Sunday, April 18, 2010

பிறந்தநாள்: ஆதி சங்கரர்! ஹே சண்டாள, விலகு விலகு!

பந்தல் வாசகர்களுக்கு இனிய வணக்கம்!
இப்போ தான், ரங்கன் அண்ணா, ஆண்டாளின் வைதீக திருமண வைபவத்தையும், ஆளரிப் பெருமாளான நரசிம்ம வைபவத்தையும் எடுத்துக் காட்டி நிறுத்தியுள்ளார்!
அவர் அடுத்த பனுவலான, இரண்டாம் ஆயிரத்துக்குச் செல்லும் முன், இதோ இடையில் சிக்கெனப் புகுந்து, சில இதர பதிவுகள்! :)

* நாளை சங்கரர் பிறந்த நாள்! = சித்திரைத் திருவாதிரை! (Apr, 20, 2010)
ஆதி சங்கரர் தோன்றிய நாள்! வேத தர்மம் அழியாது காக்கப்பட்ட நாள்!

* நாளை இராமானுச ஜெயந்தியும் கூட! = அதே சித்திரைத் திருவாதிரை!
இராமானுசர் தோன்றிய நாள்! தமிழும் சமயமும் தலை தூக்கிய நாள்!
சாதியைத் தாண்டிய நாள்! சரணாகதி ஈண்டிய நாள்!

இன்னிக்கி ஒரு பதிவுக்குப் பதிலா, இரு பதிவா பார்ப்போமா?
முதலில் முதல்வரிடம் இருந்து துவங்குவோம்! ஆதி சங்கரர் காலத்தால் முதல்வர்! 788-820 CE!
* பிளவு பட்டுக் கிடந்த சமயத்தை ஒருங்கிணைத்து தந்தவர் = மக்களுக்கு!
* கூடவே, வேத நெறிகளை ஆராய்ந்து, திரட்டியும் தந்தவர் = ஞானிகளுக்கு!

ஆதி சங்கரர் இல்லாமல், இந்தியச் சமய வரலாற்றை எழுதவே முடியாது! அப்படி நீக்கமற நிறைபவர்! இளம் விஞ்ஞானி, இளம் மெய்ஞானி!
பொதுவாகவே, பிரபலங்களைச் சுற்றிப் பல கதைகள் பின்னர் எழும்பினாலும்...
அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கியமான நிகழ்ச்சிகள், அவர்களுக்கே ஒரு திருப்பு முனையாக அமையும்!
அப்படி ஒரு திருப்பு முனை ஆதி சங்கரருக்கு நடந்தது! அது என்ன?


என்ன தான் ஆன்மீகச் சிம்மமாக, தத்துவப் புலியாக இருந்தாலும், ஆதி சங்கரன் சிறு பிள்ளை தானே! 32 வயதிலேயே அனைத்தும் முடித்துக் கொண்டவன்!
அவனுக்கு இள வயது "வீறு" என்ற ஒன்றும் இருக்கும் அல்லவா! எவ்வளவு தத்துவம் பேசினாலும், நடைமுறை என்று வரும் போது???

குரு கோவிந்தபாதர் கருணையால், அ-த்வைதம் (அல்-இருமை) என்ற கோட்பாட்டை வேதங்களில் இருந்து விரித்துக் காட்டியாகி விட்டது!
ஆன்மீக உலகெங்கும் சங்கரா சங்கரா என்று பரவி விட்டது! கூட்டம் அலை மோதுகிறது! சீடர்கள் அலை மோதுகிறார்கள்!

சங்கரன் கல்விக் கடல்! ஞானக் கடல்!
ஆனால் அவனைச் சுற்றி ஒரு வளையம்...அறிந்தோ அறியாமலோ...
சீடர்களும் கடலில் கலந்த ஞான ஆறுகள்!
அந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் - ஞானிகள், யோகிகள், அரசர்கள், பண்டிதர்கள் என்று இவர்கள் தான்...

* புத்திக்குத் தீனியான "தத்துவம்" பேசப்பட்டதே அன்றி,
* பத்திக்குத் தீனியான "அன்பு" அதிகம் பேசப்படாத காலம்!
=> ஆன்மீகம் = ஆண்டவனுக்கா? அடியவருக்கா??

உலகத்தைப் பற்றி உலக நாதனும், உலக நாயகியும் தானே கவலைப்பட வேணும்? காசி விஸ்வநாதனும், விசாலாட்சியும்....சங்கரனுக்குத் திருப்பு முனை காட்ட முனைந்து விட்டார்கள் போலும்!
சங்கரா, உன் வெறும் வாய்ச் சொல், இன்று வாய்மைச் சொல்லாகும் நேரம் வந்து விட்டதடா!


காசி நகரத்துப் பண்டிதர்களின் கல்வி கேள்வியில் திளைத்திருந்த சங்கரரும் சீடர்களும், அன்று ஆலய தரிசனம் செய்து வரப் புறப்பட்டார்கள்!
காசி நகரத்தின் மணிகர்ணிகா காட்! பொங்கு நீர் புரந்து பாயும் தூய்மையே உருவான கங்கை!

ஆ! காசியின் கங்கை "தூய்மையே உருவானதா"? என்னப்பா சொல்லுற நீய? அதில் தான் என்னென்னமோ மிதக்குதாமே?

உண்மை தான்! மிதக்குது தான்! ஆனால் அப்படியே தங்குகிறதா? இல்லையே! அடித்துச் செல்லும் ஆற்றல் கங்கைக்கு உண்டு! அதை யோசித்தீர்களா?
கூவத்திலோ, ஹட்சனிலோ குளிக்கத் தான் முடியுமா? ஆனால் கங்கையில் குளிக்கிறார்களே! உடல் கருமை அடைந்து விடுகிறதா என்ன? இல்லையே!
காசியின் கங்கை, அதன் கரைகள் மட்டுமே அல்ல! தயவு பண்ணி, கரையைத் தாண்டிக் கொஞ்சம் எட்டித் தான் பாருங்களேன்! அதன் விரிவு விரியும்!

காசியின் கங்கையைப் பற்றி ஒரு மாயத் தோற்றம் ஊடகங்களில் அண்மைக் காலமாக எழும்பி விட்டன!
கங்கையைத் தூய்மைப் படுத்தும் நீர் மேலாண்மை (Water Management) பணிகள் நிச்சயம் தேவை தான்! ஆனால் கண்டிப்பாக கங்கை என்பவள் கூவம் ஆகி விடவில்லை! நினைவில் வையுங்கள்: கங்கை செத்த நதி இல்லை! இன்றளவும் "ஜீவ" நதியே!

கதைக்கு வருவோம்!
இளம் சங்கரன் காவி உடையில் சிவ சிவ என்று சிவக்க ஜொலிக்க நடந்து வருகிறார்! பெனாரஸ் பட்டில் காவியும், தங்க ருத்திராட்சமும், கட் அவுட்டுகளும் அண்மையில் ஜொலித்ததே! அது போல் அல்ல! :)
சிவந்த தேகத்தில் சிவந்த காவி! தங்கத்தால் ஒளிராது ஞானத்தால் மட்டுமே ஒளிரும் தேகம்!
மெலிந்த உடல்! மெல்லிய பாதம்! படீரென குறுக்கே.....ஒரு பைராகி! so called சண்டாளன்!


சண்டாளன்! ஞானப் பெண்டாளன்!
அழுக்கு உடைகள்! கலைந்த கேசம்! கையில் கோல்! போதாக்குறைக்கு நாலு நாய்கள்!

ஏதோ காசி நகரத்து அகோரி போல-ல்ல இருக்கான்! தான் உண்ணாது, நாய்களுக்குப் பிய்த்து போட்ட படி வருகிறான்! ச்சே...என்ன இது...?
இப்படி ஒருவர், பேருந்தில், நம் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தால்? நம் மனசு முதலில் என்ன சொல்லும்?? ஆனால் ஆன்மீகம்-ன்னா மட்டும் எப்பமே வேறு கோலால் அளப்போம் அல்லவா? :)

சங்கரனும் நாம் செய்வதையே தான் செய்கிறார்! முகம் சுளிக்கிறார்! ஒதுங்கி ஓரமாக நடக்கப் பார்க்கிறார்!
ஆனால் பைராகியோ, ஒட்டினாற் போலத் தான் எதிர் திசையில் நடந்து வருகிறார்! கூடவே இந்த நாய்கள் வேறு, வீதி முழுக்க வட்டமடிப்பது போல் வருகின்றன! ஆச்சார சீலர்கள் போற்றிப் புகழும் சங்கரனுக்கோ தர்ம சங்கடம்! பிரைவேட் செக்யூரிட்டி வைத்து விரட்டும் அளவுக்கெல்லாம் அவர் படோபடானந்தா இல்லை! என்ன செய்வது?

ஆசார்யர் உம்மென்றால், உம் உம் உம் என்னும் சீடர்கள் அந்தக் காலத்திலும் இருந்தார்கள் போல! "ஏய்..விலகு விலகு" என்கிறார்கள்!
ஆனால் அச்சச்சோ...பைராகி...இதோ வெகு அருகில் வந்து விட்டான்!

இவர் உடலில் வரும் விபூதி வாசனையை மிஞ்சும் அளவுக்கு, அவன் உடலில் சுடுகாட்டுச் சாம்பல் வாசனை! ஹா ஹா ஹா! ஈசன் பூசுவது என்னவோ சாம்பல் தான்! ஆனால் நாம் பூசுவோமா? இல்லை, பேசுவோம்! :)

கல்விக் கடலான சீடர்கள் எகிறிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள்! சங்கரன் கை அமர்த்துகிறார்! "ஹே...கச்ச...கச்ச..." என்று வெறுப்பான குரலில், வேகமாகச் சொல்கிறார்! "ஏய்...விலகு...விலகு..."!

அதென்னமோ தெரியலை, மூத்தவராக இருந்தாலும், தன் நிலைக்கு கீழானவர்களையோ, வேலைக்காரர்களையோ, "ர்" போடாமல், "ன்/ள்" போடுகிறோம் பல பேர்!
நம் ஆதி சங்கரன், "விலகுங்கள்" என்றாவது சொல்லி இருக்கலாம்! ஆனால் "விலகு" என்று தான் அவர் வாயிலும் வந்தது!

எத்தனை ஆன்மீகம் பேசினாலும், வாசிப்பு, சு-வாசிப்பு ஆகா விட்டால் வரும் பிரச்சனை இது தான்! :)வாயைத் திறந்தார் பைராகி! உலகத்துக்கே படியளப்பவர் எப்படி பேசத் துவங்குவார்? "அன்னம்" என்றே துவங்குகிறார்!
"அன்ன மயாத் அன்ன மயம், அதவா,
சைதன்யம் ஏவ சைதன்யாத்!"
"அன்னம் தின்கிறேன், அன்னம் தின்கிறாய்! உனக்கும் உயிர், எனக்கும் உயிர்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும் நீரும் நானும் வேறு வேறா?"

சங்கரன் ஒரு கணம் திகைத்து விட்டார்! என்னாது....பார்க்கறதுக்கு இப்படி இருக்காரு! ஆனா "சைதன்யம்"-ன்னு எல்லாம் பேசறாரே!
நாம் ஒருமையில் விளித்தாலும், அவர் நம்மை, "யதி வர-முனிவரே" என்றல்லவா அழைக்கிறார்! வெட்கம் பிடுங்கித் தின்றது சங்கரனுக்கு!

"ஹே ஆதி சங்கர, எதை விலகு விலகு என்று வெறுப்பு காட்டுகிறீர்! எதை விலக்க வேணும்? என் உடம்பையா? என் ஆத்மாவையா?
எதை விலக்கினால் நீங்கள் சந்தோஷப் படுவீர்கள்? சொல்லுங்கள்! சொல்லுங்கள்!"

"ஹா...."

"மூச்சுக்கு மூச்சு, அ-த்வைதம் என்கிறீரே! அ-த்வைதம் என்றால் இரண்டு இல்லை என்பது தானே?
இப்போ மட்டும், ஆச்சார சீல ஒன்று, சண்டாளன் ஒன்று - என்று இரண்டாகி விட்டதா உங்கள் தத்துவம்
? எங்கே நீர் பேசிய அ-த்வைதம்??"

அவ்ளோ தான்! இடியே இறங்கி விட்டது நம்ம சங்கரனுக்கு! இப்படியொரு எடக்கு மடக்கு கேள்வியை, இது வரை, அவர் எந்த வாத சபையிலும் கேட்டதே இல்லை!
எல்லா வாதங்களுமே தத்துவம், புஸ்தகம் என்ற அளவில் மட்டுமே பார்த்தவருக்கு, முதல் முறையாக, உண்மை உறுத்து வந்து ஊட்டுகிறது!

கையெடுத்து கும்பிடுகிறார் சங்கரன் - சண்டாளனை(ரை)!

வாயில் கிடுகிடு-வென்று, படித்த உண்மையெல்லாம், அருவியாய்க் கொட்டுகிறது! மொத்தம் ஐந்து பாடல்கள் - மனீஷா பஞ்சகம்!

அது என்ன மனீஷா? மனீஷா கொய்ராலா மேலே பாடிய பஞ்சப் பாட்டு-ன்னு நினைச்சிக்காதீக! :)
மனீஷம் = புரிதல், உணர்தல், உறுதி கொள்ளல்! மனீஷா பஞ்சகம் = உறுதிப்பாடு ஐம்பதிகம்!
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

இப்படி ஞான யோகத்திலும், கர்ம அனுஷ்டானங்களிலும் மட்டுமே தோய்ந்திருந்த சங்கரருக்கு அன்று உலகநாதன் சுட்டிய உண்மை சுட்டது!
அ-த்வைதம் என்பது பேச்சு அளவில் நில்லாது, வாழ்வு முறை ஆகிப் போனது!
* இறை-"தத்துவம்" என்னும் தீனியில் மட்டும் திளைக்காது,
* இறை-"அன்பு" என்னும் அமுதம் கண்டு கொண்டான் சங்கரன்!

அகம் பிரம்மாஸ்மி, நேதி நேதி, தத்-த்வம்-அசி என்று பலவாறாகச் சங்கர பாஷ்யம் எழுதிய அதே சங்கரன்......
முதல் முதலாக.....பக்திப் பாடலாக....அதே காசியில்....பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம் என்று ஈர மழை பொழியத் தலைப்பட்டான், இந்தச் சங்கரத் தலைவன்!இந்த மனீஷா பஞ்சகம், இணையத்தில் அவ்வளவாக இல்லை! kamakoti.org (அ) sringeri.net போன்ற சங்கரத் தளங்களிலேயே அதிகம் காணோம்!
அதனால் இதையே ஆதி சங்கரப் பிறந்த நாள் பரிசிலாய்த், தமிழாக்கித் தருகின்றேன்!

வாசித்துப் பாருங்கள்! பாடலும் பொருளும் பொருந்தி வருகிறதா என்றும் சொல்லுங்கள்! வடமொழிப் பொருளைச் சரி பார்த்துக் கொடுத்த டாக்டர். சர்மா சாருக்கு, அடியேன் நன்றி!


சண்டாளனின் "தைக்கும்" கேள்விகள்:

அன்னமயாத் அன்னமயம், அதவா, சைதன்யம் ஏவ சைதன்யாத்!
யதி வர, தூரீ கர்த்தும் வாஞ்சஸி, கிம் ப்ரூஹி, கச்ச கச்சேதி?


அத்தைத் தின்று அங்கே கிடக்கும்
சிறியதின் வயிற்றில் நீயும் நானும்!
ஆதி சங்கரா, தூரம் தேவையோ?
எதனைச் சொன்னாய் "விலகு விலகே"?

ப்ரத்யக வஸ்துனி நிஸ்தரங்க, சகஜானந்தா அவபோத அம்புதௌ
விப்ரோ அயம், ச்வபசோ அயம், இதி அபி மகான், கோ அயம் விபேத பி்ரம்ம?


அனைவர் அகத்திலும் அமைதி என்றொரு
அலைகள் ஆடா அலைகடல் அன்றோ!
உன்குலம் ஏது? என்குலம் ஏது?
அ-த்வைதம் வெறும் வாய்மொழி தானோ?

கிம் கங்கா அம்புதி, பிம்பத அம்பர, மனெள சண்டாள வீதி பயா:
பூரே வா அந்தரம் அஸ்தி, காஞ்சன கடே, மி்ருத் கும்ப யோர்வா அம்பரே?


கங்கையில் ஒளிரும் கதிரவன் கதிர்கள்
சேரியின் நீரில் கறுத்தும் விடுமோ?
மண்குடம் ஒன்று, பொன்குடம் ஒன்றென
வானின் நீழலும் வீழ்ந்திடப் போமோ?


ஆதி சங்கரர் அருளிச் செய்த மனீஷா பஞ்சகம் - உறுதிப்பாடு ஐம்பதிகம்!


1
ஜாக்ரத ஸ்வப்ன சுஷூப்திஷூ, ஸ்புட தரா, யா ஸம் விது ஜ்ரும்பதே
யா பிரம்மம் ஆதி, பிபீலிக அந்த, தனு ஷூ ப்ரோதா, ஜகத் சாட்சிணீ
ச ஏவ அகம் ந, ச த்ருச்ய, வஸ்த்து இதி, த்ருட பிரக்ஞாபி யஸ்யஸ்தி சேத்
சாண்டாளோ அஸ்து, சது த்விஜோஸ்து, குருர் இதி, யேஷா மனீஷா மம!


விழிப்பில் கனவில், ஆழ்துயில் நிலையில்
பளபள வென்றே, பலதில் ஒளிர்வது!
பிரம்மம் முதலாய், எறும்பும் ஈறாய்
பரந்தும் கரந்தும், சாட்சி மிளிர்வது!
அறிந்தேன் அல்லேன், இவ்விரு நிலையில்
இருந்தேன் இருப்பை, இன்றே புரிந்தேன்!
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

2
பரம்மைவ அகம் இதம் ஜகச்ச! சகலம் சின்மாத்ர விஸ்தாரிதம்!
சர்வம் சைதத் அவித்ய யா! திரிகுண யா சேஷம் மயா கல்பிதம்!
இத்தம் யஸ்ய த்ருடாமதி: சுக தரே, நித்யே, பரே நிர்மலே!
சாண்டாளோ அஸ்து, சது த்விஜோஸ்து, குருர் இதி, யேஷா மனீஷா மம!


கடவுள் நானே! உலகில் நானே!
அணுவுள் அணுவாய், விரிவில் விரிவாய்!
எல்லா உயிர்ப்பும், அறியா மாயை!
முக்குண யுத்தம், என்-மீதம் பேதம்!
கறைகள் இல்லாக் குறைகள் இல்லாச்
சுகமே உணர்வான், எனக்கு அவனே
சண்டாளன் குருவே! சதுர்மறை குருவே!
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

3
சச்வ நச்வரம் ஏவ விச்வம், அகிலம் நிச்சித்ய வாசா குரோ:
நித்யம் ப்ரம்ம, நிரந்தரம் விம்ருசதா, நிர் வியாஜ சாந்த ஆத்மனா!
பூதம் பாவி ச, துஷ் க்ருதாம், ப்ரதஹதா சம் வின்மயே பாவகே
ப்ராரப்த ஆய சமர்ப்பிதம், ஸ்வ வபுர் இத்யேஷா, மனீஷா மம!


இன்றோ உண்டு, நாளை இல்லை
உலகம் இதுவே! குருவின் விதியே!
இன்றும் உண்டு, என்றும் உண்டு
அதுதான் மாறா அமைதிப் பிரம்மம்!
போயின பிழையும், புகுதரு பிழையும்
தோற்றம் காட்டி மாற்றம் செய்யும்!
ஞானத் தீயில், தூசாக் கிடுவான்
சத்தியன்! சங்கரன் உறுதிப் பாடே!

4
யா திர்யங், நர தேவதாபிர் அகமிதி அந்த: ஸ்புடா க்ருஹ்யதே
யத்பாசா ஹ்ருதய அக்ஷ தேக, விஷயா பாந்தி ஸ்வதோ சேதனா:
தாம் பாஸ்யை: பிஹிதா அர்க்க மண்டல நிபாம், ஸ்பூர்த்திம் சதா பாவயந்
யோகீ நிர் விருத மானசோ, ஹி குருர் இத்யேஷா மனீஷா மம!


விலங்கு மனிதன், தேவருள் எல்லாம்
விளங்கி நிற்கும், நானே கடவுள்!
இதயம் விழிகள், உடலால் உணர்ந்து
உணர்வது எல்லாம் உண்மை ஆகா!
மேகம் போலே, கதிரைச் சூழும்
விளக்க அல்ல! மறைக்கத் தானே!
இதனை அறிவோன் ஞான யோகி
சத்தியன்! சங்கரன் உறுதிப் பாடே!

5
யத் செளக்ய அம்புதி லேசலேசத, இமே சகர ஆத்யோ நிவ்ருதா
யச் சித்தே ந இதராம் பிரசாந்த கலன, லப்த்வா முனிர் நிர்வ்ருத
யச் மிந் நித்ய சுக ஆம்புதௌ, கலித தீர் ப்ரம்மைவ, ந பிரம்மவித்
ய: கஸ் சித்ச, சுரேந்த்ர வந்தித, பதோ நூனம் மனீஷா மம!


இன்பக் கடலாம், பிரம்மம் அதிலே
ஒருதுளி பிரம்மமும் இன்பக் கடலே!
வானோர் வாசவன், முனிவரும் மூழ்கும்
வேறொன் றில்லாச் சித்தம் இதுவே!
இதனுள் மூழ்கி, அறிவார் எல்லாம்
அறிவார் அல்லார், அதுவே ஆவார்!
இந்திரன் துதிப்பான் இவர்தம் பாதம்
சத்தியம்! சங்கரன் உறுதிப் பாடே!

இதி ஸ்ரீமத் சங்கராச்சார்ய விரசித மனீஷா பஞ்சகம் சம்பூர்ணம்!

இத்துடன் சீர்வளர்சீர் சங்கராச்சார்யர் அருளிய உறுதிப்பாடு ஐம்பதிகம் நிறைந்தேலோ!

ஜகத்குரு ஆதி சங்கரர் திருவடிகளே சரணம்!

23 comments:

 1. மிக அருமையான கட்டுரை. ரசித்தேன்.


  //என்ன தான் ஆன்மீகச் சிம்மமாக, தத்துவப் புலியாக இருந்தாலும், ஆதி சங்கரன் சிறு பிள்ளை தானே! 32 வயதிலேயே அனைத்தும் முடித்துக் கொண்டவன்!

  இளம் சங்கரன் காவி உடையில் சிவ சிவ என்று சிவக்க ஜொலிக்க நடந்து வருகிறார்! பெனாரஸ் பட்டில் காவியும், தங்க ருத்திராட்சமும், கட் அவுட்டுகளும் அண்மையில் ஜொலித்ததே! அது போல் அல்ல! :) ///

  உங்கள் வரிகளில் அத்வைத்தம் மிளிர்கிறது :)

  சிலர் சங்கர ஜெயந்தியை மே மாதம் 18 ஆம் தேதி என கூறுகிறார்களே?

  ஏதேனும் காரணம் உண்டா?

  ReplyDelete
 2. //ஸ்வாமி ஓம்கார் said...
  மிக அருமையான கட்டுரை. ரசித்தேன்//

  வாங்க சுவாமி! மனீஷா பஞ்சகம் பொருள் சரியாத் தானே இருக்கு?

  //உங்கள் வரிகளில் அத்வைத்தம் மிளிர்கிறது :)//

  வரியில் மிளிர்ந்தா போதுமா? என்னுள்ளும் மின்னத் தான் ஆசி தேவை! :)

  //சிலர் சங்கர ஜெயந்தியை மே மாதம் 18 ஆம் தேதி என கூறுகிறார்களே?
  ஏதேனும் காரணம் உண்டா?//

  சங்கரர் நட்சத்திரம் - சித்திரைத் திருவாதிரை! இராமானுசரின் நட்சத்திரமும் அஃதே! அது நாளைக்கு!
  ஆனால் சங்கர மடங்களில், நட்சத்திரமாகப் பார்க்காமல், திதியாகப் பார்க்கிறார்கள்! சுக்ல பஞ்சமி திதி! அதான் May-18க்கு போய் விடுகிறது!

  அதான் பதிவில் வெறுமனே "சங்கர பிறந்தநாள்" என்று குறித்து, இராமானுச ஜெயந்தி என்று குறித்தேன்!
  சங்கர ஜெயந்தி மரபுப் படி, இவ்வாண்டு மே பதினெட்டு தான்!

  ReplyDelete
 3. //அதான் பதிவில் வெறுமனே "சங்கர பிறந்தநாள்" என்று குறித்து, இராமானுச ஜெயந்தி என்று குறித்தேன்!
  சங்கர ஜெயந்தி மரபுப் படி, இவ்வாண்டு மே பதினெட்டு தான்//

  இதை பிறர் தெரிந்துகொள்ளத்தான் கேள்விகள் கேட்டேன் :)

  ஆதிசங்கரின் பூத உடல் விடுத்த நாள் பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா?

  ReplyDelete
 4. //இதை பிறர் தெரிந்துகொள்ளத்தான் கேள்விகள் கேட்டேன் :)//
  :)
  சுவாமி நக்கீர் எப்போ ஆனீர்கள்? :)
  கேள்வியே வேள்வி! நன்றி சுவாமி!

  //ஆதிசங்கரின் பூத உடல் விடுத்த நாள் பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா?//

  வைகாச சுக்ல பட்ச ஏகாதசியைத் தான் சங்கர நிர்யணமாக (சமாதி) கொள்கிறார்கள் மரபுவழி மடங்களில்!
  பொதுவாக பிறப்புக்கு நட்சத்திரமும், மறைவுக்கு திதியையும் கொள்வது வழக்கம் அல்லவா?

  ReplyDelete
 5. //இந்த மனீஷா பஞ்சகம், இணையத்தில் அவ்வளவாக இல்லை! kamakoti.org (அ) sringeri.net போன்ற சங்கரத் தளங்களிலேயே அதிகம் காணோம்!//
  நல்ல வேளையாக நீங்களும் இணையத்தில் காணப்படும் மற்ற விளக்கங்கள் போல அந்த மனிதனை சிவன் என்றும், அவன் மனைவியை பார்வதி என்றும் அந்த நாய்கள் நான்கும் வேதங்கள் என்று சொல்லி, மழுப்ப முயற்சிக்கவில்லை. நன்றி. இடித்துரைத்து புத்தி புகட்டியது உண்மையில் தாழ்த்தப்பட்டவர் என்றால் அது அவர்களுக்கு கேவலம் இல்லையா. அவரை கடவுள் என்று சொல்லிவிட்டால் எப்போதும் போல வர்ணபேதம் பேணுவதில் ஒன்றும் பிழை இல்லை அல்லவா? அப்படி அவர்கள் மழுப்பினாலும் "சிலருக்கு ஆண்டவனே வந்து புத்தி சொன்னாலும் திருந்தமாட்டார்கள்" என்று நாம் பொருள்கொள்ள வேண்டியதுதான்.

  ReplyDelete
 6. நல்ல வேளையாக நீங்களும் இணையத்தில் காணப்படும் மற்ற விளக்கங்கள் போல அந்த மனிதனை சிவன் என்றும், அவன் மனைவியை பார்வதி என்றும் அந்த நாய்கள் நான்கும் வேதங்கள் என்று சொல்லி, மழுப்ப முயற்சிக்கவில்லை. நன்றி:::))))

  சரியாக சொன்னீர்கள்!
  நம்மாழ்வார் பெருமாள் திருவடி அம்சம்,
  திருமங்கை ஆழ்வார் பெருமாள் வாளின் அம்சம்,
  அனுமன் சிவன் அம்சம்
  இராமானுஜர் ஆதிசேசன் அம்சம்
  பங்காரு அடிகளார் பராசக்தியின் அம்சம்
  பிரகலாதன் நாராயணன் அம்சம்
  இப்படியே சொல்லித்து இருந்தா மக்களுக்கு அவதார் புருசர்கள்தான் இப்படி வாழ முடியும்.
  நம்மால் முடியாது என்ற எண்ணம் தோன்றுகிறது.

  இப்படி எதற்கெடுத்தாலும் இவர் இதிலிருந்து தோன்றியவர் என்று சொல்வதை நிறுத்த வேண்டும்.

  ராமானுஜரும் ஒரு மனிதரே . பிற்காலத்தில் மகான் ஆனார்.
  அனுமனும் ஒரு ஜீவனே. பிற்காலத்தில் சிறந்த ராம பக்தரானார்.
  பங்காரு அடிகளார் ஒரு மனிதரே... பிற்காலத்தில் சிறந்த அம்மன் பக்தரானார்.
  பிரகாலதனும் மானிடரே. பிற்காலத்தில் சிறந்த நாராயண பகதரானார்.
  இப்படி சொல்ல ஆரம்பிக்கணும்
  Frankly telling my opinion.. that’s its. Nothing else.

  (உண்மைய சொல்லனும்னா அனைவரும் எம்பெருமானின் அம்சமே.
  அந்த நிலையை அடைபவர்கள் ஒரு சிலரே!:)

  ReplyDelete
 7. //நல்ல வேளையாக நீங்களும் இணையத்தில் காணப்படும் மற்ற விளக்கங்கள் போல அந்த மனிதனை சிவன் என்றும், அவன் மனைவியை பார்வதி என்றும் அந்த நாய்கள் நான்கும் வேதங்கள் என்று சொல்லி, மழுப்ப முயற்சிக்கவில்லை. நன்றி.//

  :)
  நீங்க நன்றி-ன்னு சொல்றீங்க குலவுசனப்பிரியன்! ஆனா இன்னொரு சாரார் என்கிட்ட கோச்சிக்கவும் போறாங்க! இது வழக்கம் ஆயிருச்சி! ஆனா நான் தான் இன்னும் திருந்தாம இருக்கேன்! :)

  என்னைப் பொறுத்தவரை வந்தது So called சண்டாளனே ஆயினும்...அவனும் சிவனே!சீவனுள்ளவன் எவனும் சிவனே அல்லவா! அவன் கேட்டது சீவனுள்ள கேள்வி! இதை யாராலும் மறுக்க முடியாது!

  சரி, சிவனார் வந்ததாகவே வைத்துக் கொள்வோம்! ஆனா எதுக்கு சண்டாள வேடம் தரித்து வரணும்? பண்டித வேடம் தரிச்சி வந்தும் அத்வைத வாதம் பண்ணி இருக்கலாமே?
  இங்கே முக்கியமாப் பார்க்க வேண்டியது என்னன்னா, ஆதி சங்கரரின் மனசாட்சியைத் தொடுவது தான்!

  ஜீவாத்மா பரமாத்மாவில் கரையும், அப்பும் அப்பும் சேர்ந்தா அப்பு தான் மிஞ்சும், நேதி நேதி-ன்னு, ஆயிரம் தத்துவம் பேசினாலும், அதைச் செயல் அளவில் காட்டலீன்னா, சங்கரரே அதை முழுமையாக நம்பவில்லை-ன்னு ஆயிரும்! இவ்வளவு பெரிய மகானான ஆதி சங்கரருக்கு இப்படி ஒரு நிலை வர இறையருள் விட்டுவிடுமா? அதான் உண்மை உறுத்து வந்து ஊட்டியது!

  //இடித்துரைத்து புத்தி புகட்டியது உண்மையில் தாழ்த்தப்பட்டவர் என்றால் அது அவர்களுக்கு கேவலம் இல்லையா. அவரை கடவுள் என்று சொல்லிவிட்டால் எப்போதும் போல வர்ணபேதம் பேணுவதில் ஒன்றும் பிழை இல்லை அல்லவா?//

  உம்...
  நம்மாழ்வார் தாழ்த்தப்பட்டவர் தான்! நான்காம் வருணம்! ஆனா அவர் தான் வைணவ குல முதல்வர்! மற்ற ஆழ்வார்கள், ஆசார்யர்கள் எல்லாம் அப்புறம் தான்! இதைக் கேவலமாகவோ இல்லை உறுத்தலாகவோ யாரும் பார்ப்பதில்லை! இராமானுசர் முதலான ஆசார்யர்களும், நம்மாழ்வாரைச் சுற்றிப் புனிதக் கதைகள் ஏதும் கட்டாமலேயே, அவரை அப்படியே ஏற்றுக் கொண்டனர்! அவர் ஆக்கித் தந்த தமிழ் வேதம் உட்பட! அது இன்றளவும் தொடர்கிறதே!

  ReplyDelete
 8. //Anonymous said...
  சரியாக சொன்னீர்கள்!
  நம்மாழ்வார் பெருமாள் திருவடி அம்சம்,
  திருமங்கை ஆழ்வார் பெருமாள் வாளின் அம்சம்,
  அனுமன் சிவன் அம்சம்...//

  ஹிஹி!
  அம்சம்-ன்னு சொல்லுறது எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் இல்லீங்க! அப்பறம் தான்!
  நம்மாழ்வார் தம்மைத் தாமே அம்சம்-ன்னு எல்லாம் சொல்லிக்கறது இல்லை!

  //இப்படியே சொல்லித்து இருந்தா மக்களுக்கு அவதார் புருசர்கள்தான் இப்படி வாழ முடியும்.
  நம்மால் முடியாது என்ற எண்ணம் தோன்றுகிறது//

  ஓவராக புனிதப் பூச்சினால் ஒருகால் அப்படித் தோனலாம்! ஆனால் நீங்கள் நினைக்கிற அம்சம் அது இல்லை!
  நாம எல்லாரும் கூட இறைவனின் அம்சம் தான்! ஆனானப்பட்ட ஆண்டவனே ஆனாலும், நம்மோடு உறவேல் ஒழிக்க ஒழியாது-ன்னும் தோழி கோதை துணிவுடன் சொல்கிறாளே!

  நம்மாழ்வாரைத் திருவடி அம்சம்-ன்னு சொல்லுறது அவருக்கு ஏதோ அவதார புருஷர் அந்தஸ்தைக் கொடுக்க அல்ல! நான்காம் வருணத்தவர் காலில் தோன்றியவர்கள் என்று சொல்லப்பட்ட காலத்தில், அதே திருவடிநிலைகளை எல்லார் தலையிலும் சடாரியாகச் சார்த்திக் கொள்ள வேண்டி வந்ததே!

  அம்சம்-ன்னு ஏன் குறிப்பிடுகிறார்கள் என்பதற்கு காரணம் இருக்கு! ஒவ்வொரு அடியவருக்கும் ஒரு Personal Trait இருக்கும்! அதுவே விஞ்சி நிற்கும்! அதான் அதை இறைவனோடு தொடர்பு படுத்தி வைப்பது வழக்கம்!
  * திருமங்கை ரொம்ப Aggresive & Fast - So, வில்லின் அம்சம்!
  * இராமானுசர் எவ்வளவு தத்துவம் எழுதினாலும், கை போட்டுச் செய்யும் தொண்டில் தான் குறியாய் இருப்பார் - So, ஆதி சேடன்!

  நம்ம வீட்டில், தம்பியைப் பார்த்து, இவன் தாத்தாவை உரிச்சி வச்சிருக்கான், அவரைப் போலவே ஷோக்குப் பேர்வழி...ரெண்டு கல்யாணம் ஆகாமப் பார்த்துக்கடா-ன்னு சொல்றாங்க-ல்ல? :)
  அதே போலத் தான் இந்த அம்சம் என்பதும்! அவதார புருஷ Status கொடுக்க அல்ல! தொடர்பு படுத்தி வைப்பது மட்டுமே!

  அவதார புருஷ Status-ன்னா இராமனின் அம்சம், முருகனின் அம்சம், பிரகஸ்பதி அம்சம், நாரதர் அம்சம்-ன்னு சொல்லி இருக்கலாமே! எதுக்கு ஆட்களை ஆட்களாச் சொல்லாம, சங்கு, சக்கரம், வில்-ன்னு சொல்லுறாங்க? மரியாதையாக உயர்திணையாகவே காட்டி இருக்கலாமே! Hope u got it! :)

  //இப்படி எதற்கெடுத்தாலும் இவர் இதிலிருந்து தோன்றியவர் என்று சொல்வதை நிறுத்த வேண்டும்.
  ராமானுஜரும் ஒரு மனிதரே . பிற்காலத்தில் மகான் ஆனார்//
  நீங்க சொல்றது ஒரு வகையில் சரி தான்! ரொம்ப பூசக் கூடாது!
  மத்தபடி மகான் ஆனார் என்பது கூட ஒரு பூச்சு தான்! யாருமே மகான் அல்ல! :)
  இராமானுசர் கிட்ட போயி, நீங்க மகானா?-ன்னு கேட்டா, இல்லவே இல்ல-ன்னு தான் சொல்லுவாரு! :)

  //Frankly telling my opinion.. that’s its. Nothing else.
  (உண்மைய சொல்லனும்னா அனைவரும் எம்பெருமானின் அம்சமே.அந்த நிலையை அடைபவர்கள் ஒரு சிலரே!:)//
  Good! நீங்களே சொல்லிட்டீங்க! :)

  ReplyDelete
 9. //சங்கரன் கல்விக் கடல்! ஞானக் கடல்!
  //

  சத்யம் சத்யம் புன: சத்யம்!
  உத்ருத்ய புஜம் உச்யதே!

  :-)

  ReplyDelete
 10. ////நல்ல வேளையாக நீங்களும் இணையத்தில் காணப்படும் மற்ற விளக்கங்கள் போல அந்த மனிதனை சிவன் என்றும், அவன் மனைவியை பார்வதி என்றும் அந்த நாய்கள் நான்கும் வேதங்கள் என்று சொல்லி, மழுப்ப முயற்சிக்கவில்லை. நன்றி.////

  நான் சொல்ல வேண்டியதை அவர் சொல்லிட்டார், எனக்கு பின்னூட்ட நேரம் மிச்சம்.

  ReplyDelete
 11. //உம்...
  நம்மாழ்வார் தாழ்த்தப்பட்டவர் தான்! நான்காம் வருணம்! ஆனா அவர் தான் வைணவ குல முதல்வர்! மற்ற ஆழ்வார்கள், ஆசார்யர்கள் எல்லாம் அப்புறம் தான்! இதைக் கேவலமாகவோ இல்லை உறுத்தலாகவோ யாரும் பார்ப்பதில்லை!//

  :) அதெல்லாம் கேவலமாக பார்க்கமாட்டாங்க, ஆனால் அந்த தாழ்த்தப்பட்ட நம்மாழ்வாரை பார்க்கவரும் தாழ்த்தப்பட்டவர்களைத் தான் உள்ளே விடமாட்டாங்க.

  ReplyDelete
 12. @குமரன்
  //சங்கரன் கல்விக் கடல்! ஞானக் கடல்!//
  சத்யம் சத்யம் புன: சத்யம்!
  உத்ருத்ய புஜம் உச்யதே!
  :-)//

  எதுக்கு சிரிப்பான்?
  எதுக்கு திட்டறீக?
  உத்ருத்...தச்புச் இதெல்லாம் என்ன குமரன்? புரியிறா மாதிரி திட்டுங்க! :)

  ReplyDelete
 13. //கோவி.கண்ணன் said...
  நான் சொல்ல வேண்டியதை அவர் சொல்லிட்டார், எனக்கு பின்னூட்ட நேரம் மிச்சம்//

  இல்லையே-ண்ணா! அடுத்த பின்னூட்டம் போட்டிருக்கீயளே! :)

  ReplyDelete
 14. //கோவி.கண்ணன் said...
  :) அதெல்லாம் கேவலமாக பார்க்கமாட்டாங்க, ஆனால் அந்த தாழ்த்தப்பட்ட நம்மாழ்வாரை பார்க்கவரும் தாழ்த்தப்பட்டவர்களைத் தான் உள்ளே விடமாட்டாங்க//

  தெரிஞ்சே இப்படிச் சொன்னா எப்படி?

  * தாழ்த்தப்பட்ட நம்மாழ்வாரைப் பார்க்க வரும் தாழ்த்தப்பட்டவரை - ஆலயப் பிரவேசம் செய்து வைக்கறாங்க!
  * தாழ்த்தப்பட்ட நம்மாழ்வார் இருக்கும் அதே உயரிய இடத்தில், துலுக்கா நாச்சியாரையும் வைக்கறாங்க!
  * தாழ்த்தப்பட்ட நம்மாழ்வார் சன்னிதியில், தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகர்கள் ஆகி, ஆறேழு தலைமுறையா வாராங்க!

  வீடியோ கீழே இருக்கே! ஒரு எட்டு எட்டி பாருங்களேன்! :)

  ReplyDelete
 15. @குமரன்
  //உத்ருத்ய புஜம் உச்யதே!//

  இதுக்கு பொருள் வேணும்!

  ReplyDelete
 16. தமிழாக்கம் அருமை . நன்றி
  தமிழில் மட்டுமே படித்தேன்
  சங்கரர் விலகு விலகு என்று சொல்வது கும்மாகுத்து!
  சண்டாளன் சிறியதின் வயிற்றில் நீயும் நானும்! சொல்வது உள்குத்து! நச்ன்னு இருக்கு

  ReplyDelete
 17. //தமிழாக்கம் அருமை . நன்றி
  தமிழில் மட்டுமே படித்தேன்//
  ஏன் ராஜேஷ், வடமொழி மூலம் சும்மானாச்சும் வாசிக்கலையா?

  //சங்கரர் விலகு விலகு என்று சொல்வது கும்மாகுத்து!//
  ஆகா! சங்கரரே கும்மாங்குத்து languageக்கு வந்துட்டாரா? :)
  இந்தச் சங்கரன் அடியேன் தான் இப்படி லோக்கலா எழுதறேன்-ன்னு முன்பு கம்ப்ளையிண்ட்டு! :)

  //சிறியதின் வயிற்றில் நீயும் நானும்! சொல்வது உள்குத்து! நச்ன்னு இருக்கு//
  :)
  உள்குத்து-ன்னு சொல்ல மாட்டேன்!
  உண்மைக் குத்து-ன்னு வேணும்ன்னா சொல்லலாம்!

  ReplyDelete
 18. இந்தச் சங்கரன் அடியேன் தான் இப்படி லோக்கலா எழுதறேன்-ன்னு முன்பு கம்ப்ளையிண்ட்டு! :)

  ஆழி மழை கண்ணா! என்ற ஆண்டாள் திருப்பாவையில்
  பற்பநாபன் கையில் ஆழி மோல மின்னி ...
  என்ற வரியில் பற்பநாபன் என்றால் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்ரவனா என்று சொல்வீங்க!
  இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது .
  இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோகல் மொழியும் , எளிமையுமே காரணம்..
  I dont know why this felows complaint!

  ReplyDelete
 19. "கோயில்களில் ஏன் சமஸ்கிரத மந்திரங்கள் சொல்ல வேண்டும்? தமிழில் சொன்னால் என்ன?" என்று முன்பு நீங்கள் கேட்ட கேள்விக்கு

  மஹா சுவாமிகள் மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளார்.

  இதைப் படித்ததும் உங்களுக்கும் அறியத்தரவேண்டியது எனது கடமையாகும் என்பதால் இங்கு அறியத்தருகிறேன்.

  http://www.kamakoti.org/tamil/Kural51.htm

  அவர் கூறியுள்ள விளக்கத்தை இங்கு எழுதினால் அதிகமாகி விடும் என்பதால் லிங்கைக் கொடுத்துள்ளேன்.

  நன்றி.

  ReplyDelete
 20. காஞ்சி பரமாச்சாரியார் சுட்டி தந்தமைக்கு நன்றி அனானி அவர்களே!

  //Anonymous said...
  "கோயில்களில் ஏன் சமஸ்கிரத மந்திரங்கள் சொல்ல வேண்டும்? தமிழில் சொன்னால் என்ன?" என்று முன்பு நீங்கள் கேட்ட கேள்விக்கு//

  :)
  முன்பு கேட்ட கேள்வியைச் சரியாக உள் வாங்கிக் கொள்ளுங்களேன்!
  ஆலயங்களில் வடமொழி அர்ச்சனை ஏன் சொல்லணும்-ன்னு கேக்கலை!
  தமிழில் ஏன் சொல்லக் கூடாது? என்பது மட்டுமே என் கேள்வி!

  அப்படி தமிழ் அர்ச்சனை கூடாதென்றால், அதற்கான ஆகம விதிகள் என்னென்ன என்பதை மட்டுமே தரவாகத் தருமாறு கேட்டிருந்தேன்!

  நீங்கள் தந்துள்ள சுட்டியில் காஞ்சிப் பெரியவர் வேதங்களைப் போற்றிப் பாதுகாப்பது பற்றித் தான் சொல்கிறாரே தவிர, எந்த இடத்திலும் தமிழ் அர்ச்சனை கூடாது என்று சொல்லவே இல்லையே!

  1. அர்ச்சனையில் சொல்லப்படும் மந்திரங்கள் வேதம் கிடையாது! போற்றிகள் என்னும் நாமாவளிகள் மட்டுமே! அதனால் நீங்க தந்த சுட்டி, சரியான தரவு ஆகாது!

  2. காஞ்சிப் பெரியவரே, வேத மந்திரங்கள் வடமொழியில் இல்லை! சந்தஸ் என்பதில் தான் இருக்கு என்கிறார்! இதோ
  //வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?அதுவே தப்பு. வேத பாஷைக்கு 'ஸம்ஸ்க்ருதம்'என்று பேர் இல்லை. அதற்குப் பேர் 'சந்தஸ்' என்பதுதான்.//

  ஆக,
  "வடமொழி அர்ச்சனை என்பதே முடிந்த முடிபு! தமிழ் அர்ச்சனை தேவையில்லை (அ) ஆகாது" என்று எதை ஆதாரமாக வைத்துச் சொல்லப்படுகிறது என்பதை நீங்க தான் தெளிவுபடுத்தணும்!

  அர்ச்சனை/சங்கல்பம் என்பது அடியார்களுக்குத் தான்! ஆண்டவனுக்கு அல்ல!
  எனவே அடியார்கள், தாங்கள் என்ன சங்கல்பித்துக் கொள்கிறோம் என்பதை அவர்கள் அறியும் வண்ணம், அறியும் மொழியில் இருப்பது, சாலப் பொருத்தமாகவே இருக்கும்!

  ReplyDelete
 21. pls submit in tamilish. omg i missed it.

  shubha

  ReplyDelete
 22. என் குருவை விட விளக்கமாக சொல்வது முடியாத காரியம்.
  நீங்கள் இந்த லிங்கில் "பரா பரா" வாக நீந்தி முத்தை எடுத்து
  உங்கள் பந்தலை அலங்கரியுங்கள்.

  உங்களுக்குரிய விடை மிகவும் ஆழமாக் அதற்குள் இருக்கிறது.

  நன்றி.

  ReplyDelete
 23. //Anonymous said...
  என் குருவை விட விளக்கமாக சொல்வது முடியாத காரியம்//

  :)
  அவர் "உங்கள்" குரு மட்டுமல்லர்! "ஜகத்" குருவும் கூட!

  //நீங்கள் இந்த லிங்கில் "பரா பரா" வாக நீந்தி முத்தை எடுத்து உங்கள் பந்தலை அலங்கரியுங்கள்//

  இந்தச் சுட்டியைப் பல முறை வாசித்து உள்வாங்கிக் கொண்டேன்! நன்றி! காஞ்சிப் பெரியவர் சொன்ன "ஒரு சில கருத்துக்களுக்கு" மாறான முறையான ஆதாரங்களும் உண்டு!

  எனினும் வேதம் போற்றுதற்குரியது என்பதில் எனக்கு முழு உடன்பாடே!
  ஆனால் ஆலயங்களில் தமிழ் அர்ச்சனைக்கும், வேதத்துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை! தமிழ் அர்ச்சனை கூடாது என்பதற்கான எந்த முகாந்திரமும் காஞ்சிப் பெரியவர் அந்தச் சுட்டியில் சொல்லவில்லை!

  //உங்களுக்குரிய விடை மிகவும் ஆழமாக் அதற்குள் இருக்கிறது//

  :)
  அர்ச்சனை சங்கல்பத்துக்கு ஆழம் தேவையில்லை! அர்ச்சனை என்பது சாதாரண மக்களின் வேண்டுகோள்! ஆழம் எல்லாம் ஞான வெளியில் பார்த்துக் கொள்வார்கள்! :)

  Lemme Summarize...
  தமிழ் அர்ச்சனை என்பது கூடாது/ஆகாது என்பதற்கு வேதங்களிலோ, ஆகமங்களிலோ எந்தவொரு முகாந்திரமும் இல்லை! Period!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP