Tuesday, March 27, 2007

படகோட்டியா? பரதனா?? - இராமன் மனம் யாருக்கு?

நாம் எல்லாம் விமானத்தில் சொந்த ஊர் போய் இறங்கியவுடன் என்ன செய்வோம்? விமான நிலையத்திலிருந்து நேரே வீட்டுக்கு தானே ஓட்டம்? பின்பு அவரவர் வசதிற்கு ஏற்ப, குளித்து விட்டோ குளிக்காமலோ, இட்லி,வடை, (கவனிக்கவும் "இட்லிவடை" இல்லை! "இட்லி கமா வடை" :-)
தோசை, சாம்பார்,காரச்சட்னி, புதினாச் சட்னி,தேங்காய்ச் சட்னி,வெங்காய்ச் சட்னி என்று வெட்டி விட்டு தானே மறு வேலை? அப்புறம் தானே நண்பர்களைப் பார்க்கப் போவதோ, இல்லை பதிவர் மாநாடோ, மற்றது எல்லாம்?

ஆனால் ராமன் என்ன செய்தான்?
அவனும் புஷ்பக விமானத்தில் வந்து இறங்குகிறான். பதினாலு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வருகிறான். நேரே எங்கு போகிறான்?

இராமாயணம் போல் புகழ் அடைந்த காவியமும் இல்லை!
இராமாயணம் போல் சர்ச்சைக்குள்ளான காவியமும் இல்லை!
அப்படி ஒரு ராசி குணசீலனான இராமனுக்கு! எந்த இந்திய மொழியாகிலும் சரி, அதில் மகாபாரதம் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் இராமாயணம் இருக்கும்! - ஏன்?

காவியமாக இல்லையா?
சரி, இலக்கியங்களிலோ இசையிலோ விரவி வரும். அதுவும் இல்லையா?
சரி, கிராமத்து எசப்பாட்டாக இருக்கும். இப்படி எல்லார் மனத்துக்கும் இனியவன் தான் நம் இராமன்!
இன்று அவன் பிறந்த நாள்; இராம நவமி! (March 27, 2007)

So, Happy Birthday - ராமா!
அட, அவனுக்கு மட்டும் தான் பிறந்த நாளா?
Happy Birthday - பரதா, இலக்குவா, சத்ருக்கனா!

எனக்கு என்னவோ, இராமனைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும், இன்று அவன் அன்பர்களைப் பற்றிப் பேசவே மனம் விழைகிறது.
அனுமனைப் பற்றி பேசலாம் தான்; ஆனால், அனுமனுக்கோ இராமனைப் பற்றிப் பேசுவது தான் பிடிக்கும்! இராமனுக்கோ அனுமனைப் பற்றிப் பேசினால் தான் மனம் களிக்கும்! என்ன செய்வது?.... ஹூம்...

இராம காதையில், இராமனுக்குக் கூடப் "பெருமாள்" என்ற பட்டம் கிடையாது!
இராமப் பெருமாள் என்று யாராச்சும் சொல்கிறார்களா?
ஆனால், எண்ணி இரண்டே இரண்டு பேருக்குத் தான் பெருமாள் என்ற சிறப்பு.
* இளைய பெருமாள் - இலக்குவன்
* குகப் பெருமாள் - குகன்


குலசேகரர், பெரியாழ்வார், திருமங்கை முதலான ஆழ்வார்களும், இராமானுசர், தேசிகன் முதலான ஆச்சாரியர்களும் குகனைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
என்று இராமனின் அடையாளங்களுள் ஒன்றாக, குகனையே குறிக்கிறார் பெரியாழ்வார்.

0171

குகனைப் பற்றி நம் எல்லாருக்குமே தெரியும்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் கதையில் ஒரே ஒரு அத்தியாயம் வருகிறானா இந்தக் குகன்? அவனுக்குப் போய் இவ்வளவு சிறப்பு ஏன்?

முருகப் பெருமானுக்கும் குகன் என்ற பெயருண்டு.
பெரிய மலைகள் இருந்தும் அங்கு வாழாது,
ஆன்மா என்னும் குகையில் வாழ்பவன் தான் குகன்!
நிடத நாட்டுக் காட்டுத் தலைவன்; கங்கைக் கரைப் படகோட்டி. இராமனிடம் பார்க்காமலேயே பேரன்பு கொண்டு இருந்தவன்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.


இலங்கையில் வெற்றி பெற்ற பின், எல்லாரும் ஊர் திரும்புகிறார்கள் புஷ்பக விமானத்தில்! பெரும் களைப்பு; வழியில் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தில் சற்றே ஓய்வு! ஆனால் ஓய்வெடுக்க எல்லாம் நேரமே இல்லை. உடனே விரைந்தாக வேண்டும்.
பதினாலு ஆண்டு காலம் முடிய, இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளன.

அயோத்திக்கு வெளியே, நந்திக் கிராமத்தில் பரதன் காத்துக் கொண்டு இருக்கிறான். சமயத்துக்குள் வரவில்லை என்றால் தீக்குளித்து விடுவான்!
அப்புறம் என்ன வாழ்ந்து, என்ன பயன்?
விமானத்தில் சென்றாலும் நேரம் ஆகிறதே; அதை விட விரைந்து சென்று, செய்தி சொல்ல வல்லவர் யார்? சொல்லின் செல்வர் தானே!


"ஆஞ்சநேயா, எனக்குத் தயை கூர்ந்து ஒரு உதவி செய்வாயா?"

"சுவாமி, என்ன இது பெரிய வார்த்தை? அடியேனுக்கு ஆணையிடுங்கள்!"

"அப்படி இல்லை ஆஞ்சநேயா! நீ இது வரை செய்த உதவிகளுக்கே, நான் எத்தனை பிறவி எடுத்து உனக்குக் கைம்மாறு செய்யப் போகிறேனோ என்னவோ?
என்னமோ தெரியவில்லை, உயிர் காக்கும் பொறுப்பெல்லாம் உன்னிடமே வருகிறது.
நீ பறந்து சென்று...’பின்னால் அனைவரும் வந்து கொண்டே இருக்கிறோம். அப்படியே தாமதம் ஆனாலும் அவசரப்பட்டு விட வேண்டாம்’என்று பரதனுக்கு அறிவிப்பாயாக! இந்தா முத்திரை மோதிரம்! செல்! சென்று சொல், ஒரு சொல்!"

ஆனால் இராமன் இன்னும் முழுக்க முடிக்கவில்லை; ....இழுத்தான்.
"ஆங்...மாருதீ, மறந்து போனேனே! போகும் வழியில் கங்கையை ஒட்டிச் சிருங்கிபேரம் என்ற ஊர் வரும். அங்கு என் அன்பன், அடியவன், குகன் இருக்கிறான். அன்று என்னையே கரையேற்றியவன் தான் இந்தக் குகன்.
அவனுக்கும் "வந்து கொண்டே இருக்கிறோம்", என்று அறிவித்துவிட்டே நீ செல்வாயாக!"

அனுமன் இந்த அவசரத்தில் இது தேவையா என்பது போல் ஒரு கணம் தயங்குகிறான்!

"ஆஞ்சநேயா...தம்பி பரதனின் உயிர் முக்கியம் தான். கால அவகாசமும் குறைவாகத் தான் உள்ளது! ஆனால் அதற்காகக் குகனைப் பார்த்தும் பார்க்காது போல் செல்ல முடியுமா?
எனவே, குகனிடம் ஓடிக் கொண்டே சொல்லி விடு. சொல்லிக் கொண்டே ஓடி விடு!"

"இன்று நாம் பதி போகலம், மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும்" என்று ஏயினன்...

சிந்தை பின் வரச் செல்பவன்,
குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம் கூறி
, மேல் வான்வழிப் போனான்.0169

யாருக்கு வரும் இந்த கருணை? இன்று அவனவன் எல்லாவற்றிலும் "தானே" இருக்க வேண்டும்;
அடுத்தது "தன் குடும்பம்" தான் இருக்க வேண்டும் என்று அலைகிறான். முதலில் தன் முனைப்பு, பின்பு தமர் முனைப்பு!
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவை உண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்
, என்கிறார் பாரதிதாசன்.

இராமனுக்கு, இழந்தது எல்லாம் இப்போது கிட்டி விட்டது. வேலையும் முடிந்து விட்டது. இனி யார் தயவும் தேவை இல்லை.
அண்ட பகிரண்டமும் அஞ்சும் இலங்கேஸ்வரனையே வென்றாகி விட்டது!
அயோத்திக்குக் கீழே உள்ள நாடுகள் எல்லாம் இனி நட்பு நாடுகள் தான்! கூட்டணி பலமாக அமைந்து விட்டது! :) இனி யார் என்ன செய்ய முடியும்?

எங்கோ ஒரு படகோட்டி, எப்போதோ படகு வலித்தான் - இது என்ன பெரிய விஷயமா? இதை விடப் பல பேர், பெரிய உதவி எல்லாம் செய்துள்ளார்கள்.
அப்படி இருக்கும் போது, ஏன் இந்தக் குகன் மேல் மட்டும் அவ்வளவு கரிசனம்? - அதுவும் தம்பியின் உயிரைக் காக்கும் தருணத்திலும்?


அங்கு தான் மறைபொருள் உள்ளது. பொதுவாக இராமாவதாரத்தில், தன்னை இறைவனாக வெளிக்காட்டாமல், மனிதனாக வாழ்ந்து காட்டியதாகச் சொல்லுவார்கள். ஆனால் குகன் போன்றோரின் விடயங்களில் தான், இந்த தெய்வத்தன்மை தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது!

1. எளியவர்க்கும் எளியவனாகும் எளிவந்த தன்மை.
2. அதே சமயம், தன்னை எளிதில் வந்து அடையும்படி,
தன் நிலையையும் வைத்துக் கொள்வது.
இறைவனின் திருக் கல்யாண குணங்களில் இவ்விரண்டும் தலையாய குணங்கள். (வடமொழியில், இந்தக் குணங்களுக்குச் சிறப்புப் பெயர் சொல்லுவார்கள், சட்டென்று நினைவுக்கு வரவில்லை; அறிந்தவர் சொல்லுங்களேன்)
தன்னையே தன் அன்பர்களுக்குக் கொடுத்து விடும் குணம்!
தம்மையே தம்மவர்க்கு நல்கும் தனிப் பெரும் பதம்! - எது அது?

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை,
முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத், தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை,
'ராமா' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக், கண்களின் தெரியக் கண்டான்!


காட்டு வாசி; கறியும் மீனும் உண்பவன்; குளித்தானோ இல்லையோ; தாழ்ந்த சாதி; தொட்டால் தீட்டு! - இப்படி எல்லாம் பார்க்க முடிந்ததா இராமனால்? தொட்டால் தீட்டு! - ஆனால் தழுவினால் கூட்டு!! :))

ஏன் இப்படி?...
ஏன் என்றால், இறை அன்புக்கு வரை இல்லை, முறை இல்லை!
சாதி இல்லை, சுத்தம் இல்லை!
மனிதன் இல்லை, மிருகம் இல்லை!
உயர்வு இல்லை, தாழ்வும் இல்லை!
இதுவே இராம காதையின் சூட்சுமம்.

அன்பு திரும்பக் கிடைக்குமா என்று கூடத் தெரியாமல், அன்பு செய்வதே - குகன்! "நின் அருளே புரிந்திருந்தேன், இனி என்ன திருக் குறிப்பே?"
- இது பெரியாழ்வார் திருமொழி
- இது குகப் பெருமாளின் இதய மொழி
- இது மாதவிப் பந்தலின் முகப்பு மொழி!

அன்பே சிவம். அன்பே இராமம்!
குகப் பெருமாள் திருவடிகளே சரணம்!

52 comments:

 1. ஹேப்பி பர்த்டே ராமா அண்ட் பிரதர்ஸ். உங்க தயவால இன்னிக்கு பானகம் குடிச்சாச்சு.

  இந்த வாரயிறுதியில் கோயில் சென்றால் எதிர்பார்க்காத விதமாக அங்கு ராமர் கல்யாண உற்சவம். என்னமோ அன்னிக்கு பூரா உங்க ஞாபகம்தான்.

  //கரியும் மீனும் உண்பவன்;//
  யானையை வெட்டி வீழ்த்தி சுட்டு உண்டாலும் கறி என்றுதானே வர வேண்டும். மாற்றி விடுங்கள். :)

  ReplyDelete
 2. ஆண்டவனை விட அவன் நாமம் மேல்.
  அவன் நாமத்தின் பெருமையை எடுத்துச் சொல்லும் அடியாரின் பெருமையோ பெருமை.

  ராமா நின் நாமம் என்ன ருசி!!
  அருமையாகப் பதிவிட்டீர்கள் ரவி.

  ReplyDelete
 3. One more excellent posting. Hats off.

  ReplyDelete
 4. KRS,
  //Happy Birthday - பரதா, இலக்குவா, சத்ருக்கனா!//

  இருக்க முடியாது! ஏனெனில் இராமர் புனர்பூச நட்சத்திரம், பரதன் - பூசம், இலக்குவனும் சத்ருக்கனும் - ஆயில்யம்(என்னுடைய) நட்சத்திரம். ஆகவே பிறந்த நாட்கள் அடுத்த அடுத்த நாட்கள் தான் வரவேண்டும்.

  //சொல், ஒரு சொல்!//
  கதைக்கு நடுவில்! விளம்பரமா? :)

  //- இது பெரியாழ்வார் திருமொழி
  - இது குகப் பெருமாளின் இதய மொழி
  - இது மாதவிப் பந்தலின் முகப்பு மொழி!//

  மொத்தத்தில் மிக்க அருமையான "விஷயம்" (நாங்க மாறமாட்டோம்ல்ல, சரி சரி விடயம் :) ) அள்ளி தந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. வாயடைச்சு நின்னுட்டேன் படிச்சுட்டு!!!!

  'ராமா நீ நாமம் எந்த ரு(ச்)சிரா'
  ன்னு ஒரு பாட்டு எப்பவும் பாட்டி நினைவு வந்தது.

  ReplyDelete
 6. என்ன இருந்தாலும் உங்கள் எழுத்துப்பாணி வியக்க வைக்கிறது கே.ஆர்.எஸ்.

  நாமம், நல்ல நாமம், ராம நாமம் நல்ல நாமம்.

  ஜனன மரண பயம் நீக்கும் நாமம்,
  ஜனகாதி முனிவர்கள் ஜெபிக்கும் நாமம்,
  மனத்திருள் நீக்கிடும் மங்கல நாமம்,
  மாதா பிதா குருவை மதித்த மன்னன்
  ராம நாமம், நல்ல நாமம்.
  (ஜெசுதாஸ் பாடியுள்ளார்).

  ReplyDelete
 7. ரவி, ராமனைச் சொல்லும்போது ஆறு குணங்கள் முக்கியம் என்பார்கள்.

  அதில்தான் இந்த சௌசீல்யமும்,

  சௌலப்யமும் அடங்கும்.
  அப்பழுக்கில்லாத நல்ல குணம், எளியவர்களும் அண்டும் படியான இனிய அன்பு..
  சத்ய காம,சத்ய சன்கல்ப என்று வளரும்.

  மிருதுவாகப் பேசுவது

  ReplyDelete
 8. நல்ல பதிவு கண்ணபிரான். பந்தலைப் பிரித்துப் புதுசாகப் போட்டிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.

  // 1. எளியவர்க்கும் எளியவனாகும் எளிவந்த தன்மை.

  2. அதே சமயம், எளியவர்கள் தன்னை எளிதில் வந்து அடையும்படி,
  தன் நிலையையும் வைத்துக் கொள்வது.
  //

  1. ஸௌலப்யம்
  2. சுலபம்

  இரண்டுமே பகவானுடைய கல்யாண குணங்கள் தான்.

  இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன், "எல்லை நீத்த
  அருத்தியன்" தேனும் மீனும்
  விருந்தினுக்கு அமைவதாகத்
  திருத்தினன் கொணர்ந்தேன்..

  என்று கம்பன் பாடுவான்.

  குகனுடைய பக்தி அப்படி அபரிமிதமான ஒன்று. ராம நவமியன்று அது பற்றி எழுதியதற்கு வந்தனங்கள்.

  ReplyDelete
 9. //இலவசக்கொத்தனார் said...
  அங்கு ராமர் கல்யாண உற்சவம். என்னமோ அன்னிக்கு பூரா உங்க ஞாபகம்தான்//

  ஆகா...என் ஞாபகமா? ஓ சாரி! அடியேன் ஞாபகமா? நன்றி கொத்ஸ்.
  சரி, கல்யாண விருந்து சாப்பிட்டீர்களா? :-)

  //
  //கரியும் மீனும் உண்பவன்;//
  யானையை வெட்டி வீழ்த்தி சுட்டு உண்டாலும் கறி என்றுதானே வர வேண்டும். மாற்றி விடுங்கள். :)//

  மாற்றி விட்டேன் கொத்ஸ்!
  ய்ப்பா...
  யானை=கரி; அடுப்புக் கரியும் "கரி" தானே? கரிந்து போன மீனை உண்பவன் என்றும் சொல்லலாமா?
  ச்சும்மா...

  ஹூம் என்ன செய்வது?
  கறியை உண்டிருந்தால் தானே கறி என்ற ஸ்பெல்லிங் கரெக்டாக வரும்! இனி மேல் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்! :-)))))

  ReplyDelete
 10. //வல்லிசிம்ஹன் said...
  ராமா நின் நாமம் என்ன ருசி!!
  அருமையாகப் பதிவிட்டீர்கள் ரவி.//

  நன்றி வல்லியம்மா.
  ஹை...டீச்சரும் இதே பாட்டை எடுத்துக் கொடுத்துள்ளார்கள்!

  ReplyDelete
 11. //Anonymous said...
  One more excellent posting. Hats off.//

  நன்றிங்க அனானிமஸ்! ராம நவமி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. // சிவமுருகன் said...
  இருக்க முடியாது! ஏனெனில் இராமர் புனர்பூச நட்சத்திரம், பரதன் - பூசம், இலக்குவனும் சத்ருக்கனும் - ஆயில்யம்(என்னுடைய) நட்சத்திரம். ஆகவே பிறந்த நாட்கள் அடுத்த அடுத்த நாட்கள் தான் வரவேண்டும்//

  அட, ஆமாம் சிவமுருகன்.
  நட்சத்திரங்கள் மிகவும் சரி.
  தந்தமைக்கு நன்றி.

  என்ன அப்பிடின்னா, மற்ற Birthday Boys-க்கு இன்னும் தனியா இரண்டு பதிவு போடணும். யப்பா...நம்மால முடியாதுப்பா சாமி. எல்லாருக்கும் ஒரே நாள், ஒரே கேக் தான் கட்டுப்படி ஆகும் :-)))

  ஹை...நீங்க ஆயில்யமா? எந்த மாதம்? உங்களுக்கு மட்டும் exception. தனிப் பதிவு போட்டு வாழ்த்திடலாம்.

  ReplyDelete
 13. படித்தேன்!!! மகிழ்ந்தேன்!!!

  அடியவர் பெருமைகளை கேட்டு கொண்டே இருக்கலாம்...

  குகனையும் தன் சகோதரனை தானே ராமன் கருதினான்...

  அவன் கருணை கடல்...

  ReplyDelete
 14. //துளசி கோபால் said...
  'ராமா நீ நாமம் எந்த ரு(ச்)சிரா'
  ன்னு ஒரு பாட்டு எப்பவும் பாட்டி நினைவு வந்தது.//

  பத்ராசலம் ராமதாசர் பாட்டு-ன்னு நினைக்கிறேன் டீச்சர்.
  அதுல "மதுரசமுல கண்டே, அதிரசமுல் கண்டே, நீ நாமம் ருசி"ன்னு வரும்.

  அப்ப எல்லாம் எனக்கு அதிரசம் சாப்பிடணுமேன்னு தான் புத்தி போகும். அம்மா ரெண்டு சாத்தி சாத்தி வெறும் பானகம் மட்டும் கொடுத்துடுவாங்க!

  ஆனா கிருஷ்ண ஜெயந்தி இப்படி இல்ல பாருங்க; முறுக்கு சீடை தேன்குழல் வெல்ல அடை.....
  அதுனால கிருஷ்ணர் தான் நம்ம ஹீரோ! :-))

  ReplyDelete
 15. //மதுரையம்பதி said...
  என்ன இருந்தாலும் உங்கள் எழுத்துப்பாணி வியக்க வைக்கிறது கே.ஆர்.எஸ்.//

  அச்சச்சோ, நமக்குப் பாணி எல்லாம் ஒன்னும் கிடையாது மெளலி சார். ஏதோ மழைக்குப் பள்ளியில் ஒதுங்கிய ஆளு...ஆழ்வார் தீந்தமிழ்ப் பூக்கள் தான் நாருக்கும் மணம் சேர்க்கிறது.

  //
  மனத்திருள் நீக்கிடும் மங்கல நாமம்,
  மாதா பிதா குருவை மதித்த மன்னன்
  ராம நாமம், நல்ல நாமம்.
  (ஜெசுதாஸ் பாடியுள்ளார்).//

  பாட்டு சுட்டி கிடைக்குமா?
  கண்ணன் பாட்டில் இடலாமே!

  ReplyDelete
 16. //வல்லிசிம்ஹன் said...
  அதில்தான் இந்த சௌசீல்யமும்,
  சௌலப்யமும் அடங்கும்.//

  ஹைய்யா...இதே தான்...இந்த சொற்கள் தான் தேடிக் கொண்டிருந்தேன். நன்றி வல்லியம்மா...

  //சத்ய காம,சத்ய சன்கல்ப என்று வளரும்//

  ஒரு வேண்டுகோள்; ஒவ்வொரு குணத்துக்கும் ஒரு கதை போல் உங்க ராமாயணத் தொடரில் போட்டால் சூப்பரா இருக்கும்.

  ReplyDelete
 17. //கறியை உண்டிருந்தால் தானே கறி என்ற ஸ்பெல்லிங் கரெக்டாக வரும்! //

  ஓய் அட்ஜெஸ்ட்மெண்ட் பார்ட்டி. மரக்கறி கூட சாப்பிட்டது இல்லையாக்கும். என்னத்த சாப்பிட்டு வளர்ந்தீரு?!!

  ReplyDelete
 18. ராமராமா! இந்தப்பதிவை நேற்று ராமநவமியன்று பார்க்க ஏன் மறந்தேன்?
  எல்லாமும் எல்லாருக்கும் கொடுத்து வைக்கிறதா என்ன?
  அருமையான பதிவு ரவி. ஆழ்ந்து அனுபவித்து எழுதும் விதமே அலாதியாக இருக்கிறது வாழ்த்துகள் அதற்கு.

  வேடர்குலத் தலைவன் குகனை 'தம்பீ'என அழைத்து தழுவிக்கொண்ட ராமன்," ஆழநீர் கங்கை அம்பி கடாவிய
  ஏழை வேடனுக்கு எம்பிநின் தம்பி;நீ
  தோழன்;மங்கை கொழுந்தியெனச் சொன்ன
  வாழி நண்பினை உன்னி மயங்குவாள்'
  எனச் சீதையின் உள்ளத்தில் வைத்துக் குகனின் பெருமையை உணர்த்தினார்.
  உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
  உள்ளத்துள் எல்லாம் உளன்.
  திருவள்ளூவர் வாக்கிற்கு இலக்கணமாய் நின்றவன் குகன்.

  ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே
  அதை மனம்குளிர ரவி அளித்தது
  என்றும் இதமே!
  ஷைலஜா

  ReplyDelete
 19. நல்ல இடுகை இது இரவிசங்கர். இரவிகுலதிலகன் இராமனின் கல்யாண குணங்களைப் பற்றி எவ்வளவு தடவை பேசினாலும் பாடினாலும் கேட்டாலும் படித்தாலும் தீராது. தமிழ்மணத்தில் ஆன்மீக சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என்பதை இந்த இடுகையின் மூலம் மீண்டும் நிறுவிவிட்டீர்கள். :-)

  ReplyDelete
 20. அழகான பதிவு. புதிய (எனக்கு) தகவல்கள். நன்றி. நிறைய எழுதவும்.

  ReplyDelete
 21. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
  தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
  சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
  இம்மையே "ராமா" என்ற இரண்டு
  எழுத்தினால்.
  - கவிச் சக்கரவர்த்தி கம்பன் -
  நல்ல பதிவு கே.ஆர்.எஸ்.நன்றிகள்.
  என்றென்றும் அன்புடன்,
  பா.முரளி தரன்.

  ReplyDelete
 22. நன்றாக வந்திருக்கிறது, கண்ணபிரான். வைணவ சம்பிரதாயத்தில் 'இராமன்' என்றே சொல்வதில்லை. வியாக்கியானங்கள் ஒன்று அவனைப் 'பெருமாள்' என்று சொல்லும் இல்லை, 'சக்கிரவர்த்தித் திருமகன்' என்னும்!! ஆனால் இவன் தவறு செய்தாலும் 'திருட்டுப்பட்டம்' கண்ணனுக்குப் போய் சேரும்! கண்ணனை யாரும் 'பெருமாள்' என்று சொன்னதே இல்லை. அவனே சொன்னபோது நம்பியவரில்லை. கண்ணன் நீர்மையின் அடையாளம். அவன் 'நம்ம வீட்டுப்பிள்ளை'. இதைத்தான் "சௌலப்பியம்" என்பார்கள். இந்த வார்த்தைதானே தேடுகிறீர்கள்?

  ReplyDelete
 23. // சிவமுருகன் said...
  இருக்க முடியாது! ஏனெனில் இராமர் புனர்பூச நட்சத்திரம், பரதன் - பூசம், இலக்குவனும் சத்ருக்கனும் - ஆயில்யம்(என்னுடைய) நட்சத்திரம். //

  ரவி! நான் பரதன் நட்சத்திரம்! அதுவும் இன்றுதான் ஜன்ம நட்சத்திரம்!
  ஷைலஜா

  ReplyDelete
 24. // ஜடாயு said...
  நல்ல பதிவு கண்ணபிரான். பந்தலைப் பிரித்துப் புதுசாகப் போட்டிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.//

  ஹை...நீங்க இப்படிச் சொன்னதும் நன்றாகத் தான் உள்ளது, ஜடாயு சார். பந்தலை, புதிய பிளாக்கர் தான் மாத்திப் போட்டுச்சு:-)

  // 1. எளியவர்க்கும் எளியவனாகும் எளிவந்த தன்மை.
  2. அதே சமயம், எளியவர்கள் தன்னை எளிதில் வந்து அடையும்படி,
  தன் நிலையையும் வைத்துக் கொள்வது.
  //
  1. ஸௌலப்யம்
  2. சுலபம்

  நன்றி ஜடாயு சார், எடுத்துக் கொடுத்தமைக்கு!
  செளலப்யம், செளசீல்யம்
  அழகான சொற்கள்.

  இதுக்கு ஒற்றைத் தமிழ்ச் சொல் கம்பனிடம் கிடைக்குமா என்று தேட வேண்டும்!

  ReplyDelete
 25. //வெட்டிப்பயல் said...
  படித்தேன்!!! மகிழ்ந்தேன்!!!
  குகனையும் தன் சகோதரனை தானே ராமன் கருதினான்...//

  வாங்க பாலாஜி!
  நீங்க இல்லாம இராமயணப் பதிவா?
  அனுமனும் நீங்களும் எங்கிருந்தாலும் வந்து விடுவீர்களே!

  ReplyDelete
 26. //இலவசக்கொத்தனார் said...
  ஓய் அட்ஜெஸ்ட்மெண்ட் பார்ட்டி. மரக்கறி கூட சாப்பிட்டது இல்லையாக்கும். என்னத்த சாப்பிட்டு வளர்ந்தீரு?!! //

  அடடா கொத்ஸ், இந்த மரக்கறின்னு ஒன்னு இருக்கிறதே மறந்து போச்சுதே!
  சரி அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்! :-)
  Curry in a Hurry!

  ReplyDelete
 27. //ஷைலஜா said...
  ஆழ்ந்து அனுபவித்து எழுதும் விதமே அலாதியாக இருக்கிறது வாழ்த்துகள் அதற்கு//

  நன்றி ஷைலஜா;
  இராமனிடம் ஆழாத மனமும் உண்டோ? கல்லே கரையும் போது, நாமும் கரையத் தானே வேண்டும்!

  //
  ஆழநீர் கங்கை அம்பி கடாவிய
  ஏழை வேடனுக்கு எம்பிநின் தம்பி;நீ
  தோழன்;மங்கை கொழுந்தியெனச் சொன்ன
  வாழி நண்பினை உன்னி மயங்குவாள்
  //

  ஆகா கம்பன் கவி அமுதம் தந்தீர்களே! நன்றி
  கணவனின் நண்பர்களைப் பற்றி மனைவியின் வாயில் சொல்லக் கேட்பது...ஆகா ஓகோ! :-)

  ReplyDelete
 28. //குமரன் (Kumaran) said...
  தமிழ்மணத்தில் ஆன்மீக சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் என்பதை இந்த இடுகையின் மூலம் மீண்டும் நிறுவிவிட்டீர்கள். :-) //

  குமரன், என்ன இது?
  நீங்க இன்னிக்கு Birthday Boy!
  அதுக்காக, உங்கச் சுமையை என்னிடம் தள்ள முடியுமா? உங்களிடமே திருப்பித் தள்ளிடுவம்ல? :-)

  அன்றும் இன்றும் என்றும் நீங்களே
  அ.உ.ஆ.சூ!!!!!!!

  ReplyDelete
 29. //ராஜநாகம் said...
  அழகான பதிவு. புதிய (எனக்கு) தகவல்கள். நன்றி. நிறைய எழுதவும்.//

  தங்கள் ஊக்கத்துக்கு நன்றி ராஜநாகம் ஐயா!

  ReplyDelete
 30. //murali said...
  சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
  இம்மையே "ராமா" என்ற இரண்டு
  எழுத்தினால்.//

  ஹா ஹா
  ஜடாயு சார், ஷைலஜா, நீங்க...
  இன்னிக்கி பதிவில் கம்பன் கவி அமுதம் பொழிகிறது!
  மிக்க நன்றி முரளிதரன்.

  (உங்க பேரைப் பார்த்தவுடன், இலங்கை டீம் நினைவுக்கு வந்து விட்டது :-)

  ReplyDelete
 31. //ஷைலஜா said...
  ரவி! நான் பரதன் நட்சத்திரம்! அதுவும் இன்றுதான் ஜன்ம நட்சத்திரம்!//

  ஒகோ....
  இன்று ஒரே Birthday Surprisesஆக இருக்கிறதே! குமரன், பினாத்தல் சுரேஷ்....

  திருவரங்கப்ரியாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
  ஸ்பெஷல் அக்கார அடிசல் எங்கே?
  DC வரட்டுமா? :-)))

  ReplyDelete
 32. good post but 1 question on lighter vein

  Ramar porandadhu aranmanayila krishnar porandadhu jail'la aana krishna jeyanthiku ella sweets Ramanavami'ku verum panagama!

  ReplyDelete
 33. //நா.கண்ணன் said...
  நன்றாக வந்திருக்கிறது, கண்ணபிரான். //

  நன்றி கண்ணன் சார். ஊரில் இருந்து வந்தாச்சு. இனி அடிக்கடி ஆழ்வார்க்கடியானிடம் வரலாம்!

  //வைணவ சம்பிரதாயத்தில் 'இராமன்' என்றே சொல்வதில்லை.
  - 'சக்கிரவர்த்தித் திருமகன்' //

  மிக்க உண்மை; அழகாகச் சொன்னீர்கள்!
  ஆமாம் இராமானின் தர்ம சங்கடங்களுக்குக் கண்ணன் தானே கழுவாய் தேடினான்.


  //கண்ணனை யாரும் 'பெருமாள்' என்று சொன்னதே இல்லை. அவனே சொன்னபோது நம்பியவரில்லை//

  அதனால் தான் ஆழ்வார்கள் அமுதம் நமக்கெல்லாம் கிட்டியது!
  அவனே சொன்னால் தற்பெருமை:-)
  அவன் ஆழ்வாரை அனுப்பிச் சொன்னால் தரணிக்கே பெருமை!

  //"சௌலப்பியம்" என்பார்கள். இந்த வார்த்தைதானே தேடுகிறீர்கள்?//

  ஆமாம் சார்.
  ஜடாயுவும் எடுத்துக் கொடுத்துள்ளார்.
  இதற்கு ஒற்றைத் தமிழ்ச் சொல் உள்ளதா கண்ணன் சார்?

  ReplyDelete
 34. //Anonymous said...
  good post but 1 question on lighter vein

  Ramar porandadhu aranmanayila krishnar porandadhu jail'la aana krishna jeyanthiku ella sweets Ramanavami'ku verum panagama!//

  நன்றிங்க!
  Here is
  1 answer on lighter vein :-)
  Making the ends meet! என்பார்கள்.

  அதான் ஏழை யாதவனுக்கு இனிப்பு,
  அரச ராமானுக்கு "வெறும்" பானகம்!
  இறைவனுக்கு வந்த சோஷியலிச சிந்தனையைப் பாருங்க! :-)

  ஒரு வேளை அவர் தான் 1st communist-ஓ? :-))

  ReplyDelete
 35. அருமையாகப் பதிவிட்டீர்கள் ரவி.
  இந்திய பயணத்துக்கு அப்புறம் உங்க எழுத்து நடையில் சிறிது ஜனரஞ்சகம் கூடி இருக்கே!

  ReplyDelete
 36. //
  ஆழநீர் கங்கை அம்பி கடாவிய
  ஏழை வேடனுக்கு எம்பிநின் தம்பி;நீ
  தோழன்;மங்கை கொழுந்தியெனச் சொன்ன
  வாழி நண்பினை உன்னி மயங்குவாள்
  //

  அட என்னை பத்தி கூட கம்பரே பாடி இருக்காரே! :p

  ReplyDelete
 37. படிப்பதோ இராமாயணம்.
  கருத்தோ உறவு பற்றி!
  சொல்வதோ ஸூப்பர் ஸ்டார்!

  விருந்துக்குக் கேட்கவா வேண்டும்!

  ஒவ்வொரு வரியும் உள்ளுருக வைக்கிறது திரு.ரவி.

  உடன் பிறந்த தம்பிக்குச் செய்தி அனுப்ப நினைத்த உடனேயே,
  பிறவாமல் வந்தடைந்த தம்பியின் நினைவும் "சிந்தை பின் வர" வருவது எவ்வளவு பெரிய குணம்!

  //1. எளியவர்க்கும் எளியவனாகும் எளிவந்த தன்மை.//

  இதனை ஒட்டியே "ஏழை பங்காளன்" என இறைவனைச் சொல்வார்கள்.
  //2. அதே சமயம், எளியவர்கள் தன்னை எளிதில் வந்து அடையும்படி,
  தன் நிலையையும் வைத்துக் கொள்வது.//
  இதே பொருள் வரும் ஒரு இடத்தில், எவரானாலும் தன்னை எளிதில் வந்து பார்க்கும்படி தன்னை வைத்துக் கொள்ளல் எனும் பொருளுக்கு, வள்ளுவன், 'எண்பதத்தான்" என்று 'சொல் ஒரு சொல்' சொல்லியிருக்கிறார்.[குறள் 548].
  அடுத்து குறள் 991-லும் 'எண்பதத்தால்' என்று இதே பொருளில் வருகிறது.

  ReplyDelete
 38. //இதற்கு ஒற்றைத் தமிழ்ச் சொல் உள்ளதா கண்ணன் சார்?//

  கண்ணன் ஐயாவே 'நீர்மை' என்ற சொல்லையும் சொல்லியிருக்காரே இரவி. அது தான் சௌலப்பியத்திற்குத் தமிழ்ச் சொல்.

  பெருமாள் என்று இராமபிரானையும் சொல்வது உண்டு. திருவரங்கநகரப்பனை பெரிய பெருமாள் என்பதே பெருமாள் வணங்கிய பெருமாள் என்பதால் தானே. அதனையும் கண்ணன் ஐயா சொல்லியிருக்கிறார்.

  திருவரங்கப்ரியாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். ஷைலஜா. உங்ககிட்ட மட்டும் சொல்றேன். யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. முட்டாள்கள் தினம் தான் என்னோட ஜன்ம நட்சத்திரம். :-)

  ReplyDelete
 39. ரவி சங்கர்!
  மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்!! இதை வாழ்வில் எல்லோரும் கடைப்பிடித்தால் ;துயரில்லை!!
  படங்கள் வெகு ஜோர்!

  ReplyDelete
 40. ambi said...
  //ஆழநீர் கங்கை அம்பி கடாவிய//
  அட என்னை பத்தி கூட கம்பரே பாடி இருக்காரே!//

  அட ஆமாம், சோழனையே பாடாத கம்பர், அம்பியைப் பாடுகிறார்ன்னா - இத மொதல்ல கீதாம்மா கிட்ட சொல்லணும் :-)

  அம்பி,
  அம்பி = படகு
  கங்கையில் அம்பி கடாவிய = கங்காவில் படகு வலித்த...

  ஆனா அம்பிக்குப் பொதுவா தம்பி என்ற பொருளும் உண்டு.
  இன்னொரு வெவரமான பொருளும் இருக்கு. சொல்லிடவா?
  அம்பி = பனையில் இறக்கப்பட்ட கள் :-))))

  ReplyDelete
 41. //ambi said...
  இந்திய பயணத்துக்கு அப்புறம் உங்க எழுத்து நடையில் சிறிது ஜனரஞ்சகம் கூடி இருக்கே!//

  ஹி ஹி...எல்லாம் நம்ம டுபுக்குவின் சிஷ்யை அவர்களிடம் பேசியதால் விளைந்த மாற்றம்! :-)))

  ReplyDelete
 42. //VSK said...
  ஒவ்வொரு வரியும் உள்ளுருக வைக்கிறது திரு.ரவி.//
  நன்றி SK ஐயா.

  //'எண்பதத்தான்" என்று 'சொல் ஒரு சொல்' சொல்லியிருக்கிறார்.[குறள் 548]//
  ஆகா...அருமையான சொல்.
  டக்கென்று விரைந்து பிடித்து தந்தீர்களே!

  நீங்கள் சொன்னவுடன் அகரமுதலியில் தேடினேன்
  எண்பதம் = Easy accessibility

  எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
  தண்பதத்தான் தானே கெடும்

  இப்படி சொல் ஒரு சொல் அள்ளித் தர SK இருக்க, பயமேன் என்று தான் சொல்லத் தோன்றுது!

  ReplyDelete
 43. //குமரன் (Kumaran) said...
  கண்ணன் ஐயாவே 'நீர்மை' என்ற சொல்லையும் சொல்லியிருக்காரே இரவி. அது தான் சௌலப்பியத்திற்குத் தமிழ்ச் சொல்//

  குமரன், இப்போது தான் புரிகிறது, சொல் ஒரு சொல் எப்படி அழகாகக் களை கட்டுகிறது என்று!
  என்ன ஒரு அழகான சொல் நீர்மை!

  "நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும்" என்ற குறளை வைத்து, நீர்மை என்பது "குணம்" என்று தான் நினைத்து வந்துள்ளேன்.

  ஆனா, கண்ணன் சாரும், நீங்களும் சொன்ன பின், யோசிக்கும் போது தான் புரிகிறது, இந்த ஒற்றைச் சொல், எப்படி பொருள் ஆழம் கொண்டுள்ளது என்று!

  நீர் மட்டும் தான் கொள்ளும் கலத்துக்கு ஏற்ப தன்னையே மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது.
  - இறைவனும் தன் பரத்துவம் விட்டு தன்னையே மாற்றிக் கொள்கிறான்

  உயரத்தில் இருந்து பள்ளத்துக்குப் பாயும் தன்மை.
  - இறைவனும் எளியவரை நோக்கித் தான் பாய்கிறான்

  நாராயணன் என்பதே நாரம்-நீர் என்ற அடிச்சொல்லில் இருந்து தான் வருகிறது.
  அதுவே அவன் குணமான சௌலப்பியத்திற்கும் நீர்மை என்று வருவது எவ்வளவு சிறப்பு!

  SK ஐயா சொன்ன "எண்பதம்" சொல்லும் கண்டீர்களா?

  ReplyDelete
 44. //குமரன் (Kumaran) said... பெருமாள் என்று இராமபிரானையும் சொல்வது உண்டு. திருவரங்கநகரப்பனை பெரிய பெருமாள் என்பதே பெருமாள் வணங்கிய பெருமாள் என்பதால் தானே.//

  உண்மை தான் குமரன்!
  திருவள்ளூரில் கூட வீர "ராகவப்" பெருமாள், என்றும் அழைக்கப்படுகிறார்.

  ஆனால் பெரும்பாலும் வியாக்யானங்களில், கண்ணன் ஐயா சொல்வது போல், சக்ரவர்த்தி திருமகன் என்று தான் சிறப்பாகச் சொல்லப்படுகிறார். பெருமாள் என்று ராமனைக் "குறிப்பால்" மட்டுமே உணர்த்துகிறார்கள்.

  ராமன் என்னும் பெருமாள் வணங்கியதால் அரங்கன் - பெரிய பெருமாள் ஆகிறான். இருப்பினும் நேரிடையாக இராமனைப் பெருமாள் என்று கூற ஆச்சாரியர்களுக்குத் தயக்கம் போலும்!

  அவதார நோக்கமான "மனிதனாய் வாழ்ந்து காட்டல்" என்பதைக் காப்பாற்றுவதற்காகப் பெருமாள் என்னும் சொல்லைப் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார்கள்!

  ஆனால் அதற்கு ஈடுகட்ட, ஆழ்வார் என்ற சொல்லை, அவன் சம்பந்தங்களுக்கு எல்லாம் அள்ளித் தெளிக்கிறார்கள்!
  பரதாழ்வார், இளையாழ்வார், சத்ருக்கனாழ்வார், விபிஷணாழ்வார் இப்படிப் பலர்!

  இலக்குவன் மட்டும் தான் பெருமாளாகவும் இருக்கிறான், ஆழ்வாராகவும் இருக்கிறான்.
  இளைய பெருமாள், இளையாழ்வார்!

  இது ஏன் என்று, பின்னர் தனியாகப் பதிவு இடுகிறேன்!

  ReplyDelete
 45. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
  இதை வாழ்வில் எல்லோரும் கடைப்பிடித்தால் ;துயரில்லை!!
  படங்கள் வெகு ஜோர்!//

  நன்றி யோகன் அண்ணா. உண்மை தான்; துயர் இல்லாமல் வாழ இது சுலபமான வழி அல்லவா?

  ReplyDelete
 46. கே.ஆர்.எஸ்,
  நான் ஓண்ணு சொல்றேன். கோச்சுக்காதீங்க. இராமன் கடவுளாகவே இருக்கவேண்டாம்..

  இராமன் என்னும் மனுஷ அரசன் பிறந்து வாழ்ந்தானே.. அந்த பாரதப்புண்ணிய பூமியில் நாம் பிறந்திருக்கவே புண்ணியம் செஞ்சுருக்க வேணுமய்யா..

  சுகுணமுலே செப்புகொண்டி!

  இராம இராம!

  அருமையான பதிவும் பின்னூட்டங்களும்..

  ReplyDelete
 47. //இன்னொரு வெவரமான பொருளும் இருக்கு. சொல்லிடவா?
  அம்பி = பனையில் இறக்கப்பட்ட கள் //

  அம்பி = தம்பி தெரியும்.
  இது புதுசு.
  நான் ஆட்டத்துக்கு வரலைப்பா! அப்புறம் வீட்டுல பூரிக்கட்டை பறக்கும். உங்க வீட்டுல பறக்குதே அதே மாதிரி! :))

  ReplyDelete
 48. //இராமநாதன் said...
  கே.ஆர்.எஸ்,
  நான் ஓண்ணு சொல்றேன். கோச்சுக்காதீங்க. இராமன் கடவுளாகவே இருக்கவேண்டாம்..//

  வாங்க மருத்துவரே வாங்க! நலமா?
  எதுக்குங்க கோவிச்சிக்கணும்? அதுவும் இராமன் பற்றிப் பதிவு போடும் போது கோபம் வந்தா, அப்புறம் ராமர் கோவிச்சிப்பார்! :-)

  //இராமன் கடவுளாகவே இருக்க வேண்டாம்//
  இது தானே உண்மை!
  அதனால் தான் பெருமாள் என்கிற பட்டம் அவனுக்கு நேரிடையாகத் தரப்படவில்லை!

  அப்படின்னா ராமனுக்குக் கோவில் ஏன்?
  மனிதன் மனிதனாக கடைசி வரை வாழ்ந்தால், தெய்வத்துள் வைக்கப்படும் என்று காட்டத் தான் என்று நினைக்கிறேன்!

  //சுகுணமுலே செப்புகொண்டி!//
  அழகாச் சொன்னீங்க ரெண்டே வார்த்தையில்!

  ReplyDelete
 49. ரவி
  மிக அருமையான விளக்கம். அழகான படங்கள்.

  ReplyDelete
 50. இப்போது தான் இந்த பதிலை சரியா படித்தேன்.

  //ஹை...நீங்க ஆயில்யமா? எந்த மாதம்? உங்களுக்கு மட்டும் exception. தனிப் பதிவு போட்டு வாழ்த்திடலாம். //

  இந்தாங்க பதில்.

  எனக்கும் இராமருக்கும் ஒருமாத இடைவெளி என்று வேடிக்கையாக சொல்வதுண்டு.

  கண்டு பிடிச்சசாசா?

  ReplyDelete
 51. //பத்மா அர்விந்த் said...
  ரவி
  மிக அருமையான விளக்கம். அழகான படங்கள்//

  நன்றி பத்மா ஜி.
  படங்கள் BG Sharma

  ReplyDelete
 52. //சிவமுருகன் said...
  இந்தாங்க பதில்.
  எனக்கும் இராமருக்கும் ஒருமாத இடைவெளி என்று வேடிக்கையாக சொல்வதுண்டு//

  ஆகா! சிவா, கண்டுபுடிச்சாச்சு!
  ஒரு மாத இடைவெளி தானே! காத்திருக்கிறோம் மதுரை கேக்குக்கும், Birthday Bumpsக்கும் :-))

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP