திருக்கோவிலூர்: தமிழ் வேதம் பொய் சொல்லுமா? - 2
என்னவென்றே புரியவில்லை மூவருக்கும்! நெருக்குதல் அதிகரிக்க அதிகரிக்க, மூவருக்கும் மூச்சு முட்டுகிறது! அந்த அடைமழையிலும், குளிரிலும் கூட வேர்க்கிறது! திருட்டுப் பயமோ திருக்கோவிலூரில்? முந்தைய பதிவு இங்கே!
யாருப்பா அந்த அறிவு கெட்ட திருடன்? ஒன்றுமே இல்லாத அன்னாடங்காச்சிகள் கிட்டயா திருட வருவான்? வந்தது தான் வந்தான்! இப்படியா சத்தம் போடாமல் வருவது? ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே! கும்மிருட்டில் ஆளும் சரியாத் தெரியலையே!
ஓசையும் இல்லை! ஒளியும் இல்லை!
பேய்: இது ஏதோ மனித வாசனை மாதிரியே தெரியல்லையே! மிருகமும் இல்லை! விளக்கு கிடைச்சாலாச்சும் யாருன்னு கண்டுபிடிக்கலாம்! இந்த அர்த்த ஜாமத்தில் யாரிடம் போய் விளக்கு கேட்பது?
(ஹூம்...பிற்கால மனிதர்களா இருந்தா பாக்கெட்டிலேயே நெருப்பு வைத்துக் கொண்டு, உலா வருவாங்க! ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே! என்ன செய்ய :-)
பூதம்: ஹூம்! இது தான் சரி! நம் யோகத்தில் நாமே ஒரு விளக்கேற்றலாம்!
விளங்க முடியாததைக் கூடி விளக்கிக் காட்டுவது தானே விளக்கு! - அதுக்குத் தானே விளக்கு-ன்னே பெயர்!
நாமே ஏற்றலாம்! பார்ப்போம் ஏதாச்சும் தெரிகிறதா என்று! சரி, எதை வச்சி ஏற்றுவது?
அகல் இல்லை, எண்ணெய் இல்லை, திரி இல்லை, நெருப்பு இல்லை!
பொய்கை: இல்லை இல்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது?
இல்லை-யை வைத்துக் கொண்டு ஏதாச்சும் ஏற்ற முடியுமா? முடியும்!!
எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - இந்த "இல்லை இல்லை"-யை வைத்துக் கொண்டு ஏற்ற முடியுமே!
எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது! என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ, கர்மாவிற்கோ, ஏதோ ஒன்றுக்காகக் கொடுக்கப்பட்டது!
யாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா?
பொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது! செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க! - இப்படி எல்லாமே, கிடைச்சதும் அடைஞ்சதும் தானே!
இப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்!
ஓம் நமோ நாராயணாய!
நமோ என்று சொல்லும் போது, நம என்றே அவருக்குத் தெரிகிறது!
ந ம
= ந (இல்லை) !
= ம (எனது)!!
= எனதில்லை! எனதில்லை!
ஓம் நமோ நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
அனைத்தும் பரம்பொருள் தந்தது! அனைத்தும் பரம்பொருள் தந்தது!
ஆகா! தோன்றி விட்டது திவ்யப் பிரபந்தம்! தமிழ் வேதம்!
பொய்கையார் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகிறார்!
அவருக்கு உலகம் என்னும் நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல! - அதனால் "வையம்" என்றே துவங்குகிறார். - அரும்பெரும் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உலகம் என்னும் முதற் சொல் வைத்தே தொடங்குவது போல், வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, திவ்யப் பிரபந்தம் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு!
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!
உலகத்தை அகல் ஆக்கினேன், சூழ்ந்த கடலை நெய்யாக்கினேன்,
உயிர் காக்கும் கதிரவனை நெருப்பாக்கி்னேன்...
சக்கரம் ஏந்தியவன் திருவடிக்குச், சொல் மாலை சூட்டினேனே! மனித குலத்தின் இடர் என்னும் இருள் நீங்காதா?
முதல் விளக்கு ஏற்றியாகி விட்டது. அதன் ஒளி, இருளைக் கிழித்து விட்டது!
ஒரே ஒரு சுடர் போதாதா கும்மிருட்டை நீக்க! இனி ஏற்றிய விளக்கைக் காத்துக் கொள்ள வேண்டுமே!
விளக்கில் இருந்தே விளக்கு எடுக்கிறார் பூதத்தாழ்வார்!
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்
அன்பை வாழ்வைத் தாங்கும் அகல் ஆக்கினேன், இறைவனிடத்தில் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கினேன்,
இன்பமாய் உருகி மகிழும் சிந்தனையையே திரியாக்கினேன்...
ஞான விளக்கு ஏற்றினேன்! நாராணனுக்கு ஞானத் தமிழில்(வேதம்) சொன்னேனே!
என்று அன்புக் கண்ணீர் பெருக, பூதத்தாழ்வார் ஏற்றி வைத்த இரண்டாம் விளக்கும் ஜொலிக்கின்றது!
(உலகத்தை ஒரு விளக்காகவும், அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்க வேண்டும்?
ஒன்றில் கதிரவனையும், இன்னொன்றில் நம் சிந்தனையையும் ஏன் திரியாகப் போட வேண்டும்?
முதல் விளக்கு புற அழுக்கு அகற்ற! - அதான் உலகமும், சூரியனும்!
இரண்டாம் விளக்கு அக அழுக்கு அகற்ற! - அதான் அன்பும், சிந்தனையும்!!
இறை தரிசனம் வேண்டும் என்றால், இந்த இரண்டு விளக்குகளும் ஏற்ற வேணும்!!!
இதையே முதலாழ்வார்கள் ஏற்றி நமக்கு வழி காட்டினார்கள்!)
முதல் இருவர் ஏற்றிய விளக்குகள்...மொத்தமாய் இருள் போக்கி விட்டன!
இப்போ நல்லாத் தெரியுது, அந்த நாலாம் ஆசாமி யார் என்று!
ஆகா...பெருந்திருடன் தான் அவன்! அடே...நீயா எங்களை இப்படிப் போட்டு நெருக்கித் தள்ளியது?
பொய்கையும், பூதமும் ஏற்றிய விளக்கின் ஒளியில், கடைசியா அங்கு வந்த பேயாழ்வார் அந்தக் கள்வனை அப்படியே வர்ணிக்கிறார்!
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று
விளக்கின் ஒளியில் முதலில் கண்ணில் பட்டது யார்? கடவுளா? இல்லை! - ஒரு பெண்! - ஆமாம்! கள்வனின் காதலி, அவன் மார்பில் இருக்கிறாள்! மின்தடை ஏற்பட்டு, பின்னர் வெளிச்சம் வந்ததும், குழந்தைக்கு ஆசையா விளையாடின விளையாட்டுச் சாமானா முதலில் தெரியும்?
இருள் நீங்கி, ஒளி கண்டதும், அம்மாஆஆஆ என்று தாயைத் தானே ஓடிப் போய்க் கட்டிக் கொள்ளும்!
ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்குக் கிடைப்பார்கள்!ஆனால் எல்லாப் பிறவியிலும், வரும் ஒரே ஒரு அன்னை யார்?
அவளே இவள்! - திருக் கண்டேன் - உலகம் அனைத்துக்கும் அன்னை!
திரு! மகாலக்ஷ்மி! அவளைக் கண்டேன்!
திருக்கோவிலூர் எம்பெருமான், ஓங்கி உலகளந்த உத்தமன் கோலத்தில்!
அட, ஆழ்வார் கூடப் பொய் சொல்வாரா என்ன?
பொன்மேனி சிவபிரானுக்கு உரியது ஆயிற்றே! பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு இசைத்து என்பதல்லவா பாட்டு!
பெருமாள் நீல மேனியன் ஆயிற்றே! நீலமேனி கண்டேன்னு தானே சொல்லணும்! - இவர் பெருமாளைப் போய் பொன்மேனி கண்டேன்-ன்னு சொல்லறாரே! ஒரு வேளை, விளக்கின் ஒளி போதவில்லையா என்ன?
பொய் விளக்கல்லவே இது!
மெய் விளக்க வந்த மெய் விளக்கு ஆயிற்றே! அப்பறம் எப்படி இப்படி?
(அடுத்த பகுதியில் நிறையும்)
இன்று கைசிக ஏகாதசி! (Nov 21, 2007)
தறி கெட்டுப் போன பார்ப்பனன் ஒருவனுக்கு, கீழ்க் குலத்தவன் ஒருவன், உபதேசம் செய்து, மோட்சத்துக்கு வழிகாட்டிய நாள்!
சென்ற ஆண்டு இது பற்றி விளக்கமாக, மாதவிப் பந்தலில் ஒரு பதிவு இட்டிருந்தேன்!
//இந்த ஆண்டு வேறு ஒரு திடீர் பதிவுக்குக் காத்திருங்கள்! :-)// - குமரனின் பரிசுப் பதிவு இன்னொரு நாள் வரணும்-னு இறைவன் திருவுள்ளம் போலும்! அடியேன் சென்ற ஆண்டு இட்ட பதிவை மீள் பதிவாக, சில நிமிடங்களில் இடுகிறேன்!
இந்நாளில், இறைவன் திருக்கதைகளைச் செவி குளிரக் கேட்பது, சிந்தைக்கு அமைதி தரும்!
முதலாழ்வார்கள் கதையை இன்று நன்னாளில் சொன்னதும் ஒரு சிறப்பு தான்!












































