குறுங்குடி நரசிம்மன்
திருமழிசையாரின் நரசிம்ம வைபவம் தொடர்கிறது ...
***
*கரண்டமாடு பொய்கையுள்* கரும் பனைப் பெரும் பழம்*
புரண்டு வீழ, வாளை பாய்* குறுங்குடி நெடுந்தகாய்!*
திரண்ட தோள் இரணியன்* சினங்கொள் ஆகம் ஒன்றையும்*
இரண்டு கூறு செய்து உகந்த* சிங்கம் என்பது உன்னையே?!
திருச்சந்த விருத்தம்-62
(கரண்டமாடு = கரண்டம் + ஆடு - கரண்டம் - நீர்க் காக்கை, ஆடு - விளையாடும்; கரண்ட மாடு - கறவைக் கூட்டம்; வாளை - வயல்களில் வாழும் மீன்; நெடுந்தகாய் = நெடும் + தகை - பெரும் சக்தி, பெருமை, அறிவு; ஆகம் - உடல்)
நீர்க்காக்கைகள் விளையாடும் பொய்கையிலே, கரிய பெரிய பனம்பழங்கள் விழுந்து புரள, வாளை மீன்கள் அதைத் தின்ன பாய்ந்து வருகின்றன. இப்படிப்பட்ட திருக்குறுங்குடியில் உள்ள எம்பெருமானே! திரண்ட தோள்களுடன், கோபத்துடன் வரும் இரணியனுடைய உடலை, இரண்டு கூறுகளாகச் செய்த நரசிம்மம் என்பது நீதானோ?
***
பொய்கையின் கரை ஓரத்தில், சில பனை மரங்கள்! அவற்றிலிருந்து, கருமை நிறம் (கரும்) கொண்ட பெரிய (பெரும்) பனம் (பனை) பழங்கள் (பழம்) கீழே விழுகின்றன. அவை நிலத்திலே விழுந்தாலும், சில பழங்கள் உருண்டு புரண்டு, நீரிலே வந்து விழுகின்றன (புரண்டு வீழ)!
ஆழ்வாரின் வார்த்தைகளைச் சற்று கவனித்தால், இயற்கைக் காட்சி எப்படி உள்ளது என்று விளங்கும்:
’பனைப் பழம்’ என்றோ, ‘பெரும் பனைப் பழம்’ என்றோ மட்டும் வர்ணித்தால், அது வாளை மீன்களைக் கவரும் அளவு இருக்காது! வாளை மீன்கள் பாய்ந்து வருமளவு இருக்கவேண்டுமென்றால், அவை, நீர்க்காக்கைகளைப் போல, கருப்பாக, பெரியதாக, இருக்க வேண்டும். எனவே, ஆழ்வார் இந்தக் காட்சியை, ‘கரும் பனைப் பெரும் பழம்’ என்று வர்ணிக்கிறார்.
கீழே விழும் பழங்கள், உருண்டையாக இருந்ததால், அவை விழுந்த வேகத்தில், அதிக தூரம் புரண்டு விழுந்தன என்பதை, ‘புரண்டு வீழ’ என்கின்றார் (நீர்க்காக்கைகள், சாதாரண காக்கைகளை விட, சற்றே பருத்து இருக்கும். எனவே, இதனைப் பார்த்த வாளை மீன்களுக்கு, இவை நீர்க்க்காக்கைகளைப் போலத் தோன்றைனவாம்!)
இப்படி ஒரு காட்சி எப்போதும் நடப்பது - திருக்குறுங்குடியிலே (திவ்விய தேசம் #78)!
('கரண்டமாடு' எனும் சொற்றொடருக்கு, 'கறவை மாடுகள் கூட்டம்' எனும் பொருள் கொண்டு,
'கறவை மாடுகள் கூட்டம் பொய்கை உள்ளே இருக்க, பனம் பழங்கள் உருண்டு வீழ, வாளை மீன்கள் பாய ...',
என்றும் பாசுரத்தின் பொருள் கூறுவது உண்டு. இந்த விளக்கத்தை, அடியேன் '108 வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு' எனும் நூலில் கண்டுள்ளேன்.
ஆனால், முதல் இரண்டு வரிகளையும் சேர்த்துப் பொருள் கற்பிக்கும் போது, 'கறவை மாடுகள் கூட்டம்' எனும் பொருள் அவ்வளவு பொருந்தாது என்பது அடியேன் கருத்து.
வியாக்கியானச் சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை அவர்களும், 'கரண்டமாடு பொய்கையுள்' என்பதற்கு, 'நீர்க்காக்கைகள் பொய்கையில் ஆட' எனும் பொருளிலேயே வியக்கியானம் செய்துள்ளார்)
நீர்க்காக்கைகள் விளையாடும் பெரிய பொய்கையைத் தவிர, திருக்குறுங்குடிக்கு வேறு ஏதும் விசேடம் உள்ளதா?
***
குறுங்குடியில் (அருகே உள்ள மஹேந்திரகிரி மலை அடிவாரத்தில்) பிறந்த நம்பாடுவான் எனும் பாணன், ஒரு ஏகாதசியில் விரதம் இருந்து, குறுங்குடி எம்பெருமான் (அழகிய நம்பி, வைஷ்ணவ நம்பி, திருக்குறுங்குடி நம்பி, வராஹ நம்பி, நம்பி ராயர் எனப் பல பெயர்கள்) மீது கைசிகப் பண் பாடி அவனை உகப்பித்து, அதனால் கிடைத்த பயனில் பாதியைத் தானம் செய்து, ஒரு பிரம்ம ராட்சதனுக்கு சாப விமோசனம் அளிக்கிறான்!
உயர்ந்த ஏகாதசி விரதத்தின் பலனையே தானம் செய்ததால், நம்பாடுவான் நினைவாக, இந்த ஏகாதசி (கார்த்திகை மாதம், வளர்பிறை), கைசிக (22-வது மேளகர்த்தா ராகமான கரகரப்ரியாவின் ஜன்ய ராகம், கைசிகம்) ஏகாதசி எனப்படுகிறது!
வைணவர்களைப் பொருத்தவரையில், வைகுண்ட ஏகாதசியை விட, கைசிக ஏகாதசி மிக உயர்வாகக் கருதப்படுகிறது!
இதன் காரணத்தினாலேயே, கைசிக ராகத்தை தொடர்ந்து பாடியோ, கேட்டோ வந்தால், ஆயுள் நீடிக்கும் என்றும், மோட்சமும் உறுதி என்றும் கருதப்படுகிறது!
இதன் காரணத்தினாலேயே, கைசிக ராகத்தை தொடர்ந்து பாடியோ, கேட்டோ வந்தால், ஆயுள் நீடிக்கும் என்றும், மோட்சமும் உறுதி என்றும் கருதப்படுகிறது!
***
இவ்வூர்க் கோயிலின் கோபுரத்தில் உள்ள சிற்பங்களின் உயர்வு கருதி, இது சித்ரகோபுரம் எனப்படுகிறது.
நம்பாடுவானுக்கு தரிசனம் கொடுப்பதற்காகவே கோயில் கொடிமரம் நகர்ந்ததால், இங்கு கொடிமரம் எம்பெருமானுக்கு நேராக இல்லை!
திருமங்கை மன்னன் பரமபதம் பெற்ற ஊர் இதுவே! இங்கிருந்தே மங்கையாரின் மங்கள விக்கிரகத்தை திருவாலி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
திருக்குறுங்குடி = திரு + குறு + குடி - பெரும் உருவமாக இருந்த வராகப் பெருமான், குறுகிய உருவம் கொண்டு, பூமாதேவியுடன் சில காலம் இங்கு இருந்ததாலேயே, இந்த ஊருக்கு பெரும் புகழ்!
நம்மாழ்வாரின் பெற்றோர், பிள்ளைப் பேறு வேண்டி, வைஷ்ணவ நம்பியை ஆராதித்து வந்ததாலேயே நம்மாழ்வார் அவதரித்தார். இன்றும் பிள்ளைப் பேறு வேண்டி, இந்தத் தலத்திற்கு வந்து வேண்டிச் செல்வோர் பலர்!
இராமாநுஜர், குறுங்குடி நம்பிக்கே, நாராயண மந்திரத்தை உபதேசம் செய்துள்ளார்! இறைவனே உபதேசம் வாங்கிக் கொண்ட தலம் இது!
இந்தத் தலத்தில் சிவபெருமான் சன்னிதி உண்டு. மங்கையார், 'அவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்' என்று சிவன் இவரோடு இருக்கும் நிலையை உணர்த்துகிறார். இப்போதும், குறுங்குடி ஜீயர் ஸ்வாமிகள், 'பக்கம் நின்றார்க்குக் குறையேதும் உண்டோ?' என்று கேட்கும் வழக்கம் நடைமுறையில் உண்டு.
ஒரு சமயம், சில மன்னர்கள் நம்பியைச் சேவிக்க வந்தனர். அப்போது, தெய்வநாயகன் (வானமாமலைப் பெருமான்), இவர்கள் முன் அசரீரியாய், 'நான் பூமியில் அமிழ்ந்து கிடக்கிறேன். நீங்கள் அங்கு செல்லுங்கள். கருடன் எந்த இடத்தைச் சுற்றிப் பறக்கிறானோ அங்கு நான் கிடப்பேன்' என்று சொல்ல, அதன் பின்னரே வானமாமலை திவ்விய தேசம் (#79) உருவாயிற்று என்பர்!
பெரியாழ்வார், மங்கையார், மழிசையார், நம்மாழ்வார் தவிர, இராமாநுஜர், ஒட்டக்கூத்தர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், புகழேந்திப் புலவர் போன்றோரும் அழகிய நம்பிக்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.
அறிவரிய பிரானை* ஆழி அங்கையனயே அலற்றி*
நறிய நன்மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன் மேல்*
அறியக் கற்று வல்லார்* வைட்டணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.
திருவாய்மொழி 5-5-11
என்று, நம்மாழ்வார், 'குறுங்குடியையும், அதன் பெருமைகளையும் பற்றி அறிந்தால் மட்டுமே ஒருவன் வைணவன்' என்று கூறுகின்றார் அவ்வளவு சிறப்பு இந்த ஊருக்கு!
(பிரபந்தங்களின் பலன்களைக் கூறும் பாசுரங்களிலேயே, சிறிது வித்தியாசமான பாசுரம் இது! 'இதைச் சொன்னால் இந்தப் பலன்' என்று பெரும்பாலான பாசுரங்கள் கூறும். ஆனால், 'இதைச் சொன்னால் தான் நீ வைஷ்ணவன்' என்று கூறுகின்ற 'தகுதிப் பாசுரம்' இது!)
***
இப்படிப்பட்ட திருக்குறுங்குடியில் இருக்கும் பெருமானைப் பார்த்து, திருமழிசையாழ்வார், 'பெருமையுடையவனே (தகாய்!)! நீ தானே அன்று, வலிமை வாய்ந்த இரணியனை, விளையாட்டாகக் கிழித்தாய்?' என்று கேட்கின்றார்.
உன்னையே! - உன்னைப் பார்த்தால், மிக அமைதியாக, அழகாக, கருணை உள்ளவனாக இருக்கின்றாய்! நீயா அன்று பயங்கரமான சிங்க உரு எடுத்தாய்? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? என்று, ஆச்சரியமும், சந்தேகமும் தொனிக்க, 'உன்னையே?' என்று விளிக்கிறார்!
***
சென்ற பதிவில், சங்க நூல்களுக்கும், திருச்சந்த விருத்தத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்று கூறியிருந்தேன்.
சங்க நூல்களிலும், ஆழ்வார்களின் பிரபந்தங்களிலும் கூறப்பட்டுள்ள திருமால் பெருமையும், கதைகளும், வேத முறைகளும், அடியவர்களின் வாழ்க்கை நெறியும், அதிக ஒற்றுமை கொண்டதாய் அமைந்துள்ளன.
பல ஒற்றுமைகள் இருந்தாலும், நரசிம்மர் பாசுரங்கள் நான்றிற்கும், சங்கநூல்களுக்கும் உள்ள சில ஒற்றுமைகளை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
உதாரணத்திற்கு, பரிபாடலில் நரசிம்மாவதாரக் காட்சி:
...
செயிர் தீர் செங்கச் செல்வ! நிற்புகழப்-புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்-
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட, அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு, இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியொடு
தடி தடி பல பட - வகிர் வாய்த்த உகிரினை;
...
பரிபாடல்-4:10-22
கடுவன் இளவெயினனார் இயற்றிய நான்காம் பரிபாடலில், இவ்வாறு நரசிம்மாவதாரத்தைப் பற்றி விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
(கடைச் சங்கத்துப் புலவர்கள் எழுதிய எட்டுத் தொகையில், 5-வது தொகை, பரிபாடல். 13 புலவர்கள் இயற்றிய 70 பாடல்கள் இருந்ததாக வரலாறு கூறினாலும், கிடைத்திருப்பது, 22 முழுப் பாடல்களே! புறத்திரட்டுத் தொகையில் இருந்து, மேலும் இரண்டு பாடல்களும், சில உறுப்புக்களும், பகுதிகளும் கிடைத்துள்ளதாக அறிஞர்கள் கூறுவர். பரிபாடலில், 6 பாடல்கள் - 1,2,3,4,13,15 - திருமால் மேல் இயற்றப் பட்டவை)
***
மழிசையார் வாக்கில், நம் நாராயணன், 'பால் நிறக் கடல் கிடந்த பத்மநாபன்' (திருச்சந்த விருத்தம்-23)! அவன் வயிற்றில் இருந்த தாமரையில் இருந்து பிரமன் தோன்றினான்.
பெரும்பாணாற்றுப் படையில், காஞ்சி மாநகரின் மாண்பு பேசப்படுகிறது. அதில், பிரமன் பிறந்த காட்சி கீழ்க்கண்டவாறு விவரிக்கப் படுகிறது:
...
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்
...
பெரும்பாணாற்றுப்படை 402-405
'நீல நிறத்தில் உள்ள நெடியவனான நாராயணனின் தொப்புள் கொடியில் இருந்த தாமரையில் தோன்றிய நான்முகன்' என்கின்றது ஆற்றுப் படை!
(பெரும்பாணாற்றுப் படை, சங்க நூற்தொகைகளில் ஒன்றான பத்துப் பாட்டில் 4-வது. இதை இயற்றியவர், தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்க்கண்ணனார்)
இப்படி, சங்க நூல்களில் பல கருத்துக்கள், ஆழ்வார் பாசுரங்களை ஒட்டி அமைந்துள்ளன. ஆனால் இவை அனைத்தையும் படித்து (எழுதவும் தான்!) அனுபவிக்க, இந்த ஆயுள் போதாது!
இப்படி, சங்க நூல்களில் பல கருத்துக்கள், ஆழ்வார் பாசுரங்களை ஒட்டி அமைந்துள்ளன. ஆனால் இவை அனைத்தையும் படித்து (எழுதவும் தான்!) அனுபவிக்க, இந்த ஆயுள் போதாது!
***
திருமழிசையார் அநுபவித்த நரசிம்மர், திருப்பாணாழ்வாரிடம் சென்று, தன்னைப் பாடச் சொல்கிறார் ...
- நரசிம்மர் வருவார் ...
அருமையா எழுதிருக்கீங்க ரங்கன் ஐயா.. நரசிம்மர் பற்றிய அருமையான தொகுப்புகள்.
ReplyDeleteவிஜய்
திருச்சி
" உன்னைப் பார்த்தால், மிக அமைதியாக, அழகாக, கருணை உள்ளவனாக இருக்கின்றாய்! நீயா அன்று பயங்கரமான சிங்க உரு எடுத்தாய்? பார்த்தால் அப்படித் தெரியவில்லையே? என்று, ஆச்சரியமும், சந்தேகமும் தொனிக்க, 'உன்னையே?' என்று விளிக்கிறார்!"
ReplyDeleteWonderful!!!
ஓம்ம்ம் நமோஓஓஓ நாராயணாஆஆஆய!
ReplyDeleteஅங்கே நந்தி நகர்ந்தது; இங்கே கொடிமரம் நகர்ந்ததா? காலதேசவர்த்தமானங்களுக்குத் தகுந்து தான் தெய்வங்களும் நடந்து கொள்கின்றன போலும். நல்லவேளை; காலம் மாறியது. எல்லோரும் எளிதில் முகந்து குடித்து அனுபவிக்க உரிய அர்ச்சைகளை அனுபவிக்க யாருக்கும் இனி நந்தியும் கொடிமரமும் நகரத் தேவையில்லை!
ReplyDeleteஎம்பெருமான் வடுகநம்பி உருவம் கொண்டு எம்பெருமானாருக்கு திருமண் இட்ட நிகழ்வினை அறியேன். அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூறுங்கள் ரங்கன் அண்ணா.
பாசுரம் உரைத்தால் கிடைக்கும் பேறுகளை பலச்ருதிகளைப் போன்ற கடைசி பாசுரங்கள் கூறும். ஒருவேளை வைணவனாவதும் ஒரு பெரும் பேறு போலும்; அதனால் தான் அதனையே பலனாகக் கூறினார் சடகோபர்.
சங்கப்பாடல்கள் பாடும் விண்ணவன் பெருமையைக் கூறியதற்கு நன்றி அண்ணா. கூடலில் வரும் 'இலக்கியத்தில் இறை' தொடருக்கு நல்ல குறிப்புகள்.
@Kumaran:
ReplyDelete''பாசுரம் உரைத்தால் கிடைக்கும் பேறுகளை பலச்ருதிகளைப் போன்ற கடைசி பாசுரங்கள் கூறும். ஒருவேளை வைணவனாவதும் ஒரு பெரும் பேறு போலும்; அதனால் தான் அதனையே பலனாகக் கூறினார் சடகோபர்.''
I think that's the best meaning we can get out of it.
Indeed, being a Vaishnava is leaving all at His feet, complete surrender...
After that, nothing else matters, as He takes care of everything...
I think Azhwar wished us to see being His devotee as our biggest benefit...
Perumal as our Everything...
PS:Tamil typing mudiyavillai. Manikkavum!
ஆழ்ந்த ஆய்வு. கைசிக ஏகாதசி கேள்விப்பட்டது கூட இல்லை. நல்ல விவரங்கள்.
ReplyDeletehttp://kadavur.blogspot.com
நூறு நாளில் அபிராமி அந்தாதி
வைணவன் என்பவர் யார்?
ReplyDeleteபூணூல் அணிந்தவர் மட்டுமே வைணவர் அல்ல!
நெற்றியில் நாமம் போட்டவர் மட்டுமே வைணவர் அல்ல!
பெருமாள் பாதம் சரணாகதி அடைந்தவர் அனைவருமே வைணவர் ஆவர்!
விஜய்
ReplyDelete//அருமையா எழுதிருக்கீங்க ரங்கன் ஐயா.. நரசிம்மர் பற்றிய அருமையான தொகுப்புகள்.//
நன்றி.
குமரன்
ReplyDelete//எம்பெருமான் வடுகநம்பி உருவம் கொண்டு எம்பெருமானாருக்கு திருமண் இட்ட நிகழ்வினை அறியேன். அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூறுங்கள் ரங்கன் அண்ணா.//
திருவனந்தபுரத்தில், ராமாநுஜர் வைணவத்தைப் போதிக்கச் சென்றபோது, அதை விரும்பாத நம்பூதிரிகள், எங்கே இவரால் தம் தொழிலுக்கு இடையூறு வருமோ என்று அஞ்சி, அனந்தபத்மநாபனை வேண்டுகின்றனர். அவரும், தம் எதிரே இருந்த கருடாழ்வாரை நோக்கி, ‘ராமானுஜரை குறுங்குடியிலே கொண்டு விடு’ என்று பணிக்க, கருடாழ்வானும் அவ்வாறே செய்தான்.
(திருவனந்தபுரத்தில், வைணவம் வளர்வதை விரும்பாத சில நம்பூதிரிகள் ராமானுஜரைக் கொல்ல முயற்சிக்க, எம்பெருமான் கருடாழ்வானை விட்டு ராமானுஜரை திருக்குறுங்குடியில் விட்டு வரச் செய்ததாகவும் கதை உண்டு)
கருடன் திருவனந்தபுரத்தை விட்டுக் கிளம்பியதாலேயே, திரு அனந்தபுரத்தில், கருடாழ்வார் இல்லை என்பர்.
தூங்கச் சென்ற ராமானுஜர் காலையில் எழுந்து பார்த்தபோது, தாம் குறுங்குடியில் இருப்பதை அறிந்து, இதுவும் அவன் மாயையோ என்று நினைத்து, காலைக் கடன்களை துவங்கினார். திருமண் தரிக்க, எப்போதும் தன் சீடனான வடுக நம்பியை அழைக்கும் வழக்கம் அவருக்கு உண்டு.
அன்றும் அவர் ‘வடுகா’ என்று அழைக்க, எம்பெருமானே வடுகநம்பி வேடம் கொண்டு, இவர் முன்னே வந்து தம் திருக்கரத்தால் ராமானுஜருக்கு திருமண் காப்பிட்டு விட்டு, திருமண் பெட்டி முதலியவற்றை எடுத்துக் கொண்டு ராமானுஜர் பின்னே கோயிலுக்கு வருகின்றான். துவஜஸ்தம்பத்தின் முன் திருமண் பெட்டியை வைத்து விட்டு, ராமாநுஜரைக் கடந்து விரைவாக கோயிலின் உள் சென்றதும், ’புது வடுக நம்பி’ மறைந்து விட, ராமாநுஜருக்கு அப்போது தான் நடந்தது விளங்குகிறது. எனவே, ராமாநுஜர் இப்பெருமானுக்கு வடுக நம்பி என்று பெயரிட்டு அழைத்தார்.
இதனிடையே, Original வடுகநம்பி திருவனந்தபுரத்தில் ராமாநுஜரைத் தேடி அலைய, அவர் கனவில் பெருமான் தோன்றி, ராமாநுஜர் திருக்குறுங்குடியில் இருப்பதாகத் தெரிவிக்க, வடுகநம்பி, சில நாள் கழித்து திருக்குறுங்குடி வந்தடைந்தார் என்று வரலாறு கூறுகிறது.
அண்ணே
ReplyDelete//வைணவன் என்பவர் யார்?
பூணூல் அணிந்தவர் மட்டுமே வைணவர் அல்ல!
நெற்றியில் நாமம் போட்டவர் மட்டுமே வைணவர் அல்ல!
பெருமாள் பாதம் சரணாகதி அடைந்தவர் அனைவருமே வைணவர் ஆவர்!//
நீங்கள் கூறியது சரி. ஆனால், நம்மாழ்வார், இதற்கும் ஒரு படி மேலே போய், அப்படிச்
சரணடைந்தாலும், குறுங்குடிப் பெருமை பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்றே நம்மாழ்வார் கூறுகிறார்.
’சரணடையாவிட்டாலும் பரவாயில்லை; திருக்குறுங்குடி பெருமை பற்றித் தெரிந்தாலே அவன் வைணவன் தான்’ என்று நம்மாழ்வார் கூறுவதாகவும் பொருள் கொள்ளலாம்.
’யார் வைணவன்?’ என்று அலசினால், நம் நரசிம்மாயணம் முடியாது. இருந்தாலும், சிறு குறிப்பு ஒன்று:
திருமாலையில், தொண்டரடிப்பொடியார், வைணவன் என்றால், அடியவன் என்றே கூறுகின்றார். ’யார் அடியவர்?’ எனும் கேள்விக்கும் பதிலை அவரே கூறுகின்றார்.
‘அடிமையில் குடிமை இல்லா
பல சதுப்பேதி மாரில்
குடிமையில் கடமை பட்ட
குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய்
மொய்கழற்கு அன்பும் செய்யும்
அடியரை ...’
என்றே கூறுகின்றார்.
அந்தண குலத்தில் பிறந்தாலும், எம்பெருமான் அடியும், அவன் அடியவர்கள் அடியும் பற்றாவிடில், அவர்கள் அந்தணர்கள் இல்லை என்பதையும் இன்னொரு பாசுரத்தில் அவரே குறிப்பிடுகிறார்:
அமரவோரங்கமாறும்*
வேதமோர் நான்கும் ஓதி*
தமர்களில் தலைவராய*
சாதி அந்தணர்களேலும்*
நுமர்களைப் பழிப்பராகில்*
நொடிப்பதோர் அளவில்* ஆங்கே
அவர்கள் தாம் புலையர் ...
என்று!
குமரன்
ReplyDelete//சங்கப்பாடல்கள் பாடும் விண்ணவன் பெருமையைக் கூறியதற்கு நன்றி அண்ணா. கூடலில் வரும் 'இலக்கியத்தில் இறை' தொடருக்கு நல்ல குறிப்புகள்.//
இங்கு எப்போதாவது சென்றதுண்டு! தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி!
அய்யா
ReplyDelete//ஆழ்ந்த ஆய்வு. கைசிக ஏகாதசி கேள்விப்பட்டது கூட இல்லை. நல்ல விவரங்கள். //
நன்றி.
Ms.
ReplyDelete//Wonderful!!!//
Thanks. Credit really goes to ThirumazisaiyAzvAr.
வடுகநம்பிகள் வைபவத்தைச் சொன்னதற்கு நன்றி அரங்கன் அண்ணா.
ReplyDelete'நம்பாடுவானுக்கு தரிசனம் கொடுப்பதற்காகவே கோயில் கொடிமரம் நகர்ந்ததால், இங்கு கொடிமரம் எம்பெருமானுக்கு நேராக இல்லை!'
ReplyDeletePls. explain?
Adharku edharkku kodimaram naharndhadhu?
Regards,
In Love With Krishna
Hi
ReplyDelete//Adharku edharkku kodimaram naharndhadhu?//
As per the Social Environment those days, people from some castes were not allowed to enter the temple, and are allowed to only see from outside - if they get a view. However, in most temples, the Dwajasthamba prevents people from seeing the Lord Directly (though it is not meant for blocking, but for alignment).
However, Emberuman gave special Darshan for his devotees - here, for NampAduvAn - the Dwajasthamba moved, so he could get a good Darshan.
Thanks.
ReplyDeleteMaybe that's why it is said ''it is maybe even possible to measure His omnipotence, but it is impossible to meaasure His approachability''
(Srimadbhagavatam)
May Perumal and Thaayar bless us with their grace!