Sunday, April 22, 2007

துலுக்கா நாச்சியாரும், லுங்கி அலங்காரமும்! - 2

சுல்தானி பீவியின் விளையாட்டுப் பொருள் ஆனான் அல்லவா நம்ம பெருமாள்? ஆனால் இப்போது கதை மாறி அவன் வழக்கமாய் ஆடும் விளையாட்டை ஆடுகிறான்; பார்க்கலாமா? இதற்கு முந்தைய பாகம் இங்கே!

இராமானுசர் எவ்வளவு கேட்டும், விக்ரகத்தைத் தர மாட்டேன் என்று அடம் பிடித்தாள் சுல்தானி. சின்ன வயசுப் பெண் தானே!
அரசனுக்கோ தர்ம சங்கடம். தருகிறோம் என்று ஜம்பமாய் சொல்லி விட்டோமே! ஆசை வார்த்தைகள், வேறு பொம்மைகள் என்று காட்டினான் - எதற்கும் மசியவில்லை சுல்தானி. பெண்ணை மிரட்டினான்! உறுமினான்!

வேண்டாம் என்றார் உடையவர். "குழந்தே! சரி, நீ தர வேண்டாம். உன் கையிலேயே வைத்துக் கொள்! ஆனால் அதுவாய் என்னிடம் ஓடி வந்தால் நான் எடுத்துக் கொள்ளட்டுமா?"

"இந்தத் தாத்தாவுக்கு கிறுக்கு பிடித்து விட்டது போலும். வாப்பாவைக் கேட்டாலே மிரட்டி வாங்கிக் கொடுத்து விடுவார். பாவம் தாத்தா, நல்லா ஏமாறப் போகுது"
- சிரி சிரி என்று சிரித்துக் கொண்டாள். சரி சரி என்று தலை சரித்துக் கொண்டாள்!

இராமானுசர், இறைவனை மனதில் துதித்து, "என்ன திருவிளையாட்டோ இது! இருப்பிடம் ஏகுவீர் பெருமானே", என்று பிரார்த்தித்தார்.
தன் கருணை பொழியும் கண்களால், பெருமாளையே அன்புடன் பார்த்துக் கடாட்சித்து,
எந்தை வருக, ரகுநாயகா வருக, என்கண் வருக, எனது ஆருயிர் வருக!
வாரும் செல்வப் பிள்ளாய், வாரும் செல்வப் பிள்ளாய்...என்று அழைக்க....

nuja4

இராமானுசரின் மடியில் செல்வப் பிள்ளை

ஆ...என்ன அதிசயம்!
செல்வப் பிள்ளை விக்ரகம், அவள் மடியை விட்டு நீங்கி, சாவி கொடுத்த பொம்மை போல்,
சிறு சிறு அடியாய், குடு குடு நகர்ந்து, இராமானுசரின் கரங்களுக்குள் வந்து விட்டதே!

நன்றி மன்னா! குழந்தாய், நாங்க வருகிறோம்! - இராமானுசர் சொல்ல, அவருடன் கோஷ்டியும் கிளம்பி விட்டது! இது என்ன, கண் முன்னே கண் கட்டு வித்தையா? சபையில் எல்லாரும் வாயடைத்துப் போய் நிற்க, சுல்தானிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!

நீங்களே பாருங்கள் செல்வப் பிள்ளையை, அவன் திருமுகத்தை, அவன் பொம்மையாக இருந்து தேய்ந்து போன தழும்புகளை!

49704388.P1010092அன்று முதல் சுல்தானி, பித்துப் பிடித்தவள் போல் ஆகி விட்டாள்.
ஊண் இல்லை, உறக்கம் இல்லை! Teddy Bear-ஐக் கட்டியணைத்து உறங்க முடியவில்லை! பெற்றோர் என்னென்னவோ செய்து பார்த்தார்கள்!
அதை விட விசேடமான பொம்மைகள், ஆட்டம் போடும் பதுமைகள்! - ஹூம்...ஒன்றும் சரி வரவில்லை!
பார்த்தான் அரசன்; இராமானுசர் குழாத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டான்!

ஆனால் காலம் கடந்து விட்டதே! அவர்கள் எல்லையை விட்டு எப்போதோ போய் விட்டார்களே! "மோசக்காரர்கள், கொள்ளையர்கள், கண்கட்டி வித்தைக்காரர்கள்" - அரசன் சீறினான்!
கொள்ளையடித்த பொருள் கொள்ளை போனால் கொள்ளையர்கள் மற்றவரைக் கொள்ளையர்கள் என்று கூவுவது வாடிக்கை தானே! :-)

"வேண்டாம் வாப்பா, நானே போய் அந்தத் தாத்தாவிடம் கேட்டு வாங்கி வருகிறேன்! என்னுடன் சில ஆட்களை மட்டும் அனுப்புங்கள்"
கிளம்பி விட்டாள் சுல்தானி; அவள் கிளம்பக் கேட்டு, பக்கத்து நாட்டு இந்து இளவரசன் ஒருவன், குபேர் என்று பெயர், அவள் பின்னாலேயே கிளம்பினான் பாதுகாப்பாக!
ஏன்? - ஏன்னா அவனுக்கு இவள் மேல் ஒரு-காதல்! ஒரு-தலைக் காதல்!!


அங்கு என்னடாவென்றால் மேலக்கோட்டை நெருங்கும் போது ஒரு சோதனை! வழியில் வழிப்பறிக் கள்வர்கள்!
நாமக்காரப் பசங்க, ஆண்டிகள் தானே என்று விட்டுவிட்டனர்; சற்று தொலைவு போனதும் தான் இராமானுசர் கையில், துணி மூடியுள்ள, ஜொலிக்கும் மூர்த்தியைப் பார்த்தார்கள்.
அடடா, பெருமாளைத் துரத்திக் கொண்டு பின்னே செல்ல இத்தனை கொடியவரா, இல்லை இவர்கள், கொடி-அடியவரா?

ஒரு கிராமத்துக் குடியிருப்புக்குள் அந்தக் கோஷ்டி புகுந்தது. அதுவோ ஒரு புலையர் சேரி!
உடையவர் ஒரு குடிசையில் உதவி கேட்டு உள்ளே புகுந்தார்.
உடன் வந்த மற்றவர்க்கோ தயக்கம்! ஆனாலும் உடையவர் பேச்சுக்கு மறு பேச்சு ஏது?
சேரி மக்கள் கொள்ளையரைத் திசை திருப்பி அனுப்பி விட்டனர்;
இராமானுசர் வெளியில் வர, துணிக்குள் என்ன சாமீ, என்று ஆர்வமாய்க் கேட்டனர் சேரி மக்கள்!

2006040603530201melkote


துணிக்குள் இருக்கும் செல்வப் பிள்ளையைப் பார்த்தவுடன், சேரி மக்களுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! குடிசைக்குள் ஓடிப் போய், கம்பங்கூழும், வாழைக்காயும் எடுத்து வந்து கண்ணனின் காலடியில் வைத்தனர். இவர்களின் தூய அன்பைக் கண்டு இராமானுசர் கண் கலங்கினார். "வாருங்கள் என்னுடன் கோவிலுக்கு; செல்வப் பிள்ளையை நிறுத்தி வைக்கலாம்" என்று அழைத்தார்.

நடுநடுங்கி விட்டனர் சேரி மக்கள்; இராமானுசர் கூட வந்தவர்கள் சில பேருக்குக் கூட இது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை! ஆனால் இந்தச் "சீரங்கத்துச் சாமியார்" விடுவதாக இல்லை! கணவன் நாரணனைக் காத்ததால், அவன் மனைவி, லட்சுமியின் வீட்டார் இவர்கள்; திருவின் வீட்டார்!

தீட்டுக் குலம் என்பதை மாற்றித், திருக்குலம் என்று ஆக்கினார். திருக்குலத்தார் என்று பெயரும் சூட்டினார்.
800 ஆண்டுகள் பின்பு வந்த காந்தியடிகள் ஹரி-ஜன் (ஹரியின் மக்கள்) என்று சொல்வதற்கு முன்பே, சொல்லிச் சென்றார் இராமானுசர்.
வைக்கம் கோவில் நுழைவு செய்த தந்தை பெரியார் அவர்களுக்கு முன்பே,
செயலில் செய்து காட்டிய தீரர் ஆனார் இராமானுசர்.


மேலக்கோட்டை திருநாராயணன் ஆலயத்தில், உற்சவர் செல்வப் பிள்ளையின் விக்ரகம் குடி கொண்டாகி விட்டது! வழிபாடுகளும் தொடங்கி விட்டன!
பின்னால் துரத்திக் கொண்டு வந்த சுல்தானி...அரசனின் செல்வப் பெண், துரும்பாய் இளைத்துப் போய் விட்டாள்; கலைந்த கூந்தலும் ஒட்டிய தேகமுமாய் அவளைப் பார்த்தால் ராஜகுமாரி என்றே சொல்ல முடியாது!
வந்து சேர்ந்தாள், நொந்து நூலாய்!

49203441_Thirunarayana
கண்ணன் காலடியில்...


உற்சவர் ஆகி விட்ட தன் கண்ணனைப் பார்த்து விட்டுக் கண் கலங்கினாள், சுல்தானி. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவளுக்குத் தெரிந்து விட்டது! கத்திக் கலாட்டா செய்ய வில்லை. ஆனால் கண்ணீரும் நிற்கவில்லை!
இரு கை தலை மேல் குவித்தாள்!
மூர்ச்சை ஆனாள். மயங்கி ஒடுங்கி, கீழே விழுந்தாள்! உயிர் பிரிந்தாள்!

அனைவரும் பயந்து விட்டார்கள்! இராமானுசருக்குச் சேதி சொல்லப்பட்டது!
கண் கலங்கினார்; அவருக்குத் தெரியும் அவள் கதி என்னவாயிற்று என்று!
கண்ணன் கழலினை எண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே

யான் உனைத் தொடர்ந்தாள்; சிக்கெனப் பிடித்தாள்; எங்கு எழுந்து அருளுவது இனியே?
புகல் ஒன்று இல்லா அடியாள், அவன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து விட்டாள்!

அவளுக்கு வேண்டிய மரியாதைகள் குறைவின்றிச் செய்யப்பட்டன.
அவளைப் பின் தொடர்ந்து வந்த காதலன் குபேர் கதறி அழ, அவனைத் தேற்றி, மனச்சாந்தி பெற, பூரி ஜெகன்னாதர் ஆலயம் அனுப்பி வைத்தனர்.

அவள் சிறிய உருவத்தினை, மூலவரின் திருவடிகளில் செய்து வைத்தார், இராமானுசர்!
இன்றளவும் ஆலயத்தில் ஸ்ரீ பாத தரிசனத்தின் போது, அவளுக்கு ஆரத்தி காட்டுகிறார்கள்!
துலக்கராய்ப் பிறந்து, துழாய் மாலை வாசனை அறியாத போதும்,
பரந்தாமனிடத்தல் தன்னையே பறி கொடுத்தவள் - அதனால்
சுல்தானி பீவி என்பவள் நாச்சியார் ஆனாள்! வெறும் நாச்சியார் இல்லை!
துலுக்கா நாச்சியார்!! பீவி நாச்சியார்!!!


மேற்கண்ட கதையை வரலாற்றுப் பூர்வமாக அறிய முடியவில்லை.
என்றாலும் குரு பரம்பரைக் கதைகள் இவளைப் பற்றியும் இராமானுசர் காலத்தில் ஏற்பட்ட இந்நிகழ்வுகள் பற்றியும் குறிப்புகள் செய்கின்றன.
இவளின் பெருமாள் ஈடுபாடு இராமானுசரை மிகவும் ஈர்த்து விட்டது. அதனால் இவளுக்கு என்று பல நியமங்களைக் கோவில் பூசைகளில் செய்து வைத்தார்.

திருவரங்கத்தில் உள்ள துலுக்கா நாச்சியாரும் இவள் தான். இராமானுசர் இவள் பக்தியை மெச்சி, வைணவத் தலைநகரமாம் திருவரங்கத்தில் இவளுக்கு என்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தினார் என்று சொல்கின்றனர்.
ஆனால் அங்கு உள்ளவள் தில்லி சுல்தான் மகள் என்று கருதுவோரும் உண்டு!
மதுரை, கீழ்த்திருப்பதி போன்ற ஆலயங்கள் திருச்சுற்றில், இவளுக்கு என்று தனிச் சன்னிதிகள் பிற்காலத்தில் எழுப்பப்பட்டன.
இன்னும் ஆந்திரக் கோவில்களில் இவளை பீவி நாஞ்சாரம்மா என்று தான் வழிபடுகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில், ஐந்தாம் பிரகாரத்துக்கு முன்பு, கிளி மண்டபம் அருகே, இவள் சன்னிதி உள்ளது! வரையப்பட்ட படமாகத் தான் அவள் சன்னிதியில் இருக்கிறாள்!
அந்த மண்டபத்தில் முகம்மதியக் கலாச்சாரங்கள் பற்றிய சில சிற்பங்களும் காணப்படுகின்றன. இராமானுசர் ஓவியமும் அங்கு உள்ளது!

பகல் பத்து உற்சவத்தின் போது,
பெருமாள் இவள் சன்னிதிக்கு, கைலி வஸ்திரம் (லுங்கி) அணிந்து வருகிறான்.
மூலவருக்கும் கூட லுங்கியால் அலங்காரம் செய்யப்படுகிறது;
வட இந்திய உணவான ரொட்டி, வெண்ணெய், பருப்புப் பொங்கல் நிவேதனம் செய்யப்படுகிறது!

இப்படி அனைவரையும் பெருமாளிடத்தில் அரவணைத்துச் சென்றவர் இராமானுசர்.
அவர் அவதாரத் திருநாள் இன்று! அவர் மறைந்த நாளும் இன்றே!
சித்திரைத் திருவாதிரை (Apr 22, 2007) - இராமானுச ஜெயந்தி அன்று அன்னாரின் தொண்டு உள்ளத்துக்கு, அனைவரும் தலை தாழ்த்தலாம் வாருங்கள்!

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே!
சீர் பெரும்பூதூர் இராமானுசன் திருவடிகள் வாழியே!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!!!

39 comments:

 1. ராமானுஜ திவ்யாக்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்

  ReplyDelete
 2. அற்புதமான பதிவு!!
  மிக்க நன்றி!!!!

  /800 ஆண்டுகள் பின்பு வந்த காந்தியடிகள் ஹரி-ஜன் (ஹரியின் மக்கள்) என்று சொல்வதற்கு முன்பே, சொல்லிச் சென்றார் இராமானுசர்.//
  அந்த காலத்திலேயே சமத்துவம் வளர்த்து,ஜாதி மத பேதம் களைய பாடுபட்டவர் இராமானுஜர். குருவின் பேச்சையும் கேட்காமல் தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை மக்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று 'ஓம் நமோ நாராயணா"என்ற திருநாமத்தை உலகுக்கு உரைத்த உத்தமர் ஆயிற்றே. அந்த நிகழ்வை பற்றியும் தங்களுக்கே உரித்தான நடையில் எழுதினால் சந்தோஷப்படுவேன்.
  வளரட்டும் உங்கள் தமிழ்த்தொண்டு/இறைத்தொண்டு!!

  வாழ்த்துக்கள்!! :-)

  ReplyDelete
 3. சித்திரைத் திருவாதிரை மறக முடியும.
  ரவி ஸ்ரீராமனுஜர் படமும் போட்டு சேவிக்க வைத்துவிட்டீர்கள்.
  அனைவரையும் அரங்கனின் ஆளுகைக்கு அழைத்தவர்.
  ஜீவனுடன் எல்லோரையும் காத்து ரட்சிக்கும் வள்ளல்.
  கோதையின் அண்ணன்.
  தேசிகன்,ஸ்ரீரங்கம் கோவிலைக் காண்பித்தார்.
  நீங்கள்தானுகந்த ரூபத்தையும் காண்பித்துக் கொடுத்தீர்கள்.

  நன்றி நன்றி.

  ReplyDelete
 4. கண்ணன் அடிதொழ ஜாதி வேண்டாம், மதம் வேண்டாம் அன்பு ஒன்றே போதும் என நிருபித்த சம்பவம் இது.

  திருவரங்கத்திலும் தாழ்த்தப்பட்டவர்களை உள்ளே அனுமதித்து புரட்சி செய்தவர் ராமானுசர். இன்றைக்கு இஸ்கானில் ஜாதி மதமின்றி, கறுப்பர்களும், வெள்ளையர்களும்,பெண்களும் அர்ச்சகராய் பணிபுரிவது ராமானுஜர் காட்டிய வழியிலேயே. இஸ்கானில் முடிவது தமிழக கோயில்களில் ஏன் முடிவதில்லை என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்

  ReplyDelete
 5. எனக்கு இன்னிக்குப் பொழுது விடிஞ்சது 'இங்கே'

  ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. பிரமிப்புதான் வேறென்ன?

  அவனுக்கு 'ஆட் கொள்ளணுமுன்னா' என்னமும் செய்வான்:-)

  ReplyDelete
 6. //குமரன் (Kumaran) said...
  ராமானுஜ திவ்யாக்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்//

  குமரன்
  என்ன ஆக்ஞையோ? :-)

  ReplyDelete
 7. ராமானுஜர் சரிதம் அற்புதமானது. லட்சுமணன் பலராமன் பிறகுராமானுஜன். ரவியின் பதிவில் துலுக்க நாச்சியாரோடு பின்னாலேயே ராமானுஜரும் நுழைந்து திருக்குலத்தாரைக்கூடிவந்து அனைவரையும் இறைவன் முன் சமம் என்பதை உணர்த்திவிட்டார்.படங்கள் கண்ணிலேயே நிற்கின்றன ..பேறு பெற்றோம் வேறென்ன சொல்ல?
  ஷைலஜா

  ReplyDelete
 8. mmmm ellarum vanthu solliyachu. nan enna thaniya solla poren?

  ReplyDelete
 9. அருமையான பதிவு .

  ஸ்ரீரங்கத்தில் அரங்கனோடு கலந்த துலுக்க நாச்சியாரைப் பற்றிப் படித்திருக்கிறேன். தில்லி சுல்தானின் மகளிடம் இருந்த பெருமாளை "பின் சென்ற வல்லி" யின் தலைமையில் சென்ற நாட்டியக் குழு ஆடியும் , பாடியும் மன்னரை மகிழ்வித்து, அவரது அனுமதியுடன் இளவரசி உறங்கும்போது மீட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

  அவள் அரங்கனுடன் கலந்தது ஸ்ரீரங்கத்திலா அல்லது திருநாராயணபுரத்திலா ?

  ReplyDelete
 10. சித்திரைத் திருவாதிரை எப்படி மறக்க முடியும்னு படிக்கணும் ரவி.
  எ.பி
  விளையாடிவிட்டது.

  ReplyDelete
 11. //CVR said...
  அற்புதமான பதிவு!!//

  CVR-க்குத் தான் நன்றி சொல்லணும்!
  நீங்க தான் நேயர் விருப்பம் கேட்டீங்க!
  அது ராமானுச ஜெயந்தியோடு கூடி வந்து விட்டது!

  //ஜாதி மத பேதம் களைய பாடுபட்டவர் இராமானுஜர். குருவின் பேச்சையும் கேட்காமல் தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை மக்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று//

  நீங்க இப்படி அடிக்கடி உத்தரவு போட்டா எப்படி? :-)))
  இராமானுசரின் கதை சொல்ல ரொம்ப நாளாய் ஒரு எண்ணம். குமரன் கூட முன்பு பொன்னாச்சி கதையைச் சொல்லச் சொன்னார். என்று கை கூடுமோ? முயல்கிறேன் CVR.

  ReplyDelete
 12. இரவிசங்கர். இராமானுஜரின் திவ்யாக்ஞையைப் பற்றித் தானே இடுகை முழுக்க எழுதியிருக்கிறீர்கள். அனைவரும் சமமே. தீட்டுக்குலத்தோர் என்று எவரும் இல்லை. அவர்கள் திருக்குலத்தோர் என்று ஆணையிட்டு அவர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றாரே. அந்த தெய்வீக ஆணை தான் எல்லாத் திருக்கோவில்களிலும் வளரட்டும்; நன்கு செழுத்து வளரட்டும் என்று வர்த்ததாம் அபிவர்த்ததாம் என்று சொன்னேன். :-)

  மீண்டும் ஒரு முறை...

  ராமானுஜ திவ்யாக்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்
  இராமானுஜரின் தெய்வீக ஆணை வளரட்டும் செழித்து வளரட்டும்

  ReplyDelete
 13. sir,
  Thuluka Nachhiyar 1&2 as usual excellent.
  Mahanai pattri ezhuthum pothu Acharyene kooda iruuthu ungalai Ehutha-cholvathu-pol ullathu.Great effort.
  Srirangam nachhiyar sannidhi 2nd pragarama 5th.pl clarify.
  sundaram

  ReplyDelete
 14. //பெருமாளைத் துரத்திக் கொண்டு பின்னே செல்ல இத்தனை கொடியவரா, இல்லை இவர்கள், கொடி-அடியவரா?
  //

  அடடா! என்ன ஒரு சொற்கட்டு.

  வரம் வாங்கி வந்திருக்கீரா இப்படி சூப்பரா பதிவு எழுத? :)

  ReplyDelete
 15. ரொம்ப ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. சம்பவங்கள் கண் முன் நடக்கிற மாதிரியும் ராமானுசரை அருகிலிருந்து தரிசிப்பது போலவும் தோன்றியது:)

  ReplyDelete
 16. //வல்லிசிம்ஹன் said...
  அனைவரையும் அரங்கனின் ஆளுகைக்கு அழைத்தவர்.
  ஜீவனுடன் எல்லோரையும் காத்து ரட்சிக்கும் வள்ளல்.
  கோதையின் அண்ணன்.//

  ஆமாம் வல்லியம்மா..
  உடையவர் பெருமை அரங்கனைக் காட்டிலும் அளப்பரியது!

  //தேசிகன்,ஸ்ரீரங்கம் கோவிலைக் காண்பித்தார்.
  நீங்கள்தானுகந்த ரூபத்தையும் காண்பித்துக் கொடுத்தீர்கள்.//

  ஷைலஜா மூன்று ரூபங்களையும் கண்ணன் பாட்டில் இட்டுள்ளார்கள் பாருங்க! :-)

  ReplyDelete
 17. // செல்வன் said...
  திருவரங்கத்திலும் தாழ்த்தப்பட்டவர்களை உள்ளே அனுமதித்து புரட்சி செய்தவர் ராமானுசர்.//

  உள்ளே அனுமதி மட்டும் கொடுத்துவிட்டு விட்டுவிடவில்லை செல்வன்.
  சார்த்தாத ஸ்ரீவைணவர்கள் என்று பூநூல் போடாத அன்பர்களைக் கோவில் காரியங்களில் நிறுத்தி வகுத்து, பெருமாளை ஏளப் பண்ணுவதற்கும், ஆழ்வார்கள் திருமுகம்/பாட்டோலை படிப்பதற்கும்...இன்னும் நிறைய செய்துள்ளார்.

  இன்று நம் கலாம், ஒவ்வொரு மீட்டுக்கும், ஒரு குறிப்பட்ட துறை/பள்ளியை அழைப்பது போல், அப்பவே ஒவ்வொரு சொற்பொழிவுக்கும் தீவட்டி தூக்குவோர், வண்ணான் என்று சுழற்சி முறையிலும் அழைப்பாராம்!

  ReplyDelete
 18. //இன்றைக்கு இஸ்கானில் ஜாதி மதமின்றி, கறுப்பர்களும், வெள்ளையர்களும்,பெண்களும் அர்ச்சகராய் பணிபுரிவது ராமானுஜர் காட்டிய வழியிலேயே. இஸ்கானில் முடிவது தமிழக கோயில்களில் ஏன் முடிவதில்லை என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்//

  இஸ்கானில் வழிபாடு/பாடல்/பக்தி - அதனால் பலரும் செய்ய ஏதுவாகிறது!
  ஆனால் ஆலயங்களில் - ஆகம விதிகள் - மந்த்ரப் பூர்வமான அமைப்பு, அதுனுடன் சேர்ந்த வழிபாடு என்பதால் தான் முடிவதில்லை. இது ஏன் என்பது பற்றியும் கோவில் ஒழுகு நூலில் காணலாம்!

  ReplyDelete
 19. //துளசி கோபால் said...
  அவனுக்கு 'ஆட் கொள்ளணுமுன்னா' என்னமும் செய்வான்:-)//

  உண்மை தான் டீச்சர்.
  அப்படிச் செய்யவில்லை என்றால் கூட இவர்களே தூண்டி ஆட்கொள்ள வைத்து விடுவாங்க! :-)

  ReplyDelete
 20. //ஷைலஜா said...
  ராமானுஜர் சரிதம் அற்புதமானது. லட்சுமணன் பலராமன் பிறகு ராமானுஜன்.//

  பிறகு மணவாள மாமுனிகள்!

  //ரவியின் பதிவில் துலுக்க நாச்சியாரோடு பின்னாலேயே ராமானுஜரும் நுழைந்து திருக்குலத்தாரைக் கூடிவந்து அனைவரையும் இறைவன் முன் சமம்//

  நன்றி ஷைலஜா...நீங்க துலுக்க நாச்சியார் சந்நிதி அடிக்கடி பாத்திருப்பீங்க என்று நினைக்கிறேன்!
  படம் தேடினேன்; கிட்ட வில்லை!
  நம் தாயார் போலவே அலங்காரம் இருக்கும்!

  ReplyDelete
 21. //கீதா சாம்பசிவம் said...
  mmmm ellarum vanthu solliyachu. nan enna thaniya solla poren? //

  தலைவி ஒரு வார்த்தை சொன்னா
  ஆயிரம் (சகஸ்ரம்) வார்த்தை சொன்ன மாதிரி! :-)

  ReplyDelete
 22. //ஜெயஸ்ரீ said...
  அருமையான பதிவு .
  அவள் அரங்கனுடன் கலந்தது ஸ்ரீரங்கத்திலா அல்லது திருநாராயணபுரத்திலா ?//

  இரு விதமான கருத்துக்கள் உள்ளது ஜெயஸ்ரீ!
  திருவரங்கத்து நம்பெருமாளை மீட்டு வந்தது அரையர்களும், பின் சென்ற வல்லிகளும் என்பது கதையாகச் சொல்லப்படுகிறது! அரையர் இசையாலும் நடனத்தாலும் மீட்டது இங்குப் பெருமை!

  ஆனால், இராமானுசர் காலத்தில், மீட்டது பற்றிப் பல குறிப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. கோவில் ஒழுகு மட்டும் அல்லாது, தனிப் பாடல்களும், அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்பவர் எழுதிய பாடல்களிலும் இவை வருகின்றன.

  இராமனுசர் மீட்டது திருநாராயணத்து செல்வப் பிள்ளையைத் தான். எனவே நாச்சியாரும் மேலக்கோட்டையில் தான் அரங்கனுடன் கலந்தாள் என்பது சற்று உறுதியாகக் கருதப்படுகிறது...

  பின்னர் இந்த உள்ளம் உருக்கும் கதை பல திவ்யதேசங்களுக்கும் பரவ, அவரவர் தனிச் சந்நிதிகள் கண்டார்கள். திருவரங்கத்திலும் அப்படியே இருக்கக் கூடும் என்று வைணவத்தை வரலாற்றாக ஆய்ந்தவர்கள் சொல்லுகிறார்கள்...
  மேலும் திருவரங்க முகம்மதியப் படையெடுப்புகள் எல்லாம் இராமானுசர் காலத்துக்கு அப்புறம் தான் (குறிப்பாக தேசிகர் காலத்தில்) நடந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

  ReplyDelete
 23. //வல்லிசிம்ஹன் said...
  சித்திரைத் திருவாதிரை எப்படி மறக்க முடியும்னு படிக்கணும் ரவி.
  எ.பி விளையாடிவிட்டது//

  அதனால் என்ன வல்லியம்மா?
  நாங்க அப்படித் தான் படித்தோம்!
  எ.பி. விளையாட்டும் ஜாலி தான்! :-)

  ReplyDelete
 24. //குமரன் (Kumaran) said...
  இரவிசங்கர். இராமானுஜரின் திவ்யாக்ஞையைப் பற்றித் தானே இடுகை முழுக்க எழுதியிருக்கிறீர்கள்.
  அந்த தெய்வீக ஆணை தான் எல்லாத் திருக்கோவில்களிலும் வளரட்டும்; என்று சொன்னேன். :-)
  மீண்டும் ஒரு முறை...
  ராமானுஜ திவ்யாக்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்//

  உங்க வாக்கால், இன்னொரு முறை கேட்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்படிக் கேட்டேன், குமரன்!
  அடியேனும் இன்னொரு முறை:

  சர்வதேச தசக் கலேச்வ
  வியாகத பராக்ரமா
  "ராமானுஜ திவ்யாக்ஞா
  வர்த்ததாம் அபிவர்த்ததாம்"

  ReplyDelete
 25. //Anonymous said...
  sir,
  Thuluka Nachhiyar 1&2 as usual excellent.
  Mahanai pattri ezhuthum pothu Acharyene kooda iruuthu ungalai Ehutha-cholvathu-pol ullathu//

  ஆழ்வார்-எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
  நாயேன்-நாயிந்தே!
  நன்றி சுந்தரம் சார்; ஆச்சார்யன் அருளன்றி வேறேது!

  //Srirangam nachhiyar sannidhi 2nd pragarama 5th.pl clarify.//

  நான் சொல்வது
  outermost prakaram is 7th
  so, between, 6th and 5th - துலுக்கா நாச்சியார் சந்நிதி.
  நீங்க outermost prakaram 1st என்று வைத்து சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 26. // ambi said...
  கொடியவரா, இல்லை இவர்கள், கொடி-அடியவரா?
  அடடா! என்ன ஒரு சொற்கட்டு.
  வரம் வாங்கி வந்திருக்கீரா இப்படி சூப்பரா பதிவு எழுத? :)//

  வாங்க மாப்பிள்ளை!
  வரமா? எனக்கா? அடிக்காம வுட்டாலே சரி! :-)

  வரதராஜன் - அவன் அல்லவா வரம் தரு ராஜன்!
  அடியேன் வராத ராஜன்; என்ன சொன்னாலும் புத்தியே வராத ராஜன்! :-)

  ReplyDelete
 27. //வேதா said...
  சம்பவங்கள் கண் முன் நடக்கிற மாதிரியும் ராமானுசரை அருகிலிருந்து தரிசிப்பது போலவும் தோன்றியது:) //

  நன்றி வேதா, உங்க நல் வார்த்தைக்கு!
  இராமானுசரை மிகவும் அனுபவித்து லயித்ததால், அப்படி வந்து விட்டிருக்கும் போல, என்னையும் அறியாமல்! :-)

  உடையவர் கருணை, சொல்லவும் முடியுமோ!

  ReplyDelete
 28. KRS!!
  supera ezhuti irukeenga.. kalakal.. enaku theriyatha vishayam... seri innum niraya ezhuthunga

  ReplyDelete
 29. //அடியேன் வராத ராஜன்; என்ன சொன்னாலும் புத்தியே வராத ராஜன்//

  @kannan, அடடா! கீதா மேடத்தை சந்தித்த பிறகும் நீங்கள் எப்படி இவ்ளோ தன்னடக்கமா இருக்க முடியுது? :)

  ReplyDelete
 30. pallandu,pallandu,vazgha
  Arangan arulvanaga.
  anbudan
  srinivasan.

  ReplyDelete
 31. KRS

  இந்தக் கதையை உண்மையா, இல்லையா என்று ஆராய்வதை விட, எல்லோரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற நல்ல செய்தியை - எல்லோரும் கொஞ்சமேனும் மனதில் வைத்திருந்தால், இங்கு நிகழும் பலப்பல சண்டைகள் முடிவுக்கு வந்து விடும்.

  மேலும்,

  விறுவிறுப்பாக வாசிக்க உங்கள் நடை மிக ஏதுவாக இருந்ததுவும் ஒரு காரணம் - மூழுவதையும் படித்து முடிக்க.

  மிகுந்த பாராட்டுகள்.

  நன்றி.

  அன்புடன்
  நண்பன்

  ReplyDelete
 32. //dubukudisciple said...
  KRS!!
  supera ezhuti irukeenga.. kalakal.. enaku theriyatha vishayam... seri innum niraya ezhuthunga //

  வாங்க சுதா..நன்றி
  உங்களைப் போலவே பலருக்கும் இந்தக் கதை சற்று புதிது தான். CVR கேட்டார். இட்டு விட்டேன்!

  ReplyDelete
 33. //ambi said...
  @kannan, அடடா! கீதா மேடத்தை சந்தித்த பிறகும் நீங்கள் எப்படி இவ்ளோ தன்னடக்கமா இருக்க முடியுது? :) //

  பிரிக்க முடியாதது என்னவோ?:
  கீதாம்மாவும் அம்பியின் லூட்டிகளும் :-)

  ReplyDelete
 34. //Anonymous said...
  pallandu,pallandu,vazgha
  Arangan arulvanaga.
  anbudan
  srinivasan//

  நன்றி ஸ்ரீநிவாசன் சார்!
  பல்லாண்டு
  அடியோமோடும் அவனோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டாக மலரட்டும்!

  ReplyDelete
 35. //நண்பன் said...
  இந்தக் கதையை உண்மையா, இல்லையா என்று ஆராய்வதை விட, எல்லோரையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்ற நல்ல செய்தியை - எல்லோரும் கொஞ்சமேனும் மனதில் வைத்திருந்தால், இங்கு நிகழும் பலப்பல சண்டைகள் முடிவுக்கு வந்து விடும்.//

  கரெக்டாச் சொன்னீங்க நண்பன்.
  நாமே நம் குழந்தைகளிடம் மிகைப்படுத்திக் குடும்பப் பெருமைகளைச் சொன்னாலும்...அது கேட்டு பொறுப்பு வரும் என்ற நல்லெண்ணத்தில் தானே!

  //விறுவிறுப்பாக வாசிக்க உங்கள் நடை மிக ஏதுவாக இருந்ததுவும் ஒரு காரணம் - மூழுவதையும் படித்து முடிக்க.மிகுந்த பாராட்டுகள்.//

  மிக்க நன்றி தங்கள் ஊக்கமான சொற்களுக்கு. எழுதும் பொருள் மிகவும் உயர்ந்த உடையவர் என்பதால், நடை தானே வந்து விடும் போலும்!

  ReplyDelete
 36. மிகவும் அருமை. நான் இன்று தான் இந்தப்பதிவைப் படித்தேன். பெருமாளின் திருவிளையாட்டே விளையாட்டு தான் திரு KRS

  அன்புத்தோழி

  ReplyDelete
 37. மீண்டும் ஒருமுறை படித்தேன்.

  மிகவும் அழகாக விவரித்திருக்கிறீர்கள்.

  தினமுமே அரங்கனுக்குக் காலை உணவு துலுக்க நாச்சியாருடன் ரொட்டி தான்.

  அன்புடன்

  நெய்வேலிவிச்சு
  neyvelivichu.blogspot.com

  ReplyDelete
 38. நல்ல பதிவு கண்ணபிரான். கடவுளரும், காதற் பெண்டிரும் நெகிழ வைக்கின்றனர், எப்பொழுதுமே! இராமானுசர், வைணவத்தின் மேல் நான் கொண்டிருந்த பார்வையை வெகுவாக மாற்றியவர்.சொல்லவும் பெரிதே அடியார் தம் பெருமை. அது உங்களுக்கும் உரியது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 39. ஒரு அரைவேக்காட்டு ஆசாமி, குந்தவை நாச்சியார் இசுலாமிற்கு மாறியதாகவும், இறந்த பின்பு சமயபுரம் தர்காவில் அடக்கம் செய்யப்பட்டதாகவும், இன்றளவும் இந்து முறைப்படி நெய்விளக்கு ஏற்றி வணங்கப்படுவதாகவும், தீட்டு கழிக்க ராஜராஜன் 'ஹிரண்ய கர்ப்பதானம்' செய்ததாகவும், ஆனால் பிராமணர்கள் உண்மையை மறைக்க 'துலுக்க நாச்சியார்' கதை விட்டதாகவும் தனது வலைப்பூவில் சரடு விட்டிருந்தார்.

  எங்கள் மதுரை சித்திரைத்திருவிழாவின் துலுக்க நாச்சியார் episode பற்றி தேடிய என்னை அது குழப்பி விட்டது.

  உண்மை தெளிந்தேன். நன்றி..!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP