Thursday, October 29, 2009

மறங்கொள் இரணியன் - 2



ம்பராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:

இடம்: ராவணன் அரண்மனை
காலம்: அவனுடைய கெட்ட காலம்



ராவணன்:
மந்திரிகளே! நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யலாம்!

மகோதரன்: குரங்குகளுடைய சேட்டைகளை நிறுத்துவதற்காக மந்திராலோசனை வேண்டுமோ?

வச்சிரதந்தன்: இப்பொழுதே பூமியில் உள்ள எல்லாக் குரங்குகளையும் கொன்று தின்ன உத்தரவிடுங்கள்.

துன்முகன்: யாராவது தம் உணவுப் பொருட்களிடம் பயப்படுவார்களா?

மகா பார்சுவன்: குரங்குக்கு உதவிய அக்னியை நீங்கள் அன்றே எரித்திருக்க வேண்டும்.

தூமிராட்சன்: அல்பமாக இருந்தாலும், சண்டையிட்டு, கொன்று தின்று விடுவோம். வேறு வழியில்லை.

கும்பகர்ணன்: சீதையை அபகரித்தது தவறு. உனக்குப் பல மனைவிகள் இருந்தும், இன்னொருவன் மனைவியின் அடிகளில் பல முறை வீழ்ந்தும், அவள் மறுப்பதும் உனக்கு அழகல்ல. இருந்தாலும், சண்டை செய்வதே இப்பொழுது வீரர்களுடைய செயல்.

இந்திரஜித்: நாங்களே சென்று கொன்று வருவோம். அந்தக் குரங்கை நான் ஏற்கனவே பிடித்தவன் தானே!

விபீடணன்: உனக்கு முன்னால், உன்னையும் விட வலிமையான இரணியாட்சனும், அவனையும் விட மிக வலிமையான இரணியகசிபுவும், திருமால் சினத்தால் தமது சுற்றத்தாருடன் இறந்தனர். அதைக் கேள்!

(இரணிய வதைப் படலத்தின் 170 கவிகளால் பிரகலாத சரித்திரத்தை, அழகாக விவரிக்கின்றான்)

விபீடணன் (கடைசியில்): இப்படிப் பட்ட வலிமையுடைய இரணியனே திருமாலால் எளிதாக அழிக்கப்பட்டான்! நீ எம்மாத்திரம்? இராமனாக வந்துள்ள திருமால் உன்னை அழிப்பது நிச்சயம். நீ உயிர் பிழைக்க வேண்டுமென்றால், சீதையை இராமனிடம் மீண்டும் சேர்த்து விட்டு அவரிடம் சரணடைந்து விடு!

கம்பர், இங்கு விபீடணன் மூலம் வர்ணித்த இரணியனின் வீரம், நம் கற்பனைக்கு எட்டுமா?

***


ம்பர், 11 கவிகளால் (133-143) இரணியனுடைய அபரிமிதமான வலிமையையும், அவனால் தேவர்களும், மனிதர்களும் பட்ட துன்பங்களையும் வர்ணிக்கின்றார்.

இவற்றை முழுவதும் விளக்கினால், நரசிம்மரில் இருந்து முழுவதும் ராமருக்குத் தாவ நேரிடலாம் என்ற பயத்தினால், ’இரணியன் Top 10' மட்டும் குறிப்பிட்டுள்ளேன்:

பாழி வன்தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப்
பூழை வன் கரி இரண்டு, இரு கைக்கொடு பொருத்தும்;

ஆழம் காணுதற்கு அரியவா அகன்ற பேராழி

ஏழும், தன் இரு தாள் அள, எனத் தோன்றும்.
(133)

10. Exercise - யானைகளை இழுத்து மோத விடுவது (கரி ... பொருத்தும்)!
9. Olympics - கடல் தாண்டுவது (ஆழி ஏழும் ... தோன்றும்)!

'வண்டல் தெண்திரை ஆற்று நீர் சில', என்று மருவான்;
'கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பில' என்று, அவை குடையான்;

'பண்டைத் தெண்திரைப் பரவை நீர் உவர்' என்று படியான்;

அண்டத்தைப் பொதுத்து, அப்புறத்து அப்பினால் ஆடும்.
(134)

8. Bathtub/Shower - அண்டத்தில் உள்ள கடல் நீர் (அண்டத்தைப் ... ஆடும்)!

(இதை, வட மொழியில் ஆவரண ஜலம் என்பர்)

மரபின் மாப்பெரும் புறக்கடல் மஞ்சனம் மருவி,
அரவின் நாட்டிடை மகளிரோடு இன்னமுது அருந்தி,

பரவும் இந்திரன் பதியிடைப் பகல் பொழுது அகற்றி,

இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.
(135)

7. Party - நாக லோக மகளிர் (அரவின் .. அருந்தி)!
6. Entertainment - தேவ லோக ஆடல், பாடல் (இந்திரன் ... அகற்றி)!
5. Bedroom - பிரம்ம லோகம் (இரவின் ... நான்முகன் ... இருக்கும்)!

நிலனும் நீரும் வெங்கனலொடு காலுமாய், நிமிர்ந்த
தலனுள் நீடிய அவற்றினை, தலைவரை மாற்றி,

உலவும் காற்றொடு கடவுளர் பிறருமாய், உலகின்

வலியும், செய்கையும், வருணன் தன் கருமமும் ஆற்றும்.
(137)

4. Hobbies - பஞ்ச பூதங்களின் செயல்கள் (... கருமமும் ஆற்றும்)!

தாமரைத் தடம் கண்ணினான் பேர்; அவை தவிர
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில;
தூம வெங்கனல் அந்தணர் முதலினர் சொரிந்த
ஓம வேள்வி(அ)வயின் இமையவர் பேறெலாம் உண்ணும்.
(138)

3. Food - யாகங்களில் வரும் அவிர் பாகம் (வேள்வி ... உண்ணும்)

பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி,
தெண் திரைக்கடல் கடை தர வலியது தேடிக்

கொண்ட மத்தினை, கொற்றத் தன் குலவு தோட்கு அமைந்த

தண்டு எனக் கொளல் உற்று; 'அது நொய்து', எனத் தவிர்த்தான்.
(141)

2. Dumbells - மந்திர மலை (மத்தினை ... கொளல் ... தவிர்த்தான்)!

மண்டலம் தரும் கதிரவன் வந்து போய் மறையும்
எண் தலத் தொடற்கு அரியன தடவரை இரண்டும்,

கண் தலம் பசும் பொன்னவன் முன்னவன் காதில்

குண்டலங்கள்; மற்று என், இனிப் பெரு வலி கூறல்?
(142)

1. Earrings - இரு பெரு மலைகள் (தடவரை இரண்டும் ... காதில் குண்டலங்கள்)!

அவன் வலிமையைப் பற்றி இனிக் கூறவும் வேண்டுமோ (மற்று ... கூறல்)?

(கவிஞனின் கற்பனை வளத்திற்கு உதாரணமாக, இலக்கிய ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும், இரணிய வதைப் படலம் கூறப்படுகின்றது)

சரி, மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் நரசிம்மர் வருகிறாரா?

***

வா
ல்மீகி ராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:

(ராவணனிடம் கோபித்துக் கொண்டு, விபீடணன் தன் நான்கு மந்திரிகளுடன் ராமன் இருக்குமிடம் வருகிறான். சுக்ரீவனும் மற்ற வீரர்களும், போரிடத் தயாராகின்றனர்)



விபீடணன் (எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக):
ராமனிடம் சரணடைய வந்துள்ளோம்.

(சுக்ரீவன், ராமனிடம் ஓடிச் செல்கிறான்)

சுக்ரீவன்:
பிரபோ! விபீடணன் எதிரியின் பலத்தைச் சோதிக்க வந்திருக்கிறான். இவனை நம்மிடம் சேர்க்க வேண்டாம்.

ராமன் (மற்ற மந்திரிகளிடம்): நீங்கள் சுக்ரீவன் சொன்னதைக் கேட்டீர்கள் அல்லவா? உங்கள் எண்ணம் என்ன?

அங்கதன்: அவனைப் பரீட்சித்துப் பார்த்தே சேர்க்க வேண்டும். அவன் நல்லவனாக இருந்தால் சேர்க்கலாம்.

ஜாம்பவான்: இவனிடத்தில் நாம் சந்தேகப் படவேண்டியது நியாயமே.

மைந்தன் (மயிந்தன்): கேள்விகள் கேட்டுப் பரீட்சித்துப் பாருங்கள். இவன் நல்லவனாக இருந்து, இவனை நாம் விட்டு விட்டால், ஒரு மித்திரனை இழந்து விடுவோம்.

(’கழுவும் நீரில் நழுவும் மீன்கள்’ என்பதற்கு இவர்கள் தான் உதாரணமோ?)

இலக்குவன்: அண்ணா! இவன் வந்த காரணம் பற்றி எனக்குச் சந்தேகம் உள்ளது.

அனுமன் (ராமனிடம்): தங்களுக்குத் தெரியாததல்ல. இருந்தும் என்னை ஒரு பொருட்டாக மதித்துப் பேசும்படி கட்டளை இட்டதால் பேசுகிறேன். இவனை இப்படிப் பரீட்சிப்பது உசிதமல்ல. (விபீடணனுடைய நல்ல குணங்களைச் சொல்லி), சந்தேகப் படுவதும் தவறு. இவன் நேர்மையாகப் பேசுபவன். அசுரனாக இருந்தாலும், யோக்கியன். எனவே இவனைச் சேர்க்கலாம். தங்கள் கட்டளை என்ன?

(அனுமன் மற்ற மூன்று மந்திரிகளையும் மறைமுகமாகக் கண்டித்ததால், அவர்கள் நெளிகின்றனர் )

ராமன்: என்னை வந்து அடைந்தவனை நான் ஒருபோதும் கைவிடுவது இல்லை.

சுக்ரீவன்: இவன் நன்றியற்றவன். தமையனைக் கைவிட்டு இங்கு வந்தவன், பின்னால் நம்மையும் கைவிடலாம்.

ராமன்: ராவணன், நல்லவனான விபீடணனிடம் கோபப் படுவது நம்பக் கூடியதே. மேலும், அசுரர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்களே (பிரகலாதனைச் சொல்கிறாரோ)?

சுக்ரீவன்: தாங்கள் இவனிடத்தில் பொறுமை காட்டுவது தவறு. இப்பொழுதே திருப்பி அனுப்பி விடுங்கள்.

(ராமனிடத்தில் உள்ள அன்பினால், கோபம் கொள்கிறான் சுக்ரீவன்)

ராமன் (அவனுக்கு புத்தி சொல்ல நினைத்து): வானர அரசனே! இவன் கெட்ட எண்ணத்துடனேயே வந்து இருக்கட்டும். இவனால் என்னை என்ன செய்ய முடியும்? (யு.கா.ஸ - 18.240-244)


ராமன் (மீண்டும்):
நீயும் உன் படைகளும், ஏதோ என்னை ஆபத்திலிருந்து காத்துக் கொண்டு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களைக் கொஞ்சம் கூடச் சிரமப் படுத்தாமல், பூமியில் உள்ள அரக்கர்களையும், தானவர்களையும், பிசாசுகளையும், மற்ற கெட்ட பிராணிகளையும், நினைத்த மாத்திரத்திலேயே விரலின் நுனியால் நாசம் செய்வேன் என்று நீ அறி! அஸ்திர, சஸ்திரங்கள் வேண்டாம். கையில் உள்ள மற்ற விரல்களின் உதவியும் வேண்டாம். ஒரு விரலிலும், அதில் உள்ள மற்ற கணுக்களும் வேண்டாம். நுனி ஒன்றே போதும்! (யு.கா.ஸ - 18.245-255)

(அனைவரும், விபீடணனை அழைத்து வரச் செல்கின்றனர்)

(சர்வேஸ்வரன் தன்னையே புகழ்ந்து கொள்வது சரியா எனில், நடந்த உண்மையை அப்படியே சொல்வது தற்புகழ்ச்சி ஆகாது என்பர் பெரியோர். நரசிம்ம அவதாரத்தில் இது தானே நடந்தது?)

நரசிம்மாவதாரத்தைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் வேறு எங்கும் கூறப்படவில்லை.

(பல அறிஞர்கள், இராமகாதையில் நரசிம்மாவதாரமும், இரணிய வதமும் வருவதற்குக் காரணமே இல்லை என்பர். இருந்தும், இந்த நரசிம்மம் தானே சிரித்து, ராமாவதாரத்தை அரங்கனூரில் அரங்கேற்றி வைத்தது?)

(அடியேனின் எண்ணம் - வால்மீகி கோடு காண்பித்தார்; கம்பர் ரோடு போட்டார். இதில் தவறேதும் இல்லையே? மேலும், நரசிம்மனே 'சரி' என்று கூறியதில் நாம் தவறு காணலாமா?)

மீண்டும் ஆழ்வார் பாசுரத்துக்குத் தாவுவோமா?

***

ன்ன? 'மறங்கொள் இரணியன்' என்பது சரிதானே?

ஆழ்வார் உண்மையில் இரணியனையா புகழ்ந்தார்?

'இந்தக் கண்ணன் தான் இரணியனின் மார்பை அன்று கிழித்தான்' என்பதால், நரசிம்மன் வலிமையை மட்டும் சொல்கிறாரோ?

ஒருவேளை 'கண்ணனே நரசிம்மன்!' என்றும் சொல்கிறாரோ?

இந்த நரசிம்மனின் வலிமைக்கு, நம் வணக்கங்கள்.

... நரசிம்மர் மீண்டும் வருவார்

26 comments:

  1. காப்பிய வரிகளை மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

    ஆளரிகள் (நரசிம்மனும் நரர்களில் சிம்மமான சீராமனும்) நெஞ்சைக் கொள்ளை கொள்கிறார்கள்.

    ReplyDelete
  2. அசத்தல்!

    கம்பன் காப்பிய வரிகளைக் கொண்டு இயல்பாகக் காட்டியுள்ளீர்கள்! - Exercise, Olympics, Bathshower-ன்னு கலக்கல்! :)

    //சரி, மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் நரசிம்மர் வருகிறாரா?//

    வருகிறார்!
    இதோ...//கையில் உள்ள மற்ற விரல்களின் உதவியும் வேண்டாம். ஒரு விரலிலும், அதில் உள்ள மற்ற கணுக்களும் வேண்டாம். நுனி ஒன்றே போதும்! //
    சக்கரக் கையனே அச்சோ அச்சோ

    //ஒருவேளை 'கண்ணனே நரசிம்மன்!' என்றும் சொல்கிறாரோ?//

    ஹா ஹா ஹா
    அரிமுகன் அச்சுதன் கைமேல் என் கை வைத்து
    பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!

    ReplyDelete
  3. //பல அறிஞர்கள், இராமகாதையில் நரசிம்மாவதாரமும், இரணிய வதமும் வருவதற்குக் காரணமே இல்லை என்பர்.

    இருந்தும், இந்த நரசிம்மம் தானே சிரித்து, ராமாவதாரத்தை அரங்கனூரில் அரங்கேற்றி வைத்தது?)//

    திருவரங்கம் மேட்டு அழகிய சிங்கப் பெருமாள் கோயில் படிகள் எண்ணிக்கையைக் கூட கரெக்டாச் சொல்லும் ஷைலஜா அக்கா...எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்! :))

    ReplyDelete
  4. மிகவும் அருமைண்ணா !!

    //காலம்: அவனுடைய கெட்ட காலம்//

    :) ஹா ஹா..

    ReplyDelete
  5. //ராமன் (மீண்டும்): நீயும் உன் படைகளும், ஏதோ என்னை ஆபத்திலிருந்து காத்துக் கொண்டு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்.//

    சரியான வார்த்தைகள்.. இராமன், சுக்ரீவனுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே உரைத்த வார்த்தைகள் என்றே கொள்கிறேன்.

    ReplyDelete
  6. 10. Exercise - யானைகளை இழுத்து மோத விடுவது (கரி ... பொருத்தும்)!
    9. Olympics - கடல் தாண்டுவது (ஆழி ஏழும் ... தோன்றும்)!
    8. Bathtub/Shower - அண்டத்தில் உள்ள கடல் நீர் (அண்டத்தைப் ... ஆடும்)!
    7. Party - நாக லோக மகளிர் (அரவின் .. அருந்தி)!
    6. Entertainment - தேவ லோக ஆடல், பாடல் (இந்திரன் ... அகற்றி)!
    5. Bedroom - பிரம்ம லோகம் (இரவின் ... நான்முகன் ... இருக்கும்)!
    4. Hobbies - பஞ்ச பூதங்களின் செயல்கள் (... கருமமும் ஆற்றும்)!
    3. Food - யாகங்களில் வரும் அவிர் பாகம் (வேள்வி ... உண்ணும்)
    2. Dumbells - மந்திர மலை (மத்தினை ... கொளல் ... தவிர்த்தான்)!
    1. Earrings - இரு பெரு மலைகள் (தடவரை இரண்டும் ... காதில் குண்டலங்கள்)!

    அந்த பாவி இவ்வளவு பெரிய வீரனா! யப்பா ! நரசிம்மர் பந்தம் தீர பல்லாண்டு பாடுவது சரிதான்! படிக்கும் போதே கொஞ்சம் பயமா இருக்கு!

    ReplyDelete
  7. ’அங்குள்யக்ரேண தாந் ஹந்யாம்’
    என்னும் ஸூசனை வால்மீகியில் உண்டு.ந்ருஸிம்ஹ சப்தம் இருவருக்குமே பொருந்துவது. நீங்கள் எழுதுவது நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  8. தேவராஜன் ஸ்வாமி

    //’அங்குள்யக்ரேண தாந் ஹந்யாம்’
    என்னும் ஸூசனை வால்மீகியில் உண்டு//

    ஆமாம். நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. அடியேன் வடமொழியில் பயங்கர 'weak'. எனவே தான் ’Safe' ஆக இதைத் தமிழில் எழுதினேன். ;-(

    //ந்ருஸிம்ஹ சப்தம் இருவருக்குமே பொருந்துவது.//

    அடியேனுக்கும் மற்ற அன்பர்களுக்கும் தெரியப் படுத்தியதற்கு நன்றி.

    //நீங்கள் எழுதுவது நன்றாக இருக்கிறது.//

    நன்றி. தங்கள் ஆதரவு அடியேனுக்கும், வலைப்பூவுக்கும் தேவை.

    ReplyDelete
  9. antha kamba raamayana paaldalkaLukku viLakkam please

    ReplyDelete
  10. Mr. Mani

    //antha kamba raamayana paaldalkaLukku viLakkam please//

    ------------------------
    பாழி வன்தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப்
    பூழை வன் கரி இரண்டு, இரு கைக்கொடு பொருத்தும்;
    ஆழம் காணுதற்கு அரியவா அகன்ற பேராழி
    ஏழும், தன் இரு தாள் அள, எனத் தோன்றும். (133)

    வலிய திசைகளைத் தூண்கள் போலத் தாங்கிக் கொண்டிருக்கும் இரண்டு அஷ்ட திக்கஜங்களை, தன் இரு கைகளால் இழுத்து முட்ட விடுவான். மனிதர்களால் ஆழம் காண முடியாத சமுத்திரங்கள் ஏழையும் தனது இரண்டு கால்களின் அளவேயாகத் தாண்டி அப்பால் செல்வான்.
    -----------------------

    'வண்டல் தெண்திரை ஆற்று நீர் சில', என்று மருவான்;
    'கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பில' என்று, அவை குடையான்;
    'பண்டைத் தெண்திரைப் பரவை நீர் உவர்' என்று படியான்;
    அண்டத்தைப் பொதுத்து, அப்புறத்து அப்பினால் ஆடும். (134)

    நதி நீர் சிறியதென்று அருகில் செல்ல மாட்டான். மேகத்து நீர் தன்னைக் குளிர்ச்சி ஆக்காது என்று அதில் குளிக்க மாட்டான். கடல் நீர் உப்பு என்று அதையும் வெறுப்பான். அண்டத்தைப் பொத்தல் செய்து, அதற்கு அப்பால் உள்ள பெறும் புறக் கடலின் நீர் விழ, அதில் நீராடுவான்.
    ---------------------

    மரபின் மாப்பெரும் புறக்கடல் மஞ்சனம் மருவி,
    அரவின் நாட்டிடை மகளிரோடு இன்னமுது அருந்தி,
    பரவும் இந்திரன் பதியிடைப் பகல் பொழுது அகற்றி,
    இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும். (135)

    புறக்கடலில் குளித்து, நாகலோகத்திற்குச் சென்று அங்குள்ள மகளிரோடு உணவருந்தி, தேவலோகத்தில் பகல் பொழுதைப் போக்கி, இரவில் பிரம்ம லோகத்திற்குச் சென்று கொலு வீற்றிருப்பான்.
    -----------------------

    நிலனும் நீரும் வெங்கனலொடு காலுமாய், நிமிர்ந்த
    தலனுள் நீடிய அவற்றினை, தலைவரை மாற்றி,
    உலவும் காற்றொடு கடவுளர் பிறருமாய், உலகின்
    வலியும், செய்கையும், வருணன் தன் கருமமும் ஆற்றும். (137)

    பூமியும், நீரும், நெருப்பும், காற்றுமாய் (உப லக்ஷணத்தால், ஆகாயத்தையும் இங்கு கொள்ள வேண்டும்) இருக்கின்ற பஞ்ச பூதங்களின் தேவதைகளை அதன் பதவிகளை விட்டு விரட்டி, தானே அந்தக் காற்றும் மற்ற தேவர்களுமாய், உலகின் அனைத்து வலிமைகளையும் செய்கைகளையும், வருணனது செய்கையான மழையையும் செய்தான்.
    ----------------------------------

    தாமரைத் தடம் கண்ணினான் பேர்; அவை தவிர
    நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில;
    தூம வெங்கனல் அந்தணர் முதலினர் சொரிந்த
    ஓம வேள்வி(அ)வயின் இமையவர் பேறெலாம் உண்ணும். (138)

    திருமாலின் திருநாமங்கள் நீங்க, தன் பெயரையே எல்லா உலகங்களிலும் சொல்லச் செய்தான். அந்தணர்கள், யாகங்களில் சேர்க்கும் தேவர்களுக்கு உரிய அவிர்பாகத்தை எல்லாம் தானே பெற்று உண்பான்.
    -----------------------

    பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி,
    தெண் திரைக்கடல் கடை தர வலியது தேடிக்
    கொண்ட மத்தினை, கொற்றத் தன் குலவு தோட்கு அமைந்த
    தண்டு எனக் கொளல் உற்று; 'அது நொய்து', எனத் தவிர்த்தான். (141)

    முன்பு, தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைய, வலிமையுடையதாகத் தேடிக் கொண்டு வந்த மந்திர மலையை, தன் தோள் வலிமைக்கு ஏற்ற தண்டாயுதமாக எடுத்து வந்தான். பின்பு, 'அது மிகவும் அற்பமானது' என்று எண்ணி நீக்கிவிட்டான்.
    -------------------

    மண்டலம் தரும் கதிரவன் வந்து போய் மறையும்
    எண் தலத் தொடற்கு அரியன தடவரை இரண்டும்,
    கண் தலம் பசும் பொன்னவன் முன்னவன் காதில்
    குண்டலங்கள்; மற்று என், இனிப் பெரு வலி கூறல்? (142)

    மண்டல வடிவம் பொருந்திய கதிரவன் உதித்தும், மறைந்தும் போகக் காரணமாய் உள்ள இரு பெரு மலைகள், இரணியனுடைய காதில் குண்டலங்கள். அவன் வலிமையைப் பற்றி இனி எதுவும் கூற வேண்டுமோ?

    கண் தலம் பசும் பொன்னவன் - இரணியாட்சன்; அவன் முன்னவன் - இரணியன்.
    -------------

    ReplyDelete
  11. ரங்கன் அண்ணா,
    சிரித்த முகத்துடன் உள்ள நரசிம்மர் படங்கள் உங்களிடம் நிறைய உள்ளதா? எனக்கு உக்ர நரசிம்மரை விட இது போன்ற நரசிம்மர் படங்கள் மிகவும் பிடிக்கும். உங்கள் மூலமாக ஒரு நரசிம்மர் பட ஆல்பம் தயார் செய்து விடலாம் என்று நினைக்கிறேன். :-)
    விபீஷண சரணாகதி உரையாடல்கள் மிகவும் பிடித்து இருந்தது.

    //அஸ்திர, சஸ்திரங்கள் வேண்டாம். கையில் உள்ள மற்ற விரல்களின் உதவியும் வேண்டாம். ஒரு விரலிலும், அதில் உள்ள மற்ற கணுக்களும் வேண்டாம். நுனி ஒன்றே போதும்! (யு.கா.ஸ - 18.245-255)//

    ராமனே ஹரி என்று எவ்வளவு பொருத்தமாக வருகிறது !

    "கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீள் முடியன்
    எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல்
    அதிரும் கழற் பொருதோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
    உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர்."
    (பெரியாழ்வார் திருமொழி)
    ~
    ராதா

    ReplyDelete
  12. சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நரசிம்மர் பாசுரங்கள் எத்தனை என்ற பட்டியலில் திருப்பாவையில் நரசிம்மர் வரவில்லை என்று சொல்லி இருப்பது போல உள்ளது. திருப்பாவையில் நரசம்மரை பற்றி வருகிறது என்று நினைக்கிறேன். (அதிகப் பிரசங்கி தனமாக பேசுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.)
    "புள்ளும் சிலம்பின காண்....
    முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து *அரி* என்ற பேரரவம்
    உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."

    இன்னொரு பாசுரத்தில் நரசிம்மரை நினைவுபடுத்தும் விதமாக வர்ணனை வருகிறது.
    (பதிவுலகத்தில் தரவுகள், மொழி ஆராய்ச்சி, தர்க்கம் செய்வது, குறை கண்டுபிடிப்பது என்பது போன்ற விஷயங்கள் நிறைய காணப்படுவதால் "நினைவுபடுத்தும் விதமாக" என்று சொல்கிறேன். மொழி ஆராய்ச்சி செய்வது போன்ற விஷயங்களை நாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தால் இதிலும் நரசிம்மரை ஆண்டாள் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.)

    "மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து...." என்ற பாசுரம்.

    ReplyDelete
  13. ராதா

    //அதிகப் பிரசங்கி தனமாக பேசுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்//

    கட்டாயம் அப்படி நினைக்க மாட்டேன்.

    இந்தப் பாசுரத்தில் வரும் ‘அரி’, ‘ஹரி’ என்ற வடமொழித் திரிபு. பிரபந்தத்தில், 99 சதவிகிதம் வடமொழி எழுத்தோ சொல்லோ வருவதில்லை (உதாரணம் - விஷ்ணுசித்தர் எனும் சொல், விட்டு சித்தர் என்றே வரும்!).

    ”இப்பொழுது, ஆய்ப்பாடியில் ஆபத்து நிறைந்து உள்ளது. ‘ஹரி’ (’அரி’) என்ற சப்தத்தை பயம் போகுமாதாலால், 5 லட்சம் ஆய்ப்பாடி குடிகளிலும் உள்ளவர் எல்லோரும் காலையில் 7 முறை ‘அரி’ என்று சொல்லிக் கொண்டே எழுகின்றனர். இப்படி எல்லோரும் ஒரே சமயத்தில் சொல்கின்றதால், ‘அரி’ என்ற பேரரவம் ஏற்படுகிறது. இது உன் காதில் விழவில்லையா?”

    என்று தோழி கூறுகின்றாள். இந்த ‘அரி’ நரசிம்மனைக் குறிக்காது என்பது என் தாழ்மையான எண்ணம்.

    //நினைவுபடுத்தும் விதமாக" என்று சொல்கிறேன்//

    கவலை வேண்டாம். பிரபந்தம் பற்றிய எந்த கருத்துப் பரிமாற்றமும் அடியேனுக்குப் பிடித்ததே.

    //"மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து...." என்ற பாசுரம்.//

    யார் இதைக் கேட்பார்களோ என்று எதிர்பார்த்தேன்.

    உண்மையில், நீங்கள் நினைப்பதப் போல், அடியேனும், ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் நரசிம்மரை மறைமுகமாகக் குறிப்பதாகவே எண்ணுகிறேன்.

    ஆனால், பெரும்பாலான வியாக்கியானங்கள், கண்ணனையும் ஒரு அழகிய சிங்கத்தையும் உவமைப் படுத்தி, ’சிங்கம் மழைக் காலத்தில் தன் துணைவியுடன் உறங்குவது போலே, நீ நப்பின்னையுடன் உறங்கி இருக்கின்றாய்! எழுந்து சிங்க நடை போட்டு வந்து, சிங்காசனத்தில் அரசன் போல அமர்ந்து, எங்கள் குறையைக் கேள்’ எனக் கூறுவதாகவே அமைந்துள்ளன. இந்த வியாக்கியானத்தில் சிங்கத்தையும், நரசிங்கத்தையும் ஒப்பிட வாய்ப்புகள் நிறைய உண்டு.

    எனவே அடியேனுக்கு இந்தப் பாசுரத்தைப் பற்றிய குழப்பம் உண்டு. எனவே, இதை எண்ணிக்கையில் சேர்ப்பதைத் தவிர்த்தேன். ஆனால், இந்தப் பாசுரத்தைப் பற்றியும் எழுதலாம் என்று நினைத்துள்ளேன்.

    ReplyDelete
  14. மிகவும் எளிமையான மற்றும் அழகான கட்டுரை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    சடகோபன்
    சென்னை

    ReplyDelete
  15. மிகவும் எளிமையான மற்றும் அழகான கட்டுரை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    சடகோபன்
    சென்னை

    ReplyDelete
  16. மிகவும் எளிமையான மற்றும் அழகான கட்டுரை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    சடகோபன்
    சென்னை

    ReplyDelete
  17. //மிகவும் எளிமையான மற்றும் அழகான கட்டுரை. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்//

    நன்றி சடகோபன் அண்ணா.

    ReplyDelete
  18. //‘ஹரி’ (’அரி’) என்ற சப்தத்தை பயம் போகுமாதாலால், 5 லட்சம் ஆய்ப்பாடி குடிகளிலும் உள்ளவர் எல்லோரும் காலையில் 7 முறை ‘அரி’ என்று சொல்லிக் கொண்டே எழுகின்றனர்.//

    சிறு திருத்தம்:

    ... ‘ஹரி’ (’அரி’) என்ற சப்தம் பயத்தைப் போக்குமாதாலால் ...

    என்று படிக்கவும்.

    ReplyDelete
  19. * அரியென்ற பேரரவம் *

    வருயிரு ளழிவழி மனம்வருமுணர்வொடு
    கரிகிரி மருவிய கரிய வனடியிணை
    பரிவொடு பரவுநல டியவர் பழவுரை
    அரி அரி அரி அரி அரி அரி அரியே !

    - ஸ்வாமி தேசிகன்

    ReplyDelete
  20. அவ்வளவு தீவிரமான போர்க்களக் காட்சிக்கிடையில் நீண்ட பிரசங்கமாக பிரகலாதன் கதை ஏன் பேசப்படுகிறது என்பதை சிந்தித்தீர்களா?

    வான்மீகத்தில் இந்த இடத்தில் பிரகலாதன் கதை இல்லை என்றே நினைக்கிறேன்..

    உங்கள் பார்வை ???...

    ReplyDelete
  21. நல்ல கருத்துக்கள். எங்களை இராமருடைய பாசறைக்கும் , இராவனன் அரன்மனைக்கும் அழைத்துச் சென்றது போல் உள்ளது. நன்றி அய்யா.

    ReplyDelete
  22. அறிவன் அவர்களே

    //அவ்வளவு தீவிரமான போர்க்களக் காட்சிக்கிடையில் நீண்ட பிரசங்கமாக பிரகலாதன் கதை ஏன் பேசப்படுகிறது என்பதை சிந்தித்தீர்களா?//

    தெரியவில்லை. இது இறைவனின் எண்ணம் என்றே நினைக்கிறேன்.


    //வான்மீகத்தில் இந்த இடத்தில் பிரகலாதன் கதை இல்லை என்றே நினைக்கிறேன்..//

    வான்மீகத்தில் இல்லை.

    ஒரே ஒரு ஒற்றுமை: வால்மீகத்தில் நரசிம்மரைப் பற்றி கோடி காண்பித்ததும், கம்பர் நரசிம்மரைப் பற்றி விவரமாக எழுதியதும்:

    யுத்த காண்டத்தில் தான்;
    மந்திராலோசனையில் தான்;
    அங்கு ராவணன், இங்கு ராமன்;
    எம்பெருமானின் வலிமையைப் பற்றிக் கூறும்போது தான்;
    ஒன்றில் தானே கூறுகிறான்; இன்னொன்றில் பக்தன் (விபீடணன்) மூலமாகக் கூற வைக்கிறான்.

    ReplyDelete
  23. ஸ்வாமி தேசிகன்

    //வருயிரு ளழிவழி மனம்வருமுணர்வொடு
    கரிகிரி மருவிய கரிய வனடியிணை
    பரிவொடு பரவுநல டியவர் பழவுரை
    அரி அரி அரி அரி அரி அரி அரியே !//

    அருமை!!

    ReplyDelete
  24. எனவே அடியேனுக்கு இந்தப் பாசுரத்தைப் பற்றிய குழப்பம் உண்டு. எனவே, இதை எண்ணிக்கையில் சேர்ப்பதைத் தவிர்த்தேன். ஆனால், இந்தப் பாசுரத்தைப் பற்றியும் எழுதலாம் என்று நினைத்துள்ளேன்:::))).


    ஆழ்வார்கள் சிங்கம் என்று சொன்னாலே நாம் நரசிங்கம் என்று எடுத்து கொள்வோம் நீங்க போடுங்கண்ணே!

    ReplyDelete
  25. http://aazhvarmozhi.blogspot.com -
    aalwars paasura vilakkam..

    முகவை கடை ஓபன் பண்ணிட்டாரு ஹி ஹி
    பந்தலில் இருப்பவர்கள் எட்டி பாருங்கள்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP