Friday, September 09, 2011

SatelliteCity=தமிழ்ப் "படுத்தல்கள்" & வேப்பிலை!

இந்தச் சுருக்கமான பதிவு, இரண்டு கோள்களின் பாற்பட்டது!
1. தமிழாக்க முயற்சிகள்
2. பிழையான ஆக்கத்தை எதிர்க்கிறேன்-ங்கிற போர்வையில்...தமிழ் முயற்சிகளை எப்பமே கும்மியடித்து நகையாடும் பழக்கம்:(


அண்மையில்.....தமிழக அரசின், திருமழிசைத் திட்டம்!
சென்னைக்கு வெளியே ஒரு Satellite City = துணைக்கோள் நகர்!


இன்று ட்விட்டரில்...
அது என்ன "துணைக்கோள்" நகர்? இன்னுமா இந்தப் "படுத்தல்"?
"உப நகரம்"-ன்னு சொன்னா என்ன? ஊசியாப் போகும் நகரம்?

.......என்று துவங்கிற்று!

கூடவே...தமிழ் ஆர்வலர்கள்-ன்னாலே, "படுத்தல்-ப்பா; தமிழாக்கியே நம்மள படுத்தறா", "கொள்ளை", "இவிங்கள ஜெயில்ல போடணும்" என்ற "ஆசீர்வாதம்":)
=================================
முடிப்பாக...
@elavasam: ஒரு தடவை ரெண்டு தடவை தப்பா மொழிமாற்றம் பண்ணினா நிதானமாப் பேசலாம். "தமிழார்வம் தலைவிரிச்சாடி" எப்பவுமே படுத்தினா என்ன பண்ண? -ன்னு கேட்க...

@losangelesram: பலே! இப்படி ஓவராத் தமிழ் தலைவிரித்து ஆடுவதால் தான் அவ்வப்போது வேப்பிலையைக் கையில் எடுக்க வேண்டி இருக்கு! - என்று முடித்தார்!
=================================

வேப்பிலை தேவையா?
இந்த மொழியாக்கம் பிழையானதா?
....இல்லை.."பிழை" போல் காட்டி, தமிழ் முயற்சிகளுக்கு அடிக்கப்படும் கும்மியா?

செல்வி ஜெயலலிதா அவர்களை முதல்வராகக் கொண்ட...
தமிழக அரசின் மொழியாக்கம் = பிழையான ஆக்கமா-ன்னு பார்ப்போமா?


மு.கு 1: Twitter-இல் #tag/filter போட்டேன்! ஆனால் பதிவில் அவ்வசதி இல்லை! எனவே நீங்க படிச்சித் தான் ஆகணும்! :)
மு.கு 2: தமிழ் இலக்கணம் 'ஷொல்லிக்' குடுக்குறேன் என்ற பேரில், தமிழ் மொழியையே எள்ளல் செய்யும் பதிவர்= @elavasam! இந்தக் கும்மியில், அவரும் 'ஜம்'மென்று கலந்து கொண்டார்! :)

பேசுபொருளுக்கு வருவோம்!
* Satellite City = உப நகரம்-ன்னு சொல்ல வேணாம்! அது வடமொழி!
* துணை நகர், புற நகர், சேய் நகர், குறு நகர் ன்னு விதம்விதமாச் சொல்லலாம் தான்!
* துணைக்கோள் நகர் = அதுவும் பிழையே இல்லை! herez = wiki defn!

Satellite City = English-இல் நெருடாதது,
துணைக்கோள் நகர் = தமிழில் மட்டும் ஏனோ நெருடுது!
'உப நகரம்'-ன்னு ஆக்கினால், அப்போ நெருடலையாம்! :)

வெறுமனே 'ஜல்லி' அடிக்காமல், @elavasam, நல்ல ஒரு வாதத்தை முன் வைத்தார்! அதாச்சும், ஆங்கிலத்தில்...
*Satellite = Outer Space Object-ஐ மட்டும் குறிக்காதாம்!
*Satellite = A place under the domination/influence of another-உம் குறிக்குமாம்!
அதனால் Satellite City = ஆங்கிலத்தில் சரி! ஆனா, தமிழில் தவறாம்!

நல்ல வாதம்! இதோ ஆங்கில அகராதி, பார்த்துக்கோங்க! "Satellite" is relatively a new term, used in English!

விஞ்ஞான யுகத்துக்கு முன்னாடி, Shakespeare/Keats போன்றவர்கள், Satellite-ன்னு எழுதினாங்களா என்ன?
இல்லை....சிற்றரசர்களை = (A place under the domination) Satellite Kings-ன்னு சொன்னாங்களா?

"சார்ந்து இருக்கும்" தன்மையால், Satellite என்ற விஞ்ஞானப் பதம்,
விஞ்ஞானம் கடந்து, மற்றதையும் குறிக்கத் தொடங்கி விட்டது ஆங்கிலத்தில்! ஆனா தமிழில் மட்டும்??

துணைக்கோள்-ன்னு நாம தான் "விஞ்ஞானத்தனமா" ஆக்கிட்டோமாம்!
= தமிழாக்குறேன் பேர்வழி-ன்னு கேணத்தனமான ஆக்கம்!
= இந்தத் தமிழ் ஆர்வலர்கள் எப்பமே இப்படித் தான்!:)
"யோவ், நீ லூசா? இல்லை லூசு மாதிரி நடிக்கிறயா?"-ன்னு என் மேல ஒரு "அஸ்திரத்தை" ஏவுனாரு இலவச அண்ணன்! :))


இது ஒரு நல்ல வாய்ப்பு, தமிழில்=காரணப் பெயர்களின் சுவை அறிய.....எனவே மேற்கொண்டு படியுங்கள்!

கோள் = வெறுமனே planetary "சமாச்சாரம்"-ன்னு நினைச்சிடாதீங்க!
"கொள்" என்பதில் இருந்து => "கோள்"!
1. வேண்டு-கோள்
2. கால்-கோள்
3. பொருள்-கோள்
4. கருது-கோள்
-ன்னு பல "கோள்கள்" தமிழில் உண்டு! = அதே போல "துணைக் கோள்"!

* "பொருள் கோள்"ன்னு தமிழில் இருக்கு!
= அதாச்சும்... இடத்துக்கு ஏத்தாப் போல, கொண்டு+கூட்டி, பொருள் கொள்வது
= அப்படிப் பொருள் "கொள்வதால்" => பொருள்-கோள்!

அதே போல...
ஒரு பெரும்-அமைப்பை, துணையாகக் "கொள்ளும்" சிறு-அமைப்பு = துணைக் கோள்! => துணை "கொள்ளுதல்" => காரணப் பெயர்!
பெரியாரைத் துணைக்கோடல்-ன்னு திருக்குறளே இருக்கு = பெரியோர்களைத் துணைக் "கொள்வது"

தமிழில் இடுகுறிப் பெயர்களே கொஞ்சம் தான்! பலவும் காரணப் பெயர்களாகவே இருக்கும்!
* உண்பதால் = உண+வு (ஆனா ஆங்கிலத்திலோ eat=verb; food=noun)
* அவிப்பதால் = அவியல்
* வடுப்பதால் = வடை
* தோய்ப்பதால் = தோசை

* பறப்பதால் = பறவை,
* செல்வதால் = செல்வம்...
* அதே போல் "கொள்வதால்" = கோள்!

காரணப் பெயர்களின் தமிழ் அழகு இப்போ தெரிகிறது அல்லவா?
அதற்காகவே இந்த இடுகை! தமிழ் = இனிமை!


Satellite City = துணைக்கோள் நகர்
.....என்று தமிழக அரசு ஆக்கியது, நயமான மொழியாக்கமே!


Fly Over = "மேலே பற"-ன்னு ஆக்கலை! "மேம்பாலம்" என்று தான் ஆக்கம்!
சில சமயங்களில், எங்கோ ஓரிருவர், பிழையாக ஆக்கி இருக்கலாம்! "Literal"-ஆக ஆக்கி இருக்கலாம்! 
ஆனால், இல்லாத ஒன்றை.....ஊதி ஊதிக் கும்மியடித்தே.....

தமிழ் ஆர்வலர்களே இப்படித் தான்...
கேணத்தனமான மொழியாக்கம்...
தமிழாக்கியே நம்மள படுத்தறா...
இவிங்கள ஜெயில்ல போட முடியாதா...


இப்படியெல்லாம் பேசிப்பேசி...
பெயர்ச்சொல் ஆக்கங்கள் = தமிழாக்கங்கள் ஆகாது-ன்னு சொன்ன பிறகும், இவங்கெல்லாம் 'இசுடாலின்' கேஸ்-ப்பா என்று கும்மியடித்து...

மக்களின் மனங்களில், ஒரு வித..."தமிழ் ஒவ்வாமையை உருவாக்குவதில்"
இந்தக் கும்மிக்குப் பெரும்ம்ம்ம்ம் பங்கு உண்டு!

அதை...அனைவரும் உணர்ந்து கொள்ள வேணும்-ன்னு தான் இங்கே பதிவாக்கி வைக்கிறேன்!
= கும்மியில் மயங்கி விடாதீர்கள்! தமிழுக்கு ஆக்கம் = இனிமைக்கு ஆக்கம் = நமக்கு ஆக்கம்!

இப்படிக் கும்மியடித்தவர்கள்....கடேசீல....
Satellite City! நகரம் = தமிழா? -ன்னும் ஒரு "மாயை"-யை உருவாக்கிட்டாங்க! :)

"நகரேஷூ காசி"-ன்னுட்டா...."திவ்யமா" இருக்கும்! 
"நகரேஷூ"கிட்ட இருந்து, தமிழ், தானம் வாங்கிக்குச்சி-ன்னு சொல்ல எனக்கும் ஆசை தான்! ஆனா....ஆனா......
எட்டுத் தொகை, சிலப்பதிகாரம்... இதுல எல்லாம்..."நன்னகர், கடிநகர், கூடல்நகர்"-ன்னு.........நகர்=தமிழாவே இருக்கு! நான் என்ன செய்ய? :))

ஓவராத் தமிழ் தலைவிரித்து ஆடுது; வேப்பிலையைக் கையில் எடுப்போம் என்பவர்கள்...
சரிப்பா, இனி ஓவரா ஆடாம,
"இவிங்களுக்கு" உட்பட்டு மட்டும் தமிழை அடக்கி வாசிப்போம்! 
= அப்போது "சர்வாபீஷ்ட ஸித்திரஸ்து! :))
Read more »

Tuesday, August 23, 2011

தலை மேல்...கையெழுத்தே!

என்னவன் கால் பட்டு அழிந்தது...
என்ன அது?
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில், தேங் கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம், மா மயிலோன்

வேல்பட்டு அழிந்தது வேலையும், சூரனும், வெற்பும்! அவன்
கால்பட்டு அழிந்தது
இங்கு, என் தலை மேல், அயன் கையெழுத்தே!!

Read more »

Friday, August 12, 2011

வங்கத்தின் கூம்பேறி...

வங்கம் புறப்படத் தயாராகி விட்டது! ங்ங்ங்கூம் என்ற சத்தம்!
ஆனால், மனிதன் எழுதிய விதிகள், மனங்களுக்குத் தெரிவதில்லையே!
ஒருநாள்...
காதல் பறவை ஒன்று...
ஆறுதல் தேடி,
வங்கத்தின் கூம்பிலே...
பாய்மரக் கொம்பிலே வந்து அமர்ந்து விட்டது!

ஒரு நாள், பல நாள் ஆக...
பறவைக்குத் தெரியாது, இப்போது ங்ங்ங்கூம் என்ற சத்தம், "இடத்தைக் காலி பண்ணு" என்ற பொருளில் எழுப்பப் படுகிறது என்று...



பாய் மரம் = பாய்களையும் துணிகளையும் கட்டிய மரம்!
பாய்ந்த = பாய்கின்ற = பாயும் மரம் என்பதா? இல்லை!
பாய் மரம் = வினைத் தொகையா? வினை விதைக்கும் தொகையா?

பாய் மரம் = பாய்கள் கட்டிய மரம்!
காற்று பட்டு பாய்கள் உந்த, கடலில் செல்லும் கலம்!
காற்றின் போக்கே, கலத்தின் போக்கு என்று ஆக்கி விட முடியுமா?
பாய்களைப் பல விதமாகத் திருப்பி, காற்றை ஒட்டியும் வெட்டியும் கலம் செலுத்தும் வித்தையை, இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே அறிந்து வைத்திருந்த தமிழினம்!

வங்கக் கடல் கடைந்த = சங்கத் தமிழ் மாலை!
அந்த வங்கம் (கப்பல்), இத்தனை நாள் துறைமுகத்தில் தான் இருந்தது!
பாய்மரம் காற்றிலே சடசடக்க, கூம்பிலே கிண்கிணிகள் ஒலியொலிக்க...என்னவொரு இனிய சத்தம்!
துள்ள்ள்ளி வந்து அமர்ந்தது அந்தப் பறவை!
இப்போது பறவையின் பாடலும் சேர்ந்து கொள்ள, அங்கே தினமுமே திருப்புகழ் ஒலி தான்!

பாய்மரக் கப்பலும் பறவையை ஏற்றுக் கொண்டு இடமளித்து விட்டது! யாரும் விரட்டவில்லை!
பாய்மரத்தின் கூம்பே, கூடாகிப் போனது! உழைப்புக்கு மட்டும் ஊருக்குள் பறக்கும்! இரை தேடி, அதையும் கப்பலுக்குத் தான் கொண்டு வரும்! வழியில் சாப்பிட்டுவிடாது!

உண்பதும், உறங்குவதும், உறவாடுவதும், உழைப்பதும்...எல்லாமே வங்கம் என்னும் அந்தக் கப்பலை ஒட்டியே!
அதுவே கூடு = வீடு = வீடுபேறு!
வீடு பேற்றில் திளைத்த பறவைக்கு...கப்பலின் ங்ங்ங்கூம் சத்தம் கூட இசையாகவே தான் பட்டு விட்டதோ?

நள்ளிரவு தாண்டிய சிற்றஞ் சிறு காலை!
திடீரென்று விழித்த பறவைக்கு...திகைப்பு, அதிர்ச்சி, பயம்!!!
எங்கு பார்த்தாலும் கடல்...சுற்றிலும் கடல்...



இரவிக் கடலோ, பிறவிக் கடலோ, யாருக்குத் தெரியும்?
எங்கெங்கு காணினும் நீலமடா!

மரங்களின் பச்சை, நிலத்தின் சிவப்பு, மேகத்தின் வெண்மை என்று நேற்று வரை கண்டதெல்லாம், இன்று ஒன்றுமே காணவில்லை!
பறவைக்குப் பசி எடுக்கிறது! எங்கு போய் உணவு தேடுவது?

கிழக்கில் பறந்து பார்க்கிறது! காணோம்!!
மேற்கில் பறந்து பார்க்கிறது! மாயோம்!!
தெற்கிலே தென்படவில்லை! வடக்கிலே வாழ்க்கையும் இல்லை!
பறவையின் கண்ணிலே...முதன் முதலாக...முந்நீரில் கண் நீர்!

பாய்மரத்தின் படபட இசை போய் விட்டது!
காதைக் கிழிக்கும் காற்று தான் இப்போதெல்லாம் அடிக்கிறது!
சிலுசிலு மணியோசைகள் போய் விட்டன!
ஓ-வென ஓதைக்கடல் தான் இப்போதெல்லாம் ஆர்ப்பரிக்கிறது!

பறவை என்ன பரவை நாச்சியாரா? உடல்-அழகிலே சுந்தரர் மயங்க, காமத்துக்கு கடவுளே தூது செல்ல?
பறவை ஒரு பேதை! உடல்-அழிந்து, காரைக்கால் அம்மை ஆவது தான், இவளுக்கு மட்டும் ஈசனின் விதி போலும்?

பறவை எங்கெங்கோ பறந்து பார்க்கிறது! உம்ம்ம்ம்! எங்குமே நீலம் தான்!
எங்கே தான் போகும்? இனி எங்கே தான் போகும்?
எதில் தன் ஆன்மாவைக் கண்டதோ...
அதே இடத்திற்கே மீண்டும் வருகிறது! அதுவே அதற்கு = "இடம்"!
அந்த வங்கத்தின் கூம்பே அதற்கு, அப்போதும் = "இடம்"!
அந்த வங்கத்தின் கூம்பே அதற்கு, இப்போதும் = "இடம்"
!

வெங்கண் திண், களிறு அடர்த்தாய், விற்றுவக்கோட்டு அம்மானே
எங்குப் போய் உய்கேன்? உன் இணையடியே அடையல்லால்?

எங்கும் போய்க் கரைகாணாது, எறிகடல்வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே! மாப்பறவை போன்றேனே!
- (குலசேகர ஆழ்வார்)



முருகா...
பிறவி கொடுத்தார்கள் என் தாயும் எந்தையும்! = நப்பின்னை நங்கையும் நாரணத் தந்தையும்!
ஆனால் அந்தப் பிறவி...எனக்கல்ல! = உனக்கு! = உன்னை அடையவே எனக்கு!

தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை!
கொண்டானை அல்லால் அறியாக் குலமகள் போல்
உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!


நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டேன் நான்!
என்பால் நோக்காயே ஆகிலும் உன் பற்றல்லால் பற்றில்லேன்!
நீ வேண்டாயே ஆயிடினும் மற்றாரும் பற்றில்லேன்!


எங்கும் போய்க் கரை காணேன்! எறி கடலில் கரை காணேன்!
வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே! - முருகா உன்
அங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே!


செந்தூரில் அலையலையாய்ச் சிரிக்கும்...
என் உயிருக்குள் உயிரே,
உன்னைப் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்குடா...


உனக்குத் தொல்லை இல்லாமல்...
அதே சமயம்,
திரை போட்டாலும், தீட்டு கழித்தாலும்
அழகு நடிகருக்கும், அரசியல்வாதிக்கும் சிறப்பு வழி செய்தாலும்...

எவருமே என் கண்ணை, உன்னிடம் இருந்து அகற்றிடா வண்ணமாய்
உன்னைக் கண்டபடிக் கண்டு, பசியாறிக் கிடப்பேனே!

என் செந்தூர் வீட்டின், செல்லக் கருப்பட்டியே...
என் பிறப்புக்கு இது தான் என்று ஒரு நாளுண்டா?
முருகா - உன் அங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே!
உன் வீட்டு வாசல், படியாய்க் கிடந்து.....

செந்தூர் வீட்டு வாசல், படியாய்க் கிடந்து.....உன் பவள வாய் காண்பேனே!

Read more »

Tuesday, August 02, 2011

ஆண்டாள் பாசுரம்! - முருகனுக்கு!!

என்னாது, ஆண்டாள்........முருகன் மேல பாட்டு பாடி இருக்காளா?

மறந்தும் புறம் தொழா-எல்லாம் கிடையாதா?
ha ha ha! நான் ஒன்னும் சொல்லலை! நீங்களே பாருங்க! - இது தமிழ் அர்ச்சனைப் பாடல்!  சுசீலாம்மாவின் குரலில், இதோ:  இங்கே போங்க.........



Read more »

இளையராஜா இசையில்...ஆண்டாள் பிறந்தநாள்!

இன்று....
என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! :)

இவள் பிறந்த நாளை ஒட்டி, இவளின் மகுடமான கனவுப் பாட்டை, நனவுப் பாட்டாக....இதோ...கண்ணன் பாட்டிலே!


வாரணமாயிரம் = பல திரைப்படங்களில், பல்வேறு இசையமைப்பாளர்கள் கை வண்ணத்தில் வந்திருக்கு!
ஆனால் அத்தனைக்கும் மகுடமாக, இளையராஜாவின் இசையில்.....கேளடி கண்மணி படத்தில்.....ஜானகி பாடும் ஏக்கமான மெல்லிசை!


ஹே ராம் படத்திலும், சிறு சிறு துணுக்குகளாக.....
கோயில் அரையர்கள் ஓதும் நடையில்
இந்த ஆண்டாள் பாட்டு! இதுவும் இளையராஜே இசையே! விபா சர்மா பாட, அரையர்கள் ஓதுவது!


நாட்டியப் பேரொளி பத்மினி நடனமாடுவது! - செந்தாமரை என்னும் படத்தில்!MSV இசையிலே, பி. லீலா பாடுகிறார்கள்!


** சுசீலாம்மாவும் இந்தப் பாட்டைப் பாடி இருக்காங்க! ஆனால் முதல் இரு வரிகள் மட்டுமே!அப்பறம் Track மாறீடும்! திருமால் பெருமை படத்தில்! இதோ!

** SPB, அதே கேளடி கண்மணியில் பாடுவது!

** வியப்பு என்ன-ன்னா மரபிசை-கர்நாடக இசையில், எவருமே இதை இதுவரை பாடாதது தான்! பிரபல கலைஞர்கள், இதைப் பாடிக் குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும்!


முழுப் பதிவையும் வாசிக்கணுமா?

இங்கே செல்லுங்கள்! கண்ணன் பாட்டு வலைப்பூவுக்கு!

பின்னூட்டங்கள், இங்கே பூட்டப்படுகின்றன!:)
Read more »

Thursday, July 28, 2011

கிரந்தம் தமிழுக்குத் தேவையா? ஏன்?

கிரந்தம் தேவை தானா? = தவிர்க்கணுமா? எழுதலாமா?
- இது பற்றி இணையத்தில் ஏற்கனவே பல தளங்களில் உரையாடல் நிகழ்ந்துள்ளது!

Unicode Consortium, கிரந்தத்தைத் தமிழ்ப் பலகையில் கொண்டாந்து கலந்தோ (அ) தமிழைப் புதிய கிரந்தப் பலகையில் கொண்டு போய் வைத்தோ...
இந்தக் குழப்படி பற்றி, படம் வரைந்து முன்பு விளக்கி இருந்தேன்! இராம.கி ஐயாவும் சிறப்புப் பதிவு இட்டிருந்தார்கள்!

ஆனால்.....இந்தப் பதிவு Unicode கிரந்தம் பற்றி அல்ல!
அதையும் தாண்டி....அடிப்படையிலேயே......
1. கிரந்தம் தமிழுக்குத் தேவை தானா?
2. கிரந்த எழுத்து பற்றிப் பல்வேறு தமிழர்களின் "Mood" என்ன?-என்று பார்க்கும் பதிவே இது!

ஏன் இப்படித் திடீர்ப் பதிவு-ன்னு பாக்குறீங்களா?

Twitter-இல், அப்பப்போ இது பத்திக்கும்! காரசாரம் தூள் பறக்கும்!
அண்ணன் @tbcd தலைமையில் தமிழ் ஆர்வலர் குழுவும், குழுவல்லாத சில ட்வீட்டர்களும், பிரிச்சி மேய்ஞ்சி பந்து வீசுவாங்க! IPL போட்டிகளை விட ஆர்வத்தைத் தூண்டும்!:)
அப்படித் தான் இன்னிக்கும் தூள் பறந்தது! சில பேருக்கு, அடிப்படையே தெரியாமல், தங்கள் மனசுக்குத் தோனுவதையே வைத்து உரையாடினார்கள்! பல டமால்-டுமீல் கேள்விகளும் எழுப்பப்பட்டன!

அத்தனை பேர் ஆதங்கத்தையும் ஒன்னாத் திரட்டி.....இதோ...கிரந்தம் FAQ! @twitter மக்களுக்கு நன்றி!


1. கிரந்தம் என்பது என்ன? அது வடமொழியா?
கிரந்தம் மொழி அல்ல! அது ஒரு எழுத்துரு (Notation) மட்டுமே!
வடமொழி ஓசைகளைத் தமிழில் எழுத உருவாக்கப்பட்ட ஒரு Notation!

கீழே படத்தைப் பாருங்க......கொஞ்சம் தமிழும் இருக்கும் ('யத') ! 'ஜ'-வும் இருக்கும்! புரியாத Round Round Jilebi-யும் இருக்கும் :)
பண்பாட்டுக் கலப்பு + வடமொழி வீச்சு! இவை அதிகார/அரச மட்டத்தில் தான் முதலில் பரவத் தொடங்கியது!
அந்த அயல் ஓசைகளுக்குத் தமிழில் நேரடியான எழுத்து இல்லை...அதை எழுத ஒரு Lipi (எழுத்துரு) உருவாகியது! அது பல்லவர்கள் காலம்!
பின்பு வந்த சோழர்கள் - அந்த ஆட்சியின் பண்டிதர்களால் - அரசுமுறை, கல்வெட்டு என்று எல்லாவற்றிலும் கிரந்தம் கன்னாபின்னா-ன்னு பரவியும் விட்டது!


2. கிரந்த எழுத்தக்கள் எவை?
தமிழில் கலந்து விட்ட அடிப்படைக் கிரந்த எழுத்துக்கள்: ஜ, ஸ, ஷ, ஹ! கூடவே க்ஷ, ஸ்ரீ

ஆனா இவை ஆறு மட்டும் தான் கிரந்த எழுத்து-ன்னு நினைச்சிறாதீங்க!
மொத்தம் 16 உயிர் x 34 மெய் = 500+ எழுத்துரு உண்டு!
நல்ல வேளை, எல்லாமே தமிழ்ப் பலகையில் புகுந்து விடவில்லை!

எந்தச் சில ஓசைக்கு எழுத்து இல்லையோ, அவை மட்டுமே அடிப்படையாப் புகுந்தன!
வேறு சில ஓசை, ka, kha, ga, gha, na -ன்னு இந்தியில் வருமே, அவை எல்லாம் உள்ளாறப் புகவில்லை! வேதப் படிப்பு/கல்வெட்டோடு நின்று விட்டன:)

Gaந்தம்=வாசனை! kaந்தன்=முருகன்!
அது வேற "க", இது வேற "க"! ஓசைக்காக அதையும் தமிழில் புகுத்துவோம்-ன்னு, நல்ல வேளை, புகுத்தாம விட்டாங்க!
இல்லீன்னா க, ங, ச, ஞ-க்கு பதில், நாமளும் ka, kha, ga, gha, na-ன்னு படிச்சிருப்போம்!:))

Gaந்தம்=வாசனை! kaந்தன்=முருகன்-ன்னு சொன்னேன்-ல்ல? பொதுவா "க" என்பதே, இடத்துக்கு ஏற்றவாறு ஒலிக்க வல்ல Flexibility (நெகிழ்வு) தமிழில் உண்டு! ஆங்கிலத்துக்கும் இது பொருந்தும்!

யம்மாடியோவ்...தமிழ் எழுத்துக்கள் = 247-ன்னு மலைச்சிப் போகத் தேவையே இல்ல! மொத்தம் 31 எழுத்து தான் தமிழில்!
உயிர்=12, மெய்=18 & ஆய்தம்=1! மீதியெல்லாம் உயிர்-மெய் கலவை எழுத்துக்களே!


சரி, வரலாறு போதும்! அது நடந்து முடிந்த கதை! தொடங்கிய பிரச்சனைக்கு வாரும்!:)

3. கிரந்தம் கலந்து எழுதுவது = தப்பா? சரியா?
ஆதித் தமிழ்த் தந்தையான தொல்காப்பியரைப் பொறுத்த வரை = தப்பு!
"வடசொல் ஒரீஇ"-ன்னு தான் சொல்லுறாரு!

அவர் காலத்தில், பண்பாடு ரொம்பக் கலக்கவில்லை! இருந்தாலும் பக்கத்து ஊரு, அண்டை நாட்டு வாணிப முறையில், சில சொற்கள் அங்கும் இங்கும் புழங்கின! அந்தச் சொற்களைக் கையாள, அவர் வகுத்துக் குடுத்தது:
* தற்சமம்: கமலம் = அப்படியே எழுத முடிபவை
* தற்பவம்: பங்கயம் (பங்கஜம்) = தமிழுக்கு ஏற்றவாறு, மாற்றி எழுதுபவை

தொல்காப்பியம், இன்று கிடைக்கும் தமிழ் நூல்களிலேயே மிகப் பழமையானது!

தொல்காப்பியர் மாயோன், சேயோன் (திருமால், முருகன்) என்று இருவரையுமே தமிழ்க் கடவுளாத் தான் காட்டுறாரு! = ஆனா நாம ஒத்துப்போமா? நம்ம மனசுக்குப் எது பிடிச்சி இருக்கோ அதானே "வரலாற்று உண்மை"! :)
அட போப்பா, தொல்காப்பியர் சொன்னதெல்லாம் இன்னிக்கி செல்லாது-ன்னு சொல்லீருவோம்-ல்ல? :) அதே போல் தான், அவர் சொன்ன "வடசொல் ஒரீஇ" என்பதும் செல்லாமப் போயிருச்சோ? :(

4. கிரந்தம் இல்லாம, இலக்கியத் தமிழை எழுதவே முடியாதா?
முடியும்!

சங்கப் புலவர்கள் தொட்டு, வள்ளுவர், இளங்கோ, ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பன்-ன்னு யாருமே கிரந்தம் பயன்படுத்தவில்லை!
பிராகிருத மொழி (சமஸ்கிருதம் அல்ல) விரவி வரும் சமண சமயம் கூட, அதன் தமிழ் இலக்கியத்தில் கிரந்தம் தவிர்த்து, தமிழையே தாங்கியது!

அவ்வளவு ஏன்? பின்பு வந்த எளிமையான பாரதியார் கவிதையில் கூட கிரந்தம் காண்பது கொஞ்சம் அரிது தான்! ஆனால்...ஆனால்...


5. கிரந்தம் இல்லாம, இன்னிக்கி தமிழை எழுதவே முடியாதா?

இது ரொம்பச் சிக்கலான கேள்வி!
அதுவும்.........பல சமயங்கள், பல மொழிகள்-ன்னு கலந்து, "தமிழர்" என்னும் ஒரே குடையின் கீழ் வாழ்கிறார்கள்!
அவரவருக்குப் பேர்கள், ஊர்கள்-ன்னு அமைஞ்சிப் போச்சி! "Santosh" என்பதைச் "சந்தோசு"-ன்னு எழுதினால், அவர் கோவிச்சிப்பாரா-ன்னு தெரியாது!

என்னை "இரவிசங்கர்" என்று எழுதுவதையே நான் விரும்புகிறேன்! நண்பர்களிடமும் அப்படியே புழங்கச் சொல்கிறேன்! அவரவர்களே ஒத்துக்கிட்டா, அப்போ பிரச்சனையில்ல! ஆனால்.....
குஷ்பு-வுக்கு என்ன தான் வயசானாலும், கோயில் கட்டிய கொலவெறி ரசிகர்கள் இன்னும் இருக்காங்களே....குசுபு-ன்னு எழுதினா என்னைக் கொலை பண்ணவே வந்துருவாங்களோ? :))

இதுக்கு, என்ன தான் வழி?
ஆலயங்களில் தமிழை முன்னிறுத்திய இராமானு'ஜ'ர், தன்னை "இராமானுசன்" என்றே கையொப்பம் இட்டார்!
இலக்கியங்களிலும் அவரை "இராமானுசன்" என்றே குறித்து வைத்தார்கள்! இது அவரே விருப்பமுடன் செய்து கொண்டது!

ஆனாலும் எல்லாரும் இராமானுசர் ஆகி விட விரும்புவதில்லை! அதே சமயம் தமிழும் கலப்படம் இல்லாமல் இருக்கணும்! அதுக்கு என்ன வழி?

* Mr. Santosh என்பதை, அவர் விரும்பவது போல், திரு. சந்தோஷ் என்று எழுதலாம்!
* ஆனால், "எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்று புழங்காமல்...."எனக்கு ரொம்ப மகிழ்ச்சி"-ன்னே புழங்கலாம்! :)

* தமிழால், தனி மனித உரிமை பாதிக்கிறது-ன்னு பேச்சும் எழாது!
* அதே சமயம், மொழிக்கு வளஞ் சேர்க்கும் தமிழ்ச் சொற்களும் தேய்ந்து போகாது!


6. இப்படியெல்லாம் மெனக்கெட்டு கிரந்தம் தவிர்க்கணுமா? ஏன்?
உம்ம்ம்ம்...இது நல்ல கேள்வி!
* க'ஷ்'டம்-ன்னு எழுதினாத் தான், நான் சந்தோசமா இருக்கேன்! "துன்பம்"-ன்னு எழுதறது ரொம்ப துன்பம்-ப்பா!:)
* க'ஷ்'டத்தில் இருக்கக் கூடிய ஒரு அதிர்வு, "துன்பத்தில்" இல்லை!

- இப்படியெல்லாம் சில இலக்கியவாதிகள் பேசக் கூடும்! பேசியும் உள்ளார்கள்! தமிழில் அர்ச்சனை பண்ணா "அதிர்வு" இல்லை-ன்னு சொல்றா மாதிரி தான் இதுவும்:)

தமிழுக்கு எப்போதுமே "நெகிழ்வுத் தன்மை" உண்டு!
தனி மனிதர்களின் பெயர்ச் சொற்களுக்குக் கொடுக்கப்படும் நெகிழ்வை, எல்லாவற்றுக்குமே தவறாப் பயன்படுத்த நினைச்சா எப்படி?

எப்படியோ கிரந்த எழுத்து உள்ளே வந்து விட்டது! முதலிலேயே இடம் குடுத்திருக்கக் கூடாது! குடுத்தாச்சு!........இடத்தைக் குடுத்தா மடத்தையும் புடுங்குவேன்-ன்னா எப்படி? :(


7. அதுக்காக கிரந்த எழுத்தை வெறுக்கணுமா? Is Grantham Untouchable?

Nopes! கிரந்தத்தை வெறுக்கச் சொல்லவில்லை! கிரந்தத்தை ஒழித்தால், நம்மளோட பாதி வரலாறு காணாமப் போயீரும்!
சரியோ/தவறோ...பழஞ் சுவடி, கல்வெட்டையெல்லாம் அரசர்கள் கிரந்தத்தில் எழுதி வச்சிட்டாங்க! அரசாங்கத்தை ஒட்டி வாழ்ந்த "அந்நாளைய படித்தவர்களின்" பின்புலம் அப்படி!

நாம், ஒருக்காலும் மரபியல் பதிவுகளை அழித்து விடக் கூடாது!
கல்வெட்டுப் படிப்புக்கு கிரந்தம் தேவை தான்! ஆனால் அவை துறை சார்ந்த ஒரு சிலருக்கு மட்டுமே!

மற்ற தமிழர்கள், இயன்ற வரை, இயல்பான தமிழில் புழங்குவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேணும்!
"கஷ்டம்" என்பதைக் "கடினம்"-ன்னு சொல்வதில் கடினம் இல்லை! கொஞ்சம் மெனக்கெடணும்! அவ்ளோ தான்!
"தஸ்தாவேஜ்"-ன்னு முன்பு எழுதினாங்க! ஆனா, இப்போ "ஆவணம்"-ன்னு எழுதினாத் தான் நமக்கே பிடிச்சிருக்கு, இல்லீயா?:)

நம் தலைமுறையில் மெனக்கெட்டால், அடுத்த தலைமுறையில் நல்ல தமிழ் பரவும்!
நம்மால் இயன்ற வரையில் மெனக்கெடுவோமே! ஒன்னும் கொறைஞ்சிப் போயீற மாட்டோம்!



8. Dai krs, எல்லாம் நல்லாத் தான் சொல்லுற! ஆனா அதே கேள்வியைத் தான் நான் திருப்பித் திருப்பிக் கேக்குறேன்! = ஏன் இப்படி மெனக்கெட்டு கிரந்தம் தவிர்க்கணும்? அதனால் தமிழுக்கு என்ன பெருசா நன்மை?ங்கிலம் எல்லாத்தையும் ஏத்துக்கிடுது-ல்ல? அதனால் தானே அதுக்குச் சிறப்பு?

உம்ம்ம்ம்...இதுக்குப் பதிலைச் சுருக்கமாச் சொல்லுறேன்!
மெனக்கெட்டு கிரந்தம் தவிர்ப்பதால் வரும் பயன் என்ன?-ன்னு நம்ம @nchokkan சரியான நேரத்தில் கேள்வி கேட்டு, என் சிந்தனையைத் தூண்டி விட்டார்! அவருக்கு நன்றி!

a) ஆங்கிலம் எல்லாத்தையும் ஏத்துக்கிடுது-ல்ல?
ஆங்கிலம் எல்லாமும் ஏற்றுக் கொள்வதில்லை!
Alphabets are now 26! You cannot change that! It only accepts punctuation, diacritical marks etc.......to spell French Names and similar stuff!
α,β,γ are all notations in Scientific English! But they dont become English Alphabets!
Even in Scientific Tamizh medium, we use only angles=α,β,γ Not angles=க,ங,ச!:)

மற்றபடி ஆங்கிலத்தின் Universal Acceptability, அந்நாட்டின் அரசியல் பரவலால் தானே தவிர, மொழித் தன்மையால் அல்ல! இது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்!

'உற்றார்' என்று ஒலிக்கும் 'ற்று' ஓசை ஆங்கிலத்தில் இல்லை! அதுக்காக ஒரு புது எழுத்தைப் புகுத்தி விடுவார்களா?
They write uppercase "R" for ற்று!
They only "adapt".....NOT "adopt"! - Gotcha?

b) வடமொழித் தாக்கம் எல்லா இந்திய மொழிகளிலும் உண்டு! தமிழால் தனித்து இயங்க இயலுமா?
இயலும்! இயலும்! இயலும்!

தமிழில் வடமொழித் தாக்கம் போல், வடமொழியிலே தமிழ்த் தாக்கமும் உண்டே! அதை ஏன் யாரும் பேசுவதில்லை?
பண்டைத் தமிழ்க் கடவுள்களான மாயோன்(திருமால்), சேயோன்(முருகன்) அல்லவா, அங்கு விஷ்ணு/ஸ்கந்தன்-ன்னு ஆனார்கள்?
பூவை-நிலை என்னும் திணை/துறை, அங்கு போய் பூ'ஜை' ஆகவில்லையா? அது வரை அங்கே பலி குடுத்த யாகம் தானே?

கொடுக்கல்-வாங்கல்.....எல்லா மொழிகளிலும் உண்டு!
தொல்காப்பியரும் ஒதுக்கவில்லை! தற்சமம்/தற்பவம்-ன்னு அவரு குடுத்த Flexibility-யை முன்பே பார்த்தோம் அல்லவா!
ஆனால் Fundamental-யே கொடுக்கல்-வாங்கல் பண்ண முடியாது! அது மொழி என்னும் தனித்த அடையாளத்துக்கே கேடு!

c) மொழி வெறும் கருவி தானே? அதுக்கு எதுக்கு இம்புட்டு.......?
மொழி கருவி தான்! ஆனால் கருவி மட்டுமே அல்ல! அதையும் தாண்டி...
* இனத்தின் அடையாளம்,
* பண்பாட்டின் அடையாளம்,
* பெரும் தொன்மத்தின் அடையாளம்!

Children are NOT born "for" you! Children are just born "through" you!-ன்னு பேசலாம்! உண்மையும் கூட!
ஆனா.....அம்மா-அப்பா உறவு just natural convenience, அவிங்க வெறும் கருவி தானே, விட்டுத் தள்ளுறா-ன்னு ஒருத்தன் சொன்னா, அவனை நாம என்ன செய்வோம்?

அம்மா-அப்பா, நம் வேர்களின் அடையாளம்! மொழியும் அப்படியே!


அண்டை வீட்டாரிடம் அன்பாப் பழகலாம்! ஆனால் அங்கு போய் புதுப் பெண்டாட்டியுடன் படுக்க முடியாது!
இல்ல, எனக்கு அங்கே படுத்தால் தான் நல்லா இருக்கு, அதிர்வா இருக்கு-ன்னு சொன்னா? :((
"சந்தோஷம்" என்பதில் உள்ள அதிர்வு, "மகிழ்ச்சியில்" இல்லை-ன்னு நாமளே சொன்னா? = குடும்பம் என்னும் இல்லம் சிதைந்து போகும்! நம் இல்லறமே நமக்கு நல்லறம்!

d) தவிர்த்து எழுதுவதால் தமிழுக்கு என்ன நன்மை?
கிரந்தச் சொற்களின் புழக்கம், தெரிந்தோ தெரியாமலோ, ஆதிக்க சாதி அரசியல் மூலமாகப் பெருத்து விட்டது! அதை இப்போது பேசிப் பயனில்லை!
ஆனால் தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போய் விடக் கூடாது! மொழியில் உள்ள சொற்கள் எல்லாம் வழக்கொழிந்து போனால், தொன்மமும் சேர்ந்தே தொலைந்து போகும்!

* பல தமிழ்ச் சொற்கள் இப்படிச் செத்து விட்டன!
ஒருபுடை உருவகம்= ஏகதேச உருவகம்,ரேழி=வெராண்டா, பாழ்=பூஜ்ஜியம், சோறு=சாதம், சாளரம்=ஜன்னல், இதழ்=பத்திரிகை, பொருள்=அர்த்தம்....
* இன்னும் பல தமிழ்ச் சொற்கள் செத்துக் கொண்டே இருக்கின்றன! பண்பாடு=கலாச்சாரம்! முகவரி=விலாசம்! காட்டு=உதாரணம்

எவனும் தமிழ்ப் பண்பாடு-ன்னு சொல்லுறது இல்ல! தமிழ்க் "கலாச்சாரமாம்"! அந்த அளவுக்கு கலப்படம் செய்து விட்டார்கள்!
பாடநூல்களிலேயே, "ஏக-தேச" உருவகம்-ன்னு தான் இருக்கு! ஏக்-தோ-தீன் உருவகம்-ன்னு மாத்தாம இருந்தாச் சரி!:(

இப்படி ஒவ்வொரு எழுத்தாய், சொல்லாய், பொருளாய் விட்டுக் கொண்டே இருந்தால்...
கடைசியில் துளு, செளராட்டிர மொழிகளுக்கு ஆன கதி தான், தமிழுக்கும் நேரும்!

அதனால் தான்.....கிரந்தக் கலப்பால், ஒவ்வொரு தமிழ்ச் சொல்லாக் காணாமல் போவதைத் தவிர்ப்போம்-ன்னு உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறது! மற்றபடி இதுல அரசியல் ஒன்னுமில்லை!
தமிழ்ச் சொற்கள் செத்துருக் கூடாது = அதான் இந்த முயற்சியில் கிடைக்கும் "நன்மை"!

நல்ல வேளை, நம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் தொன்மத்துக்கும், பண்பாட்டுக்கும் அரணாய் இருக்கின்றன!
நாமும் ஆற்றின் கரையை அப்பப்போ வலுப்படுத்துவோம்! ஆற்றிலே மணலை அள்ளி அல்ல! :(



முடிப்பாக.....

தமிழுக்கு எப்போதும் நெகிழ்வுத் தன்மை உண்டு!
பெயர்ச் சொற்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம் (இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே)! - ஏன்னா அவை தமிழ் மொழிக்கு வளஞ் சேர்க்கும் சொற்கள் அல்ல!

ஆனால்...
இந்த விலக்கு தனி நபருக்கும், சில நிறுவனக் குறியீடுகளுக்கும் மட்டுமே!

ஸ்ரீரங்கம் என்ற இடத்தின் பெயரை, திருவரங்கம் என்று புழங்கலே அழகு! அவனையே எண்ணி வாழ்ந்த ஆழ்வார்கள் எங்காவது ஸ்ரீரங்கம்-ன்னு பாடி இருக்காங்களா?.........தேடினாலும் கிடைக்காது!
"ஆவியே அமுதே, திருவரங்கத்து அரவணைப் பள்ளியானே"-ன்னு தான் இருக்கும்! ஆவியே அமுதே, ஸ்ரீரங்க ஸ்ரீவத்ஸ ஸ்ரீநிவாஸா -ன்னு இருக்காது :)

* Mr. Gnana Skandan என்ற நண்பரை, ஞானக் கந்தன் என்று நான் அழைக்க முயல்கிறேன்! ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை! என்ன செய்ய?
= அவர் பெயருக்கு நான் கட்டாயம் மதிப்பளிப்பேன்! I want to respect his name! ஞானஸ்கந்தன் என்றே அழைப்பேன்!
* அதே சமயம், இராமானுசன் என்று தானே விரும்பி எழுதுபவரை, எழுந்து நின்று, கரம் கூப்பி, வரவேற்பேன்!

மற்றபடி, பெயர்ச் சொல் அல்லாத பலப்பல கிரந்தச் சொற்கள்
- தஸ்தாவேஜ், கஷ்டம், சந்தோஷம்
இவற்றையெல்லாம்
- ஆவணம், கடினம், மகிழ்ச்சி
-ன்னு ஒலிக்கப் பழகிக் கொள்வதில் தவறே இல்லை!
கொஞ்சம் ஈடுபாடு தான் தேவை!.....நான் ஈடுபடப் போகிறேன்! நீங்கள்???
யானே தவமுடையேன்!
யானே தமிழ்ச் சொல்லால் சொன்னேன்!
பெருந்தமிழன் நல்லேன் பெரிது!!! (ஆழ்வார் பாசுரம்)


Read more »

Sunday, July 10, 2011

நாயன்மார் அல்லாத ஒரு நாயன்மார்: இளையராஜா!

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
பணி நிமித்தமாக Rio de Janeiro பயணம்! ஓர் இரவு, சற்று நலமின்மை! அதனால் ஒரு முக்கியமான பதிவு miss ஆயிருச்சி!

அப்படியென்ன நாளு-ன்னு கேக்கறீங்களா? = Jul-05-2011 (ஆனி மகம்)! ஒரு பெரும் தமிழ்ச் சான்றோரின் குரு பூசை (நினைவு நாள்)!
= யாரு? நாயன்மாரா? அல்ல!
= நாயன்மார் அல்லாத நாயன்மார்! யார் அவர்?


இசைஞானி இளையராஜா செய்த Thiruvaachaga Oratorio அருமையானதொரு படைப்பு!
ஒரு பழந் தமிழ்ப் பதிகத்தை, மேற்கத்திய இசை முறையில் தருவதற்கு நுண்ணிய இசைப் புலமை வேண்டும்! ஆனால்.....

இளையராஜா செய்தது Symphony-ஆ அல்லது Oratorio-வா? என்பதில் சர்ச்சைகள் எழுந்து,.......இன்றும் பேசப்படுகின்றன!
இளையராஜாவே அது Oratorio என்று சொல்லி விட்ட பின்பும்....விளம்பரப் பேரலை எழுப்பக் கருதி, ஒரு சிலர் பரப்பிய Symphony என்ற வணிக முயற்சிகளால், சர்ச்சையாகிப் போனது!
ஆனால் இந்தச் சர்ச்சைகளாலெல்லாம், தமிழ் உலகம் தந்த இசை ஞானியான, இளையராஜாவின் புகழுக்கு, ஒரு போதும் மாசு கற்பித்து விட முடியாது!

List of symphony composers என்று இங்கே Wiki-இல் பார்த்தால், ராஜாவின் பெயர் இருக்காது! ராஜாவே ஒப்புக் கொண்டதும் கூட!
அது வெறும் Oratorio, அவ்வளவே! இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

* Oratorio = நீண்ட இசைக் கோர்வை! புனிதப் பொருட்கள் மீதான இசை! பொதுவாகத் தேவாலயங்களில் பாடவல்லவை! நாடக மேடைகளுக்கு அல்லாமல், இசை மேடைகளுக்கு மட்டுமே உரித்தானது!
* Symphony = அதனினும் நுட்பமான இசைக் கோர்வை! கடினமான இலக்கணங்கள் கொண்டது! நான்கு அசை வடிவுகள் கட்டாயம் இருக்க வேண்டும்!
1. opening sonata or allegro
2. slow movement, such as adagio
3. minuet with trio or solo sonata
4. and... allegro, rondo, or sonata

Symphony=பாடல் வரிகள் முக்கியம் அல்ல! இசை வடிவம் தான் முக்கியம்!
ஒரு முறை வடிவமைத்து விட்டால், பின்னர், திறமையுள்ள யார் வேண்டுமானாலும், அதை மீள் நடத்தி இசைக்கலாம்!
Beethoven, Schubert, Mendelssohn, Schumann போன்றவர்களின் சிம்பனிக்கள் இன்றும் இசைக்கப்படுகின்றன! பீத்தோவன் 5th Symphony புகழ், உலகம் அறிந்த ஒன்று!

இந்தியர் ஒருவர் எழுதிய சிம்பனி என்று பார்த்தால்...
இது வரை ஒருவரே! KS Sorabji! ஆனால் இதன் கடினத்தால், இன்று வரை இசைக்கப்படாமலேயே இருக்கிறது! :(

நம்ம இசைப் பொக்கிஷமான ராஜா செய்தது என்ன?
* தான் அமைத்த ஒரு Oratorio இசைக் கோர்வைக்கு ஏற்றவாறு, வரிகளைத் தேடியது! திருவாசகத்தில் எல்லா வரிகளும் அப்படியே பொருந்தி விடுமா?
* அதனால் தன் இசைக்கு/மெட்டுக்குப் பொருந்தி வரக் கூடிய திருவாசகப் பாடல்களை மட்டுமே தேடி, இசையூடே அமைத்து, மாலையாய்க் கட்டினார்!
= அதுவே அழகிய திருவாசக ஓரட்டோரியோ!


இந்நேரம் கண்டு புடிச்சிட்டு இருப்பீங்க-ன்னு நினைக்கிறேன்! :)
யார் அந்த "நாயன்மார் அல்லாத நாயன்மார்"?

தெய்வத் தமிழிசைக்கு வந்து வாய்த்த பெருமகனார் = திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும்படியான...
*** திருவாதவூரர் (எ) மாணிக்கவாசகர்!

சைவ சமயக் குரவர் நால்வருள் மூத்தவர் என்றாலும்...
ஏனோ 63 நாயன்மார்களில், மாணிக்க வாசகரை வைக்கவில்லை! :(((
என்னளவில் இது பெருங்குறையே!

நாயன்மார் கதைகளில் இவர் வரலாறு வராததால், இளந் தலைமுறைக்கு, இவர் கதையைத் தனியே தான் சொல்ல வேண்டும்!:(

சைவத் திருமடங்கள், காலத்துக்கு ஏற்றவாறு மாறி....
மாணிக்கவாசகப் பெருமானின் கதையை, பெரிய புராணத்தோடு சேர்த்து, மற்ற அடியவர் கதைகளோடு ஒன்றாக்கி விட வேணும் என்பது என் பேரவா! சிவ சிவ! துணை நின்றருள்!


மாணிக்கவாசகரின் தெள்ளு தமிழ்த் திருவாசகத்தை,
* இளையராஜாவின் இசையிலும்,
* மரபு வழியிலான ஓதுவார் திருமுறையிலும்
ஒருமுறை கேட்போமா? வாங்க! வாங்க! கேட்டுக்கிட்டே வாசகத்தை வாசிங்க!

8ஆம் திருமுறை - திருவாசகம் 35 - அச்சப் பத்து:
(மாணிக்க வாசகர் அரசாங்கப் பணத்தைக் "களவாடியவர்" என்று கிளம்பிய போது, அவர் மனம் அச்சப்பட்டதா? என்ன சொல்லிற்று? அதுவே இந்த அச்சப் பத்து!)

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்!
பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!
கற்றை வார் சடை எம் அண்ணல்
கண் நுதல் பாதம் நண்ணி....

புற்றில் இருக்கும் கொடும் பாம்பு? = அஞ்ச மாட்டேன்!
பொய்....இன்று பலருக்கு, மெய் போல் தோன்றினாலும் = அஞ்ச மாட்டேன்!
கட்டிய சடையான், நெற்றியிலே கண் உடையவன்,
என் அண்ணல்...அவன் பாதங்களை அடைந்து விட்டு...

மற்றும் ஓர் தெய்வம் தன்னை
உண்டென நினைந்து-எம் பெம்மாற்(கு)
அற்றிலா தவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சு மாறே!!

ஈசனை அடைந்த பின்னர், "மற்ற தெய்வங்களும் உண்டு" என்று...என் பெருமானிடத்திலே அற்று இல்லாதவர்கள் (உறுதியான பற்று இல்லாதவர்கள்)...
இவர்களைக் கண்டு மட்டுமே, அம்மா! நான் அச்சப் படுகிறேன்!

ஓதுவார் தருமபுரம் சுவாமிநாதன் குரலில்...அதே பாடல்...

வன் புலால் வேலும் அஞ்சேன்!
வளைக் கையார் கடைக்கண் அஞ்சேன்!
என்பெலாம் உருக நோக்கி
அம்பலத்து ஆடு கின்ற

மாமிச வேடர்களின் வேல் = அஞ்ச மாட்டேன்!
வளையல் பெண்களின் காமப் பார்வை = அஞ்ச மாட்டேன்!
எலும்பும் உருகுமாறு பார்த்துக் கொண்டே இருப்பேன்! யாரை?

என் பொலா மணியை ஏத்தி
இனிது அருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால்
அம்ம நாம் அஞ்சு மாறே!!

தில்லைச் சிறு அம்பலத்தில் ஆடுகின்றான்! துளையற்ற மணி = ஈசன்!
அவனைப் போற்றி, அவன் அருளைப் பருகாமல் இருப்பவர்கள்...
அன்பே இல்லாத அவர்களைக் கண்டு மட்டுமே, அம்மா! நான் அச்சப் படுகிறேன்!


என்ன மக்கா, பாடலைப் படித்தும் + கேட்டும் இன்புற்றீர்களா?

'மற்ற தெய்வங்கள்' என்று சில கருத்துகள் வந்தாலும்...மொத்த திருவாசகத்தையும், இதைக் கொண்டே, அவசரப்பட்டு எடை போட்டு விடாதீர்கள்! :)
இது ராஜா, அவர் இசைக்குப் பொருந்தி வந்ததால் மட்டுமே எடுத்துக் கொண்டது! அதுவும் தீவிரமான மன உளைச்சலில் இருக்கும் போது, மாணிக்க வாசகர் பாடியது! அந்தச் சூழலையும் நோக்க வேணும்!

என்னமாச் சொல்லாட்சி பாருங்கள்! பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!
* பொய் உரைக்கும் அரசியல்வாதிகள், மெய் போல் காட்டும் வித்தைகளை அஞ்ச மாட்டேன்-ன்னும் கொள்ளலாம்!
* நாம் நம்பிய ஒரு உள்ளமே, பொய்யை, மெய்யோ? என்று எண்ணி, என்னை மறுதலித்து விட்டால்? = அப்போதும் அஞ்ச மாட்டேன்-என்கிறார்!

கோபம் வேறு வருகிறது! இப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைத்து விட்டானே ஈசன்!
அரசாங்கப் பணத்தை எடுத்து ஆலயம் அமைத்து விட்டேன் என்று பேசுகிறார்களே! ஐயோ...........
அன்பில்லாத அவரின் மனப்போக்கைக் கண்டே அஞ்சுகிறேன்! அஞ்சுகிறேன்!.....என்று மொத்தம் 10 பாடல்கள்=அச்சப் பத்து!

மாணிக்கவாசகரின் கதை?

பொதுவாக, எல்லா நாயன்மார்களின் நினைவுநாள் போதும், பெரிய புராண புனிதப் பூச்சுக்கள்/ மிகைகளைக் களைந்து, மூலநூலில் உள்ளது உள்ளவாறு, இக்காலத்துக்கும் ஏற்றாற் போல் சொல்வேனே!
இன்று எங்கே அந்தக் கதை? மாணிக்கவாசகரின் கதை?

= நாயன்மார் அல்லாத நாயன்மார் திருவடிகளே சரணம்!
எங்கள் தமிழிசை வாழ வந்த, மாணிக்க வாசகப் பெருமான் திருவடிகளே சரணம்!


தொடர்புடைய பதிவு: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ?
Read more »

Thursday, July 07, 2011

கா.சிவத்தம்பி! ஈழத்-தமிழகம்!

மறைந்த ஈழத் தமிழறிஞர், பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் இன்னுயிர், இறைவன் திருவடி நீழலில் இளைப்பாற, என் கரங் கூப்பிய அஞ்சலி!

அன்னாரைப் பற்றிய முக்கியமான தோட்டாப் புள்ளிகள் (Bullet Points):

1. பொதுவாக, தமிழ் இலக்கிய வரலாற்றில், தமிழகம் மட்டுமே பெரிதும் பேசப்படும்! ஈழம் சார்ந்த இலக்கிய வரலாற்றையும், தமிழ் இலக்கிய வரலாற்றில் கொண்டு வந்து இணைத்த பெருமகனார்=சிவத்தம்பி!

2. இயல்=ஆய்வுக் கட்டுரைகள், இசை=விபுலானந்த அடிகள் பற்றிய ஆய்வு, நாடகம்=வசனங்கள், என்று முத்தமிழிலும் கோலோச்சியவர்!

3. முருகனைப் போலவே, "திருமாலும் தமிழ்க் கடவுளே" என்ற தமிழ்த் தொன்ம ஆய்விலே இவரும் முக்கியமான அறிஞர்!
இவரின் முல்லை நில ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் சங்கத் தமிழ்த் திருமால், எங்ஙனம் வடக்கே சென்ற போது, 'விஷ்ணு'வாகக் கலந்து முதல்வன் ஆனான் போன்ற குறிப்புகள் மிக நுண்ணியவை!

இவரை ஒட்டி, டாக்டர் மு.வ, மற்றும் நீதியரசர் மு.மு இஸ்மாயில் போன்றவர்கள், தமிழ் இலக்கிய வரலாற்றை, பெரும்பான்மைச் சமய அரசியல் பூச்சில் இருந்து விடுவித்து, நல்ல பல ஆய்வுகளை நிகழ்த்தினர்!
சமணர் என்ற ஒரே காரணத்துக்காக, களப்பிரர் காலம்=இருண்ட காலம் என்று முத்திரை குத்தி, "தாங்கள் எழுதியதே வரலாறு" என்னும் சைவ ஆதிக்கச் சாதியினரின் போக்கும் ஒழியத் துவங்கியது!


4. கா.சிவத்தம்பி குறித்து, தமிழறிஞர்கள் பேசும் வானொலி ஒலிக் கோப்புகள் - கா.பி அண்ணாச்சியின் பதிவில்...இங்கே கேட்கலாம்!

5. இன்று, எத்தனை தமிழகப் பாடநூல்களில் ஈழ இலக்கியம் வைக்கப்படுகிறது? ஈழப் பாடங்களில் தமிழக இலக்கியம் உண்டு! ஆனால் தமிழகப் பாடங்களில் ஈழ இலக்கியம் இல்லையே!:(

6. மொழித் துறையில், தமிழகம்-ஈழம் 'இயைந்து'ருந்தால், இன்று தமிழக மக்கள் "உணர்வு"ப் பூர்வமாக ஈழத்தோடு இயைய, எளிதாக இருந்திருக்கும்! ஆனால் இன்னிக்கும் ஒட்டு மொத்த ஈழ உணர்வுக்கு நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம்!

7. >மொழித் துறையில் தமிழகம் Vs ஈழம் பாகுபாடு< இதைத் தான் பேரா. கா.சிவத்தம்பி ஓரளவு நேர் செய்ய முனைந்தார்!

8. அன்னாருக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி, மொழித் துறையில் இந்த "ஒருங்கிணைப்பு" வேண்டும்!
தமிழ் வரலாறு-ன்னாலே, ஏதோ சோழர்களோடு அனைத்தும் நிறைந்தது என்றில்லாமல், ஈழத்துக்கும் நம் வரலாற்றுக் கைகள் நீள வேண்டும்!

9. ஈழம் சார் சொற்கள்=அவதானிப்பு, கதைத்தல், பகடி போன்றவை! இவை தமிழகத் தமிழ்ப் பதிவுகளிலெல்லாம், இப்போது புழங்கத் துவங்கி இருப்பது, மகிழ்வான சேதி!

10. பேரா. சிவத்தம்பி நினைவாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், ஒரு தமிழ் விருதினையும், ஆய்வு மையத்தையும் நிறுவி, தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ள வேணும்! தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஈழப் படைப்பிலக்கியங்கள், தமிழகத்தின் தமிழ் ஆக்கங்களோடு, ஒருங்கிணைந்து செயல்பட, இது போன்ற மையம் பேருதவியாக இருக்கும் என்பது என் பணிவான கருத்து!


கட்டுரைகள் மட்டுமல்லாது, சிவத்தம்பியின் இசை-நாடகப் பங்களிப்புகளும், தமிழ்த் தாயின் திருவடிக்கு தீஞ்சிலம்பு!
வாழ்க சிவத்தம்பி! வாழ்க சிவத்தம்பியின் தமிழ்!!

மேலும் வாசிக்க:
1. Prof. Sivathambi's Ebook: பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி...
2. ஜெயமோகன் - சிவத்தம்பி குறித்த மதிப்பீடு - எனக்கு இதில் கிஞ்சித்தும் ஒப்புதல் இல்லை!
3. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்: சிவத்தம்பி - தொகுப்புப் பதிவு!

* தற்சமயம், வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளதால், பதிவாக எழுத நேரமில்லாமல், புள்ளிகளாகத் தொகுத்து விட்டேன்!
* பேரா. கா. சிவத்தம்பியோடு, கல்லூரி மலருக்காக உரையாடி, பதிவிட்டது...என் வாழ்நாளில் மறக்க முடியாத தமிழ் நிகழ்வு!

ஐயாவுக்கு எனது கண்ணீர்-மலர் அஞ்சலி!
Read more »

Thursday, June 30, 2011

தமிழ்ச் சினிமாவிலே சங்க இலக்கியம்! - Part1

"தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியப் பாட்டு போட்டா எடுபடுமா? மிக மிகப் பழங்காலத் தமிழ்! அதைச் சினிமாவில் வைத்தால் செல்லுமா?
ஆடியன்ஸ் கல்லெறிவார்களே! இசை மெட்டில் பாடினால்? கல்லா?...பாறையே எறிவாய்ங்க!" :)

"டேய், அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சி! காலேஜ் பொண்ணுங்க எல்லாரும் சங்கத் தமிழ் ட்யூனைத் தான் ஹம் பண்ணுறாங்கடா!
இதுவரை...தமிழ்ச் சினிமாவில் வந்த சங்கப் பாட்டு, எல்லாமே ஹிட்-ன்னா பார்த்துக்கோயேன்!"

"ஆகா! அப்படியா?"

"ஆமா! சில பேரு, தமிழ்-லயும் வீக்கு! காதல்-லயும் வீக்கு! இந்தப் பாட்டு வந்த போது, என்னைக்கும் இல்லாத திருநாளா, தமிழ் ஆசிரியருக்கு, பசங்க ரொம்பவே மரியாதை காட்டுனாங்க! எதுக்காம்? - இந்தப் பாட்டின் வரிகளை வாங்கி மனப்பாடம் செய்யத் தான்" :)

"உன்னி கிருஷ்ணனும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடின பாட்டு! இருவர் படத்தில், AR ரஹ்மான் சங்கத் தமிழும் மெலடியுமாய்க் கொடுத்த மாஸ்டர் பீஸ்!
அப்படி என்ன, சங்கத் தமிழ்ப் பாடல்கள்-ல்ல அப்படி ஒரு மேஜிக் இருக்கு?


குறிஞ்சிப்பூ
முல்லைப்பூ

சங்க இலக்கியம் - அகம்/புறம் - என்று அகத்தைக் கரைத்து, புறத்தையும் கரைக்க வல்லது! ஏன்-ன்னா சங்க இலக்கியக் காதலில் இருப்பது = "உண்மை"!

சங்க காலக் கவிஞர்கள் எல்லாம் "வீறு" மிக்கவர்கள்!
"எங்கள் ரங்கநாயகியே, திருவாரூர் தமிழ்த் தேரே"-ன்னு.......தமிழை, பிச்சிப் போட்டு பிழைப்பு நடத்தத் தெரியும் 'வாலி-கூலி' அல்ல அவர்கள்!

பரிசில் பெற வேண்டி, மன்னனின் அவை நோக்கி அடகு வைப்பதெல்லாம் சங்க காலத்தில் அல்ல! பிற்காலத்தில் தான்! கலம்பகம், உலா -ன்னு அதன் பேரே 'சிற்றிலக்கியம்' என்று ஆகி விட்டது!
எழுபது வயது மன்னன் உப்பரிகையில் 'உலா' வந்ததைப் பாத்து, ஏழு வயசுப் பெண் பூப்படைந்தாள்-ன்னு உலா பாடிய 'கவிஞ்சர்கள்' எல்லாம் உண்டு! :)

நல்ல வேளை, இந்த மட்டமான போக்கை மாற்றி அமைத்து, தெய்வத் தமிழிசையில் திருப்பியது = ஆழ்வார்களும் நாயன்மார்களும்!
நாம் சங்க காலத்துக்கு வருவோம்! கிமு 300-கிபி 300!
ஆற்றுப்படை என்னும் தனிப் பிரிவே இருந்தாலும், அது கலைகளை ஆதரிக்கும் மன்னர்கள் எங்கெங்கு உள்ளனர் என்பதை மட்டுமே சொல்லும்!
கவிஞர்கள், பாணர், விறலியர் எல்லாரும் அங்கு சென்று, மன்னனிடம் உரையாடி, கலையாக்கம் தான் குடுத்தார்களே தவிர, 'துதி' பாடவில்லை!

கவிஞர்-பாணர்-விறலியரா? அப்படி-ன்னா? உதாரணமாகப் பார்க்கலாமா?
* கவிஞர் = கண்ணதாசன் (Lyric Writer)
* பாணர் = எம்.எஸ்.விஸ்வநாதன் (Music Composer cum Singer)
* விறலியர் = பத்மினி (Dancer cum Singer)

சங்க காலத்தில், எல்லாருமே இப்படி இசை நாடகங்களைச் செய்வதில்லை!
சில கவிஞர்கள், மன்னனையே எட்டிப் பார்க்காமல், சமூகத்தை மட்டும் பதிந்து வைக்கும் கவிகளாகவே இருந்து விட்டனர்!
அது போன்ற கவிஞர்களின் கவிதையில் இருக்கும் "காதல்" அப்படியே இதயத்தை அழுத்தி விடும்! அப்படியொரு வீச்சு! அதான் இன்னிக்கும் ஹிட்!

பார்க்கலாமா? - தமிழ்ச் சினிமாவில் சங்க இலக்கியம்!


1. நறுமுகையே நறுமுகையே, நீயொரு நாழிகை நில்லாய் - செம்புலப் பெயனீரார் - குறுந்தொகை!

படம்: இருவர்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
வரிகள்: வைரமுத்து

ரஹ்மான், சங்கத் தமிழை, காதல் தமிழை, இப்படி மெலடியாக்கிக் கொடுப்பதில் வல்லவர்! வைரமுத்து-ரஹ்மான் கூட்டணியே, அதிகமான சங்கப் பாடல்களை, சினிமாவுக்கு கொண்டு வந்தது!
உன்னி கிருஷ்ணன் பாடுவது இனிமை! பாம்பே ஜெயஸ்ரீ, யாயும் ஞாயும் என்பதை யாயும் யாயும்-ன்னு மூச்சு இழுத்துப் பாடுகிறார்கள்! :)


யாயும் ஞாயும் யார் ஆகியரோ
நெஞ்சு நேர்ந்தது என்ன?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்தது என்ன?
- இப்படிக் கவிஞர் வைரமுத்து எழுதினாலும், இதன் அடிப்படைப் பாடல் கீழே!

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின்னர், "பிரிவர்" எனக் கருதி அஞ்சிய தலைவியின் குறிப்பு கண்டு, தலைவன் கூறியது:
யாயும் ஞாயும், யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும், எம்முறைக் கேளிர்?
யானும் நீயும், எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
- செம்புலப்பெயனீரார், குறுந்தொகை-40, குறிஞ்சித் திணை

எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம்? Made for Each Other மாதிரி?
செம்மண்ணில் தண்ணி கொட்டிருச்சுன்னா
, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே! அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்! - இதான் பொருள்!

சூப்பரு! பொருளை, இந்த மாதிரியே தேர்வில் எழுதினேன்னு வையி, நூத்துக்கு நூறு தான்! :)
ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு-ன்னு பாட்டு வருமே, அதுல கூட "செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது"-ன்னு கண்ணதாசன் இதே பொருள்-ல நடுவால எழுதி இருப்பாரு! ஆனால் அதை ஏனோ அண்ணன்-தங்கை உறவுக்குப் பாட்டா எழுதிட்டாரு!

செம்-புலம்-பெயல்-நீர் ன்னு காதலை வித்தியாசமாய் யோசித்து, "ஓவியத் தமிழ்" தீட்டியதால் தான் இந்தப் பாட்டு ஹிட்!
இதுல இன்னொரு குறிப்பும் இருக்கு! அந்த நீர் (பெண்), செம்மண்ணிலே (அவனிலே) கலந்த பின்னாலே, அவள் கலரே மாறி விடுகிறது! அவன் சிவப்பு, இவளுக்குள் முழுமையாக ஓடுகிறது! அப்படி ஸ்ட்ராங்கான கலப்பு! :)
என்ன செய்தாலும், அந்த நீரின் சிவப்பை இனி மாற்ற முடியுமா? அவனில் கலந்த அவள், அவனாகவே மாறி விட்டாள்!


2. தீண்டாய், மெய் தீண்டாய்! தாண்டாய், படி தாண்டாய்! - வெள்ளிவீதியார் - குறுந்தொகை!

படம்: என் சுவாசக் காற்றே
இசை: ஏ ஆர் ரஹ்மான்
குரல்: SPB, சித்ரா
வரிகள்: வைரமுத்து

இந்தப் பாட்டில், வைரமுத்து பாட்டை மாற்றி எழுதாமல், சங்கப் பாடலை அப்படியே முன்னிகையாக வைத்து விட்டார்!
அதைச் சித்ரா, மிக்க விரகத்தோடு, மிக இனிமையாகப் பாடுகிறார்! ஏக்கம் தொனிக்கும் எழில் தமிழ்! ரஹ்மானின் இசையில், பல இசைக் கருவிகள் பின்னணியில் வண்ண ஜாலம் காட்டுகின்றன!

பிரிவு ஆற்றாள் என்று கவன்ற தோழிக்கு, தலைவி உரைத்தது!

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால், நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல், என் மாமைக் கவினே
- வெள்ளி வீதியார், குறுந்தொகை-27, பாலைத் திணை

நல்ல பசும்பால்-ன்னா ஒன்னு கன்று குடிக்கணும்! இல்லை கலத்தில் கறக்கணும்! ஆனா இப்படி நிலத்தில் வீணே வழிகிறதே!
எனக்கும் உதவாமல், என்-அவருக்கும் உதவாமல், என் மாந்தளிர் மேனியும், வரியுள்ள அல்குலும் (பெண் உறுப்பும்), பசலையால், வீணே அழிந்து உழல்கிறதே!
(*அல்குல் = இடுப்பு (அ) பெண்ணுறுப்பு, அவ்வக் கவிதையில் இடத்துக்கு ஏற்றாற் போல்)

ஏதோ, "காமம்" பிடிச்சிப் போயிப் பாடிட்டாங்க-ன்னு நினைக்காதீங்க!:)
இந்தப் பாடல் மிகவும் சோகமான + புரட்சிகரமான பாடல்!

பொதுவாக, ஆண் கவிஞர்கள் வர்ணனைகள் பாடுவதுண்டு! பெண்களின் உறுப்புகளை வர்ணிப்பதுண்டு! ஆனால் பெண்கள்? = வெளிப்படையாக காமம் பற்றிப் பாடியதில்லை!
அதிலும் உறுப்பைக் காட்டி எல்லாம் பெண்கள் பாடியதே இல்லை! வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை "துணிவு"! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!

ஒளவையார், காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தை, பாரி மகளிர் போன்ற 25+ பெண்பாற் புலவர்கள் உண்டு! ஆனால் வெள்ளிவீதியாருக்கு மட்டுமே இத்துணை துணிவு!


வெள்ளி வீதியார் கதை, நெஞ்சைப் பிழியும் கதை!

அவள் தமிழ்த் திறன் கண்டு, மாற்றுக் கொள்கை கண்டு.....,தன்னிலும் அறிவுள்ள இவள் நமக்குச் சரி வருவாளோ?-ன்னு காதலைக் கைவிட்டு விட்டான் காதலன்!
அன்றிலிருந்து ஓடாய் அலைந்து அலைந்தே இவள் மாண்டு போனாள்!

காதலன் இருக்கும் ஊருக்கு நடையாய் நடப்பாள்! ஆனால் இல்லத்தின் சுவரிலே சாய்ந்து விட்டு வந்து விடுவாள்! அவனைத் தொல்லை செய்ய மாட்டாள்!

* சொல்பேச்சு கேளாத இவளைப் பிறந்த வீட்டிலும் புறக்கணித்து விட்டார்கள்!
* இவள் வித்தியாசமான மனசுக்கு நண்பர்களும் புறக்கணித்து விட்டார்கள்!
* ஆனாலும் நெஞ்சின் காதலை...இவள் மட்டும் கடசி வரை மறுதலிக்கவே இல்லை!

இவள் வாழ்ந்த அந்த "வாழ்வை", ஒளவையாரே வேறு சில பாடல்களில் பாடிக் கண்ணீர் விடுகிறார்!

இந்த வெள்ளிவீதியார் எழுதியவை தான், சங்க இலக்கியப் பெண் கவிதைகளிலேயே மிக அதிகம்!
அழகான சொல்லாட்சி & உவமை! ஓவியமாய்க் கவிதையை வரைந்த பெண்!
ஒவ்வொரு வரியும் 'சுருக்' என்று தைக்கும்! கீழ்க் கண்ட காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்!


வெட்ட வெயிலில், வெள்ளைப் பாறையில், வெண்ணைய் உருண்டை!
அதுக்குக் காவல் = கண்ணுள்ள, ஆனால் வாய் இல்லாத + கைகள் இல்லாதவன்!
பாறையிலே வெண்ணைய் உருக உருக,....
அதைக் காப்பாற்றக் கையும் இல்லை! பிறரை உதவிக்கு அழைக்க வாயும் இல்லை!

இடிக்கும் கேளிர், நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ, நன்றுமன் தில்ல!
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமண் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே!!
(- வெள்ளிவீதியார் - குறுந்தொகை 58 - குறிஞ்சித் திணை - கழற்றெதிர்மறை)

அந்த வெண்ணெய் கரைவதைப் பார்த்துப் பார்த்தே, ஏங்கி ஏங்கி...
அது போல்.............,
* அவன் என்னை விட்டுவிட்டான் என்று ஊரார்/நண்பர்கள் முன் வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல்,
* அதே சமயம் தன்னைத் தள்ளும் அவனை அள்ளவும் முடியாமல்...
இவள் தனிமைக் காட்டிலே....கரைந்து, கரைந்து.....முருகா!

வெள்ளிவீதியார் வாழ்க! முருகா, இவளுக்கு இன்பம் கொடு! பேதைக்கொரு "வாழ்வு" அருள், பெருமாளே!


* ரஹ்மான், இளையராஜா, MSV என்று பலரின் இசையில்...
* கலித்தொகை, திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம்...என்று....
* தமிழ்ச் சினிமாவி்லே சங்க இலக்கியம்.....அடுத்த பகுதியில் தொடரும்!

அதுவரை...சங்க இலக்கியம் பற்றிய எளிமையான குறிப்புகள்/வரலாற்றை, இங்கு காணலாம்! (இது சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள் என்பதற்கான குறிப்பு மட்டுமே)
Read more »

Sunday, June 26, 2011

நாயன்மாரை வெறுத்த நாயன்மார்!

தன் சொந்த "காம" விஷயங்களுக்கெல்லாம் இறைவனைத் தூது அனுப்புவதா? என்று சக அடியாரிடம் 'வெறுப்பு' பாராட்டி........., அந்தப் பகையால், உயிரையே விடத் துணிந்த ஒருவரின் கதை!

பந்தலில், நாயன்மார்களின் கதைகளை, பெரிய புராணப் பூச்சுகள் இல்லாமல்...மூல நூலில் உள்ளது உள்ளபடி...
இன்று ஏயர்கோன் கலிக்காம நாயனாரின் குரு பூசை (நினைவு நாள்) - Jun 25,2011 (ஆனி மாதம், ரேவதி நட்சத்திரத்தில்...)



ஏயர்-கோன்-கலிக்காம-நாயனார்!

அது என்னாங்க ஏயர் கோன்?
ஏயன் = காங்-கேயன், கார்த்தி-கேயன், நச-ரேயன்(இயேசுநாதர்)...இப்படிப் பல ஏயன்கள்! ஏயன்=தலைவன்!
இன்னும் விவரமாச் சொல்லணும்-ன்னா...ஏயன்=ஈயன்! ஈன்று தரப்படும் குழந்தை, பின்பு தலைவனாகத் திகழ்வது!

* கங்கை ஈன்றதால் = காங்கேயன் (முருகன்)
* கார்த்திகை ஈன்றதால் = கார்த்திகேயன் (முருகன்)
* நசரேத் என்னும் ஊர் ஈன்றதால் = நசரேயன் (இயேசு பிரான்)
* குந்தி ஈன்றதால் = கெளந்தேயன் (அருச்சுனன்)

அது போல பல ஏயன்களுக்கு (வீர மகன்களுக்கு)...கோன்-ஆக (தலைவனாக) விளங்கியதால் = ஏயர் கோன்!
கலிக்காமர் என்பதே இவர் சொந்தப் பெயர்! ஏயர் கோன் = பட்டப் பெயர்!

சீர்காழி/ வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ள 'திருப்பெரு மங்கலம்' தான் இவரோட சொந்த ஊரு!
நந்தனாருக்கு நந்தி விலகுச்சே (திருப்புன்கூர்), அதுக்கும் சற்று கிட்டக்க!
சோழப் படைகளுக்குத் தளபதிகளைக் கொடுக்கும் குடியில் தோன்றியவர்! பெரும் வீரர்! அதை விட, பெரும் சிவ பக்தர்!

ஆனால்.......
ஆனால்.......
இவருக்கு, இன்னொரு சிவபக்தரான சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டாலே ஆகாது!


ஏனாம்? அவரு பாட்டெழுதி பேரு வாங்கிக்கறாரு-ன்னு பொறாமையா? ஏதாச்சும் வாய்க்கால்-வரப்பு தகறாரா? :)
அதெல்லாம் ஒன்னுமில்லை! சுந்தரர், தன் 'காம இச்சைக்காக' ஈசனையே தூது போகுமாறு வேண்டினாராம்! அதான்! :))

'இவன் பண்ணினது தப்பு - அதுக்குத் தூது, இறைவனே போக வேணுமா? அட, அந்தாளு தான் மானங்கெட்டுக் கேட்டா, இந்த ஈசனும் அப்படியே போயிடறதா? சீச்சீ!' - இப்படியான வெறுப்பு கலிக்காமருக்கு! :))
ஆனா சமயக் குரவர் நால்வருள் ஒருவரான, சுந்தரர் நிலை என்ன?
'போடா! என்னை ஈசனே ஒன்னும் சொல்லலை! நீயென்ன பெருசா கருத்து சொல்ல வந்துட்ட'?-ன்னு பதிலுக்கு குதிச்சாரா? :) இல்லை!



சுந்தர மூர்த்தி நாயனார் = சொகுசு மூர்த்தி நாயனார் தான்!:)
ஆனால் அந்த சொகுசிலும், ஈசனையே முன்னிறுத்தி எதையும் செய்பவர்!

ஈசன் தான் அவருக்கு உற்ற தோழன்! அவனிடம் எதையுமே மறைக்கும் வழக்கம் இல்லை அவருக்கு!
* சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சா, அதையும் அவன் கிட்ட சொல்லுவாரு!
* தான் ஸ்டைலாப் போட்டுக்கும் உடுப்பு எப்படி இருக்கு-ன்னு, அதையும் அவன் கிட்டவே கேப்பாரு!
* ஒரு பொண்ணு அழகா நடனம் ஆடுறாங்களா, வாவ் செம ஃபிகர்-ன்னு அதையும் ஈசன் கிட்டயே சொல்லித் தான் அவருக்குப் பழக்கம்:)
அப்படி ஒரு அன்னோன்ய பாவனை! எனக்கு முருகனா வந்து வாய்ச்சானே, அது போல-ன்னு கூட வச்சிக்கோங்களேன்!:))

ஈசன்-ன்னா பெரிய கடவுள், அவரைத் துதிக்கணும், கைலாச பதவி, அவர் முன்பு பணிவோடு நடந்துக்கணும் போன்ற எண்ணமெல்லாம் சுந்தரருக்குத் தோனாது!
ஏதோ தோள் மேல் கை போட்டு பேசுற பாவனை தான் எப்பமே!

ஆனா இது உலகத்தில் எல்லாருக்கும் புரிஞ்சிடுமா? இது "ஒரு வினோதமான" பாவனை!

யாராச்சும் முருகன் சிலையைக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு, Bed-ல்ல வச்சிக்கிட்டே தூங்குவாங்களா?:) காலையில் எழுந்திரிச்ச உடனேயே, முருகனுக்கு முத்தம் கொடுப்பாங்களா?:)
யாராச்சும் தன் அந்தரங்க ஆசை, காமம் உட்பட, இதையெல்லாம் போய் தெய்வத்து கிட்ட சொல்லுவாங்களா?

இப்படித் தான் சொகுசு மூர்த்தி நாயனாரான = சுந்தர மூர்த்தி நாயனார், தன் அந்தரங்க ஆசைகளையும் ஈசனிடம் மட்டுமே சொல்லுபவர்!


திருவாரூரில் பரவை நாச்சியோடு காதல் திருமணம்! ஆனால் சென்னை திருவொற்றியூர் ஆலயம் சென்ற போது, அங்கே இன்னொரு நடன மங்கை, சங்கிலி நாச்சியைக் கண்டு இருவருக்கும் காதல்!
அங்கேயே மணம் செய்து கொண்டார்! பின்னர் இறைவனிடம் படவும் பட்டார்! ஆனால் திருமணத்தைக் கேள்விப்பட்ட பரவை நாச்சிக்கு தாங்க மாட்டாத கோவம்! சுந்தரர் மீண்டும் திருவாரூர் சென்ற போது, கதவடைத்து விட்டார்!

அவள் கோபத்தைத் தணிக்க, ஆரூர் அழகேசரான ஈசனையே தூது செல்லுமாறு வேண்டினார் சுந்தரர்!
மாறு வேடத்தில் சென்ற ஈசனுக்கும் கதவு சார்த்தப் பட்டது!
ஒரு முறைக்கு இரு முறை...., வீதி விடங்கப் பெருமான், வீதியில் கால் தேய நடந்து, பரவையின் கோபத்தைத் தணித்தார்!

இதைக் கேள்விப்பட்டுத் தான், நம்ம கலிக்காமருக்கு மனசே ஆறலை!
'மாலும் ஐயனும் தேடித் தேடொணாத் திருவடிகள்...
அதைக் கால் தேய நடக்க விட்டானே...அதுவும் தன் இச்சைக்காக! பாவி! இவனெல்லாம் ஒரு சமயக் குரவனாம்? சுந்தரனாம்....ச்ச்சீ'
- இப்படியொரு வெறுப்பை வளர்த்துக் கொண்டு, அதைப் பலரிடம் சொல்லியும், அவ்வப்போது வெளிக்காட்டியும் வந்தார் கலிக்காமர்!

விஷயம் சுந்தரர் காதுகளுக்குச் சென்றது! சுந்தரருக்குத் தன் மேலேயே வெட்கமாக இருந்தது! 'ஆமாம்-ல்ல? நான் ஈசனை மதிக்காமல் ரொம்பத் தான் வேலை வாங்குறேனோ? ஆனா எனக்கு அவன் தானே எல்லாம்!
இது உலக வழக்கத்துக்கு மாறாக வேணும்-ன்னா இருக்கலாம்! காமமோ? காதலோ? அவன் கிட்டச் சொல்லாம யார் கிட்ட போய்ச் சொல்வது? - இதை கலிக்காமருக்கு எப்படிப் புரிய வைப்பேன்'?

'ஏன் புரிய வைக்க வேண்டும்? போனாப் போறான் கலிக்காமன்! அவன் வழி அவனுக்கு, என் வழி எனக்கு!'
- இப்படி உதறித் தள்ள மனம் வரவில்லை சுந்தரருக்கு! அடியார்கள் குழுவில் இசைந்து இருப்பதல்லவோ அழகு!

கலிக்காமர் நல்ல மனிதர்! நல்ல சிவ பக்தர்! அவர் வெறுக்கும் படி நான் இருக்கிறேனே! அவருக்குப் புரிய வைப்பது எப்படியோ?.....
என்று ஈசனிடமே மறுபடியும் போய்......ஏங்ங்ங்ங்கி.......நிற்க........



கலிக்காமருக்குச் சூலை நோய்! கடும் வயிற்று வலி! மருத்துவர்கள் வந்து மருந்து குடுத்தும் நிற்கவில்லை!
கனவில் ஈசன்...."கலிக்காமரே, நம் சுந்தரன் இங்கு வருவான்...உன் வலி தீரும்!"

திடுக்கிட்டு எழுந்தார் கலிக்காமர்! 'ஆகா! என்ன கொடுமை இது! நம் சுந்தரன்-ன்னு அடைமொழியா? ச்சீ...அவன் வந்தா என் வலி தீர வேண்டும்?
வேண்டவே வேண்டாம்! நான் செத்தாலும் சாவேன்! ஆனால் அவன் வந்து, என் வலி தீர்ந்தது-ன்னு இருக்கக் கூடாது'

அங்கு ஈசன்...."சுந்தரா...நம் கலிக்காமனின் வலியைத் திருநீற்றால் தீர்ப்பாயா? உன்னைப் பிடிக்காதவன் வீட்டுக்கு நீ செல்வாயா?"
சுந்தரர்: 'ஈசனே...நீயே....நம் கலிக்காமன்-ன்னு உறவு கொண்டாடுகிறாயே, அப்படியானால் உன் உறவு என் உறவு அல்லவா! இதோ கிளம்பிப் போகிறேன்!'

இருவருமே சிறந்த பக்தர்கள் தான்! ஆனால் தன்னைப் பின்னுக்குத் தள்ளி, தன் மானத்தையும் பின்னுக்குத் தள்ளி...அவனுக்கே அவனுக்கே....என்று இருக்கும் மனசு??? = பேதை மனசு!



சுந்தரர், திருப்பெருமங்கலம் வருகிறார் என்று தெரிந்து, ஊரே கூடி விட்டது!

பலருக்கும் சுந்தரரின் தெய்வத் தமிழ்ப் பதிகம் கேட்க ஆசை இருக்கோ இல்லையோ.....ஆனால் இரண்டு எதிர் துருவங்கள் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் ரசா பாசம் அரங்கேறுமோ?.....அதைக் 'கண்டு களிக்கும்' ஆவல் கூடி விட்டது :))

ஆனால், கலிக்காமருக்கு, இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை!
என்ன இது...இக்கட்டான நிலைமை!
அவனா? ச்சே...வேண்டவே வேண்டாம்! தனி அறையில்....தன் வாள் எடுத்து, தன் வயிற்றைத் தானே குத்திக் கொண்டார்!

ஐயோ! இரத்த வெள்ளம்!
கலிக்காமரின் மனைவி துடிக்கிறார்கள்!
கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில்...
இப்படிக் குப்-பென்று நடந்து விட்டதே! முருகா!

பொன்னார் மேனியனே....புலித்தோலை அரைக்கசைத்து
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே?
ஆகா! வீட்டு வாசலில் தேவாரப் பதிகச் சத்தம் கேட்கிறதே! சுந்தரர் வந்து விட்டாரோ?

வீடேறி வந்து விட்ட ஒருவரை எப்படி நடத்துவது?
குகக் குறிப்போ? அல்லது முகக் குறிப்போ?
வாங்க வாங்க, வந்த அஞ்சே நிமிடத்தில் போங்க போங்க....
.........இப்படியெல்லாம் செய்ய மனம் வருமா அந்தக் குல மகளுக்கு? மானக் கஞ்சாற நாயனாரின் மகள் அல்லவா!

அருமைக் கணவனின் உடலை, அறையில் பத்திரப்படுத்தி இருத்தி, கட்டி அணைத்து...கண்ணைத் துடைத்து...
அழுகை ஒலிகளை அடக்கச் சொல்லி விட்டு, தானும் அடக்கிக் கொண்டு....வெளியில் ஓடுகிறாள்!
சிறந்த சிவத் தொண்டரான சுந்தரரை, உள்ளே வருக, என்று அழைத்து, பணிந்து, இடி விழுந்தது போல் நிற்கிறாள்!

சுந்தரரும், 'அம்மா, கலிக்காமரைக் காண வேண்டுமே!' என பேச்சை ஆரம்பிக்க...விஷயம் ஒவ்வொன்றாய் வெடித்து வெளியில் வருகிறது...

சுந்தரர் அலறி அடித்து, அறைக்குள் ஓட....அங்கே இரத்த வெள்ளத்தில் கலிக்காமர்!
ச்சே...நல்லது செய்ய நினைத்து தீயதாய் முடிந்ததே...இதற்கா இத்தனை தூரம் வந்தேன்...வந்து இவள் மாங்கல்யத்தைக் கெடுத்தேனோ?
இப்படியுமா.....என் மீது வெறுப்பின் உச்ச கட்டம்?....சுந்தரர் கதறி அழ.....

திடுமென்று, யாரும் எதிர்பாரா வண்ணம்....
அருகே இருந்த வாளை உருவி....தன் மீது பாய்ச்சிக் கொள்ள.....

"சுந்தரா...நில்!!!!
எப்படிப் புரிய வைப்பது என்று தவித்தாயே!
உயிரைப் 'பரிந்தால்' புரியும்! பரிவதில் ஈசனைப் பாடி...."

கலிக்காமர் எழுந்தே விட்டார்!
என்ன மாயமோ...கலிக்காமர் எழுந்தே விட்டார்!
சுந்தரரின் உருவிய வாளை இறுகிப் பிடித்து கொண்டார்!

சுந்தரனின் விந்தையான பேதை மனம், அப்போது தான் கலிக்காமருக்குப் புரிந்தது...
* ஈசனே, நம் சுந்தரன் என்று சொல்லியும், தன் கருத்தை மட்டுமே முன்னிறுத்திய தான் எங்கே......
* பலரிடமும் பேசி இழிவு படுத்துகிறேன் என்று தெரிந்தும், ஈசனின் பேச்சை மட்டுமே முன்னிறுத்தி, என் வீட்டு வாசலில் நின்ற சுந்தரன் எங்கே....

வெட்கம் பிடுங்கி தின்ன....சுந்தரர் காலில் கலிக்காமர் வீழ....
அன்பு பிடுங்கித் தின்ன....கலிக்காமர் காலில் சுந்தரர் வீழ....

இருவரும் ஆரத் தழுவிக் கொண்டார்கள்! உயிர் நண்பர்கள் ஆனார்கள்!
கூடும் அன்பினால் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

திருப்புன்கூர் ஆலயத்துக்குச் சுந்தரரை அழைத்துச் சென்ற கலிக்காமர்...அங்கே இறைவன், நந்தனாருக்கு விலகிய நந்தி....என்று அனைத்தும் காட்ட...
சுந்தரர் தேவாரப் பதிகங்கள் பாடி....அதில் தன் நண்பரான கலிக்காமர் பேரையும் பாடிக் குறித்து வைத்தார்!

ஏத நன்னிலம் ஈராறு வேலி
ஏயர் கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து
பூத வாளி நின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொழில் திருப் புன்கூர் உளானே

உம்பர் ஆளியை உமையவள் கோனை
ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து
அன்பினாற் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு
ஐந்தும் வல்லவர் அருவினை இலரே

பந்தல் வாசகர்களே......நம் மனசாட்சியை நாமே கேட்டுக் கொள்வோமா?
* ஈசனே, நம் சுந்தரன் என்று சொல்லியும், நம் கருத்தை மட்டும் தான் நாம் முன்னிறுத்துவோமா?
* இழிவு படப் போகிறோம் என்று தெரிந்தும், அன்பனின் பேச்சை மட்டுமே முன்னிறுத்தி, இன்னொரு வீட்டு வாசலில் போய் நிற்போமா?....

அவன் உள்ள உகப்புக்கு நாமா?
நம் உள்ள உகப்புக்கு அவனா?

பேதை மனம் கொண்ட சுந்தரரையும், வீர மனம் கொண்ட கலிக்காமரையும் சேர்த்து வைத்த....
திருவாரூர் தியாகேசப் பெருமான் திருவடிகளே சரணம்!
ஏயர் கோன், கலிக்காம நாயனார் திருவடிகளே சரணம்!
Read more »

Tuesday, June 21, 2011

Annamayya Movie-Telugu Group Song ...தமிழில்!

இது மிகப் பிரபலமான பாடல்! அன்னமய்யா படத்தில் எல்லாரும் சேர்ந்து பாடும் கடைசிப் பாடல்....
பிரம்ம கடிகின பாதமு
பிரம்மமு தானினி பாதமு


இங்கே சென்று கேட்கவும்! படிக்கவும்!
பின்னூட்டங்களும் அங்கே! இங்கு பூட்டப்படுகிறது!:)
கண்ணன் பாட்டிலே, அடியேனின் 99th பாடல்!:)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP