துள்ளி வரும் நரசிம்மன்
மஹீசார க்ஷேத்திரத்தில், சக்கரத்தாழ்வாரின் அம்சமாகப் பிறந்து, பல மதங்களைத் தழுவி (இதை, அவரே பாடலாக இயற்றியுள்ளார்), கடைசியில், வைணத்திற்கு வந்தவர் திருமழிசையாழ்வார். இவருக்கு, பல பெருமைகள் இருந்தாலும், 3 மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை:
'பிரான்' என்பது, எம்பெருமானுக்கே உரித்தான பெயர் (பிறருக்கு உதவுபவன் - இதைப் பற்றி, நரசிம்ம சரணாகதியில் முன்னமேயே எழுதியுள்ளேன்). ஆனால், 'பரம்பொருள் யார்?' என்பதை உலகுக்கு உணர்த்தி, அவர்களுக்கு நல்வழி காட்டியதால், திருமழிசை ஆழ்வாருக்கு மட்டும், திருமழிசைப் பிரான் என்ற பெயர் உண்டு!
திருமழிசைப்பிரான், கிடந்த நிலையில் இருக்கும் திவ்விய தேச எம்பெருமானைப் பற்றியே அதிகம் பாடியுள்ளார். இவர் எழச் சொன்னதும் எழுந்து, படுக்கச் சொன்னதும் மீண்டும் எம்பெருமான் படுத்த பெருமை, இந்த ஆழ்வாருக்கு மட்டுமே உண்டு! இவருக்கு உகந்து, உற்றவனாக, பேசிக்கொண்டு இருந்த திருக்குடந்தை எம்பெருமானுக்கு மட்டும், 'ஆராவமுது ஆழ்வான்' என்ற பெயர் உண்டு!
திருமழிசைப்பிரானின் வேண்டுதலுக்கு இணங்க, திருமால், ஆழ்வார் உடம்பிலேயே, தேவியர் சகிதமாக, தான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் நிலையை, பெரும்புலியூர் அந்தணர்களுக்குக் காட்டியது பிரசித்தம்.
தாம் எழுதிய ஓலைச் சுவடிகளை இவர் திருக்குடந்தை திருக்குளத்தில் சமர்ப்பிக்க, திருச்சந்த விருத்தம் (முதலாயிரம்), நான்முகன் திருவந்தாதி (இயற்பா) எனும் இரண்டே பிரபந்தங்கள் மிதந்து மேலே வந்தன.
(சில வரலாற்று நூல்கள், ஆழ்வார் ஓலைச் சுவடிகளை திருக்குடந்தை ஆற்றில் விட, இந்த இரண்டு சுவடிகள் பட்டும் நீரில் அடித்துச் செல்லப் படாமல், நீரை எதிர்த்து இவர் திருவடிகளை அடைந்ததாகவும் கூறும்)
***
திருமழிசையாழ்வார் காலம், தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு போன்ற நூல்கள் இயற்றப் பட்ட சங்க காலம் (திருக்குறள் முதலான 18 கீழ்க்கணக்கு நூல்களுக்கு முந்தைய காலம் இது) என்பதை தமிழ் அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
தமிழ்ச் சங்க நூல்களுக்கும், திருச்சந்த விருத்தத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன (ஆழ்வார்கள் காலங்களை நிர்ணயிக்க, சங்க நூல்களும் உதவியாக உள்ளன). மேலும், புராணங்களைக் கொண்டு நாயன்மார்கள் காலத்தில் திருமாலுக்குச் சொல்லப்படும் தாழ்வுகள் எதுவுமே சங்க நூல்களில் காணப் படவில்லை (கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரின் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியான முகவுரை, ப-4, 1995).
வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் திருமழிசையாழ்வார் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு என்கின்றனர்.
***
'எல்லாப் பொருள்களும் எப்பொருளில் இருந்து தோன்றுகின்றதோ, தோன்றிய பிறகு, எந்தப் பொருளில் மீண்டும் மறைகிறதோ, அதுவே பரம்பொருள்' என்று உபநிடதம் கூறுகிறது (எல்லாப் பொருள்களும் ஒரு பொருளில் தோன்றி, வேறு ஒரு பொருளில் மறைந்தால், அந்த இரண்டு பொருள்களுமே பரம்பொருள்கள் அல்ல).
'பரம புருஷனே பெரியவன் என்று வாதம் செய்வாயாக' என்று விதிக்கின்றது வேதம் (முண்டக உபநிடதம் 1-1-4).
பரம்பொருள் எது என்பதை ஆதாரங்களுடன் நிர்ணயித்துக் காட்டியவர்கள் ஆழ்வார்கள். பெரியாழ்வார், பாண்டிய மன்னன் வல்லப தேவன் அவையில் இதைச் செய்து காட்டினாலும், திருமழிசை ஆழ்வார் மட்டுமே 'பரம்பொருள் எது' என்று நிர்ணயம் செய்வதையே தமது இரு பிரபந்தங்களிலும் பொழுது போக்காகக் செய்துள்ளார்.
திருச்சந்த விருத்தத்தில், குறிப்பாக பரம்பொருள் எது, அதன் தன்மைகள் யாவன, எம்பெருமான் எப்படிப் பரம்பொருள் ஆகிறான் என்பதை நமக்கு எளிமையாக விளக்குகிறார்:
'கடல் நீரில் இருந்து, அலைகள் தோன்றுகின்றன. மீண்டும் அவ்வலைகள், கடல் நீரிலேயே அடங்குகின்றன. அது போல, திருமாலிடத்தில் இருந்து எல்லாத் தேவர்களும், மனிதர்களும், பிராணிகளும், மற்ற பொருட்களும் தோன்றி, ஊழிக்காலத்தில் மீண்டும் அவனுள்ளே அடங்குகின்றன. எனவே திருமாலே ஆதி தேவன்! அவனே பரம்பொருள்!' என்று ஒரு பாசுரத்தில் கூறுகின்றார் (தன்னுளே ... திருச்சந்த விருத்தம்-10).
திருச்சந்த விருத்தம் - திரு + சந்த(ம்) + விருத்தம். விருத்தப் பா எனும் பா வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. துள்ளல் இசையுடன் (சந்தத்துடன்) ஆழ்வாரால் இயற்றப் பட்டது இந்தப் பிரபந்தம் (பதிவுத் தலைப்பின் காரணம் இது தாங்க!). இதில் விசிஷ்டாத்வைதக் கருத்துக்கள் நிறைய இடம் பெற்றுள்ளன.
***
வால் நிறத்தொ(தோ)ர் சீயமாய்* வளைந்த வாள் எயிற்றவன்*
ஊனிறத்து உகிர்த்தலம்* அழுத்தினாய்! உலாய சீர்*
நால் நிறத்த வேத நாவர்* நல்ல யோகினால் வணங்கு*
பால் நிறக் கடல் கிடந்த* பற்பநாபன் அல்லையே?
திருச்சந்த விருத்தம் - 23
(வால் - வெண்மை; எயிற்றவன் = எயிற்று + அவன் - பற்களை உடையவன்; ஊனிறத்து - உடம்பின் மர்மத்தில், இதயத்தில்; உலாய சீர் - எங்கும் புகழ் பெற்ற; நிறம் - உடம்பு; நல்ல - சிறந்த; யோகு - உபாயம்)
வெளுத்த நிறத்தை உடைய ஓர் சிங்கமாய் அவதரித்து, வளைந்து, ஒளி உடைய பற்கள் கொண்ட இரணியன் உடலின் மர்மத்திலே நகங்களை நீ அழுத்தியவனே! எங்கும் புகழ் பெற்ற நான்கு வகை நிறங்களை உடைய வேதத்தை அறிந்தவர்கள், நல்ல உபாயங்களினால் வணங்குகின்ற, பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் பத்மநாபன், நீ அல்லவோ?
சிங்கம் வெண்மை நிறமா?
***
எம்பெருமான் நிறம் கருமை! இரணியனை அழிப்பதற்காக, அவன் பெற்ற வரங்களின் தன்மைக்கு ஏற்ப, தன் இயற்கை நிறத்தை அழித்துக் கொண்டு, வெண்மை நிறமாக்க முயற்சித்தானாம்! மேலும், எம்பெருமானின் ஜோதியினால், நரசிம்மம், வெளிர் நிறமாகவே எல்லோருக்கும் தெரிந்ததாம்! எனவே, திருமழிசையார், வெளிர் (வால்) நிற (நிறத்த) சிங்கம் (சீயம்) என்கின்றார்!
(வெளுத்த நிறத்தை உடைய பலராமன், 'வாலியோன்' என்றும் அழைக்கப் படுகின்றான்)
'வால் நிறம்' என்பதற்கு, 'ஒப்பற்ற தன்மை' என்ற பொருளும் கொள்ளலாம்.
பிறப்பில்லாத எம்பெருமான் எடுத்த பல அவதாரங்களிலே, இரண்டு யோனி கலந்து பிறந்த அவதாரம், நரசிம்மனைத் தவிர வேறு எதுவும் இல்லை!
ப்ரஹ்ம புராணம், 'உடம்பை மனிதனைப் போலச் செய்து கொண்டும், தலையை சிங்கத்தைப் போலச் செய்து கொண்டும் பிறந்தான் நரசிங்கன்' என்று கூறுகிறது (103-61).
எனவே, இந்த அவதாரத்தையே அதன் தன்மையிலும், அழகிலும், ஜோதியிலும் ஒப்பற்றது என்று ஆழ்வார் கூறுகின்றாரோ?
(நான்முகன் திருவந்தாதியிலும், திருமழிசையார் 'அரியே அழகு' எனும் பொருளில் பாடியுள்ளார். இயற்பாவில் நரசிம்மனைக் காணும்போது இதனை நாம் அனுபவிக்கலாம்)
சிங்கத்தின் நிறம் 'வால்' என்றது சரி, ஆனால் வேதத்தின் நிறம் நான்கு என்கிறாரே ஆழ்வார்?
***
'நிறம்' எனும் சொல்லுக்கு, மேனி (உடம்பு) என்ற பொருளும் உண்டு. மனிதனுடைய ஆத்மாவுக்கு உடம்பைப் போல, வேதத்திற்கு உடம்பு, அதன் ஸ்வரங்கள். வேதத்திற்கு, நான்கு வகையான ஸ்வரங்கள் உண்டு - உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம். இதனையே ஆழ்வார் இங்கு குறிப்பிடுகின்றார்.
'நால் நிறத்த வேத நாவர்' என்பதற்கு, நான்கு ஸ்வரங்களால் ஆன வேதங்களை, நன்கு கற்றவர்கள் என்ற பொருள்.
உலாய சீர் - எங்கும் புகழ் பெற்ற. 'நால் நிறத்த வேத'திற்கு அடைமொழி. ஆனால் சொற்களைச் சற்று மாற்றி அமைத்து - 'நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு பால் நிறக் கடல் கிடந்த, உலாய சீர் பற்பநாபன்' - என்று பத்மநாபனுக்கு அடைமொழியாகவும் பொருள் கொள்ளலாம்.
***
கங்கை நீ பயந்த பாத* பங்கயத்து எம் அண்ணலே!*
அங்கை ஆழி சங்கு தண்டு* வில்லும் வாளும் ஏந்தினாய்!*
சிங்கமாய தேவ தேவ!* தேனுலாவு மென் மலர்*
மங்கை மன்னி வாழு மார்ப!* ஆழி மேனி மாயனே!
திருச்சந்த விருத்தம் - 24
(பயந்த - உண்டாக்கிய; அங்கை = அம் + கை - அழகிய கை; தண்டு - கதை; மங்கை - திருமகள்)
கங்கை நீரை உண்டாக்கிய தாமரை போன்ற திருவடிகளை உடைய எங்கள் தலைவனே! உன் அழகிய திருக்கைகளில், சக்கரம், சங்கு, கதை, வில், வாள் ஆகியவற்றை ஏந்தியிருக்கின்றாய்! தேவர்களின் தலைவனான நரசிம்மனே! தேன் நிறைந்த மென்மையான தாமரை மலரில் மலர்ந்த திருமகள், அகலாமல் எப்போதும் இருக்கும் மார்பு உடையவனே! கடல் போன்ற பெரிய திருமேனியை உடைய மாயன் நீ!
***
முந்தைய பாசுரத்தில், பாற்கடலில் துயின்ற பத்மநாபனே, நரசிங்க அவதாரம் எடுத்ததாகக் கூறியவர், அவன் பெருமைகளில் ஈடுபடுகிறார் இப்பாசுரத்தில்.
பாசுரத்தில், ஆழ்வார் திருமகளையும், பஞ்சாயுதங்களையும் (சுதர்ஸனன், பாஞ்சசன்னியம், கௌமேதகம், சார்ங்கம், நந்தகம்) மட்டுமே குறிப்பிட்டுள்ளதன் காரணம்?
இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை! அனைவரும், அவன் உடம்பில் வசிப்பவர்கள் (மார்பு, கைகள்)! எனவே, இவர்களைத் தவிர வேறு யாராலும் நரசிங்கனின் பெருமைகளை முழுவதும் அறிய முடியாது என்று நமக்குச் சொல்லவே!
(திருமழிசை ஆழ்வார் சக்கரத்தாழ்வானின் அம்சம் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது; எனவே தான் இவரால் அவனை முழுவதும் அறிந்து, பாசுரங்களால் பரதத்துவ நிர்ணயம் செய்ய முடிந்தது)
'அண்ணலே!' (என் தலைவனே) என்று எம்பெருமானைக் குறிப்பிட்டதன் காரணம்?
'ஆழ்வார், எம்பெருமானை அடைய ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்தும், ஆழ்வார் பிறந்தவுடனேயே வந்து தரிசனம் கொடுத்து அருளும் கொடுத்துச் சென்றதனால் வந்த நன்றி உணர்ச்சியே' என்று பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்.
***
வரத்தினில் சிரத்தை மிக்க* வாள் எயிற்று மற்றவன்*
உரத்தினில் கரத்தை வைத்து* உகிர்த்தலத்தை ஊன்றினாய்!*
இரத்தி நீ! இதன்ன பொய்?* இரந்த மண் வயிற்றுளே கரத்தி?*
உன் கருத்தை* யாவர் காண வல்லர்? கண்ணனே!
திருச்சந்த விருத்தம் - 25
(சிரத்தை - நம்பிக்கை; வாள் - ஒளி, கத்தி; மற்றவன் - இரணியன்; இரத்தி - யாசித்தாய்; கருத்து - எண்ணம், செயல்)
கண்ணனே! பிரம்மாவிடம் பெற்ற வரத்தில் அதிக நம்பிக்கை வைத்தவனாய் இருந்த ஒளி வீசும் பற்களைக் கொண்ட இரணியனுடைய மார்பிலே தன் கைகளை வைத்து, நகங்களை ஊன்றினாய்! பின் வாமனனிடம், மூவுலகங்களையும் யாசித்துப் பெற்றாய்! என்ன பொய் இது? மாவலியிடம் பெற்ற உலகங்களை, பிரளயத்தின் போது, வயிற்றில் வைத்துக் காத்தாய்! உன் எண்ணங்களை யார் அறிய முடியும்?
அது என்ன ’வரத்தினில் சிரத்தை’?
***
சாகா வரம் பெறாவிட்டாலும், பெற்ற வரங்களின் மூலமாகவே, அந்தத் தன்மை கிடைத்து விட்டது என்று நினைக்கிறான் இரணியன்! வரங்களைப் பெற்றதனாலேயே, தன்னை ஈஸ்வரன் என்று நினைத்துக் கொள்கிறான்!
'அறிவு கெட்டவனே! இவ்வுலகிற்கு ஈஸ்வரனாகிய என்னிடம் அடிக்கடி சொல்கிறாயே, அந்த விஷ்ணு யாரடா?' என்று தன் மகனைக் கேட்கின்றான் அவன் (விஷ்ணு புராணம் 1-17-21).
பிரம்மனிடம் தான் பெற்ற வரங்களையும் மீறி, உடல் வலிமையையும் மீறி, இரணியனை அழிக்க வல்லவன் சிங்கப்பிரான் என்று அறியாதவனாகி விட்டான் இரணியன் - (பெற்ற) வரத்தினில் (வரத்தினில்) உள்ள நம்பிக்கையினால் (சிரத்தை)! அதனால் வந்த கர்வத்தினால்!
நரசிம்மனைப் பற்றி உயர்வாகச் சொன்னவர், திடீரென்று கண்ணன் பொய் (இதென்ன பொய்?) சொன்னதாகச் சொல்கிறாரே? அவன் 'ஏலாப் பொய்கள் உரைப்பான்' என்பதனாலா?
***
நரசிங்கமாகத் தோன்றியதைக் இரணியனை (மற்றவன்) வதம் செய்ததைக் கண்டால், நீ பேராற்றல் உடையவன் என்று தோன்றுகிறது!
நீ வாமனனாக வந்து யாசித்ததால் (இரத்தி), நீ சக்தி இல்லாதவன் என்று தோன்றுகிறது!
கிடைத்த உலகங்களை (இரந்த மண்) வயிற்றில் வைத்துக் காத்ததைப் (வயிற்றுளே கரத்தி) பார்த்தால், உன்னைப் போன்று வேறு யாரும் இல்லை என்று தோன்றுகிறது!
பேராற்றல் உடைய நீ, வாமனனாக நீ வந்தது, ஆச்சரியமான பொய்! (இதென்ன பொய்!) என்று, உண்மையில் அவனைப் புகழ்கின்றார் ஆழ்வார் (வஞ்சப் புகழ்ச்சி)!
இப்படி, மாறி மாறி, சக்தியையும், சக்தியின்மையையும் காட்டி, நீ செய்யும் மாயச் செயல்களை (உன் கருத்தை) யாரும் அறிய முடியாது (யாவர் காண வல்லரே)! மற்றவர்களாலும் செய்ய முடியாது! எனவே நீ பரம்பொருள் என்கின்றார்.
***
தொடர்ந்து வரும் இந்த 3 பாசுரங்களும், மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், மூன்று நரசிம்மாவதாரப் பாசுரங்கள் என்றே தோன்றும்!
'சைவ சமயத்தின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க, வைணவ சமயம் வீறு கொண்டு எழ வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தவே, ஆவேச அவதாரமாகிய நரசிம்ம அவதாரம் பற்றி, அடுத்தடுத்த 3 பாசுரங்களில் பாடினார்'
என்று முனைவர் கமலக் கண்ணன், தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் ('நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - மூலமும் விளக்கவுரையும்' - Vol-1 பக்கம் 43).
- நரசிம்மன் வருவான்!
தாங்கள் வெளியிடும் நரசிம்மர் பதிவுகள் ஒவ்வொன்றும் குறையே சொல்லமுடியாத தரமான சுத்த தங்கம்ங்க!!
ReplyDelete//மஹீசார க்ஷேத்திரத்தில், சக்கரத்தாழ்வாரின் அம்சமாகப் பிறந்து//
ReplyDeleteமஹீசார க்ஷேத்திரம் என்றால் என்ன ரங்கன் அண்ணா? மதராஸ் க்ஷேத்திரமா? :)
//திருமழிசையாழ்வார் காலம், தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு போன்ற நூல்கள் இயற்றப் பட்ட சங்க காலம் (திருக்குறள் முதலான 18 கீழ்க்கணக்கு நூல்களுக்கு முந்தைய காலம் இது)//
திருக்குறள் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் காலத்தைச் சங்கம் மருவிய காலம் என்று சொல்வர்! கி.பி 100-600!
அப்படியானால் திருமழிசையாழ்வார் கி.மு-வா? வரலாற்றில் பொருந்தாது போல் உள்ளதே! சற்று விளக்குங்கள் அண்ணா!
//(ஆழ்வார்கள் காலங்களை நிர்ணயிக்க, சங்க நூல்களும் உதவியாக உள்ளன)//
இதென்னவோ வரலாற்று உண்மை தான்!
சிலப்பதிகார வரிகள், திருக்குறள் வரிகள் பல, ஆழ்வார் பாசுரங்களில் அப்படியே புழங்குகின்றன! வடமொழிப் புராணக் கதைகளைக் காட்டிலும், சங்க இலக்கியச் செறிவுகள், நப்பின்னை முதலான குறிப்புகளை ஒட்டியே பாசுரங்களின் களம் அதிகம் அமைந்துள்ளது!
//மேலும், புராணங்களைக் கொண்டு நாயன்மார்கள் காலத்தில் திருமாலுக்குச் சொல்லப்படும் தாழ்வுகள் எதுவுமே சங்க நூல்களில் காணப் படவில்லை//
சங்க நூல்கள் திருமாலுக்கு என்றுமே தாழ்வு காட்டவில்லை! தமிழ்க் கடவுளாகவே போற்றி உள்ளன!
மாயோன் மேய காடுறை உலகமும் என்று மாயோனைத் தான் முதலில் குறிப்பிடுகிறது தொல்காப்பியம்! சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல் என்பது சங்க கால மரபு!
//மேலும், புராணங்களைக் கொண்டு நாயன்மார்கள் காலத்தில் திருமாலுக்குச் சொல்லப்படும் தாழ்வுகள்//
நாயன்மார்கள் காலத்தில் திருமாலுக்குத் தாழ்வு சொல்லப்பட்டதா என்ன?
நாயன்மார்கள் திருமாலை வாழ்த்திப் பல பதிகங்கள் பாடி உள்ளனரே! எதற்கும் சரி பார்த்துச் சொல்லுங்கள் அண்ணா!
//இரண்டு யோனி கலந்து பிறந்த அவதாரம், நரசிம்மனைத் தவிர வேறு எதுவும் இல்லை!//
ReplyDeleteஇரண்டு யோனியா? புரியலையே! யோனிகளற்ற கம்பத்தில் இருந்தல்லவா வந்தவன் ஆளரி!
//உரத்தினில் கரத்தை வைத்து* உகிர்த்தலத்தை ஊன்றினாய்!*
இரத்தி நீ! இதன்ன பொய்?*//
"பொய்" என்று சொன்னது, வாமன அவதாரத்துக்கா? நரசிம்ம அவதாரத்துக்கா? இரண்டுக்குமேவா? :)
ஓலைச் சுவடிகளை திருக்குடந்தை ஆற்றில் விட, இந்த இரண்டு சுவடிகள் பட்டும் நீரில் அடித்துச் செல்லப் படாமல், நீரை எதிர்த்து இவர் திருவடிகளை அடைந்ததாகவும் கூறும்)
ReplyDeleteஎன்னங்க சொல்றீங்க!
நாதமுனிகள் நம்மாழ்வாரிடம் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை தவம் இருந்து பெற்றார் இதுதானே நடந்தது!
திருமழிழை ஆழ்வார் பாசுரம் மட்டும் ஓலை சுவடியில் இருந்ததா?
இவர் எழச் சொன்னதும் எழுந்து, படுக்கச் சொன்னதும் மீண்டும் எம்பெருமான் படுத்த பெருமை, இந்த ஆழ்வாருக்கு மட்டுமே உண்டு!:))
ReplyDeleteபெருமாளை எழுப்பி கொண்டு செல்வதும்! மீண்டும் பெருமாளை படுக்க வைப்பதும் ஒரு பாடலாக பாடுவார்..
இவை ஏன்! திவ்ய பிரபான்டத்தில் இல்லை! நம்மாழ்வார் நாதமுனிகளிடம் கூறவில்லையா!
யோனி என்றால் என்ன?
ReplyDeleteசிவலிங்கம் அடிபாகம் யோனி என்று சொல்வார்கள்!
இரண்டு யோனி என்றால்! இரண்டு சிவலிங்கமா!
அல்லது இரண்டு ஜீவன்களா! ஒன்று சிங்கம் ஒன்று மனிதன்!
pramaathama irukku anna, gr88888 service.
ReplyDeleteHi
ReplyDelete//pramaathama irukku anna, gr88888 service.//
Thanks.
அண்ணே!
ReplyDelete//என்னங்க சொல்றீங்க!
நாதமுனிகள் நம்மாழ்வாரிடம் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை தவம் இருந்து பெற்றார் இதுதானே நடந்தது!
திருமழிழை ஆழ்வார் பாசுரம் மட்டும் ஓலை சுவடியில் இருந்ததா?//
இரண்டு விஷயங்கள்:
தாம் எழுதிய பல சுவடிகளை, திருமழிசை ஆழ்வாரே பல்ஆற்றில் விட்டார். அதில் இரண்டே ஆற்றை எதிர்த்து இவரிடம் வந்தன.
இவர் காலத்திற்குப் பிறகு, சுவடிகள் மறைந்து போயிருக்கலாம்.
இன்னொன்று: திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் காலத்திற்கும் முற்பட்டவர். நாதமுனிகள், சுமார் கி.பி. 800 காலத்தவர்.
எனவே திருமழிசையாழ்வார் காலத்தில் நடந்ததையும் நாதமுனிகள் காலத்தில் நடந்ததையும் சேர்த்து, Confuse ஆகக் கூடாது.
அண்ணே!
ReplyDelete//யோனி என்றால் என்ன?
சிவலிங்கம் அடிபாகம் யோனி என்று சொல்வார்கள்!
இரண்டு யோனி என்றால்! இரண்டு சிவலிங்கமா!
அல்லது இரண்டு ஜீவன்களா! ஒன்று சிங்கம் ஒன்று மனிதன்!//
யோனி என்பதன் பொருள்கள் (வர்த்தமான் பதிப்பகம் தமிழ் அகராதியின் படி):
உற்பத்தி ஸ்தானம் (Place of Birth), Origin, கருப்பை, பிறவி, Form of Life of Species
இங்கு, இரண்டு யோனிகள் என்பது, இரண்டு கருப்பைகளைக் குறிக்காது. இரண்டு Species அல்லது இரண்டு Forms of Life-ஐக் குறிக்கும். ஒன்று, மனிதன், இன்னொன்று, சிங்கம் (இரண்டுமே, Mammals - அதாவது, குட்டி போட்டு பால் கொடுக்கும் இனத்தைச் சேர்ந்தவை).
அண்ணே
ReplyDelete//பெருமாளை எழுப்பி கொண்டு செல்வதும்! மீண்டும் பெருமாளை படுக்க வைப்பதும் ஒரு பாடலாக பாடுவார்..
இவை ஏன்! திவ்ய பிரபான்டத்தில் இல்லை! நம்மாழ்வார் நாதமுனிகளிடம் கூறவில்லையா!//
இவர் இரண்டு பெருமாள்களை எழச் சொல்லி, பாடியுள்ளார். ஒரு பாடல், திவ்வியப் பிரபந்தத்தில் இல்லை. ஆனால், சரித்திரம் மிகப் புகழ் பெற்றது.
கணிக்கண்ணன் போகின்றான் ...
என்று தொடங்கும் பாடல் இது.
இந்தக் கதை, அனேகமாக திருமழிசை ஆழ்வார் சரித்திரக் கதைப் புத்தகங்களிலும் இடம் பெறும்.
இன்னொன்று, திருக்குடந்தை (கும்பகோணம்) ஆராவமுதாழ்வானைப் பார்த்து,
‘கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே’
என்று சொல்ல, எம்பெருமான் தம் திருமுடியைத் தூக்கியதாகக் கதை. இது, திருச்சந்த விருத்தத்தில் ஒரு பாசுரம் (தி.வி. 61).
இந்தப் பாசுரத்தை மட்டுமே நம்மாழ்வார் நாதமுனிகளிடம் கூறியிருக்க வேண்டும் என்று அடியேன் எண்ணம்.
KRS
ReplyDeleteஇரண்டு யோனியா? புரியலையே! யோனிகளற்ற கம்பத்தில் இருந்தல்லவா வந்தவன் ஆளரி!
(யோனி எனும் வார்த்தையின் பொருளை இன்னொரு Comment-ல் குறிப்பிட்டுள்ளேன்)
Technically, கம்பமும் ஒரு யோனி :-)
எம்பெருமான் எடுத்த மற்ற எல்லா அவதாரங்களிலும், ஒரே ஒரு Form of Life மட்டுமே இருக்கும். இரணியன் பெற்ற ‘வரத்தினில் சிரத்தை மிக்க’ வைத்து (பாசுர வரிகள் :-), எம்பெருமான், இரு யோனிகள் அல்லது Forms of Life கலந்த அவதாரம் எடுத்தான்.
KRS
ReplyDelete//"பொய்" என்று சொன்னது, வாமன அவதாரத்துக்கா? நரசிம்ம அவதாரத்துக்கா? இரண்டுக்குமேவா? :)//
நரசிம்மனாக வந்து இரணியனை அழித்தது உண்மை என்றால், வாமன்னாக வந்து பலியிடம் யாசித்தது பொய்!
This is true, vice versa.
அதே போல, வாமனனாக வந்து யாசித்தது உண்மை எனில், பின் அதே உலகங்களை வயிற்றில் வைத்துக் காத்தது பொய்!
This is true, vice versa.
எனவே, இங்கு பொய், என்று கூறியது ஆழ்வார் அவதாரங்களை அல்ல என்பது அடியேன் எண்ணம்.
Each one is a lie, when you look at the other, in perspective - A Relative Lie'.
இங்கு பெரியவாச்சான் உபயோகப் படுத்திய சொற்றொடர்: ‘ஆச்சரியமான பொய்!’.
KRS
ReplyDelete//மஹீசார க்ஷேத்திரம் என்றால் என்ன ரங்கன் அண்ணா? மதராஸ் க்ஷேத்திரமா? :)//
மஹீசாரம் = மஹீ + சாரம். மஹீ - பூமி; சாரம் - அதற்கு சாறு Essence போல் விளங்குவது. பூமியில் உள்ள எல்லா இடங்களுக்கும் தலையாயது.
அதாவது, திருமழிசை எனும் இடம். ஆழ்வார் பிறந்த இடம். சென்னைக்குப் பக்கத்தில் உள்ளது திருமழிசை ... எனவே, Strictly Speaking, இதுவும் மதராஸ் க்ஷேத்திரம் தானுங்க!
உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து* தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க* - உலகு தன்னை
வைத்தெடுத்த பக்கத்தும்* மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.
(திருச்சந்த விருத்தத் தனியன்)
புலவர்கள், முனிவர்கள் எல்லோரும், உலகில் எது தலையாய இடம் என முடிவு செய்ய, புகழ் என்கிற தராசில், ஒரு பக்கம் திருமழிசையையும், மறு பக்கம் உலகத்தையும் வைக்க, திருமழிசைத் தட்டே தாழ்ந்து நின்றதாம்!
எனவே இந்த ஊருக்கு, உலகத்தின் சாரம் (மஹீசாரம்) என்ற பெயர் வந்தது.
தங்களுக்குத் தெரியாததல்ல ... ஆழ்வார் பாசுரங்களைப் பற்றி எழுத ஆரம்ப்பிக்குமுன், தனியன்களை எழுத வேண்டும். ஆனால், இதை பற்றி எழுதினால் பதிவு நீளமாகிவிடும் என்ற பயம் ஏற்பட்டது.
எனவே, மஹீசாரம் என்று சொன்னாலே இந்தத் தனியனைப் பற்றி எழுதியதாகிவிடும், ஆழ்வார் என்னை மன்னித்து விடுவார் என்று நினைத்தே, இந்த வார்த்தையை எழுதினேன்.
(யாராவது இதைப் பற்றிக் கேள்வி கேட்டால், அப்போது தனியனை முழுவதும் எழுதலாம் என்று நினைத்தே ...
ஹி.. ஹி.. - கேள்வி கேட்க வைக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப் பட்டது இது ... Planted Question - அவ்ளோதாங்க! :-)
KRS
ReplyDelete//திருக்குறள் முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் காலத்தைச் சங்கம் மருவிய காலம் என்று சொல்வர்! கி.பி 100-600!
அப்படியானால் திருமழிசையாழ்வார் கி.மு-வா? வரலாற்றில் பொருந்தாது போல் உள்ளதே! சற்று விளக்குங்கள் அண்ணா!//
ஆமாம்! வரலாறு பொருந்தவில்லை தான்! ’பிரபந்தம் - ஒரு எளிய அறிமுகம்’ பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன் ஆழ்வார்கள் கால நிலை பற்றி!
ஆராய்ச்சியாளர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், குரு பரம்பரையைப் பின்பற்றும் வைணவர்களுக்கும் ஆழ்வார்கள் காலம் பற்றிய கருத்துக்கள் ஒத்து வராது என்று!
குறிப்பாக, முதல் 6 ஆழ்வார்களுக்கு, இந்தச் சச்சரவு மிகவும் உண்டு! திருமழிசையாருக்குத் தான் இந்தச் சச்சரவு மிகவும் அதிகம்!
அவர் எழுத்தைப் பார்த்தால், இடைச்சங்க காலம் என்று தோன்றும் (3000 ஆண்டுகளுக்கு முன்பு)!
அவர் கருத்துக்களைப் பார்த்தால், தமிழகத்தின் தத்துவ சமய வரலாற்றுக் காலம் என்று தோன்றும் (2000-2500 ஆண்டுகளுக்கு முன்பு)! இந்தக் கால கட்டத்திலேயே, 18 கணக்கு நூல்களும், ஏற்பட்டன. இந்தக் கால கட்டமே, ’தமிழகத்தின் இருண்ட காலம்’ எனப்படுகிறது. களப்பிரர்கள் ஆட்சிக் காலத்தில், காபாலிகர்களும், காளாமுகர்களும், தங்கள் மதத்தை வேறூன்ற முற்பட்ட காலம்!
வரலாற்று ஆராச்சியாளர்கள் கூறிய காலப்படி பார்த்தால், திருமழிசை ஆழ்வார் காலம் கி.பி. 1-2- நூற்றாண்டு.
நான் அவர் காலத்தில் பிறக்காததால், எனக்கு உண்மை என்ன என்று தெரியாது :-) படித்த புத்தகங்களில் இருந்தும், செய்த சிறு ஆராய்ச்சிகளில் இருந்தும் இவற்றைக் குறிப்பிட்டுள்ளேன் :-)
//நாயன்மார்கள் காலத்தில் திருமாலுக்குத் தாழ்வு சொல்லப்பட்டதா என்ன?
ReplyDeleteநாயன்மார்கள் திருமாலை வாழ்த்திப் பல பதிகங்கள் பாடி உள்ளனரே! எதற்கும் சரி பார்த்துச் சொல்லுங்கள் அண்ணா!//
கஷ்டப்பட்டு, அரை மணி நேரம் தட்டி, பதிலை Post செய்யும்போது, Net காலை வாரிவிட்டது. எனவே, நாளை, மேலும் சில எண்ணங்களைப் பதிவிடுகிறேன்.
KRS
ReplyDelete//சங்க நூல்கள் திருமாலுக்கு என்றுமே தாழ்வு காட்டவில்லை! தமிழ்க் கடவுளாகவே போற்றி உள்ளன!//
இதைத் தானே அடியேனும் சொல்கிறேன்? சங்க நூல்களில் திருமாலைப் பற்றிய தாழ்வுகள் இல்லை.
சங்கம் மறுவிய காலம் தொடங்கி, தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படும் களப்பிரர்கள் காலத்தில், பல சமய மாற்றங்கள் தமிழகத்தில் ஏற்பட்டன. அந்த மாற்றங்களில் சில (எல்லாம் இல்லை!), திருமாலைத் தாழ்வு படுத்துவதாகவே உள்ளன.
இதனை, நாளை வந்து எழுதுகிறேன் (எழுதியதன் பின் வலை காலை வாரி விட்டுவிட்டது).
KRS
ReplyDelete////நாயன்மார்கள் காலத்தில் திருமாலுக்குத் தாழ்வு சொல்லப்பட்டதா என்ன?
நாயன்மார்கள் திருமாலை வாழ்த்திப் பல பதிகங்கள் பாடி உள்ளனரே! எதற்கும் சரி பார்த்துச் சொல்லுங்கள் அண்ணா!//
தொடரும் முன் ஒர் சிறு குறிப்பு:
நாயன்மார்கள்/ஆழ்வார்கள், சைவ/வைணவ சமயச் சச்சரவை இங்கு துவக்க ஆசைப்பட்டு, இந்தக் பதிவை அடியேன் எழுத வில்லை (தற்காலத்தில், இந்த விவாதம் தேவை இல்லாத ஒன்று என்பது என் தனிப்பட்ட கருத்து).
பிரபந்த பாசுரங்களுடன், இடம், பொருள், ஏவல், காரண, காரியங்களுடன், (அடியேனுக்குத் தெரிந்த) வேறு சில செய்திகளையும் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டே நரசிம்மர் பற்றி எழுத ஆரம்பித்தேன். இதில், தமிழ் ஆராய்ச்சி, ஆழ்வார்கள் கால நிலை, அவர்கள் மன ஓட்டங்கள், ஆகியவையும் அடங்கும்.
Some Historical Background:
தமிழ் மொழி, கலாச்சார வளர்ச்சி, சங்க காலத்திலேயே அதிகம் இருந்தது. இந்தக் காலம், சுமார் 2,000-2,500 ஆயிரங்களுக்கு முன்பு வரை என்று பரவலாகக் கூறப்படுகிறது. இதனை, கடைச்சங்க காலம் என்பர்.
அதன் பின்னர், சுமார் 300-400 ஆண்டுகளுக்கு (சுமார் கி.மு. 100 முதல் கி.பி. 400 வரை), தமிழகத்தில் அயலார் ஆட்சி ஏற்பட்டது. சோழ, பாண்டிய நாட்டை களப்பிரர்கள் (இவர்கள் கன்னட நாட்டில் இருந்து வந்தவர்கள் என்ற கருத்தே பெரும்பாலும் உள்ளது) கைப்பற்றினர். பல்லவர்கள், நடு நாட்டையும், தொண்டை நாட்டையும் ஆட்சி செய்தனர்.
களப்பிரர்கள், பாளி மொழியையும், பல்லவர்கள் பிராகிருத மொழியையும் பயன்படுத்தி வந்தனர்.
சில களப்பிர மன்னர்கள் சமண, சாக்கிய மதங்களையும், சில களப்பிர மன்னர்கள் காளாமுகர்கள், காபலிகர்கள் அதிகமாக உபயோகப் படுத்தும் சைவ ஆகமங்களையும் ஆதரித்து வந்தனர். இவர்கள் காலத்திலேயே, சமண, சாக்கிய மதங்கள் தழைத்து ஓங்கின.
பல்லவர்கள், பெரும்பாலும் விஷ்ணுவையே தங்கள் தெய்வமாக வழிபட்டு வந்தனர். ஆனால் பல்லவர்கள், ஆரம்ப காலத்தில் தங்கள் மதக் கோட்பாடுகளை அதிகம் தமிழ் மக்கள் மீது திணிக்க வில்லை என்று தெரிகிறது.
எனவே இந்தக் கால கட்டத்தில், தமிழ் மொழி, கலாச்சார வளர்ச்சி, அதிகமாக இல்லை (இருந்தும், 18 கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம் இந்தக் கால கட்டத்திலேயே இயற்றப் பட்டன).
இந்தக் கால கட்டத்தில், தமிழ் நாட்டில் என்ன நடந்தது என்று அதிகமாகத் தெரியாததால், ’தமிழகத்தின் இருண்ட காலம்’ என்றும், ’சங்கம் மருவிய காலம்’ என்றும் கூறுவர்.
சரி, இதற்கும், நாயன்மார்களுக்கும் என்ன சம்பந்தம்?
சோதித்த பேரொளி மூன்று ஐந்து என நின்ற
ReplyDeleteஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயனென்று
பேதித்து அவரைப் பிதற்றுகின் றாரே
திருமாலும் ஈசனும் ஆதியாம்! ஆதிக்கண்!
ஈசன், மால், அயன் என்று பேதித்து-பேதம் பாராட்டி, பிதற்றுகின்றார்களாம்!
- திருமூலர்
அவாவற சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவையாயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிவார் பிறந்தார் உயர்ந்தே!
அரியையும் சிவனையும் ஒன்றாக மனதில் எண்ணி எண்ணி அவா அறுத்து வீடுபேறு பெற்றதாக -
-நம்மாழ்வார்!
வால் நிறத்து வானவன் தோன்றிய இந்தத் திருநாளில் திருச்சந்த விருத்தத்தில் துள்ளி வரும் நரசிம்மனைப் பற்றிய பாசுரங்களைப் படிக்க வாய்த்ததற்கு மிகவும் மகிழ்ச்சி. விளக்கங்களுக்கு நன்றி ரங்கன் அண்ணா.
ReplyDelete//சரி, இதற்கும், நாயன்மார்களுக்கும் என்ன சம்பந்தம்?//
ReplyDeleteஇந்த இருண்ட காலத்தில், களப்பிரர்கள், தங்கள் தெய்வமான சிவனே பரம்பொருள் என்றும், சிவனே உயர்ந்தவன் என்றும் கூறத் தொடங்கினர். சிவனே உயர்ந்தவன் என்று சொல்வது போல, அதுவரை கேள்விப்படாத பல புதிய கதைகளை இவர்கள் பரப்பி வந்தனர்.
பெரும்பாலான கதைகள், திருமாலுக்குத் தாழ்வு ஏற்படுத்துவது போல் இருந்ததாக வைணவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கதைகள், இந்தக் கால கட்டத்தில் வாழ்ந்த நாயன்மார்கள் துவங்கியதாகச் சான்றுகள் இல்லை. இந்தக் கதைகளை நாயன்மார்கள் மறுத்தும் கூறவில்லை. எனவே, நாயன்மார்களின் மறைமுக ஆதரவு இவற்றிற்கு இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
உதாரணத்திற்கு இந்தக் கதைகளில் ஒன்று:
ஒரு முறை, சிவன் தவம் இருந்த போது, திருமால் அவரைப் பூஜிக்கச் சென்றாராம். சிவன், திருமால் கொண்டு வந்த 1008 தாமரைகளில் ஒன்றை ஒளித்து வைத்தார். 1007 தாமரைகள் அர்ச்சனை செய்தவுடன், ஒரு தாமரையைக் காணாமல் திருமால் தவித்து, கடைசியில், திருமால் தன் ஒரு கண்ணைப் பிடுங்கி, சிவனைப் பூஜித்தாராம்! இதனால் மகிழ்ந்த சிவன், திருமாலுக்குச் சக்கரத்தைப் (சுதர்ஸனரை) பரிசாகக் கொடுத்தாராம்! அதிலிருந்தே திருமாலுடன் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி இருந்தாராம்!
இப்படி ஒரு கதை, சுமார் 3-ம் நூற்றாண்டில் வந்திருக்கலாம். குன்றக்குடி குடவரைக் கோயிலில், இந்தக் கதை சிற்ப வடிவமாகக் காணப்படுகிறது! இந்தக் குடவரைச் சிற்பங்கள் சுமார் 8-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்னொரு மாறுபட்ட, ஆனால் பரவலாக நம்பப்படும் கதை:
மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், மண்டூக முனிவருக்கு மோக்ஷம் கொடுப்பதற்காகவே! தென் தமிழ் நாட்டில் உள்ள பல பெருமாள் கோயில்களில் இந்த வைபவம் கொண்டாடப் படுகிறது.
ஆனால், தற்காலத்தில், இந்த வைபவத்தை, மதுரை மீனாட்சி கல்யாணத்துடன் தொடர்பு படுத்தியே திருவிழா நடைபெறுகின்றது!
நம் Editor ராகவன் ஊராகிய எமனேஸ்வரத்தில் (பரமக்குடி அருகே) நேற்று இந்த உற்சவம் நடைபெற்றது. அதில், மீனாட்சி கல்யாணத்தின் Influence இல்லை.
பிரமனும், திருமாலும் சிவன் அடிமுடி காணமுடியாமல் தோற்ற கதையும் (லிங்கோத்பவர் கதை)சங்க நூல்களிலும், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வடமொழிப் புராணங்களிலும் இல்லை. இந்தக் கதையையும் வைணவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை!
அடியேனே, இது போன்ற சுமார் 15 கதைகள் கேள்விப்பட்டதுண்டு! இந்தக் கதைகளின் ஆதாரங்களையும் சற்று ஆராய்ந்ததும் உண்டு (நுனிப்புல் மேய்ந்தது)!
பெரும்பாலான கதைகளின் மூலம், தமிழ் நாட்டிலேயே இருப்பதாகவும், தமிழகத்தின் இருண்ட காலத்திலேயே (சங்கம் மருவிய காலம்) இவை பரவி இருக்கவேண்டும் என்றும் தெரிகின்றது.
சரி, இதற்கும் திருமழிசையாருக்கும் என்ன சம்பந்தம்?
திருமழிசை ஆழ்வார், இந்த இருண்ட காலத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து (தமிழ் அறிஞர்களும், வைணவர்களும் இதனை ஒப்புக் கொள்வதில்லை). களப்பிரர்கள் காலத்தில் திருமழிசையாழ்வார் வாழ்ந்ததாலேயே, இவர் பாசுரங்களில் அடிக்கடி பரம்பொருள் நிர்ணயம் காணப்படுகின்றது என்ற விளக்கமும் கூறப்படுவதுண்டு!
அடியேன் பதிவில், பெரும்பாலான வியாக்கியானப் புத்தகங்களில் இருந்தே மேற்கோள் காட்டியுள்ளேன்.
இவற்றை எல்லாம், செய்திகளாக மட்டுமே எடுத்துக் கொண்டு, இந்தப் பதிவை சைவ/வைணவ சண்டையாக மாற்றி விடாமல் இருக்குமாறு அன்பர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
ReplyDeleteநடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.
திருமூலர்
அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்றிராதே_ அவனாம்
அவனே எனத்தௌ¤ந்து கண்ணனுக்கே தீர்ந்தாய்
அவனே எவனேனும் ஆம்
நம்மாழ்வார்