் சேயோனுக்கும் பண்டைத் தமிழ் மக்கள் எழுப்பிய இந்த ஆலயங்களைப் போல், வேந்தனுக்கும் வருணனுக்கும் எங்குமே இல்லை!
வேந்தனும் வருணனும் வெறும் நில அடையாளமாகவே நின்று விடுகின்றனர்! மக்கள் தெய்வமாக இல்லை!
பூவை நிலை, குரவைக் கூத்து, வேலன் வெறியாடல் என்று மக்களின் அன்றாட வாழ்வில் கலந்து, இயைந்து விட்ட இரு பெரும் தமிழ்க் கடவுளரைப் போல், மற்ற இருவரும் கலக்கவில்லை!
அதனால் தான், மக்களோடு ஒன்றிய
* சேயோன்=முருகனும்,
* மாயோன்=திருமாலும்,
"தமிழ்க் கடவுள்" என்று போற்றப்படுகின்றனர்! அன்றில் இருந்து இன்றளவும், தமிழ் இறை இயல் நெறிக்குப் பான்மையாய், ஆதாரமாய் விளங்குகின்றனர்!
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மாமலை உச்சி மீமீசை
பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்திய
செங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமாய் -
நம்ம சிலப்பதிகாரமே வேங்கடவனைச் சங்கு சக்கரங்களுடன் தான் காட்டுகிறது! உண்மையான தமிழ் ஆர்வலர்களுக்கு அது தெரியும்! ஏக போக போங்காளர்கள் கண்ணை வசதியாக மூடிக் கொள்வர்! பூனை கண்ணை மூடிக் கொண்டால், பூலோகம்...??? :))
மாயோனின் திருவேங்கடம்/ திருவரங்கமும்,
சேயோனின் திருவேரகம்/ சீர்கெழு செந்திலும்
அன்றும் இருந்தது! இன்றும் இருக்கு! என்றும் இருக்கும்!
* "நாரணம்" தமிழ்ச் சொல்!
* "நாராயணம்" வடமொழிச் சொல்!
இரண்டுமே நீர்-மையைக் குறிக்க வந்தவை-ன்னு பார்த்தோம் அல்லவா?
நாரணம் = நாரம் + அணம் = நீர் + அருகாமை
"நீர்மைக்கு வழி"-ன்னு தெரிஞ்சிக் கிட்டோம்! அது என்ன "நீர்"-மை?
கடவுள் மேட்டர்-ல, எதுக்குய்யா "தண்ணி" கூட ஒப்பிடறாங்க? நல்லா, கிக்-ஏறும்-ன்னா? ஹா ஹா ஹா!
சரி...அதெல்லாம் போகட்டும்!
* நீரின் முக்கிய குணம் என்ன? = "கீழ்" நோக்கியே ஓடுவது!
நீரைப் பிடிச்சி அடைச்சி வைக்கலாம்! குளம், ஏரி-ன்னு ஓடாமல் அடைச்சி வைக்கலாம்! ஆனால் அதில் உடைப்பு எடுத்துக்கிட்டா, அதுவும் கீழ் நோக்கித் தான் ஓடத் துவங்கும்!
* அதே போல் இறைவனின் முக்கிய "குணம்" = "கீழ்மை"யில் இருக்கும் நம்மை நோக்கியே ஓடி வருவது!
அவனைப் பிடிச்சி சாஸ்திரம், மதம்-ன்னு அடைச்சி வைக்கலாம்! ஆனால் அவன் இயல்பே கீழ் நோக்கி ஓடி வருவது தான்!
நாம் அவனைக் கண்டுக்கிடலை-ன்னா கூட, அவன் மேலே உட்கார்ந்து கொண்டு ரூல்ஸ் பேச மாட்டான்! கீழ் நோக்கியே ஓடி வருவான்!
மீன்-ஆமை-கேழலாய், ஆளரியாய், குள்ளனாய், கள்ளனாய், தனக்கும் கூட பிறவிகள் ஏற்படுத்திக் கொள்வான்! "அவதாரங்கள்" = "இறங்கி வருதல்" என்பது இவனுக்கு மட்டுமே!
* இனி பிறவியே வேணாம்-ன்னு அவனவன் கேட்கும் போது, இவன் என்ன லூசா?
* எதுக்கு வலிய வந்து பிறவி எடுக்கணும்? உழன்று கஷ்டப் படணும்?
* பிறந்து, நமக்கு நல்லதும் பண்ணிக் காட்டணும், கெட்டதும் பண்ணிக் காட்டணும்?
* பண்ணின கெட்டதுக்கு, பலனை, இன்முகமா ஏத்துக்கறது எப்படி?-ன்னு வாழ்ந்து காட்டணும்?
மறைந்திருந்து இராமன்- வாலியின் வதம்! மறைந்திருந்து ஜரா செய்த கண்ணனின் வதம்! Every action has, an equal, but opposite reaction!
நாளைக்கு Cheap-ஆப் போயிருமே? இவன் "பிறந்தனன்", அவன் "உதித்தனன்"-ன்னு எல்லாம் கேலி பேசுவாங்களே?
அவன் வாழ்வை, அக்கு வேறா ஆணி வேறா அலசி, தோய்ச்சி தொங்கப் போடுவாய்ங்களே?
போடட்டும்! போடட்டும்! அதுக்குத் தானே "இறங்கி வருதல்"! :)
நமக்கென்று, நமக்காக, நம்மிடம் இறங்கி வருதல் = மேட்டில் இருந்து பள்ளத்துக்குப் பாய்தல்! = அதான் "நீர்"-மை! அதற்கு காரணம் = இயல்பு! காரேய்க் கருணை!
இறைவா, நீ எதுக்குய்யா ராசா என் கிட்ட கருணை காட்டுறே? அன்பா இருக்கே? நான் என்ன உனக்கு மாமனா? மச்சானா? உனக்கும் எனக்கும் என்னா உறவு?
= உன்தன்னோடு (அ) + உறவேல் (உ) + நமக்கு (ம்)
= அ+உ+ம்
= அதான் உறவு! அது ஒழிக்க ஒழியாது! DNA!
அப்போ கடவுள் இல்லை-ன்னு சொல்றாங்களே! அதானே பகுத்தறிவு?
ஆமா! ஆமா! உண்மை தான்!
கடவுள் இல்லை தான்! = நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லை!
* ஆகா! கடவுள் இல்லாட்டா, நாம யாருமே இல்லை-ன்னு தானே சொல்லணும்?
* நாம இல்லாட்டா, கடவுளே இல்லை-ன்னு மாத்திச் சொல்லுறியே?
ஹிஹி! அடியேன் சொல்லவில்லை! ஆழ்வார் சொல்கிறார்! நாம இல்லாட்டா, அந்தக் கடவுளே இல்லையாம்! எப்படி இருக்கு கதை? ஹா ஹா ஹா!
இன்றாக, நாளையே ஆக, இனிச் சிறிதும்
நின்றாக, நின் அருள் என்பால்! அதே - நன்றாக,
நான் உன்னை அன்றி இலேன்! கண்டாய், நாரணனே!
நீ என்னை அன்றி இலை!
* மனிதன் இல்லையேல் மாதவன் இல்லையாம்!
* சமூகம் இல்லையேல் சரவணன் இல்லையாம்!
* அடியார்கள் இல்லையேல் அவனே இல்லையாம்!
அவனை "நீ இல்லாமல் போ"-ன்னு சொல்ல நமக்கு மனசு வருமா?
"இல்லை" என்ற சொல்லிலும் அவன் உளன் அல்லவா!
உறவை மறந்து வாழும் மனிதர்களை, அவனிடம் மீண்டும் ஆட்படுத்துவது யார்? = அடியவர்கள் தானே?
* கண்ணன், தன்னைப் பற்றித் தானே சொன்னால்? = தம்பட்டம்! :)
* கண்ணனைப் பற்றி, தோழி கோதையும் அவள் பட்டாளமும் சொன்னால்? = தமிழ்ப் பட்டம்!
இப்படி அவன் குணங்களை அனைவருக்கும் புரியுமாறு எடுத்துச் சொல்லி,
பிரிந்த குழந்தைகளை மீண்டும் தாயிடம் சேர்ப்பிப்பது போல்,
மனிதரை அவனிடம் சேர்பிக்கும் அடியார்கள் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பாசம்!
அதான் பகவத் கைங்கர்யத்தை விட பாகவத கைங்கர்யத்துக்கு இன்னும் அதிக ஏற்றம்! மானுட சேவையே மாதவ சேவை!
* நான் உன்னை அன்றி இல்லேன்! கண்டாய் நாரணனே!
* நீ என்னை அன்றி இல்லை!
எனக்கு நீ! உனக்கு நான்! = Made For Each Other :))
இடம்: திருக்கோட்டியூர் (சிவகங்கையில் இருந்து இருபது மைல்...)
பதினெட்டு முறை கால் தேய நடந்தாச்சி! ஓம் நமோ Dash-ன்னா என்ன-ன்னு, இன்னைக்காச்சும் இவரு சொல்லுவாரா மாட்டாரா?
என்ன அதிசயம்...இன்னிக்கி சொல்லிட்டாரே! இப்பிடி மொத்தமாப் பிரவாகமாச் சொல்லிட்டாரே! ஆகா! ஆகா! இதுவா பொருள்?
ஹைய்யோ! என் ஜென்மம் இன்னிக்கு-ன்னு பார்த்து இப்படி இனிக்கிறதே! இதுவா பொருள்? இதுவா பொருள்?
* இவ்வளவு எளிமையான பொருளா? இவ்வளவு எளிமையா வழியா?
* இம்புட்டு நாள் தெரியாமப் போச்சே! ஹைய்யோ!
* எல்லாரும் ரொம்ப கஷ்டம், ரொம்ப கஷ்டம்-ன்னு நினைச்சிக்கிட்டு இருக்காங்களே! இது மட்டும் அவிங்க எல்லாருக்கும் தெரிஞ்சா...??
நம்பி: "இராமானுஜா! இது பரம ரகஸ்யம்!"
உடையவர்: (தயக்கத்துடன்) "சுவாமி! அப்படி என்றால்.........?"
நம்பி: "இந்த மந்திரப் பொருள் சூட்சுமமானது! அற்பர்களுக்கும், நான்காம் வருணத்தார்க்கும், பெண்களுக்கும் இதை மறந்தும் உபதேசித்து விடாதே!
மற்றவர்களுக்கும், அவரவர் தகுதி அறிந்து, நன்கு பரிசோதித்த பின்னரே உபதேசிக்க வேண்டும்! இது என் ஆக்ஞை!"
உடையவர்: (சுவாமி, நம்மாழ்வார் நான்காம் வருணமாச்சே! அவருக்கு எப்படி மந்திரம், ரகசியம்.....? வாய் வரை வந்த கேள்வியை, உடையவர் விழுங்கிக் கொள்கிறார்)
"சுவாமிகள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது! பாவம், ஏன் இவர்களுக்கெல்லாம் மந்திரத்தில் அதிகாரம் இல்லை?"
நம்பி: "அப்படித் தான் சாஸ்திரம் விதித்துள்ளது! இனி இப்படிக் கேட்காதே!
இந்த மந்திரப் பொருள் சகல தடைகளையும் நீக்கி, கேட்பவர் "எவராயினும்", அவர்கட்கு மோட்சம் "காட்ட" வல்லது!
* இந்தப் பிறவியை மட்டும் கடைத்தேற்றுவது அல்ல!
* பிறவியே இல்லாமல் பண்ணக் கூடியது! = பெரிய திருமந்திரம் என்று இதற்குப் பெயர்!
இது கண்டவர் கைக்கு போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேணும்!"
உடையவர்: "உம்ம்ம்ம்...சுவாமி, இன்னொரு கேள்வி! அப்போ தியானம், யோகம், தவம் எல்லாம் செய்கிறார்களே! அதெல்லாம் எதற்கு?
மிகவும் எளிதான இந்தப் பொருளை "உணர்ந்து", அதன்படி நடக்கலாமே? ஏன் அவ்வளவு கடினமான மற்ற வழிமுறைகள்?"
நம்பி: "நல்ல கேள்வி! இதுக்காகத் தான் மலைகளிலும் குகைகளிலும் தேடிப் போய் உட்கார்ந்து...அவரவருக்குப் பிடித்தமான முறையில்...அவரவர் அறிந்து...வழி தேடப் பார்க்கிறார்கள்!
ஆனால் வழியை "வழி"யாகத் தேடாமல், அவரவருக்குப் "பிடித்தமான முறை"யாகத் தேடுவதால் தான் இத்தனை குழப்பம்! ஊருக்குப் போகும் வழியை, வழியாகத் தானே பார்க்கணும்? தங்களுக்குப் பிடித்த மாதிரி வழி இருக்கணும்-ன்னு பார்த்தால் முடியுமா?
ஆனால் இந்தப் பெரிய திருமந்திரம் அப்படி அல்ல!
= இது "வழி/முறை" அல்ல!
= இது "உபாயம்" அல்ல!
= இது "உறவு"! இது உறவைக் காட்டிக் கொடுப்பது!"
உடையவர்: "குருவே! தங்களுக்கு மிக்க நன்றியுடையவன் ஆனேன்! இன்னொன்றும் தங்களிடம் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்!
இது நம்முடைய உறவைக் காட்டுவது என்று சொல்கிறீர்கள்! உறவு தானே? உறவைச் சொல்வதில் என்ன ரகஸ்யம் வேண்டி இருக்கு? ஏன் இப்படி?"
நம்பி: "போதும் கேள்விகள்! ரகஸ்யம் என்றால் ரகஸ்யம் தான்! சாஸ்திர விதி! பாத்திரம் அறிந்தே பிச்சை இடணும்!
ஆளவந்தார் நியமித்து அனுப்பிய உனக்கே, பதினெட்டு முறை நடக்க விட்டு, இன்று தான் உபதேசம் செய்தேன்!
உன்னைத் தண்டும் பவித்திரமும் ஏந்தித் தனியாகத் தானே வரச் சொன்னேன்? நீயோ உன் சீடர்கள் இருவரைக் கூட்டிக் கொண்டு வந்து,
அவர்கள் தான் தண்டு, பவித்திரம் என்று புது வியாக்யானம் வேறு செய்தாய்! ஆனால் அவர்களுக்கு நான் உபதேசம் செய்தேனா?
இளைஞனாக இருக்கிறாய்! இளையாழ்வார் என்று வேறு உனக்கு சிறு வயதுப் பெயர்!
புரிந்து கொள் இராமானுஜா! இது பரம ரகஸ்யம்! இது முது சொத்து!
இந்தச் சொத்தைப் பத்திரமாகக் காப்பாற்றிக் கொள்வது, இனி உன் பொறுப்பு!"
உடையவர்: "ஆகட்டும் குருவே! அடியேன், ஆளவந்தாரைப் பார்த்து உபதேசம் பெறலாம்-ன்னு நான் வந்து கொண்டிருக்கும் போதே, அவர் விண்ணுலகம் ஏகி விட்டார்!
அந்த இயலாமையும் மன உளைச்சலும் தீருமாறு இன்று என் வயிற்றில் பால் வார்த்தீர்கள்! உங்களுக்கு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கேன்!"
நம்பி: "சரி, இன்று ஊர்த் திருவிழா! மடத்தில் சாப்பிட்டு விட்டு, அப்புறம் திருவரங்கம் செல்! சொன்னது நினைவிருக்கட்டும்! மந்திரம் பரம ரகஸ்யம்! ஜாக்கிரதை!"
உடையவர்: "அடியேன்!"
உம்ம்ம்.....உறவைக் காட்டுவது! உறவைக் காட்டுவது!
பெற்ற தாயினும் ஆயின செய்யும்...நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்-ன்னு பாடி இருக்காரு-ல்ல?
உறவைக் காட்டுவது தானே? உறவைச் சொல்ல என்ன "ரகஸ்யம்" வேண்டி இருக்கு?
ஏன் அப்படி நம்ம குரு சொன்னாரு? ஒரு வேளை, எல்லாராலும் இந்த உறவைப் புரிந்து கொள்ள முடியாதோ?
உறவைத் தப்பா புரிஞ்சிக்கிட்டா, விபரீதமாப் போய் விடுமோ? அதான் தயங்குறாங்களோ?
இது போன்ற சந்தர்ப்பங்களில், "ரகஸ்யம்" என்றால் நுட்பம் என்று தானே பொருள்? வெற்றியின் "ரகசியம்"-ன்னா, வெற்றியின் நுட்பம் என்ன-ன்னு தானே கேட்கிறார்கள்?
அதான் மாறிப் போய், ரகஸ்யம் = யாருக்கும் சொல்லீறக் கூடாது என்று திரிந்து விட்டதோ?
சரி, எது எப்படியோ போகட்டும்.....பதினெட்டு முறை காவிரிக் கரையோரம் நடந்து வந்ததில், ஒன்றை மட்டும் நன்றாகப் பார்த்து விட்டேன்!
எத்தனை எத்தனை எளிமையான மக்கள்! எத்தனை அன்பு இவர்கள் உள்ளங்களில்?
என்னை யாரென்றே தெரியாமல், தங்கள் வீட்டுச் சிறுவனைப் போல் அல்லவா, அதே சமயம், எட்ட இருந்தே, பார்த்துக் கொண்டார்கள்?
நான் வெய்யிலால் மயங்கிச் சுருண்ட போது, பனையோலைகளைக் கூடாரம் போல் கட்டிக் கொண்டு, கூடவே பிடித்துக் கொண்டு வந்தார்களே!
சூழ்ந்து சூழ்ந்து கண்ணனைப் பற்றிக் கேட்டார்களே! நெற்றியில் நாமம் போட்டுக் கொள்வது ஏன்? என்று இவர்கள் கேட்க, அது இறைவன் திருவடி என்று நான் சொல்ல.......
அப்போ "கண்ணன் நெற்றியில் நாமம் இருக்கே! அவன் பாதங்களை அவனே ஏன் போட்டுக் கொள்ள வேண்டும்?" - என்று என்னமாக் கேட்டாள் அந்தக் கோனார் வீட்டுச் சுட்டிப் பெண்?
இவர்கள் எல்லாரும் மந்திரப் பொருளை எங்கு போய் அறிந்து கொள்ளப் போகிறார்கள்?
உழன்றும் உழவே தலை-ன்னு குறள் பாடியிருக்காரே! இவர்கள் எல்லாம் கடைசி வரை உழன்று கொண்டே இருக்க வேண்டியது தானா?
* இவர்களுக்கு குரு என்றோ, ஆசார்யன் என்றோ யாரும் இல்லையே! யாரிடம் போய்க் கேட்பார்கள்?
* இல்லை, விவசாயத்தை விட்டுவிட்டு, மலை குகைகளுக்குச் சென்று, தியானம்/தவம்-ன்னு செய்வார்களா?
* இவர்களுக்கு சாஸ்திரமோ வேதமோ தெரியாதே! எப்போது படித்து, எப்போது அறிந்து கொள்வார்கள்? வேதமெல்லாம் இவர்களைப் படிக்கத் தான் மற்றவர்கள் விடுவார்களா?
* இவர்களுக்கு-ன்னு தான் தமிழ் வேதம் செய்தார் அந்த வேளாளர் குல முதல்வர், நம்மாழ்வார்! ஆனால் அந்தத் தமிழைத் தேடிப் போய் படிக்க இவர்களுக்குத் தெரியணுமே?
ஹைய்யோ! இவ்வளவு எளிமையான பொருளைச் சொல்லாமல், "மறைத்துப்" போக எனக்கு மனசு வரலையே! இவர்களைப் பார்க்கும் போது...
"பரவாயில்லை! இந்தப் பிறவியில் கொஞ்சம் கஷ்டப் படட்டும்! பிராப்தம்-ன்னு ஒன்னு இருந்தா, அடுத்த பிறவியில் தெரிஞ்சிக் கிடட்டும்" என்றா சொல்லுவது?
மந்திரத்தை "அறிந்து" விட்டால் மட்டும் போதாது! "உணர" வேணும்! - என்று வேறு சொன்னாரே! மந்திரப் பொருளில் நர சமூகோ நார: நாரா ஜாதானி தத்வானி என்று வருகிறதே! "அனைத்தும் அவனில் தஞ்சம்! அவனும் இவர்களில் தஞ்சம்" என்றல்லவா வருகிறது?
அவனே இவர்களை அடையும் போது, மந்திரம் இவர்களை அடையக் கூடாதா?
அதை "உணர்ந்ததால்" தானே இப்படியெல்லாம் யோசிக்கிறேன்? ஏன் நம் குரு மட்டும் "உணர" மறுக்கிறார்?
ஹூம்ம்ம்....
# குருவின் ஆணையும் ஒரு தர்மம்!
# இவர்களை எம்பெருமானுக்கு ஆட்படுத்துவதும் ஒரு தர்மம்!
= இப்படி இரண்டு முரண்பாடான தர்மங்களுக்கு இடையே, தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டேனே!
(உடையவர் மனப் போராட்டத்தில் சிக்கித் தவிக்க.......)
* ஒரு மணி நேரம் ஒருவருக்காக வீதியில் காத்துக் கிடந்தாலே எரிச்சல் வருகிறது!
* ஒரு பிறவி முழுக்கவும் காத்துக் கிட-ன்னு, இவர்களிடம் வாய் கூசாமல் எப்படிச் சொல்லமுடியும்?
ஐயகோ! இதுவா "நீர்"-மை? இதுவா "நீரா"யணம்? இதுவா "நாரா"யணம்?
(தொடரும்.....அடுத்த பகுதியில் நிறையும்)