Friday, November 13, 2009

வளர்ந்த சிங்கம்


கு
ழந்தை, சுவரைப் பிடித்து எழுந்து நிற்க ஆரம்பித்தவுடன், மகிழ்ச்சியுடன் கைகொட்டிச் சிரிக்கும். இதைப் பார்க்கும் தாயும் சேர்ந்து, கை கொட்டி மகிழ்வாள். இந்தப் பருவத்தை, பிள்ளைத் தமிழில், சப்பாணிப் பருவம் என்பர்.


பெரியாழ்வார், கண்ணன் கைகொட்டிச் சிரிப்பதை அனுபவித்து, மாணிக்கக் கிண்கிணி எனும் (1-7) இயற்றியுள்ளார்.

இதில் 9-ம் பாசுரத்தில் நரசிம்மனை அழைக்கிறார்.

***
அளந்திட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே
வளர்ந்திட்டு* வாளுகிர்ச் சிங்க உருவாய்*

உளந்தொட்டு இரணியன்* ஒண் மார்வகலம்*
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*

பேய்முலை உண்டானே! சப்பாணி.
மாணிக்கக் கிண்கிணி 1-7-9

தானே அளந்து கட்டிய தூணை இரணியன் தட்ட, அவன் தட்டிய இடத்திலேயே வளர்ந்து தோன்றி, ஒளி பொருந்திய நகங்களை உடைய சிங்க உருவாய், இரணியன் மார்பைத் தொட்டு, மார்பு முழுவதும் பிளந்த கைகளால், கை கொட்டிச் சிரி! பேய் முலை உண்டவனே! கை கொட்டிச் சிரி!'

என்று 'யசோதை'யாழ்வார் பாடுகின்றாள்.

***

ரசிம்ம புராணத்தில் இருந்து ஒரு காட்சி ...

இடம்: இரணியன் அரண்மனை
நேரம்: அவன் விதி முடியும் நேரம்

இரணியன் (கோபத்துடன்): மூடனே! எங்கே இருக்கின்றான் விஷ்ணு?

பிரகலாதன்: எல்லா இடத்திலும்!

இரணியன் (சிரித்து): இந்தத் தூணிலுமா?

(பிரகலாதன் கண்ணுக்கு எம்பெருமான் காட்சியளிக்கிறார்)


பிரகலாதன் (தூணைப் பார்த்து):
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா! உந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா!

(எல்லாமே எம்பெருமான் தான் என்று
நினைக்கும் மனப் பக்குவம் வந்து விட்டால், கூப்பிடும்போது தான் நரசிம்மர் வரவேண்டும் என்ற அவசியம் இல்லையே!)


இரணியன் (சந்த்ரஹாசம் எனும் தன் கத்தியை எடுத்து):
பைத்தியமே! நான் சொல்வதை நன்றாகக் கேள்! உன்னை என் கையாலேயே வெட்டிக் கொல்வேன்!

(பிரகலாதனை, 'மூட:' என்று இரண்டு
முறை குறிப்பிடுகின்றான் இரணியன் இங்கு! பிரகலாதன் பைத்தியமா? யாராவது பதில் அளிக்கிறீர்களா?)

இரணியன் (ஒரு தூணைக் காட்டி): முடிந்தால் இந்தத் தூணில் இருந்து விஷ்ணு வந்து உன்னைக் காப்பாற்றட்டும்!

ஓஹோ! 'அளந்திட்ட தூண்' இது தானோ?

***

ந்தத் தூண், சாதாரணத் தூண் அல்ல!

நாம் ஒரு வீடு கட்ட ஆரம்பிக்கிறோம்! பூஜை செய்து, அதில் முதல் கல்லை மட்டும், நாம் எடுத்து வைக்கிறோம்! மற்றதெல்லாம் கொத்தனார் வேலை. ஆனாலும், நம் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் 'நான் கட்டிய வீடு' என்று சொல்லிப் பெருமை கொள்கிறோம்!


('ராமர் பொறியியல் கல்லூரியில், B.E Degree வாங்காமல், சேது பந்தனம்' கட்டியதும் இப்படித் தானே?)


இப்படி, இரணியன், முதலில் 'அளந்து இட்ட' தூணாம் இது! அதுவும், தன் உருவத்திற்கு ஏற்பக் கட்டிய, மிகப் பெரிய, உயரமான, அழகான தூண்!

ஆனால், ஆழ்வார் கூறும் காரணம் இதுவல்ல!

தானே நட்டு வைத்த, பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்தத் தூணில், 'நாராயணன் முன்னமேயே வந்து ஒளிந்து கொண்டு இருக்க முடியாது' என்ற நம்பிக்கையிலேயே!

ஒரு வேளை, 'தன் விதி இது தான்' என்று முன்னமேயே இரணியன் (வரங்களின் மூலம்) அளந்து வைத்த தூண் என்கின்றாரோ ஆழ்வார்?

இன்னொரு தனிச் சிறப்பு - தசாவதாரக் கதைகளில் இன்னமும் சான்றாக இருப்பவை, அநேகமாக இந்தத் தூணும், சேது பந்தனமும் தான்! அதிலும், திவ்ய தேசம், இந்தத் தூண் ஒன்று தான்!


அன்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்:
கப்பல்களும், மற்றவையும் வந்து, அவை இரண்டும் அழிவதற்கு முன்னர், முடிந்தால் நீங்கள் நேரில் சென்று தரிசனம் செய்து விடுங்கள் - இதுவரை தரிசனம் செய்யாமல் இருந்தால்!

முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தூணைத் தட்டுகிறான் இரணியன்!

***

ரசிம்மம் தோன்றுகிறது! தட்டிய இடத்தில் இருந்து!


'நாளைக்கு வருகிறேன்!' என்று எம்பெருமான் பாற்கடலில் தூங்கிக் கொண்டு இருக்க முடியுமா? அதற்குள் இருக்கிற ஒரே பக்தனையும் இரணியன் கொன்று விடுவானே!

அப்பொழுதே தோன்றியது!

'ஆங்கே' என்பதற்கு, 'அந்த இடத்திலேயே, அப்போழுதே' என்ற இரு பொருளும் உண்டு!

இதனாலேயே பெரியோர்கள் 'நாளை என்பதே நரசிம்மத்துக்குக் கிடையாது!' என்பர். அவனுடைய நாமத்தைச் சொல்லுங்கள்! கேட்டவுடன், உடனேயே கிடைக்கும் நரசிம்மனிடம் இருந்து!

'வளர்ந்திட்டு' என்கிறாரே? சிங்கம் வளர்ந்ததா?

***

ல்லா நரசிம்மாவதாரக் காவியங்களும், 'நரசிம்மர் தூணைப் பிளந்து வந்து இரணியனை வதம் செய்தார்' என்று கூறினாலும், உண்மையில் அவதாரம் முழுவதும் பல நிலைகளில் (Stages) வர்ணிக்கப் படுகின்றன:

- தூண் பிளந்ததும், வந்த சிங்க உரு!
- உடனே எடுத்த விசுவ ரூபம்!
- இரணியனுடன் இருந்த அசுரர்கள் வதம்!


- இரணியனுடன் போர்!
- அந்திப் போதில், இரணியனின் மார்பு பிளந்தது!
- எம்பெருமானின் கோபம்!
- கோபம் தணிந்ததும் நடந்தவை!


படைப்பாளியின் கற்பனைக்கு ஏற்ப, வர்ணனைகளில் சில நிலைகள் குறைவாகவும், சில நிலைகள் அதிகமாகவும் உள்ளன.

தூணில் இருந்து வெளிவந்தவுடன், நரசிம்மம் விசுவரூபம் எடுத்ததாகவும் கூறுவர். இதனாலேயே ஆழ்வார் 'வளர்ந்திட்டு' என்கின்றாரோ?

கம்பரின் விசுவரூப வர்ணனையையும், மற்ற காவியத்தில் உள்ள வர்ணனைகளையும், முழுவதும் நாம் பின்னால் ரசிக்கலாம்.

('பின்னால், பின்னால்' என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனால் என்ன அர்த்தம் என்கிறீர்களா? அடியேன் கிட்ட இருக்கிற மொத்தச் சரக்கையும் 90+ பாசுரங்களுக்கு ஏற்கனவே கூறு போட்டுட்டேன் சாமி ... ஹி... ஹி...)

எம்பெருமான், சங்கு சக்கரங்களுடன் தோன்றியதாகக் கூறுவர். இருந்தும், அவதாரக் காரணம் கருதி, அவற்றின் ஒளியை விட அவருடைய நகங்கள் மிகவும் ஒளி பொருந்தியதாக இருந்ததால், சங்கு சக்கரங்களைப் பற்றி விவரிக்காமல், 'வாள் உகிர்ச் சிங்க உரு' என்கிறார்.

நரசிம்மம் மார்பைத் தானே தொட்டது? 'உளம் தொட்டு' என்கின்றாரே, ஏன்?

***

ட்டிய இடத்தில் இருந்து, அப்பொழுதே தோன்றும் எம்பெருமானைப் பார்த்தாவது, இரணியன் திருந்துவானா என்று எம்பெருமான் நினைத்தாராம் (திருந்தினால், இன்னும் ஒரு பக்தன் கிடைப்பானே என்ற நப்பாசை தான்)! எனவே, அவன் உள்ளத்தைத் தொடுகின்றார் ('உளம் தொட்டு')!

நன்கு தேடியும், எம்பெருமான் மேல் பாசம் சிறிதும் இல்லையாம் இரணியனுக்கு! அவன் திருந்துவதாகத் தெரியவில்லை. உடனே, உள்ளத்தை விட்டு விட்டு, பிளக்கிறார் மார்பை!

ஒண் மார்வகலம் பிளந்திட்ட’ - மார்பை, அகலமாகப் (முழுவதுமாக) பிளக்கின்றார் எனவும், அகலமான மார்பைப் பிளக்கின்றார் எனவும் பொருள் கொள்ளலாம்.

அன்று ஆயுதமாக இருந்த அதே கைகள், இன்று, கை கொட்டிச் சிரிக்கின்றதாம்! சிரிக்க வைக்கின்றதாம்!

ஐயோ! மீண்டும் பூதனையா? ஆழ்வாருக்கு பூதனையை ரொம்பப் பிடிக்குமோ?

***

பூதனையும், இரணியனும் ஒரே குலமாம் - அசுரர்கள் என்பதற்கும் மேலாக!

இருவரும் - ’தொடை’க்குலமாம்
(!?!)

ஒருத்தியை, அவள் தொடைகளில் படுத்து, உயிரை எடுக்கின்றான்! ஒருவனை, தன் இரு தொடைகளில் கிடத்தி, அவன் உயிரை எடுக்கின்றான்!


ஒரு தொடையில் நிலமகளைப் பிரளயத்தி லமர்த்தினை*
இரு தொடையில் இருத்திநீ அவுண னுடல் பிளந்தனை*

ஒரு தொடையில் பத்தனை வதத் தின்பின் அமர்த்தினை*

இரு தொடையில் கிடந்துநீ யரக்கி உயிர் குடித்தனை*

ஒரு தொடை தட்டிநீ பாரதப் போர் முடித்தனை*

ஒரு தொடையில் திருமகளை இடந்தையி லமர்த்தினை*

ஒரு தொடைத் துளவம் தந்த அடிப்பொடிக் கருளினை*

ஒரு தொடை யலங்கார மெழுது மடியேனுக் கிரங்காயோ?


பாரதத்தில், தன் தொடையைத் தட்டி, பீமனுக்கு சமிக்ஞை செய்கிறான்! துரியோதனன் மரணத்துடன் போர் முடிகின்றது!

திருமகளையும், நிலமகளையும், பிரகலாதனையும் தன் இடப்பாகத்தில் அமர்த்துகின்றான்!

என்ன? ’தொடை’க்குலம் என்பது சரி தானே?

- நரசிம்மனே போற்றி!

33 comments:

  1. இன்னொரு தனிச் சிறப்பு - தசாவதாரக் கதைகளில் இன்னமும் சான்றாக இருப்பவை, அநேகமாக இந்தத் தூணும், சேது பந்தனமும் தான்! அதிலும், திவ்ய தேசம், இந்தத் தூண் ஒன்று தான்!


    இந்த தூண் அஹோபிலத்தில் உள்ளதா!
    யூகம் தாண்டியும் நரசிம்மர் வெளிவந்த தூண் இருக்கிறது என்றால்
    ஆச்சர்யம்தான்!!!

    ReplyDelete
  2. //இந்த தூண் அஹோபிலத்தில் உள்ளதா!
    யூகம் தாண்டியும் நரசிம்மர் வெளிவந்த தூண் இருக்கிறது என்றால்
    ஆச்சர்யம்தான்!!!//

    ஆம். இதுவே அஹோபிலத்தில், ‘உக்ர ஸ்தம்பம்’ எனப்படுகிறது.

    ReplyDelete
  3. //நாளை என்பதே நரசிம்மத்துக்குக் கிடையாது//
    //தசாவதாரக் கதைகளில் இன்னமும் சான்றாக இருப்பவை, அநேகமாக இந்தத் தூணும், சேது பந்தனமும் தான்! அதிலும், திவ்ய தேசம், இந்தத் தூண் ஒன்று தான்!//

    தகவலுக்கு நன்றி

    திருவல்லிக்கேணி அழகியசிங்கரை மட்டுமே தெரிந்து வைத்துள்ள என் போன்றோர்க்கு நரசிம்மத்தின் பெருமைகளை எளிய சொற்களில் சிறந்த நடையில் எழுதியுள்ளிர்கள்

    குறிப்பாக அஹோபிலத்தின் புகைப்படம் :)

    ReplyDelete
  4. //'ஆங்கே' என்பதற்கு, 'அந்த இடத்திலேயே, அப்போழுதே' என்ற இரு பொருளும் உண்டு!
    இதனாலேயே பெரியோர்கள் 'நாளை என்பதே நரசிம்மத்துக்குக் கிடையாது!' என்பர்.//
    Very nice to hear these kind of words. These kind of words increase my belief in God.

    ReplyDelete
  5. நல்ல கட்டுரை நண்பரே. இப்படியே சிங்கத்தை எழுதினால் எப்ப என் இராமனையும், அனுமனையும் பற்றி எழுதுவீர்கள். நன்றி.

    ReplyDelete
  6. //சந்த்ரஹாசம் எனும் தன் கத்தியை எடுத்து//

    ஒரு சந்தேகம், இதே பெயர் கொண்ட வாளை சிவனிடம் வரமாக பெற்று கடைசியில் ஜடாயுவை சமாளிக்க முடியாமால் இதே வாள் கொண்டு தானே வெட்டினான் ராவணன்..? இரண்டும் ஒன்றா?

    அடியேன் படித்ததில் இருந்து சொல்கிறேன். சங்கு மற்றும் சக்கரத்தாழ்வாரும், ஆதிசேசனும் பெருமானை பிரியாமல் அவதாரங்களில் வந்ததாம்.

    நரசிம்மாவதாரத்தில் கூரிய கை நகங்களாய் சக்கரமே வந்ததாம். எந்த ஒரு ஆயுதமும்... வாங்கிய வரம் நினைவில் உள்ளது தானே? :))

    ReplyDelete
  7. அன்பரே
    //நல்ல கட்டுரை நண்பரே. இப்படியே சிங்கத்தை எழுதினால் எப்ப என் இராமனையும், அனுமனையும் பற்றி எழுதுவீர்கள். நன்றி.//

    தற்சமயம் நரசிம்மர் அடியேனை ஆட்கொண்டுள்ளார். எனவே அவரைப் பற்றி எழுத வாய்ப்பு வந்தது. இராமன் எப்பொழுது எழுதச் சொல்வாரோ அப்போது தானாக அது நடக்கும்.

    ReplyDelete
  8. Logan

    //திருவல்லிக்கேணி அழகியசிங்கரை மட்டுமே தெரிந்து வைத்துள்ள என் போன்றோர்க்கு நரசிம்மத்தின் பெருமைகளை எளிய சொற்களில் சிறந்த நடையில் எழுதியுள்ளிர்கள்//

    நன்றி.

    ReplyDelete
  9. ராதா

    //Very nice to hear these kind of words. These kind of words increase my belief in God.//

    நம்பினார் கெடுவதில்லை!

    ReplyDelete
  10. அம்பி

    //ஒரு சந்தேகம், இதே பெயர் கொண்ட வாளை சிவனிடம் வரமாக பெற்று கடைசியில் ஜடாயுவை சமாளிக்க முடியாமால் இதே வாள் கொண்டு தானே வெட்டினான் ராவணன்..? இரண்டும் ஒன்றா?//

    இந்த வாளும் அந்த வாளும் ஒன்றா என்று தெரியவில்லை. ஆசாரியனிடம் கேட்டுப் பார்க்கிறேன்.

    வலை அன்பர் யாருக்காவது தெரியுமா?

    ReplyDelete
  11. அம்பி

    //அடியேன் படித்ததில் இருந்து சொல்கிறேன். சங்கு மற்றும் சக்கரத்தாழ்வாரும், ஆதிசேசனும் பெருமானை பிரியாமல் அவதாரங்களில் வந்ததாம்.//

    விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், நரசிம்ம புராணம் மூன்றிலும், எம்பெருமான் 1000 (எண்ணற்ற) கைகளுடன் தோன்றியதாகவும், அவற்றில் குறிப்பாக, சங்கு, சக்கரம் முதலியவை இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளன.

    //நரசிம்மாவதாரத்தில் கூரிய கை நகங்களாய் சக்கரமே வந்ததாம். எந்த ஒரு ஆயுதமும்... வாங்கிய வரம் நினைவில் உள்ளது தானே?//

    அடியேனுடைய எண்ணம்: இரணியன் ஆயுதத்தால் சாகமாட்டான். எனவே அவனுக்கு மட்டும் நகம்.

    ஆனால், இரணியனுடன், 85,000 அசுரர்கள் வந்து எம்பெருமானுடன் சண்டையிட்டதாக நரசிம்ம புராணம் கூறுகிறது. இவர்களுக்கு எந்த வரமும் இல்லை. இவர்களை அழிக்க எம்பெருமான் தன் ஆயிரம் கைகளில் ஆயுதங்களை பயன்படுத்தி இருப்பார் என்றே தோன்றுகிறது.

    எனவே, இதில் முரண்பாடு எதுவும் இல்லை என்பது அடியேன் எண்ணம்.

    ReplyDelete
  12. ஆனால், இரணியனுடன், 85,000 அசுரர்கள் வந்து எம்பெருமானுடன் சண்டையிட்டதாக நரசிம்ம புராணம் கூறுகிறது. இவர்களுக்கு எந்த வரமும் இல்லை. இவர்களை அழிக்க எம்பெருமான் தன் ஆயிரம் கைகளில் ஆயுதங்களை பயன்படுத்தி இருப்பார் என்றே தோன்றுகிறது:)))

    இப்போது உள்ளது போல வெப் கேமரா , சன் டிவி, லைவ் , நரசிம்மர் சண்டையிடும்போடு இருந்திருந்தால் அவர் எப்படி அசுரர்களிடமும், இரண்யநிடமும்
    சண்டை போட்டிருப்பார் என்று பார்த்து பரவச பட்டிருக்கலாம். ம் ...

    ReplyDelete
  13. //இரணியனுடன், 85,000 அசுரர்கள் வந்து எம்பெருமானுடன் சண்டையிட்டதாக நரசிம்ம புராணம் கூறுகிறது. இவர்களுக்கு எந்த வரமும் இல்லை.//

    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  14. அன்பரே
    //இப்போது உள்ளது போல வெப் கேமரா , சன் டிவி, லைவ் , நரசிம்மர் சண்டையிடும்போடு இருந்திருந்தால் அவர் எப்படி அசுரர்களிடமும், இரண்யநிடமும்
    சண்டை போட்டிருப்பார் என்று பார்த்து பரவச பட்டிருக்கலாம். ம் ...//

    அப்பொழுதும், போட்டி TV சானல்களின் விளக்கங்கள், எண்ணிக்கைகள் வேறுபட்டவையாக இருக்கும் :-))

    ReplyDelete
  15. ஊருக்கு வந்தாச்சே! பந்தலுக்கும் வந்தாச்சே! :)

    நரசிம்மப் பதிவுகள் ஒன்றுக்கு ஒன்று படமும் பாசுரமுமாய் சேர்ந்து மிளிர்கின்றன ரங்கன் அண்ணா! வாழ்த்துக்கள்!

    //என்று 'யசோதை'யாழ்வார் பாடுகின்றாள்//

    ஹிஹி! யசோதை தான் முதல் ஆழ்வார்-ன்னு நான் சும்மா நயத்துக்குச் சொல்லுவேன்! அப்படியே இந்தப் பதிவில் உங்க எழுத்திலும் கண்டேன்!

    எம்பெருமானிடத்தில் ஆழ்ந்து ஆழ்ந்து ஆழ்ந்த முதல் பெண் ஆழ்வார் அவளே தான்!

    எதற்கு ஆழ வேண்டும்?
    ஆழ்வதற்காகவே ஆழ்ந்தவள் அவள்!

    வேறு எந்த நோக்கமும் அவளிடம் இல்லை! வளர்த்த பின் ஒப்புக் கொடுத்தவள் தான்...பின்பு அவன் திருமணத்துக்குக் கூட அருகில் இல்லை!
    இப்படி அவனுக்காக அவன்-தன் உறவைக் கூட உரிமை பாராட்டாமல் வெறுமனே ஆழ்ந்து ஆழ்ந்து போன அந்தப் பேதை உள்ளம் தான் யசோதை ஆழ்வார்!

    என்ன தவம் செய்தனை, யசோதா....

    ReplyDelete
  16. //'அளந்திட்ட தூண்'//

    இதற்கான விளக்கங்கள் அருமை ரங்கன் அண்ணா!
    இன்னும் சில நய விளக்கங்கள் இதோ:

    தானே கையால் எடுத்துக் கொடுக்க, கட்டிய தூண் என்பதால், தனக்குத் தெரியாமல் அங்கு வேறு எந்த பொருளும் வந்திருக்க முடியாது என்ற பத்தாம்பசலித்தனம் இரணியனுக்கு! அதனால் தான் வழக்கமான "கணக்கு போடும் புத்தியில்", முன்பு கணக்கு போட்டு டைப் டைப்பா வரம் வாங்கினாற் போலே, இப்போது கணக்கு போட்டு, இந்தத் தூணை மட்டும் சுட்டிக் காட்டுகிறான்!

    எதற்குத் தூணை மட்டும் அவன் சுட்டிக் காட்ட வேண்டும்?
    அதான் "எங்குமுளன்" என்று பிரகலாதன் சொல்லி விட்டானே?

    சபையில் எத்தனையோ பொருட்கள் உள்ளனவே! கொடி, பதாகை, சிம்மாசனம், மேற்கூரை, பளிங்குத் தரை, திரைச்சீலை, கவரி, விசிறி, விளக்கு, ஆயுதங்கள் என்று இப்படி "எத்தனையோ எங்குமுளன்" ஆயிற்றே!
    அவ்வளவு ஏன்? பெருமானை இழிவுபடுத்த, தன் கால் செருப்பைக் காட்டி, இங்கு இருக்கிறானா என்று கூடக் கேட்டு இருக்கலாமே, இக்கால நாத்திகர்களைப் போல? :)

    ஏன் தூணை மட்டும் காட்ட வேண்டும்?
    அதான் ஆழ்வார் விடை சொல்கிறார் = அளந்து + இட்ட + தூண்!

    ReplyDelete
  17. அளந்து + இட்ட + தூண்!

    1. என்னடா ஓவரா "அளக்கற" என்று சொல்கிறோம் அல்லவா?
    தற்பெருமை! தான் தான் என்ற தன்+மை, ஸ்வயம் = அதுவே அளத்தலுக்கு அடிப்படை!

    இப்படி இரணியனின் தற்பெருமைக்குச் சாட்சியாய் நின்றது அந்தத் தூண்!

    முன்பு இழந்த காலமெல்லாம் மாறி, முதலில் அவனுக்கென்று வந்த செல்வம், அவன் கோலோச்சிய அந்த அரண்மனை!

    அந்த அரண்மனையில் அவன் அரியாசனத்துக்கு மிக அருகில் உள்ளது அந்தத் தூண்! அவனே அதைக் கையில் எடுத்துக் கொடுக்க, கட்டிய அரண்மனை!

    நமக்குன்னு முதல் முதல் சொந்த வீடு வாங்கும் போது ஒரு சின்ன பெருமை இருக்கும்-ல்ல? அப்போது நாமே கடைக்கால்/வாசக்கால் எடுத்துக் கொடுப்போம்-ல்ல? அது போல் இரணியன் தூணை எடுத்துக் கொடுத்தான்! ஓங்கி உயர்ந்து கம்பீரமாய் அவனைப் போலவே மமதையுடன் நிற்கும் தூண்!

    சின்னப் பெருமைகள், பெரிய பெருமைகள் ஆகி, பெருமைகள் மமதைகள் ஆகி, மொத்த ஊரே அடி பணிந்த இடம் அந்தத் தூண்!

    கர்ம-ஞான யோக முனி சிரேஷ்டர்களே, கொள்கையை விடுத்து, "ஓம் இரண்யகசிபுவே நம" என்று சொல்லிய வெற்றிப் பெருமிதமான இடம் அந்தத் தூண்!

    அந்த அரண்மனையில் மொத்தத்துக்கும் ஆதார பீடம் அந்தத் தூண்! தானே தன் கைகளால் அவன் "அளந்து இட்ட தூண்", அவனின் ஒவ்வொரு வெற்றியும் பார்த்து நின்ற தூண்...

    அந்தப் பெருமையில் தான் தூணைக் காட்டினான் இரணியன்!
    தன் வெற்றிக்கு வித்தான ஆரம்ப கால அடிப்படையை அசைக்க முடியாது என்று அவனுக்கு ஒரு கணக்கு! தானே அளந்து+இட்ட+ தூணில் வேறு யாரும் எதுவும் "புகுத்தி" இருக்க முடியாது என்ற கணக்கு!

    ஆனால் கணக்குக்கே கணக்கு போடவல்ல இறைவன்...
    அவன் எங்கும் உளன் தான்! ஆனால் எங்கே தோன்றுவான்?

    இறைவன் எங்கே தோன்றுவான்? = மமதையில் தோன்றுவான்!

    ஆம்!
    * வெறுப்பாளனுக்கு அவன் மமதையில் வந்து உட்கார்ந்து கொள்வான்!
    * அருளாளனுக்கு அவன் அன்பில் வந்து உட்கார்ந்து கொள்வான்!

    உச்சம் அடையும் போது, அன்பிலும், மமதையிலும் அவரவருக்கு ஏற்றாற் போல் வெளிப்படுகின்றான்!
    அவ்வண்ணமே, இரணியனின் மமதைக்கு ஆதார பீடமான தானே "அளந்து+இட்ட+தூணில்" வெளிப்பட்டான்!

    இரணியன் காட்டிய மமதைத் தூணில், அவன் மமதையா இருந்தது? அவன் தேற்றிய செல்வமா இருந்தது? அவன் ஆதி கால கம்பீரமா இருந்தது? இல்லை! இறைவனே இருந்தான்!

    எதைத் தன் ஆதாரம் என்று நினைத்து மனிதன் காட்டுகிறானோ...
    அந்த ஆதாரத்திலேயே, மூலாதாரம் வெளிப்படுகின்றது!


    * எம்பெருமானைக் காட்டி அருளிய அந்த கம்பம்/தூண்!
    * அந்தக் கம்பத்து ஆழ்வார் தான் கோயிலாழ்வார்!
    * அந்தக் கம்பத்து இளையன் பிரகலாதன் தான் கம்பத்து இளையனார்!

    கம்பத்து ஆழ்வார் திருவடிகளே சரணம்!
    ஹரி ஓம்!

    ReplyDelete
  18. //ambi said...
    //சந்த்ரஹாசம் எனும் தன் கத்தியை எடுத்து//

    ஒரு சந்தேகம், இதே பெயர் கொண்ட வாளை சிவனிடம் வரமாக பெற்று கடைசியில் ஜடாயுவை சமாளிக்க முடியாமால் இதே வாள் கொண்டு தானே வெட்டினான் ராவணன்..? இரண்டும் ஒன்றா?//

    அம்பி, நீ எப்போ "அடியேன்" ஆன? :)

    சந்திரஹாசம் என்னும் வாளைத் தான் இராவணன் சிவபெருமானிடம் பெற்றது! அதைக் கொண்டே ஜடாயுவைத் துணித்தது! இராவணனை "வாள் அரக்கன்" என்றே தேவாரப் பதிகங்களும் குறிக்கின்றன!

    எப்படி எம்பெருமானுடன் ஒவ்வொரு அவதாரத்திலும் சக்கரம் உடன் வருகின்றதோ,
    அவ்வண்ணமே ஜய-விஜயர்களான அவர்களிடத்திலும் வாள் வருகின்றது!

    * இரணியனும் வாளால் தூணைத் தொட்டான்!
    * இராவணனும் வாளால் மாயா யுத்தம் காட்டினான்!
    * செசிசுபாலனும் வாளால் கண்ணன் மேல் பாய்ந்தான்!

    இப்படி மூவரும் மறையும் முன்னர், வாள் தொட்டே மறைந்தனர்!
    ஆழ்வாரும் இதையே..."வாள்-கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்"...என்று பாடுகிறார்!

    எம்பெருமானை அழிக்க எண்ணிய மனதுக்கும், அழித்தல் கடவுளான சிவபிரானே, அவர் ஆயுதத்தால், பிராண சம்பந்தம் செய்து வைப்பதாக ஐதீகம்!
    அவ்வண்ணமே சிவப் பிரசாதமாகிய சந்திரஹாசம் தொட்ட மாத்திரத்தில், எம்பெருமான் பரிபூர்ண சான்னியத்துடன் வெளிப்படுகிறான்!

    ReplyDelete
  19. //’தொடை’க்குலம் என்பது சரி தானே?//

    தொடைக் குலம் - அருமையான விளக்கம்!

    தொண்டைக் குலமா? தொடைக் குலமா? :)

    அம்மா மடியில் (தொடையில்) அல்லது காதலி மடியில், தலை வைத்துப் படுப்பவர்களுக்குத் தெரியும்! ஒரு தொடையில் மட்டுமே அப்படிப் படுக்க முடியும்! அதுவே தொடையின்பம்! :)

    ஆகவே தான் அருளாளர்களுக்கு ஒரு தொடை காட்டி,
    மருளாளர்களுக்கு இரு தொடை காட்டுகிறான் எம்பெருமான்!

    ஒரு தொடை பெற்றவர்கள் =
    திருமகள் (திருவிடந்தை), நிலமகள் (வராக சரம சுலோகம்)
    துருவன், பிரகலாதன், இலக்குவன், பீமன்... என்று அடியவர்கள்!

    இரு தொடை பெற்றவர்கள் = இரணியன், பூதனை...என்று கொடி-அடியவர்கள்! :)

    தொண்டைக் குலத்துக்கு தொடைக் குலம் கொடுப்பவன் எம்பெருமான்!
    அது அறஞ் செய்பவனோ, மறஞ் செய்வபனோ, இருவருக்குமே தொடைக்-கொடை வள்ளலாகவே இறைவன் விளங்குகிறான்!

    ReplyDelete
  20. //பிரகலாதனை, 'மூட:' என்று இரண்டு முறை குறிப்பிடுகின்றான் இரணியன் இங்கு!
    பிரகலாதன் பைத்தியமா? யாராவது பதில் அளிக்கிறீர்களா?)//

    இன்னும் அன்பர்கள் யாரும் அளிக்கவில்லையே!
    யோசிச்சிச் சொல்லுங்கப்பா! தெரிஞ்சிக்குவோம்-ல்ல :)


    மூட-மூட என்றால் என்ன?
    பைத்திய பைத்தியம் என்றால் என்ன?

    ReplyDelete
  21. //நரசிம்மம் மார்பைத் தானே தொட்டது? 'உளம் தொட்டு' என்கின்றாரே, ஏன்?//

    ஹா ஹா ஹா
    நாம் எம்பெருமானை உள்ளத்தால் தொடுகிறோமோ இல்லையோ...
    அவன் நம் உள்ளத்தை...ஆங்கே, அப்போதே ஓடி வந்து தொடுகிறான்!

    முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான் என்று முருகப் பெருமானையும் இப்படி "ஆங்கே" என்று தான் குறிப்பார் அருணகிரி!

    உள்ளத்தைத் தொட்டு, அவன் திருந்தினானா என்று பார்த்து, திருந்தவில்லை என்று ஆன பின்பு, மார்பைப் பிளந்தது சிம்மம் என்பது மரபு வழி வியாக்யானம்!
    ஆனால் இதில் இன்னொரு ஆழமான பொருளும் உள்ளது!

    மார்பைப் பிளத்தல் - இதை அனுமனும் தான் செய்தான்! தன் மார்பைத் தானே பிளந்து உள்ளே இராமனைக் காட்டினான் அல்லவா?
    அதே போல் தான் இங்கு இரணியன் மார்பைப் பிளந்ததும்!

    அனுமன் தன்னைத் தானே பிளந்து காட்டினான்! இரணியனை இறைவன் பிளந்து காட்டினான்! - அவ்வளவு தான் வித்தியாசம்! அனைவர் உள்ளத்திலும் இறைவன் "அந்தர்யாமியாய்" உள்ளான், என்பதையே ஆழ்வார் "உளம் தொட்டு" என்கிறார்!

    இரணியன் வேறு யாருமல்ல! எம்பெருமானின் பக்தனான ஜய-விஜயன் தானே?
    இறைவனின் உலக நாடகத்துக்காகத் தன்னைத் தானே உட்படுத்திக் கொண்ட பக்தன்! தனக்குக் காலமெல்லாம் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை, இறைவனின் உலக நாடகத்துக்குத் தம்மை ஒப்புக் கொடுத்தவன்!

    மோட்ச பதவியில் இருக்கும் ஜய-விஜயர்கள், எம்பெருமானுக்காகத் தம்மை உலகம் இழித்தாலும் பரவாயில்லை என்று வந்தவர்கள்! ஆனால் நாம எப்படி? :)

    உலகத் துன்பம் தாங்க மாட்டாது தான் மோட்சத்தின் மீது கண் வைத்துச் சுயநலமாய் இருக்கிறோமே தவிர, எம்பெருமான் மீது அன்பு வைத்தா மோட்சம் கேட்கிறோம்?
    ஜய-விஜயர்கள் போல், மோட்சத்தையும் உதறி விட்டு வரும் மனம் நமக்கு இருக்குமா? எம்பெருமானுக்காக காலமெல்லாம் இரணியன் என்று கெட்ட பெயர் சுமக்கும் காதல் உள்ளம் நமக்கு வருமா? :)

    மோட்சத்தில் இருப்பவரெல்லாம் ஒரு முறை கட்டாயம் கீழே மீண்டும் வந்து, உலக நன்மைக்காக, இறை நாடகத்தில் தீயவர்களாக காட்டப்படுவார்கள்-னு சட்டம் வரட்டுமே! அப்பறம் எத்தனை பேர் மோட்சத்தை விரும்புகிறோம் என்று பார்த்து விடலாம்! ஹிஹி!

    In the world, not everyone is a sinner and not everyone is a saint, but a mix of both...and true love will even don the role of sinner, just for His sake! Glory to those hearts!

    எம்பெருமான் உள்ள உகப்புக்கு மட்டுமே இருக்கும் பக்தனின் காதல் சொல்லி மாளாது!
    அதனால் தான் இறைவன், அவர்களின் அவதார பூர்த்தியின் போது உள்ளத்தைத் தொடுகிறான்!

    ஆழ்வார் உளம் "தொட்டு" என்பதில் மிக்க ஆழம் உள்ளது!
    உளம் "ஆராய்ந்து" என்று சொல்லி இருக்கலாமே? ஏன் "தொட்டு" என்று மென்மை காட்ட வேண்டும்?

    இறைவனின் உள்ள உகப்புக்கு மட்டுமே இருந்த காதல் உள்ளத்தைத் "தொட்டு", அவன் யார் என்று அவனுக்கு உணர்த்தி, உள்ளத்து அந்தர்யாமியைக் காட்டி, அவதாரப் பூர்த்தி செய்து வைக்கிறான் இறைவன்!

    இதுவே உள்ளத்தைத் "தொடுதல்"!

    நம் உள்ளத்தையும் "தொடுமாறு" நாடி நாடி நரசிங்கா என்று அவனை நாடுவோம்!

    ReplyDelete
  22. //இரணியனும் வாளால் தூணைத் தொட்டான்!
    * இராவணனும் வாளால் மாயா யுத்தம் காட்டினான்!
    * செசிசுபாலனும் வாளால் கண்ணன் மேல் பாய்ந்தான்!//

    பிரமாதம்!

    இங்கு சிறு விளக்கம்:

    தாங்கள் கூறியது போல, மூவரும் எம்பெருமானை வாள் கொண்டே எதிர்த்தனர்.

    ஆனால், தூணை வாளால் தொட்டானா என்பதில் பல கருத்துக்கள்:

    - ’இரணியன் கையால் அடித்தான்’ என்கிறது பாகவதம்
    - விஷ்ணு புராணம், ’இரணியண் தூணை எட்டி உதைத்தான்’ என்கிறது
    - செவ்வை சூடுவார், ‘கற்றை சொரிந்திடு பரூஉத்தாள் செம்பொன் தூணிடை அடித்தான்’ என்கிறார்.
    - கம்பரும், ‘..தூணின் வென்றி, இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் ..’ என்கிறார்.
    - நரசிம்ம புராணம் மட்டுமே, ’வாளால் அடித்தான்’ என்கிறது.

    ReplyDelete
  23. (இரணியன் தானே தன் கைகளால் அவன் "அளந்து இட்ட தூண்", - krs)))

    ஆதலால்தான் அவன் கட்டிய தூணை ஓங்கி அடிக்க மனமில்லாமல் இரணியன் தூணை தட்டினான் (அளந்திட்ட தூணை* அவன் தட்ட) என்று பெரியாழ்வார் கூறுகிறார் (i think)

    ReplyDelete
  24. //ஆதலால்தான் அவன் கட்டிய தூணை ஓங்கி அடிக்க மனமில்லாமல் இரணியன் தூணை தட்டினான் (அளந்திட்ட தூணை* அவன் தட்ட) என்று பெரியாழ்வார் கூறுகிறார் (i think)//

    ஆஹா ... வலையில் இருந்து பலப்பல புது எண்ணங்கள் உதயம் ... நன்றி.

    ReplyDelete
  25. KRS

    //இப்படி மூவரும் மறையும் முன்னர், வாள் தொட்டே மறைந்தனர்!
    ஆழ்வாரும் இதையே..."வாள்-கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்"...என்று பாடுகிறார்!//

    பட்டயக் கிளப்புறீர்களே!

    இந்தப் பாசுரம் (சீதக்கடல் 1-3-11) மிகவும் அருமை. இந்த ‘வாள் கொள் வளை எயிறு’ என்பதற்குப் பல விளக்கங்கள் கூறுவார் அடியேன் ஆசாரியன் (தாங்கள் கூறிய விளக்கம் உட்பட).

    ’வாள்-கொள்’ என்பதை, கோரப் பல்லுக்கு அடைமொழியாக்கினால், ஒளி கொண்ட பற்கள் என்ற பொருள் வரும். வாள் எடுத்து வந்த எந்த அரக்கனையும் இது குறிக்கும்.

    கோகுலத்திற்கு, கம்சனால் ஏவப்பட்டு வந்த எல்லாரும், தம் உருவத்தை விட்டு, வேறு உருக் கொண்டு வந்ததால், இவர்கள் அனைவரையும் ’வளையெயிற்றார்’ என்பார்.

    ’வாள்’ என்பது மற்ற ஆயுதங்களுக்கும் உபலக்‌ஷணம். ’வாள்-கொள் வளையெயிற்று’ என்று சேர்த்தால், கண்ணன் மதுரை சென்று கொன்றவர்களான கம்சன், சிசுபாலன், தந்தவக்ரன், சாணூரன் போன்றவர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

    தந்தவக்ரனுக்கு, வளை எயிறு (வளைந்த பல்) இருப்பது திண்ணம். எனவே, அவனைக் கொன்றதாகக் கொள்ளலாம்.

    ’ஆர் உயிர்’ என்பதால், கண்ணனின் எதிரிகளில் பிரதானம், சிசுபாலன், தந்தவக்ரன். இவர்களின் உயிரே ’ஆர் உயிர்’. எனவே, இவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

    ’எயிறு ஆர் உயிர்’ - பூதனையும் ஒரு தாய். அவளும் அரக்கியாதலால், அவளுக்கும் கோரப் பல் உண்டு. தாயின் உயிரும் ஆருயிர். எனவே, பூதனையைச் சொன்னதாகவும் கொள்ளலாம்.

    சுருங்கச் சொன்னால், இங்கு ஆழ்வார் அசுரனின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாததால், கண்ணன் கொன்ற பலரில் எவரையும் எடுத்துக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  26. //* இரணியனும் வாளால் தூணைத் தொட்டான்!
    * இராவணனும் வாளால் மாயா யுத்தம் காட்டினான்!
    * செசிசுபாலனும் வாளால் கண்ணன் மேல் பாய்ந்தான்!//

    தந்தவக்ரன், கும்பகர்ணன், இரணியாட்சன் இவர்களும் வாளை உபயோகப் படுத்தினார்களா?

    இரணியாட்சன் போர் பற்றி, வராக புராணம் என்ன கூறுகிறது? யாருக்காவது தெரியுமா?

    ReplyDelete
  27. நரசிம்மர் தூணில் இருந்து வெளிவந்தவுடன் இரணியன் பிரகலாடனை
    பார்த்து இவனாடா உன் நாராயணன் என்று நரசிம்மர் உருவத்தையும்
    அவரின் கண்கள் பற்களை பார்த்து கிண்டலுடன் கூறினான். இதனால் நரசிம்மரின்
    கோபம் அதிகமாகியது! ((கேள்விபட்டிருக்கிறேன் இது உண்மையா ))

    ReplyDelete
  28. அன்பரே

    //நரசிம்மர் தூணில் இருந்து வெளிவந்தவுடன் இரணியன் பிரகலாடனை
    பார்த்து இவனாடா உன் நாராயணன் என்று நரசிம்மர் உருவத்தையும்
    அவரின் கண்கள் பற்களை பார்த்து கிண்டலுடன் கூறினான். இதனால் நரசிம்மரின்
    கோபம் அதிகமாகியது! ((கேள்விபட்டிருக்கிறேன் இது உண்மையா //

    அடியேனுக்குத் தெரிந்தவரை, வடமொழிப் புராணங்களில், இரணியனும், நரசிம்மரும் பேசியதாகக் கதை இல்லை.

    நீங்கள் கூறியது போல, கம்பர் இரணிய வதைப் படலத்தில் கூறியுள்ளார். மிகவும் அருமையான பாடல் இதோ:

    ’ஆரடா சிரித்தாய்? சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க
    நீரடா போகாதென்று நெடுந்தறி தேடினாயோ?
    போரடா பொருதியாயின், புறப்படு, புறப்படு’ என்றான்
    பேரடா நின்ற தாளோடு உலகெலாம் பெயரப் போவான்.

    செவ்வை சூடுவார், தூணில் இருந்து வெளிப்பட்ட சிம்மம், ‘சிரித்ததாக’ மட்டுமே எழுதியுள்ளார்.

    ReplyDelete
  29. ஆரடா சிரித்தாய்? சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க
    நீரடா போகாதென்று நெடுந்தறி தேடினாயோ?
    போரடா பொருதியாயின், புறப்படு, புறப்படு’ என்றான்
    பேரடா நின்ற தாளோடு உலகெலாம் பெயரப் போவான்.::))

    thankyou verymuch rangan sir
    படிச்சி படிச்சி பார்தாச்சு கொஞ்சம்தான் புரிந்தது
    உங்களுக்கு நேரமிருந்தால் சின்னதா விளக்கம் போடுவீங்களா

    ReplyDelete
  30. அன்பரே
    //thankyou verymuch rangan sir
    படிச்சி படிச்சி பார்தாச்சு கொஞ்சம்தான் புரிந்தது
    உங்களுக்கு நேரமிருந்தால் சின்னதா விளக்கம் போடுவீங்களா//

    /*ஆரடா சிரித்தாய்?*/

    தூணில் இருந்து வெளிவந்த சிம்மம் சிரித்ததாம். இந்தச் சிரிப்பைக் கேட்ட இரணியன், ’யார் சிரித்தது?’ என்கிறான்.

    /*சொன்ன அரிகொலோ?*/

    என் மகன் எங்கும் இருப்பான் என்று கூறிய அந்த அரி நீதானோ? என்று கேட்கின்றான் சிம்மத்தைப் பார்த்து!

    /*நீரடா போதாது என்று*/

    முன்பு நான் உன்னைத் தேடி வந்தபோது நீ (பாற்)கடலில் சென்று ஒளிந்து கொண்டாய். இப்பொழுது, அந்த இடம் போதாது என்று

    /*நெடுந்தறி தேடினாயோ?*/

    தறி - கம்பம்

    இந்தக் கம்பத்துக்குள் வந்து ஒளிந்து கொண்டாயோ? என்று சிம்மத்தைப் பார்த்துக் கேட்கின்றான்.

    /*போரடா பொருதியாயின், புறப்படு, புறப்படு*/

    உனக்குப் போர் புரிய சக்தி இருக்குமானால், உடனே என்னுடன் போர் செய்யப் புறப்படு! புறப்படு! என்று சிம்மத்தைப் பார்த்துக் கூறுகின்றான்.

    /*பேரடா நின்ற தாளொடு உலகெலாம் பெயரப் போவான்*/

    எல்லா உலகங்களும் நிலை பெயரும்படியான தாள்கள் உடைய இரணியன்.

    ReplyDelete
  31. thank you! rangan sir. kambar arumaiyaaga kooriyirukkiraar!

    ReplyDelete
  32. அன்பரே

    //thank you! rangan sir. kambar arumaiyaaga kooriyirukkiraar!//

    Sir எல்லாம் வேண்டாம். ரங்கன் என்றே அழையுங்கள்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP