2006-இல் பகல்பத்து, 2007-இல் ராப்பத்து! - 4
2006 கழிந்து, 2007 புகுந்து,
வளம் பல சிறக்க, உளமுடன் வாழ்த்து!
2006-இன் சிறந்த பதிவர் - வெட்டிப்பையல் பாலாஜி அவர்களுக்கு நன்றி! ஏன்?
இந்தப் பதிவை ஏகாதசியின் பின்னிரவில் கண்விழித்து எழுதிய போது, தொலைபேசியில் விடிய விடிய கம்பெனி கொடுத்தாரே! சும்மாவா!!!
இதற்கு முந்தைய பதிவு இங்கே!
பகல்பத்து, ராப்பத்து = இவை தமிழ்ச்சொத்து!
சிவராத்திரி ஒரு ராத்திரி, அன்னை அவளுக்கு நவராத்திரி - தெரிந்த விடயம் தான்! ஆனால் அது என்ன பத்து பகல், பத்து ராத்திரி?
மொத்தம் பத்து நாளா இல்லை இருபது நாளா?
மொத்தம் 21 நாட்கள்! பார்ப்போம் வாரீகளா? முத்தங்கி சேவையில் முத்து குளிக்க வாரீகளா?
இந்த விழாவை முதலில் துவக்கி வைத்தது திருமங்கை மன்னன் (கலியன்)!
அதற்கு முன்னரே தமிழ் ஓதப்பட்டு தான் இருந்தது! ஆனால் பெரும் விழாவாக கொண்டாட்டம் எல்லாம் கிடையாது!
திருவாய் மொழியும், நம்மாழ்வார் வழியும்,
கலியனுக்குத் தெரிந்தது! கடையனுக்கும் தெரிய வேண்டாமா?
அரங்கன் அனுமதி பெற்று, திருமங்கை மன்னன் தான், இவ்விழாவை ஒரு நாடகம் போல் நடத்திக் காட்டினார்!
இதை உடையவர் ராமானுஜர் இன்னும் முறைப்படுத்தி வைத்தார்! வெறுமனே பாசுரம் ஓதுவதோடு மட்டும் இல்லாமல், குப்பன், சுப்பன் இன்னும் எளியோரும் எல்லாரும் இதில் மனமொப்பி ஈடுபடுமாறு வழி வகை செய்தார்! பாக்கலாம் வாங்க!
சென்ற பதிவின் இறுதியில் பார்த்தோமே
அருள்பாடி ஸ்ரீபாதம் தூக்குவோஓஓஓர் எங்கே?
அடியோம் இந்தோஓஓஓம்!
இதற்குச் செந்தமிழில் கட்டியங் கூறுதல் என்று பெயர்! கவிதையாகக் கூடப் படிப்பார்கள்! பாட்டோலை வாசிப்பார்கள்! இவர்கள் சொல்லச் சொல்ல, இவர்கள் கூப்பிடும் குரலுக்குத் தான், ஆழ்வார் விக்ரகங்களும் வந்து நிற்கும்!
இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் யார் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ்ப் பண்டிதர்கள்? கோவில் அர்ச்சகர்கள்? அந்தணர்கள்? அரசு அலுவலர்கள்? ஹூஹூம்! இல்லவே இல்லை! சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்! சாதாரணக் குப்பனும் சுப்பனும் தான்!
இவர்களுக்கு இப்படிப் பயிற்றுவித்து, விழாவோடும், தமிழோடும் ஒன்றச் செய்தவர் தான் நம் ராமானுஜர்!
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றுப் பெரிதாகக் சொல்லிக் கொண்டிருப்பார்கள்! ஆனால் ஒரு துரும்பும் கிள்ளிப் போட மாட்டார்கள்!
தமிழின் பேரைச் சொல்லித் தான் மட்டும் வாழ்வார்கள் மத்தியில்,
தமிழுக்காக வாழ்ந்தவர்கள் நம் ராமானுசரும், நம் மாமுனிகளும்!
இன்றும் விழாவில், இதை நேரில் சென்று அனுபவித்துப் பார்த்தால், கண்கள் பனிக்கும்!
வேதம் தமிழ் செய்த பன்னிரு ஆழ்வார்கள்
கார்த்திகை மாதக் கார்த்திகை நாள் அன்று (திருமங்கையாழ்வார் நட்சத்திரம்) அரங்கன், நம்மாழ்வாருக்குப் பாட்டோலை அனுப்புவான். அதை எடுத்துக் கொண்டு போய் நம்மாழ்வார் சன்னிதியில் அரசாங்க ஆணை போல உரக்க வாசிப்பார்கள்!அத்யயனம் என்றால் படித்தல். அ+அத்யயனம் =அனத்யயனம், அதாவது படிக்காது இருத்தல். தமிழ் மறைகளைத் தவிர வேறு எதுவும் படிக்காது இருத்தல். (அந்தக் காலத்தில் வடமொழியில் சொன்னால் தானே, சிலர் வடமொழியையும் கொஞ்ச காலத்துக்கு நிறுத்தி வைப்பார்கள்! :-) அதனால் இப்படி ஒரு பெயர் கொடுத்தார்கள்!)
அந்தப் "படிக்காத" காலம் இப்போதிலிருந்து தொடங்குகிறது! மீண்டும் நம்மாழ்வார் ஊருக்கு வந்து சேரும் வரை அந்த அரசாணை அமுலில் இருக்கும்! (கார்த்திகை மாதக் கார்த்திகை தொடங்கி, தை மாத ஹஸ்தம் வரை)
ரங்கராஜனின் ஆணைப்படி இந்த இடைப்பட்ட காலத்தில் யாரும் மற்ற மறைகளைச் சாற்றக் கூடாது! தமிழ் மறையை மட்டுமே சாற்ற வேண்டும்; அதுவும் கூட்டாக ஆலயங்களில் சாற்ற வேண்டும்! அறியாதாரும் அறியும் வண்ணம் தமிழ் சாற்ற வேண்டும்! (கோதைத்தமிழ் மட்டுமே இதற்கு விதிவிலக்கு! யாரும் எங்கு வேண்டுமானாலும் சாற்றலாம்!)
ஆணை கேட்டு நம் ஆழ்வாரும் சகல மரியாதைகளுடன் திருவரங்கம் கிளம்பி வருவார்! பெருமாளும் பக்தனும் எதிர் எதிர் நிற்பார்கள் (எதிர்ச் சேவை); நாம் எதிர் விருந்து என்று சில திருமணங்களில் சொல்கிறோமே, அது போல!
முதல் நாள் திருமங்கை மன்னன் நினைவாக, அவருடைய திருநெடுந்தாண்டகம் ஓதப்படும்!
அதன் பின்னர், பகல்பத்து திருவிழா = வைகுந்த ஏகாதசிக்கு முன்னுள்ள பத்து நாட்கள்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆழ்வார் பாசுரங்கள்! பகல் வேளையில் கோலாகலங்கள் கொண்டாடப்படும்!
மொத்தம் 4000 திவ்யப் பிரபந்தங்கள் அல்லவா! நம்மாழ்வார் நீங்கலாக ஏனைய பதினோரு ஆழ்வார்களின் பாசுரங்களைப், பகல்பத்தில் பண்ணோடு இசைத்து ஓதுகிறார்கள்!
பேரரசன் அரங்கன், ஆஸ்தானத்தில் கொலுவிருக்க, நாமும் அவனுடைய குடிமக்களாய் இருந்து, செவி குளிரக் கேட்கலாம்!
சேஷராய மண்டபம் |
பகல்பத்தின் கடைசி நாளன்று, நம்பெருமாளின் மோகினித் திருக்கோலம்!
(அதான் ஏற்கனவே தமிழைக் கேட்டு மயங்கிப் போய் உள்ளோமே! அது போதாதா? மோகினிக் கோலம் காட்டி மேலும் மயக்க வேண்டுமா என்ன? :-) )
அதன் பின்னர் தான், சென்ற பதிவில் பார்த்த சொர்க்க வாசல் சேவை! ஏகாதசி அன்று விடியற்காலையில்!
அன்றே ராப்பத்து திருவிழாவும் தொடங்குகிறது! = வைகுந்த ஏகாதசியும் சேர்த்து மொத்தம் பத்து நாட்கள்!
இந்தப் பத்து நாளும் இரவு நேரக் கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது!
ஏழாம் நாள் இரவு ஒரு உலக மகா அதிசயம்! எப்போதும் அரங்கன் தானே மாயம் செய்து, எல்லாரையும் மயக்கி, விளையாட்டு காட்டுவான்?
ஆனால் இன்று அரங்கனே கதி கலங்கி, மதி மயங்கி, கிடக்கிறான்!
ஓர் அழகுத் திருமுகத்தை எட்டி எட்டிப் பார்க்கிறான்!
ஹூஹூம், சரியாகவே தெரிய மாட்டேன்கிறதே!
அட, என்னை இன்னும் கொஞ்சம் உயரத் தூக்குங்ளேன்! சரியாகவே தெரியவில்லையே! இன்னும் உயர, இன்னும் உயர என்று பாவம், கெஞ்சுகிறான்!
அடுத்த பதிவில்! ஏகாதசி இறுதிப் பதிவில் பார்ப்போம்!































