Friday, August 10, 2012

முருகனின் கடைசி "வகுப்பு"!

(ஆடிக் கிருத்திகைப் பதிவு: Aug-10)

"அருணகிரி" = இது, முருகனைப் பாடவே பொறந்த ஒரு பேரு!
பாடும் பணியே பணியாய் அருள்வாய் -ன்னு... தானே குடுக்கும் வாக்குமூலம்!

* முதலில் பாடத் துவங்கியது = முத்தைத் தரு = திருப்புகழ்
* கடைசியில் பாடி நிறைந்தது = சிவ லோகமே = திருவகுப்பு

திருப்புகழில் சந்தம் கொஞ்சும்;
ஊர் ஊராகச் சென்று பாடின அனுபவம் தெரியும்;
பழசை மறக்க மாட்டாது கணிகையரைத் திட்டும் கோபம் புரியும்;
தன் நூலைத் தான் பாடிப், பிறரும் பாடுகிறார்கள் என்று பெருமை கூடத் தொனிக்கும்...

ஆனால் திருவகுப்பிலோ, இவை ஒன்றுமே இராது!
தான் பாடியது என்று சொல்லாமல், ஒரு பக்தன் முற் பிறவியில் பாடிய திருப்புகழ் -ன்னு, யாரோ பாடியது போல் சொல்லுவார் - ஏன்?

ஏன்-ன்னா, அருணகிரி, திருவகுப்பை...
 "கிளியாய் இருந்து பாடினார்"
என்பது வழக்கு! = இது ஒரு கதை! பார்ப்போமா?

சம்பந்தாண்டான் என்ற காளி உபாசகனுக்கு அருணகிரியைக் கண்டாலே ஆகாது; ஏன்?

காரணம் தெரியாது! கருத்துக்கள் பிடிக்காது!
மனசிலே இனம் புரியாத அசூயை!
இப்படி முருக உள்ளம் கொண்டார்களுக்கு எதிரிகள் தானே அமைந்து விடுவது ஒரு வாடிக்கை! வேடிக்கை!

* மாற்று சமயத்தவர் = வில்லிபுத்தூரார் திருத்திக் கொண்டார்!
* ஒரே சமயத்தவர் = சம்பந்தாண்டான் திருத்திக் கொள்ளவில்லை!

நோயுற்ற மன்னனின் பிணி தீர்க்க, பாரிஜாத மலரை, அருணகிரியால் கொண்டு வர முடியும் -ன்னு மன்னனிடம் போட்டுக் கொடுத்தான் சம்பந்தாண்டான்;

வேறு வழியின்றி அருணகிரியும் செல்ல வேண்டிய நிலைமை;
ஆனால் தேவர் உலகுக்கு உடலோடு செல்ல முடியாதே;
தன் உடலை அண்ணாமலைக் கோபுரத்தில் கிடத்திவிட்டு, உயிர் ரூபத்தில் சென்று, மலர் கொண்டு வந்தார் அருணகிரி!

ஆனால் அதற்குள், சம்பந்தாண்டான் கூட்டம், கோபுரத்தில் கிடத்திய உடலை இறக்கி, மண்ணிலே புதைத்து விட்டது;
மீண்டு வந்தவருக்கு மறுபடி உடல் கிடைக்கவில்லை; எத்தனையோ சுகித்த உடல், சுகித்துப் பின்பு சகித்த உடல்!

அருகே இருந்த மாண்ட கிளி ஒன்றின் உடலில் புகுந்து, மலரை ஈய,
மன்னன் பிணி தீர,
அருணகிரிக்குப் பிறவிப் பிணியும் தீர்ந்தது! = "உத்தமக்" கிளி!

ஆம், கிளியாய் இருந்து, அருணகிரி பாடிய கடைசிப் பாடல்களே = திரு வகுப்பு!
கிளி உருவிலேயே, களி கொண்டார்!
அதன் பின்னர், கந்தனின் கைத்தலத்தில் போய்க் கிளியாய் அமர்ந்து விட்டார் அடிகள்! "சிவலோகமே" என்று அவரே சொல்லி முடிக்கிறார்!


சேவலும் - மயிலும் மட்டுமே அவன் பறவைகள் என்னாது, தோழி கோதையின் கிளியும், அவனுடைய பறவையே ஆகி விட்டது!
ஆடும் பரி - வேல் - அணி சேவல் என
பாடும் கிளியே, நானாய் அருள்வாய்!


"முருகு" என்னும் பொருளைப் பலவிதமாக வகுத்துச் சொல்லுதல் = வகுப்பு!

* வேல் வகுப்பு
* மயில் வகுப்பு
* சேவல் வகுப்பு
* வேடிச்சி வகுப்பு (வள்ளி)
* சீர் பாத வகுப்பு
* ஆலய வகுப்பு

-ன்னு மொத்தம் 18 வகுப்புகள்!
நமக்கும் இந்தக் காலத்தில் 18 வகுப்புகள் இருக்கு-ல்ல? 12 ஆண்டுகள் பள்ளியில், 4 ஆண்டுகள் கல்லூரியில், 2 ஆண்டுகள் முதுகலையில்
= மொத்தம் 18 வகுப்புகள் நமக்கும் வருகிறது அல்லவா?:)

திருவகுப்பில் இன்னும் சில வகுப்புகள் பின்னாளில் எழுதிச் சேர்க்கப் பட்டதாகச் சொல்லுவார்கள், 25 வகுப்புகளாக!
ஆனால், இறுதி வகுப்பு = சிவலோக வகுப்பு!
"அரு-உரு கெட, இரு வினை கெட, இன்பம் தேக்கிய அன்பின் சிவலோகமே" என்று சேர்ந்து விட்டார் அருணகிரி!

இன்று நாம் பார்க்கப் போவது, திருப்பழனி வகுப்பு!
* எந்த வினையும் அணுகாமலே -ன்னு தொடங்கி
* தென் பழனி முருகேசனே -ன்னு முடிவுபெறும்


இந்தப் பாடல், பசும்பொன் தேவர் திருமகனின் விருப்பப் பாடல்;
பல மேடைகளில் இதைப் பாடி விட்டே, தன் உரையைத் துவங்குவார் முத்துராமலிங்கர்!
அவருடைய கணீர் குரலுக்கும், ஏற்ற இறக்கங்களுக்கும், இந்தத் திருவகுப்பு ஒரு பெருவகுப்பு!

இதற்குப் பொருள் சொல்ல வேணும் என்பது...
தில்லி வாழ் நண்பர் பாலசுந்தரம் (@bala_bose) அவர்களின் நெடுநாள் கோரிக்கை!
இன்று ஆடிக் கிருத்திகையின் போது, கை கூடியது! இதோ:


எந்த வினையும் பவமும் ; எந்த விடமும் படரும்
எந்த இகலும் பழியும் ; எந்த வழுவும் பிணியும்
எந்த இகழ்வும் கொடிய ; எந்த வசியும் சிறிதும் - அணுகாமலே

வினை = செயல்
அடுத்தவர் நமக்குச் செய்யும் செயல், நாம் அடுத்தவருக்குச் செய்யும் செயல் = நல்ல செயல் செய்யுறோமா? கெட்ட செயல் செய்யுறோமா?

பவம் = பிறப்பு
அனு-பவம் = பிரதியாக, ஞானம் பிறப்பது

வினை செஞ்சாத் தான், பிறப்பு வரும்; வினை இல்லையேல் பிறப்பும் இல்லை!
ஆனா, வினை செய்யாம இருக்க முடியுதா?
"சும்மா" இருங்களேன் பார்ப்போம் ஒரு அஞ்சு நிமிசம்:)

சும்மா இருக்கும் திறம் அறியேம்!
அப்போ என்ன தான்யா வழி? = என்னால சும்மா இருக்கவும் முடியாது; ஆனா பிறக்கவும் கூடாது:))
தன் வினை தவிர்த்து, உன் வினை போதும் முருகா!
இந்த வினையால், கந்த வினையால், பிறப்பு வாராது.....

எந்த வினையும், எந்தப் பிறப்பும் வேணாம்!
எந்த விடமும், எந்த இடரும் வேணாம்!
எந்தச் சண்டையும் (இகல்), எந்தப் பழியும் வேணாம்!
எந்த வழுவும் (குற்றமும்), எந்தப் பிணியும் வேணாம்!
எந்த இகழ்ச்சியும், எந்த வசியும் (பிளவும்) வேணாம்!

= முருகா, இவை யாவும் என்னை அணுகாமலே...


எந்த இரவும் தனிமை ; எந்த வழியும் புகுத
எந்த இடமும் சபையில் ; எந்த முகமும் புகலும்
எந்த மொழியும் தமிழும் ; எந்த இசையும் பெருமை - சிதறாமலே

இரவில் தனிமை = ரொம்ப கொடியது!
அனுபவித்தவன் சொல்லும் போது தெரியும்! இந்த வரியை அப்படித் தான் எழுதுகிறேன்! (3:30 am)

எது தனிமை? 
= உடன் இருக்க வேண்டியவர்கள் இல்லாமல் போவது;
இருக்கிறேன் -ன்னு சத்தியம் செய்து குடுத்தவர்கள், இல்லாமல் போவது!

இப்படித் தனிமை புகுந்து வாடினாலும்...
எந்த மொழியிலும், என் சொந்த மொழியிலும் (தமிழிலும்)..
இசை = மானம்/ புகழ்; "ஈதல் - இசைபட வாழ்தல்"
எந்த இடத்திலும், எந்தச் சபையிலும்..
என் மானம் சிதறாமல்...

வந்தனை செய்து ; உன்சரண - நம்புதல் புரிந்த அருள்
வந்து அநுதினம் தனிலும் ; நெஞ்சில் நினைவின் படி
வரம் தர உவந்தருள் ; இதம் பெறுவது அன்றி நெடு - வலைவீசியே

கந்தனை வந்தனை செய்து
உன் சரணமே சரணம் என்று நம்புதல் புரிந்து, நெஞ்சிலே அவனையே தேக்கி
நான் இப்படியே வாழ்ந்து விட...
வரம் குடு முருகா! வரம் குடு முருகா! = இதுவே எனக்கு இதம்!

வஞ்ச விழி சண்டன் ; உறுகின்ற பொழுதும், "குமர
கந்த" என நன்கு அறையவும் ; தெளிவு தந்து உயிர்
வருந்து பயமும் தனிமை-யும் தவிர, அஞ்சல் என வரவேணுமே!!

பெரிய வலை (பாசக் கயிற்றை) வீசி, கோபப் பார்வை பார்க்கும் எமன் (சண்டன்)..
அவனைச் சொல்லித் தப்பில்லை; பண்ணது நானு! அவன் என்னை வாட்டும் போது கூட,
"ஐயோ" என அலறாமல், "ஐயா" என அழைக்கணும்!
குமரா, கந்தா -ன்னு உன்னைப் பேர் சொல்லிக் கூப்பிடும் இன்பம்!

முருகா, இனி ஒரு கணம், என்னைத் "தனிமையில்" இருக்க விடாதே! அஞ்சல் என வர வேணுமே!
நீ வா முருகா, என் தனிமை போயீரும்!
நீ வா முருகா, அஞ்சல் என வர வேணுமே!



தந் -தனன தந் -தனன ; டிண் -டிகுடி டிண் -டிகுடி

குண்ட மட குண்ட மட ; மண்டம் என நின்றும் உர
சந்தி மிலை பம்பை துடி ; திண்டிமம் முழங்கும் ஒலி - திசை வீறவே

தந் தனன, டின் டிகுடி -ன்னு தாளம் இசைக்க, ஆடி வா முருகா!
அணையில் ஓடி வரும் நீர் போல்,
சந்தி, பம்பை, துடி (உடுக்கை), திண்டிமம் (முரசு) -ன்னு பல ஒலிகள் கொட்ட, ஓடி வா முருகா!

தண்ட அமர் மண்ட அசுரர் ; மண்டை நிணம் என்று அலகை
உண்டு உமிழ்தல் கண்டு அமரர் ;  இந்திரன் வணங்கு பத
தண்டை சிறு கிங்கிணி ; பலம்பிட வரும்பவனி - மயில்வாகனா

மாண்ட அசுர சக்திகளின் கொழுப்பை, அலகால் உண்டு உமிழும் உன் மயில்!
அது கண்டு, அமரர்கள் பலரும் வணங்க..
உன் பாதங்களில்...
தண்டை, கிங்கிணி, சதங்கைகள் பலம்பிட, பவனி வா, மயில் வாகனா!


செந் தளிரை முந்து படம் ; என்றுள மருண்டு நிறை

சந்தன வனம் குலவு ; மந்தி குதி கொண்டு அயல்
செறிந்த கமுகின் புடைப ; துங்கிட வளைந்து நிமிர் - மடல்சாடவே

குளத்தில் உள்ள தாமரைத் தண்டுகள்; அதைப் பாம்பு -ன்னு நினைத்துப் பயந்து...
குரங்குகள் குதிக்கின்றன சந்தன வனத்திலே!
அருகிருந்த பாக்கு மரத்தில் தாவி, பாம்பு தானா? என்று நிமிர்ந்து பார்க்க, அந்தக் குதியலில் பாக்கு மடல் எல்லாம் சிதறி வீழ..

சிந்திய அரம்பை ; பல-வின் கனியில் வந்துவிழ
மென் கனி உடைந்த சுளை ; விண்ட நறை கொண்டு சிறு
செண்பக வனங்கள் வளர் ; தென்பழனி அம்பதியின் - முருகேசனே!!

* இளங் கமுகு (மெல்லிய பாக்கு), மரத்தின் மேலே இருக்கு!
* வெடித்த பலா, மரத்தின் கீழே இருக்கு!
* செண்பகப் பூக்களின் தேன், கொடிக்கும் கீழே இருக்கு!

குரங்குக் குதியலில் பாக்கு சிதறி, வெடித்த வேர்ப்பலாவில் வீழ,
பாக்கும் பலாவும் சேர்ந்து செண்பகப் பூந்தேனில் வீழ
சுவை கூட்டும் காடு! அப்படியான காடுகள் நிறை பழனி மலை!
என் அய்யா முருகா! அந்தக் காட்டிலே தொம் தொம் என்று ஆடி வா! என் முன்னே ஓடி வா!

என்னை இனியொரு கால்...
தனிமையில் வைக்காமல், தனிமயில் கொண்டு,
என் ஆவிக்குத் துணைவனாய்...
என் கூடவே இரு முருகா! - திரு முருகா, இரு முருகா!!


madhavipanthal.podbean.com
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP