Sunday, June 20, 2010

நரசிம்மருக்கு பிரகலாதன் மேல் மட்டும் அதிகப் பாசம் ஏன் ?


அரங்கன் தானே தன் அவயங்கள் எல்லாவற்றையும் காட்ட, ஒரு முனிவரின் மீது அமர்ந்து, அவன் திருமுடி முதல் திருவடி வரை அமலனாதிபிரான் எனும் 10 பாசுரங்கள் கொண்ட திருமொழி மூலம் அனுபவித்து, தன் கண்கள் மற்ற எதையும் பார்க்கக் கூடாது என்று அரங்கனிடமே சேர்ந்தவர் திருப்பாணாழ்வார்.

அமலனாதிபிரான், பிரணவ சாரம் என்பர் பெரியோர்!

அ - உ - ம

முதல் மூன்று பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் பிரணவத்தையும் (அ+உ+ம = ஓம்), 5,6,7 பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் நாம் பற்ற வேண்டியதைப் பற்றியும் (பா+து + கை = திருவடி) கூறுகின்றன.

எட்டாம் பாசுரத்தில், நரசிம்மனின் கண்களைப் பற்றிப் பாடுகிறார் திருப்பாணாழ்வார்.

***

பரியனாகி வந்த* அவுணன் உடல் கீண்ட* அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான்* அரங்கத்து அமலன் முகத்து*
கரியவாகிப் புடை பரந்து* மிளிர்ந்து செவ்வரி ஓடி* நீண்ட அப்
பெரியவாய கண்கள்* என்னைப் பேதமை செய்தனவே.
அமலனாதிபிரான்-8

(பரி - உயர்ச்சி, கருமை, பெருமை; பரியன் - உயர்ந்தவன், பெருமை படைத்தவன், பருத்த உடம்புடையவன்; ஆதிப்பிரான் = ஆதி + பிரான் - முதிலில் தோன்றியன், முதல் தெய்வம்; புடை பரந்து - மலர்ந்து; மிளிர்ந்து - பிரகாசத்துடன்; செவ்வரி ஓடி - சிவந்த கோடுகள் பெற்று)

மிகவும் பெருத்த உருவத்துடன் வந்த இரணியன் உடலைப் பிளந்த, தேவர்களும் அருகில் செல்ல அஞ்சும்படி இருக்கின்ற ஆதிப்பிரானாகிய அரங்க நரசிம்மனின் திருமுகத்திலே, கருமை நிறமாய், விசாலமாய், பிரகாசத்துடன், சிவந்த கோடுகளுடன், அவன் திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள், என்னை கிறங்கடிக்கின்றன.
***

திருப்பாணாழ்வார், 'ஆதிப்பிரான்' என்று அரங்கனை வருணிக்கிறார். ’முதலில் தோன்றியவன், பிறருக்குக் கொடுப்பவன்' என்று பொருள். இந்த ஆதிப்பிரானின் பெருமைகளை, பெரிய திருமொழில் நரசிம்மனைக் காணும்போது விவரிக்கின்றேன்.

நம்மாழ்வார் அவதரித்த 'திருக்குருகூர்' எனும் திவ்ய தேசத்தில் (#87) எழுந்தருளியுள்ள எம்பெருமானின் பெயரும் ’ஆதிப்பிரான்’.

நம்மாழ்வார், 'ஒன்றும் தேவும்' என்று தொடங்கும் திருமொழியில் (திருவாய்மொழி 4-10), இந்த ஆதிப்பிரானுடைய பெருமைகளை வர்ணித்துள்ளார் - முடிந்தால் படியுங்கள்.
***

ரங்கனை அங்கம் அங்கமாக ஒவ்வொரு பாசுரத்திலும் வர்ணித்து வந்த திருப்பாணாழ்வார், இந்தப் பாசுரத்தில், அவன் கண்களைப் பற்றிச் சொல்லுகின்றார்.

சிலருடைய கண்களைப் பார்த்தால், அவர்கள் அழைக்காமலேயே அவர்கள் கண்கள் மட்டும் நம்மை அழைக்கும்! சிலருடைய கண்களைப் பார்க்க முடியாமல், பயங்கரமாக இருக்கும்! சிலருடைய கண்கள், நம்மை வெறுப்பு கொள்ளச் செய்யும்! சிலருடைய கண்கள், நம்மை மயக்கும்! சில கண்கள், எப்போதும் சிவந்து, கோபமாகவே இருக்கும்! சில கண்கள், எப்போதும் சோகமாகவே இருக்கும்!

மனிதக் கண்களில், இப்படி பல உணர்ச்சிகள் தெரிந்தாலும், அவை ஒரே சமயத்தில் தெரிவதில்லை!


ஒரே சமயத்தில், சிலருக்குக் குளிர்ச்சியும், சிலருக்குக் அருளும், சிலருக்குக் கோபமும் - மொத்தத்தில் நவரசமும் - தரும் ஒரே கண்கள் - அந்த அதே கண்கள் - அரங்கனுடையது மட்டுமே! எனவே தான் திருப்பாணாழ்வார், அவன் கண்களை, 9 விதமாக வர்ணிக்கின்றார்! எப்படி?

முகத்தின் அழகே - முகமே - கண்கள் (அமலன் முகத்து)! கருப்பு (கரியவாகி)! விசாலம் (புடை பரந்து)! ஒளி வீசும் (மிளிர்ந்து)! நீண்ட கண்கள் (நீண்டு)! செம்மை (செவ்-)! வரி ஓடும் (வரி ஓடி)! கண்களே முகம் என்று சொல்லும்படி, பெரியது (பெரியவாய)! அந்தக் கண்களை (கண்கள்) யார் பார்த்தாலும், அவர் பாதிக்கப் படுவது நிச்சயம் (பேதமை செய்தன)!

அவன் திருமுக மண்டலத்தை நாம் பார்க்கும்போது, நமக்கு அதிகமாகத் தெரிவதும், பார்க்கத் தோன்றுவதும், அந்தக் கண்கள் தான்! அவன் கண்களால் நம்மைப் பார்க்க மாட்டானா? என்று தோன்றும்!

திருமலையில், நமக்குக் கிடைக்கும் 10 வினாடிகளில், அவன் திருமுகத்தையும், அதில் அவன் கண்களையும் தானே நாம் 5-6 வினாடிகள் பார்க்கின்றோம்? பின்னர் தானே முடி, அடி எல்லாவற்றுக்கும் ஒரு வினாடி செலவிடுகின்றோம்?

இந்த அரங்கனின் கண்களைப் பார்த்துத் தானே, பிள்ளை உறங்காவில்லி தாசர், தன் மனைவியையும், குடும்பத்தையும் துறந்தார்!

ஆண்டாள், ‘அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து’ என்று தானே பாடுகின்றாள்!

இந்த அரங்கனே, அன்று இரணியனின் உடல் பிளந்தவன்! பின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஆதிப்பிரானான நரசிம்மன் கண்களில் கோபம்! மற்ற தேவர்கள் எல்லோரும் நெருங்க பயப்பட, பிரகலாதனுக்கு மட்டும், அந்தக் கண்களில் கோபம் தெரியவில்லை! குளிர்ச்சியும், பரிவும், அருளும் தெரிகின்றது!


’பிரகலாதனுக்கு மட்டும் குளிர்ச்சி, கடாக்ஷம், என்னை மட்டும் பைத்தியம் ஆக்குகிறாயே!’ என்று அந்தக் கண்களிடமே கேட்கின்றார்.

அதனால் தான், மேலே அவன் அழகு பற்றிப் பாசுரம் இயற்ற இயலாமல், 'அரங்கா! நீ அழகு! உன் கண்கள் அழகு! இந்த அழகு முடிவில்லாதது! 'உன்னையும், உன் கண்களையும் பார்த்த என் கண்கள், வேறு எதையும் பார்க்கக் கூடாது' எனும் நிலைக்கு வந்து விடுகிறார் திருப்பாணாழ்வார்!


ஆதிப்பிரானான நரசிம்மனுக்கு, பிரகலாதன் மேல் ஏன் இவ்வளவு - நம்மிடம் இருப்பதை விட மிக அதிகமான - அன்பு?
***

இடம்: பிரயாகை
நேரம்: கதை சொல்லும் நேரம்

ஸஹஸ்ராணிகர்:
ஓ மார்க்கண்டேயரே! பகவானுக்கு, பிரகலாதனுக்கு மீது மட்டும் என்ன இவ்வளவு அன்பு? அப்படி அவன் என்ன செய்தான்?

மார்க்கண்டேயர்:
அவன் கதையைச் சொல்வதற்கு முன், அவன் தந்தையின் கதையைச் சற்றுக் கேள்!
தாயாருக்கும், தம்பி மனைவிக்கும் அறிவுரை சொல்லி விட்டு, இரணியன், தவம் செய்யக் கிளம்புகிறான். அப்போது, பூகம்பம் ஏற்படுகின்றது; காடுகள் பற்றி எரிகின்றன. பல கெட்ட சகுனங்களைக் கண்ட அசுர குரு, ’நீ இப்போது தவம் செய்யப் போகக் கூடாது’ என்று கூற, குருவின் அறிவுரைகளையும் மீறித் தவம் செய்யக் கைலாயத்திற்குச் செல்கிறான்.

(மார்க்கண்டேயர், அந்தக் காட்சிகளை விவரிக்கிறார் ...)
***

இடம்: பிரம்ம லோகம்
நேரம்: குழம்பும் நேரம்

நாரதர்: அப்பா! வணக்கங்கள்!


பிரமன்: வாப்பா! இன்று என்னிடமேயா? நானே குழப்பத்தில் இருக்கிறேன்! நீயும் சேர்ந்தால் அவ்வளவு தான்!


நாரதர்: நாராயணா! ... அப்பா! விளையாடாதீர்கள்! என்ன குழப்பம் உங்களுக்கு?

பிரமன்: இரணியன் மிகவும் கடுமையான தவம் செய்கிறான்!


நாரதர்: அதனால் என்ன? உலகில் இருப்பவர்களுக்காகக் கவலைப் பட்டால் நம்முடைய ஆயுள் விரைவில் முடிந்து விடும்!

பிரமன்: அவன் செய்யும் தவத்தைப் பார்க்கும்போது, எனக்கு ஏதோ விபரீதம் ஏற்படும் என்று தோன்றுகிறது!

நாரதர்: நீங்கள் நாராயணனின் புத்திரர் ஆயிற்றே! உங்கள் நெஞ்சில் அவர் இருக்கும் வரை, நீங்கள் கவலைப் படத் தேவையில்லை!

பிரமன்: இருந்தாலும், பயமாக இருக்கிறது!

நாரதர்: இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?

பிரமன்: அவன் தவத்தைக் கலைத்தே ஆகவேண்டும். உன்னால் முடியுமா?

நாரதர்: முயற்சி செய்கிறேன் அப்பா! எம்பெருமான் அருளால் எனக்கு வெற்றி கிட்டட்டும் என்று நீங்கள் அவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்!

(நாரதர் மறைந்து விடுகிறார்)
***

(மார்க்கண்டேயர் மீண்டும் தொடர்கிறார் ...)

மார்க்கண்டேயர்: நாரதரும், பர்வத முனிவரும், இரு கலவிங்கப் பட்சிகளாக (Red Strawberry Finch) உரு மாறி, இரணியன் தவம் செய்யும் மரத்திற்கு வந்து அமர்கின்றனர். அவன் தவத்தைக் கலைக்க முற்படுகின்றனர்.


மார்க்கண்டேயர்: முனி பட்சிகள் எவ்வளவு பேசியும், அவன் கவனத்தைக் கெடுக்க முயற்சித்தாலும், முடியவில்லை. கடைசி உபாயமாக, நாரதர், 'ஓம் நமோ நாராயணாய' என்று மூன்று முறை சொல்லி, நிறுத்தி விடுகின்றார்.

எம்பெருமானின் நாமம் கேட்டுத் தவம் கலைந்த அவன், அருகில் இருந்த அம்பை பறவைகள் மீது விட, அதற்குள் பறவைகள், இரணியன் தவம் கலைந்த உற்சாகத்துடன் பறந்து விடுகின்றன.

(இதன் பின்னர், மார்க்கண்டேய முனிவர், இரணியனின் அரண்மனையில் நடந்ததை விவரிக்கிறார்)
***

(தவம் கலைந்த இரணியன், அரண்மனைக்குத் திரும்புகிறான். அன்று இரவு இரணியனும், அவன் மனைவி கயாதுவும் தனிமையில் அந்தரங்கமாக இருக்கின்றனர் ...)

கயாது: நாதா! என்ன கோபம் உங்களுக்கு?

இரணியன்: தவத்தில் இருந்தபோது, இரண்டு பட்சிகள் வந்து தவத்தைக் கெடுக்கும் விதமாகப் பேசிக்கொண்டே இருந்தனர்.

கயாது: அதனால் என்ன நாதா? தேவதைகள், தவம் செய்பவர்களைக் கெடுப்பதும், சோதிப்பதும் வழக்கம் தானே? நாம் தானே அதற்கெல்லாம் செவி சாய்க்க்காமல் தவம் செய்ய வேண்டும்?



இரணியன்: அதனால் கூட நான் கவலைப் படவில்லை. ஆனால், கடைசியில் அந்தப் பறவைகள் மிகவும் சப்தமாக, 'ஓம் நமோ நாராயணாய' எனும் சொற்களை மூன்று முறை, எனக்காகவே சொல்வது போலச் சொல்லின. என் எதிரியின் பெயரைச் சொன்னவுடன், என் கோபத்தினால் தவம் கலைந்து விட்டது.

(14 உலகங்களிலும் எல்லோரும் மதித்துப் போற்றக் கூடிய அஷ்டாக்ஷர மந்திரத்தை அன்று இரவு இரணியன் தன் வாயாலேயே சொல்லி விடுகிறான். அவன் சொல்லும் அந்த - சரியான, 'அ'ரி யான - சமயம் பார்த்து, கயாது கருத்தரிக்கிறாள்)

கயாது: நீங்கள் மீண்டும் தவம் செய்யச் செல்லுங்கள்! இம்முறை, அவன் நாமம் சொல்லப் பட்டாலும் தவம் கலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

(அடுத்த சில நாட்களில், இரணியன் மீண்டும் தவம் செய்யச் செல்கிறான்)
***

தைச் சொல்லி, கதையை நிறுத்திய மார்க்கண்டேய முனிவர், அங்கு கூடியிருந்த முனிவர்களைப் பார்த்து,

'நம்மைப் போல் அல்லாது, விஷ்ணுவின் அந்தரங்கனான சங்கு கர்ணன், விஷ்ணுவின் அருளாலும், பிரம்மன் மற்றும் நாரதரின் ஆசீர்வாதத்துடனும், அஷ்டாக்ஷர மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே கருவில் நுழைந்து விடுகிறான்! இப்படிப் பிறந்தவனே பிரகலாதன்!

இப்படி, அஷ்டாக்ஷ்ர மந்திரத்தினாலேயே கருவில் நுழைந்ததால் தான் நமக்கெல்லாம் இல்லாத ஏற்றம், பிரகலாதனுக்கு - கருவிலே திரு! நமக்கெல்லாம் கிடைக்காத பரிவு, பிரகலாதன் மீது எம்பெருமானுக்கு'

***

ரு வழியாக, முதலாயிரத்தையும், பிரகலாதன் பிறப்பையும், நரசிம்மன், KRS, Raghavan, Kumaran, போன்றோரின் உதவியுடனும், இதனைப் பொறுமையுடன் படித்து, தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பல அன்பர்கள் மூலமும், முடித்துக் கொடுத்து விட்டார்!

இப்படி, அதிசயமாகப் பிறந்த பிரகலாதனைப் பற்றியும், அவனுக்காக எம்பெருமான் என்னவெல்லாம் செய்தான் என்பதையும்,

நாலயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாவது ஆயிரமான பெரிய திருமொழி மூலம் நரசிம்மனை திருமங்கையாழ்வார் அனுபவிக்கும்போது நாமும் சேர்ந்து அனுபவிக்கலாம்.

அனைவருக்கும் எனது நன்றியுடன், முதலாயிரத்தை முடித்துக் கொள்கிறேன்.


நரசிம்மன் திருவடிகளே சரணம்!

காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா
புத்யாத்மனாவா பிரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணமஸ்து

21 comments:

  1. ஆதிப்பிரானாகிய அரங்க நரசிம்மனின் திருமுகத்திலே, கருமை நிறமாய், விசாலமாய், பிரகாசத்துடன், சிவந்த கோடுகளுடன், அவன் திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள், என்னை கிறங்கடிக்கின்றன.:)))

    நரசிம்மர் தூணிலிருந்து வெளி வரும் போது கருப்பு நிற சிம்ம முகத்தில் ஒளியுடைய வெள்ளை நிற கூர்மையான பற்கள் மற்றும் நெற்றியில் ஈரம் காயாத நாமம்
    இப்படி வந்து இருப்பாரோ!

    ReplyDelete
  2. ஆதிப்பிரானான நரசிம்மனுக்கு, பிரகலாதன் மேல் ஏன் இவ்வளவு - நம்மிடம் இருப்பதை விட மிக அதிகமான - அன்பு?

    No iam not accept.

    பிரகலாதனிடம் செலுத்தும் அதே அன்பை நரசிம்மர் நம்மிடமும் வைத்து உள்ளார் .


    பிரகலதான் ஹரி மீது இருந்த பக்தி அன்பு நம்பிக்கை
    நம்மிடம் உள்ளதா! என்பதே ஆராய பட வேண்டிய விஷயம்.
    இருந்தால் நிச்சயம் நரசிம்மர் பிரகலாதன் மீது வைத்திருந்த அதே அன்பை நாம் காணலாம்.

    ReplyDelete
  3. முதல் ஆயிரம் நரசிம்மர் பாசுரங்களை தெளிவாக விளக்கியதற்கு தங்களுக்கும்
    தங்களுக்கு உதவியாக இருந்த நல்ல உள்ளங்களுக்கும் எமது மனபூர்வமான நன்றி ஐயா!

    அடுத்து The Great one & only Ever Green சூப்பர் ஸ்டார் திருமங்கை ஆழ்வாரின் வருகையை வரவேற்கிறோம்.

    ReplyDelete
  4. காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா
    புத்யாத்மனாவா பிரக்ருதே ஸ்வபாவாத்
    கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை:)))

    Can’t understand . actually what is this?

    ReplyDelete
  5. அட... அடுத்து ராபின் ஹுட் ஆழ்வார் பாசுரங்களா? காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. //இப்படி, அஷ்டாக்ஷ்ர மந்திரத்தினாலேயே கருவில் நுழைந்ததால் தான் நமக்கெல்லாம் இல்லாத ஏற்றம், பிரகலாதனுக்கு - கருவிலே திரு! நமக்கெல்லாம் கிடைக்காத பரிவு, பிரகலாதன் மீது எம்பெருமானுக்கு'//

    அருமையான விளக்கம் அடுத்து வரும் பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம்.

    ஓம் நமோ நாராயணாய

    ReplyDelete
  7. முதலாயிரம் முடித்த ரங்கன் அண்ணாவுக்கு முதல் ஆயிரம் பல்லாண்டு! :)

    //ஆதிப்பிரானான நரசிம்மனுக்கு, பிரகலாதன் மேல் ஏன் இவ்வளவு - நம்மிடம் இருப்பதை விட மிக அதிகமான - அன்பு?

    No iam not accept.//

    :)
    I also don't accept!
    பெற்ற தாய்க்கு அனைத்து பிள்ளைகளிடத்தும் அதே அன்பு தான்! அதிக அன்பு, கம்மி அன்பு எல்லாம் இல்லை!
    வேணும்-ன்னா கீழ் கண்டவாறு தலைப்பை மாத்திக்கலாம்! :)
    இறைவனிடத்தில் பிரகலாதனுக்கு ஏன் இவ்வளவு அன்பு? நாம் வைப்பதை விட அதிகமான அன்பு? :)

    ReplyDelete
  8. //ஆதிப்பிரான்//

    அது என்ன ஆளரிப் பெருமானை "ஆதி"ப்பிரான் என்று சொல்கிறிர்கள்? அவருக்கு முன்னமேயே வராகம், கூர்மம், மச்சம் என்ற பிரான்கள் எல்லாம் உண்டல்லவா? யார் "ஆதி"ப்பிரான்? :)

    //அவன் திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள்//

    * "பெரிய" காதுகள் = நாம குறை குறை-ன்னு அவனிடத்தே போய் "உளறும்" போது, நம் "உளறலை" எல்லாம் தள்ளி விடாது, காது கொடுத்து கேட்க!

    * "பெரிய" வாய கண்கள் = நாம் அவனை விட்டு எத்தனை தூரம் விலகிச் சென்றாலும், நம் மீது அவன் கண் வைத்துக் கொண்டே இருக்க!

    * மேலே சொன்ன இரண்டும் சரி தான்! ஆனால் எதுக்கு கண், காது வரை நீளணும்? சொல்லுங்க பார்ப்போம்! :)
    //திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள்//

    ReplyDelete
  9. //திருமலையில், நமக்குக் கிடைக்கும் 10 வினாடிகளில், அவன் திருமுகத்தையும், அதில் அவன் கண்களையும் தானே நாம் 5-6 வினாடிகள் பார்க்கின்றோம்?//

    கண்ணைத் தான் நாமம் போட்டு மறைச்சிடறாங்களே! :)
    ஏன் அண்ணா திருமலையில் மட்டும் அப்படி ஒரு வித்தியாசமான பட்டை நாமம்? அதுவும் கண்களை மறைத்த வண்ணம்?

    //இந்த அரங்கனின் கண்களைப் பார்த்துத் தானே, பிள்ளை உறங்காவில்லி தாசர், தன் மனைவியையும், குடும்பத்தையும் துறந்தார்//

    மனைவி, குடும்பத்தை வில்லிதாசன் துறக்கவில்லை!
    தன் மனைவி, தன் குடும்பம் தான் எல்லாம் என்ற அதீதமான மோகத்தை மட்டுமே துறந்தான்! பின்னரும் குடும்ப வாழ்வில் இருந்தே அல்லவா பொன்னாச்சியும், வில்லியும் தொண்டு செய்தார்கள்!

    BTW
    குட்டிப் பிரகலாதப் பையன் very cute!
    "அச்சோ நரசிம்மரா? சுத்த பத்தம், தீட்டாகாம இருக்கறது ரொம்ப கஷ்டமாச்சே"-ன்னு எல்லாம் கால்குலேஷன் போடாம, செருப்பு போட்டுக்கிட்டே சாமி கிட்டக்க நிக்குது! :)

    அந்த அரங்கன்-திருப்பாணாழ்வார் படம் சூப்பரு! சுட்டது எவ்விடம்? :)

    ReplyDelete
  10. //இப்படி, அஷ்டாக்ஷ்ர மந்திரத்தினாலேயே கருவில் நுழைந்ததால் தான் நமக்கெல்லாம் இல்லாத ஏற்றம், பிரகலாதனுக்கு - கருவிலே திரு! நமக்கெல்லாம் கிடைக்காத பரிவு, பிரகலாதன் மீது எம்பெருமானுக்கு'//
    தங்கள் சிறப்பான விளக்கத்திற்கு நன்றி. மேலும் நாமெல்லாம் பிரஹலாதன் போல எல்லாம் நாராயணனே என்று எண்ணும் மனப்பக்குவம் அடைய வேண்டும்

    ReplyDelete
  11. //திருமலையில், நமக்குக் கிடைக்கும் 10 வினாடிகளில், அவன் திருமுகத்தையும், அதில் அவன் கண்களையும் தானே நாம் 5-6 வினாடிகள் பார்க்கின்றோம்?//
    Actually, nowadays, when Perumal says 'Hi-Bye' from the doorway itself, even that is difficult!:(

    Only if He 'opens His eyes', and calls us close to Him, even that is possible!
    :))

    ReplyDelete
  12. (Bhagavad Gita 9:29) Sargeant is more on target, and simpler: “I am the same in all beings; there is none disliked or dear to Me. But they who worship Me with devotion are in Me, and I am also in them.”

    ReplyDelete
  13. இவ்வளவோ தகவல்களாளாளாளா!

    ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு

    ReplyDelete
  14. //Can’t understand . actually what is this?//

    ”மெய்யாலும், சொற்களாலும், மனதாலும், உடம்பில் உள்ள உறுப்புக்களாலும், ’நான்’ எனும் எண்ணத்தினால் விளையும் கர்வத்தாலும், இயற்கையின் தூண்டுதல்களாலும், நான் செய்யும் எதையும், ஸ்ரீமந் நாராயணனுக்குச் சமர்ப்பிக்கிறேன்.”

    என்று பொருள்.

    ReplyDelete
  15. //தங்கள் சிறப்பான விளக்கத்திற்கு நன்றி. மேலும் நாமெல்லாம் பிரஹலாதன் போல எல்லாம் நாராயணனே என்று எண்ணும் மனப்பக்குவம் அடைய வேண்டும்//

    நன்றி பிரகாசம் ஐயா!

    ReplyDelete
  16. //Actually, nowadays, when Perumal says 'Hi-Bye' from the doorway itself, even that is difficult!:(//

    Not entirely true. For Special Darshans, VIP Darshans and Seva Darshans, it is not 'Doorway Darshan. If you get Seeghra Darshan (Rs 300/- ticket) especially early in the morning, you can get lucky. If you go on a week day - especially when there are no other holidays in the week, and when children have exams - you can get regular Darshan.

    ReplyDelete
  17. //அந்த அரங்கன்-திருப்பாணாழ்வார் படம் சூப்பரு! சுட்டது எவ்விடம்? :)//

    ராகவா! பதில் சொல்லப்பா!

    ReplyDelete
  18. KRS

    //மனைவி, குடும்பத்தை வில்லிதாசன் துறக்கவில்லை!
    தன் மனைவி, தன் குடும்பம் தான் எல்லாம் என்ற அதீதமான மோகத்தை மட்டுமே துறந்தான்! பின்னரும் குடும்ப வாழ்வில் இருந்தே அல்லவா பொன்னாச்சியும், வில்லியும் தொண்டு செய்தார்கள்!//

    அடியேன், உறங்காவில்லி தாஸர் அரங்கனத் தவிர மற்றதெல்லாம் துறந்தார் என்று கதை கேட்டேன் இள வயதில்! இப்போது, அதைப் பற்றிப் படித்ததில், நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிகிறேன் என்று தெரிந்தது.

    சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  19. //ரொம்ப பொறுமைங்க உங்களுக்கு//

    நன்றிங்க!

    ReplyDelete
  20. @ Rangan Devarajan:
    //If you go on a week day...and when children have exams - you can get regular Darshan.//

    Adhu eppadinga, i'll also have xams! :((

    //you can get lucky.//
    Even luck, Perumal only has to decide right?
    [i dont believe in luck, i believe only in Perumal]
    So, let me leave it to Him!! :)

    BTW, info-kku romba tnx!

    ReplyDelete
  21. //அவன் சொல்லும் அந்த - சரியான, 'அ'ரி யான - சமயம் பார்த்து, கயாது கருத்தரிக்கிறாள்// அருமையான வரிகள். நரசிம்மரோட கதை சொன்ன எல்லா பாகவதாளோட திருவடிக்கும் பணிவான நமஸ்காரங்கள்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP