Monday, April 02, 2007

சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! - 2

"அரங்கன் கதி அதோகதி. முடிஞ்சாருடா மனுசன்!", என்று சிலர் கண்ட கனவெல்லாம் ஒரு நொடியில் என்ன ஆனது?
சென்ற பதிவில், மட்டையால் பெருமாள் அடி வாங்குவதைக் கண்டு, ஒரு சிலர் மட்டும் தான் பரிதாபப்பட்டார்கள். மற்றவர்கள் எல்லாரும் தாயார் பக்கம் சேர்ந்து கொண்டார்கள்! அவர்கள் எல்லாருக்கும் இன்று ஆப்பு! :-)

முகத்தை வெடுக் என்று திருப்பிக் கொண்ட பெண்டாட்டி, அரை நொடியில் "அத்தான், உங்கள் சிரித்த முகம் பார்த்துக் கொண்டு, உங்க பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளட்டுமா?" என்று கொஞ்சினா என்ன செய்வீங்க!

வாழை மட்டையால் பெருமாளைப் பெண் வீட்டார் தாக்க, பார்த்தார் பெருமாள்! Total Surrender! பரிபூர்ண சரணாகதி செய்தார்!
ஆகா...சரணாகதி வாங்குறவரே சரணாகதி செய்ய வேண்டிப் போச்சா? யாரிடம்? மாறன் சடகோபன் என்ற நம்மாழ்வாரிடம்!
நல்லா இருக்கு கதை! சாமி தான் பக்தனைக் காப்பாத்தணும்! இங்க என்னடான்னா பக்தன் சாமியக் காப்பாத்த ஓடோடி வருகிறான்.

நம்மாழ்வாரின் பல்லக்கு வீட்டு வாசலுக்கு வந்து சேர்கிறது! பெருமாள் பக்தனை ஓரக் கண்ணால் பாத்து, "பார்த்தாயா என் நிலையை?" என்று பாவமாய்க் கேட்கிறார்.
அடி வாங்கிய பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்!
அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்?
வாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே இவருக்குத் தாளவில்லையே! இவரா புள்ளின் வாய் கீண்டான்? பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்? :-)

திருமேனி அலங்காரம் எல்லாம் கலைந்து போய், பரிதாபமாய் நிற்கும் பெருமாளைக் கண்டவுடன், ஆழ்வார் கண்கலங்கி விடுகிறார்.
நேரே ஓடிப்போய் தாயாரின் திருக்கதவைத் தட்டுகிறார்.

"என்னம்மா இது? ஆயிரம் இருந்தாலும் கணவனை இப்படி வெளியில் நிறுத்திக் கதவடைக்கலாமா? எதுவா இருந்தாலும் உள்ளே அழைத்து, அப்புறம் சிவக்கவோ, சினக்கவோ தெரியாதாம்மா உனக்கு?

உன்னைச் சொல்லி என்ன செய்வது?
இதே பாண்டி நாட்டுப் பெண்ணாய் இருந்தால் இப்படிச் செய்வாளோ?
"அன்பாக" அல்லவோ "ஆண்டிரு"ப்பாள்!
சோழ நாட்டுப் பெண் என்று காட்டி விட்டாயே", என்று ஒரே போடாகப் போட்டார் பாருங்க!
ஏன்னா அவரு பாண்டி நாடு! அவருக்குத் தெரியாதா அக்கரைக்கு இக்கரை சிகப்புன்னு! மதுரையில் ஆட்சி யாருன்னு! :-)கதவின் பின்புறம் மெல்லிய சிணுங்கல், விசும்பல்; இரண்டாம் முறை!
"சரி, விடு...
நீ சொல்லித் தானே அம்மா, இவர் உறையூர் வல்லியை மணந்தார்?
உன்னிடம் மார்பில் கை வைத்துக் கேட்டாரே! அப்போ சரியென்று சொல்லிவிட்டு, இப்போ இப்படிச் செய்தால் எப்படி? இப்படி அவமானப் படுத்துகிறாயே, நியாயமா?"
- இதை அப்படியே கட்டியம் என்று அழகுத் தமிழில் கவிதை சொல்லி வாசிப்பார்கள் அரையர்கள்;
"அவமானப் படுத்தலாமா?" என்று சொல்லும் இடத்தில் வார்த்தை வராமல் நெஞ்சு அடைக்கும் அந்த அரையருக்கு!

மீண்டும் சிணுங்கல்; மூன்றாம் முறை!
"பார், கல்யாணம் முடித்த கையோடு, கல்யாண விருந்து கூட உண்ணாமல், உன் மனம் பதைக்குமே என்று ஓடி வந்தான் அரங்கன்.
உன் பிறந்த நாள் வேறு இன்று!
அதை மறக்காமல் ஒடி வந்தவன், பசி மயக்கத்தில் விழுந்து தடுமாறி விட்டான்; மேனியெல்லாம் ஒரே காயமாகி..."

கதவுகள் திறந்து விட்டன..."அச்சச்சோ...என்னங்க...என்னாச்சு...." என்ற குரல் குழைந்து விட்டது!
பெருமாள் ஓடியே வருகிறான். அரங்க நாயகியை ஒரு கண்ணாலும், ஆழ்வாரை மறு கண்ணாலும், கண்டு மென்னகை பூக்கிறான்.
கள்ளச் சிரிப்பில் கரையாதார் யார்?இருந்தாலும் ஒரேயடியாக எந்தப் பெண்ணாச்சும் சமாதானம் ஆனதாகச் சரித்திரம் உண்டா? கொஞ்சம் முரண்டு பிடித்தால் தானே கட்டுக்குள் இருக்கும்! "ஆழ்வாரே வந்து சொன்னதால், சரி போனாப் போகட்டும்!"
"நம் பால் அன்பினர் ஆன நம்-ஆழ்வார் சொன்னதாலே உம்மை ஏற்றுக் கொண்டோம்", என்று தாயார் கட்டியக் கவி சொல்கின்றது!

பின்பு கணவனும் மனைவியும் பூப்பந்து விளையாடிக் கொண்டே, பங்குனி உத்திர மண்டபம் எழுந்தருளுகிறார்கள்.
அரங்க நாயகி படி தாண்டாப் பத்தினி!
கணவன் வர நேரமானாலும், வாசல்படி விட்டு வெளியே வரமாட்டாள்; உள்ளே நாழி கேட்டான் வாசலில் நின்று கொண்டு, "ஏன் இவ்வளவு நாழி?" என்று தான் கேட்பாள்.
அதனால் தான் பங்குனி உத்திர விழா, அவள் வீட்டின் உள்ளேயே நடக்கிறது!

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்!
அரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப் பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒருசேரக் கொலுவிருக்க,
இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை!

Divyadampathi

2004043001390601

(சேர்த்தியைச் சேவிக்கும் இராமானுஜர்)

அதனால் அன்பர்கள் கூட்டம் அலை மோத, அதிலும் புதுமணத் தம்பதிகள் அலைமோத, அர்ச்சனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
இராமானுஜர் முன்பொரு நாள், இதே உத்திர நன்னாளில் பாடி அருளிய கத்ய த்ரயம் என்ற கவிதையை மாலை வேளையில் ஓதுகிறார்கள்.
சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் - இவை மூன்றுமே கத்ய த்ரயம்!
இது ஒரு வசன கவிதை. இதை நீட்டியும் சுருக்கியும் ஓதும் அழகே, கேட்பவரை மயக்கி விடும்.

1. தாயாரும் பெருமாளும், ஒரு சேர இருக்கும் இந்த நாளுக்காகக் காத்திருந்து, தாயாரின் தாள் பற்றிச் சரணாகதி செய்கிறார் இராமானுஜர் - இது சரணாகதி கத்யம்
2. பின்னர் அரங்கனிடம் மற்றை நம் காமங்கள் எல்லாம் மாற்றி என்றென்றும் நம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறார் - இது ஸ்ரீரங்க கத்யம்
3. உடனே பெருமாள் இருந்த இடத்தில் இருந்தே, அவருக்கு வைகுந்தம் காட்டியருள்கிறார். அதை இராமானுஜர் அப்படியே நமக்கெல்லாம் விளக்கிக் காட்ட - இது வைகுந்த கத்யம்.

76374780_XZzbuFHr_DSC00209

உனக்கும், உன் சம்பந்தா சம்பந்தங்களுக்கும் மோட்சம் அருளினோம் என்று பெருமாள் உறுதி சாதிக்க, இராமானுஜர் அரங்கன் சேவடியில் தலை தாழ்த்துகிறார். பின்பு,
18 முறை திருமஞ்சனம் (நன்னீராட்டு) நடைபெறுகிறது
18 * 6 கலசங்கள் = 108 கும்ப ஆராட்டு, விடிய விடிய!
மறுநாள் பங்குனித் தேர்.
உற்சவம் இனிதே நிறைகிறது!

பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா, அமரர் ஏறே,
ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே!

35 comments:

 1. அருமை, அருமை, அருமை. கண் முன்னாடி ரங்கநாதரையும் தாயாரையும் கொண்டு வந்ததுக்கு. மிக்க நன்றி!!!!!!!!!!

  ஆமா, முத்தங்கி சேவை 1960-களுக்கு அப்புறத்திலிருந்து தான்னு கேள்விப்பட்டிருந்தேன் - உண்மை இல்லியா?

  கெ.பி.

  ReplyDelete
 2. திவ்யதம்பதிகளின் சேர்த்திச் சேவையை இன்னொரு முறை தரிசிக்கும் பாக்கியத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி இரவிசங்கர்.

  ReplyDelete
 3. மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன்.நன்றி

  http://www.desipundit.com/2007/04/03/panguniuthiram/

  ReplyDelete
 4. அரங்கனையும், அரங்கவல்லித் தாயாரையும், நம்மாழ்வாரையும், அரையர்களையும், கண்டுகளிக்கும் பக்தகோடிகளையும் கானச் செய்து எம்மையும், அவருள் ஒருவராக்கிய உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி, திரு. ரவி!

  ReplyDelete
 5. அருமையாகத் தந்திருக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 6. ஹலோ? அரங்கர் அங்கே இங்கே சுத்திட்டுவருவார் மோதிரத்தை காதல்பரிசாய் கொடுத்துவிட்டு இங்கே அரங்கநாயகியிடம் தொலைத்துத் தேடுவது போல நடிப்பார், நாங்க அப்போ அம்மா சைட் பரியாமால் அப்பா சைடா போகமுடியும்?:) இனம் இனத்தைச் சேரும் ஐயா:)
  ஸ்ரீரங்கத்தில் பலமுறை நான் கண்டுகளித்த உற்சவம் இது. கண்முன் காட்சியாய் கொண்டுவந்த ரவிக்கு முதலில் பாராட்டு.
  சேர்த்தி சேவைக்கென்றே வெளியூர் மக்கள் திரண்டு வருவார்கள். எங்கள் வீடுகளில் அன்று விருந்தினர்வருகையும் சக்கரைப்பொங்கலும் நிச்சயம் உண்டு.
  ராமானுஜர் விவரங்களும் அருமை ரவி.
  அவரது திருநட்சத்திர தினம் சித்திரையில் வருகிறதே ராமானுஜர் பற்றி நீங்கள் எழுத நாங்கள் படிப்பதும் பாக்கியம் அல்லவா?
  ஷைலஜா

  ReplyDelete
 7. ஹைய்யோ ஹைய்யோ

  சேர்த்தி சேவை ரெண்டாம் முறையும் கிடைச்சுது.

  இந்த வருஷம் எல்லாமே 'டபுள்'தான்:-)))))

  ReplyDelete
 8. //keekkepikkuni said...
  ஆமா, முத்தங்கி சேவை 1960-களுக்கு அப்புறத்திலிருந்து தான்னு கேள்விப்பட்டிருந்தேன் - உண்மை இல்லியா?//

  வாங்க கெபி!
  முத்தங்கியில் பல களவுச் சம்பவங்கள் நடந்ததினால், 1960 க்கு முன்பு சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டதாகச் சொல்லுவார்கள்!

  ஆனால் முத்தங்கி சேவை குறித்து, கோவிலொழுகு நூல் தெரிவிக்கிறது!
  ஜீயர்கள் மடத்து சிறப்புக் கட்டியமும் முத்தங்கி சேவை பற்றிக் குறிப்பிடுகிறது!

  எனவே இதற்கு முன்பும் இது இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்!
  திருவரங்கத்தில் இரண்டு அங்கிகள்!

  முத்தங்கி - மூலவர் அரங்கநாதனுக்கு
  ரத்னாங்கி - உற்சவர் நம்பெருமாளுக்கு

  ReplyDelete
 9. //குமரன் (Kumaran) said...
  திவ்யதம்பதிகளின் சேர்த்திச் சேவையை இன்னொரு முறை தரிசிக்கும் பாக்கியத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி இரவிசங்கர்//

  நன்றி குமரன். கத்ய த்ரயம் பற்றிய அறிமுகம் போதும் அல்லவா?

  ReplyDelete
 10. ரவி
  பதிவு நல்லாயிருக்கு.
  //அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்?//
  அழகான வசனம்!

  ReplyDelete
 11. //Dubukku said...
  மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன்//

  ஆகா..
  இன்று ஒரு வி.ஐ.பி மாதவிப்பந்தலுக்கு வந்துள்ளாரே! வாங்க டுபுக்கு! நல்வரவு!
  தேசிபண்டிட்ல் இணைத்தமைக்கு நன்றி!

  கத்துக்குட்டியாய் நான் பதிவைத் துவங்கிய காலகட்டத்தில், துளசி டீச்சர் அப்போது தேசிபண்டிட்ல் இணைத்தார்கள்! அதுவும் நினைவுக்கு வருகி்றது!

  ReplyDelete
 12. // VSK said...
  கண்டுகளிக்கும் பக்தகோடிகளையும் கானச் செய்து எம்மையும், அவருள் ஒருவராக்கிய//

  இது தான் அடியார் பெருமைங்கறது!
  பாருங்க பெருமாளை மட்டும் சேவிக்காது பக்தகோடிகளையும் சேர்த்தே சேவிச்சீங்க! நன்றி SK.

  ReplyDelete
 13. //இலவசக்கொத்தனார் said...
  அருமையாகத் தந்திருக்கிறீர்கள். நன்றி.//

  நன்றி கொத்ஸ்

  //துளசி கோபால் said...
  சேர்த்தி சேவை ரெண்டாம் முறையும் கிடைச்சுது.இந்த வருஷம் எல்லாமே 'டபுள்'தான்:-)))))//

  வாங்க டீச்சர். நேற்று தான் ஒரு புது ஸ்டாக் வாங்கினேன்; பாக்கலாம் டபுள் ஆகுதான்னு :-)

  ReplyDelete
 14. மிக அருமையாக கண்முன் கொண்டுவந்தீர்களைய்யா....நன்றி.

  என் உறவினர் இந்த வருடம் போனார். சேர்த்தி உத்ஸவத்தை சிறப்பிக்கும் வகையில், அரங்கனுக்கும், நாயகிக்கும் பட்சணமெல்லாம் படைப்பார்களென்றும் அதில் இவர் மைசூர்பாகு படைக்க பணம் கட்டி, உத்திர தின இரவு கோவிலில் தங்கி இருந்ததாகவும் கூறினார்.

  ReplyDelete
 15. நேரில் பார்ப்பது போல இருந்ததது நீங்கள் விவரித்த விதம்.
  ஒரு முறை முத்தங்கி சேவையை வைகுண்ட ஏகாதசி அன்று பார்க்கும் வாய்ப்பை அடியவனுக்கும் அளித்தான் அந்த அரங்கன்.

  அரங்கன் என்று பேர் வைத்தாலே ஆப்பு வாங்க வேண்டும் போலிருக்கு!

  ReplyDelete
 16. இங்க வீடியோ பார்க்கமுடியாது,இருந்தாலும் சொல்லிய விதமே பார்பது போல் உள்ளது.
  இருந்தாலும் வீட்டுக்குப்போய் பார்த்திடவேண்டியது தான்.

  ReplyDelete
 17. அன்பு ரவி,
  இது பெரிய பாக்கியம்.
  நாயகியையும் நாயகனையும் அம்மா,அப்பாவைப் பிள்ளை சேர்ப்பதுபோல நம்மாழ்வார் சேர்த்து வைக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
  மனம் ரொம்ப நிறைவாக இருக்கு. இந்த மட்டையடி சேவை யார் ஆரம்பித்தார்களொ தெரியவில்லை.
  பாவம் பெருமாள்!

  ReplyDelete
 18. கேட்கணமுன்னு நினைச்சேன் விட்டுப் போச்சு. "சிற்றாதே" - விளக்கம் ப்ளீஸ்.

  ReplyDelete
 19. //ஷைலஜா said...
  ஹலோ? நாங்க அப்போ அம்மா சைட் பரியாமால் அப்பா சைடா போகமுடியும்?:) இனம் இனத்தைச் சேரும் ஐயா:)//

  பாவம் ஷைலஜா நீங்க!
  நீங்க அம்மா சைட் பரிந்து கொண்டிருக்கும் போதே, அந்த அம்மா அப்பா சைட் போயிட்டாங்களே! :-)))
  சரி சரி, அதான் எல்லா சரியாயிடுச்சே, அப்பாவுக்கு ஜில்லுன்னு நீர் மோர் கொடுத்து, ஐஸ் வைக்கப் பாருங்க! :-))

  //ராமானுஜர் விவரங்களும் அருமை ரவி. அவரது திருநட்சத்திர தினம் சித்திரையில் வருகிறதே//

  சித்திரைத் திருவாதிரை!
  திருவரங்கப்ரியா ஐடியா கொடுத்தப்புறம், அதை லபக் என்று பிடித்துக் கொண்டேன். அன்று உடையவர் பற்றிய ஒரு வித்தியாசமான பதிவைப் போட்டு விடலாம்! என்ன சொல்றீங்க?

  ReplyDelete
 20. //செல்லி said...
  ரவி
  பதிவு நல்லாயிருக்கு.
  அழகான வசனம்!//

  நன்றி செல்லி

  ReplyDelete
 21. //மதுரையம்பதி said...
  சேர்த்தி உத்ஸவத்தை சிறப்பிக்கும் வகையில், அரங்கனுக்கும், நாயகிக்கும் பட்சணமெல்லாம் படைப்பார்களென்றும் அதில் இவர் மைசூர்பாகு படைக்க பணம் கட்டி, உத்திர தின இரவு கோவிலில் தங்கி இருந்ததாகவும் கூறினார்//

  ஆகா..எவ்வளவு நல்லா இருக்கும்.
  விடிய விடிய திருமஞ்சனம் காணலாமே!
  ஆமாம், பல பட்சணங்கள் கொலு வைத்தாற் போல படைப்பார்கள்.
  அதிரசம், அரவணைப் பாயசம் தான் அனைத்திலும் டாப்.

  சேர்த்தியின் போது சேவிக்க வரும் கிராம மக்கள் பிட்டு உதிர்த்து அரங்கனுக்குத் தருவார்கள். அன்பு கலந்து சமைத்த புட்டு - அவ்வளவு சுவையாய் இருக்கும்!

  ReplyDelete
 22. //ambi said...
  நேரில் பார்ப்பது போல இருந்ததது நீங்கள் விவரித்த விதம்.//

  வாங்க மாப்ளே!
  சேர்த்தியைச் சேவித்தால், சீக்கிரமே சேர்த்தி அல்லவா? :-)

  //அரங்கன் என்று பேர் வைத்தாலே ஆப்பு வாங்க வேண்டும் போலிருக்கு!//

  சரி சரி! நீங்க என்ன தான் அரங்கன் கட்சியா இருந்தாலும் கூட, தாயாருக்கும் ஒரு குப்பிடு போட்டுருங்க. எப்ப வேணாலும் உதவும்!

  ReplyDelete
 23. //வடுவூர் குமார் said...
  இங்க வீடியோ பார்க்கமுடியாது,இருந்தாலும் சொல்லிய விதமே பார்பது போல் உள்ளது.//

  நன்றி குமார் சார். இப்படிப் பலரும் சொல்லி உள்ளார்கள்; அரங்கனைப் பற்றி எழுதும் போதே ஒரு நிறைவு வந்து விடுகிறது!

  ReplyDelete
 24. //வல்லிசிம்ஹன் said...
  இந்த மட்டையடி சேவை யார் ஆரம்பித்தார்களொ தெரியவில்லை.
  பாவம் பெருமாள்!//

  ஷைலஜா, பாருங்க!
  எங்க பெருமாள் கட்சிக்கு பதிவுலகில் பெரிய ஆளே சப்போர்ட்டு!
  நன்றி வல்லியம்மா!

  ReplyDelete
 25. கற்றுக்குட்டியாக இருந்தவர் இன்று கற்றுக்கொடுக்கும் குட்டியாக மாறிவிட்டீர்.பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் காலம் வாழ்க.

  ReplyDelete
 26. //இலவசக்கொத்தனார் said...
  கேட்கணமுன்னு நினைச்சேன் விட்டுப் போச்சு. "சிற்றாதே" - விளக்கம் ப்ளீஸ்.//

  சிற்றுதல் = குழம்புதல், சஞ்சலம், மனம் பேதலித்தல்
  ஆண்டாள் பாசுரத்தில் வரும் சொல் ஒரு சொல், இது.

  இத்தனை பேர் உன் வாசலுக்கு வந்து, முகில் வண்ணன் பேர் பாடுகிறோம்.
  செல்லப் பெண்ணே, நீ சஞ்சலம் கொண்டு ஏதேதோ பேசாதே...

  சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ:
  எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

  ReplyDelete
 27. நல்ல பதிவு. மிகவும் ரசித்தேன். அழகான கணவன் மனைவி ஊடலை ஆன்மீகத்தோடு கலந்து சொல்லும் பொழுது..அருமை. பாண்டி நாட்டாளைச் சொல்லி சோணாட்டாளை மாற்றியமையும் சிறப்பு. பாண்டி நாடு பண்புடைத்து. படிப்புடைத்து. பல்சுவையுடைத்து. இன்னும் நல்லன பலவுடைத்து.

  ReplyDelete
 28. //தி. ரா. ச.(T.R.C.) said...
  கற்றுக்குட்டியாக இருந்தவர் இன்று கற்றுக்கொடுக்கும் குட்டியாக மாறிவிட்டீர்.பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் காலம் வாழ்க//

  திராச ஐயா!
  உங்கள் முதல் பின்னூட்டம் தான், முதல் ஆசி.
  என்றும் வேண்டும் உங்கள் இன்ப அன்பு.

  ReplyDelete
 29. //G.Ragavan said...
  பாண்டி நாட்டாளைச் சொல்லி சோணாட்டாளை மாற்றியமையும் சிறப்பு. பாண்டி நாடு பண்புடைத்து. படிப்புடைத்து. பல்சுவையுடைத்து. இன்னும் நல்லன பலவுடைத்து//

  ஹை! ஜிரா - நீங்களும் பாண்டி நாடு தானே? பாருங்க, எவ்வளவு "உடைத்து" சொல்றீங்க!

  சோழ நாட்டுக்காரங்க யாரும் இல்லியாப்பா? :-)

  ReplyDelete
 30. hi kannabiran!!
  pona pathivum padithen.. indha padivum padithen.. solla vaarthaigal illai .. antha paramanin perumaiyai.. neengal varnitha azahagai

  ReplyDelete
 31. Still waiting to see the Araiyar Sevai. And the words of Nammalvar about Pandiya Ladies are very true. He he he, I am also a Pandiya Nattu Pen allava? Yet to install tamil fonts. So please excuse me for English. and your definition about the Ramanujar's is simply superb. Thanks to Gira. about Pandiya Nattu pengal.

  ReplyDelete
 32. And Kannan, in Madurai, Meenakshi will rule from Chithirai to Avani only. The rest of the months will be ruled by Sundareswarar. So No Madurai Rule and Chidambaram Rule there. Only Thiruchchengodu.

  ReplyDelete
 33. //dubukudisciple said...
  hi kannabiran!!
  pona pathivum padithen.. indha padivum padithen.. solla vaarthaigal illai .. antha paramanin perumaiyai.. neengal varnitha azahagai//

  நன்றி சுதா!
  பரமன் அழகு, அதனால் அவனை யார் வர்ணித்தாலும் அழகு தான்!:-)

  ReplyDelete
 34. //in Madurai, Meenakshi will rule from Chithirai to Avani only. The rest of the months will be ruled by Sundareswarar. So No Madurai Rule and Chidambaram Rule there. Only Thiruchchengodu.//

  ஓகோ, அப்படியா கீதாம்மா.
  இதுவரை அடியேன் அறிந்திராதது.
  சித்திரை-ஆவணி = 5 மாதம்
  அப்போ மீதம் 7 மாதம் சொக்கர் தானா! ஹைய்யா! :-)
  அம்பி, கவனிக்கவும்!

  ReplyDelete
 35. //கீதா சாம்பசிவம் said...
  And the words of Nammalvar about Pandiya Ladies are very true. He he he, I am also a Pandiya Nattu Pen allava? //

  ஊர்ஸ் பாசம் பாருங்க! நம்மாழ்வார், கீதாம்மா, ஜிரா எல்லாம் ஒன்ன்ய் சேந்துக்குறாங்க! பலே பாண்டியா! :-)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP