2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-1)
திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
என்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா? வரும் 2008-இலாவது ஆலயங்கள் திருந்துமா?
இல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,
ஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்!
இந்த ஆண்டின் துவக்கத்தில் என் இனிய நண்பன் ராகவன் ஒரு பதிவு போட்டிருந்தான். 2007 இல் ஆவது திருக்கோயில்கள் திருந்துமா என்று! - அதில் அவன் தனிப்பட்ட ஆசைகளை மட்டுமே சொல்லி இருந்தானே அன்றி, சமூக நடைமுறை வழிகளைச் சொல்லவில்லை!
இதோ ஆண்டு முடியப் போகிறது! ஆலயங்கள் திருந்தி விட்டனவா?
ஹிஹி! அது எல்லாம் நடக்கிற விஷயமா என்ன? அப்ப இதுக்கு என்ன தான் வழி? - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்! எப்படி? மேலே படிங்க.
ஆலயங்கள் திருந்தணும்னா ரெண்டு பேரு மனசு வைக்கணும்!
ஒன்னு நிர்வாகம்! இன்னொன்னு நாம்! - நிர்வாகத்தின் பங்கு 60% என்றால் நம் பங்கு 40%.
நிர்வாகம் பற்றிய மாற்று எண்ணங்கள் குறித்து அடுத்த பதிவில் பலவற்றைச் சொல்கிறேன்! இன்னிக்கி நம்மளால முடிஞ்சது என்னென்ன பண்ணலாம்-னு பார்ப்போமா?
ஜனவரி முதல் நாள், முதல் வேலையாக இறைவனைத் தரிசத்து விட்டுத் தான் புத்தாண்டை ஆரம்பிக்க வேண்டும் என்று பல பேர் நினைப்பார்கள்!
அதற்காக மார்கழிக் குளிரில், கால் கடுக்க பெரிய வரிசையில் நிற்பார்கள்! - நல்லது தான்! இறைவன் திருமுகம் நம் மனத்தைக் கனியச் செய்யக் கூடியது! அவசியம் சென்று சேவித்து விட்டு வாருங்கள்!
ஆனால் அப்படி வரிசையில் நிற்கும் போது, கொஞ்சம் கீழ்க்கண்ட சிந்தனைகளையும் அசை போட்டுக் கொண்டே நில்லுங்கள்! இறைவனுக்கு நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பாக, சில புத்தாண்டு உறுதிமொழிகள் அமையட்டுமே!
1. எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள்! - முதலில் ஈசியா சேவிக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிடப் பழகிக் கொள்ளுங்கள்!
பிசினஸ் க்ளாஸ், எகானமி க்ளாஸ், முதல் வகுப்பு, ஏசி சேர் கார் என்றெல்லாம் சொகுசுப் பயணம் செய்ய, ஆலயம் என்பது விமானப் பயணமோ, இரயில் பயணமோ அல்ல!
இறையருளில் இப்படியான சொகுசுகள், ஊருக்குக் கொண்டு போய் சேர்க்காது! :-)
கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
அப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை-ன்னா, அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?
தயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம்! முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்! உங்க கால வசதிக்கு ஒத்து வருவது போல் ஆலய யாத்திரைக்கு முன்பே திட்டமிட்டுக் கொண்டு செல்லுங்கள்!
(சிறப்புத் தரிசனம் இருப்பதால் தானே போகிறோம்; நான் ஒருவர் மட்டும் மாறினால் போதுமா? என்பதெல்லாம் விதண்டாவாதம் தான்! அரசு இந்தப் பணம் கொழிக்கும் திட்டத்தை அவ்வளவு சீக்கிரம் கலைக்காது! அதற்கு மாற்று வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)
2. ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!
நினைவில் நிறுத்துங்கள்!
* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்?
** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை!
*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!
நம் அம்மா அப்பா கூட பெற்ற பிள்ளைகளிடம் வேண்டுமானால், பணம் எதிர்பார்க்காமல் இருக்கலாம்! ஆனால் அதே அம்மா அப்பா, பணத்தை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பார்கள்!
இறைவனோ நம் அனைவருக்குமே தாயும் தந்தையும் ஆனவன்! எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை எதிர்பார்ப்பதில்லை!
அச்சோ, தெய்வ குற்றம் ஆகி விடுமே-ன்னு அச்சமா? வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள்! போதும்!
அப்படின்னா ஆலயச் செலவுக்கும், வளர்ச்சிக்கும் என்ன செய்வதாம்?-னு கேள்வி வரும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!
எல்லாப் பக்தர்களுமே குற்ற உணர்ச்சியில் தான் உண்டியலில் பணம் போடுறாங்கன்னு சொல்ல மாட்டேன்! அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க! அது புரிகிறது!
ஆனா அந்த உதவி, சரியாகப் பயன்படுதா?....இல்லை முதலை வாயில் போய் விழுதா? சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும்! அதுக்கு என்ன பண்ணலாம்?
கோவில் உண்டியல் அருகே உட்கார்ந்து கொண்டு, ஒரு காசோலையில் பணம் மட்டும் நிரப்பிக் கொள்ளுங்கள்! உண்டியலில் எவ்ளோ பணம் போட நெனச்சீங்களோ, அதைக் காசோலையில் எழுதிக் கொள்ளுங்க!
ஒவ்வொரு முறை கோவிலுக்குப் போகும் போதும், பழம் பூ தேங்காய் போல, இந்தக் காசோலைப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லுங்க! காசோலைப் புத்தகம் நிரம்பிய பின், அதை ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கோ, தர்ம காரியத்துக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்!
இருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள்! கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள்! கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை! :-)
4. ஆலய வளாகத்தில் நடைபெறும் சிறுவர் வகுப்புகள், தமிழ் இலக்கிய முயற்சிகள், விரிவுரைகள், இசை வகுப்புகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள முயலுங்கள்.
இதுவும் ஒரு யோகா பயிற்சி போலத் தான்! கோயிலில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டாம். திறந்து வைத்துக் கொண்டு, இது போல் பயிற்சிகள் இருக்கா-ன்னு விசாரியுங்கள்.
5. நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை,
தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.
அவர்களாகச் செய்யும் காலம் வரும் வரை, நீங்கள் தான் ஒரு காலை முன் வைக்க வேண்டும். உங்கள் பிறந்த நாளன்று முயன்று பாருங்கள். புரிந்து செய்யும் வழிபாட்டில் நிச்சயம் உங்கள் மனம் லயித்துக் கரைந்து போகும்.
வெளி மாநிலங்களில் நீங்கள் யாத்திரை போனால் பரவாயில்லை! நம்ம ஊரில், நம்ம ஆழ்வார்கள் இறைவனோடு தமிழில் உரையாடினதை, உங்கள் காதுகள் கேட்கக் கசக்குமா என்ன?
பூபாலக திரிவிக்ரமாய நமஹ= அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நமஹ= சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி!
சகடாசுர காலாந்தகாய நமஹ= பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ= குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
என்று அவ்வளவு அழகாக மொழியாக்கிக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க!
யாரு? தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா? சேச்சே! இல்லையில்லை! இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா? இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே!:-)
இதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்! ....
தமிழ்த் தெய்வத்தையே ஆண்ட ஒரு பெண்!.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா! அதைப் பயன்படுத்திக்குங்க!
6. பெருமை வாய்ந்த பல ஆலயங்கள் மிக மிகப் பழமையானவை. இன்று அவற்றுள் பல கேட்பார் அற்றுக் கிடக்கின்றன. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
ஒரே இடத்தில் பணம் கொட்டுவதால் பெரிய நன்மைகள் ஆலயத்துக்கோ, உங்களுக்கோ எதுவுமே அல்ல! அரசின் முதலை வாய்க்குத் தான் போகும்.
எனவே இப்படி மாற்று வழியில் காணிக்கைகள் செலுத்துங்கள். தமிழ்ப் பதிகங்கள், பாசுரங்கள் பெற்ற தலங்கள் எல்லாம் ஓரளவு சீரடையும்.
கட்டாயம் இந்த வலைப்பூவுக்குப் போங்கள்;
Temple Cleaners என்ற அவர்கள் yahoo group-உம் உள்ளது. அவர்கள் இது போன்ற உதவி தேவைப்படும் தொன்மையான ஆலயங்களை அந்த வலைப்பதிவில் அடிக்கடி பட்டியல் இடுவார்கள். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!
7. ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!
ஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!
இறைவனைக் கண்ணாரக் காண்பதும் ஒன்று தான்! எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான்! முதல் முறை பழகும் போது கடினமாக இருக்கும்! மாற்றத்தை மனம் பழகிக் கொண்டால், அதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களுக்குத் தானாகப் புரியும்!
முன்பெல்லாம் ஆலயத்தை ஒட்டி ஆதுரச் சாலைகள் (மருத்துவமனைகள்), கல்வி நிலையங்கள், பாலர் பள்ளிகள் இருக்கும். பொன்னியின் செல்வனில் கூடப் படிச்சிருப்பீங்க!
திருவரங்கத்தில் இராமானுசர் தானியக் கொப்பரை உண்டியல், மருத்துவ நிதி எல்லாம் ஏற்படுத்தினார். மறைந்த காஞ்சிப் பெரியவர் பிடி அரிசித் திட்டம் கொண்டு வந்தார்.
தினமும் சமைக்கும் முன்னர், பல குடும்பங்கள், ஒரு பிடி அரிசியை, வீட்டில் உள்ள உண்டியல் பாத்திரத்தில் கொட்டினர். பின்னர் அவை தர்ம காரியங்களுக்குச் சேகரிக்கப்பட்டன.
ஆனா, இப்போது ஆலயங்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாற்றப்பட்ட பின், இவை எல்லாம் போக்கொழிந்தன. எனவே நீங்களாக அருகில் உள்ள ஒரு காப்பகத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் ஆலயம் செல்லும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!
இயந்திர கதி வாழ்வில், குழந்தைகளுக்குத் தங்களை ஒத்த Lesser Fortunate குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகப் பொறுப்பு கூடும்! நீங்க எவ்ளோ அட்வைஸ் பண்ணியும் கேக்காத பசங்க, இதப் பாத்து தானா மாறுவாங்க!
சும்மா டிவிப் பொட்டி, கம்ப்யூட்டர் கேம்ஸ், ஆர்க்குட் சாட், சினிமாவிலேயே இந்தக் காலத்துப் பசங்க மூழ்கிக் கிடக்குதுங்க-ன்னு சலிச்சிக்காதீங்க. இப்படி முயன்று பாருங்க. குழந்தைகளுக்குப் பிடித்துப் போகும்.
அடுத்த தலைமுறைக்கு நம்ம ஆன்மீகம், பண்பாடு, மனித நேயப் பார்வையைக் கொண்டு கொடுத்த புண்ணியம் உங்களுக்குக் கிட்டட்டும்!
8. ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீறு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய் அதற்கென்று இருக்கும் இடத்தில் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள்! ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ்! :-)
9. ஆலயத்தில் இரைந்து பேசலாம்! ஓடி ஆடலாம்! ஒருவரை ஒருவர் விசாரிக்கலாம்! குடும்பங்கள் கலந்துரையாடலாம்! எந்தப் புடைவை எங்கே வாங்கினீங்க-ன்னு கேட்கலாம்! யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இருக்கீங்க-ன்னு விசாரிக்கலாம்! நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம்! தப்பே இல்லை! :-)
நம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள்! தியான மண்டபங்கள் அல்ல! அதனால் தாரளமாகப் பேசுங்கள்!
ஆனால் முடிந்தவரை சுடு சொற்களை, ஆலய வளாகத்தில் தவிர்க்கவும்! அடுத்தவரைப் புறங்கூறிப் பேசுதல், மட்டம் தட்டிப் பேசுதல் முதலான செயல்களைத் தவிர்க்கவும்!
கருவறைக்குள் மட்டும் அமைதி காத்து, வழிபடுங்கள்!
பிற இடங்கள் எல்லாம் உங்கள் வீட்டு அறைகள் தான்! கருவறை மட்டும் தான் நூலக அறை! அங்கு அமைதி பெறுங்கள்!
10. எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!
நம் குழந்தைகள் இன்று மாறுபட்ட காலகட்டத்தில் வளர்கின்றன. எதை ஒன்றையும் கேள்வி கேட்டு அறியும் குணம் இன்று அதிகம்! அது நல்லதும் கூட! அப்போது தான் உடைமைக் குணம் (sense of ownership) வளரும்!
இப்படி வளரும் குழந்தைகளின் முன், இறைவனைக் கூடப் பணமும் அதிகாரமும் இருந்தால் தான் பார்க்க முடியும் என்று தவறான யோசனைக்கு நாமே தள்ளிவிடலாமா?
இதனால் ஒட்டு மொத்த பண்பாடும் மாறித் தான் போகும். மன அமைதிக்கு ஆன்மீகம் என்ற நிலை போய், மன அழுத்தங்களைத் தான் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்வோம்!
அதனால்
எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!
(அடுத்த பதிவில், தமிழ் வழிபாடு, ஆலய நிர்வாகச் சீர்திருத்தம்-னு அவங்க கையில் இருக்கும் ஐட்டங்களைப் பார்க்கலாம்! )
அனைவருக்கும்
இனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்! இறையருள் கனியட்டும்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புதுமணத் தம்பதிகளுக்கு Happy Thala New Year :-)
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!