Monday, February 19, 2007

ஏழு விளையாட்டு (சிவராத்திரி-2)

பதிவர்கள் எல்லாம் ஆறு விளையாட்டு விளையாடினர் அல்லவா, ஒரு காலத்தில்? இந்திரன் ஏழு விளையாட்டு விளையாடினான்!
பெருமாள் கொடுத்த தியாகராஜரைப் போலவே, இன்னும் ஆறு தியாகராஜ மூர்த்திகளை, மாயமாக உருவாக்கினான்.
"முசுகுந்தா, இவை ஏழு உருவங்களுமே தியாகராஜர்கள் தான்; உனக்கு எது வேண்டுமோ எடுத்துக் கொள்! உனக்குக் கடன்பட்டவன் நான்; உனக்குத் தராமல் யாருக்குத் தரப் போகிறேன்?" - சாமர்த்தியமாகப் பேசினான்.

முசுகுந்தன் செய்வதறியாது இறைவனைத் தியானிக்க, அஜபா மூர்த்தி அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது; "வா, என்னை எடுத்துக் கொள்; பெருமாளின் திருவுள்ளப்படி ஆரூரில் என்னை அமர்த்து" என்றது!
அரசனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை! ஒடோடிச் சென்று அஜபா மூர்த்தியைக் கட்டிக் கொண்டான்.
இந்திரனுக்கோ பெரும் வியப்பு! இறைவன் கணக்குக்கு முன் எழும் கணக்கு, ஏழும் கணக்கு எம்மாத்திரம்?

arielview

உளம் திருந்தினான்; அந்த ஏழு மூர்த்திகளையுமே, முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். பொதுநலத்துக்காக, தன்னலம் விட்டான்.
அரசன் அவற்றைப் பூமிக்குக் கொண்டு வந்து, மூலத் தியாகராஜ மூர்த்தியை ஆரூரில் இருத்தினான். மற்ற மூர்த்திகளை அந்தந்தத் தலங்களில் இருப்பித்தான். சப்த விடங்க தலங்கள் உருவாயின! (சப்த=ஏழு)
1.திருவாரூர் - அஜபா நடனம்,
2.திருக்குவளை - பிருங்க நடனம்,
3.திருக்காறாயில் - குக்குட நடனம்,
4.திருமறைக்காடு - ஹம்ச பாத நடனம்,
5.திருநாகை - பராவர நடனம்
6.திருநள்ளாறு - உன்மத்த நடனம்,
7.திருவாய்மூர் - கமல நடனம்
- இவையே சப்த விடங்க தலங்கள்.

இன்றும் திருவாரூரில் விஷ்ணுவின் மூச்சில் நடனம் புரிந்த அழகிய அஜபா மூர்த்தியைக் காணலாம்.
திருவாரூர், நாகைக் காரர்கள் யாராச்சும் வந்து அவன் அழகைச் சொல்லுங்க!
முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டேன்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்!ஆரூர், ஆதி ஊர். மிகப் பழமையான ஊர்.
ஆரூரில் பிறக்க முத்தி, காசியில் துறக்க முத்தி என்பார்கள்!
அன்னை கமலாம்பிகையுடன் அருள் ஆட்சி செய்கிறான் தியாகராஜன்...
அங்கு கோயில் பாதி, குளம் பாதி!
ஆரூரில் எல்லாமே பெரிது! ஆலயம், அதே பரப்பளவு உள்ள குளம், ஆழித் தேர், அகண்ட விளக்கு இப்படி எல்லாமே பெரிது!

சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டு, ஈசன் காலாற நடந்து தூது சென்ற ஊர்.
இசை மும்மூர்த்திகள் என்று சொல்கிறோமே, தியாகராஜர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்...
இவர்கள் மூவரும் சொல்லி வைத்த மாதிரி, இந்த ஊரில் தான் அவதரித்தனர்.
இது ஒன்றே போதும் திருவாரூர் பெருமை சொல்ல!
மனு நீதிச் சோழன், கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்கிய ஊர்.
இன்றைய காலகட்டத்தில் சொல்ல வேண்டும் என்றால், தமிழக முதல்வர், கலைஞரின் சொந்த ஊர்.

சிவனார் தான் ஊருக்கே ராஜா - தியாகராஜா!
அவர் வீட்டில் விளக்கு வைத்த பின் தான், மற்ற அனைத்து ஆலயங்களிலும் இல்லங்களிலும் விளக்கிடுதல் நிகழும். இந்த ஆரூரில் சிவராத்திரி மிகவும் விசேடம்!
சிவராத்திரியின் கதையே இந்த ஊர் தானே!

இருண்ட தனிக் காட்டில் புலிக்குப் பயந்து, வேடன் ஒருவன் மரத்தில் ஏறிக் கொண்டான். இரவு முழுதும் உண்ணாது உறங்காது விழித்து இருந்தான்.
போதாக்குறைக்கு தூங்கி விடுவோமோ என்று பயந்து, மரத்தின் இலைகளைக் கிள்ளிக் கிள்ளிக் கீழே போட்டுக் கொண்டே இருந்தான்.
அந்த மரத்தின் கீழோ ஒரு சிவலிங்க உருவம்.
வேடனுக்குத் தெரியாது அன்று சிவராத்திரி என்று!
வேடனுக்குத் தெரியாது அவன் கிள்ளிப் போட்டது வில்வ இலை என்று!

அறியாமல் தெரியாமல் செய்த சிவராத்திரி உபவாசம் மற்றும் வில்வார்ச்சனை. அதனால் தான் மறு பிறப்பில், முசுகுந்தச் சக்ரவர்த்தியாகப் பிறந்தான்.
அவன் கடைத்தேறியதோடு மட்டும் இல்லாமல், நம்மையும் கடைத்தேற்ற தியாகராஜ உருவத்தை மேல் உலகில் இருந்து கொண்டு வந்தான்.
(சிலர், வேடன் என்பதற்குப் பதிலாக, குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இலைகளைக் கிள்ளிப் போட்டது என்றும் சொல்லுவர்)

2004043001350601

இந்தச் சிவராத்திரி நன்னாளில் இந்தக் கதையைப் படித்து மனத்தில் இருத்துவோம்!
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
அறியாமலே செய்த வழிபாட்டின் மகிமை இதுவென்றால், அறிந்து உணர்ந்து உருகி வழிபடும் போது, சித்திப்பது எது?
சிவமே சித்திக்கும்! சீவனே தித்திக்கும்!!

தியாகராஜரைப் பூமிக்கு அனுப்பிய பெருமாளையும், சிவராத்திரி அன்றே,
வழிபடுவோம் வாங்க!
வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், சிந்தையில் எங்கேனும் ஒரு ஓரத்தில் சிவ வைணவ பேதங்கள் நமக்குக் கூட இருக்காலாம்; அதையும் அகற்றி,
நெறிபடுவோம் வாங்க!

திருமலையில் எம்பெருமானுக்கு இன்று வில்வார்ச்சனையும் உண்டு.
திருமகளும் விரும்பி உறைவது வில்வ மரத்தில் தான்! இப்படிப்
பெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,
வெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்?

சிவ சிவ = ராம ராம = மங்களம் மங்களம்!

18 comments:

 1. இப்போது தான் தங்களது முந்தைய பதிவினை பார்த்துவிட்டு வந்தால் இதுவும் கிடைத்தது.....

  ஆரூர் நறுமலர் நாதன்
  அடித்தொண்டன் நம்பி நந்தி
  நீரால் திருவிளக்கிட்டமை
  நீணா டறியுமன்றே.
  -நாவரசர்

  ReplyDelete
 2. ஈசனடி போற்றி!
  எந்தையடி போற்றி!

  ReplyDelete
 3. ஆரூரான் பற்றி நல்ல செய்திகள் கொடுத்து இருக்கிறீர்கள் ரவி.
  சிவராத்திரி அன்று மயிலை கபால் கோவில் போவது தவிர வேறு ஒன்றும் தெரியாது.
  பால் நிறைய சமர்ப்பிக்கலாம்.அங்கே.
  அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. அற்புதமான பதிவு!!
  //திருமலையில் எம்பெருமானுக்கு இன்று வில்வார்ச்சனையும் உண்டு.
  திருமகளும் விரும்பி உறைவது வில்வ மரத்தில் தான்! இப்படிப்
  பெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,
  வெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்?//

  மிக அழகான வார்த்தை உபயோகம்.
  வாழ்த்துக்கள்!! :-)

  ReplyDelete
 5. பெரிய அழகான கோயில். தந்தமைக்கு நன்றி.

  தென்னாடுடைய சிவனே போற்றி.

  எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.

  ReplyDelete
 6. வழக்கம் போல் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் இரவிசங்கர். திருவாரூர் பெருமைகளை எல்லாம் ஒரே நேரத்தில் இன்று தான் படித்தேன். இதற்கு முன் பகுதி பகுதியாகத் தான் படித்திருக்கிறேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 7. //
  1.திருவாரூர் - அஜபா நடனம்,
  2.திருக்குவளை - பிருங்க நடனம்,
  3.திருக்காறாயில் - குக்குட நடனம்,
  4.திருமறைக்காடு - ஹம்ச பாத நடனம்,
  5.திருநாகை - பராவர நடனம்
  6.திருநள்ளாறு - உன்மத்த நடனம்,
  7.திருவாய்மூர் - கமல நடனம்
  - இவையே சப்த விடங்க தலங்கள்.
  //
  அன்புள்ள கேஆர்எஸ்,

  நேரம் கிடைக்கும்போது அந்த ஏழு வகை நடனங்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதும்படி வேண்டிக் கொள்கிறோம்.

  ReplyDelete
 8. ஆரூரைப் பற்றிய அருமையான பதிவு, ரவி!

  சிவராத்திரியன்று லிங்கொத்பவம் நிகழ்வதுதான் சிறப்பு.

  அது நிகழ்ந்தது அண்ணாமலையில் என தலைவி ஒரு பதிவில் எழுதியிருந்தார்.

  இங்கு நிங்கள் வேறுவிதமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  எல்லாமே சிறப்புதானே!

  வல்லியம்மா சொன்னது போல மயிலையில் பாலூற்றுவதும், தஞ்சையில் பெருவுடையாருக்கு அபிஷேகம் நிகழ்வதும், இது போலஎல்லா சிவத்தல்ங்களுமே பெருமையுடையதுதானே!

  ReplyDelete
 9. //பெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,
  வெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்?//

  அதி சூப்பர்:-)))))

  இந்தியப்பயணம் நல்லபடி நடக்க வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 10. //Mathuraiampathi said...
  ஆரூர் நறுமலர் நாதன்
  அடித்தொண்டன் நம்பி நந்தி
  நீரால் திருவிளக்கிட்டமை
  நீணா டறியுமன்றே.
  -நாவரசர்//

  ஆகா அப்பரின் தேவாரம்; அதுவும் திருத்தொண்டர் நமிநந்தி அடிகள் பற்றியது! அருமை அருமை!!

  ReplyDelete
 11. //கீதா சாம்பசிவம் said...
  ஈசனடி போற்றி!
  எந்தையடி போற்றி!//

  நேசனடி போற்றி
  சிவன் சேவடி போற்றி போற்றி!
  நன்றி கீதாம்மா...

  ReplyDelete
 12. //வல்லிசிம்ஹன் said...
  ஆரூரான் பற்றி நல்ல செய்திகள் கொடுத்து இருக்கிறீர்கள் ரவி.
  சிவராத்திரி அன்று மயிலை கபால் கோவில் போவது தவிர வேறு ஒன்றும் தெரியாது.
  பால் நிறைய சமர்ப்பிக்கலாம்//

  உண்மை வல்லியம்மா...மயிலையில் பால் குட சமர்ப்பணம் மிக விசேடம் தான்.
  சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் மட்டும் பால் அபிஷேகத்துக்கு அளவு கிடையாது!
  மற்ற காலங்களில் மூர்த்தியின் தன்மைக்கு ஏற்ப அளவு உண்டு.
  பாலை வீண் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கெல்லாம் இடமே இல்லை! நம் ஆகமங்கள் செய்து வைத்த ஏற்பாடு, சமூக ஒழுங்கு இது.

  ReplyDelete
 13. //CVR said...
  அற்புதமான பதிவு!!
  //பெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,
  வெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்?//

  மிக அழகான வார்த்தை உபயோகம்.
  வாழ்த்துக்கள்!! :-)//

  வாங்க seeveeaar! நலமா?
  flickr-இல் ஏதேனும் புதிய படங்கள் போட்டுள்ளீர்களா?
  நீங்க ரசித்துப் படித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 14. //Anonymous said...
  பெரிய அழகான கோயில். தந்தமைக்கு நன்றி.
  தென்னாடுடைய சிவனே போற்றி.
  எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி.//

  நன்றி அனானிமஸ்
  ஈசனடி போற்றி!
  எந்தையடி போற்றி!

  ReplyDelete
 15. // குமரன் (Kumaran) said...
  வழக்கம் போல் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் இரவிசங்கர். திருவாரூர் பெருமைகளை எல்லாம் ஒரே நேரத்தில் இன்று தான் படித்தேன். இதற்கு முன் பகுதி பகுதியாகத் தான் படித்திருக்கிறேன்.//

  நன்றி குமரன்.
  ஆரூர் தலங்கள் மற்றும் அதன் அடியார் கதைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை...பின்னொரு நாளில் ஒவ்வொன்றாக எழுத வேண்டும்.

  ReplyDelete
 16. //பாலராஜன்கீதா said...
  அன்புள்ள கேஆர்எஸ்,
  நேரம் கிடைக்கும்போது அந்த ஏழு வகை நடனங்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதும்படி வேண்டிக் கொள்கிறோம்//

  நன்றி பாலராஜன்கீதா,
  இசை இன்பம் வலைப்பூ தொடங்கியவுடன், நடனக் குறிப்புகள் பற்றிய ஒரு சிறு பதிவாவது அடியேன் சிற்றறிவுக்கு எட்டியவரை இடுகிறேன்.

  ReplyDelete
 17. // SK said...
  ஆரூரைப் பற்றிய அருமையான பதிவு, ரவி!
  சிவராத்திரியன்று லிங்கொத்பவம் நிகழ்வதுதான் சிறப்பு.//

  நன்றி SK ஐயா..
  லிங்கோத்பவம், புட்டபர்த்தியிலும் நிகழும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

  //அது நிகழ்ந்தது அண்ணாமலையில் என தலைவி ஒரு பதிவில் எழுதியிருந்தார்.
  இங்கு நிங்கள் வேறுவிதமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
  எல்லாமே சிறப்புதானே!//

  உண்மை தான்.
  லிங்கோத்பவம் ஆரூரில் இல்லை.
  இங்கு சிவராத்திரி விரத மகிமை மட்டும் தான், முசுகுந்தரின் வாயிலாக.
  விரதத்தின் பலனால் மானுடம் உய்ய வழி வகுத்த கதை.
  நீங்கள் சொன்னது போல், எல்லாமே சிறப்பு அல்லவா!

  ReplyDelete
 18. //துளசி கோபால் said...
  //பெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,
  வெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்?//

  அதி சூப்பர்:-)))))

  இந்தியப்பயணம் நல்லபடி நடக்க வாழ்த்து(க்)கள்.//

  நன்றி டீச்சர்...
  தருமமிகு சென்னை தான் பெரும்பாலும்! :-))

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP