Sunday, October 21, 2007

புதிரா? புனிதமா?? - சிலப்பதிகாரம்!

வடைகளைச் சுட்டுடலாமா? :-) கீழே விடைகள் Bold செய்யப்பட்டுள்ளன. விரிவான விளக்கங்கள் பின்னூட்டங்களில்!
ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

நமக்கே உரிய நம் தமிழக இலக்கியங்களில் நாம் ஆர்வம் காட்டினால் தான், அடுத்த தலைமுறைக்கு தமிழ் நயம் பாராட்டல் கொஞ்சமாவது மிஞ்சும்!
நாக இளங்கோவன், அவருடைய சிலம்பு மடல்கள் பற்றிப் பின்னூட்டத்தில் சொல்லி இருந்தார்! நன்றாக இருக்கு! உரை நடையில் இருப்பதால், படிக்க எளிதாகவும் இருக்கு! ஆங்காங்கே முக்கியமான பாடல்களை கொடுத்து, உரைநடையும் செய்யுளுமாய் வளைய வருகிறது! தவறாமல் படிங்க!! இதோ சுட்டி!

வெற்றியாளர்கள் யாவர்? (முதலிலேயே சரியாகச் சொன்னவர்கள் வரிசையில்.....)
வரலாறு.காம் - கமல், கெக்கேபிக்குணி, குமரன், ஜி.ராகவன், அனந்த லோகநாதன்


பரிசு? - சிலம்பு?
கழட்டிக் கொடுத்து கட்டுப்படியாவாது!
சுழட்டிச் சுழட்டிச் சிலம்பாட்டம் ஆட வேணும்னா சொல்லிக் கொடுக்கலாம் :-) வூட்டாண்ட வாங்க! சொல்லித் தாரேன்!

இதோ...முழு சிலப்பதிகாரக் கதையும்...ஈசியா புரியற மாதிரி...சிற்பங்களில் வடித்து வைத்துள்ளார்கள்! சிற்பத்தின் புகைப்படம் - பக்கத்திலேயே அதன் கதை! இது எங்கு இருக்கு? பூம்புகார் கூடத்தில் தான்!
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆர்வம் மற்றும் முயற்சியால் உருவான கலைக் கூடம்! நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தளத்தில் உள்ள சுட்டி இது! இதோ பரிசு! க்ளிக்கோங்க!!

அடுத்த புதிரா புனிதமாவில் - வழக்கம் போல் கேள்விகளா இல்லாமல், ஒரு மாற்றம் இருக்கப் போவுது!




ஆதி காவியம்-னு இராமாயணத்தை வடமொழியில் குறிப்பிடுவாங்க! ஆனா நம் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை முதற் காப்பியம் என்று அறியப் பெறுவது சிலப்பதிகாரம் தான்!

மற்ற கதைகளை எல்லாம் அறிந்துள்ள நாம், நம் பண்பாட்டுக் காப்பியமான
சிலப்பதிகாரத்தை அதே அளவுக்கு அறிந்துள்ளோமா? நம் வீட்டுக் குழந்தைகளுக்கு அதில் ஏதாச்சும் கதைகள் இருக்கா? அப்படியே இருந்தாலும், நமக்குத் தெரிஞ்சா தானே குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதற்கு!

மூச்சுக்கு முந்நூறு முறை, தமிழ் தழைக்க வேண்டும் என்று குரல் கொடுக்குறோம். ஆனா நம்முடைய தமிழ்க் காப்பியங்களை நாமே முழுதும் அறிந்து வைத்துள்ளோமா? இல்லை அறியத் தான் முயற்சிகள் செய்துள்ளோமா?......
இல்லை, அறிந்த பின், அதன் கதையைத் தமிழுலகுக்கு மேலும் எடுத்துச் சொல்ல எண்ணியுள்ளோமா?

எனக்கு சிலப்பதிகாரத்தை படிக்கும் வாய்ப்பு கிட்டியதே கல்லூரியில் தான். சக மாணவர் ஒருவர் அதைச் சிலப்பதி"ஹாரம்" என்று சொல்லி கொஞ்சம் டகால்டி பண்ண, அப்போது கோபம் வந்து படிக்கத் துவங்கினேன் :-)

வள்ளுவர் அறம்-அரசியல் பற்றியும், பெண்ணின் மாண்பு பற்றியும், ஊழ்வினை பற்றியும் தத்துவமாகச் சொல்லி விட்டுப் போனார்!
ஆனால் எளிய மக்களும் அதைத் தொடர்புபடுத்தி பார்க்கும் வண்ணம், கதை நடையில் கொண்டு சென்றவர் இளங்கோ!

கண்ணகியைப் பொழைக்கத் தெரியாதவள், "புனித பிம்பம்" என்று இக்காலத்தில் ஒரு சொல்லில் அடக்கி, கேலி பேசலாம் சிலர்! ஆனால் அவள் உள்ளத்தில் இருந்த அறத்தின் மேன்மையை அறிந்தவர் யார்?


இளங்கோவின் காப்பியத்தில் தான் எத்தனை எத்தனை புரட்சிகள்?
1. கதையில் முதலில் தலைவனை அறிமுகப்படுத்தாமல், தலைவியை அறிமுகப்படுத்துகிறார்.

2. அதுவும் ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் சாதாரண குடிமக்கள்.
அரசனைப் பாடாது, அன்புடையாரையும் அடியவரையும் பாடும் பாணி இளங்கோவின் எண்ணத்திலேயே இருந்துள்ளது.

3. பெண்ணின் மென்மைத் தன்மையையும், வீரத்தையும் ஒருங்கே காட்டும் கவிஞர் அவர்! குடும்ப நலனே பெரிதென்று இருக்கும் ஒரு வன்சொல் அறியாத பெண்,
நாலு பேர் முன்னிலையில் "தேரா மன்னா" என்று அரசனைச் சொல்ல எவ்வளவு "தில்" வேண்டும்! அதுவும் ஊரு விட்டு ஊரு வந்து! எந்த ஒரு பின்புலமும் அரசியல் சப்போர்ட்டும் இல்லாது!

4. அப்படியே சொன்னாலும், "யாரடி நீ...வாய் நீளுதோ...கொஞ்சம் கூட அவையடக்கம் இல்லாமல்?" என்று அதட்டி இருக்கலாம். ஆனா அமைதியாக வழக்கு கேட்க, ஒரு ஆட்சி முறைக்குத் தான் எவ்வளவு பொறுப்பு இருந்திருக்க வேண்டும்.

கேள்வி கேட்டாலே போதும், வூட்டுக்கு ஆட்டோ அனுப்பும் "மன்னர்கள் ஆளும் மக்களாட்சி" ஆகி விட்டது இன்றைய கால கட்டம்! :-)
அது ராமாயணம் ஆகட்டும் சரி, சிலப்பதிகாரம் ஆகட்டும் சரி... நெறிகளைத் தாங்கிப் பிடிக்காது, ஆட்களை மட்டுமே தாங்கிப் பிடிப்பது என்பதில் ஆத்திகம்-நாத்திகம் கூட கை கோர்த்துக் கொள்வது தான் வேடிக்கை!

5. ஓ, அவளா! அவள் ஒரு நடனப் பெண் தானே என்று இளங்கோ, மாதவியை வெகு ஈசியாக வில்லி ஆக்கியிருக்க முடியும்! படையப்பா ஸ்டைலில், ஒரு வில்லி அப்போதே உருவாகி இருப்பார்! ஆனால் இளங்கோ செய்தது என்ன?
குலத்தால் அவளை ஒதுக்காமல், குணத்தால் அவளை ஏற்றுக் கொண்டு, காப்பிய நாயகிக்கு இணையாக வைக்கிறார்!

காப்பியத்தில், தவறுகளை ஆணும் பெண்ணும் சரி சமமாகவே புரிகின்றனர். ஆனால் மாதவி மனம் மாறி, துறவு மனப்பான்மை மிகுந்து விடுகிறாள்;
கண்ணகியின் நலம் குறித்து தான் விடும் தூதில் கேட்டனுப்பும் போது, நம் மனக்கண் முன் வெகுவாக உயர்ந்து விடுகிறாள்.(அட மாதவியும் புனித பிம்பம் ஆயிட்டாப்பா என்று சொல்லிடாதீங்க :-)

6. இளங்கோ, தான் சமணர் ஆக மாறிய போதிலும், காப்பியத்தில் பொது நோக்கம் தான் காட்டுகிறார்; பிற சமயங்களையும், தெய்வங்களையும், மக்கள் பழக்க வழக்கங்களையும், தனக்கு எதிரி நாடான சோழ/பாண்டிய வளம் பற்றியும் மறைக்காது எழுதிய நல்ல உள்ளம், இளங்கோவின் "நெஞ்சம்". அதனால் தான் போலும், பாரதி "நெஞ்சை" அள்ளும் சிலம்பு என்றான்.

நெஞ்சை அள்ளும் சிலம்பில் எத்தனை முத்துக்கள், மாணிக்கங்கள் நமக்குத் தெரியும்-னு பாக்கலாம், வாரீங்களா?
இதோ கேள்விகள்! - கூகுளாண்டவர் இதற்கு எவ்வளவு பெரிசா உதவி செய்யப் போறாருன்னும் பார்க்கலாம்! :-) சரியான விடைகள் நாளை மாலை அறிவிக்கப்படும்! (நியுயார்க் நேரப்படி) .....ஓவர் டு இளங்கோவடிகள்!

1

பாண்டியனிடம், தன் தந்தையார் பெயரைக் குறிப்பிடாமல், கணவனின் தந்தையார் பெயரைத் தான் குறிப்பிட்டுச் சொல்கிறாள் கண்ணகி. ஆனால் அவள் தந்தையாரின் பெயர் என்ன?

1


அ) மாசாத்துவான்
ஆ) அப்பூதியடிகள்
இ) மாநாய்க்கன்
ஈ) மாடலன்

2

மாதவியும் கோவலனும் பிரியக் காரணமாக இருந்த பாடல் எது?

2


அ) கானல் வரி
ஆ) குன்றக் குரவை
இ) ஆய்ச்சியர் குரவை
ஈ) இந்திர விழா எடுத்த காதை

3

இளங்கோ அடிகளுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் கண்ணகி உயிர் துறந்த கதையை முதலில் சொல்லியவர் யார்?

3


அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள்
ஆ) கூல வாணிகன் சாத்தனார்
இ) கவுந்தி அடிகள்
ஈ) சமண குரு

4கோவலனை ஏமாற்றிய பொற்கொல்லனின் பெயர் என்ன?

4


அ) மதுரைப் பொன்னான்

ஆ) மாநகர் வழுதி
இ) குறிப்பிடவில்லை
ஈ) சித்திரக் கொல்லன்

5மாதவி, கோவலனிடம் தூது அனுப்பும் ஆட்களின் பெயர் என்ன?

5


அ) மாதரி/கோசிகன்
ஆ) மாடலன்/மாதரி
இ) வசந்தமாலை/கோசிகன்
ஈ) சித்ராபதி/வசந்தமாலை

6மாதவிக்கு அரசன் கொடுத்த மாலையைப் பொருள் கொடுத்து வாங்க வல்லவரே, மாதவியின் கணவர் என்று மாதவியின் தாயார் அறிவிக்கின்றாள். கோவலன் எவ்வளவு பொன் கொடுத்து மாலையைப் பெறுகிறான்?

6


அ) 1,008 பொன்
ஆ) 1,000 கழஞ்சு
இ) 1,008 கழஞ்சு
ஈ) 11,000 பொன்

7கோவலனையும் கண்ணகியையும், மதுரைக்கு வெளியே உள்ள ஒர் இடைச்சேரியில், இரு பெண்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் கவுந்தியடிகள்! அவர்கள் யார்?

7


அ) மாதரி/ஐயை
ஆ) குரல்/துத்தம்
இ) விளிரி/ஐயை
ஈ) கைக்கிளை/ஐயை
8

சிலப்பதிகாரத்தில் சுவாமிமலை எனப்படும் திருவேரகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இளங்கோவால் வர்ணிக்கப்படும் வைணவத் தலங்கள் எவை?

8


அ) திருவரங்கம்/காஞ்சி
ஆ) திருவரங்கம்/அழகர் கோவில்
இ) திருமலை/திருவரங்கம் ஈ) திருமலை/திருவனந்தபுரம்

9மணிமேகலை என்று குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள் மாதவியும் கோவலனும். யார் நினைவாக அந்தப் பெயரைச் சூட்டுகிறார்கள்?

9


அ) கோவலன் குலதெய்வம்

ஆ) மாதவியின் ஆபரணம்
இ) இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம்
ஈ) மாதவியின் தாயார்

10கண்ணகிக்கு கோவில் எடுக்க, இமயத்தில் இருந்து கல்லெடுக்க விரும்பினான் செங்குட்டுவன். அப்போது ஏற்பட்ட வடதிசைப் போரில் எந்த வடநாட்டு மன்னர்களைப் போரிட்டு வென்றான்?

10


அ) கனகன்/சஞ்சயன்
ஆ) கனகன்/அழும்பில்வேள்
இ) கனகன்/விசயன்
ஈ) விசயன்/கங்கன்

இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) மாசாத்துவான் ஆ) அப்பூதியடிகள் இ) மாநாய்க்கன் ஈ) மாடலன்

2 அ) கானல் வரி ஆ) குன்றக் குரவை இ) ஆய்ச்சியர் குரவை ஈ) இந்திர விழா எடுத்த காதை

3 அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள் ஆ) கூல வாணிகன் சாத்தனார் இ) கவுந்தி அடிகள் ஈ) சமண குரு
4 அ) மதுரைப் பொன்னான் ஆ) மாநகர் வழுதி இ) குறிப்பிடவில்லை ஈ) சித்திரக் கொல்லன்
5 அ) மாதரி/கோசிகன் ஆ) மாடலன்/மாதரி இ) வசந்தமாலை/கோசிகன் ஈ) சித்ராபதி/வசந்தமாலை
6 அ) 1,008 பொன் ஆ) 1,000 கழஞ்சு இ) 1,008 கழஞ்சு ஈ) 11,000 பொன்
7 அ) மாதரி/ஐயை ஆ) குரல்/துத்தம் இ) விளிரி/ஐயை ஈ) கைக்கிளை/ஐயை
8 அ) திருவரங்கம்/காஞ்சி ஆ) திருவரங்கம்/அழகர் கோவில் இ) திருமலை/திருவரங்கம் ஈ) திருமலை/திருவனந்தபுரம்
9 அ) கோவலன் குலதெய்வம் ஆ) மாதவியின் ஆபரணம் இ) இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம் ஈ) மாதவியின் தாயார்
10 அ) கனகன்/சஞ்சயன் ஆ) கனகன்/அழும்பில்வேள் இ) கனகன்/விசயன் ஈ) விசயன்/கங்கன்

67 comments:

  1. "மன்னர்கள் ஆளும் மக்களாட்சி" ஆகி விட்டது தற்காலம்! :-)

    :-(

    இப்படி இருக்கவேண்டுமா?

    ஓ! கேள்விக்கு பதிலா?? நாளை சிங்கை நேரப்படி. :-)

    ReplyDelete
  2. 1. இ) மாநாய்க்கன்
    2. அ) கானல் வரி
    3. அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள் - வேட்டுவர்கள் என்று படித்ததாக நினைவு.
    4. இ) குறிப்பிடவில்லை.
    5. ஈ) சித்ராபதி/வசந்தமாலை
    6. இ) 1,008 கழஞ்சு
    7. அ) மாதரி/ஐயை
    8. இ) திருமலை/திருவரங்கம்
    9. இ) இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம்
    10. இ) கனகன்/விசயன்

    ReplyDelete
  3. குமரன் தான் சிலம்பு வாங்க முதல் போணியா? :-)

    5, 9 தவிர எல்லாமே சரி, குமரன்!

    சிலப்பதிகாரத்தை நீங்களும் படிச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு சொன்னீங்க - சேடகமாட மாலை ராகவனும் சொன்னார் - நானும் படிச்சிக்கிட்டு இருக்கேன்!

    சிலம்பில் வைணவம்-னு எழுத உட்கார்ந்தேன். காதல், இசை வரிகள் எல்லாம் படிச்சு, இப்படி பதிவு ஹைஜாக் ஆகி விட்டது! :-))))

    ReplyDelete
  4. கதையாப் படிச்சு இருக்கேனே தவிர இவ்வளவு ஆழ்ந்து படிச்சதில்லை. படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டுட்டீங்க.

    ReplyDelete
  5. 5. ஆ) மாடலன்/மாதரி
    9. அ) கோவலன் குலதெய்வம்

    இது தான் கடைசி முயற்சி. :-)

    ReplyDelete
  6. தமிழார்வம் உடையவர் என்று சொல்லிக் கொள்ளும் என்னைப் போன்றவர்களும் இராமாயணம் அறிந்த அளவிற்குச் சிலப்பதிகாரமும் மற்ற காப்பியங்களும் அறியவில்லை என்பது தான் வெட்கக்கேடான உண்மை இரவிசங்கர். அறியும் முயற்சிகள் இப்போது தான் தொடங்கியுள்ளன.

    இளங்கோவும் அரசனையும் அரசனைப் போல் சொல்லப்போனால் அரசனை விடவும் மிக உயர்நிலையில் வாழ்ந்த பெருமக்களைப் பற்றிய காவியத்தைத் தான் பாடியிருக்கிறார் இரவிசங்கர். கோவலனும் கண்ணகியும் அவர் தம் பெற்றோரும் சாதாரண மக்கள் என்று வகைப்படுத்த முடியாதவர்கள். அரசனுக்கே கடன் கொடுக்கும் அளவிற்கு செல்வ வளம் மிகுந்து இருந்தவர்கள் கோவலன், கண்ணகியின் பெற்றோர்.

    அப்படிப் பெருங்குடியில் பிறந்ததால் தான் அவளால் அரசனைக் கேள்வி கேட்டு வழக்குரைக்க முடிந்தது என்று நினைக்கிறேன். எளிய குடியில் பிறந்தவர்கள் அப்படித் துணிவுடன் அரசனைக் கேள்வி கேட்க முடிந்திருக்குமா என்பது ஐயமே. ஆனால் அப்படி பெருங்குடி பிறந்த பெருமகள் ஆனாலும் அவள் உரைத்த வழக்கைக் கேட்டு அவள் பக்க நியாயத்தை உணர்ந்து உடனே உயிர் விட்ட பாண்டியன் பெருமை மிகப்பெரிது.

    பாட்டுடைத் தலைவர்களாக பெருங்குடிமக்களைக் காட்டினாலும் மற்ற எளிய மக்களையும் இந்த காப்பியம் முழுக்கக் காட்டுகிறார் இளங்கோ. அது அந்தக் கால வாழ்க்கையைக் காட்டும் மிக முக்கியத் தரவாக இருக்கிறது.

    பிற்கால காவியங்களைப் போல் மெதுவாக நகராமல் சட்டு சட்டென்று சிலப்பதிகாரம் பாய்ந்து நகர்ந்து செல்வது போல் தோன்றுகிறது. படலம் படலமாகப் பிற்கால காவியங்களில் படித்துவிட்டு ஒரு நிகழ்ச்சிக்கு பத்து பதினைந்து வரிகளுக்கு மேல் சொல்லாத சிலப்பதிகாரத்தைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. :-)

    ReplyDelete
  7. 1 அ) மாசாத்துவான்
    2 அ) கானல் வரி
    3 ஈ) சமண குரு
    4 ஈ) சித்திரக் கொல்லன்
    5 இ) வசந்தமாலை/கோசிகன்
    6 1,000 கழஞ்சு
    7 -
    8 -
    9 அ) கோவலன் குலதெய்வம்
    10 இ) கனகன்/விசயன்

    ReplyDelete
  8. தன் கடைசி முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிராமாதித்தன் குமரன் 9 ஆம் கேள்விக்கும் விடையச் சரியாச் சொல்லி 9/10 இல் நிக்குறாரு!

    இனி வரவங்க ரெக்கார்ட்டை உடைக்கணும்னா - மினிமம் ஒன்பது கேள்விக்கு வடையைச் சரியாச் சுடணும் போலக்கீதே! :-)))

    ReplyDelete
  9. சிலப்பதிகாரத்தில் மிகவும் பேசப்படும் ஆராய்ச்சிக்கு உரிய வரி

    "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் ..."

    சிலப்பதிகார காலத்தில் தான் தமிழர் திருமண முறைகள் மாறி இருக்கிறது என்பதற்கு அந்த வரி எடுத்துக்காட்டு. ஆனால் அம்மி மீதிப்பது,அருந்ததி பார்பது பற்றி எந்த செய்தியும் இல்லை.

    ReplyDelete
  10. 1. மாநாய்க்கன்
    2. கானல் வரி
    3. கவுந்தி அடிகள்
    4. குறிப்பிடவில்லை
    5. வசந்தமாலை/கோசிகன் ?
    6. 1,000 கழஞ்சு ??
    7. மாதரி/ஐயை
    8. திருவரங்கம்/அழகர் கோவில் ???
    9. இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம்
    10. கனகன்/விசயன்

    ReplyDelete
  11. //குமரன் (Kumaran) said...
    தமிழார்வம் உடையவர் என்று சொல்லிக் கொள்ளும் என்னைப் போன்றவர்களும் இராமாயணம் அறிந்த அளவிற்குச் சிலப்பதிகாரமும் மற்ற காப்பியங்களும் அறியவில்லை என்பது தான் வெட்கக்கேடான உண்மை இரவிசங்கர். அறியும் முயற்சிகள் இப்போது தான் தொடங்கியுள்ளன. //

    அட...இங்கேயும் அதே கதி தான் குமரன்! சரி, இப்பவாச்சும் தொடங்கினோமே! இசை இன்பம் பதிவில், சிலப்பதிகாரத் தமிழ் இசை பற்றி எழுதவும் எண்ணியுள்ளேன்!

    இராம.கி ஐயா, முன்பு எப்போதோ, கண்ணகியும் கரடிப் பொம்மையும்னு ஒரு பதிவு போட்டாரு! அதுவும் நினைவுக்கு வருது!

    //கோவலனும் கண்ணகியும் அவர் தம் பெற்றோரும் சாதாரண மக்கள் என்று வகைப்படுத்த முடியாதவர்கள். அரசனுக்கே கடன் கொடுக்கும் அளவிற்கு செல்வ வளம் மிகுந்து இருந்தவர்கள் கோவலன், கண்ணகியின் பெற்றோர்.//

    உண்மை தான் குமரன்.
    எப்படியோ, பொதுவா அரசனைப் பாடும் வழக்கில் இருந்து, மக்களில் ஒரு சிலரைப் பாடும் முயற்சிக்கு வந்திருக்கிறார் அடிகளார். அதுவும் மாதவியைப் பற்றிப் பாடும் போது! அவள் ஊருக்கு வெளியே உள்ள மரூவர்பாக்கத்தில் வாழ்ந்த கணிகையர் குலப் பெண். அவளுக்கும் ஏற்றம் தருகிறாரே குமரன்!

    //அப்படிப் பெருங்குடியில் பிறந்ததால் தான் அவளால் அரசனைக் கேள்வி கேட்டு வழக்குரைக்க முடிந்தது என்று நினைக்கிறேன். எளிய குடியில் பிறந்தவர்கள் அப்படித் துணிவுடன் அரசனைக் கேள்வி கேட்க முடிந்திருக்குமா//

    இதில் சற்று மாறுபடுகிறேன்!
    பெருங்குடிப் பெண் என்பதால் தான் அவளால் வழக்குரைக்க முடிந்ததா என்ன? அவள் சோழ நாட்டில் தான் பெருங்குடிப் பெண்!
    பாண்டிய நாட்டில் ஒன்னும் இல்லாதவள்! உறவினர் வீட்டுக்குக் கூடச் செல்லாமல் ஆயர்சேரியில் தங்குகிறாள்! அவள் போய் வழக்காடும் போது பின்புலம் எதுவும் இன்றித் தான் போகிறாள்!

    //அவள் உரைத்த வழக்கைக் கேட்டு அவள் பக்க நியாயத்தை உணர்ந்து உடனே உயிர் விட்ட பாண்டியன் பெருமை மிகப்பெரிது.//

    ஆமாம்.
    அவசரத்தில் நீதி செய்ய மறந்த ஒரே குற்றம். அதற்கு அவனும் அரசியும் பலியானதோடு நிறுத்தி இருக்கலாம்.
    ஊரை எரிக்கும் அளவுக்கு காட்சிகள் ஏன் அமைந்தன என்று பல நாள் யோசித்து இருக்கிறேன்!

    ஒரு வேளை சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இது தானோ?

    ReplyDelete
  12. கோவியின் விடைகளில் 2,5,9,10 சரி!
    ஆகா...நீங்களுமா GK! மகாபாரதம் புதிரா புனிதமாவில் கலக்கினீங்களே! சிலம்பில் சிலம்பாட்டம் ஆடுவீங்க-ன்னு நினைச்சேனே!

    சரி...அதான் 2nd attempt உண்டாச்சே! வடைகளைத் திரட்டிக்கிட்டு வாங்க :-)))

    ReplyDelete
  13. ஜீவி
    3,6,8,9 தவறு
    மீதி எல்லாம் சரி தான்!

    ReplyDelete
  14. //மற்ற கதைகளை எல்லாம் அறிந்துள்ள நாம், நம் பண்பாட்டுக் காப்பியமான
    சிலப்பதிகாரத்தை அதே அளவுக்கு அறிந்துள்ளோமா?
    நம் வீட்டுக் குழந்தைகளுக்கு அதில் ஏதாச்சும் கதைகள் இருக்கா? அப்படியே இருந்தாலும், நமக்குத் தெரிஞ்சா தானே குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்வதற்கு!//

    அதே அதே

    ReplyDelete
  15. My Answers.

    1) A ) மாசாத்துவான்
    2) கானல் வரி
    3) கூல வாணிகன் சாத்தனார்
    4) அ) மதுரைப் பொன்னான்
    5)இ) வசந்தமாலை/கோசிகன்
    6) இ) 1,008 கழஞ்சு
    7) அ) மாதரி/ஐயை
    8) ஆ) திருவரங்கம்/அழகர் கோவில்
    9) அ) கோவலன் குலதெய்வம்
    10)இ) கனகன்/விசய

    ReplyDelete
  16. அந்த அளவுக்கு உள்வாங்கி படிக்கல என்று தெரியுது உங்க கேள்விகளை படிக்கும் போது. :)

    நைட் முயற்சி செய்து பாக்குறேன்

    ReplyDelete
  17. 1 அ) மாசாத்துவான்
    2 அ) கானல் வரி
    3 ஆ) கூல வாணிகன் சாத்தனார்
    4 ஈ) சித்திரக் கொல்லன்
    5 இ) வசந்தமாலை/கோசிகன்
    6 ஆ) 1,000 கழஞ்சு
    7 அ) மாதரி/ஐயை
    8 இ) திருமலை/திருவரங்கம்
    9 அ) கோவலன் குலதெய்வம்
    10 இ) கனகன்/விசயன்

    தமிழ் ரொம்பத்தெரியாது. கூகுள் உதவியும் கேக்கலை
    ச்சும்மா என் லக்ஷணத்தைத் தெரிஞ்சுக்கத்தான் இந்தமுறை கலந்துக்கிட்டேன் :-)

    ReplyDelete
  18. 1. மாநாயக்கன்

    2.இந்திர விழா எடுத்த காதை

    3.பெரியாற்றின் கரை கிராம மனிதர்கள்

    4.சித்திரக் கொல்லன்

    5.வசந்த மாலை/ கோசிகன்

    6.1,000 கழஞ்சு

    7.மாதரி/ஐயை

    8.திருவரங்கம்/அழகர் கோயில்

    9.கோவலன் குலதெய்வம்?

    10.கனகன்/விசயன்

    பத்து மட்டும் சரினு தெரியும். பள்ளி நாட்களில் படிச்சது. நினைவு இருக்கானு எனக்கே ஒரு பரிட்சை. மற்றபடி ஜெயிக்கப்போவது யாரு? குமரனே தான்! அவரை மிஞ்ச முடியுமா? பெருமூச்சுக்களுடன் :))))))))

    ReplyDelete
  19. வாங்க துளசி டீச்சர்!
    அட தேவுடா, டீச்சர் பேப்பரை ஸ்டூண்ட் திருத்துவதா?

    2,5,7,8,9,10 ஆறுமே சரி டீச்சர்!

    ReplyDelete
  20. அடுத்து தலைவியா?
    1,3,5,7,9,10 - உங்களுக்கும் ஆறு சரியான விடைகள் கீதாம்மா..

    அது என்ன ஜெயிக்கப்போவது குமரன்-ன்னு முடிவே கட்டீட்டீங்களா?
    ஓ மதுரைப் பாசமா? :-))))
    அதான் ஒரு விடையில் கூட உங்க ஊரு திவ்யதேசத்தைச் சொல்லிட்டீங்க போல!

    ஜி.ராகவன் என்ற விற்பன்னர் இன்னும் மேடைக்கு வரலையாக்கும்! தெரிஞ்சிக்கோங்க! :-))))

    ReplyDelete
  21. கண்ணபிரான் ரவிசங்கர்,

    சிந்திக்கத் தூண்டும் நல்ல கேள்விகள். இவை சரியா பாருங்க!!!

    1 இ) மாநாய்க்கன்

    2 அ) கானல் வரி

    3 அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள்

    4 இ) குறிப்பிடவில்லை

    5 இ) வசந்தமாலை/கோசிகன்

    6 இ) 1,008 கழஞ்சு

    7 அ) மாதரி/ஐயை

    8 அ) திருவரங்கம்/காஞ்சி

    9 அ) கோவலன் குலதெய்வம்

    10 இ) கனகன்/விசயன்


    நன்றி
    கமல்
    வரலாறு.காம்

    ReplyDelete
  22. nalla pathivu. very informative...

    ReplyDelete
  23. what happened to my Results . I sent you yesterday !!!.
    Was it deleted !!!?? :(

    ReplyDelete
  24. அனந்த லோகநாதன்
    மன்னிச்சுகோங்க! நேற்று தூங்கப் போன போது பார்த்தேன்! இன்று காலை அப்படியே மறந்து போச்சு!

    2,5,6,7,9,10 - ஆறும் சரி!
    2nd attempt try panreengala? :-)

    ReplyDelete
  25. வரலாறு.காம், கமல் வாங்க வாங்க!
    அடிச்சி ஆடியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!
    8 ஆம் பதில் தவிர, அனைத்துமே சரியாச் சொல்லி இருக்கீங்க! அதுவும் முதல் முயற்சியிலேயே!
    வரலாறு.காம்-னா சும்மாவா? :-)))

    ReplyDelete
  26. 1.இ) மாநாய்க்கன்
    2 அ) கானல் வரி
    3 இ) கவுந்தி அடிகள்
    5ஈ) சித்ராபதி/வசந்தமாலை
    7அ) மாதரி/ஐயை
    9இ) இடுப்பில் அணியும் விலைமதிப்பற்ற ஆபரணம்
    10இ) கனகன்/விசயன்
    Mostly I have only guessed but the last two atleast must be correct (not guess)

    ReplyDelete
  27. 1 இ) மாநாய்க்கன்
    2 அ) கானல் வரி
    3 அ) பெரியாற்றின் கரை கிராமப்புற மனிதர்கள்
    4 இ) குறிப்பிடவில்லை
    5 இ) வசந்தமாலை/கோசிகன்
    6 இ) 1,008 கழஞ்சு
    7 அ) மாதரி/ஐயை
    8 ஈ) திருமலை/திருவனந்தபுரம்
    9 அ) கோவலன் குலதெய்வம்
    10 இ) கனகன்/விசயன்

    ஒன்றிரண்டு விடைகள் புதிரா புனிதமா பழையதிலியே இருக்கே! மற்ற வடைகள் பதமாக "ப்ராஜக்ட் மதுரை" எண்ணையில் சுடப்பட்டன; (அ) வெந்தது சரியா என்று சரிபார்க்கப் பட்டன. அப்பிடியும் வேகல என்றால், சுட்டவரின் அறியாமை என்று கொள்(ல்)க!

    தெரியாததைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்ததைத் திரும்ப நினைவு படுத்திக் கொல்லவும்(;-) கொடுத்த வாய்ப்புக்கு நன்றி..

    ReplyDelete
  28. கெக்கேபிக்குணி (05430279483680105313!) சொல்றாரு!

    புனிதமா?? - சிலப்பதிகாரம்!": ஒன்றிரண்டு விடைகள் புதிரா புனிதமா பழையதிலியே இருக்கே! மற்ற வடைகள் பதமாக "ப்ராஜக்ட் மதுரை" எண்ணையில் சுடப்பட்டன; (அ) வெந்தது சரியா என்று சரிபார்க்கப் பட்டன. அப்பிடியும் வேகல என்றால், சுட்டவரின் அறியாமை என்று கொள்(ல்)க!

    தெரியாததைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்ததைத் திரும்ப நினைவு படுத்திக் கொல்லவும்(;-) கொடுத்த வாய்ப்புக்கு நன்றி..

    ReplyDelete
  29. கெக்கேபிக்குணி.....
    பின்னிப் பெடல் எடுக்கறீங்களே! :-)
    8 தவிர மற்ற எல்லாமே சரி!
    8-க்கு விடை ரொம்ப ஈசி! மாதவிப்பந்தல் பதிவுகளில் பல முறை வந்திருக்கு! :-)

    ReplyDelete
  30. 1 அ) மாசாத்துவான்

    2 இ) ஆய்ச்சியர் குரவை

    3 இ) கவுந்தி அடிகள்
    4 ஈ) சித்திரக் கொல்லன்
    5 ஈ) சித்ராபதி/வசந்தமாலை
    6 அ) 1,008 பொன்
    7 இ) விளிரி/ஐயை
    8 ஆ) திருவரங்கம்/அழகர் கோவில்
    9 ஆ) மாதவியின் ஆபரணம்
    10 இ) கனகன்/விசயன்

    ReplyDelete
  31. முதலில் இளங்கோ சமணர் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. துறவு பூண்டது உண்மைதான். ஆனால் சமணத்துறவென்று சொல்லவில்லை. அதுவுமில்லாமல் அவர் துறவறத்திற்குப் பிறகு அரண்மனைகளில் அண்ணனோடும் வாழ்ந்திருக்கிறார். சமணத் துறவு அரண்மனை வாழ்வு ஏற்காது. இன்னும் நிறைய சொல்லலாம்.

    1. மாசாத்துவான்

    2. திங்கள் மாலை வெண்குடையான் சென்னிச் சொங்கோல் அதுஒச்சிக்
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி

    3. பேரியாற்றங்கரை மக்கள் இல்லை அவர்கள். குன்றக் குறவர்கள். அதுவுமில்லாம அவங்க கண்ணகி உயிர் துறந்த கதையைச் சொல்லலை. கண்ணகி விண்ணேகியதச் சொல்றாங்க.

    4. பேரெல்லாம் சொல்லலை. நல்லவேளை. இல்லைன்னா... அந்தப் பேரையே வைக்காம நம்மாளுக அழிச்சிருப்பாங்க. அவ்ளோ மூடநம்பிக்கை.

    5. வயந்தமாலை, சித்ராபதி. இந்த வயந்தமாலையின் உருவத்துல வனதெய்வம் வேற வரும்.

    6. தெரியலை. 1008 பொன்னாக இருக்க வாய்ப்பிருக்கு. கழஞ்சு என்ற சொல்லை சிலம்பில் படித்த நினைவில்லை.

    7. என்னது குரல், விளி, துத்தம்னு...சுரங்களை அடுக்கிக்கிட்டு. மாதரியும் ஐயையும்தான் அவங்க. ஆய்ச்சியர்கள்.

    8. அட...அதென்ன திருவேரகம்னு சொல்லீட்டீங்க. சீர்கெழு செந்திலும் செங்கோடும் ஏரகமும் நீங்கா இறைவனை...வெறும் திருவேரகத்தோட நிப்பாட்டீங்க. அதுவுமில்லாம புண்ணிய சரவணப் பொய்கை வேற வருது. அதுவுமில்லாம குன்றக் குறவர்கள் வேற....அட...அத விடுங்க... கோவலனை அரக்கன்னு சொல்லீருக்காரு இளங்கோ. சிலம்பு தொடங்கும் போதே..கல்யாண ஊர்வலத்துல போற கோவலனை..ஆகா..எவ்ளோ அழகா முருகனாட்டம் (செவ்வேள்) இருக்கானேன்னு சொல்றாங்க. ஆனா வைணவத் தலம்னதும் அடுக்கச் சொல்றீங்க. நல்லாருங்க.

    திருவரங்கம் வருது. சேடகமாடகம் வருது. அது திருவனந்தபுரம்னு ஒரு உரையில படிச்சேன். மத்த உரைகளைன்ன என்னனு படிக்கனும். திருவேங்கடம் வருதுன்னு நீங்க சொன்னீங்க.

    9. மணிமேகலா தெய்வந்தான். இதுல என்ன கேள்வி வேற. அந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலைல வர்ராங்களே.

    10. கனகவிசயர்கள். நூற்றுவர் கன்னரோடு சேந்து வென்றான். ஆனால் அது இமயத்துல கல்லெடுக்க இல்ல. கனகனும் விசயனும் அவமானமா பேசிட்டாங்கன்னு போற வழியில தலைல தட்டி கல்லைத் தலைல ஏத்திக் கொண்டாந்தான். கொண்டாந்து கோயிலைக் கட்டியதும் விடுதலை செஞ்சிட்டான்.

    ReplyDelete
  32. //
    இல்லை அறியத் தான் முயற்சிகள் செய்துள்ளோமா?......இல்லை, அறிந்த பின், அதன் கதையைத் தமிழுலகுக்கு மேலும் எடுத்துச் சொல்ல எண்ணியுள்ளோமா?
    //

    நண்பர் கண்னபிரான்,

    நன்கு அறிந்தேனா என்று தெரியாது...
    ஆயினும், இதனை அறிய முற்பட்டபோதுஇணையத்தில் தொடர்
    மடல்களாக (சிலம்பு மடல்கள்) எழுதிவந்தேன். 99-2000 வாக்கில்.
    பின்னர் இது நூலாகவும் ஆகியது.

    தற்போதைக்கு 25 மடல்கள் கீழ்க்கண்ட
    சுட்டியில் இருக்கின்றன.
    http://www.geotamil.com/pathivukal/silampumadal.html
    பார்த்துவிட்டு தங்கள் கருத்தை அறியத்தாருங்கள். இதைப் படித்ததும் மீதம் உள்ள 7/8 ஐ அனுப்பித் தருகிறேன்.

    எனக்கு அதிகமாகவுள்ள சோம்பலினால்
    இதற்கும், கண்ணகி கோட்டப் பயணத்திற்குமான வலைப்பதிவுகள்
    போடப்படாமலேயே இருக்கின்றன.
    விரைவில் போட முயல்கிறேன்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

    ReplyDelete
  33. ஜிரா ஏமி செப்பறாருன்னா:

    //முதலில் இளங்கோ சமணர் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. துறவு பூண்டது உண்மைதான். ஆனால் சமணத்துறவென்று சொல்லவில்லை. அதுவுமில்லாமல் அவர் துறவறத்திற்குப் பிறகு அரண்மனைகளில் அண்ணனோடும் வாழ்ந்திருக்கிறார். சமணத் துறவு அரண்மனை வாழ்வு ஏற்காது. இன்னும் நிறைய சொல்லலாம்//

    அரண்மனையில் அண்ணன் கூட அடிக்கடிப் பேசறாரு ஜிரா!
    ஆனா வாழ்ந்ததா சொல்லலையே!

    //அட...அதென்ன திருவேரகம்னு சொல்லீட்டீங்க. சீர்கெழு செந்திலும் செங்கோடும் ஏரகமும் நீங்கா இறைவனை...வெறும் திருவேரகத்தோட நிப்பாட்டீங்க. அதுவுமில்லாம புண்ணிய சரவணப் பொய்கை வேற வருது. அதுவுமில்லாம குன்றக் குறவர்கள் வேற....அட...அத விடுங்க... கோவலனை அரக்கன்னு சொல்லீருக்காரு இளங்கோ. சிலம்பு தொடங்கும் போதே..கல்யாண ஊர்வலத்துல போற கோவலனை..ஆகா..எவ்ளோ அழகா முருகனாட்டம் (செவ்வேள்) இருக்கானேன்னு சொல்றாங்க. ஆனா வைணவத் தலம்னதும் அடுக்கச் சொல்றீங்க. நல்லாருங்க.//

    அட என்னங்க நீங்க! பின்னூட்டத்தில் வந்து நீங்க முருகனைச் சொல்ல வேண்டாமா? அதுக்குத் தான் ஒன்னை மட்டும் நான் சொல்லி, மீதி ரெண்டை ஒங்களுக்கு கர்ச்சீப் போட்டு ரிசர்வ் பண்ணி வச்சேன்!

    //ஆனா வைணவத் தலம்னதும் அடுக்கச் சொல்றீங்க. நல்லாருங்க//

    யோவ்...இது என்ன வரமா இல்லை வசவா? :-)
    வைணவத் தலத்தை "அடுக்கச்" சொல்லலீங்கய்யா. தேர்ந்து "எடுக்கத்" தான் சொன்னேன்!

    ReplyDelete
  34. ஜிரா வின் 1,5,6 தவறு!
    மீதி எல்லாம் சரி!

    மொத கேள்விய சரியா வாசிங்க தல!
    உங்களுக்குத் தெரியாம் இருக்காது!

    ரெண்டாம் கேள்விக்கு விடையத் தானே கேட்டோம்! நீங்க பாட்டு வரிகளைத் தாரீங்க. ஆனாலும் பாஸ்!

    ReplyDelete
  35. 1. கேள்விய முழுசாப் படிக்கலை.. ஹி ஹி...விடைய வேறச் சொல்லனுமா?

    5. கோசிகனா அது? தெரியாமப் போச்சே.

    6. அப்ப அது கழஞ்சுதான். 1008 கழஞ்சு.

    ReplyDelete
  36. 8. (ஈ) தானே? இல்ல பழைய பதிலில் தப்பா அடிச்சுட்டேனா?!

    நான் உங்களுக்கு மெயிலும் அனுப்ப முயற்சித்தேன, என்னவோ பின்னூட்டம் இட முடியவில்லை, ப்ளாக்கர்ர் படுத்தலா, திட்டமிட்ட சதியா;-))) ன்னு தெரியல.. பழைய புதிரா புனிதமாவில், ஜி.ரா.வின் பின்னூட்டமும் இதையே "செப்பியது" - சேடமாடகம் எனத் திருவனந்தபுரத்தைச் சிலப்பதிகாரம் பயின்றதாய்..
    ?!
    கெ.பி.

    ReplyDelete
  37. கெக்கேபிக்குணி

    எட்டாம் கேள்விக்கு விடை கொஞ்சம் குழப்பம் தான்!
    //இளங்கோவால் வர்ணிக்கப்படும் வைணவத் தலங்கள்//

    நீங்க சொல்லுறத அடிகள் வர்ணிக்க மாட்டாரு! அங்க இருந்து ஏதோ வந்துச்சுன்னு தான் சொல்வாரு!
    பார்க்கலாம்! விளக்கம் யாராச்சும் சொல்லுறாங்களான்னு!

    ReplyDelete
  38. ஜிரா
    5,6 2nd attempt-la கரீட்டாச் சொல்லிப்புட்டாரு!

    //1. கேள்விய முழுசாப் படிக்கலை.. ஹி ஹி...விடைய வேறச் சொல்லனுமா?//

    நீங்க என்ன புனித பிம்பமா?
    எதுக்கு வேனுமின்னே விடையச் சொல்லாம் வுடறீங்க? :-)
    சொன்னாத் தானேய்யா, மார்க்கு போட முடியும்!
    நான் என்ன உங்க மனசுக்குள்ள பூந்தா பாக்க முடியும்? ஏதோ காதல் குளிர் ரம்யா-ன்னாச்சும் மனசுக்குள்ள புகுந்து என்ன விடை சொல்ல வராங்கன்னு பாக்கலாம்! :-)

    So gira also 9/10!
    Too bad gira! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    ReplyDelete
  39. 1) மாநாய்கன்
    4) குறிப்பிடவில்லை

    ReplyDelete
  40. மாநாய்க்கன் மாநாய்க்கன் மாநாய்க்கன்

    போதுமா போதுமா போதுமா

    சிலப்பதிகாரம் பத்திச் சொல்ல வர்ரப்போ ஆதிகாவியம் மீதிகாவியம்னு...எப்படியாவது உள்ள நுழைக்கப் பாக்குறீங்க. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  41. சரிப்பா
    எங்க ஜிரா பஜ்ஜிக்கு பஜ்ஜி
    சாரி...பத்துக்கு பத்து
    வடையச் சுட்டுட்டாருப்ப்பா! :-)

    //சிலப்பதிகாரம் பத்திச் சொல்ல வர்ரப்போ ஆதிகாவியம் மீதிகாவியம்னு...எப்படியாவது உள்ள நுழைக்கப் பாக்குறீங்க. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr//

    ஆமா...ஆதி காவியம், பேதி மருந்து என்ன ஜிரா....நக்கலா?

    நாங்க ஒன்னியும் நுழைக்கவும் பாக்கல! ஒழைக்கவும் பாக்கல!
    அதான் தெளீவாச் சொல்லி இருக்கோம்-ல! அதையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிட்டு, சிலம்பு தெரியாம இருக்கறோமே-ன்னு ஆதங்கம் தானே பட்டுக்கினு கீறோம்!

    பேரைக் கூடச் சொல்லக் கூடாதுன்னா எப்பிடி? எப்ப பார்த்தாலும் தமிழையும் என்னையும் பிரிக்கப் பாக்குறதே ஒங்களுக்கு வேலையாப் போச்சுது! :-)

    ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்! நீங்க என்ன நொள்ள சொன்னாலும் நான் தமிழில் சிந்திப்பதை மட்டும் தடுக்க முடியாது! தடுக்க முடியாதேய்ய்ய்ய்ய்! :-)

    ReplyDelete
  42. 1) மாநாய்கன்
    3) கவுந்தி அடிக
    4) குறிப்பிடவில்லை
    8) இ) திருமலை/திருவரங்கம்

    ReplyDelete
  43. அனந்த லோகநாதன் மீண்டும் வந்து 1,4 கரீட்டாச் சொல்லிப்புட்டாரு!
    - இப்போ அவரு 8/10!

    ReplyDelete
  44. அட என்னங்க இப்பிடி அடிச்சு ஆடறீங்க, அனந்த லோகநாதன்?
    மீண்டும் வந்து 8-ஐ கரீட்டாச் சொல்லிப்புட்டாரு!
    - இப்போ அவரு 9/10!

    ReplyDelete
  45. //அட என்னங்க இப்பிடி அaடிச்சு ஆடறீங்க, அனந்த லோகநாதன்?
    மீண்டும் வந்து 8-ஐ கரீட்டாச் சொல்லிப்புட்டாரு!//

    Thanks to Google :))

    Without arrears we cannot clear the exams :). We need atleast 3-4 attempts.

    ReplyDelete
  46. ஆஹா, அரங்கனை மறக்கலாமா!

    9. (இ).

    நடையைச் சாத்தியாகி விட்டது என்றாலும் பரவாயில்லை:-)

    நன்றி! கூகிளாண்டவர் திருவரங்கத்துக்கு வழி கொடுத்தார், அவருக்கும் நன்றி.

    ReplyDelete
  47. போன பின்னூட்டத்தில் அவசரத்தில் 9-ஐ 8 என அழித்து எழுதவும்;-)))

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. 1.
    கண்ணகி தந்தை பெயர் மாநாய்க்கன். கப்பல் தலைவன்

    கோவலன் தந்தை பெயர் தான் மாசாத்துவான். பெரு வணிகன்
    ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி,
    மாசாத்துவாணிகன் மகனை ஆகி -
    நின் பாற் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி....
    கண்ணகி என்பது என் பெயரே -ன்னு, புகுந்த வீட்டினை முன்னிறுத்தி தான் வழக்கு சொல்கிறாள் கண்ணகி!

    மாடலன்=இவன் பூம்புகார் ஊரில் வாழ்ந்த சான்றோன்; கோவலனுக்கு அவன் குடிப் பெருமை பற்றி மதுரையில் சொல்கிறான். செங்குட்டுவனுக்கு மாதவி புத்த விகாரத்தில் சேர்ந்ததைச் சொல்பவனும் இவனே.

    அப்பூதி அடிகள் = இவர் பெரிய புராணத்தில் வருபவர்! சும்மா குழப்பக் கொடுத்த ஆப்ஷன்!

    ReplyDelete
  50. 2.மாதவியும் கோவலனும் பிரியக் காரணமாக இருந்த பாடல் எது?

    கானல் வரிப் பாடல்.

    திங்கள் மாலை வெண்குடையான்
    சென்னி செங்கோல் அதுஒச்சிக்
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாய் வாழி காவேரி.
    ன்னு கோவலன் யாழ் மீட்டிப் பாட,

    அதன் குறிப்புப் பொருளை, அவன் மனம் மாறி விட்டான் என்று தப்பா புரிஞ்சிக்கிறா மாதவி!
    உடனே போட்டியா, அவன் கிட்ட இருக்கும் யாழைப் பிடுங்கி, இவள் பாட,...

    கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
    புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
    மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
    அறிந்தேன் வாழி காவேரி
    ....
    போச்சுடா...காவிரியால் அன்னிக்கே சண்டை வந்துடுச்சா! இருவரும் பிரிகிறார்கள்!
    இன்னும் என்னன்னமோ மாதவி பாட...வேற யாரையோ மனசுல வச்சிக்கிட்டு பாடறா-ன்னு கோவலனுக்கு சந்தேகம் வந்துடுச்சி!
    (இவர் மட்டும் கண்ணகிய விட்டுட்டு மாதவியை நினைச்சுப்பாராம்! ஆனா மாதவி மட்டும் நினைக்கக் கூடாதாம்! எல்லாம் MCP தான்!)

    ReplyDelete
  51. 3. இளங்கோ அடிகளுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் கண்ணகி உயிர் துறந்த கதையை முதலில் சொல்லியவர் யார்?

    செங்குட்டுவன், அவன் மனைவி, இளங்கோ, சாத்தனார் எல்லாரும் இயற்கை அழகு காண பெரியாறு மலைக்கு வருகிறார்கள்!

    அப்போ, அங்குள்ள பழங்குடி மக்கள், குன்றக் குரவை ஆடி, கதையைச் சொல்லுறாங்க.
    ஒரே ஒரு முலை உடைய பெண், வேங்கை மரத்துக்குக் கீழே, 15 நாள் அன்ன ஆகாரம் இன்றி உயிர் துறக்கிறாள். விண்ணுலகு ஏகுகிறாள் விமானத்தில்! என்று சொல்லுறாங்க!

    அதைக் கேட்ட சாத்தனார், அவள் கண்ணகி என்று சொல்லி, பின்பு முழுக் கதையையும் சொல்கிறார்!
    செங்குட்டுவன், இளங்கோவை அதைக் காப்பியமா பாடித் தரும்படிக் கேட்டுக் கொள்கிறான்!

    ReplyDelete
  52. 4. கோவலனை ஏமாற்றிய பொற்கொல்லனின் பெயர் என்ன?

    பெயர் காப்பியத்தில் எங்கும் சொல்லப்படவில்லை!
    நான் கொடுத்த மற்ற பெயர்கள் எல்லாம் ச்ச்ச்ச்சும்மா...:-)

    5. மாதவி, கோவலனிடம் தூது அனுப்பும் ஆட்களின் பெயர் என்ன?

    முதலில் போவது மாதவியின் தோழி வசந்த மாலை! ஆனா அந்தத் தூது தோல்வி!

    அப்புறம் கோவலன் ஊரை விட்டுப் போன பின், கோசிகன் என்னும் அந்தணனைத் தூது அனுப்புறா மாதவி!
    அவன் மாதவியின் நிலை சொல்லிப் புரிய வைக்கிறான். கோவலனும் உணர்ந்து கொள்கிறான்...ஆனா ஊர் திரும்பாமல், விதி துரத்த, மதுரைக்கே செல்கிறான்.

    ReplyDelete
  53. 6. மாதவிக்கு அரசன் கொடுத்த மாலையைப், பொருள் கொடுத்து வாங்க வல்லவரே, மாதவியின் கணவர் என்று மாதவியின் தாயார் அறிவிக்கின்றாள்.

    அம்மா பேரு தான் சித்ராபதி

    கோவலன் எவ்வளவு பொன் கொடுத்து மாலையைப் பெறுகிறான்?

    1008 கழஞ்சு...

    விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு
    ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
    நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
    வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை

    7. கோவலனையும் கண்ணகியையும், மதுரைக்கு வெளியே உள்ள ஒர் இடைச்சேரியில், இரு பெண்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார் கவுந்தியடிகள்! அவர்கள் யார்?

    மாதரி/ஐயை = அம்மா/பொண்ணு
    இவங்க தான் கண்ணகிக்கும் துணையா இருக்காங்க! ஆய்ச்சியர் குரவை எல்லாம் ஏற்பாடு பண்ணுறாங்க! கண்ணனைப் பற்றிய பாடல் எல்லாம் பாடுறாங்க!

    மற்ற ஆப்ஷனில் சொன்னது எல்லாம் தமிழ்ப் பண்களின் பெயர்கள். அதே பெயர் கொண்ட பெண்கள் தான் கூத்தும் ஆடுகிறார்கள்!

    ReplyDelete
  54. 8 இளங்கோவால் ""வர்ணிக்கப்படும்"" வைணவத் தலங்கள் எவை?

    சேடகமாடத்து மாலை பற்றி வருகிறது! ஆனா சேடகமாடம் வர்ணிக்கப்படவில்லை! சேடகமாடம் தான் திருவனந்தபுரம் என்பது ஆய்வுக்குரியது!
    காஞ்சி பற்றிச் சொல்லப்படவில்லை!

    திருவரங்கம்!

    ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
    பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
    விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
    திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்

    திருமலை!

    வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
    ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
    ....
    பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
    தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
    என்று சங்கு சக்கரங்களோடு கூடிய திருவேங்கடத்து எம்பெருமானான பெருமாளை, இளங்கோ அப்படியே படம் பிடிச்சிக் காட்டுறாரு!

    பொலம்பூ ஆடையில் பொலியத் தோன்றினான்-னு பூவாடைச் சேவை பத்தி சொல்றாரு! (பூலங்கி சேவை இன்னிக்கும் இருக்கு)

    ReplyDelete
  55. 9 மணிமேகலை என்று குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள் மாதவியும் கோவலனும். யார் நினைவாக அந்தப் பெயரைச் சூட்டுகிறார்கள்?

    மணிமேகலா தெய்வம்; முன்னொரு சமயம் கோவலனின் முன்னோரைக் கடல் விபத்தில் காப்பாற்றியதால், அவன் குல தெய்வம் ஆகி விட்டது!

    10. கண்ணகிக்கு கோவில் எடுக்க, இமயத்தில் இருந்து கல்லெடுக்க விரும்பினான் செங்குட்டுவன். அப்போது ஏற்பட்ட வடதிசைப் போரில் எந்த வடநாட்டு மன்னர்களைப் போரிட்டு வென்றான்?

    கனக விசயரின் முடித்தலை நெறித்துக் கல்லினை வைத்தான் சேரமகன் -ன்னு ஒரு சினிமாப் பாட்டு வருமே!

    ReplyDelete
  56. // அப்படிப் பெருங்குடியில் பிறந்ததால் தான் அவளால் அரசனைக் கேள்வி கேட்டு வழக்குரைக்க முடிந்தது என்று நினைக்கிறேன். எளிய குடியில் பிறந்தவர்கள் அப்படித் துணிவுடன் அரசனைக் கேள்வி கேட்க முடிந்திருக்குமா என்பது ஐயமே. ஆனால் அப்படி பெருங்குடி பிறந்த பெருமகள் ஆனாலும் அவள் உரைத்த வழக்கைக் கேட்டு அவள் பக்க நியாயத்தை உணர்ந்து உடனே உயிர் விட்ட பாண்டியன் பெருமை மிகப்பெரிது. //

    குமரன், நீங்கள் சொன்னது தவறு. பெரிய குடும்பத்தில் பிறந்ததால் பேசினாள்னா...அன்னைக்கே கோவலன் கிட்டயும் மாதவிகிட்டயும் பேசியிருப்பா. அதுவுமில்லாம... வெறுங்கைய வீசிக்கிட்டு...காடு மேடு நடந்து... தெரியாத ஊர்ல... பால்காரங்க வீட்டுல தங்கிக்கிட்டு... இருந்தப்பத்தான் அவளுக்குப் பெரிய வீட்டுக்காரின்னு நெனைவுக்கு வந்துச்சா? இல்லை. இளங்கோவடிகள் இதக் கேட்டிருந்தார்னா...அவ்ளோதான். :)))))))))))))

    பாண்டியன் நெடுஞ்செழியன் நல்லவன். நல்ல அரசன். இல்லைன்னா...அவரு எங்க அப்பா மாதிரின்னு கண்ணகி சொல்வாளா? தென்னவன் தீதிலன்யா.

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    8 இளங்கோவால் ""வர்ணிக்கப்படும்"" வைணவத் தலங்கள் எவை?

    சேடகமாடத்து மாலை பற்றி வருகிறது! ஆனா சேடகமாடம் வர்ணிக்கப்படவில்லை! சேடகமாடம் தான் திருவனந்தபுரம் என்பது ஆய்வுக்குரியது! //

    உண்மைதான். சேடகமாடம் என்றால் அனந்தபுரம் என்று ஒரு உரையில்தான் படித்தேன். மற்ற உரைகளில் அப்படிச் சொல்லப்படவில்லை. முதலில் படித்த உரையாதலால் அது மனதில் நின்றுவிட்டது.

    ReplyDelete
  57. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    ஜிரா ஏமி செப்பறாருன்னா:

    //முதலில் இளங்கோ சமணர் என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது. துறவு பூண்டது உண்மைதான். ஆனால் சமணத்துறவென்று சொல்லவில்லை. அதுவுமில்லாமல் அவர் துறவறத்திற்குப் பிறகு அரண்மனைகளில் அண்ணனோடும் வாழ்ந்திருக்கிறார். சமணத் துறவு அரண்மனை வாழ்வு ஏற்காது. இன்னும் நிறைய சொல்லலாம்//

    அரண்மனையில் அண்ணன் கூட அடிக்கடிப் பேசறாரு ஜிரா!
    ஆனா வாழ்ந்ததா சொல்லலையே! //

    இல்லை. அடிக்கடி பேசுறார்னு சொல்லலை. அண்ணனோடயும் அண்ணியோடயும் அரசு மண்டவத்துல கொலுவிருந்ததா அவரே சொல்றாரே.

    // நாங்க ஒன்னியும் நுழைக்கவும் பாக்கல! ஒழைக்கவும் பாக்கல!
    அதான் தெளீவாச் சொல்லி இருக்கோம்-ல! அதையெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிட்டு, சிலம்பு தெரியாம இருக்கறோமே-ன்னு ஆதங்கம் தானே பட்டுக்கினு கீறோம்! //

    ஐயோ ரவி..தெரியாமச் சொல்லீட்டேனே...நாங்கூட சிலம்பில் வைணவம்னு நீங்க ஏதோ ஆராய்ச்சி செய்றதா நெனச்சுச் சொல்லீட்டேனே. தமிழ் ஆர்வத்தால மட்டுந்தான் நீங்க சிலம்பு படிச்சீங்கன்னு தெரியாமப் போச்சே! என்னைய மன்னிச்சிருங்க. மன்னிச்சிருங்க. மன்னிச்சிருங்க.

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    3. இளங்கோ அடிகளுக்கும், சேரன் செங்குட்டுவனுக்கும் கண்ணகி உயிர் துறந்த கதையை முதலில் சொல்லியவர் யார்?

    செங்குட்டுவன், அவன் மனைவி, இளங்கோ, சாத்தனார் எல்லாரும் இயற்கை அழகு காண பெரியாறு மலைக்கு வருகிறார்கள்!

    அப்போ, அங்குள்ள பழங்குடி மக்கள், குன்றக் குரவை ஆடி, கதையைச் சொல்லுறாங்க.
    ஒரே ஒரு முலை உடைய பெண், வேங்கை மரத்துக்குக் கீழே, 15 நாள் அன்ன ஆகாரம் இன்றி உயிர் துறக்கிறாள். விண்ணுலகு ஏகுகிறாள் விமானத்தில்! என்று சொல்லுறாங்க! //

    எனக்கு இந்தப் பதினஞ்சு நாளு வெரதம் புதுச்செய்தி. நான் படிச்ச வரைக்கும்.... வேங்கை மரத்துக்கடியில ஒத்த மொலையோட நிக்குறா கண்ணகி. அப்ப வானத்துல இருந்து ஹெலிகாப்டர்ல வந்து கோவலன் கூட்டீட்டுப் போறதாத்தான் படிச்சேன். உயிர் துறக்குறதையெல்லாம் படிக்கலையே.

    ReplyDelete
  58. //
    சிலப்பதிகாரத்தில் மிகவும் பேசப்படும் ஆராய்ச்சிக்கு உரிய வரி

    "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் ..."

    சிலப்பதிகார காலத்தில் தான் தமிழர் திருமண முறைகள் மாறி இருக்கிறது என்பதற்கு அந்த வரி எடுத்துக்காட்டு. ஆனால் அம்மி மீதிப்பது,அருந்ததி பார்பது பற்றி எந்த செய்தியும் இல்லை.

    //



    கோவி.கண்ணன்.

    சிலப்பதிகாரம் படிக்கும் எல்லோருக்கும் முதலில் அதிர்ச்சி அளிக்கும் வரி நீங்கள் குறிப்பிட்டுள்ள வரி. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட என்பதோடு நிறுத்தியிருந்தால் தமிழ பார்ப்பனர் தமிழ் மறை வழியே நடத்திடத் திருமணம் நடந்தது என்று சொல்லலாம். ஆனால் அடுத்து தீவலம் வருவதைப் பற்றியும் குறிப்பிட்டதால் மற்றவர் முன்னின்று நடத்திய திருமணம் தான் இதுவோ என்ற ஐயம் எழுகிறது. பலரும் இது மற்றவர் நடத்திய திருமணம் என்றே உறுதிபடக் கூறுகிறார்கள். நீங்களும் அப்படிக் கருதுவதாகத் தோன்றுகிறது. எனக்கு இன்னும் ஐயம் உண்டு. இதுவே தமிழர் முறையாக இருந்து பின்னர் ஆரியர் வழக்காக மாறியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இங்கே சொல்லப்படும் மறை வடமொழி வேதங்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மாமுது பார்ப்பனர் ஆரியராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. தீவலம் வருவதும் ஆரிய மரபாக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சிலப்பதிகாரக் குறிப்பை மட்டும் வைத்துக் கொண்டு சிலப்பதிகார காலத்தில் நடந்தது தமிழ் முறைத் திருமணமா ஆரிய முறைத் திருமணமா என்று அறிய முடியவில்லை. இரண்டில் எதுவாகவும் இருக்கலாம். இதைப் போல் திருமணத்தைப் பற்றிப் பேசும் மற்ற சங்க இலக்கியத் தரவுகளைக் கண்டால் இரண்டில் ஒன்று என்று முடிவு செய்ய உதவியாக இருக்கலாம்.

    அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் முறை பற்றிய குறிப்பு சிலம்பில் இல்லாவிட்டாலும் அருந்ததியைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. கண்ணகியின் கற்பிற்கு வானில் உறை விண்மீனின் திறம் உவமையாக உரைக்கப்பட்டிருக்கிறது.

    கண்ணகியை அறிமுகப்படுத்தும் போது

    போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்
    தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்
    மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்
    காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்

    'பூவில் வாழ் திருமகளின் புகழ் பெற்ற அழகு உருவுடையவள் என்றும் எந்த குற்றமும் இல்லாத வடக்கில் தெரியும் விண்மீனின் திறம் இவள் திறம் என்றும் (திறம் என்பது கற்புத்திறம் என்பர் புலவர்) பெண்கள் தொழுது புகழ விளங்கிய பெருங்குணத்துக் காதலாள் - அவள் பெயர் கண்ணகி என்பாள்'

    கோவலன் கண்ணகி திருமணத்தைக் கூறும் இடத்தில்

    ...வானத்துச்
    சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன்
    மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
    தீவலம் செய்வது ...

    'வானத்தில் வாழும் அருந்ததி என்ற விண்மீனை ஒத்த குணம் உடையாளை கோவலன் மிகவும் முதிர்ந்த வயதுடைய பார்ப்பான் மறை வழி காட்டிட தீவலம் செய்து...'

    சாலி என்று தமிழ் லெக்சிகனில் தேடியதில் அதற்கு அருந்ததி என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள். சாலினி என்று கற்பில் சிறந்த பெண்ணை வடமொழியில் சொல்லிப் படித்திருக்கிறேன். அந்தப்பொருளில் அருந்ததி இங்கே குறிக்கப்படுகிறார் போலும்.
    நேரடியாக மூலத்தை நெருங்கிப் படித்தால் இன்னும் நிறைய நாமாகவே புரிந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  59. //கோவி.கண்ணன்.

    சிலப்பதிகாரம் படிக்கும் எல்லோருக்கும் முதலில் அதிர்ச்சி அளிக்கும் வரி நீங்கள் குறிப்பிட்டுள்ள வரி. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட என்பதோடு நிறுத்தியிருந்தால் தமிழ பார்ப்பனர் தமிழ் மறை வழியே நடத்திடத் திருமணம் நடந்தது என்று சொல்லலாம். ஆனால் அடுத்து தீவலம் வருவதைப் பற்றியும் குறிப்பிட்டதால் மற்றவர் முன்னின்று நடத்திய திருமணம் தான் இதுவோ என்ற ஐயம் எழுகிறது. பலரும் இது மற்றவர் நடத்திய திருமணம் என்றே உறுதிபடக் கூறுகிறார்கள். நீங்களும் அப்படிக் கருதுவதாகத் தோன்றுகிறது. எனக்கு இன்னும் ஐயம் உண்டு. இதுவே தமிழர் முறையாக இருந்து பின்னர் ஆரியர் வழக்காக மாறியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இங்கே சொல்லப்படும் மறை வடமொழி வேதங்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மாமுது பார்ப்பனர் ஆரியராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. தீவலம் வருவதும் ஆரிய மரபாக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சிலப்பதிகாரக் குறிப்பை மட்டும் வைத்துக் கொண்டு சிலப்பதிகார காலத்தில் நடந்தது தமிழ் முறைத் திருமணமா ஆரிய முறைத் திருமணமா என்று அறிய முடியவில்லை. இரண்டில் எதுவாகவும் இருக்கலாம். இதைப் போல் திருமணத்தைப் பற்றிப் பேசும் மற்ற சங்க இலக்கியத் தரவுகளைக் கண்டால் இரண்டில் ஒன்று என்று முடிவு செய்ய உதவியாக இருக்கலாம். //



    குமரன், சிலம்பை நான் முழுதும் படித்தவன் அல்ல, சிலம்பில் உள்ள குறிப்பை வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளை படித்திருக்கிறேன். பாவாணர் கூற்றுபடியும், மறைமலை அடிகளார் கூற்றுபடியும் 'பார்பனர்' என்பது ஆரியர்கள் குறித்து வழங்கப்படும் தனித்தமிழ் சொல். பால்+பனர் அதாவது பால் போன்ற வெண்மை நிறத்தை உடையவர் என்றும், வேதங்களை பார்ப்பவர்கள் என்ற இருவேறு பொருள்களில் சொல்கிறார்கள். இரண்டையும் குறிப்பது ஆரியர்களை மட்டுமே. தென்நாட்டு இன்றைய பார்பனர்கள் ஆரிய - திராவிடர் கலப்பினர் என்றும் ஒரிஜினல் ஆரியர்கள் காஷ்மீரத்து பண்டிட்டுகளே என்றும் அவர்கள் புலால் உணவை இன்றும் உண்டு வாழ்பவர் என்றே சொல்கிறார்கள். எனவே இளங்கோவடிகள் காலத்து பார்பனர்களில் கலப்பு அதிகம் இருந்திருக்காது என்ற அனுமானத்தில் அவர் வெண்ணிற ஒரிஜினல் பார்பனர்களை (ஆரியர்கள்) குறித்து சொல்லி இருக்கிறார் என்றும் வடமொழி வழிநடத்திவைக்கும் திருமண முறைகள் தமிழகத்தில் அறிமுகமான காலம் அது என்று நினைக்கவேண்டி இருக்கிறது( வலியுறுத்தவில்லை)

    ReplyDelete
  60. //சிலப்பதிகாரத்தில் மிகவும் பேசப்படும் ஆராய்ச்சிக்கு உரிய வரி
    "மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் ..."

    சிலப்பதிகார காலத்தில் தான் தமிழர் திருமண முறைகள் மாறி இருக்கிறது என்பதற்கு அந்த வரி எடுத்துக்காட்டு. ஆனால் அம்மி மீதிப்பது,அருந்ததி பார்பது பற்றி எந்த செய்தியும் இல்லை. //

    சரி
    குமரன், கோவி அவர்களோடு நானும் கோதாவுல இறங்கறேன்! :-)

    குமரன்,
    சிலம்பில் சாலின்னு அருந்ததி / கற்புடைப் பெண் பற்றிச் சொன்னீங்க!

    சாலி வராப் போலே தாலியும் வருது, தெரியுமா? :-)
    தாலின்னு பேரு சொல்லலையே தவிர, மங்கல அணி அணிவிக்கும் வழக்கம் பற்றிச் சொல்கிறது!

    கீழே வரிகளைப் பாருங்க! நீங்க கொடுத்த அதே திருமணக் காட்சியில் தான்!

    முரசியம்பின முருடதிர்ந்தன
    முறையெழுந்தன பணிலம்-வெண்குடை
    அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள் மங்கல அணியெழுந்தது

    திருமண வீட்டுக்குள் கெட்டி வாத்தியங்கள் ஒலிக்க, மங்கல அணி வந்ததாகச் சொல்லுறாரு! இது பற்றியும் கொஞ்சம் நுணுக்கமா ஆய்வு செய்ய வேண்டும்!

    மேலும் கோவலன்-கண்ணகி இருவரும் தனிமையில் இருக்கும் போது (முதலிரவுக் காட்சியா இருக்குமோ)
    மலையிடைப் பிறவா மணியே என்கோ?
    அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
    என்றெல்லாம் சொல்கிறான்!

    அப்போது மங்கல அணி தவிர வேறு நகைகள் பூட்டிக் கொள்ளவில்லையே-ன்னும் கேட்கிறான்!

    மறுவின் மங்கல அணியே அன்றியும்
    பிறிதணி அணியப் பெற்றதை எவன்கொல்
    நானம் நல்அகில் நறும்புகை அன்றியும்
    மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்

    திருமண நிகழ்ச்சிகள் பற்றிய வேறு சில சங்கப் பாடல்கள், அகநானூற்றுப் பாடல்கள் கிடைத்தால் கொஞ்சம் தெளியலாம்!

    ReplyDelete
  61. நாச்சியார் திருமொழி - வாரணமாயிரத்தில் கூட
    கிட்டத்தட்ட சிலம்பில் வருவது போலவே தான் திருமண வர்ணனை செய்கிறாள் ஆண்டாள்! (மங்கல அணி, அம்மி மிதித்தல் தவிர)

    வாரணம் சூழ
    பொற்குடம் வைத்துப்
    பந்தல் கீழ்
    கதிரொளி தீபம்
    சதிரிள மங்கையர்
    மத்தளம் கொட்ட
    வரிசங்கம் நின்றூத
    வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
    தீவலம் செய்வது
    நல்லமளி ஏற்றல்....
    வரை அப்படியே தான் வருகிறது!

    பொரிமுகம் தட்டலும், அம்மி மிதித்தலும் தான் ஆண்டாள் எக்ஸ்ட்ராவாகச் சொல்கிறாள்!

    ReplyDelete
  62. //G.Ragavan said...
    எனக்கு இந்தப் பதினஞ்சு நாளு வெரதம் புதுச்செய்தி. நான் படிச்ச வரைக்கும்.... வேங்கை மரத்துக்கடியில ஒத்த மொலையோட நிக்குறா கண்ணகி. அப்ப வானத்துல இருந்து ஹெலிகாப்டர்ல வந்து கோவலன் கூட்டீட்டுப் போறதாத்தான் படிச்சேன். உயிர் துறக்குறதையெல்லாம் படிக்கலையே//

    ஜிரா
    நான் முன்பு சொன்னதில் ஒரே ஒரு திருத்தம் செய்து கொள்கிறேன்
    15 நாள் இல்ல!
    14 நாள்!
    விரதம் கிரதம் எல்லாம் ஒன்னும் கிடையாது! ஆனா
    14 நாள் தனிமையில் இரங்கி, வானுலகு ஏகினாள்!

    இந்தாங்க பாடல் வரிகள்!

    நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் 190
    "பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
    தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி
    எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்"
    தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப்
    பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி 195
    வாடா மாமலர் மாரி பெய்தாங்கு
    அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
    கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு
    வான வூர்தி ஏறினள் மாதோ
    கானமர் புரிகுழற் கண்ணகி தானென்

    ReplyDelete
  63. இராகவன். இளங்கோவடிகள் சமணர் என்பதற்கு எந்தத் தரவும் கிடையாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஏன் அப்படிப்பட்ட கருத்து எழுந்தது என்பதற்கு ஏதேனும் காரணங்கள் தோன்றுகிறதா? குணவாயில்கோட்டம் சமணத் துறவிகள் வாழும் இடம் என்றும் அங்கு சென்று இளங்கோ துறவு ஏற்றதால் அவரும் சமணத்துறவியாக இருக்க வேண்டும் என்றும் ஒரு கருத்தினைப் படித்திருக்கிறேன். ஆனால் இது நேரடியான தரவு இல்லை. உய்த்துணர்ந்ததே. அண்ணன் சைவன் என்பதைத் தெளிவாக சிலப்பதிகாரம் சொல்வதால் தம்பியும் சைவனாகவே இருந்தான் என்றும் உய்த்துணர்ந்து சொல்லலாம். கவுந்தியடிகளின் மூலம் சமணக்கருத்துகளை மிகுதியாக எடுத்து வைக்கிறார்; அதனால் இளங்கோ சமணர் என்ற கருத்தும் படித்திருக்கிறேன். அப்படிப் பார்த்தால் வைணவ சைவ கருத்துகளும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன; அவற்றைக் கொண்டு இளங்கோவை வைணவராகவோ சைவராகவோ சொல்லலாம். நீங்கள் சொல்வது போல் இளங்கோ சமணத்துறவி என்பதற்கு நேரடியான தரவுகள் இது வரை நான் காணவில்லை.

    கோவலனும் கண்ணகியும் கூட சமணர்கள் என்று சொல்லப் படித்திருக்கிறேன். ஏதேனும் தரவுகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் வணிக குலத்தவர் என்பதால் சமணர்களாக இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் ஊகத்தின் அடிப்படையில் இல்லாமல் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்கிறேன்.

    ReplyDelete
  64. ஸ்கூலுலேயே நானு வரலாறு,கணக்கு பாடத்துக்கு கட்டு..நீங்க இப்பபோயி என்னிய படிக்கச்சொன்னாக்கா.. நடக்குமா...ஹிஹி..

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP