Monday, May 25, 2009

தமிழ் ஈழம்: அடுத்து என்ன?

கால் நூற்றாண்டுப் போராட்டம், கணப் பொழுதில் முடிவுக்கு வந்து விட்டது! கோபம், வெறி, போர், உரிமை, நியாயம் என்ற பல உணர்ச்சிகளும், துரோகம் என்ற ஒரே உணர்ச்சியில் அத்தனையும் மங்கிப் போய் முடிந்து விட்டன! தமிழினம் வாங்கி வந்திருக்கும் பிரத்யேகமான வரம்/சாபம் இது! :(((
செம்மொழி செம்மொழி-ன்னு சொன்னாங்க! ஆனா இம்புட்டுச் சிவப்பா இரத்தம் தோய்ந்து இருக்கும் இந்தச் "செம்"மொழி-ன்னு அப்ப யாருக்கும் தெரியாமப் போனது தான் கொடுமை!!


இந்த இருபத்தைந்தாண்டு ஈழப் போரிலிருந்து வருங்காலத் தமிழ்ச் சந்ததியாகிய நாம் என்ன பாடம் படிக்கப் போகிறோம்?

* இன்றைய முதிய தமிழ்த் தலைமுறை, தமிழ்த் தலைவர்கள் நடந்து காட்டிய வழி தான் நமக்குமா?
* இல்லை...இளைய தமிழ்த் தலைமுறைக்கு, தானே சிந்தித்து எடுக்கும் ஆக்கப்பூர்வமான தனி வழியா?

ஆனால் இவை அத்தனைக்கும் முன்னதாக.....ஒரு நிமிடம்...
வன்முறையோ, மென்முறையோ,
அதைத் தனிப்பட்ட காரணத்துக்காகச் செய்யாமல், தன் குடும்ப முன்னேற்றத்துக்காகச் செய்யாமல்...
தன் இனத்தின் பொருட்டே களம் கண்ட ஒரு மனிதரின் மரணம்...புலிகள் இயக்கத்தாலேயே உறுதி செய்யப்பட்ட பின்பும், நம்பச் சற்றுக் கடினமாகத் தான் உள்ளது! :(

பேரம் பேசவே தெரியாத ஒரு "தீவிரத்" தமிழன்,
தலைவர். திருவேங்கடம். வேலுப்பிள்ளை. பிரபாகரனுக்கு வீர வணக்கம்! இதய அஞ்சலி!

உயர்ந்தோர்/ சான்றோர்/ நல்லோர்/ தலைவர்கள் இவர்களின் மறைவின் போது ஏற்றப்படும் மோட்ச தீபம் ஏற்றுவோம்!
இன்று வரை இறந்து பட்ட எம்முடை அனைத்து ஈழத் தமிழ் மக்களுக்கும் இந்த மோட்ச தீபம் ஏற்றுவோம்!

பிரபாகரன் மரணிக்கவில்லை என்று இன்னமும் நம்பும் சிலரும், அவர் மரணித்து விட்டார் என்று ஒப்புக் கொள்ளும் பலரும்...எது எப்படியோ போகட்டும்!
ஆனால், நீ இன்னமும் உயிருடன் இருந்தால்...அங்கேயே இருந்து கொள்! வெளியில் இப்போதைக்கு வந்து விடாதே! நீ மரணித்ததாகவே இருக்கட்டும்!

தமிழர் மீண்டும் உரிமை பெறுவார்கள் என்று இலங்கை அரசு "அறிவித்து" உள்ளது! இது பொய்யாகும் பட்சத்தில், தமிழகத் தலைவர்களும் அவர்கள் வாரிசுகளுமா களத்தில் இறங்கப் போகிறார்கள்?
அப்போது களத்தில் இறங்கத் தமிழருக்கென்று ஒருவன் தேவையில்லையா? நீ அப்போது வந்தால் போதும்! அது வரை.....உறக்கம் கொள்!



இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில், 30 லட்சம் பேர் தமிழர்கள்! இன்னொரு பத்து லட்சம் பேர் உலகின் பல தேசங்களில் வாழ்கிறார்கள்!
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று உலக நாடுகளை நம்ப வைத்து, வேலையும் முடித்துக் கொண்டாகி விட்டது! இனி மிஞ்சியிருப்பது தமிழர்களே! தீவிரவாதிகள் அல்ல அல்லவா? இனியாவது உலக நாடுகள் முன்னணிக்கு வந்து குரல் கொடுக்க வேண்டும்!

அதான் பேச்சுவார்த்தைக்கென்று போராளிகள் எவரும் இல்லையே! அரசாங்கத்திடம் தானே இனி நேரடிப் பேச்சு? அதனால் அரசாங்க-அரசாங்க அளவிலாவது இனி தாராளமாக முன் வரலாமே? முன் வர வேண்டும்! இந்தியா.....முன் வந்தே ஆக வேண்டும்!

ஈராக் மறு சீரமைப்பு என்று விதம் விதமாகப் பேசுபவர்கள், போர் முடிந்த பின், பொதுத் தொண்டு நிறுவனங்களை ஈராக்கில் அனுமதித்தார்களே! நட்பு நாடுகளை அனுமதித்தார்களே! அதே போலத் தானே ஈழமும்? தமிழக அரசும், இனி இது பற்றி "பேசவாவது" செய்ய வேண்டும்!


தமிழ் ஈழம்: அடுத்து என்ன?

1. தமிழக அரசு, இலங்கைத் தமிழர்களுக்கென்று ஒரு தனி அமைச்சகமோ, அட்லீஸ்ட் ஒரு வாரியமாவது ஏற்படுத்தி, கண்காணிப்புக் குழுவை உடனே உருவாக்க வேண்டும்!

இனி ஈழத் தமிழர்கள் சார்பாகப் பேச ஒருவர் கூட இல்லை! அதனால் இலங்கை அரசு அல்லாத இன்னொரு அதிகாரப் பூர்வ அமைப்பு தேவை!

இவர்கள் இலங்கையில் போய் பெருசா எதுவும் செய்திடப் போவதில்லை தான்! சட்டம் இயற்றப் போவதில்லை தான்! ஆனால் இலங்கை அரசுக்கு தமிழர்கள் சார்பாக ஆலோசனை சொல்லும் அமைப்பாக வாச்சும் செயல்படலாம்!
இலங்கை அரசின் நடவடிக்கைகளைச் சீர் தூக்கிப் பார்க்கும் அமைப்பாக இது இருக்க வேண்டும்! மாதம் ஒரு முறை, சட்டப் பேரவைக்கு, இதன் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்! இதை இந்திய அரசுக்கும் சமர்பிக்க வேண்டும்!

சும்மா வெறுமனே "காப்பாத்துங்க காப்பாத்துங்க"-ன்னு தந்தி கொடுப்பதற்குப் பதில், இது தான் பிரச்சனை நம்பர் #10. அதுக்கு இது தான் தீர்வு, ஆனால் அதை இலங்கை அரசு நைசாக கண்டு கொள்ளவில்லை-ன்னு சொல்லக் கூடிய ஆக்கப்பூர்வமான வாரியமாக இயங்குவது எவ்வளவோ மேல்!

இதே அமைச்சகம் இலங்கையிலும் தேவை!
இவ்வளவு வாய் கிழியப் பேசும் இலங்கை அரசு, தமிழில் உரையாற்றும் ராஜபட்சே - இதெல்லாம் இப்போதைக்கு வெறும் பேச்சு தானே!
தமிழர் புனர் நிர்மாணத்துக்கென்றே ஒரு தனி அமைச்சகம் உருவாக்குமா இலங்கை அரசு?


2. Internally Displaced People-ஆம்! என்னமோ பேர் கொடுத்துக்கிட்டு போங்க! ஆனால் முகாம்களில் உள்ள அவங்க பேர், ஊர், குடும்பம், இதர விவரங்கள் அனைத்தும் ஐ.நா-விடமும், செஞ்சிலுவைச் சங்கத்திடமும் பகிரப் பட வேண்டும்! நாளை முகாமை விட்டு வெளியே போகும் போது கணக்கெடுக்க எளிதாக இருக்கும்! இலங்கை அரசின் மேலும் குறைந்தபட்ச நம்பகத்தன்மை வரும்!

3. இவர்கள் எத்தனை நாள் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பர் என்று முன் கூட்டியே சொல்லி, அந்த நாள் முடிவதற்கு முன்பாக இயல்பு வாழ்க்கைக்குத் திருப்பப்பட வேண்டும்! இதற்கு அரசிடம் உடன்படிக்கையோ, உறுதிமொழியோ வாங்க வேண்டும்!

4. ஒவ்வொரு பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்துக்கும் நிவாரணத் தொகை கொடுத்தே ஆக வேண்டும்!

நம்மூரில் வெள்ளம்/புயல் வந்தாலே, குடும்பத்துக்கு பத்தாயிரம் நிவாரணம், அது இது-ன்னு சொல்வாய்ங்க! இறந்தவர்க்கு ஒரு லட்சம்-ன்னு எல்லாம் நிர்ணயம் பண்ணுவாங்க! ஆனால் ஈழத் தமிழர்கள் பட்டது நூறு புயலைக் காட்டிலும் கொடுமையானது!

இந்தப் பணம், முகாம்களை விட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்களுக்கு முதல் ஆதாரமாக இருக்கும்! இதற்கு உலக வங்கியிடம் முயற்சித்துப் பணம் பெற வேண்டும்! இந்தியாவும் இதைத் தூண்ட வேண்டும்! பொருளாதார மேதை மன்மோகன் சிங் மற்றும் ப. சிதம்பரம் போன்றவர்கள் இதைக் கூடச் செய்யலைன்னா எப்படி? :((



5. பாழடைந்த தமிழ் நகரங்களைப் புனர் நிர்மாணிக்கும் பணியில் பன்னாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தினால் வேலை விரைவாக முடியும்!

இதை எல்லாம் தான் ஐ.நா-வில் எழுப்பலாமே? பாதுகாப்பு கவுன்சிலில் தான் அரசியல் எழுப்ப முடியாது! சீனாவும் ரஷ்யாவும் தடுக்கும்! இது போன்ற விஷயங்களை எழுப்பலாமே! அதான் UN-Rehab ன்னு அதுக்குன்னு கவுன்சில் இருக்கே!

6. ஈழத் தமிழருக்கு அவர்கள் குரலை எடுத்து ஒலிக்க அரசியல் கட்சிகள் தேவை! தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்-ன்னு வாய் கிழியப் பேசும் தமிழகக் கட்சிகள், ஈழத்தில் இப்போ போய் ஒரு பிராஞ்ச் ஓப்பன் பண்ண முன் வருவாங்களா? :))

சொல்ல வந்தது என்னவென்றால், புனர் நிர்மாணப் பணிகளுக்கு இடையில், மக்கள் தேர்ந்தெடுத்து நடத்தும் மாநில அரசாங்கத்தை அமைக்க, தேர்தல் திட்டங்கள் உடனடியாகத் தேவை!



7. ஈழத் தமிழர்கள் முகாமை விட்டு போன பிறகு என்ன பண்ணுவாங்க? எங்கிட்டு வேலை பார்ப்பாங்க? வேலை வாய்ப்பு? வெறுமனே சாஃப்ட்வேர் கம்பேனியா அவிங்களுக்கு ஆரம்பிக்க முடியும்?

சத்யம் கம்ப்யூட்டர்ஸ்-இல் எப்படி அரசு தலையிட்டதோ, அதே போல் இங்கும் தலையிட வேண்டும்! இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களும், தமிழகத் தொழிலதிபர்களும் கை கோர்க்க வேண்டும்! நாராயண மூர்த்தி போன்ற முன்னோடிகள் முன் ஓடி வர வேண்டும்!

ஒரு திட்டம் உருவாக்கிக் கொடுத்து, பெரிய அளவில் இல்லை என்றாலும், சிறு சிறு நிறுவனங்கள் துவங்க முன் வர வேண்டும்! கால் சென்ட்டர் துவங்கலாமே? காற்றாலைகள், அசெம்ப்ளி ப்ளாண்ட் என்று பலவற்றைச் செய்யலாம்! செய்ய முடியும்! மனம் தான் வேண்டும்!


8. மருத்துவத் தேவை இப்போது ஈழத்தில் அதிகம்! உடல் ஊனமுற்றோர், செத்தும் சாகாமால் இருப்போர், இவர்களை பொதுத் தொண்டு நிறுவனங்கள் தத்து எடுத்துக் கொள்ள வேண்டும்! சத்ய சாயி அமைப்பு, அன்னை தெரேசாவின் அமைப்பு போன்றவர்களிடம் இவர்களை அடையாளம் கண்டு ஒப்புவியுங்கள்! திருப்பதியில் இருக்கும் தேவஸ்தானத்தின் ஊனமுற்ற குழந்தைகள் நடைபயில் நிலையத்தில் (BIRRD) கொண்டு ஒப்புவியுங்கள்! கட்டைக் கால்களை விட்டு, மெல்லிய கால்-கருவி கொண்டு, நடக்கச் செய்து வருகிறார்களே!

9. பல லட்சம் ஈழக் குழந்தைகளின் கல்வி?

இவர்கள் எல்லாரும் வருங்காலத்தில் புலம் பெயரத் தான் வேணுமா? அது தான் அவர்கள் விதியா? இவர்கள் எதிர்காலம் தான் என்ன? பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம்? எரிந்து போன நூலகம்?
UNICEF, இதற்கென்றே ஈழத்தில் தனியாக ஒரு முகாம் அமைக்க வேண்டும்! தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் ஈழப் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடே செய்யலாம்!

10. ஈழத்தின் தொன்மையான வழிபாட்டுத் தலங்கள் சீரமைக்கும் பணியை World Heritage Foundation-இடம் கொடுத்து விடலாம்!
மக்களுக்கும் ஒரு பிடிமானம் வேண்டுமல்லவா? அவர்களுக்கு அரசியல் நம்பிக்கையில் அமைதி கிடைக்கிறதோ இல்லையோ, ஆண்டவன் நம்பிக்கையில் அமைதி கிடைக்கட்டும்!


இறுதியாக,
தமிழகத்தில்.....தலைநகரில்....ஈழத்துப் போராளிகள், உயிர் துறந்த தமிழ் மக்கள் என்று அத்தனை பேருக்கும் பொதுவான நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்புங்கள்!
மாமன், மச்சான், மச்சினிக்கெல்லாம் நினைவுச் சின்னம் இருக்கு! உலகின் பல திசைக்கும் பரவித் துடித்த இந்த வரலாற்றுத் தியாகங்களுக்கு தக்க மரியாதை செய்யவாவது தமிழக அரசு இனி முன் வரட்டும்! நாளைய தலைமுறைக்கு, ஈழத்துக்கு இது வரை கொடுத்த பலியும் வலியும் தெரியட்டும்!

வாழ்வின் அடிப்படையே மானமுள்ள வாழ்வுரிமை தாங்க!
வாடகை வீட்டில் குடி இருக்கும் போதே வீட்டுக்காரரின் சின்னச் சின்ன அடாவடிகளைக் கூட தாங்கிக் கொள்ள மறுக்கிறோம்! Rent Control-ன்னு சட்டம் பேசறோம்!

வாழ்வின் அடிப்படையே மானமுள்ள வாழ்வுரிமை!
* அதற்காக இன்னொரு நான்கு லட்சம் தமிழர்களைக் காவு கொடுத்து,
* ஐந்தாம் ஈழப் போரை நடக்க விட்டு,
அந்த வாழ்வுரிமையை வாங்கும் அளவுக்கு இனி போக விட மாட்டோம்
என்ற சிந்தனை......இங்குள்ள தமிழினத் தலைவர்களுக்கு வரட்டும்! தமிழனுக்கும் கொஞ்சம் வரட்டும்!


மக்களே, பதிவில் சொல்லாது விட்ட இன்ன பிற யோசனைகளையும் சொல்லி உதவுங்கள்!

11 comments:

  1. அமரர் திரு.பிரபாகரனுக்கு, இதய அஞ்சலி!
    ராஜா!

    ReplyDelete
  2. எல்லாம் நடந்தால் நல்லாத்தான் இருக்கும்.

    நடக்கணுமுன்னு வேண்டுவோம்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. உங்கள் கருத்துக்கள் நல்லா இருக்கு. இது நடக்காதா என்ற ஏக்கமும் எல்லாத் தமிழர்களுக்கும் இருக்கு.

    இது நடந்தேற வேண்டும் என்று, எல்லாம் வல்ல காஞ்சி வரதரை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. இது எல்லாம் நடக்கவேண்டும், அதில் எனது பங்கும் இருக்கவேண்டும்.

    ReplyDelete
  6. //துளசி கோபால் said...
    எல்லாம் நடந்தால் நல்லாத்தான் இருக்கும்.
    நடக்கணுமுன்னு வேண்டுவோம்//

    அப்படியே வேண்டுவோம் டீச்சர்!
    அதே சமயம் பட வேண்டியவர் கண்களிளும் பட வேண்டும்!

    ReplyDelete
  7. //paravasthu said...
    உங்கள் கருத்துக்கள் நல்லா இருக்கு.//

    வாங்க பரவஸ்து அண்ணா! நலமா?

    //இது நடக்காதா என்ற ஏக்கமும் எல்லாத் தமிழர்களுக்கும் இருக்கு//

    ஏக்கம் தலைவர்களுக்கு இல்லை போலும்! தமிழர்களுக்கு மட்டுமே இருக்கு!

    //இது நடந்தேற வேண்டும் என்று, எல்லாம் வல்ல காஞ்சி வரதரை வேண்டுகிறேன்//

    அவ்வண்ணமே வரதன் அருளட்டும்!
    டீச்சருக்குச் சொன்னதே தான்! இவை பட வேண்டியவர் கண்ணுக்கும் பட வேண்டும் என்பதால், இந்தப் பதிவை மின்னஞ்சலும் செய்துள்ளேன்! சி.எம் செல்லுக்கு மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் இயக்க முகவரிக்கு!

    ReplyDelete
  8. //குடுகுடுப்பை said...
    இது எல்லாம் நடக்கவேண்டும், அதில் எனது பங்கும் இருக்கவேண்டும்.//

    உங்கள் பங்கு இருக்க வேண்டும்
    நம் பங்கு இருக்க வேண்டும்
    அந்தக் கட்டம் விரைவில் வர வேண்டும் என்று தான் நானும் விழைகிறேன்!

    ReplyDelete
  9. நல்ல பதிவு ரவி.
    இவையெல்லாம் நடக்க மட்டுமே குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
    இன்னும் புலிகள் வருவார்கள்; வந்து போராட்டத்தைத் தொடர்வார்கள் எனப் பேசிக்கொண்டிருப்பவர்களால் அங்கிருக்கும் தமிழருக்குத்தான் வேதனை அதிகரிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டுமென விரும்புகிறேன்.
    அவர்களைக் காக்கவென ஒரு அமைப்பு அங்கு முறையாக இல்லாத இந்த நேரத்தில்.
    நன்றி.

    http://aaththigam.blogspot.com/2009/05/blog-post_30.html

    ReplyDelete
  10. //நீ அப்போது வந்தால் போதும்//

    மறுபடியுமா?

    (பார்க்க: http://transcurrents.com/tc/2009/05/uk_guardian_report_on_interned.html#more)


    அந்தப் பெண் குழந்தையின் முகத்தை பார்க்கவே மனம் பதறுகிறது.

    ReplyDelete
  11. i dropped so many tears daily for tamil eelam peoples untill now.from now onwards i would like to do some help for them atleast by money...even though i am not coming from rich family, i can do little bit...come on guys...we have 10 crore tamil peoples worldwide...let us take the forward step

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP