அந்தியம் போதில் அரியுரு - உலகின் ஒரே ஒரு அழகிய மாலைப் பொழுது
இடம்: பாண்டிய நாட்டின் ஒரு வீதியில், ஒரு வீட்டுத் திண்ணை
நேரம்: மாலை நேரம்காலம்: வல்லப தேவன் மதுரையை ஆண்ட காலம்
ஒரு வழிப்போக்கன், களைப்புடன், ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து அமர்கிறான். அங்கு ஒரு பிராம்மணர் அமர்ந்திருக்கிறார்.
வழிப்போக்கன் (அமர்ந்து, சிறிது நேரம் கழித்து): பிராம்மணரே, ஒரு நல்ல வார்த்தை சொல்லும்!
பிராம்மணர் (சற்று யோசித்து, வடமொழியில்):
வர்ஷார்த்த மஷ்டௌ ப்ரயதேத மாஸாந் நிசா(யா)ர்த்த மர்த்தம் திவஸம் யதேத
வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந பரத்ர ஹேதோரிஹ ஜந்மநா ச
வழிப்போக்கன்: பிராம்மணரே, எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. சற்றுப் புரியும்படி தமிழில் சொல்லுங்களேன்!
பிராம்மணர் (மீண்டும், தமிழில்): மழைக் காலத்துக்கு வேண்டியவற்றை மற்ற மாதங்களிலும், இரவுக்குத் தேவையானதைப் பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் சேர்த்து வைக்க வேண்டும்.
வழிப்போக்கன் (புரிந்தது போல, மகிழ்ச்சியுடன்): மிக்க நன்றி, பிராம்மணரே!
வழிப்போக்கன் (சென்று கொண்டே ... தனக்குள்): ... ம்ம்ம்... மறுமையைத் தவிர மற்ற மூன்றுக்கும் எனக்கு ஒன்றும் குறைவில்லை; இனி மறுமைக்கு வழி தேட வேண்டும்.
(இந்தப் பிராம்மணர் அந்த வீட்டில் இருப்பவரா, இல்லை அவரும் ஒரு வழிப்போக்கரா என்பதில் வித்தியாசமான கதைகள் உள்ளன. ஆனால், அவர் வழிப்போக்கனுக்குக் கூறிய கருத்தில், அடியேனுக்குத் தெரிந்த வரையில் மாற்றம் இல்லை)
***
இடம்: பாண்டியமன்னன் ஸ்ரீ வல்லப தேவனின் அரச சபை
நேரம்: மறுநாள் காலை
அரசன்: புலவர்களே! சபையோர்களே! எனக்கு ஒரு பெருத்த சந்தேகம் உள்ளது. அதை நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும்!
(சபையிலிருந்து முணுமுணுப்பு ... என்னடா இது? மதுரைக்கு வந்த சோதனை ... மீண்டும் ஒரு திருவிளையாடலா? இப்பொழுது எந்த அரசியின் கூந்தல் வாசனை?)
அரசன்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வித உறுதிப் பொருள்களையும் தரவல்ல பரம்பொருள் எது? அதை அறிவது எப்படி?
(சபையில் சிலரிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சு)
ஒருவர் (அருகில் இருப்பவரிடம்): ஓ! நேற்று இரவு நான் கேள்விப்பட்டது உண்மை தானோ? அரசர் நகர சோதனையின் போது, வழிப்போக்கன் வேடத்தில் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாடம் கேட்டதாகக் கேள்விப் பட்டேன்!
தலைமைப் புரோகிதர் செல்வ நம்பிகள்: அரசே! திருமாலே நீங்கள் தேடும் அந்தப் பரம்பொருள்!
அரசன்: அப்படியானால், பிற மதங்களில் பிறப்பற்ற நிலையைத் தரும் சக்தியில்லையா?
திருக்கோட்டியூர் செல்வ நம்பி (மீண்டும்): ஆம் அரசே! மற்ற தெய்வங்கள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் கொடுத்தாலும், பரம்பொருளாகிய திருமால் ஒருவர் தான் (மறுபிறவி இல்லாத) வீடு பேற்றைக் கொடுக்க இயலும்!
அரசன் (மந்திரிகளுடன் கலந்தாலோசித்து): (சினிமா, நாடகங்களில் வருவது போல் கை தட்டி) யாரங்கே!
அரசன்: தங்கத்தினால் ஒரு கிழி செய்து, அதை, ஒரு கம்பத்தில் கட்டி, இந்த சபை நடுவே தொங்க விடுங்கள்!
அரசன் (அவையோரைப் பார்த்து): எந்த மதத்தைச் சேர்ந்தவரானாலும், தங்கள் மதம் தான் பரம்பொருளைக் காட்டுகிறது என்று நிர்ணயம் செய்ய முயற்சி செய்யலாம். எப்போது பொற்கிழி தானாகவே அறுந்து கீழே விழுகிறதோ, அவர் கூறும் மதமே உண்மையான பரம்பொருளைக் காட்டுகிறது என்று யாம் ஒப்புக் கொள்வோம். அந்தப் பொற்கிழியும் அப்படிச் செய்பவருக்கே! இதை விரைவில் மக்களுக்கு அறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள்!
(சபையோரிடமிருந்து மீண்டும் முணுமுணுப்பு ... என்று இதற்கு விடை தெரியுமோ? யார் தலை உருளப் போகிறதோ? ... ம்ம்ம் ... இதற்கு அந்த கூந்தல் வாசனைப் பிரச்சினையே பரவாயில்லை. அதனால் நமது சந்ததியினருக்காவது ஒரு நல்ல தமிழ்த் திரைப் படம் கிடைக்கும். இதனால், நல்லது நடந்தால் சரி ...)
... சபை கலைகிறது ...
***
சில நாட்கள் கழித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் விட்டுசித்தரின் கனவில், எம்பெருமான் தோன்றுகின்றான்.
விட்டுசித்தர் (திடுக்கிட்டு எழுந்து): நாராயணா! நாராயணா!
எம்பெருமான்: விட்டுசித்தரே! நீர் மதுரை சென்று, பாண்டிய மன்னன் அவையில் பரம்பொருளை நிர்ணயம் செய்து வாரும்!
விட்டுசித்தர் (யோசித்து): நாராயணா! அடியேனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டேன். வேதம் எவற்றையும் படிக்காத நான் எவ்வாறு பொற்கிழியை அறுக்க முடியும்?
விட்டுசித்தர் (தவறை உணர்ந்து): எம்பெருமானே! மன்னிக்கவும். தங்கள் சித்தப்படி, இன்றே புறப்படுகிறேன்.
எம்பெருமான்: வெற்றியுடன், பொற்கிழியை எடுத்து வந்து, இங்குள்ள கோயிலில் திருப்பணி செய்து வாரும்!
***
விட்டுசித்தர், பாண்டிய மன்னன் அவையில், எம்பெருமான் அருளால் பரதத்துவ நிர்ணயம் செய்தார். அப்பொழுது, கம்பம் வளைந்து விட்டுசித்தர் முன் நிற்க, அவர் பொற்கிழியைப் பெற்றுக் கொண்டார்.
(சிலர், பொற்கிழி அறுந்து கீழே விழுந்தது என்றும், விட்டுசித்தர் கிழியை எடுத்துக் கொண்டார் என்றும் கூறுவர்)
பொற்கிழி கீழே வந்த அதிசயத்தைக் கண்ட பாண்டிய மன்னன், விட்டுசித்தரை வணங்கி, 'பட்டர் பிரான்' என்ற பட்டம் சூட்டினான். பின்னர், தன் பட்டத்து யானை மீது ஏற்றி, குடை, கொடி, சாமரம், ஆல வட்டம் முதலியவற்றை அணிவித்து, மற்ற பண்டிதர்களும் மந்திரிகளும், புடை சூழ நகர் வலம் வரச் செய்தான்.
(விட்டுசித்தருக்கு, பெரியாழ்வார் என்ற பெயர், விட்டுசித்தரின் காலத்தில் கொடுக்கப் பட்டதாகச் சான்றுகள் இல்லை. இதை குரு பரம்பரையினர் கொடுத்திருக்க வேண்டும். மேலும், இந்த நிகழ்ச்சி, ஆண்டாள் காலத்திற்குப் பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்).
இப்படி ஆழ்வார் பவனி வரும் பொழுது இந்த அழகை நேரில் காண, பிராட்டியாருடன் ஸ்ரீமந் நாராயணன், கருடன் மீதமர்ந்து அங்கே தோன்றி, அனைவருக்கும் காட்சி அளித்தான்.
(மதுரைக்கு வந்த சோதனை, எம்பெருமானின் வரவால் விலகுகிறது ...)
அடியேனைப் போன்ற சாமானியர் எல்லாம், எம்பெருமான் எதிரே வந்து நின்றால் கூட, (’நமக்கெல்லாம் காட்சி தரமாட்டார் அவர்’ என்ற அவநம்பிக்கையுடன்)‘, உடை நன்றாக இருக்கிறது. எந்த நாடகக் கடையில் இருந்து உடை வாடகைக்கு எடுத்து வந்தீர்?’ என்று கேட்போம்.
ஆனால், பெரியாழ்வார், சாமானியர் அல்லவே! அவர் என்ன செய்திருப்பார்?
***
பெரியாழ்வாருக்கு, எல்லையில்லாத ஆனந்தம்! எம்பெருமானை நேரில் பார்த்ததில்! ஆனாலும் உடனே பயம்! இந்தக் கலி காலத்தில் பகவான் தன் அழகிய திருமுகத்தை எல்லோருக்கும் காட்டுகின்றானே? அதுவும், தன்னுடைய பரிவாரத்தையும், ஆயுதங்களையும் சேர்த்துக் காட்டுகிறானே? 'கண்' பட்டு விட்டால்?
தாகத்தினால் தொண்டை வரண்டு, தண்ணீர் கேட்பவன், தன்னையும் அறியாமல் 'தண்ணீர்! தண்ணீர்!' என்று ஒரு முறைக்குப் பலமுறை தண்ணீர் கேட்பது போல, எம்பெருமானுக்கு என்ன தீங்கு வருமோ என்று அஞ்சி, அவனுக்குப் பல முறை ‘பல்லாண்டு வாழ்த்து’ பாட ஆரம்பிக்கின்றார் பெரியாழ்வார்.
'பல்லாண்டு' என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்த அவருக்கு, 'வாழ்க' என்று கூறி முடிக்க இயலவில்லை - பயம் மிகவும் அதிகமாகி விட்டது! மனம் அமைதி அடையாமல், அங்கு கூடியிருக்கின்ற எல்லோரையும் பல்லாண்டு பாட அழைக்கின்றார். அவர்களும், ஆழ்வாருடன் சேர்ந்து பல்லாண்டு பாடுகின்றனர்.
'திருப்பல்லாண்டு' எனும் இந்தப் திருமொழியில் (பதிகத்தில்) பதினொன்று பாசுரங்கள் உள்ளன. ஸ்ரீமந் நாராயணனுக்கு வாழ்த்துக் கூறும் இந்தத் திருப்பல்லாண்டே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் துவக்கமாக அமைந்துள்ளது!
கூடியிருந்த ஞானிகள், எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவதாக வரும் 6-வது பாசுரத்தில், நரசிம்மாவதாரம் பற்றிப் பேசப்படுகிறது.
***
எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன்* ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்* திருவோணத் திருவிழவில்*
அந்தியம் போதில் அரி உருவாகி* அரியை அழித்தவனை*
பந்தனை தீரப் பல்லாண்டு*பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே.
திருப்பல்லாண்டு 1-1-6
(எந்தை - நானும், என்னுடைய தந்தையுமாகிய இருவர்; தம் மூத்தப்பன் - அவனும், அவனுக்குத் தந்தையும், பாட்டனும் ஆகிய 3 பேர்; ஆட்செய்தல் - அடிமைத்தொழில் செய்தல்; அரி - பகைவன்; பந்தனை - வருத்தம், களைப்பு)
"அடியேனுடைய தந்தையும், அடியேனும், அவருக்குத் தந்தையும், அவருடைய தந்தையும், அவருடைய தந்தையும், அவருக்குப் பாட்டனுமாகிய ஏழு தலைமுறையாகத் தொடங்கி, உரிய காலங்களில், வழி வழியாக எம்பெருமானுக்கு அடிமைத் தொண்டு செய்து வருகிறோம்.
திருவோணத் திருநாளில், அந்திப் பொழுதில், சிங்க உருவம் எடுத்து, இரணியன் எனும் பகைவனை அழித்தவனாகிய ஸ்ரீமந் நாராயணனுக்கு, அவதாரக் களைப்பு தீர, அவனுக்குப் பல்லாண்டு பாடுவோம்!"
என்று, ஞானிகள், பெரியாழ்வாருடன் சேர்ந்து எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகின்றனர்.
***
நாராயணின் அடியவர்கள், 'நான்', 'எனது', என்ற சொற்கள் அகங்காரத்தைக் குறிப்பதால், அவற்றை பெரும்பாலும் உபயோகப் படுத்தமாட்டார்கள் (மாறாக, அடியேன், தாஸன் என்ற சொற்களைப் பயன்படுத்துவர்). இதைப் பின்பற்றியே பெரியாழ்வார் இங்கு 'நானும், எனது தந்தையும்' என்று சொல்லாமல், தன் தந்தையை முன்னிலைப் படுத்தி, 'எந்தை' என்று பாசுரத்தைத் துவங்கியிருப்பது கவனிக்கத் தக்கது.
பாசுரத்தில், 'அந்திப்போதில்' என்று குறிப்பிடாமல், 'அந்தி அம் போதில்' என்று குறிப்பிடுவதன் நோக்கம் என்ன?
'அம்' என்றால் அழகு என்றும் பொருள். அழகிய மாலைப் பொழுது, என்று பொருள் கொள்ளலாம். எது அழகு?
இந்த மாலைப் பொழுதானது, தினமும் வருகின்ற மாலைப் பொழுது போன்றதல்ல; ’எம்பெருமான் சிங்க உருவம் எடுத்து வந்த அந்த திருவோண மாலைப் பொழுது. இதுவே அழகிய மாலைப் பொழுது, மற்ற மாலைப் பொழுதெல்லாம் வெறும் மாலைப் பொழுதுதான்' என்று ஆழ்வார் கூறுகின்றார் போலும்!
அம்-அந்திப்-போதில் என்று தானே இருக்க வேண்டும்? பாசுர அமைப்பு கருதி, அந்தி-அம்-போதில் என்று ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார்.
'அரி' என்றால் பகைவன். பகைவனை அழித்தவன் என்று நாராயணனைக் குறிப்பிடுகின்றார் பெரியாழ்வார். எல்லாப் பொருட்களிலும் உள்ளே உறைந்து நிற்கும் அவனுக்கென்று யாரும் பகைவன் இருக்க முடியாதே! இந்த நாராயணனுக்கு யார் பகைவன்?
தன் பக்தர்களுக்கு (இங்கு, பிரகலாதனுக்கு) யார் பகைவனோ, அவனே நாராயணனுக்குப் பகைவன். ஏனென்றால் அவன் அடியவருக்கு அடியவன் ஆயிற்றே! பக்தர்களுக்கு ஒரு துன்பம் வந்தால் தாங்கமாட்டானாம் அவன்!
இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் கூறியது போல (திருவோண ... அழித்தவனை), நரசிம்மர் பிறந்த நட்சத்திரம் திருவோணமா அல்லது ஸ்வாதியா?
***
நரசிம்மாவதாரம் பற்றி, பாகவதம், அக்னி புராணம், பாத்ம புராணம், ப்ரம்மாண்ட புராணம், வாயு புராணம், ஹரி வம்ஸம், ப்ரம்ம புராணம், விஷ்ணு புராணம், கூர்ம புராணம், மத்ஸ்ய புராணம், நரசிம்ம புராணம், சிவ புராணம், மஹாபாரதம், போன்ற பல புராணங்களும், உப புராணங்களும், உபநிடதங்களும் குறிப்பிடுகின்றன. சிலவற்றில் மிகவும் விவரமாகவும், சிலவற்றில் சிறு கதைகளாகவும், குறிப்புகளாகவும் சொல்லப்பட்டுள்ளன.
இத்தனை புராணங்களும் உப புராணங்களும் தவிர, நரசிம்மாவதாரம் பல மொழிகளிலும், மொழி பெயர்ப்பாகவோ, அல்லது மொழி இலக்கியமாகவோ எழுதப்பட்டுள்ளன. தமிழிலும், சில காவியங்களில் நரசிம்ம அவதாரம் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்க் காவியங்களில் இருந்து மேற்கோள்களை பின்னால் நாம் பல சந்தர்ப்பங்களில் பார்க்கலாம்.
அநேகமாக எல்லாவற்றிலும் நரசிம்ம அவதாரக் கதைத் தொகுப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆங்காங்கே விவரங்களில் பல வித்தியாசங்கள் உள்ளன.
பெரும்பாலான அவதாரக் குறிப்புகள், நரசிம்மாவதாரம் ஸ்வாதி நட்சத்திரத்தில் ஏற்பட்டது (தூணில் இருந்து தோன்றிய போது) என்று கூறுகின்றன.
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், 'திருவோணத் திருவிழவில்' என்று நரசிம்மம் உருவாகியதைப் பற்றிக் கூறுவது எப்படிப் பொருந்தும்?
இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், 'திருவோணத் திருவிழவில்' என்று நரசிம்மம் உருவாகியதைப் பற்றிக் கூறுவது எப்படிப் பொருந்தும்?
***
பாஞ்சராத்திரத்தில் (பாத்மம்), ஸ்வாதிக்குப் பதிலாக, திருவோணம் நரசிம்மனின் நட்சத்திரமாகச் சொல்லப்பட்டுள்ளது. திருவோணம் பொதுவாக விஷ்ணுவின் நட்சத்திரமாகும். எனவே, விஷ்ணு அவதாரமாயாகிய நரசிம்மனுக்கும் இது ஜன்ம நட்சத்திரமாகும் என்பர் சிலர். ஏதோ ஒரு காரணத்திற்காக ஸ்வாதி நட்சத்திரத்தில் நரசிம்ம உத்ஸவத்தைக் கொண்டாடாதவர்கள், திருவோணத்தில் கொண்டாடலாம் என்ற நியமமும் உள்ளது.
ஆழ்வார், 'திருவோணத்தில்' என்று குறிப்பிடாமல், 'திருவோணத் திருவிழவில்' என்று கூறுகின்றாரே?
வைணவக் கோயில்களில், வருடத்தில் ஒரு முறை திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, 7-10 நாட்கள் வரை ப்ரம்மோத்ஸவம் என்னும் திருவிழாவைக் கொண்டாடுவது உண்டு (இது இப்பொழுதும், திருமலை உட்பட பல கோயில்களில் வழக்கத்தில் உள்ளது). எனவே, இந்தத் திருவிழாவின் போது, ’10 நாட்களில், ஏதோ ஒரு நாளில் வந்த ஸ்வாதி நட்சத்திரத்தில் நரசிம்ம அவதாரம் ஏற்பட்டது’ என்று ஆழ்வார் கூறுவதாகவும் இதைப் பொருள் கொள்ளலாம்.
வைணவக் கோயில்களில், வருடத்தில் ஒரு முறை திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, 7-10 நாட்கள் வரை ப்ரம்மோத்ஸவம் என்னும் திருவிழாவைக் கொண்டாடுவது உண்டு (இது இப்பொழுதும், திருமலை உட்பட பல கோயில்களில் வழக்கத்தில் உள்ளது). எனவே, இந்தத் திருவிழாவின் போது, ’10 நாட்களில், ஏதோ ஒரு நாளில் வந்த ஸ்வாதி நட்சத்திரத்தில் நரசிம்ம அவதாரம் ஏற்பட்டது’ என்று ஆழ்வார் கூறுவதாகவும் இதைப் பொருள் கொள்ளலாம்.
பாசுரத்தின் அடுத்த வரியில் ’பந்தனை தீரப் பல்லாண்டு’ பாடுவதாகச் சொல்கிறார். அது என்ன ’பந்தனை’?
***
நரசிம்மாவதாரத்தின் போது, நரசிம்மர் மற்ற அசுரர்களை அழித்த விதமும், இரணியனை வதைத்த விதமும் பல புராணங்களில் மிகவும் அழகாகச் சொல்லப் பட்டுள்ளன (இதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம்). அவற்றைப் படித்தால், நமக்கே சண்டை போட்ட களைப்பு வந்து விடும். சண்டையிட்ட அவனுக்கு வராதா என்ன?
எனவே பெரியாழ்வாரும், ஞானிகளும், நரசிம்மனின் அவதாரக் களைப்புத் தீர, எல்லோரையும் பல்லாண்டு பாட அழைக்கின்றனர்.
வாருங்கள், நாமும் அவனுக்குப் பல்லாண்டு பாடுவோம்!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு* பலகோடி நூறாயிரம்*
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா!* உன் சேவடி செவ்வி திருக்காப்பு*
அடியோமோடும் நின்னோடும்* பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*
வடிவாய் நின் வல மார்பினில்* வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்* சுடர் ஆழியும் பல்லாண்டு*
படை போர்புக்கு முழங்கும்* அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
... நரசிம்மர் மீண்டும் வருவார்
முதலில் அருமையான நரசிம்மரின் படத்திற்கு நன்றிண்ணா !!.. ஜம்முனு சிரிச்சுகிட்டு அட்டகாசமா உக்காந்திருக்காரே..
ReplyDeleteemperuman thiruvadikku pallandu!
ReplyDeletedevareer thriuvadikkum pallandu!
Nalld nadai,thodarattum devareer kainkaryam.
//அவற்றைப் படித்தால், நமக்கே சண்டை போட்ட களைப்பு வந்து விடும். சண்டையிட்ட அவனுக்கு வராதா என்ன?
ReplyDeleteவாருங்கள், நாமும் அவனுக்குப் பல்லாண்டு பாடுவோம்!//
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு!
உன் பந்தனை தீரப் பல்லாண்டு!
என் பந்தனை தீரப் பல்லாண்டு!
உன்-என் பந்தம் தீராமல் பல்லாண்டு பல்லாண்டு! பல கோடி நூறாயிரம்!
அழகான நாமக்கல் நரசிம்மப் பெருமாள் தரிசனம்! இன்னும் பதிவைப் படிக்கவே இல்லை! படத்தையே பார்த்துக்கிட்டு இருக்கேன்!
* ஆசன பத்மத்திலே அழுத்தின ஒரு திருவடிகளுமாய்
* தொடையில் வைத்து அழுத்தின இன்னொரு திருவடிகளுமாய்
* கையிலே பக்த லோக சக்ரவர்த்தியான பிரகலாதனின் செங்கோல் ஏந்தி
* கழுத்திலே வஜ்ர மாலை பூண்டு
* வலமார்பிலே அன்னையவள் வட்டப் பதக்கமாய் மின்ன மின்ன
* மேற்கைகளில் திவ்யாயுதங்கள் மின்ன மின்ன
* பிரயோகச் சக்கரமும், வலம்புரிச் சங்கும்
* ஆளரி முகமும், முகமும் முறுவலும்,
* முடிச்சோதியாய் உன் முகச் சோதி மலர்ந்ததுவோ
* ஆய சீர் முடியும் தேசும் முகம் பொழி கருணைக் கண்ணும்
* முனியே நான்முகனே முக்கண் அப்பா என்று பிரமனும், எங்கள் ஈசனும் பின்னே திரள
* வென்றி வில்லும் வாளும் தண்டும் சங்கும் சக்கரமும்
* ஆளரியும் குழந்தையும்
* இன்று வந்து என் கண்ணுள் நீங்கா...நெஞ்சுள்ளும் நீங்கா நீங்காவே!
பந்தலுக்கு அழகு சேர்க்க இது வரை பல படங்கள் உதவின!
ReplyDeleteஅது நிற்காது தொடருவது கண்டு அடியேனுக்கு மட்டிலா மகிழ்ச்சி!
நன்றி ரங்கன் அண்ணா!
//தலைமைப் புரோகிதர் செல்வ நம்பிகள்://
ReplyDeleteஇவர் தான் "அல்வழக்கு ஒன்றுமில்லா அணி கோட்டியர் கோன் செல்வனைப் போலே"வா?
//முதலில் அருமையான நரசிம்மரின் படத்திற்கு நன்றிண்ணா !!.. ஜம்முனு சிரிச்சுகிட்டு அட்டகாசமா உக்காந்திருக்காரே..//
ReplyDeleteநானும் இதையே சொல்லிக் கொள்கிறேன் ரங்கன் அண்ணா.முந்தைய நரஸிம்ஹர் (வாடபல்லி) படமும் கண்களில் அகலாமல் நிற்கிறது.
பல புதிய செய்திகளை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி. :)
Selvanambi Avargale
ReplyDeleteEmberumaan, kainkaryam adiyEn bAkkiyam.
KRS
ReplyDelete//பந்தலுக்கு அழகு சேர்க்க இது வரை பல படங்கள் உதவின!
அது நிற்காது தொடருவது கண்டு அடியேனுக்கு மட்டிலா மகிழ்ச்சி!
நன்றி ரங்கன் அண்ணா!//
நாமக்கல் நரசிம்மன் அடியேனுக்குக் கிடைத்ததனால் சேர்த்தேன். மற்ற படங்களைச் சேர்த்த பெருமை ராகவனுடையது. நன்றி, ராகவா!
ராதா அண்ணா
ReplyDelete//நானும் இதையே சொல்லிக் கொள்கிறேன் ரங்கன் அண்ணா.முந்தைய நரஸிம்ஹர் (வாடபல்லி) படமும் கண்களில் அகலாமல் நிற்கிறது.
பல புதிய செய்திகளை தெரிந்து கொண்டேன்.//
நன்றி. அடியவர்கள் எம்பெருமானை அனுபவித்தாலே, அடியேனுக்குப் பெரும் பாக்கியம்.
கண்ணபிரானே
ReplyDelete//இவர் தான் "அல்வழக்கு ஒன்றுமில்லா அணி கோட்டியர் கோன் செல்வனைப் போலே"வா?//
ஆமாம். திருக்கோட்டியூர் செல்வ நம்பிகள், வல்லபதேவன் சபையில் தலைமைப் புரோகிதராக இருந்தவர்.
ஆழ்வார் இவரைப் பற்றி இந்தப் பாசுரத்தில் குறிப்பிடுவதனால், இதையும், ஆழ்வார் கால நிலை ஆராய்ச்சிக்குச் சான்றாக எடுத்துக் கொள்வர்.
திருவோணமா ஸ்வாதியா என்ற கேள்விக்கு அழகான விளக்கம், நரசிம்மமே அளித்த மாதிரி இருந்தது. அனுபவித்தேன்.
ReplyDeleteநரசிம்மர் தொடர்ந்து வருவது அடியேன் பாக்யம்.
பந்தலில் புதியவர்களின் வரவு வித்தியாசமாக இருக்குமோ என்ற ஐயம் இருந்தது....
ReplyDeleteஆனால், மாதவியின் மணம் சற்றும் மாறவில்லை...
உணர்வுப்பூர்வமான விளக்கங்கள்!! மொத்தத்தில் மொத்தமும் அருமை! அருமை!! அருமை!!
திருப்பணி பல்லாண்டுகள் தொடர இறைவனை வேண்டுகிறேன்!!
--- மணிவண்ணா! நாராயணா! உன் செவ்வடி செவ்விதிருக்காப்பு...
- முகில்
பெரியாழ்வாரின் வைபவம் மிக அழகாகச் சொன்னீர்கள் அரங்கன் அண்ணா. அந்த வண்ணப்படங்கள் எல்லாம் மதுரை கூடல் அழகர் கோவில் பெருமாள் சந்நிதியில் பார்த்திருக்கிறேன். அவற்றை இணையத்தில் ஏற்றியவர்கள் யாரோ?
ReplyDeleteஅப்பா, பையன், பேரன் மூன்று பேரும் இருக்கும் படமும் நல்லா இருக்கு. அவர் நாமக்கல்லார் என்பதை பின்னூட்டங்களில் தெரிந்து கொண்டேன்.
//இந்த நிகழ்ச்சி, ஆண்டாள் காலத்திற்குப் பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்//
அந்த ஆராய்ச்சியாளர்கள் அதற்கு தரவுகளாக (சான்றுகளாக) எதனைக் காட்டுகிறார்கள் அரங்கன் அண்ணா?
அணிகோட்டியர் கோன் செல்வனைப் பற்றி இன்னும் சில பாசுரங்களிலும் பெரியாழ்வார் குறித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இவர் யார் என்ற சிறு ஆராய்ச்சி திரு. கிருஷ்ணமாச்சாரியார் விரித்திருக்கும் 'கோயில் ஒழுகு ' நூலில் இருக்கிறது.
ReplyDeleteகுமரன் அவர்களே
ReplyDelete//பெரியாழ்வாரின் வைபவம் மிக அழகாகச் சொன்னீர்கள் அரங்கன் அண்ணா. அந்த வண்ணப்படங்கள் எல்லாம் மதுரை கூடல் அழகர் கோவில் பெருமாள் சந்நிதியில் பார்த்திருக்கிறேன். அவற்றை இணையத்தில் ஏற்றியவர்கள் யாரோ?//
இந்தப் பெருமை தேவன் ராகவனையே சாரும்.
//அந்த ஆராய்ச்சியாளர்கள் அதற்கு தரவுகளாக (சான்றுகளாக) எதனைக் காட்டுகிறார்கள் அரங்கன் அண்ணா?//
முதலில், பெரியாழ்வார் மதுரை சென்ற பொழுதோ, அல்லது, அவர் பரதத்துவம் நிர்ணயம் செய்த பொழுதோ, ஆண்டாள் அவருடன் இருந்ததாக, எந்த வரலாறும் இல்லை.
பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்தது, அவர் காலத்தில், மிகப் பெரிய சம்பவம். இந்தச் சம்பவம் நடந்த போது ஆண்டாள் இருந்திருந்தால், ஆண்டாள், இந்தச் சம்பவத்தைப் பற்றி, திருப்பாவையிலோ அல்லது நாச்சியார் திருமொழியிலோ, இதைப் பற்றிப் பெருமையாகப் பேசி இருப்பாள். தந்தையும் ஆசானும் ஆயிற்றே! எம்பெருமானை நேரில் பார்த்தால் பேசாமல் இருந்திருப்பாளோ?
பரதத்துவ நிர்ணயம் பற்றி ஆண்டாள் எதுவுமே குறிப்பிடவில்லை.
பெரியாழ்வார், ஆண்டாள் காலத்தில் எந்தப் பாசுரமும் எழுதியதற்குச் சான்றுகள் எதுவும் இல்லை.
பெரியாழ்வார், பின்னர் ஒரு பாசுரத்தில், வருத்தத்துடன் (3-8-4),
’ஒரு மகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான் கொண்டு போனான்’
...
என்கின்றார். இந்தப் பாடலை எழுதும் போது, ஆண்டாள் இல்லை என்பதும் தெரிகிறது.
அடியேனின் எண்ணம் - பெரியாழ்வார் எம்பெருமான் பவனி வருவதைப் பார்க்கக் காரணம், பெரியாழ்வார் அவருக்கு மாமனார் முறை என்பதால் - என்று ஒரு உபன்யாசத்தில் கேட்ட ஞாபகம். இது உண்மையாக இருந்தால், ஆண்டாள் திருமணத்தின் பின்பே பெரியாழ்வார் பல்லாண்டு பாடி இருக்க வேண்டும்.
எனவே, ஆராச்சியாளர்களின் பெரும்பான்மைக் கருத்து, ஆண்டாள் காலத்திற்குப் பிறகு தான் பல்லாண்டு பாடியிருக்க வேண்டும் என்பதே.
//ராதா அண்ணா //
ReplyDeleteநல்ல வேளை. சிலர் என்னை ராதாம்மா என்றெல்லாம் விளித்து இருக்கிறார்கள். :)
குமரன் உங்களை அண்ணா என்று அழைக்கும் பொழுது, நான் நிச்சயம் உங்களை விட சிறியவன் தான் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ரங்கன் அண்ணா. :) (குமரன், ரவி, ராகவ் போன்ற நண்பர்கள் ராதா என்றே என்னை அழைப்பார்கள்.அவ்வாறு அழைப்பது கடினமாக இருந்தால், இன்னும் கொஞ்சம் எழுத்துக்கள் தட்டச்சு செய்து ராதாமோகன் என்று அழைக்கலாம்.:))
முகில் (வண்ணா)
ReplyDelete//திருப்பணி பல்லாண்டுகள் தொடர இறைவனை வேண்டுகிறேன்!!//
நன்றியைத் தவிர வேறு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
எல்லாம் நரசிம்மன் செயல். இல்லையென்றால் மாதவிப் பந்தல் அறிமுகமும், தங்களைப் போன்ற அன்பர்களும் அடியேனுக்குக் கிடைத்திருப்பார்களா?
அடியேனைப் போன்ற சாமானியர் எல்லாம், எம்பெருமான் எதிரே வந்து நின்றால் கூட, (’நமக்கெல்லாம் காட்சி தரமாட்டார் அவர்’ என்ற அவநம்பிக்கையுடன்)‘, உடை நன்றாக இருக்கிறது. எந்த நாடகக் கடையில் இருந்து உடை வாடகைக்கு எடுத்து வந்தீர்?’ என்று கேட்போம்.:))))
ReplyDeleteநல்லா காமெடி பண்ணீங்க
ஆனால் நம்ம நரசிம்மர் வந்து நின்னாருனா அவர் மூச்சு காற்றிலேயே சுற்றி இருப்பவர்கள் பறந்து விடுவார்கள் அப்பவே தெரிந்து கொள்ளலாம் அவர் நரசிம்ம பெருமாள் என்று ...ஹி ஹி ...
பாசுரத்தை கொஞ்சம் பெரிசா போடுங்கண்ணே இப்பவே கண்ண கட்டுதே!
http://srikamalakkanniamman.blogspot.com
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு!
ReplyDeleteஉன் பந்தனை தீரப் பல்லாண்டு!
என் பந்தனை தீரப் பல்லாண்டு!
உன்-என் பந்தம் தீராமல் பல்லாண்டு பல்லாண்டு! பல கோடி நூறாயிரம்!:)))
நல்லா இருக்கே
அட இது யாருப்பா புது ஆழ்வாரு
ஆஹா! நரசிம்மர் படம் அருமை
ReplyDeleteபெரியாழ்வார் வைபவம் அருமை அரங்கன் அண்ணா. ஸ்வாதியா? திருவோணமா? என்பதற்கு நல்ல விளக்கம்.
ReplyDeleteஅரி - என்றால் சிங்கம் என்ற பொருளும் உண்டு, அந்த சிங்கத்தை கொன்ற நரசிங்கப்பிரான் என்றும் பொருள் கொள்ளலாமல்லவா?
பெருமாள் எடுத்த அவதாரங்களிலேயே மிகவும் குறுகிய காலத்திற்கு ஏற்பட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம்தான். எந்த தூணை பிரகலாதன் கை காட்டுவான் அங்கிருந்து ஆர்பவித்து தோன்றி எழுந்து பிரகலாதன் வார்த்தையை மெய்பிப்போம் என்று பெருமாள் ஆவலுடன் அண்டமெங்கும் வியாபித்து காத்துக் கிடந்ததில்தான் அவருக்கு களைப்பு ஏற்பட்டதாம், இரணியனை கொன்றதால் அல்ல. அந்த களைப்பைத்தான் பந்தனை என்று பெரியாழ்வார் பாடுகின்றாரோ?
எதோ மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன் பிழையிருந்தால் நீக்கி விடலாம்.
அடியேனும் நரசிம்ம தாசன் அடியேனின் வலைப்பூவும் http://narasimhar.blogspot.com முதலில் ஆழ்வாரின் நரசிம்ம பாசுரங்களை விளக்க வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன்.
தாங்கள் அந்த கைங்கரியத்தை மிகவும் சிறப்பாக செய்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.
இந்த ஒரு அரிய வாய்ப்பை அளித்த KRS ஐயாவிற்கும் நன்றி.
Vanakkam sir,
ReplyDeleteNalla article,read many times,sir, Narasimhaswamy in his avathar doesnot have sangam,chakkarm then why in temples,he is giving darshan with them,and in Chakkarathazhwar sannidhi you can find him, behind chakkarathazhwar why? please write this details also.
ARANGAN ARULVANAGA.
anbudan,
k.srinivasan.
வணக்கம்
ReplyDelete//அரி - என்றால் சிங்கம் என்ற பொருளும் உண்டு, அந்த சிங்கத்தை கொன்ற நரசிங்கப்பிரான் என்றும் பொருள் கொள்ளலாமல்லவா?//
அரி என்ற வார்த்தைக்கு, தாங்கள் கூறுவது போல் சிங்கம் என்ற பொருளும், பகைவன் என்ற பொருளும் உண்டு.
இங்கு ஆழ்வார், ‘அந்தியம்போதில் அரியுருவாகி, அரியை அழித்தவனை’ என்கின்றார்.
முதலில் வரும் ’அரி’ சொல்லுக்கு, சிங்கம் என்ற பொருள். பின்னர் வரும் ’அரி’ சொல்லுக்கு, பகைவன் என்ற பொருள். அதாவது,
அழகிய மாலைப் பொழுதில், சிங்க உருவாகி, பகைவனை அழித்தவன்’ என்று ஆழ்வார் கூறுகின்றார்.
//அடியேனின் வலைப்பூவும் http://narasimhar.blogspot.com முதலில் ஆழ்வாரின் நரசிம்ம பாசுரங்களை விளக்க வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன்.//
மகிழ்ச்சி. தாங்கள் இன்னும் தொடர்கிறீர்களா?
//எதோ மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன் பிழையிருந்தால் நீக்கி விடலாம்.//
கவலைப் படத் தேவையில்லை. அடியார்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் இருந்தால் நல்லதே. எல்லாம் நரசிம்மனுக்குச் சமர்ப்பணம்.
//தாங்கள் அந்த கைங்கரியத்தை மிகவும் சிறப்பாக செய்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.//
தங்களைப் போன்றோர் ஆசிகளும், ஆதரவும் வேண்டுகிறேன்.
Srinivasan Anna,
ReplyDelete//Narasimhaswamy in his avathar doesnot have sangam,chakkarm then why in temples,he is giving darshan with them//
அற்புதமான கேள்வி. நரசிம்மாவதாரத்திற்கு மூல புராணம் (வால்மீகியின் ராமாயணத்தைப் போல்) என்று எதுவும் குறிப்பிடப் படவில்லை. 18 புராணங்களையும் எழுதியது வியாசர் என்றே கூறப் படுகிறது.
எனினும், ஸ்ரீமத் பாகவதத்தில், நரசிம்மாவதாரக் கதையை, நாரதரே தருமருக்குக் கூறுகிறார். நாரதர், பிரகலாதனுக்கு, கருவிலே திருவளித்தவர். எனவே, ஸ்ரீமத் பாகவத நரசிம்மாவதாரக் குறிப்பு, சற்று ஏற்றம் பெறுகிறது. இந்தக் குறிப்பில், பகவானுடைய பலப்பல கைகளில், சங்கும் சக்கரமும் இருந்ததாக நாரதர் கூறுகிறார் (7-14-8-20/21/22/23/24). இந்த அவதார அழகை, அடுத்த நரசிம்மர் பாசுரம் வரும்போது கூறிப்பிடலாம் என்றுள்ளேன்
//and in Chakkarathazhwar sannidhi you can find him, behind chakkarathazhwar why?//
எம்பெருமானினுடைய சக்தியே சிதர்சனர். இரண்டும் சேர்ந்தே இருக்கின்றது. நரசிம்மாவதாரத்தில், இவர் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. அவ்வளவே.
சுதர்ஸனர் என்றால், ‘சு’ தர்ஸனர். நல்ல தரிசனம் கொடுப்பவர் என்று பொருள்.
எம்பெருமான், ‘கதிர் மதியம் போல் முகத்தான்’. ஒரே நேரத்தில், பகைவர்களுக்கு நெருப்பும், அன்பர்களுக்குக் குளிர்ச்சியுமாய் தரிசனம் தருபவன்.
நரசிம்மாவதாரத்தில், பகைவர்களுக்கு பயத்தை அளிப்பவன். சற்றே உக்கிரமாக இருப்பதால், ‘சு’தர்ஸனரையும் சேர்த்து தரிஸனம் செய்வித்து, நமக்குக் குளிர்ச்சி அளிக்கிறார்.
ஒரே சமயத்தில் இது எப்படி சாத்தியம்? இதைப் பற்றிய விளக்கம் பின்னால் ஒரு பாசுரத்திலேயே வருகின்றது. அப்போது அடியேன் எழுதுகின்றேன். ஒருவேளை மறந்துவிட்டால், மீண்டும் நினைவு படுத்தவும்.
நரசிம்மர் ஹோமம், யாகம், போன்றவை, சுதர்ஸனர் இல்லாமல் செய்வதில்லை. சுதர்ஸன ஹோமமும், நரசிம்மரை முதலில் வணங்கியே செய்வர்.
எனவே, அர்ச்சாவதாரத்தில், நரசிம்மரும், சுதர்ஸனரும் பெரும்பாலும், சேர்ந்தே இருப்பர்.
வணக்கம்
ReplyDelete//அரி - என்றால் சிங்கம் என்ற பொருளும் உண்டு, அந்த சிங்கத்தை கொன்ற நரசிங்கப்பிரான் என்றும் பொருள் கொள்ளலாமல்லவா?//
அரி என்ற வார்த்தைக்கு, தாங்கள் கூறுவது போல் சிங்கம் என்ற பொருளும், பகைவன் என்ற பொருளும் உண்டு.
இங்கு ஆழ்வார், ‘அந்தியம்போதில் அரியுருவாகி, அரியை அழித்தவனை’ என்கின்றார்.
முதலில் வரும் ’அரி’ சொல்லுக்கு, சிங்கம் என்ற பொருள். பின்னர் வரும் ’அரி’ சொல்லுக்கு, பகைவன் என்ற பொருள். அதாவது,
அழகிய மாலைப் பொழுதில், சிங்க உருவாகி, பகைவனை அழித்தவன்’ என்று ஆழ்வார் கூறுகின்றார்.
//அடியேனின் வலைப்பூவும் http://narasimhar.blogspot.com முதலில் ஆழ்வாரின் நரசிம்ம பாசுரங்களை விளக்க வேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன்.//
மகிழ்ச்சி. தாங்கள் இன்னும் தொடர்கிறீர்களா?
//எதோ மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன் பிழையிருந்தால் நீக்கி விடலாம்.//
கவலைப் படத் தேவையில்லை. அடியார்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் இருந்தால் நல்லதே. எல்லாம் நரசிம்மனுக்குச் சமர்ப்பணம்.
//தாங்கள் அந்த கைங்கரியத்தை மிகவும் சிறப்பாக செய்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.//
தங்களைப் போன்றோர் ஆசிகளும், ஆதரவும் வேண்டுகிறேன்.