பிறந்தநாள்: குல முதல்வன்! தாமிரபரணித் தலைவன்!


* அப்படியே என் கட்டிளங்காளை முருகப் பெருமானுக்கும் இன்னிக்குத் தான் பிறந்தநாள்! Happy Birthday Muruga! :)
* காஞ்சிப் பெரியவர் என்று போற்றப்படும் மறைந்த ஆச்சார்யர் பிறந்தநாள் நாளை (அனுஷம்)!
** அப்படியே அம்மாவுக்கும்-அப்பாவுக்கும் இன்று திருமண நாளும் கூட! Happy Wedding Day, My Big Children! :)

பொருநை என்னும் தாமிரபரணி நதி! சுழித்துச் சுழித்து ஓடும் இளமங்கை! அரங்கனின் காவிரியை விட, ஆழ்வாரின் பொருநை அழகு!
பொருநைத் துறைவன்! யமுனைத் துறைவனைக் காட்டிலும் உயர்ந்தவன்!
அவனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் மாறன்! அரங்கன் இட்ட பெயர் நம்-ஆழ்வார்! அவனே குல முதல்வன் ஆனான்!
பொதுவாக இந்தியச் சமயங்களிலோ, தத்துவங்களிலோ, அதன் முதல்வர்கள் பெரும்பாலும் அந்தணராகத் தான் இருப்பர்!
அதில் பெரிதாகத் தவறொன்றும் இல்லை! சமய ஆராய்ச்சியும் தொண்டும் செய்து, அதற்கென்றே இருந்தவர்களைத் தான் அந்நாளில் தலைவராகக் கொண்டனர் போலும்!
ஆதி சங்கரர், இராமானுசர், மாத்வர், சுந்தரமூர்த்தி நாயனார் என்று பலப்பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்!
ஒரு அருணகிரியோ, அப்பரோ, சமயத் தலைவராக வந்ததில்லை! அவர்களுக்குத் தனிப்பட்ட மதிப்பளித்தாலும், அவர்களைத் தலைவராகத் தனியாகக் கொண்டாடியதில்லை!
ஆனால் "தாழ்ந்த குலம்", "சூத்திரர்", "நாலாம் வருணம்" என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒரு வேளாளக் குடும்பத்தில் இருந்து வந்து...
மொத்த சமயத்துக்குமே இவர் தான் தலைவன் என்றால்?
அதுவும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி-ன்னா அது லேசுப்பட்ட விஷயமா என்ன?
வைணவக் "குல முதல்வன்" என்ற போற்றப்படுபவர் = வேளாளரான நம்மாழ்வார்!
அந்தணர், அந்தணர் அல்லாதார் என்று அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் நம்மாழ்வார்!
கீதையின் தேர்த்தட்டு மொழியை விட அவரின் திருவாய் மொழிக்கு ஏற்றம் அதிகம்!

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்-ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க!
திருவாய் மொழிக்கு உருகாதார் ஒரு வாய் மொழிக்கும் உருகார்!
இத்தனைக்கும் இவர் ரொம்ப சின்னப் பையன்!
பதினாறு வயதில் பாடத் துவங்கி, முப்பத்து இரண்டு வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஒரு வருத்தப்படாத வாலிபன்! அவனா குல முதல்வன்?
முதன் முதலில் தோன்றிய முதலாழ்வாரைச் சொல்லலாமே?
ஆண்டாளை மகளாகப் பெற்று, அரங்கனையே மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வாரைச் சொல்லலாமே? இத்தனைக்கும் அவர் அந்தணராச்சே!
அவர்களை எல்லாம் குல முதல்வன் என்று சொல்லாது, ஒரு சின்னப் பையன் நம்மாழ்வாரைச் சொல்வது ஏன்?
ஏன் மாறனுக்கு மட்டும் இத்தனை சிறப்பு? அவரை மட்டும் எப்படி அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்? இனி வரும் பதிவுகளில் சொல்கிறேன்!
இன்னிக்கி பிறந்த நாள் என்பதால் தத்துவம் வேணாம்! சுவையான கதையைக் கேட்கலாமா?
ஊரையே காய்ச்சும் தாமிரபரணி ஆளுங்க ஒரு பக்கம்-ன்னா, அந்தத் தாமிரபரணித் தண்ணியையே காய்ச்சும் கதை! பார்க்கலாமா? :))

தாமிரபரணி ஆறுக்கு அம்புட்டு மகத்துவம்! அழகு + தெளிவு + உயிர்ப்பு! கனிம வளம், மருத்துவக் கூறுகள் கொண்ட வளம்-ன்னு அதன் பெருமையே தனி!
கண்ணனின் ஸ்ரீமத் பாகவதத்திலேயே நம்ம தாமிரபரணி சொல்லப்பட்டிருக்கு-ன்னு தெரியுமா?
தாமிரபரணீ நதி யாத்ர, கிருதமாலா, பயஸ்வினீ
கலெள கலி பவிஷ்யந்தி நாராயண பாராயண!
க்வசித்-க்வசின் மகாபாக திராவிடேஷூ பூரீச
ப்ராயே பக்தா பாகவதா, வாசுதேவே அமலாஸ்ரயா!
தாமிரபரணி நதி கொழிக்கும் திருநாட்டிலும், வைகை பாலாறு பாயும் தேசங்களிலே
கலியுகத்தில் கலியைப் போக்க, நாராயண பாராயணம் செய்ய சிலர் தோன்றுவார்கள்!
அங்கும் இங்குமாக திராவிட நாட்டிலே இந்த ஆச்சார்யர்கள் உதிப்பார்கள்!
பக்த-பாகவத கைங்கர்யத்தில் ஈடுபட்டு, வாசுதேவன் என்னும் நாராயணனில் "ஆழ்ந்து" போவார்கள்!
பின்னாளில், திராவிடத்திலே, ஆழ்வார்கள் உதிக்கப் போகிறார்கள் என்று முன் கூட்டியே சொல்லும் ஸ்ரீமத் பாகவத சுலோகம் இது தான்!
இப்படிப்பட்ட தாமிரபரணிக் கரையில் அன்னிக்குன்னு பார்த்து ஒரு முக்கியமான உரையாடல்...
**********************************************************************
மதுரகவிகள்: "ஆழ்வாரே! இப்படி அடியேனை வருத்தப்பட வைக்கலாமா? என்ன வயசு ஆகி விட்டது உமக்கு? முப்பத்திரண்டு தானே? அதற்குள் உலக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்றால் எப்படி?"
மாறன்: "ஹா ஹா ஹா! நான் வந்த பணி முடிந்ததால் மீண்டும் பரமபதம் செல்கிறேன்! இதில் உமக்கு என்ன வருத்தம் மதுரகவிகளே?"
மதுரகவிகள்: "எங்கோ வடநாட்டில் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தேன் நான்! இமயமலை போனால் தான் சிலருக்குப் பொய் ஞானம் வருமா? மெய் ஞானம் தாமிரபரணிக் கரையிலேயே கிடைத்து விடுமே-ன்னு, வானில் தோன்றிய ஒளி, என்னை இங்கு இழுத்துக் கொண்டு வந்தது..."
மாறன்: "ஓ...மலரும் நினைவுகளா? அதான் தெரியுமே! இந்த ஊருக்கு வந்து, அசையாது இருந்த என்னை நீங்கள் தானே அசைய வைத்தீர்கள்?
’இவன் வெற்றுச் சிறுவன்! தழலை ஓம்பும் அந்தணன் கூட அல்லன்! இவனுக்குப் பெரிதாக என்ன தெரிந்து விடப் போகிறது”-என்று சோதித்துப் பார்க்கத் தானே அப்படி ஒரு கேள்வியை எழுப்பினீர்கள்?"
மதுரகவிகள்: "ஆகா! ஆகா! அப்படியில்லை சுவாமி! அடியேன் பிறப்பால் வேணுமென்றால் அந்தணனாக இருக்கலாம்! ஆனால் செந்தன்மை பூண்டொழுகும் நீரல்லவோ மெய் அந்தணர்? நீரல்லவோ எம் குலமுதல்வன்?
நான் முதன்முதல் பார்த்த போது, நீர் பதினாறு வயது சிறுபிள்ளை! அசையாது புளியமரத்தின் கீழே யோகத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்! உம்மை அசைக்க வேண்டியே அந்தக் கேள்வியைக் கேட்டேன்!"
மாறன்: "அந்தக் கேள்வியை இன்னொரு முறை சொல்லுங்கள் கவிகளே! என்ன அருமையான கேள்வி! நினைத்தாலே இனிக்கும்!"
மதுரகவிகள்: "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்...
எத்தைத் தின்று, எங்கே கிடக்கும்???"
மாறன்: "அத்தைத் தின்று, அங்கே கிடக்கும்!!!"
மதுரகவிகள்: "இந்த ஒற்றை வரிப் பதிலால் அல்லவோ அடியேன் ஆடிப் போனேன்!"

மாறன்: "ஹா ஹா ஹா! உண்மைக்கு என்றுமே ஒற்றை வரி தான்!
உண்மை, இறைவனைப் போலவே மிகவும் எளிமையானது!"
மதுரகவிகள்: "ஆமாம் ஆழ்வாரே! அதனால் தான் உங்கள் ஒரு வாய்மொழியான திருவாய்மொழியும் எளிமையாகவே உள்ளது!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! இதற்குத் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! ஆகா!"
மாறன்: "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = உலக வாழ்வின் கர்மாக்களைத் தின்று, அது தீரும் வரை அங்கேயே உழன்று கிடக்கும்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = ஆச்சார்யனின் மறைமொழிகளைத் தின்று, அவா தீரும் வரை அவர் அணுக்கத்திலேயே கிடக்கும்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = எம்பெருமானின் திருவடிகளைத் தின்று, ஏக்கம் தீரும் வரை அங்கேயே பற்றிக் கிடக்கும்!"
மதுரகவிகள்: "இப்படியெல்லாம் விதம் விதமாக வியப்பில் ஆழ்த்தினீர்கள்! இந்தச் சிறிய வயதில் இப்படி ஒரு ஞானமா? இத்தனை தெளிவா? என்று வியந்து போனேன்!"
மாறன்: "ஞானமும் கர்மமும் நமக்கு எதற்கு கவிகளே? பெற்றவளை ஞானத்தாலும் கர்மத்தாலுமா ஒருவன் அறிந்து விட முடியும்? பாவித்தால் அல்லவோ உறவு? பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே!"
மதுரகவிகள்: "அதான் தங்களைப் பாவிக்கிறேன் ஆழ்வாரே! ஆனால் நீர் தான் எம்மை விட்டுவிட்டு மேலுலகம் செல்வதில் உறுதியாக உள்ளீர்! அடியேன் என்ன சொல்லி உம்மை நிறுத்த?"
மாறன்: "பிள்ளைகளுக்குப் பெற்றோர் பேச்சைக் கேட்கத் தான் கசக்கும்! அதான் எம்பெருமானின் அவதாரங்கள் எடுபடுமாற் போனது!
பிள்ளைகளுக்குச் சக பிள்ளைகள் பேச்சைக் கேட்கத் தான் பிடிக்கும்! அதான் எம்பெருமான் இனி அவன் அவதரிக்காது, நம்மை அவதிரிப்பித்தான்!
நாமும் பிள்ளைகளுக்குப் புரியும் மொழியில், தமிழ் வேதத்தைக் கொடுத்தாகி விட்டது! நம் பணி முடிந்து விட்டது! இனி வரப்போவது தமிழ்ச் சமயத்தில் அடுத்த அத்தியாயம் தான்!"
மதுரகவிகள்: "செல்ல முடிவே கட்டி விட்டீர்களா?"
மாறன்: "கவிகளே! கவலைப்படாதீர்கள்! நீரும் உமது பணி முடித்து விரைவில் எம்முடன் வந்து சேர்ந்து விடுவீர்! அது வரை உமக்குத் துணையாக, எம்மைப் போல் ஒன்றைத் தருகிறோம்!
இதோ, இந்த கனிம வளமான, தாமிரபரணி ஆற்று நீரை இப்போதே காய்ச்சுங்கள்! எம்மைப் போல் ஒன்று உருவாகும்!"

மதுரகவிகள்: "ஆகா! இது என்ன வித்தியாசமான உருவமாக வந்து விட்டதே! இதைப் பார்த்தால் தங்களைப் போல் தெரியவில்லையே சுவாமி? வழவழ மழமழ என்று செதுக்கியும் செதுக்காமலும் ஒரு உருவமா?"
மாறன்: "ஆம்! இது நாம் அல்லோம்! இது நம்மைப் போல் ஒருவன்! நம்மை அத்தனை பேருக்கும் எடுத்துச் சென்று சேர்க்கப் போகிறவன்!
பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்! கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று பின்னாளில் தோன்றப் போகிற உடையவன் இவனே! இவன் பெயர் பவிஷ்யதாச்சார்யன்! "பின்னாள் ஆசான்!"
மதுரகவிகள்: "ஆகா! இவர் பின்னாளில் தோன்றப் போகிறவரா? முன்னமேயே அறிவிக்கை செய்யப் போந்தீரே! தீர்க்க தரிசனமோ? அறிவுடையார் ஆவது அறிவார் என்பதல்லவோ குறள்?"
மாறன்: "ஆம்! மதுரகவிகளே! நீரும் நானும் செய்யாததை எல்லாம் இவர் செய்யப் போகுவார்! கைங்கர்யம் என்னும் திருத் தொண்டே இவர் லட்சணம்! லட்சுமணம்!
சாதிப் பாகுபாடு எல்லாம் அறவே நீக்கி, ஒருவர் விடாது, அனைவரையும் அரங்கனுக்கு ஆக்கும் செயல் வீரர் இவரே! இவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! இந்த உருவத்தை வழி வழியாக நாளைய தலைமுறையிடம் கொண்டு சேருங்கள்!"

மதுரகவிகள்: "மிக்க மகிழ்ச்சி சுவாமி! அப்படியே செய்கிறோம்! அடியேனுக்குத் தங்கள் உருவத்தையும் தந்தருள வேண்டும்!"
மாறன்: "மறுமுறை தாமிரபரணியைக் காய்ச்சி நம்மை பெற்றுக் கொள்ளும்! அடியேன் விடை பெறட்டுமா?!"
முடிச்சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய், நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே!
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
புகலொன்றில்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே!
காய்ச்சிய தாமிரபரணி உருவம் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி, பின்னாளில் ஆழ்வார் சொன்னது போலவே, உடையவர் தோன்றினார்! நம்மை அவனுக்கு உடையவராக்கினார்!
குலமுதல்வன் நம்மாழ்வார் பெற்ற தாய் என்றால், இராமானுசர் வளர்த்த தாய் என்பார்கள்! இன்றும் முதல் தாய், இதத் தாய் என்றே இந்த இருவரையும் குறிக்கிறார்கள்!
வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்!
இன்றும், நெல்லைச் சீமை, திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்குப் போனால், ஆலயத்தில் தண்ணீரில் காய்ச்சிய திருவுருவைக் காணலாம்!
"பின்னாள் ஆசான்" என்னும் பவிஷ்யதாச்சார்யன் திருமேனியைக் கண்டு கைதொழலாம்!

செதுக்கிய சிலையாய் இல்லாமல், கையால் பிடித்த சிலையைப் போல், கூர்மையும் கூர்மையில்லாமலும், சாதாரண மானுட உருவம் போலவே இருக்கும்! இது தான் பின்னாளில் உடையவர் முகத்தையும் ஒத்து இருந்தது!
* தாமிரபரணி நம்மாழ்வாரை மட்டும் நமக்குப் பெற்றுத் தரவில்லை!
* நம்மாழ்வாரை நம் எல்லாரின் ஆழ்வாராய் ஆக்கிய இராமானுசனையும் பெற்றுத் தந்தது தாமிரபரணியே!
பொருநைத் துறைவன் பிறந்த நாள் அதுவுமாய்,
தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் பிறந்த நாள் அதுவுமாய்,
வேதம் "தமிழ்" செய்த மாறன் திருவடிகளே சரணம்!!!
