KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு!
விண்மீன் வாரத்தில் வேண்டாமே-ன்னு தான், முடிவுரையில் இதை எழுதாது, அது முடிஞ்சவுடன் எழுதுகிறேன்!
ஆன்மீகம் எழுதும் பதிவர்களுக்கும், பின்னூட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஒரு சொல் சொல்லிக்க ஆசைப்படுகிறேன்.
மற்றவர்கள் இந்தப் பகுதியை மட்டும் ஸ்கிப் செஞ்சிடலாம்! (இப்படிச் சொல்வதாலயே நீங்கள் ஸ்கிப் செய்யப் போவதில்லை என்பது தனிக்கதை!:-)
நின் அருளே புரிந்து இருந்தேன்! இனி என்ன திருக்குறிப்பே?
பொதுவா நான் பதிவுலக அரசியல், பின்னூட்ட விளையாட்டுகளில் அதிகம் புழங்காதவன். ஆனால் இந்த வாரம், வரிசையாக இரண்டு மூன்று இடுகைகளில் அடியேன் பொங்கியது எனக்கே தெரியும்! பலருக்கு வியப்பும், சிலருக்கு நட்சத்திர வார ஆணவமோ என்றும் தோன்றி இருக்கலாம்! நெருங்கிப் பழகுபவர்களுக்கு அப்படி இல்லைன்னு நல்லாத் தெரியும்! ஆனால் எனக்குத் தோன்றியது என்னான்னா...
* எதிர்பார்ப்புகளை அடியேன் மேல் சில நல்லன்பர்கள் அதிகம் வளர்த்துக் கொள்கிறார்கள்! அவர்களுக்குப் பிடித்தமானதை எல்லாம் நானும் சுமக்க வேண்டும் என்ற அதீத ஆவல்!
* உங்கள் தமிழ் நடையில் முருகனைப் பாடுங்களேன், திருவண்ணாமலை பற்றி எழுதுங்களேன்-னு நேயர் விருப்பங்கள் தருவது தவறே இல்லை!
ஆனால் அப்படி விருப்பமாய்த் தாராமல், அதைப் பற்றியே எழுதுகிறாயே, ஏன் இதைப் பற்றி எழுதவில்லை, அவனுக்குக் குடை பிடிக்கிறாயே, ஏன் இவருக்குப் பிடித்தால் குறைந்து விடுவாயா என்னும் சட்டாம்பிள்ளை போக்கு நலம் பயக்காது!
* நான் இணையத்தில் படித்து விட்டு, அதைப் பதிவு போடும் சுபாவம் உள்ள பையன் இல்லை! ஆன்மீக விஷயத்தில் மட்டும் உள்-வாங்காமல் (Internalizing) அவ்வளவு சீக்கிரம் எழுதவே மாட்டேன்! இதனால் தான் சில சமயங்களில், வெட்டிப்பயல், "எப்பமே லயிச்சி எழுதுவது போல் இன்னிக்கி எழுதல போல இருக்கே"-ன்னு பின்னூட்டத்தில் சொல்லுவாரு!
வாரியாரைப் போய் பெருமாள் மீதும் காலட்சேபம் பண்ணுங்க! வேளுக்குடி சுவாமியிடம் போய் வள்ளித் திருமணம் விரிவுரை பண்ணுங்க-ன்னு எல்லாம் கேட்பது எவ்வளவு அபத்தம்? ஒரு படைப்பாளியின் கருப்பொருளைத் தீர்மானிக்கும் உரிமை யாருக்கு என்பதும் உங்களுக்கே தெரியும்!
முருகனருள் வலைப்பூவில், என் குலதெய்வம் முருகப்பெருமான் மேல் ஆறு நாளும் சஷ்டிப் பதிவு போடுறேன். ரத்னேஷ் ஐயா போன்றவர்கள் படிச்சிட்டு, திருச்செந்தூருக்கு நேராப் போனாக் கூட இப்படித் தரிசனம் கிடைக்குமாத் தெரியாது-ன்னு சிலாகித்துச் சொல்றாங்க!
அவங்க ஜிராவை இப்படிச் சொன்னாக் கூட அர்த்தம் இருக்கு! ஆனா அவிங்க என்னைத் தான் சொல்லுறாங்க! என் ஆதங்கம் என்னான்னா, எதிர் தரப்பில் இருப்பவருக்கும் தெரியும் போது, நம் தரப்பில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளாது சொல்லாடுவது தான் வேதனை தருகிறது!
முருகப்பெருமான், சிவபெருமான், அம்பாள், பிள்ளையார், சண்டேஸ்வரர், திருவாரூர், தில்லைக்களி, நாட்டார் தெய்வ மாரியம்மன், அவ்வளவு ஏன்,
கிறிஸ்துமஸ் அன்று இயேசு பிரான்
இப்படிப் பதிவிட்டது எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லையா?
நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! எத்துணை ஆன்மீக அன்பர்கள் இயேசுபிரான் மீது பதிவிட்டு உள்ளீர்கள்?
எண்ணிக்கையில் அவை உங்களுக்குப் போதவில்லையா? ஒவ்வொரு வலைப்பூவிலும், முருகனருளில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு, அம்மன் பாட்டில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு என்று கணக்கு சமர்பிக்க வேண்டுமா? சொல்லுங்கள், சமர்பிக்கிறேன்! இல்லை மற்ற தெய்வங்கள் மீது இடப்படும் உங்கள் பதிவுக்கு எல்லாம் அடியேன் பின்னூட்டியது இல்லையா? கீதாம்மாவைத் தில்லைக் கொடிக்கவி வரலாற்றை ஊருக்கே சொல்லுங்க-ன்னு வேண்டுகோள் வைக்கலையா? SK ஐயாவிடம் இந்தத் திருப்புகழ், அந்தத் திருப்புகழ்-ன்னு மாறி மாறி நேயர் விருப்பம் வைக்கலையா? நீங்க என்ன நேயர் விருப்பம் வைத்தீர்கள் அடியேனிடம்? ஏண்டா பெருமாளைப் பத்தி மட்டும் எழுதற-ன்னு அதிகாரமா மட்டும் கேக்கறீங்க!
ராமானுசரை எழுதும் நீ ரமணரை எழுதக் கூடாதா-ன்னு கேட்டா, அடியேன் விக்கியில் இருப்பதைப் பார்த்து எழுத முடியும்! ஆனால் பரிபூர்ணமாக உள்வாங்காமல் எழுதுதல் எனக்கு வராத ஒன்று! அதைத் தான் லயிப்பு-ன்னு சொல்றீங்க போல!
உங்களில் பல பேருக்கு அடியேனின் தமிழும் நடையும் பிடிச்சிருக்கு அப்படின்னா, அதுக்கு அதன் பின்னுள்ள இந்த நேர்மையும் ஒரு காரணமா இருக்கலாம்!
அதனால் தான் என்னைப் பிடித்து அழுத்தாதீர்கள் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!
Taare Zameen Par பாத்தீங்கன்னா இப்படிப் பண்ண மாட்டீங்க! பெரியவர்களின் இந்தத் திணித்தல் approach தான் இன்றைய தலைமுறையை நம் பண்பாட்டுப் பொக்கிஷங்களில் இருந்து தள்ளி வைக்கிறது!
* ஆன்மீகத்தில் பல நிலைகள் உள்ளன.
அதிகம் பேசாது, கேள்விகள் ஏதும் கேட்காது, தனக்குள் இறைவனைத் தேடி அறிவது என்பது ஒன்று!
அடியார்களுடன் அடியார்களாக, கூட்டு முயற்சியில் இறைவனின் குணானுபவங்களைப் பேசுவதும், பாடுவதும், கேள்வி கேட்பதும், விடை தேடுவதும் ஒன்று!
அப்படி எல்லாம் இல்லை! நம் சமயத்தை நாமே கேள்வி கேட்கலாமா? அப்படிக் கேட்டால் குழப்பத்தில் இருக்கிறாய்-ன்னு சொல்றீங்க!
அதுவும் நல்ல பூக்களை அறிமுகப்படுத்தும் ஒரு வலைச்சரத்தில், நல்ல பூக்களை மட்டும் அறிமுகப்படுத்தலாமே! குழப்பவாதப் பூக்களை அறிமுகப்படுத்த வலைச்சரம் தேவையில்லை! குழப்பத்தின் தலையில் குட்டத் தலைச்சரம் என்று தனியாகத் துவங்கி விடுவது நல்லது!
சமயக் குழப்பத்தில் இருக்கிறாய் என்று சொன்னால் அடியேன் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை! ஆனானப்பட்ட அருணகிரியாரும், மதுரகவி ஆழ்வாருமே சமயக் குழப்பத்தில் இருந்தவர்கள்! நம் சமயத்தை நாமே கேள்வி கேட்கலாமா? அதுக்கு தான் இன்னொருத்தன் இருக்கானே என்றால், இன்னொரு பெரியார் அவதரிக்க இப்போதே துண்டு போட்டு வைக்கிறீர்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்! நம் வீட்டை நாமே துடைப்பதற்கும், சானிடரி இன்ஸ்பெக்டர் வந்து துடைப்பதற்கும் உள்ள வேறுபாடு நீங்கள் அறியாதது அல்ல! உங்களுக்கு அடுத்து ஆண்டவன் அவதாரம் வேண்டுமா இல்லை பெரியார் அவதாரம் வேண்டுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்!
* உண்மையாலுமே, KRS சைவ/வைணவம் பார்ப்பவன் இல்லைன்னு உங்களுக்கும் தெரியும்!
தில்லை=சைவம்! அதுனால நைசா சைக்கிள் கேப்புல வைணவத்தைக் கம்பேர் பண்ணி சைவத்தைத் தாழ்த்திறலாம் என்கிற மட்டமான எண்ணம் உடையவனா அடியேன்?
ராமர் பாலம் வைணவம் தானே? ராமானுசர் இருந்திருந்தால் பொது நலனுக்குப் அணையைக் (பாலம் மெய்யோ/பொய்யோ - அது வேற விஷயம்) கொடுத்து விடு-ன்னு சொல்லி இருப்பாரு-ன்னு பதிவு போட்டேனே! அப்போ அடியேனோட Hidden Vainava Agenda-வை யாரும் சுட்டிக் காட்டலையே?
எது உங்களை இப்படி எல்லாம் சொல்லத் தூண்டுது? சொல்லட்டுமா?
யார் சொன்னாலும், நான் சொல்லக் கூடாது என்ற உங்களின் அதீத அன்பு தான் இப்படி எல்லாம் பேச வைக்குது!
ஆன்மீக வலையுலகப் பெரியவர்களே, உங்கள் குழந்தை கேஆரெஸ் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்!
வெறும் அலங்காரங்கள், கோயில் விளக்கங்கள், ஸ்லோகங்களுக்குப் பொழிப்புரைகள், கதைகள்-ன்னு சொல்லிக்கிட்டு போவதால் மட்டும் ஆன்மீகம் வளர்ந்து விடாது!
தில்லை தீட்சிதருக்கு மடல் தீட்ட அடியேனுக்கு என்ன உரிமை இருக்கு-ன்னு சில அன்பர்கள் நினைக்கிறாங்க!
தில்லையை விட்டுடுவோம்! இதே விசயம் திருமலையில் நடந்திருந்தால் அதை விட இன்னும் சினந்தே எழுதி இருப்பேன். வலையுலகில் என் முதல் பதிவே திருமலை அர்ச்சகர்களுடன் பேசிய வாய்ச் சண்டையில் தான் துவங்கியது என்பது ஞாபகம் இருக்கா?
தமிழ் தில்லையில் நுழைய இன்னும் கூத்தாட வேண்டி இருக்கு-ன்னு ஒரு வரிக்கு - அதுவும் நான் சொல்லி விட்டதால் - உங்கள் மென்மையான மனம் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலும்!
KRS சொல்லிட்டாரே! KRS சொல்லிட்டாரே-ன்னா, என்னய்யா பெரிய இவனா இந்தக் கேஆரெஸ்ஸு? பச்சைப் பய புள்ள அவன்! அவன் சொன்னா எதுக்கு இம்புட்டு டென்சன் ஆவறீங்க?
அவன் திருவாரூர் சிவன் கோயில்-ல தமிழ் இல்லேன்னோ, குன்றக்குடி கோயில்ல தமிழ் இல்லேன்னோ சொல்லலையே? தில்லையை மட்டும் தானே சொன்னான்!
தில்லையில் தமிழை நீச பாஷை-ன்னு தீட்சிதர்கள் சொல்லிட்டாங்க-ன்னு சும்மா ஏதாச்சும் இட்டுக் கட்டினானா? //தீட்சிதர்களே, நீங்களே பெருமான் பாதம் பள்ளியறை எழும் போது, தமிழ்ப் பதிகம் பாடறீங்க-ன்னு// அவன் சொன்னதை நீங்க பாக்கலையா?
கருவறையில் தமிழில் பாடாததையும், அன்பர்களைக் கரடு முரடாக நடத்துவதையும் தானே அப்பதிவில் சுட்டிக் காட்டினான்?
ஆனா அதே சமயம் தீட்டு கழிச்சாங்க-ன்னு, பிரச்சனை முடிஞ்சாப் பிறகும் ஒரு பிரச்சனை பண்ண போது என்ன சொன்னான்? பாக்கலையா?
//ஆனா இதுல நான் பெரியாரைத் தான் ஃபாலோ பண்ணுவேன்!
டெய்லி பாடப் போற! ஆறு காலமும் பாடப் போற! எத்தனை வாட்டி கழுவித் தள்ளுவான்? பெண்டு கழண்டிடும்! சாப்பாடக் கூட நேரம் இருக்காது! பக்கெட்டும் கையுமா நிக்கவே டயம் சரியா இருக்கும்! வெங்காயம்! உன் வேலை ஆச்சா! உனக்குப் பிரச்சனை பண்ணலையே! போயிக்கிட்டே இரு! :-)//
தத்துவ வித்தகர் ஜீவா வந்து Hats Off KRS-ன்னு சொல்லிட்டுப் போனாரு!
ஒரு விசயம் கேக்குறேன்.
இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்தான் இறைவனின் பொன்னம்பலம். அந்த அம்பலத்தை எண்ணெய் அம்பலம் ஆக்கியது யார்? எண்ணெயை வீசி வீசி அசுத்தப்படுத்தியது யார்?
(கறி மாமிசம் உண்டு, ஒடம்பைக் கும்முன்னு வச்சிருக்கும்) போலீஸ் கூட, அவ்வளவு களேபரத்திலும், விதிகளை மதித்து, சட்டையைக் கழட்டிவிட்டுத் தான் அம்பலத்துக்குள் போகிறது! அமெரிக்கப் போலீஸ் இப்படிச் செய்யுமா?
எண்ணெய் வீசி அம்பலத்தை அசுத்தப்படுத்தியதை ஆன்மீகம் பதிபவர்கள் யாரேனும் இது வரை கண்டித்தார்களா?
நடனமாடும் இறைவன் எண்ணெயிலா நடனமாடுவான்? வீட்டில் கூட ஐயோ குழந்தைக்கு வழுக்கிறப் போகிறதே-ன்னு பதறுகிறோம்! ஆனால் சைவத்தின் தலைநகரில், அம்பலத்துக்குப் பொறுப்பானவர்களே, பொறுப்பா அம்பலத்துல எண்ணெய் ஊத்தி, ஆடுறா நடராசா-ன்னு சொல்லுவாங்க! அதை யாரும் கண்டுக்கிட மாட்டோம்! உங்களுக்கு நடராஜரின் மேல் பாசமா இல்லை வேறு எவரின் மீதாவது பாசமா??
தமிழ் தில்லைக் கருவறைக்குள் நுழையக் கட்டப்படுது-ன்னு கேஆரெஸ் மட்டுமா சொன்னான்? எத்தனை பேர் சொல்கிறார்கள்? சைவ மடங்கள் மறைமுகமாச் சொல்லலையா?
ஆனா அவன் சொன்னா மட்டும் உங்களுக்குக் கோவம் வருகிறது! உடனே வைணவத்தை தூக்கி நிறுத்த சைக்கிள் கேப்பில் சைவத்தைத் தாழ்த்தறான்-ன்னு, குழந்தைத்தனமா பேசலாமா? என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல?
பெரியவங்க நீங்க குழந்தையா? இல்லை பச்சப் புள்ள கேஆரெஸ் குழந்தையா? :-)))
நாத்திகம் பேசுவோர் கருத்தை விட்டுவிட்டு ஆட்களைப் பிடித்துக் கொள்கிறார்கள்-ன்னு சொல்லுறோம்! ஆனா நாம மட்டும் என்ன பெருசா செய்யறோம்? Are we walking our talk?
தமிழ்க் கடவுள்- இல்லன்னு யாரையும் பதவி இறக்கல! இவரும் தமிழ்க் கடவுள் தான் என்று தமிழ் இலக்கியத் தரவுகளை முன் வைக்கிறோம்!
தரவுக்கு எதிர் தரவு வைப்பது ஒரு வகை! தரவினை மறுப்பது ஒரு வகை!
ஆனால் ரெண்டும் செய்யாம "இவருக்கு ஏதோ ஆசைப்பா! சொல்லிக்கிராரு! சொல்லிட்டுப் போகட்டம்" என்று, இங்கும் ஆட்களுக்கு attributing motive தான் நடக்குதே தவிர, பயனுள்ள விவாதம் நடக்குதா?
இதே திருமலைத் தெய்வம் யார் என்ற விவாதத்தில், அடியேனோ இல்லை குமரனோ இப்படி attributing motive செய்தோமா? இப்போது தில்லைக்குப் பாய்ந்து வரும் ஆன்மீக அன்பர்கள், அப்போது எங்கு இருந்தீர்கள்?
என் இனிய நண்பன் ஜிரா, திருமால்-சிவன் அனைவரும் தங்கள் தலைகளை முருகப் பெருமான் காலடியில் ஒத்தி ஒத்தி எடுத்தாங்க-ன்னு எழுதின போது (அவர் மத மாச்சர்யம் கருதி எழுதவில்லை! அது வேறு விடயம்), அப்போது எங்கே இருந்தீர்கள்? நகைச்சுவை பதிவுகளை அதிகம் இட்டு விளையாடும் வெட்டிப்பயல் அல்லவா வந்து வழக்குரைத்தார்? ஆன்மீகப் பதிவர்களின் கடமை அன்று எங்கே இருந்தது?
வாதங்கள் செய்வதை விடுத்து பேதங்கள் செய்வது யாருக்குமே அழகல்ல! புகழும், பிரபந்தமும், அனுபூதியும் ஓதும் நமக்கு இன்னும் அழகல்ல!
விவாதங்கள் அவசியம் தேவை! கேள்வி தான் வேள்வி வளர்க்கும்! மூடி மூடி மறைக்காமல் நம் வீட்டை நாம் சுத்தம் செய்து கொள்வது போல் வரவே வராது! இந்த விஷயத்தில் ஆன்மீகப் பதிவராய் என்னை அதிகம் கவர்பவர் அரைபிளேடு!
எதையும் ஒளிக்காது விவாத களமாய் முன் வைப்பவர்! அரசியல் பெற அல்ல! தெளிவு பெற! தரவுக்கு தரவு தர முயற்சிப்பாரே அன்றி, ஆன்மீகக் குழப்பவாதிகள் மலிந்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்லவே மாட்டார்!
அவர் மட்டும் ஆன்மீகப் பதிவில் இன்னும் தீவிரமாக இறங்கினால்...அச்சோ...எனக்கு நினைத்துப் பார்க்கவே இனிக்கிறது! :-)
பெரியவர்களை எதிர்த்துப் பேசி இருக்கேன்! பிழை பொறுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும், எது ஒன்றுக்கு மட்டும் அடியேன் முக்கியத்துவம் தருவேன் என்று!
அடியார் பழித்தல் (பாகவத அபசாரம்) அறவே கூடாது என்ற கருத்துக்குத் தரப்படும் அளவில்லாத மதிப்பு ஒன்று தான்,
நாத்திகன் ஒருவனை ஆத்திகன் ஆக்கியது (உங்களைப் பொறுத்த வரை வைணவன் ஆக்கியது!:-)
பகவத் கீதையோ, சுப்ரபாதமோ, தொல்காப்பியமோ, தேவாரமோ, பிரபந்தமோ, கந்தர் அனுபூதியோ அந்த நாத்திகனை ஆத்திகன் ஆக்கவில்லை!
அந்த ஏட்டில் உள்ளதை எல்லாம்
இந்த நாட்டில் கொண்டு வந்த இயக்கம் - சாதி தாழ்த்தாமை, தமிழ் தாழ்த்தாமை, அடியார் பழியாமை - இவை தான் நாத்திகனை ஆத்திகன் ஆக்கியது! அதனால் தானோ என்னவோ இராமானுசரைப் பற்றிச் சொல்லப் புகும் போது, என் பதிவுகளில் வைணவ வாடை வீசுதுன்னு நினைச்சிக்கறீங்க போல!
அந்த அனுபவத்தில் ஐயா பெரியாரிடம் கடன் வாங்கி, ஆன்மீகப் பதிவுலகத்துக்கு அடியேன் ஒரு சொல் சொல்லிக் கொள்கிறேன்!
நாத்திகர்கள் உருவாவதில்லை! உருவாக்கப்படுகிறார்கள்!
இதை ஆன்மீகம் பேணுபவர்கள் சிந்தையில் இருத்தினால், மீண்டும் ஒரு பெரியார் தோன்ற மாட்டார்! மீண்டும் ராமர் சிலைகளும் பிள்ளையார் சிலைகளும் உடைக்கப்படமாட்டாது!
நான் இன்னும் உறுதியாக நம்புவது: பிள்ளையார் சிலைகளைப் பெரியார் உடைக்கவில்லை! நம் அருமைத் தெய்வங்கள் உடைய நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம்! நாம் தான் பெரியாரின் திருக்கரங்களில் தூக்கிக் கொடுத்து உடையுங்கள்-ன்னு சொல்லி இருக்கோம்!
(இது போன்ற தன்னிலை விளக்கப் பதிவுகளை அடியேன் ஜென்மத்துக்கும் இட்டதில்லை! இப்படி இட்டதற்கு நானே வெட்கப்படுகிறேன்! முதலில் இதை இட வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா இது ரொம்ப நாளா நீறு பூத்த நெருப்பா இருக்கு! அந்த நேரத்துக்கு அடியேன் அடியேன்-ன்னு சொல்லி, நானும் குமரனும் இன்ன சிலரும் அதை அணைக்கிறோம்! ஒற்றுமைப் பதிவுக்காகவே மெனக்கெட்டு முருகனருளில் எக்ஸ்ட்ரா ரெண்டு பதிவு போட்டு சூட்டைக் குறைக்கிறோம்!
ஆனாத் திருப்பி ரெண்டு மாசம் கழிச்சி வேற உருவத்தில் வரப் போகுது. அதான் ஒரு நிரந்தரத் தீர்வாக....நம் மனங்களை நாமே கேட்டுக் கொள்ளும் முகமாக...)
மேலே காணும் ஒரு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, உங்கள் எண்ணங்களை அடியேனுக்குச் சொல்லி உதவினால், எனக்கு நானே course correction செய்து கொள்ள ஏதுவா இருக்கும்! தயங்காமல் உங்கள் எண்ணங்களை வாக்காகச் சொல்லுங்கள்! திருத்திக் கொள்கிறேன்!
ஆன்மீகமே எழுதாதே!
சமூகப் பிரச்சனைகளை ஆன்மீகத்தில் கலக்கும் குழப்பவாதிகள் "தூய்மையான" ஆன்மீகத்துக்குத் தேவை இல்லை! சமூகம் வேறு, ஆன்மீகம் வேறு என்றால்...
அடியேன் புன்சிரிப்புடன் ஒதுங்கிக் கொள்கிறேன்! சிறு வயதில் நகைச்சுவை, டகால்ட்டி-ன்னு எழுதிக்கிட்டு ஜாலியா இருக்குறத வுட்டுப்போட்டு தேவையில்லாம எதுக்கு இதெல்லாம்? காதல் மில்லிமீட்டர்-ன்னு எழுதி வச்ச நாவல் வேற இன்னும் நாலு பாகம் முடிக்காம இருக்கு!:-)
கோவிந்த நாம சங்கீர்த்தனம் - அரகரோகரா!!!
அண்ணாமலைக்கு - கோவிந்தா கோவிந்தா!!!
ஆன்மிகப் பதிவு எழுதி அடியேன் பெருசா ஒன்னும் கிழிச்சிடலை! அடியார்களும் அன்பர்களும் வருத்தப்படும் அளவுக்கு எழுதுகிறேன் என்றால், வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-ன்னு பாடுறதல பொருளே இல்லை!
வேணும்னா விட்டுறலாம்! பிரச்சனையே இல்லை!
ஆனா நல்லபடியா ஊருக்குப் போய்வர ஆசி கூறி விடைகொடுத்து அனுப்புங்க! மறக்காம மேலே வாக்களித்து அடியேன் என்ன பண்ணனும்னும் சொல்லிருங்க! பண்ணிறலாம்!
Results of the Poll: