முந்தைய பகுதி
இங்கே!சும்மா ஒரு எடுத்துக்காட்டு! பழனி கோவில் வருமானம் எவ்வளவு இருக்கும்-னு நினைக்கறீங்க?
சுமார் நாற்பது கோடி!நாடாளுமன்ற உறுப்பினர் ஒருத்தருக்கு தொகுதி மேம்பாட்டுக்குன்னு செலவழிக்க மத்திய அரசு ஒதுக்கும் தொகை = ஆளுக்கு ஒரு கோடி!
அப்படின்னா பழனி ஆலயம் நாப்பது தொகுதிக்குச் சமானம்! இம்புட்டு மதிப்பு இருக்கும் முருகப் பெருமானின் கதி என்ன? சொல்லவே அடியேன் நாக்கூசுகிறது!
போலியோ அட்டாக் வந்து, கால்கள் குச்சி போல சூம்பிப் போன நிலையில், பெருமான் இருக்கிறானாம். நான் சொல்லலை! அரசாங்கத்தின் பழனிக் கமிட்டியில் உள்ள ஒரு கெமிக்கல் எஞ்சினீயர் சொல்றாரு!
முருகனின் கோலத்தைக் கிட்டக்க போயிப் பார்த்துவிட்டு வாய்விட்டு அழுதாராம்! அப்புறம்
இங்கிட்டுப் போய் படிங்க. டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு...முந்து முந்து முருகவேள் முந்து! எங்கே முந்தறது?
அதான் நாப்பது கோடிக்குச் சொந்தக்காரனாச்சே-ப்பா? நல்லாக் கவனிப்பாங்களே!
உம்..உம்...கவனிக்கிறாங்க தான்! முருகனைத் தவிர மற்ற எல்லாத்தையும்!
இதே நாப்பது கோடி மதிப்புள்ள ஒரு தனியார் கம்பெனியில், அசெம்ப்ளி லைனில் - ப்ரேக் பொருத்தும் கருவி வீக்கா இருக்கு!
மணிக்கு அறுபது யூனிட் போட்டாகணும், இருபது தான் போட முடியுதுன்னா - இந்தப் பிரச்சனை குறைஞ்ச பட்சம் எவ்வளவு நாள் தீர்க்கப்படாம இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் இருபது வருடம்??? :-(
எல்லாருக்கும் பழனியில் பிரச்சனை இருக்கு-ன்னு தெரியும்! ஆனா தீர்வு மட்டும் ஏன் தேட மாட்டறாங்க?
காரணம்: அவங்க அவங்க முன்னுரிமை வேற வேற!* நிர்வாகத்தின் முன்னுரிமை: பொருள் ஈட்டுதல், ஈட்டிய பொருளை அரசு(?) கஜானாவில் சேர்த்தல்.
* பக்தர்களின் முன்னுரிமை: தங்களுடைய வேண்டுதல் மட்டுமே! குடம் குடமாய் பாலாபிஷேகம்.
அதான்
சென்ற பதிவில் சொன்னேன். பக்தர்கள் பங்கு=40%, நிர்வாகத்தின் பங்கு=60%; சென்ற பதிவில் நம்மால் ஆன சிறு சிறு சீர்திருத்தங்கள், மாற்றங்களைப் பார்த்தோம்.
இன்னிக்கி துறை சார்ந்த மாற்றங்கள் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.
ஆகமங்கள்: கோயில்ல இருக்கும் சிலையின் நீள-அகலங்கள், மற்றும் அதன் தன்மைக்கு ஏற்ப, இத்தனை குடம் நீராட்டு, இவ்வளவு முறை நீராட்டு என்பது நியமம்! தைலக் காப்பு செய்தல், விக்ரக சேதாரங்களைக் குறைக்கும்! (wear & tear)
பக்தர்கள்: அவன் ஒரு குடம் கொடுத்தான். நாமும் ஒரு குடமாச்சும் குடுத்து வேண்டிக்குவோம். சரி போட்டிக்காக எல்லாம் வேணாம்! நம்ம கஷ்டமெல்லாம் தீர அவனைக் குளிரக் குளிரக் குளிப்பாட்டி மகிழ்வோம்! - இப்படி ஓவராக் குளிப்பாட்டினா அவன் மகிழ்வானா? ஐயோ! அதை யோசிக்கலையே!
நிர்வாகம்: கோயிலுக்கு வருவாய் சேர்க்கணும்-னா புதுப்புது வழியில் திட்டங்கள் உருவாக்கணுமாம்! பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வதில் குறியா இருக்காய்ங்க! இந்த வீக்னஸ் தான் நமக்கு டிமாண்டு! புதுசா புதுசா திட்டம் போடுவோமா?
1. AFA = Abishekam For All = Rs 500/- only!
2. அ.ஆ. = அபிடேகம்-ஆறுமுகம் = Rs. 100/- onlyஅச்சோ...இதனால் மூலவர் சிலை சேதாரப்பட்டாலும் படலாம்! ஆகமத்தில் சொல்லி இருக்கே! ஆறு கால வழிபாட்டு - வெறும் ஆறாறு (6x6) குடம் முழுக்காட்டுன்னு...
யோவ், அதெல்லாம் ஒருத்தனுக்கும் புரியாது! ஒரு G.O. போட்டாப் போச்சு! தெரிஞ்ச அர்ச்சகர்கள் கூட எதிர்க்க மாட்டாங்க! அவங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துருவோம்!
நாம என்ன கொலையா பண்ணுறோம்? சாமிக்கு அபிசேகம் தானயா பண்ணுறோம்? அப்படியே வருவாயைப் பெருக்கிப் "பல நல்ல" விசயங்களுக்குப் பயன்படுத்தப் போறோம்! வந்துட்டாங்க பெருசா!....போயி ஆவுற வேலயப் பாருங்கப்பா!
குருவாய்
"வருவாய்" அருள்வாய் குகனே-ன்னு, வருவாயைத் தான் அருளச் சொல்லி இருக்காரு! தெரியுமில்ல? :-)
இப்படித் தான் பொதுவா எல்லா வருவாய் பெருக்கும் திட்டங்களும் ஆரம்பிக்குது! வருவாயைப் பெருக்க வேண்டாம்-னு சொல்லலை!
ஆனா at the cost of what? எதுக்கு முன்னுரிமை? அதை யோசிக்க மறுப்பது ஏன்?
*
ஆலயங்கள் இறைவனுக்கும் பக்தனுக்கும் பாலமாக இருக்க ஏற்பட்டவையா?
** இல்லை சராசரி பக்தனுக்கு ரெண்டு லட்டு ஃப்ரீயாக் கிடைக்கட்டுமே-ன்னு "ஒரு நல்ல எண்ணத்துல", தனவான்களைக் தனியாக் கவனிக்க ஏற்பட்டவையா? - "கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்?" என்று பாரதி கேட்டது தான் நினைவுக்கு வருது!
இதுக்கெல்லாம் பக்தர்களைப் பெருசாக் குறை சொல்ல முடியாது!
பலரும் ஆன்மிக வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தான்! அவர்களுக்குப் படிப்படியாக ஆன்மீகச் சிந்தனைகள், மன அமைதி, பண்பாடு இவற்றை எல்லாம் ஊட்டத் தானே ஆலயங்கள் தோன்றின!
ஆ+லயம் = ஆன்மா லயிக்கும் இடம்!ஹிஹி! லயிப்பதா? சிரிக்கிறீங்களா? ஆனா அது தான் உண்மை! அதான் நிர்வாகத்தின் பங்கு 60%! வாங்க, பார்க்கலாம்!
1. முதலில் ஆலய நிர்வாகம், கொள்கை என்ன என்பதை வரையறுத்துக் கொள்ளட்டும்.
ஆலயங்களின் முழுமுதல் நோக்கம் (Primary Objective): இறைவனுக்கும்-பக்தனுக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே!
இதெல்லாம் பேசத் தான் நல்லா இருக்கும், நடைமுறைக்குச் சாத்தியமில்லை-ன்னு சொல்லலாம்!
வாடிக்கையாளர் திருப்தியே ஒரு நிறுவனத்தின் முதல் நோக்கம்-ன்னு ஒரு இயக்கம் வந்த போது, நிறைய பேர் இதையே தான் சொன்னாங்க! ஆனா இன்னிக்கி நிலைமை என்ன? வாடிக்கையாளர்களை வெளிப்படையாக யாரும் பகைச்சிக்க முடியாது!
அதே மாற்றம் தான், ஆலயங்களுக்கும் வர வேண்டும்!
ஆலயத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த முழுமுதல் நோக்கத்துடன் ஒத்துப் போகிறதா என்பதைச் சரி பார்த்தாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்! (All actions should be aligned with this objective)
2. அரசின்
இந்து அறநிலையத் துறை (HRCE), முதலில் ஒரு தன்னாட்சி நிறுவனமாக மாற வேண்டும்! IIT, IIM, ISRO என்று இருப்பது போல் HRCE.
இதில் அரசின் பங்கு கொள்கை முடிவுகள் மட்டுமே!
எப்படி ஒரு கம்பெனிக்கு Charter, Vision Statement, Mission, Quality Policy என்று இருக்கிறதோ, அதே போல் HRCE-க்கும் தேவை.
முக்கியமான ஒன்று: கூடுமான வரை HRCE-இன் நிர்வாக மட்டத்தில் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தவர்கள், அரசியல்வாதிகள் இல்லாமல் இருத்தல் நலம்.
அதே போல் ஆகம வல்லுநர், பொருளாதார வல்லுநர் - இருவரும் அதிகாரக் குழுவில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்!
ஆங்காங்கு உள்ள கோயில்களில்
தன்னார்வக் கண்காணிப்பு குழுக்கள் அமையுங்கள்.
இல்லத் தலைவிகள், வணிகர், மருத்துவர் என்று சமுதாயத்தின் ஒவ்வொரு தட்டிலும் இருந்தும் ஒருவர் இருப்பது நல்லது. குறிப்பாக கல்லூரி மாணவ/மாணவியர் இருக்க வேண்டும்! இளங்கன்று பயமறியாமல் பட்டதைச் சொல்லும்!
3. அனைத்து ஆலயங்களின் பணித் தகவல்கள், அசையாச் சொத்துக்கள், நிலங்கள் ஆவணப்படுத்தி, நடைமுறையும் படுத்த வேண்டும்! தரவுத் தளத்தில் (database) சேமிக்கப்பட வேண்டும்!
ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு அறிக்கையை வெளிப்படையாகச் சமர்பிக்க வேண்டும்! அனைவர் பார்வையிலும் படும்படி இருக்க வேண்டும்!
ஆலயச் சொத்தை அபகரிப்போர், குத்தகை/வாடகை தராதவர்களின் பெயர்கள்-புகைப்படத்தைக் கட்டம் கட்டி, ஆலய வாசலில் பெரிதாக வைக்க வேண்டும்! அட, நன்கொடை கொடுத்தவங்க பேரை வைக்கறீங்க! புன்கொடை கொடுத்தவங்க பேரையும் பெருசா வைங்கடே! மானம் போகட்டும் :-)
4.
சாதி, மதம், பணம் - இந்த வேறுபாடுகள் ஆலயங்களில் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்!
* சாதி=கிட்டத்தட்ட ஒழித்தாகி விட்டது! இதுக்கு ஒரு பெரியார் வர வேண்டி இருந்தது!
* பணம்=இந்தப் பேதத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வருவாரா?
தன்னலமில்லாத ஆன்ம பலத்தால், கோவிலில் சாதிக் கொடுமையை ஒழித்துத் தள்ளினார் பெரியார்! பயமே பாதி வேலையைச் செய்தது! மீதியைத் தான் சட்டங்கள் செய்தன!
ஆலயத்தில் சாதி வேறுபாடு பாக்குறாங்க-ன்னா பாய்ந்தோடி வராங்க-ல்ல அரசியல் தலைவர்கள்? பண வேறுபாடு பாக்குறாங்க-ன்னா மட்டும் ஏன் வருவதில்லை?சாதி-சாதி வேறுபாடு எவ்வளவு கொடுமையோ, அதே போல் தான் ஆலயத்தில் பணம்-பண வேறுபாடு!
For whoever it is, Sorry! No Compromise! Zero Tolerance!!
5.
கூட்டக் கட்டுப்பாடு மேலாண்மை (Crowd Management) மிகவும் முக்கியமான ஒன்று! அட அதுக்குத் தானேப்பா ஸ்பெஷல் டிக்கெட் போடறோம்-னு எல்லாம் சொல்லாதீங்க!
Manage the crowd, Dont exploit the crowd!பெரிய ஆலயங்களில் தான் இந்தப் பிரச்சனை? அதான் வருவாய் வருதே! Management Consultant-களை அழைத்துப் பேசித் தீர்வு காணுங்களேன். கருவறைக்குள் ஒரே நேரத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்று முதலில் நிர்ணயம் செய்யுங்கள்! (Maximum Occupancy). நெரிசல்/விபத்து-ன்னா முதலில் HRCE தலைவர் ராஜினாமா செய்யட்டும்!
Crowd Managementக்கு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்! முன்பெல்லாம் திருமலை-திருப்பதியில் காத்திருப்பு நேரம் எவ்வளவு? தர்ம தரிசனம்னா 24-36 மணி நேரம்! இன்னிக்கி அப்படி இல்லை! இது எப்படிச் சாத்தியம் ஆகியது?
தேவஸ்தானம் முதலில் பக்தர்களுக்கு வசதியா சேர் எல்லாம் போட்டு, கொட்டாய்/ஷெட் கட்டியது. ஆனா IIM-A மாணவர்கள் தங்கள் பிராஜெக்டில், "
ஷெட் கட்டுவதால் நெரிசல் வேணும்னா குறையும்! காத்திருப்பு நேரம் குறையாது! பிரச்சனையின் மூலத்தைப் பிடிங்க-ன்னு" சொன்னாங்க!
நோய் நாடி-நோய் முதல் நாடி-ன்னு பின்பு வந்தது தான் இந்த சுதர்சனம்-பார் கோட்(Bar Code)-கைப் பட்டைத் திட்டம்! இன்னிக்கி வெறுமனே கூண்டுக்குள் அடைஞ்சி கிடக்காம, திருமலையில் மற்ற இடங்களான பாபவிநாசம் நீர்வீழ்ச்சி, ஆகாச கங்கை, அனந்தாழ்வான் நந்தவனம், அதிசயக் கல்வளைவு-ன்னு பல இடங்களுக்குப் போய் வரமுடியுதே! பக்கத்து மாநிலத்தை பஸ் டிக்கெட் விலையேற்றத்துக்கு மட்டும் உதாரணம் காட்டாதீங்க! கூட்ட மேலாண்மைக்கும் அங்கிருந்து கொஞ்சம் பாடம் படிக்கலாம்!
6.
சிறப்புத் தரிசனத் திட்டத்தை அடியோடு ஒழித்துக் கட்டுங்கள்!ஞாபகம் வச்சிக்குங்க பக்தர்களே! -
* ஒன்னு "தர்ம" தரிசனம்!
* இன்னொன்னு "அதர்ம" தரிசனம்!
நீங்க எந்த தரிசனம் பார்க்க விரும்புறீங்க?பணம் திரட்ட வேறு பல நல்ல வழிகள் உள்ளன! நல்ல மேலாண்மை, முதலீட்டு நிபுணர்களை அணுகுங்கள்! உங்களை கையெடுத்துக் கேட்டுக் கொள்கிறேன்! பக்தர்களை விட்டு விடுங்கள்!
இறைவன் பிரம்மாதி தேவர்க்கு அரியவன்! பத்துடை அடியவர்க்கு எளியவன்! - இது தான் அடிப்படை! - சிறப்புத் தரிசனம்-னு சொல்லி அதைத் தூக்கிப் போட்டு உடைக்கறீங்க! அடிப்படையை ஆட்டிப்புட்டு, பணம் திரட்டி வைரக் கீரீடம் செய்யப் போறீங்களா? சொல்லுங்கப்பா!
அட, வேளாங்கண்ணியில கூட்டம் இல்லியா? அங்க சிறப்புத் தரிசனம் இருக்கா என்ன? ஒப்பிட்டுப் பேசறேன்-னு தப்பா நினைக்காதீங்க! நல்லதை எங்கிருந்து வேணும்னாலும் கத்துக்கலாம்!
எனக்குத் தெரிஞ்சி, ஷிர்டி சாயிபாபா, பிர்லா மந்திர், சபரிமலை இங்கெல்லாம் சிறப்புத் தரிசனம் கிடையாது! இங்க போனா மட்டும் பிசியோ பிசியான நீங்க, எப்படி லைன்ல நிக்கறீங்க? கேரளக் கோவில்கள் பலவற்றில் சிறப்புத் தரிசனமே கிடையாது! கட்டுப் பெட்டித்தனங்கள் நிறைய இருந்தாலும், இந்த ஒன்றுக்காகவே அவிங்கள பாராட்டலாம்!
முதியோர், ஊனமுற்றோர், நோயாளிகள், கைக்குழந்தைகள் - இவர்கள் மட்டும் தான் விதிவிலக்கு! ஒரு நாளைக்கு நான்கு வேளை - இவர்களுக்கு மட்டும் தரிசன நேரம் ஒதுக்கிக் கொடுங்கள். போதும்!
ஐஸ்வர்யா ராய், அம்பானி எல்லாம் நிப்பாங்களா? அப்படியே நின்னாலும் கூட்டம் சும்மா விடுமா-ன்னு எல்லாம் கேட்கறீங்களா? வெளிநாட்டுக்குப் போனாங்கன்னா அவங்க ரோமாபுரியில் நிக்கலை? இங்கேயும் நிப்பாங்க!
இல்லீன்னா இருக்கவே இருக்கு சில அதிகாலைச் சேவைகள்! முன்பதிவு செய்துட்டு அந்த நாளுக்குக் காத்திருந்து வழிபடட்டுமே! அவங்க நன்கொடை கொடுத்தாங்கன்னா, நன்றி சொல்லி வாங்கிக்குங்க! மாலை போட்டு மரியாதை செய்யுங்க போதும்! மேல்விழுந்து கொண்டு பக்தர்கள் வரிசையை நிறுத்தறது எல்லாம் டூ மச்!
எறிபத்த நாயனார் மட்டும் இப்ப இருந்தாரு...வாய் பேசாது! கை மழு தான் பேசும்! :-)
7.
அனைத்து மதத்தினரையும் சேவிக்க உள்ளே விடுங்கள்! ஒரு காலத்தில் இருந்த பகைமை உணர்ச்சி இப்ப இல்லை! நீங்க சேவிக்க விட்டுட்டீங்க-ன்னு உடனே யாரும் அப்படியே திரண்டு வரப் போவதில்லை! விருப்பப்பட்டவங்க தான் வரப் போறாங்க! வரட்டுமே! துலுக்கா நாச்சியார் வரலையா?
இப்ப மட்டும் சாதாரண உடையில் வந்தா உங்களுக்குத் தெரியப் போவுதா என்ன? வெளிநாட்டவர்கள்/பிரபலங்கள் என்றால் தானே இந்தப் பிரச்சனை! எதுக்கு வீண் பழியைச் சுமந்து கொள்கிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை எந்த ஆகமத்திலும் இந்தத் தடை இல்லை! அப்படி இருந்தாச் சொல்லுங்க! தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எப்போதும் இருக்கு! கோவிலுக்குப் பாதுகாப்பு அவசியம்! அதை பலப்படுத்துங்கள்! அதுவே போதும்!
8.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்! பயிற்சியும் கல்வித் தகுதியுமே போதும்!
வாரிசுமுறை எல்லாம் தேவையே இல்லை! பெரும்பாலான வாரிசுகளே ஏழ்மை நிலை கருதி, வேண்டாம் என்று ஒடி விடுகின்றன! ஆக விருப்பமும், பயிற்சியும் தான் இன்றைய தேவை! இது பெரும் கோயில்களுக்கு மட்டும் இல்லை! கருப்பண்ணசாமி, பாடிகாட் முனீஸ்வரன், பேச்சியம்மன் போன்ற நாட்டார் ஆலயங்களில் கூடச் சாதிவழி அர்ச்சகர் முறை தேவையற்றது!
வைணவ ஆகமத்தில் முக்கியமான ஆகமம் ஒன்னு இருக்கு! பாஞ்சராத்ர ஆகமம்-ன்னு பேரு! அதுல அர்ச்சகர்கள் சாதி வழி வரத் தேவையில்லை-ன்னு சொல்லியிருக்கு! அதை ஒட்டித் தான் திருவரங்கம் முதலான பல கோவில்களை, அன்னிக்கே ஸ்டிரிக்ட்டான வேறு ஆகமத்தில் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்துக்கு மாற்றினார் இராமானுசர்! பல எதிர்ப்புகளையும் மீறிச் செய்து காட்டினார்!
இன்னிக்கும் திருவரங்கம், திருக்கோவிலூர், வானமாமலை, திருக்குறுங்குடி-ன்னு பல ஆலயங்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் இருக்காங்க! சுமார் முந்நூறு வருசமா வழி வழியா வராங்க! இதற்காகப் பல நிலைகளில் பயிற்சி தராங்க! ஆகமப் ப்ரவீனர்-னு பட்டமும் தராங்க!
ஏதோ அரசாங்கம் தான் இப்ப 2007ல சாதிச்சிட்டாங்க-ன்னு பேசிக்கறது எல்லாம் சும்மா! இன்னிக்கி அரசு அமைத்த குழுவில் சிறப்பு வழிகாட்டியே, திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர் தான்!
9.
அர்ச்சகர்களையும், இதர அரசுப் பணியாளர்கள் போலவே நடத்துங்கள்! அவர்களுக்கும் மாத வருமானம், பதவி உயர்வு, அகவிலைப்படி, பயிற்சி என்று ஒரு ஒழுங்கு முறைக்குள் (system) கொண்டு வாருங்கள்!
ஆலயங்களை வருமான அளவில் வகைப் பிரித்து, அதற்கு ஏற்றாற் போல் ஊதியம் நிர்ணயிக்காதீர்கள்! எப்படிக் கோவில்பட்டி கிளாஸ்-சி ஊழியருக்கும், கோயம்புத்தூர் கிளாஸ்-சி ஊழியருக்கும் அதே சம்பளமோ, அதே போல் தான் பரமக்குடி கோயில் அர்ச்சகருக்கும், பழனி கோயில் அர்ச்சகருக்கும்!
ஆலயச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தை, அனைத்து ஆலயப் பொது நிதி (common pool) ஆக்கி முதலீடு செய்யுங்கள்! TTD இப்படித் தான் செய்கிறது! ஆலோசனை கேளுங்கள்!
அர்ச்சகர்கள் மட்டும் இல்லை! அவர்களோடு, ஓதுவார்கள், அரையர்கள், நாதசுரம் மற்றும் இசைக் கலைஞர்கள், சிற்பிகள் - இவர்கள் எல்லாம் சிறப்புப் பணியாளர்கள் (Speciality Occupation); சமுதாயம் ஒதுங்கிக் கொள்ளும் வேலைகளை இவர்கள் துணிந்து செய்கிறார்கள்! மதித்து, கருணை காட்டுங்கள்!
10.
தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!
வைணவ ஆலயங்களில் இந்தப் பாகுபாடு பிரச்சனை இல்லை! பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார்! முதலில் தமிழ்க் குழு - பின்னர் பெருமாள் - அவர் பின்னால் வேத கோஷ்டி!
ஆழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வந்தது போல, நாயன்மார்களுக்குப் பின் எவரும் வராதது தான் சைவத்துக்கு ஒரு இழப்பு! அது காலத்தின் கொடுமை!!
ஒரு அரசாங்கம் சாதிக்க முடியாததை, ஆசாரியர்கள் சாதித்துக் காட்டினார்கள்!
நாதமுனியும், இராமானுசரும், தேசிகரும், மணவாள மாமுனிகளும் - இவர்களுக்கு எல்லாம் தமிழக அரசு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது!
11.
தமிழ் அர்ச்சனை பற்றிச் சென்ற பதிவிலேயே சொல்லி விட்டேன்!இறைவன் மொழியைக் கடந்தவன் தான்! எனக்கும் தெரியும்! ஆனால் பக்தன் மொழியைக் கடந்தவனா?
Again the objective is: பக்தனுக்கும் இறைவனுக்கும் பாலமாய் இருப்பது! தான் என்ன சொல்லி சங்கல்பம் செய்கிறோம் என்று பக்தனும் தெரிந்து கொள்வது தான் நல்லது!அவரவர்க்கு விருப்பமான மொழியில் வழிபட்டுக் கொள்ளட்டுமே-ன்னு சொல்றீங்களா? அதுவுஞ் சரி தான்! அவரவருக்கு விருப்பமான மொழி-ன்னு எப்படித் தெரிஞ்சிக்கறது?
இப்படிப் பொத்தாம் பொதுவாச் சொன்னீங்கனா நான் வேற மாதிரி வருவேன்!
வேணும்னா இப்படிப் பண்ணலாமா?அர்ச்சனையின் போது பேரு, நட்சத்திரம் கேக்கறாங்க-ல்ல? அப்படியே என்ன மொழியில் அர்ச்சனை செய்ய விரும்புறீங்க-ன்னு கேக்கலாம்!
* தமிழ்-னு சொன்னா தமிழ் அர்ச்சனை!
* உங்க இஷ்டம்-னு சொன்னாலும் தமிழ் அர்ச்சனை!
* வேறு ஏதாச்சும் மொழி குறிப்பிட்டுச் சொன்னா, தமிழ்நாட்டுல எங்க போறது? வடமொழி அர்ச்சனை செய்துடலாம்! என்ன சொல்றீங்க? :-)
அர்ச்சனை என்பது குணப்பெயர்களால் ஆன சொல்மாலை! அவ்வளவு தான்!தொன்று தொட்டு எல்லாம் இது வருவதில்லை! புதிய ஆலயங்களுக்கு புதிய அர்ச்சனைகள் இன்றும் வடமொழியில் எழுதப்படுகின்றன! அமெரிக்காவில் சங்கல்பம் செய்யும் போது அமெரிக்கா வர்ஷே, Missisippi-Missouri ஜீவ நதி சமீப ஸ்திதா-ன்னு சொல்லுறாங்களே! Missisippi எந்த மந்திர நூலில் உள்ளது? :-))
எனவே புனிதம் போயிடுமோ, மந்திர அதிர்வு கொறைஞ்சிடுமோ-ன்னு எல்லாம் ஓவராக் கற்பனை பண்ணிக்காதீங்க, ப்ளீஸ்!
வடமொழியை மட்டம் தட்டவோ, இல்லை கைத்தட்டல் பெற்றுக் கொள்ளவோ இதை சொல்லவில்லை! அடியேன் சுப்ரபாதப் பதிவுகள் போடுவதும் உங்களுக்குத் தெரியும்!
புருஷ சூக்தம், ஸ்ரீருத்ரம், செளந்தர்ய லஹரி - இதையெல்லாம் மாத்திப் பாடச் சொல்லும் ஏட்டிக்குப் போட்டி ஆசாமி நானில்லை! ஆனால் அர்ச்சனையின் நோக்கத்தை (தாத்பர்யத்தை) உணர்ந்து கொள்ளுங்கள்! அவ்வளவே!
12.
ஆலயத்தில் இறைவன் பூசனையோடு மட்டும் நின்று விடாது...
சமூக நல்லிணக்கம், மொழி வளர்ச்சி, இசை-பண்பாடு வளர்ச்சி, அருட் பேருரைகள், Counselling போன்ற நற்பணிகளைத் தன்னார்வக் குழுக்கள் உதவியுடன் செய்யத் திட்டம் தீட்டுங்கள்!
அன்னமாச்சார்யரின் தெலுங்குக் கீர்த்தனைகளை (கிட்டத்தட்ட 2003 பாடல்கள்), TTD digitize செய்து முடித்து விட்டது - ஒலி வடிவம் உட்பட! அடுத்து ஆழ்வார்களின் தமிழ்க் கீர்த்தனைகளைச் செய்யலாமா-ன்னு யோசிக்கறாங்களாம்! வாழ்க! வாழ்க!!
திருப்பதி அவங்க கிட்டயே இருக்கட்டும்! தமிழ்நாட்டுக்குத் திருப்பிக் கொடுத்துறாதீங்கப்பா! :-)
அப்படியே வேகமாகச் சில கூடாதவைகள் (Dont's):
1. கருவறை நுழைவு கூடாது!
Control Room - விஞ்ஞானிகள், Operation Theater - மருத்துவர்கள், கருவறை - சாதி வேறுபாடற்ற, பயின்ற, அந்த ஆலய அர்ச்சகர்கள் மட்டுமே! - வேறு எப்பேர்பட்ட பிஸ்தும் உள்ளே நுழைதல் ஒவ்வாது!
சில ஆலயங்கள் மட்டுமே (காசி விஸ்வநாதர் உட்பட) விதி விலக்கு! அங்கே கருவறை என்ற ஆகம அமைப்போ, மூர்த்தி-சேதன பிராணப் பிரதிஷ்டை என்ற முறையோ கிடையாது! இருந்திருந்தால் அங்கேயும் உள்ளே விட்டிருக்க மாட்டார்கள்!
அதன் பெயரே கருவறை - கர்ப்பக் கிருகம் - தாயின் கருவறையில் வசதிகள் கம்மியாத் தான் இருக்கும்! குறுகலாத் தான் இருக்கும்! ஒளி, காற்று இதெல்லாம் இருக்காது! குழந்தை பாவம், இடுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்கே-ன்னு விரிவாக்கம் செய்கிறோமா என்ன? அதே கான்செப்ட் தான் கருவறை! தனிப் பதிவில் சொல்கிறேன்! இங்கு விரிந்து விடும்!
உங்கள் நோக்கம் தரிசனமா? நுழைவா??நுழைந்தே தீருவேன் என்று அடம் பிடித்தால், விரைவில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேருங்கள்! Qualify and then Enter! :-)
2. மூலவரைப் படம் பிடித்தல், வீடியோ பிடித்தல்...கூடாது! சொன்னாக் கேட்டுக்குங்க!
படம் பிடித்தால் சக்தி கொறைஞ்சிடும் என்பதெல்லாம் டுபாக்கூர்! அப்படின்னா மறுப்பாளர்கள் தான் கோயிலுக்கு முதலில் வரணும்! வந்து சக்தியை எல்லாம் கொறைச்சிட்டுப் போயிடணும்! :-)
ஆகம ரீதியான கருவறைக்கு மட்டும் தான் இந்தக் கட்டுப்பாடு! காமிரா எல்லாம் இப்போ வந்தவை! ஆயிரம் ஆண்டுகளாக, ஓவியத்துக்குக் கூட இந்தக் கட்டுப்பாடு உண்டு என்பது தெரியுமா? அச்சு அசலாக அப்படியே வரைய மாட்டார்கள்! - ஏன்?
உருவம் கடந்த இறைவனை, கண நேரத்துக்கு உருவமுடன் காண்கிறோம்!
அருவமும், உருவமும் சேர்ந்து அருவுருவம் - கருவறை உருவை, உருவமாக "மட்டுமே" வீட்டிலும் கொண்டாந்து நம்ம ஏக போக இஷ்டத்துக்கும் நிலைநிறுத்தி விடக் கூடாது! அதான்! தனிப் பதிவில் சொல்கிறேன்!
திருமுகத்தை க்ளோசப் ஷாட் எடுத்துக்குங்க! DOF, Night Vision எல்லாம் கரெக்ட் செட்டிங் வச்சி எடுத்தீங்கனா, அதுவும் கருவறையின் இருட்டில் - பிச்சிக்கிட்டுப் போகாது? :-)
* கருவறையில் அமைதி பெற முயலுங்கள்!
* ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் வெளியே வைத்துக் கொள்ளலாம்!
ஏற்கனவே எடுத்திருந்தால் மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்! இனிச் செய்யாதீர்கள்! உற்சவரைப் படம் எடுக்க எவரும் தடை சொல்ல மாட்டார்கள்!
கருவறை உங்கள் பிறந்தநாள் பார்ட்டி நடக்கும் இடம் அல்ல!
இதையே நாசாவிலோ, இல்லை Imax Theater-இலோ செய்வீர்களா?
தஞ்சைப் பெரிய கோவில் உள்ளே இருக்கும் ஓவியக் கூடத்தில் கூட தொல்பொருள் துறை அனுமதிப்பதில்லை! இவன் யாரு கலையைப் படம் பிடிக்கத் தடை சொல்லுறது-ன்னு பேசறீங்களா?
அவ்ளோ பேசறவங்க, உங்க நினைவுத் திரையில் படம் பிடிச்சிக்கிட்டு வாங்களேன்!3. கருவறையில் தள்ளுமுள்ளு தேவையில்லை! அதட்டல் பேச்சுக்கள் வேண்டாம்! பக்தர்களை வரிசைப்படுத்த பல நல்ல வழிகள் இருக்கு! பணியாளருக்கு பயிற்சியில் சொல்லிக் கொடுங்கள்! பணியாளருக்கு (அர்ச்சகர் உட்பட) நடத்தை விதிகள் (code of conduct) உருவாகட்டும்! வீண் வழக்குகள், விவாதங்கள் நடத்தும் இடம், கருவறை கிடையாது! இதை இரு தரப்பும் உணர வேண்டும்!
இப்போ டப்பு மேட்டருக்கு ஒஸ்தானு!
நற்பணிகள் எல்லாம் நடைபெற வேண்டுமே? இத்தனைக்கும் பணம்?
1. தமிழக ஆலயங்களின் மொத்த நிலச்சொத்து (கணக்கில் வந்தவை மட்டும்) = 4,78,939 acres, 20,046 buildings and 33,627 sites
2. பத்து லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள ஆலயங்கள் = 153;
2-10 lakhs = 438; 1-2 lakhs = 3390
(நன்றி: http://www.hrce.tn.nic.in/)ஒரு பொது நிதியே (Common fund) அத்தனைக்கும் போதுமானது! நல்ல முதலீட்டு நிபுணர்கள் ஒன்னை ரெண்டாக்கித் தருவாங்க! வேணும்னா அம்பானியை HRCE நிர்வாகக் குழுவில் சேர்த்துக் கொண்டு, மரியாதையை எல்லாம் அங்கே செய்யுங்கள்! :-)
அரசே,
உன் செயல்பாட்டுக்கு கோயில் வருமானத்தில் கைவைக்க வேண்டாம்! முடிந்தால் இரயில்வே பட்ஜெட் தனியாகப் போடுவது போல், ஆலய பட்ஜெட் ஒன்றைத் தனியாகப் போடவும்!
பக்தர்களே!
மேலே சொன்ன நல்லது பல நடந்துச்சுன்னா, அப்போ உண்டியலில் பணம் போடுங்க! அது வரை போடாதீங்க! நீங்க போடும் பணம் முதலை வாய்க்குத் தான் போகும்!
நீங்க பொருளாக் கொடுங்க! சென்ற பதிவில் சொன்ன காசோலைத் திட்டத்தைக் கடைப்பிடியுங்க! போதும்!!
Coming back to the roots...
பெருமானின் திருவுள்ள உகப்பிற்குப் பக்தனைத் தயார் செய்வது தான் ஆலயத்தின் பணி!
பக்தனின் உகப்புக்காக, ஆகா-ஓகோ வசதிகள் செய்து தருகிறேன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு, முதலுக்கே மோசம் செய்தால்...
அடுத்த தலைமுறையில் நாத்திகத்தை நன்கு தழைக்கச் செய்த "பெரும் புண்ணியம்" தான் நமக்குக் கிட்டும்! :-)
மற்றை நம் காமங்கள் மாற்று, ஏல்-ஓர்-எம்பாவாய்!
Results of the Poll: