Wednesday, June 05, 2013

கருணாநிதியின் "English" புத்தகம் - Tale of the Anklet!

அதாகப்பட்டது.... கலைஞருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் -ன்னு Blogger Draft-இல் எழுதி வச்சேன்; ஆனா...

"குமரி நீ; இமயம் நீ - மூன்று குமரி மணந்த சமயம் நீ" -ன்னுல்லாம் என்னால "கிவியரங்கம்" பாட முடியாது:)
காதல் முருகனையே, நான் அப்பிடியெல்லாம் புகழ்ந்து பாடினது கிடையாது; என் இரத்தத்துல அப்பிடியொரு haemoglobin இல்லை:)
அதனால்... ஒரு நாள் கழிச்சி, இந்த வாழ்த்துப் பதிவு;

"என்னாது? கலைஞர் English-லல்லாம் புத்தகம் எழுதுனாரா"? -ன்னு ஒங்க மூக்கு மேல Mouse வைக்காதீக;
= Tale of the Anklet & One Act Plays - Muthuvel Karunanithi - Macmillan Publishers (1968)

இந்த நூலுக்கு, அறிஞர் அண்ணா அளித்த, அழகான ஆங்கில அணிந்துரை; அதன் ஒரு பகுதி கீழே: (படம் புடிச்சித் தான் போட முடிந்தது; Image, not text)



சென்னை - 2 ஆம் உலகத் தமிழ் மாநாடு (1968) ....


கலைஞர் தமிழில் எழுதிய "பூம்புகார்" நூலின் ஆங்கில ஆக்கத்தை, வெளிநாட்டு விருந்தினர்க்கு அளிக்க ஒரு முயற்சி நடந்தது;
அப்போ வெளி வந்ததே, இந்தப் புத்தகம் = Tale of the Anklet, translated by டாக்டர். ந. சஞ்சீவி.

இதெல்லாம் நடந்தது, நான் பொறப்பதுக்கும் முன்னால..
ஆனா... டாக்டர் சஞ்சீவியின் பேரன், நான் படிச்ச பள்ளியில் தான் படிச்சான்;
வகுப்பில் என் தமிழ் உரையாடல்களைக் கண்டு பயந்துட்டானோ என்னமோ?:) என் மேல கொஞ்சம் அதிக பாசம் அவனுக்கு:)

கலைஞர், நினைவொப்பம் (autograph) இட்டு... அவன் தாத்தாவுக்கு அளித்த நூல்!
= அதைக் கொண்டாந்து, எனக்குப் பரிசாக் குடுத்துட்டான்;


இன்னும் நல்லா நினைவிருக்கு; அந்தப் புத்தகத்தின் Layout & Print Aesthetics!
அருமையான சிலப்பதிகார ஓவியங்கள்...
Export Quality என்ற அளவுக்குச் செஞ்சிருப்பாங்க!

அதில் இருந்து தான், இன்றைய பதிவின் கருப்பொருள்
= இளங்கோவின் சிலப்பதிகாரத்திலே, மு.கருணாநிதி செய்த "மாற்றங்கள்"!


kovalan - madhavi
1. கிரேக்க வாணிகன்: Kalaignar's Dagaldi:)

கோவலன், "அந்தச்" சுகம் வேண்டி, மாதவியின் இல்லத்துக்குப் போகலையாம் = சொல்வது கலைஞர்:)

மன்னன் கொடுத்த மாலையை, 1008 கழஞ்சுக்கு, வயதான ஒரு கிரேக்க வாணிகன், ஏலம் பேசுகிறான்;
இனி, மாதவி அக் கிழவனின் கையில்! மாதவி அழுகிறாள்!
அந்தக் கிரேக்க வணிகனிடம் இருந்து காக்கவே, அதை விட அதிகமான தொகை கூறி, மாதவிக்கு "விடுதலை" பெற்றுத் தருகிறான் கோவலன்;

மற்றபடி, கோவலனுக்கு ஆசையெல்லாம் இல்லை:)
= இதுவே கலைஞரின் சித்திரம்;

ஆயின், இளங்கோ சொல்வது என்ன?
மாதவி ஏலத்துக்கே வரவில்லை; அவள் தாய் சித்திராபதி தான், ஒரு கூனியிடம் மாலையைக் குடுத்து அனுப்புறா; No Greek Merchant at all;
வீதியில் இதைக் கண்ட கோவலன், மாதவியின் ஆடல் மயக்கத்திலே, தானே வலிந்து 1008 கழஞ்சு குடுக்கிறான்; கூனியோடு, மாதவி இல்லம் புகுகின்றான்;

இந்த “முன்-ஏற்பாடு”ல்லாம் அறியாத மாதவி, வீட்டுக்கு வந்த "பெருமகன்" கோவலனின் இசையிலே, உடனேயே "காதல்" கொண்டு விடுகிறாள்;
மாதவியின் குணநலன் = உயர்வே!
பரத்தையே ஆயினும், இவள் கற்பு நெறியுள்ள "இல்-பரத்தையே";

* கற்பு = உடல் சார்ந்தது அல்ல!
* கற்பு = மனம் சார்ந்தது, ஆண், பெண் இருவருக்கும்!

அதான், தமிழின் தலைக் காப்பியங்கள் இரண்டுமே,"பரத்தை"யைத் தலைவியாக வைக்கும் "துணிவு"
* சிலம்பிலே: பரத்தை= கதையின் 2ஆம் தலைவி
* மணிமேகலையில்:  Illegitimate Child= தலைவி

இளங்கோவே, இயல்பை, இயல்பாத் தான் சொல்லி இருக்காரு; அதை எதுக்குக் கலைஞர் மாத்தி, கோவலன் மேல் "புனிதம்" ஏத்தினாரோ? "ஆண்டவனுக்குத்" தான் வெளிச்சம்:)


kovalan-kaNNagi
2. கண்ணகி தான், கோவலனை, மாதவி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள்: Kalaignar's Dagaldi:)

கலைஞர் சொல்வது:
 "விடுதலை" பெற்றுத் தந்த பின், கோவலன் விடை பெற்றுக் கொள்ள...
மாதவி, கோவலன் நினைவாகவே இருக்கிறாள்; (மணமானவன் என்று அறியாள் போலும்)

அதனால், கண்ணகியே - "நல்லாள் ; கலை வல்லாள் - அவளுக்குப் புரியும் படிச் சொல்லி விட்டு வாருங்களேன்"  -ன்னு அனுப்புகிறாள்;
"அறிவுரை" கூறச் சென்றவன், தெரியாமல் "கலையுரை"யில் கரைந்து விட்டான்:)

ஆனால், இளங்கோ சொல்வது என்ன?
கோவலனே ஆசையில் வலிந்து செல்கிறான்; பின்பு வலிந்து பிரிகிறான்;

விதி முறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
... மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு’ என,
மான் அமர் நோக்கி ஓர் கூனி கைக் கொடுத்து,
நகர நம்பியர் திரிதரு மறுகில்,
....
கோவலன் வாங்கி, கூனி - தன்னொடு
மணமனை புக்கு, மாதவி - தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி -
விடுதல் - அறியா விருப்பினன் ஆயினன்

மாதவி (எ) நங்கை நல்லாள்;
அவ பாடும் காவேரிப் பாட்டில் கூட ”உள்ளர்த்தம்” தேடினால், பாவம், அவ என்ன தான் பண்ணுவா? அன்பைப் புரிந்து கொள்ள இயலாத ஆணாதிக்கம்:(


3. பொற்கொல்லன் = நல்லவன்: Kalaignar's Dagaldi:)

பொற்கொல்லன் ஒருவனின் செய்கையால், மொத்த பொற்கொல்லர் சமுதாயமே பழியைச் சுமக்கணுமா?
தற்கால நோக்கில்... பொற்கொல்லர் சாதி (விசுவகர்மா) என்று குறிப்பு கலைஞரின் கண்ணுக்குப் படுகிறது போலும்;

ஆதலால், யாரோ ஓர் அரண்மனைக் காவலாளி, சிலம்பு திருடினான்-ன்னு மாற்றம் செய்யறாரு கலைஞர்; பரவாயில்லை, இதை மன்னிச்சி விட்டுறலாம்:)

ஆயின், இளங்கோ சொல்வது என்ன?
வஞ்சிப் பத்தனான பொற்கொல்லனே வஞ்ச மனத்தான்;
(பொய்த் தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கி..
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்)

இன்னொரு "கொடுமை" பிற்பாடு நடக்கிறது;
இறந்த பாண்டியனின் தம்பி, வெற்றிவேற் செழியன் மன்னன் ஆகிறான்;
நாட்டில் மழை இல்லை;
"பத்தினித் தெய்வ சாபம்"-ன்னு, அந்தண மறையோர் சொல்லச் "சாந்தி" செய்கிறான்; என்ன சடங்கு? = 1000 பொற்கொல்லரைப் பலி குடுத்தல்:(

இதை இளங்கோவடிகள் சொல்லலை;
யாரோ சாஸ்திர/ சம்பிரதாயக்காராள், இப்படிச் "சாந்தி ஹோமம்" -ன்னு எழுதி, "உரைபெறு கட்டுரை" -ன்னு பேரு கொடுத்து, சிலம்புக்கு முன்னுரை போல் "சொருகி" விட்டார்கள்:(

அடப் பாவிங்களா! அதான் கண்ணகியே, "தென்னவன் தீதிலன்; என் தந்தை போல்" -ன்னு பிற்பாடு சொல்லுறாளே; அப்பறம் என்னய்யா பரிகாரம்/ ஹோமம்?
இதைத் துடைக்கத் தானோ என்னவோ, "பொற்கொல்லன் நல்லவன்" -ன்னு கலைஞர் மாத்தினாரோ? நான் அறியேன்;


4. சிலம்பிலே = முத்தா? மாணிக்கமா?

இளங்கோ காட்டும் காட்சி:
அரசியின் சிலம்பைக் கொணரச் செய்து,  தருக எனத் தந்து, அத்தனை பேரின் முன்னேயும் உடைக்க...
முதல் உடைப்பிலேயே மாணிக்கப் பரல்கள் தெறிக்கின்றன; Instant! தலை கவிழ்ந்த மன்னன், தலை நிமிரவே இல்லை:(

"தருக எனத் தந்து, தன் முன் வைப்ப, 
கண்ணகி அணி மணிக் , காற்சிலம்பு உடைப்ப 
மன்னவன் வாய் முதல், தெறித்தது மணியே...
யானோ அரசன்? யானே கள்வன்!

கலைஞர் சொல்வதோ: முத்துப் பரல்கள் முதலில் தெறிக்க.. "பார்த்தாயா, என்னமோ பெருசா பேசினியே"? என்று பாண்டியன் பரிகாசம் செய்ய....
பாவம் கண்ணகி; "ஒன் பொண்டாட்டியின் அடுத்த சிலம்பையும் உடை" -ன்னு விடாப்பிடியா வாதாடுறா; அடுத்த உடைப்பில் தான் மாணிக்கம் தெறிக்குது!

"இன்னும் உன் சந்தேகம் தீரலையா? இதோ பார், என் கையிலிருக்கும் இன்னொரு சிலம்பும் உடைக்கிறேன்"
-ன்னு ”கலைஞரின் கண்ணகி” உடைக்க, அதிலும், மாணிக்கமே தெறிக்கிறது!
------------

பாண்டியன், இப்படியெல்லாம் வாதாடுறவனா? = அல்லவே! அப்படி வாதாடி இருந்தா, தன்னை Easy-ஆ காப்பாத்திக்கிட்டு இருக்கலாம்;
கலைஞரைப் போல்... மலிவு விலை மதுவுக்கு, பக்கத்து மாநிலப் புள்ளி விவரமெல்லாம் குடுத்து escape ஆவது போல்:)

கன்றிய கள்வன் கையது ஆகின், 
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு’ என

Pls to Note: ஆகின் is the keyword! "கள்வனா இருந்தான் **ஆகில்**, "கொன்று கொணர்க" -ன்னு தான் சொன்னேன்;
என் படைவீரன் சரியா விசாரிக்கலை; அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"
- இப்படியெல்லாம் பாண்டியன் வாதாடலை;
- மாணிக்கம் தெறிச்ச மாத்திரத்தில் மானமும் தெறிச்சிப் போயிருச்சி அவனுக்கு:(

(On the spot killing = Not in Justice!
விசாரிப்பது அரசவையின் வேலை; படைவீரன் வேலையல்ல -ன்னு பாண்டியன் மனசாட்சிக்குத் தெரியும், இளங்கோவுக்கும் தெரியும்; கலைஞருக்கு?:))
------------

* ஆக, இளங்கோ உடைத்தது = ஒரு சிலம்பே! (Instant)
* ஆனால் கலைஞர் உடைத்தது = மூன்று சிலம்பு:)

அப்போ, நாலாவது சிலம்பு எங்கே?
= அது பொற் கொல்லன் வீட்டில் இருக்கலாம்; யாருக்குத் தெரியும்? நாடகக் காப்பியம் போற வேகத்தில், அதையெல்லாம் இளங்கோ காட்டலை;

ஆனால், கலைஞர், அந்த நாலாவது சிலம்பையும் விட்டு வைக்கலை;
கணக்கு வழக்குல கெட்டிகாரரு ஆச்சே!:)
அரண்மனைக் காவலன் மேல் பழி போட்டவரு, அரண்மனை எரியும் போது, அவன் மாட்டிக் கொள்ள..அவனோடு, அவன் களவாடிய சிலம்பும் எரிந்து விடுவதாகக் காட்டுறாரு!




5. முலை:
ஆற்றொணாத் துயரத்தால், முலை மேல் அடிச்சி, திருகினாள் -ன்னு இளங்கோவின் சித்திரம்;

அந்த முலையைக் காட்டித் தானே, முதல் இரவில், அவள் வெட்கம் போக்கினான் அவன்?
அவளையும் மீறி விடைத்த இன்பப் பொதிகள்; நாணத்தில் தயங்கினாலும், மனசுக்குள் "அடர்த்தியான" ஆசைகள் அவளுக்கும்! (தயங்கு-"இணர்க்  "கோதை)

But, முலையை எறிந்ததால் தான், தீ பரவியது-ன்னு "பகுத்தறிவு அற்ற” தோற்றம் வந்துறக் கூடாது-ன்னு ...
கண்ணகியின் கையில், தீப் பந்தம் குடுத்து, பத்த வச்சிட்டார் கலைஞர்:)

ஆனா, அந்தப் பேதை, அரசியலில் Bus-க்கு தீ வைப்பது போலெல்லாம் வைக்கலை:)
ஐயோ பாவம், கண்ணகி! மெய்த்தமிழ் "தரவு" இல்லாம கலைஞர் பண்ணின கூத்து இது:(

பெரும் துன்பத்தில் மாரில் அடிச்சிக்கிட்டு அழுவது வழக்கம் தான்;
அப்படித் தான் அவ முலையை விட்டா-திருகுறா!
ஆனா, அதனாலெல்லாம் தீ பரவலை! இளங்கோ சொல்வது என்ன?

இட முலை கையால் திருகி, மதுரை...
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி, 
பாய் எரி இந்தப் பதி ஊட்ட, பண்டே ஓர் 
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு? என்ன-

"வானவன்" தோன்றி, பண்டை ஊழ் காரணமாகத்... தீ பரவுகிறது;
அட! யார்  இந்த "வானவன்"?
= அது வானில் இருந்து மண்ணில் விழுந்த எரி நட்சத்திரமோ/வேற ஏதோ...
= அதுவொரு நாடக உத்தி; "அறம் பாடும்" இயற்கைச் சீற்றம்! அம்புட்டு தான்;

அப்போ கூட, பித்து ஏறிய கண்ணகி...
"நன் மகளிர், சான்றோர், பிள்ளைகள், வாயில்லா விலங்குகள் தவிர்த்து,
இந்த அரசியலின் தீமைக்கு உடன்பட்டோர் மட்டுமே அழியட்டும்"-ன்னு,
ஆற்றாமையால், வெறுமனே "சூளுரை" தான் செய்யுறா = "தீத் திறத்தார் பக்கமே சேர்க"

அவ பத்தவும் வைக்கல; மதுரை நகரமும், ஒரேயடியா சாம்பல் ஆயிடலை!
அறவோர் இடங்கள் தவிர்த்து,
அரண்மனை/ மறவர் பகுதி மட்டுமே எரிந்தது! (வான் நிகழ்வு)

அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது, 
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட

*முலையில் அடிச்சது வேறு (ஆற்றாமையால்)
*வானம் மூலமாத் தீ பரவியது வேறு;

இதை இளங்கோவே தெளிவாக் காட்டும் போது... கலைஞர் ஏன் தான் = public property damage, அவ கையில் தீப்பந்தம் குடுத்தாரோ? ஐயகோ!:(

Anna has rightly said in his preface = //some, may look like even "unwanted"//


கலைஞரே,
கடைசீல, ஒம்ம கிட்டேயும் "தரவு" கேக்க வச்சிட்டீயளே என்னைய?:)
இதே, மகா வித்துவான் சாம்பசிவ ஐயர், இப்படியெல்லாம் சிலப்பதிகாரத்தை மாத்தினாச் சும்மா விடுவோமா?
அதே நியாயம் தானே நமக்கும்?? முருகா!

ஈழத்தில் ஆடிய நாடகம் போதாதென்று,
சிலம்பு (எ) நாடகத்திலேயே, நாடகம் ஆடினா எப்படி?:(

அது சமயப் பிடிப்போ (அ) பகுத்தறிவோ...
சுய பிடித்தங்களைக் கடந்து...
தரவு மட்டுமே கைக்கொண்டு..
"தமிழைத் தமிழாய் அணுகும்" பழக்கம் என்று தான் நமக்கு வருமோ?

இருப்பினும்...
தமிழுக்கு ஓரளவேனும் உழைத்த கலைஞருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!:)

References:1. A Concise History of South India - Dr. Naboru Karshima, President - IATR (International Association of Tamizh Research)
2. சிலப்பதிகாரம்: அடியார்க்கு நல்லார் உரைநூல்
3. சிலப்பதிகாரம்: அரங்கேற்றுக் காதை ஆராய்ச்சி, Dr. ஷாஜகான் கனி

18 comments:

  1. dedicating this post to my old friend - Dhanabalan Raju - who used to ask me so many questions abt Kannagi & her "Bus erippu" :)

    ReplyDelete
  2. ;-) கேயாரெஸ் பாணியில் ஒரு "பாரா பாரா" சக்தி ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. :)
      ஓடினேன் ஓடினேன்... கலைஞரின் "நாடகத்துக்கே" ஓடினேன்:)

      Delete
  3. 'பூம்புகார்' படத்தைப் பார்த்தபொழுதே முலையைத் திருகி எறிந்ததை மாற்றிக் கண்ணகியே தன் கையால் பந்தமெடுத்து எரிப்பது போல் காட்டிய தவறு தென்பட்டது. ஆனால், நீங்கள் கூறிய பிறகுதான் இத்தனை தவறுகள் இருந்தது தெரிய வருகிறது. நன்றி! ஆனால், இவ்வளவு பெரிய துரோகத்துக்குப் பிறகும் (ஈழத் துரோகத்தைச் சொல்கிறேன்; புகார்த் துரோகத்தை இல்லை) அவருக்கு நீங்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதுதான் பிடிக்கவில்லை!

    ReplyDelete
    Replies
    1. பூம்புகார் படம் பாக்கும் போதே எனக்கும் சில இடங்களில் இடறும் ஐயா:)

      //அவருக்கு நீங்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதுதான் பிடிக்கவில்லை!//

      கலைஞரின் ஆரம்பத் தமிழ் வாழ்வு = அதீத சுயநலத்தில் நிறைந்து விட்டது;
      ஆனா, அதுக்காக, "சக மனிதன்" என்ற அளவிலாச்சும் "Treat" செய்யலாம் அல்லவா?
      ஒரு மனிதனின் பிறந்தநாளில், "வாழ்த்து" -ன்னு சொல்லும் அளவுக்கே இருப்போம்; Untouchability வேண்டாமே!

      மற்றபடி, கலைஞரின் துரோகங்கள் எனக்கு உடன்பாடல்ல! அவரின் ஆரம்ப காலத் தமிழுக்கு மட்டுமே மரியாதை;

      Delete
  4. எல்லாம் கதே தானே…!
    சிலம்புவை திரித்தாலென்ன…
    முலையைத் திருகினாளென்ன…!!
    #வரலாறு இல்லையே…! :-)

    ReplyDelete
    Replies
    1. :) Nopes
      சிலப்பதிகாரம் = "கதையோ" / "புராணமோ" அன்று
      நடந்த வாழ்க்கை, நடந்த வரலாறு

      காப்பியத்தின் நடுவில் காட்சிப்படுத்தப்படும், மதுராபதித் தெய்வம் பேசுதல் = இதெல்லாம் தான் கற்பனை; இது ஒரு நாடக உத்தி; கண்ணகியிடம் அவள் மனசாட்சியே பேசுவது போல் அமைப்பது;
      மத்தபடி, "குணம் கெட்டாலும் இந்திரன் தேவனே; நல்லவன் எனினும் அசுரன் மகன் அசுரனே" போன்ற Puranic Unbelievables எல்லாம் சிலம்பில் கிடையாது;

      கண்ணகி = சிலப்பதிகாரத்தில் மட்டுமல்ல; அகநானூறு போன்ற மற்ற நூல்களிலும் வருவாள்

      அவர்கள் வாழ்வைப் பார்த்தவர்கள் = கவுந்தி அடிகள், சீத்தலைச் சாத்தனார், சுருளிமலை வேடர்கள் -ன்னு direct eye witness நிறைய!
      அவர்கள் சொன்னதையெல்லாம் தொகுத்து எழுதியதே = இளங்கோ செய்தது!

      செங்குட்டுவன், வேண்மாள், நெடுஞ்செழியன், இலங்கை மன்னன் கயவாகு -ன்னு வரலாறும் சிலம்போடு ஒத்துப் போகும்!

      திருவிளையாடற் புராணம் போல் கூந்தலை மோப்பம் பிடித்த "செண்பகப் பாண்டியன்" தான் வரலாற்றிலேயே இல்லை!
      பாவம், சங்கத் தமிழ்மகன் நக்கீரர்; அவர் காலத்துப் பாண்டியன் = இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்;

      49 சம்ஸ்கிருத எழுத்தும் 49 சங்கப் புலவரா ஆச்சு; தமிழுக்கு ஆதாரமே அவங்க தான் -ன்னு எழுதும் திருவிளையாடல் போல் அல்ல...நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்! சிலம்பு = உண்மை!

      Delete
  5. மிக்க நன்றிங்க கேயாரெஸ்... ஒரே ஒரு கேள்வி...வாணிகன், வணிகன் ; வாணிபம் வணிபம்; வாணிகம், வணிகம் ; இச்சொற்கள் அனைத்திலும் முதல் எழுத்து நெடில் -> குறில் திரியுது ஆனாலும் பொருள் மாறல..இது சொற் சிதைவா இல்ல ஒரு பொருள் பன்மொழியா தோன்றியதா?

    ReplyDelete
    Replies
    1. அருண்,
      நீங்கள் எழுதியுள்ள ஆறு சொற்களில் வணிகன்,வணிகம் மட்டுமை சரி. மற்றவையெல்லாம் வழு அல்லது கருணாநிதி மற்றும் கழகத் தமிழ்.

      கேஆரெஸ்...சுற்றிச் சுற்றி எழுதியே அதுவே ஒரு பாணி(ப்பிணி)யாக உங்கள் எழுத்து நடையில் வந்து விட்டதோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது..தீர்க்க ஒரு 'பிணாகபாணி' எப்போ வருவார்?

      ஒரு மாறுதலுக்கு நேரடியாக எழுதிப் பாருங்களேன். :))

      மற்றபடி எப்போதும் போல, நல்ல கௌண்டர்'ஸ்..பாவம் முத்துவேலர் மகனுக்கு இதையெல்லாம் திரும்பிப் பார்க்கவும் நேரமில்லை. அவர் 'பயத்துடன் நிம்மதியின்றி' தமிழர்களுக்கு இன்னும் என்ன சேவை செய்யலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்காரு..

      Delete
    2. வணிகம் என்பதே வேர்ச்சொல்
      வணி/ அணி என்பதிலிருந்து பிறப்பது; (பண்டைத் தமிழகத்தில் உணவு இறக்குமதி குறைவே; பலவும் விளைச்சல் செய்தார்கள்! "அணிகள்" தான் பெரும்பாலும் இறக்குமதி; அதிலிருந்து பிறந்த சொல் வணிகம்)

      அதுவே வாணிகம்/ வாணிபம் -ன்னு மருவுகிறது;
      இது மரூஉ மொழி (எ) மருவு;
      சொற்"சிதைவு" அல்ல; சொல் மருவுதல் (மருவுதல் = fuse & embrace)

      ஒரு பொருட் பன்மொழி-ன்னா = தெய்வம், இறை, கடவுள், கோ
      எல்லாமே வேற சொல்லு, ஆனா பொருள் ஒன்னு
      ஒரு சொல்லுக்கும் இன்னொரு சொல்லுக்கும் There is no rhythmic pattern

      ஆனா, வணிகம்->வாணிகம்/வாணிபம், There is a pattern
      எனவே இது மருவு மொழி!

      Delete
    3. அறிவன் - நலமா? ரொம்ப நாளாச்சுது;
      சங்கப் பலகை நலமா?

      //மற்றவையெல்லாம் வழு அல்லது கருணாநிதி மற்றும் கழகத் தமிழ்//

      வாணிகமும் நல்ல சொல்லு தான் அறிவன்; மரூஉ மொழி
      கலைஞர் மேல் இருக்குற கோபத்தை, பாவம் சொல்லு மேல காட்டுறீகளே? நியாயமா?:))

      வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
      பிறவும் தமபோற் செயின்
      - ன்னு குறளே இருக்கே!

      //உங்கள் எழுத்து நடையில் வந்து விட்டதோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது..தீர்க்க ஒரு 'பிணாகபாணி' எப்போ வருவார்?//

      ஆகா! இதென்ன "பாணி"? புரியல;
      கொஞ்சம் எடுத்துச் சொன்னாத் திருத்திக் கொள்வேன்;

      //பிணாகபாணி//

      ஈசன் சிவபெருமானா? வரவேணும் வரவேணும்!

      பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ...
      உண்ணாமுலை உமையாளொடு உடனாகிய ஒருவன்

      Delete
  6. இரவி / அறிவன்,

    தெளிந்தேன்..உங்களுக்கு என் நன்றிகள்..

    இவண்,
    அருண்

    ReplyDelete
  7. comparison review is about the movie poompuhar or the book Tale of the Anklet & One Act Plays - written by kalaingar karunanidhi?

    ReplyDelete
  8. comparison review is for the movie poompuhaar or for the Tale of the Anklet & One Act Plays book written by kalaingar karunanidhi?

    ReplyDelete
    Replies
    1. Comparison is between Chilapathikaaram (Ilango AdigaL) & Tale of the Anklet (Karunanidhi)
      அதான் இளங்கோவின் பாடல் வரிகள் இடையிடையே கொடுத்துள்ளேனே!

      The movie Poompuhar itself, is based on the plot written in Tale of the Anklet;
      I guess, Kalaignar had his own version in mind, both in movie & book

      Delete
  9. KRS UNGAL TAMIL ARIVU ABAARAM...

    ReplyDelete
    Replies
    1. அறிவெல்லாம் ஒன்னுமில்ல:) தமிழ்-ஆசை தான் அதிகம்:)

      Delete
  10. தமிழைத் தமிழாக ரசிக்க வேண்டும் என்றும் நமது மனச்சார்புக்கு ஏற்றவாறு சாயம் பூசக் கூடாதென்ற கடைசிக் கருத்து வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது.

    ஆனால் ஒரு சிறிய கேள்வி எனக்கு!

    "பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
    மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்

    தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
    பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
    நற்றேரான் கூடல் நகர்"

    என்ற இளங்கோவின் வஞ்சினமாலைக் காதை வரிகளை நீங்கள் குறிப்பிடாமல் (மற்ற இடங்களில் நீங்கள் அந்த வரிகளை குறிப்பிடத் தயங்கவில்லை) உங்கள் சொந்த interpretation-ஐ குறிப்பிடுவது ஏன்?

    பார்ப்பார் என்று குறிப்பிட்டால் "அவாளை "த் தீண்டிய நவீனத் தீட்டு ஏற்பட்டுவிடுமோ? :-)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP