Sunday, October 25, 2009

பூதனா சம்ஹாரம் - கண்ணன் ஏன் கண்ணை மூடினான் ?



பெரியாழ்வார், தன்னை யசோதையாகவும் கண்ணனைத் தன் குழந்தையாகவும் நினைக்கின்றார் (’பெரிய ஆழ்வார்' என்று இவரை அழைப்பது இதற்காகத் தானோ?).

மனம், மின்னல் வேகத்தில், ஆய்ப்பாடிக்குச் செல்கிறது. கண்ணனின் அழகில் லயிக்கின்றது.பாதாதிகேச வண்ணமாக (பாதம் + ஆதி + கேசம் = திருவடி முதல் திருமுடி முடிய), ’குஞ்சிக் கோவிந்தனுடைய’ அழகை அனுபவிக்கிறார்.
அப்படியே நின்றுவிடாமல், நமக்காக, பாசுரம் இயற்ற ஆரம்பிக்கின்றார். பிறந்தது, ‘சீதக்கடல்’ எனும் திருமொழி!

10 பாசுரங்கள் போதும் என்று எழுத நினைத்தவர், அழகில் தன்னை மறக்கிறார். எழுதியது 21 பாசுரங்கள்! நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் தானே!
(ஒரு சாரார், திருப்பல்லாண்டுப் பதிகத்தைத் தனிப் பிரபந்தமாக எடுத்துக் கொண்டு, சீதக்கடல் பதிகத்தை 2 பதிகங்களாக எடுத்துக் கொள்வர்)

5-வது பாசுரத்தில், நரசிம்மாவதாரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

***
பிறங்கிய பேய்ச்சி* முலை சுவைத்து உண்டிட்டு*
உறங்குவான் போலே* கிடந்த இப்பிள்ளை*
மறங்கொள் இரணியன்* மார்பை முன் கீண்டான்*
குறங்குகளை வந்து காணீரே!* குவிமுலையீர்!* வந்து காணீரே!
சீதக்கடல்-1-3-5

"வஞ்சனையால், உருவம் மாறி வந்த பேயின் முலையுடன் உயிரையும் சேர்த்து உண்டு விட்டு, இப்பொழுது தூங்குவது போல் பாசாங்கு செய்கின்ற இந்தக் கண்ணனே வீரமுடைய இரணியனுடைய மார்பை முன்பு பிளந்தவன். அவனுடைய அழகிய தொடைகளை, ஆய்ப்பாடிப் பெண்களே, வந்து பாருங்கள்!".
(பிறங்கிய - நிலை மாறிய, சிறந்து விளங்கிய; மறங்கொள் - வீரமுடைய, குறங்குகள் - தொடைகள்)

***

ண்ணனைக் கொல்ல, கம்சன் பூதனை எனும் அரக்கியை ஆய்ப்பாடிக்கு அனுப்புகிறான். 'எல்லோரும் கண்ணனை வந்து பாருங்கள்!' என்ற யசோதையின் அழைப்பிதழ், பூதனைக்கும் சேர்த்துத் தானே! அழகான ஒரு நடுத்தர வயதுப் பெண் போல், நந்தகோபன் மாளிகைக்கு வருகின்றாள் அவள். அவளுக்கு, ’விருந்தினர்’ என்ற மரியாதை வேறு!

கண்ணனைக் கொல்ல வழி தேடுகின்றாள். கேட்டதைக் கொடுப்பவனாயிற்றே கண்ணன்! உடனே வழி காண்பிக்கின்றான் அவளுக்கு (நேரம் வந்துவிட்டதே என்ற அவசரம் தான்)!

வந்த விருந்தினரை (!?) உபசரிப்பதற்காக யசோதை உள்ளே செல்கிறாள் - உணவு எடுத்து வரச் செல்கின்றாளோ? உயிரே சற்று நேரத்தில் (இன்னொருவருக்கு) உணவாகப் போகும் போது இந்த உணவு எதற்கு!


சமயம் பார்த்து அழுகின்றான் கண்ணன், பூதனைக்காக! நீலிக்கண்ணீர்! அவளுக்கோ, வாய்ப்பு தானாகக் கிடைத்து விட்ட மகிழ்ச்சி! இது தான் மனிதர்களின் அறியாமையோ?கண்ணனைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு, நஞ்சு தடவிய மார்பிலிருந்து அவனுக்குப் பால் கொடுக்கின்றாள். கண்ணன், பேய் முலை நஞ்சை உண்கின்றான்.

ஐயோ! இந்த நஞ்சு கண்ணனை என்ன செய்யுமோ?

***

திலை, (அடியேனைப் போன்ற) சிறியோர் சொல்வதை விட, குலசேகராழ்வார் சொல்வது அழகாக இருக்குமே!எம்பெருமான், திருவரங்கத்தில், அரவணையில் உறங்கிக் கொண்டு இருக்கின்றான்.

அவன் திருமுடி மீது ஆதிசேஷன் தன் உடலை வளைத்து, தன்னுடைய ஆயிரம் வாய்களால் (வாயோர் ஈரைஞ்ஞூறு) சுற்றி வளையமாக இருந்து, காக்கின்றான்.

வாயோர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த*
வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்*
...பெருமாள் திருமொழி 1-2

தன் ஆயிரம் வாய்களாலும், அரங்கனை இடை விடாது துதித்துக் கொண்டு (துதங்கள் ஆர்ந்த) இருக்கின்றான்! அந்த ஆயிரம் வாய்களில் இருந்து ஸ்தோத்திரங்கள் வந்தாலும், அவற்றுடன் உமிழ்கின்ற நெருப்பும், விஷமும் சேர்ந்து வருகின்றன (உமிழ்ந்த செந்தீ). அவை, அரங்கனுடைய திருமுடி மேல் சிவந்த மலர்களால் ஆன அழகான அலங்காரம் போல் (விதானமே போல்) உள்ளதாம்!

ஆதிசேஷனின் ஆயிரம் வாய் விஷமே எம்பெருமானுக்கு மலர் அலங்காரம்! பேய் முலை நஞ்சு அவனுக்கு ஒரு பொருட்டா என்ன?

***
பூதனைக்கு ஆனந்தம் - காரியம் இவ்வளவு எளிதில் முடிகின்றதே! வருத்தமும் கூட - இந்தச் சிறு வேலைக்குக் கம்சன் தன்னைப் போய் அனுப்ப வேண்டுமா என்று. ஒரு வினாடி தான் நிலைத்தது ஆனந்தம்! விளக்கு அணைவதற்கு முன் சற்று நன்றாக எரிவதைப் போல்!

கண்ணன், நஞ்சுடன், உயிரையும் சேர்த்து உறிஞ்சி விட்டான். உயிர் செல்லும் தறுவாய் - சுய ரூபத்துடனும், பயங்கர அலறலுடனும் தரையில் வீழ்கிறாள் பூதனை.
சப்தம் கேட்ட யசோதையும், ரோகிணியும், மற்ற ஆய்ப்பாடிப் பெண்களும் ஓடி வருகின்றனர். அங்கே விரிந்த காட்சி:

கீழே மிகவும் பயங்கர உருவமுள்ள ஒரு அரக்கி இறந்து கிடக்கிறாள். தொட்டிலில், எதுவுமே நடவாததுபோல் கண்ணன் உறங்குகின்றான்!

'உறங்கினான்' என்று கூறாது, 'உறங்குவான் போலே' என்கிறார் ஆழ்வார். கண்ணன் உண்மையில் தூங்கவில்லையா? ஏன் தூங்குவதாகப் பாசாங்கு செய்ய வேண்டும்?

பூனை கண்ணை மூடினாலும், பூதனை கண்ணை மூடினாலும், உலகம் இருண்டு விடாது! ஆனால் கண்ணன் கண்ணை மூடினால்?

***

வதாரங்களின் போது, எந்த உருவம் எடுத்தாலும், அந்தத் தாமரைக் கண்களை மட்டும் அவனால் எளிதில் மறைக்க முடியாதாம்! ஒரே சமயத்தில், பகைவர்களுக்கு நெருப்பும், பக்தர்களுக்குக் குளிர்ச்சியுமாய், 'திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்' இருக்கின்ற அவனுடைய தாமரைக் கண்களை யார் பார்த்தாலும் தெரிந்துவிடும், இவன் நாராயணன் தான் என்று!

பூதனை தன்னை மடியில் கிடத்திய போதே கண்ணை மூடிக் கொண்டானாம்! ஏனோ?

நாராயணனை அடையாளம் தெரிந்துகொண்டு, அவனைக் கொல்லவே முடியாது என்று அறிந்து அவள் ஓடிவிட்டால்? எனவே கண்களை மூடினான் - ஓடாமல் இருக்க!

கண்களைப் பார்த்தவுடன், அவளுக்குப் பூர்வ ஜன்ம வாசனை வந்து, கொல்லாமல், வணங்கி ஓடி விட்டால்? மூடினான் - பழைய வாசனை அவளுக்கு வராமல் இருக்க!

வேத நியமங்களின் படி, பெண், பிராம்மணர்கள், பசு, குழந்தை ஆகியவற்றைக் கொல்லக் கூடாது. ஆனால், கண்ணன் கொன்ற முதல் அசுரன் (அசுரி என்று ஒரு தமிழ் வார்த்தை உள்ளதா?), ஒரு பெண் - பூதனை!

தன் கைகளால் அவளைக் கொல்லவில்லை. அவளே நஞ்சு தடவிய முலையுடன், தன் உயிரையும் கொடுக்கின்றாள்! ஒரு பெண்ணின் உயிரை எடுக்க வேண்டியதால், அவளைப் பார்க்க விருப்பம் இல்லாமல், மூடினான் - சங்கடத்தினால்!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளரும் கண்ணனுக்கு முலை கொடுத்ததால் (நஞ்சு இருந்தாலும்), பூதனையும் தன் தாயாகி விட்டாளே! (இரண்டு தாய்மார் போதாதென்று, புதிதாக மூன்றாவது)!

பெண்ணைக் கொல்லவே சங்கடப் பட்டவனுக்கு, அது தன் தாயாகவே இருந்தால்? தாயின் முகத்தைப் பார்த்து இரக்கப் பட்டு, கொல்லாமல் விட்டு விட்டால்? எனவே மூடினான் - தன் மீதே நம்பிக்கையின்றி!

சரி, பூதனையைக் கொல்லும்போது தான் பார்க்க வேண்டாம். அவள் இறந்த பின்னும் கண்களை மூடிக் கொண்டு இருப்பானேன்?

***

ங்கு வந்த யசோதை, தன் கண்களைப் பார்த்து, நடந்ததைக் கண்டுபிடித்து விடுவாளோ? எனவே காரியம் முடிந்த பின்னும் மூடிக் கொண்டிருந்தான் - வளர்த்த தாய்க்கு அஞ்சி!

அந்த நிஜ யசோதைக்கும், ரோகிணிக்கும் அங்கு என்ன நடந்தது என்று புரியவில்லை! ஆனால், கற்பனை யசோதையான பெரியாழ்வாருக்கு, கண்ணன் நடித்தான் என்பது தெரியுமே! எனவே 'உறங்குவான் போலே' என்கின்றார்.

ஆஹா! 'போலே' என்ற வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தமா (ஆழ்வார் என்றால் சும்மாவா?)

பூதனையில் இருந்து, இரணியணுக்குத் தாவுகின்றார் ஆழ்வார், பாசுரத்தின் அடுத்த வரியில். அவனை, வீரமுள்ள (மறங்கொள்) இரணியன் என்கின்றார் பெரியாழ்வார்.

அவன் வீரம் எவ்வளவு என்று ராமாயணம் படித்தால் தெரியும் (என்னப்பா இது புதுக் கதை?).
***
... நரசிம்மர் தொடர்வார்

12 comments:

  1. கண்ணன் காலத்துக்கே எங்களை தூக்கிட்டு போய்டீங்க அருமை அருமை!

    ReplyDelete
  2. ரங்கன் அண்ணா,
    அழகாக விளக்கம் சொல்கிறீர்கள். மிகவும் விரும்பி படித்தேன். நமஸ்காரம் + நன்றி. :)
    பெரியாழ்வாரில் இருந்து குலசேகரர் பாசுரத்திற்கு தாவி இப்பொழுது அடுத்ததாக ராமாயணமா?
    ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    ~
    ராதா

    ReplyDelete
  3. குமரன்

    //Waiting for the next part! :-)//

    இரண்டு நாட்கள், கலியுக தெய்வத்தைத் தரிசிக்கச் சென்று இருந்ததால், வலைப்பூவுக்குள் வர இயல் வில்லை. இன்று இரவு மீண்டும் வர முயற்சிக்கின்றேன்.

    ReplyDelete
  4. Rangan annaa,

    A small correction...

    முயற்சிக்கின்றேன் - Wrong.
    முயல்கிறேன் - correct

    ReplyDelete
  5. அவதாரங்களில், கண்ணன், இராமனைப் பற்றியே அதிகமான பாசுரங்கள் காணப்பட்டாலும், நரசிம்மாவதாரமும் பல பாசுரங்களில் கூறப்படுகின்றது::))))

    ஆழ்வார்கள் பாடிய நரசிம்மர் பாசுரங்கள் எத்தனை என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது .

    ReplyDelete
  6. //A small correction...

    முயற்சிக்கின்றேன் - Wrong.
    முயல்கிறேன் - correct//

    நன்றி குமரன்.

    ReplyDelete
  7. //ஆழ்வார்கள் பாடிய நரசிம்மர் பாசுரங்கள் எத்தனை என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது .//

    அடியேனுக்குத் தெரிந்தவரை:

    திருப்பல்லாண்டு - 1
    பெரியாழ்வார் திருமொழி - 14
    திருப்பாவை - இல்லை
    நாச்சியார் திருமொழி - 1
    பெருமாள் திருமொழி - இல்லை
    திருச்சந்த விருத்தம் - 4
    திருமாலை - இல்லை
    திருப்பள்ளியெழுச்சி - இல்லை
    அமலனாதிபிரான் - 1
    கண்ணிநுண் சிறுத்தாம்பு - இல்லை
    பெரிய திருமொழி - 51
    குறுந்தாண்டகம் - இல்லை
    நெடுந்தாண்டகம் - இல்லை
    திருவாய்மொழி - 13
    முதல் திருவந்தாதி - 3
    இரண்டாம் திருவந்தாதி - 1
    மூன்றாம் திருவந்தாதி - 1
    நான்முகன் திருவந்தாதி - 1
    பெரிய திருவந்தாதி - இல்லை
    பெரிய திருமடல் - 2
    சிறிய திருமடல் - 2
    திருவெழுக்கூற்றிருக்கை - இல்லை
    திருவிருத்தம் - இல்லை
    திருவாசிரியம் - இல்லை

    சில பாசுரங்கள் எண்ணிக்கை விடுபட்டிருக்கலாம்.

    ReplyDelete
  8. சிங்கப் பெருமாளைப் போற்றும் பாசுரங்களின் கணக்கை இப்போதுதான்
    பார்க்கிறேன்; அருமை.

    தேவ்

    ReplyDelete
  9. ஆஹா! நரசிம்மரின் பாசுரங்கள் 100என்று போடுவீர்கள் என்று எண்ணினேன் . ஆனால் பாசுரங்களின் தொகுப்பை அனைவரும் அறியும்படி பதிவில் போட்டீர்கள். அடியவர்க்கும் அடியேன் ராஜேஷ் நாராயணனின் கோடன கோடி நன்றிகள் ரங்கன் அண்ணா.

    ReplyDelete
  10. பெரிய திருமொழி - 51::))


    நம்ம திருமங்கை ஆழ்வார்! நரசிம்மருக்காக 51பாசுரங்கள் பாடியிருகிறா! கலக்குராருப்பா திருமங்கை ஆழ்வார்!

    ReplyDelete
  11. //நாச்சியார் திருமொழி - 1//

    சிறு திருத்தம்:

    நாச்சியார் திருமொழி - 2

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP