இந்தப் பதிவைப் படிச்ச பின் ஏற்படும் பயங்கரமான பின் விளைவுகள், பாவங்கள் எல்லாமே
கா.பி. அண்ணாச்சி,
என் தம்பி வெட்டி பாலாஜி, இவர்களையே போய்ச் சேர வேண்டும் என்று சொல்லிக்கிட்டு என்னோட திருவிளையாடலை ஆரம்பிக்கிறேன்!
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த அடுத்த ரெண்டு வாரத்திலேயே Break The Rules பண்ணி,
* நண்பனோடு பார்த்தது = விக்ரம் (ஒன்னுமே புரியலை :)
* நண்பன் மற்றும் வாடகை வீட்டில் குடியிருந்த நண்பியோடு பார்த்தது = புது வசந்தம் (வித்தியாசமான அழகான கதை)
* தனியாப் பார்த்தது (ஆறாங் கிளாஸ்) = நாயகன்
சுமார் ஆறு மாசக் குழந்தையா இருக்கும் போது சினிமா பாக்க ஆரம்பிச்சேன் போல! அப்படித் தாங்க சொல்லுறாங்க!
எனக்குச் சோறு ஊட்டணும்-னா ரொம்பவே போக்கு காட்டணும். ஷோக்குப் பேர்வழி நானு! விளையும் பயிர் முளையிலே தெரியும் தானே?
அம்மாவும், அத்தையும், திருவண்ணாமலைக் கோயில்-ல இருக்குற ஒவ்வொரு சாமியும் சிற்பத்தையும் காட்டிக் காட்டி, ஒரு ஒரு வாய் ஊட்டுவாங்களாம்!
சீக்கிரமே ஆல் சாமீஸ் & சிற்பம்ஸ் தீர்ந்து போயிரிச்சு. ஆயிரம் கால் மண்டபம் கட்டுன ராசா, ஒரு பத்தாயிரம் கால் மண்டபமா கட்டி வச்சிருக்கலாம்-ல?
அப்போ தான் அத்தை ஒரு புது சோறூட்டும் வித்தையைக் கண்டுபுடிச்சாங்க! அதான் சினிமா போஸ்டரைக் காட்டிச் சோறூட்டும் பழக்கம்! :)
படத்தோட இயக்குனரே அசந்து போகும் அளவுக்கு, ஒரே போஸ்டருக்கே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான கதைகள் தயாராகும்.
இப்படியாக என் சினிமாக் கண்ணைத் தொறந்த முதல் குருநாதர்...பாலச்சந்தர் இல்லீங்க...எங்க அத்தை தான். (அவிங்க பேரு ஆண்டாள் என்பது உப-குறிப்பு :)))
நிலாவைக் காட்டிச் சோறூட்டிய காலம் போய்
கலாவைக் காட்டிச் சோறூட்டிய ஞானக் குழந்தை அடியேன்! :)
நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா: ஐட்டம் வாரியா முன்னாடியே சொல்லிட்டேன். ஆனால், ரெண்டாங் கிளாஸ் படிக்கச் சொல்ல, வாழைப்பந்தல் தெய்வா டாக்கீஸ்-ல ஒரு சிவராத்திரிக்குப் போட்டாங்க -
திருவருட்செல்வர்!
படத்தைப் பாத்துப்போட்டு, பேஸ்தடிச்சா மாதிரி இருந்தேனாம்! அதுல வர "தாள் திறவாய், கதவே தாள் திறவாய்" பாட்டு தான் ரொம்பவே ஃபீலிங்கஸ் ஆகிப் போயி, இன்னிக்கும் மனசுல நிக்குது. அதுவும் சிவாஜியின் வயதான அப்பர் சுவாமிகளின் நடுநடுங்கும் நடிப்பை, எந்தவொரு மேக்-அப் போட்டும், எந்தவொரு தசாவதாரக் கமலும் இன்று செய்ய முடியுமான்னு தெரியவில்லை!
இந்தியன் தாத்தா மேக்கப்பில் ஒரு விதமான செயற்கைத்தனம் தெரியும். அப்பர் மேக்கப்பில் அப்படி ஒரு செயற்கைத்தனம் தெரியுதா-ன்னு நீங்களே பார்த்துக்குங்க.


செயற்கைத்தனம் இல்லாததைப் பார்த்த பிறகும் எப்படி சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங்-ன்னு சொல்றாங்க-ன்னு தான் புரியலை! உண்மையான உணர்ச்சிகளை உள்ளபடியே காட்டாம, நடிப்புக்குள்ள கூட நடிக்கணும் என்பது தான் எதிர்பார்ப்போ?
அவர் ஓவர் ஆக்டிங்கோ இல்லையோ, இவர்கள் ஓவர் ரியாக்டிங் என்பது வேணும்னா உண்மையா இருக்கலாம்!
பாத்திரத்துக்கு நடிகனா? நடிகனுக்குப் பாத்திரமா என்பது காலம் காலமாய் உள்ள கேள்வி தான்! கொஞ்சம் பாத்திரத்தையும் முன்னுக்குத் தள்ளுங்கய்யா! பாட்டுல பமீதா நமீதா-வை எல்லாம் அப்பறம் தள்ளிக்கலாம்!
சரி விடுங்க! ஓப்பன் சீசேம்-ன்னா தொறந்துட்டுப் போவுது! எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு, தாள் திறவாய், கதவே தாள் திறவாய்-ன்னு பாடணும்-னு? பொடிப்பையன் அப்பவே "நாஸ்திகமாய்" கேட்டு அடி வாங்குனேனாம். அது தனிக்கதை! :)
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?ஹிஹி...இப்போ சென்னை போன போது நாக்க மூக்க, நாக்க மூக்க -ன்னு
காதலில் விழுந்தேன்! பார்த்தேன்! நாக்க மூக்க நாக்க மூக்க-ன்னு கேட்கும் போது.....நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க-ன்னு கந்த சஷ்டிக் கவசம் மாதிரியே இல்ல? அய்யோ, அடிக்க வராதீங்க! :)
போன வாரம், சென்னையில் இருந்து திரும்பி நியூயார்க் வந்தவுடன் பார்த்தது =
Body of Lies! டி-காப்ரியோ or ரஸ்ஸல் க்ரோவா? கலக்குவது யாரு?
My Vote is for DiCaprio! நடுநடுவில் குருதிப் புனலை நினைச்சிக்கிட்டேன்!
ரஸ்ஸல் எப்பமே கலக்குவாரு! ஆனால் டி-காப்ரியோ கிட்ட இருந்து இப்படி ஒரு சீரியஸ் ரோலை நான் எதிர்பார்க்கவே இல்ல!
Ferris பாத்திரம் கனக் கச்சிதம்! Hoffman பாத்திரத்தில் ரஸ்ஸல் க்ரோவ் கெட்டப் கலக்கல்! டி-காப்ரியோ காதலிக்கும் அயிஷா, கொஞ்சம் கொஞ்சம் மனிஷா கொய்ராலா முகம்! :)
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அதுவும் இப்ப தான் சாமீ! பாரீஸ் போயிருந்த போது என் ஆருயிர் நண்பன் என்னை ஒழிச்சிக் கட்டறத்துக்குன்னே இந்த சிடி பரிசாகக் கொடுத்தான் போல. என்ன பண்ணுறது? அவனுக்காகவே முழுசும் பார்த்தேன் :)
ஏபி நாகராஜன் படம். சிவகுமாரை முருகனாவே பார்த்து பார்த்து, இளமையான கண்ணனாகப் பார்க்கும் போது...ஹூம்! :) பேசாம சூர்யாவைக் கண்ணனா நடிக்கச் சொன்னா என்னா? வாரணமாயிரம் எப்பப்பா ரிலீசு?
படத்தோட பேரு: ஸ்ரீ கிருஷ்ண லீலா! என் தோழனோட பேரு என்னா? :)
4. மிகவும் தாக்கிய தமிழ்ச் சினிமாசத்தியமா ரமணாவும் இல்ல! பாய்ஸூம் இல்ல! :)
ஜிரா சொன்ன
கல்யாண அகதிகள் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதைப் பார்த்த கால கட்டத்தில், படத்தின் முடிவைக் கண்டு அதிர்ந்தும் போயிருக்கேன்.
ஆனால் நினைவில் அடிக்கடி வந்து நிழலாடுவது இரண்டு படம். ஒன்னு
அபூர்வ ராகங்கள். இன்னொன்னு
மகாநதி. இரண்டுமே கட்டமைப்புகளை நாகரீகமாக உடைக்கும் படங்கள்.
தவமாய் தவமிருந்து = பெரிய ஹிட் இல்லை என்றாலும் என்னை மிகவும் பாதித்த படம். அப்பாவோ, பிள்ளையோ, நண்பனோ, ஒவ்வொரு மனிதனின் ஆசையிலும் ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால் வாழ்வின் மொத்த நியாயத்துக்கும்னும் தனியா ஒரு நியாயம் உண்டு. அதை ஓவர் சென்ட்டி போடாது, அழகாகக் காட்டும் படும்.
எந்த ஒரு ஊடகத்திலும் தனி மனிதச் சிந்தனை, பொது வாழ்க்கை மேம்பாடு என்ற இரண்டுமே உண்டு! பொதுவுக்கு அதிக முக்கியதுவம் அளிப்பது இயற்கை தான்! அதே நேரத்தில் தனிச் சிந்தனை மேம்பாட்டுக்கும் இன்னும் மெனக்கெட வேண்டியிருக்கு! ஆயிரம் தனிச் சிந்தனைகள் சேர்ந்து தான் ஒரு பொதுச் சிந்தனை அல்லவா!
ஆன்மீகப் பதிவுகள் எல்லாம் இந்தத் தனிச் சிந்தனை மேம்பாட்டை மையமாகக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. தவமாய் தவமிருந்தில் வரும் ராம லிங்கங்களின் பார்வைகள் இதனால் இன்னும் கெட்டிப்படும்!
ஆன்மீகம் பாதை காட்டத் தேவையில்லை! பார்வை காட்டினாலே போதும்!
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச் சினிமா-அரசியல் சம்பவம்?
குஷ்பு ஒரு கருத்து சொல்ல, உலக உத்தமர்கள் எல்லாம் தமிழ்ப் பண்பாடு காத்திட பொங்கி எழுந்த நிகழ்ச்சி தான்! இவர்கள் எல்லாம் பதிவுலகம் வந்தா, அடுத்த கட்டத்துக்கு ஈசியாப் போகலாமோ? :)
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
இந்தக் கொஸ்டின் சாய்சில் விடப்படுகிறது! :)
தசாவதாரம் படத்தில் பூவராகவன் இறக்கும் போது, கடல் நீர் போல மிதப்பது தெரிந்தாலும், அது நீர் அல்ல, காற்று என்பதைக் கேட்டு அசந்து போனேன். சின்னச் சின்னக் காமிரா டெக்னிக்குகள் ரொம்ப பிடிக்கும்! அலை பாயுதே படத்தில் காதல் சடுகுடு பாட்டில், காமிரா அப்படியே ஏறி இறங்கி டான்ஸ் ஆடும். இது போலச் சின்னச் சின்ன பார்வை!
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?யூ மீன் கிசு-கிசு? :)
குமுதம்-ல லைட்ஸ்-ஆன் தானே? விகடன்-ல ஒன்னும் இல்லையா?
MSV-இன் விகடன் தொடர் வாசிச்சி இருக்கேன். வைரமுத்து கட்டுரைகள் படித்தது உண்டு. ஒரு நடிகையின் கதை படிப்பதற்காகவே Id ஓப்பன் பண்ணதும் உண்டு!:)
ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்-ன்னு ஒருத்தர் தமிழ்ச் சினிமா behind the scenes எல்லாம் எழுதுவாரு! அரிய புகைப்படங்கள் எல்லாம் இருக்கும். சேமிச்சி வச்சிக்குவேன்! அவர் எழுதிய புத்தகம் "சாதனை படைத்த தமிழ் சினிமா வரலாறு", கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று!
7.தமிழ்ச் சினிமா இசை?இதுக்குத் தனியா ஒரு தொடர் விளையாட்டு தான் போடணும் நீங்க!
இல்லீன்னா றேடியோஸ்பதி, வீடியோஸ்பதி, வனஸ்பதிக்குப் போங்க! இசை இன்பம் வலைப்பூவில் சினிமா இசை இப்போது குறைந்து விட்டது. இன்னும் வரணும்!
இசை அமைப்பாளர்கள் MSV, ராஜா, ரஹ்மான் இவர்கள் எல்லாம் ஒவ்வொரு மைல்கல்! அம்புட்டுத் தான்! அதுக்கு மேல அவர்கள் இல்லீன்னா ஒன்னுமே இல்ல, திரையிசையே ததிகணத்தோம் போட்டிருக்கும்-னு பேசறது எல்லாம்....
இசை என்னும் இன்பமயமான மதுவுடன் கூடவே வரும் போதை போலத் தான்!
மொத்தத்தில்
* பாடல் வரிகளை ஆத்மாவாக வைத்த இசைக்கு MSV.
* இசைக்குப் பாட்டை வைத்த இசைக்கு இளையராஜா.
* இசைக்கு இசையையே வச்சவரு ரஹ்மான்.
திரையிசையில் இப்பவெல்லாம் காலத்தால் அழியாத கானங்கள் வருவதில்லை! வெறும் இரைச்சல் தான் அதிகம் என்பது ஒரு சிலர் கருத்து! ஆனால் ஒப்புக் கொள்ள முடியாது! நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய், அற்றைத் திங்கள் வானிடம், அல்லிச் செண்டோ நீரிடம் போன்ற பாடல்கள் வராமலா போகிறது?
இப்போ கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா-ன்னு பாட்டு வந்தா, அப்போ நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானூங்கோ பாட்டு வந்தது.
இரைச்சலும் இசைக்குத் தேவை! இரைச்சல் மட்டுமே இசையாகிப் போகாமல் பார்த்துக் கொள்வது இயக்குனர் கிட்ட தான் இருக்கு. ஷங்கர் படங்களுக்கு மட்டும் எப்படி வைரமுத்து பாட்டும் கொடுக்காரு? ரஹ்மான் இசையும் கொடுக்காரு?
சுருக்கமாச் சொல்லணும்-னா, MSV, ராஜாவுக்கு இருந்த இயக்குனர்கள் இப்போ இல்லை! அம்புட்டு தான்! :)
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இசைக்கு மொழி கிடையாது-ன்னு சொல்லுறாங்களே! சினிமாவுக்கும் அப்படித் தானுங்களே? :)
தெலுங்கில்
கோதாவரி நான் இன்றும் அசை போடும் படம். ஹிந்தியில்
தேவதாஸ் (ஷாருக்),
தாரே ஜமீன் பர். மலையாளத்தில் சில படம் சொல்லுவேன்! அடிக்க வருவீங்க! புரசைவாக்கம் மோட்சம் தியேட்டர் பக்கத்திலேயே இருக்கும் போது, நான் என்ன செய்வதாம்? :)
பை தி வே,
லயனம் என்கிற படம் பார்த்து இருக்கீங்களா? சில்க் ஸிமிதாவின் "நடிப்பை" அதில் பார்க்கலாம்!
உலகத் தரம் வாய்ந்த படமெல்லாம் நீங்க கப்பியைத் தான் கேக்கோணும்!
எனக்கு மியூசிக்கல் ரொம்ப பிடிக்கும்.
Singing in the Rain எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்! உங்க வீட்டுக்கு வந்தா, இந்தப் படமோ இல்லை
The Chicago - இரண்டில் ஒன்னு போட்டு விட்டீங்கன்னா போதும், ரொம்ப சாப்பாடு எல்லாம் கேட்டு தொந்திரவு செய்ய மாட்டேன்-ன்னு மட்டும் வாக்குமூலம் கொடுக்கறேன்! :)
Love in the time of Cholera! அருமையான காதல் ப(பா)டம்! Garcia Márquez அவர்களின் நாவலை முதலில் திரைக்குக் கொண்டு வந்த படம்! பாடகி ஷகிரா நடிக்கவும் இருந்தார். ஆனால் ஒரு நிர்வாணக் காட்சி இருந்ததால் ஒதுங்கி விட்டார்!
காதலைக் காலரா நோய்க்கு ஒப்பிடும் துணிவு, பப்ளிக்கா இங்க யாருக்காச்சும் வருமா? கணவனின் இறுதிச் சடங்குகள் முடிந்த கையோடு 50 வருடப் பழைய டெலிகிராம் பையன் முன்னே தோன்றுகிறான்; எத்தனை வருஷம் காத்திருக்க முடியும் காதலுக்கு? ஒரு அம்பது வருஷம்? அது வரை பெண்களோடு ஒப்புக்குச் சல்லாபம். மற்றபடி அவனுக்குக் காதல் தேடும் உள்ளம்.
அவன் காமுகனா? காதலனா?
9. தமிழ்ச் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச் சினிமா மேம்பட அது உதவுமா?அட, என்ன இப்பிடிக் கேட்டுப்புட்டீங்க? அடுக்குமா இது?
எனக்கு வெட்டிப்பையல் தெரியும்
எனக்கு திவ்யா தெரியும்
எனக்கு ஜிரா தெரியும்
எனக்கு ராயல் ராம் தெரியும்
எனக்கு சீவீஆர் தெரியும்
எனக்கு அருட்பெருங்கோ தெரியும்
எனக்கு பாஸ்டன் பாலா தெரியும்
எனக்கு குசும்பன் தெரியும்
எனக்கு கோவி கண்ணன் கூடத் தெரியும்!
இப்படி வருங்கால இயக்குனர்கள், திரைக்கதையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கவிஞர்கள், திரைத் தொகுப்பாளர்கள், நகைச்சுவை வல்லுநர்கள் என்று இத்தனை பேரின் அறிமுகம் இருக்கும் போது, சேச்சே...இப்படிக் கேக்கலாமுங்களா? :)
எனக்கு கேஆரெஸ் கூடத் தெரியும்! தேவர் பிலிம்ஸ் மாதிரி கேஆரெஸ் பிலிம்ஸ்! யானைகளைத் தேடும் பணியில் இருக்கேன்!
தமிழ்த் திரையின் அடுத்த கட்டம் ஆன்மீகச் சினிமா தான்! தலைவர் கால்ஷீட் கூட 2020க்கு இப்பவே கிடைச்சாச்சி! :)
10. தமிழ்ச் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
* இதுவும் கடந்து போகும்! மசாலா என்பது ஒரு சில பிரியாணிப் படங்களுக்கு மட்டுமே என்று ஆகும்!எப்பமே பரியாணி தின்ன முடியுங்களா?
எப்பமே ஆன்மீகப் பதிவு படிக்க முடியுங்களா என்ற கேள்வியில் உள்ள அதே நியாயம் தானே இதிலும்? :)
நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் மின்னிடுகிறார்கள். சேரன் அவர்களுள் ஒருவர். சுசி கணேசன் இன்னொருவர். விக்ரம், சூர்யா இருவரும் எல்லாம் முடிந்தது என்று ஒதுங்காமல், இன்னும் இன்னும் நிறைய செய்ய வேண்டும்!
* இன்றைய தமிழ்த் திரைக்கு எல்லாம் வாய்த்தும், ஆரோக்யமான போட்டி போட்டு, நடிப்பை வெளிக் கொணரவல்ல நல்ல இயக்குனர்கள் வாய்க்கவில்லையோ?*
பெண்களுக்கு ஏன் இப்போதெல்லாம் திரையுலகில் தனியான தனித்துவம் இல்லை?பெண்ணுரிமைக் கொடி பறக்காத காலங்களில் கூட பத்மினி என்றாலோ, பானுமதி என்றாலோ, சரிதா என்றாலோ.....ஒரு தகைமை இருந்ததே! இன்று அது எங்கே?
சில பெண் நடிகர்கள் விலகிக் கொண்டாலும், தங்கள் முத்திரைப் பதிப்புகளை இன்னும் முன்னெடுத்துச் செல்ல உதவ வேண்டும்!
பெண்கள் மனது வைத்தால், தமிழ்த் திரையின் மசாலாவை மாற்ற முடியும்! முடியும்! முடியும்!
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக் கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
பிரிக்க முடியாதது என்னவோ? = தமிழும் - சுவையும்! அட அதைக் கூட அரசியல்-ல பிரிச்சிறலாம்!
ஆனா பிரிக்கவே முடியாதது, தமிழும் - சினிமாவும்!
முத்தமிழ்-ன்னா அது = இயல், இசை, சினிமா!
எல்லாரும் பதிவு போட்டாச்சி! யாரய்யா கூப்பிட?
மாலன்
சாரு நிவேதிதா
அண்ணா கண்ணன்
வாசந்தி
கனிமொழி
சரி...சினிமாவை மாறுபட்ட கோணத்தில் பார்க்க வல்ல இருவரை அழைக்கிறேன்! - இவிங்க இப்ப தான் ஒரு தொடர் ஆடி முடிச்சாங்க! அதுக்குள்ள இன்னொன்னு!
மதுமிதா அக்கா &
கொல்கத்தா நிர்மலா - முன்னாள் டீச்சர்
பி.கு:சரி...ஏன் புகழ் பெற்ற நாவல்களைத் தழுவி அதிக தமிழ்ப் படங்கள் எடுப்பதில்லை? இல்லை வெற்றி அடைவதில்லை?பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்களுக்குத் தான் இந்த கதியா?
மோக முள், இரும்புக் குதிரைகள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், என் இனிய இயந்திரா (இப்போ எந்திரன்-ன்னு வரப் போகுது?)...இதெல்லாம்?
மக்கள் அதிகம் வாசித்த நாவல்கள் தானே! எடுத்தா ஓடாதா? ஹாலிவுட் ஹிட்டான நாவல்களை எல்லம் படமாக்கிக் கொழிக்கும் போது, கோலிவுட் மட்டும் கோலி விளையாடிக் கொண்டே இருப்பதுக்கு காரணம் ஏனோ? நல்ல கதைகளுக்குப் பஞ்சமே இல்லாமல் தமிழ் நாவல்கள் எக்கச்சக்கமா இருக்கே!
உ.கு:ஏன் இப்ப எல்லாம் ஏபி நாகராஜன் டைப் ஆன்மீகப் படங்களே வருவதில்லை? வந்தால் ஓடாதா?அதெல்லாம் ஹரிதாஸ் காலம்-பா ன்னு சொன்ன போது, ஒரு கந்தன் கருணை ஓடவில்லையா? தேவர் படம் ஓடவில்லையா? தாய் மூகாம்பிகை ஓடவில்லையா?
அதுக்காக இராம நாராயணன் மாதிரி படம் எடுக்கச் சொல்லலை! குஷ்பு சொன்ன போது மட்டும் கலாச்சாரம் பேசினோமே? தமிழ்க் கலை பண்பாட்டுப் பொக்கிஷங்களை எல்லாம் இன்றைய மக்கள் ரசனைக்கு ஏற்றவாறு தருவார்கள் யார்?
சரி, எனக்கு நம்மாழ்வார்-இராமானுசரை வச்சிப் படம் எடுக்க ஆசை! பதிவர்களில் யாரைக் கண்ணனா போடலாம்? யாரை இராமானுசரா போடலாம்? யாரைக் குலோத்துங்க சோழனா போடலாம்...சொல்லுங்க பார்ப்போம்! நாரதர் வேசம் ஏற்கனவே ஒருவர் துண்டு போட்டாச்சி :))
சுபம்!