Saturday, November 05, 2011

பொன்னார் மேனியனே! பொய் சொன்னாரோ ஆழ்வாரே?

திருக்கோயிலூரில் அடை மழை! கும்மிருட்டு!

அந்தப் பயணி, ஒரு வீட்டின் கதவைத் தட்டுகிறார்!
அந்த வீட்டு ஐயாவுக்கு, அதிர்'ஷ்'டமே தன் வீட்டுக் கதவைத் தட்டுது-ன்னு அப்ப தெரியலை!

"அருளிச் செயல்" (4000 திவ்யப் பிரபந்தம்) தன்னோட வீட்டில் தான் தோன்றப் போகிறது-ன்னு அவர் நினைச்சிப் பார்த்திருப்பாரா என்ன?பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா?
இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது!

(ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்!
திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி!
சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!)

வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி....

டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்!

பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா?

பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க!
இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!!

--------------
மீண்டும் டொக் டொக் டொக்! - இன்னொருவர் தட்டுகிறார்!

பேய்: ஐயா, என் பெயர் பேயோன்; நான் மயிலையில் இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்குத் தங்கிக்கறேனே!

பொய்கை: எனக்கு உரிமை இல்லாத இடத்தில், இவங்க ஒவ்வொருத்தரையும் வாங்க-ன்னு கூப்புடுறேனே! இது என்ன விந்தை!
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! மூவர் நிற்கலாம்!!!

மூவரும் நின்று கொண்டே, பேசிப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்! ட்விட்டரில் நாம் கழிப்பதைப் போலவே :)


திடீரென்று...கும்மிருட்டில்...மூவருக்கும் மூச்சு முட்டுது!
மூவர் நிற்கும் இடத்தில், இப்போ நாலாவதா யாரோ பிடிச்சி நெருக்கறாங்க! அப்பறம் விட்டுடறாங்க! மறுபடியும் நெருக்கறாங்க....
அச்சோ.....இப்படிப் போட்டு நெருக்கினா எப்படி? வலிக்குதே!! - கள்வனோ?


யாருப்பா இந்த அறிவு கெட்ட திருடன்? ஒன்னுமே இல்லாத அன்னாடங் காய்ச்சிகள் கிட்டயா திருட வருவான்?
வந்தது தான் வந்தான்! இப்படியா சத்தம் போடாமல் வருவது? ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே! கும்மிருட்டில் ஆளும் சரியாத் தெரியலையே! ஓசையும் இல்லை! ஒளியும் இல்லை!

பேய்: இல்லை! இது மனித வாசனையே இல்ல! விலங்கும் இல்ல! விளக்கு இருந்தாலாச்சும் யாருன்னு பார்க்கலாம்! இந்த நள்ளிரவில் யாரிடம் போய் விளக்கு கேட்பது?
(உம்...பிற்கால மனிதர்களா இருந்தா பாக்கெட்டிலேயே நெருப்பு வைத்துக் கொண்டு, உலா வருவாங்க! ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே! என்ன செய்ய :)

பூதம்: உம்ம்! அகல் இல்லை, எண்ணெய் இல்லை, திரி இல்லை, நெருப்பு இல்லை!

பொய்கை: "இல்லை இல்லை" என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது?
ஆனால்........எதுவும் எனது இல்லை, எனது இல்லை! - இந்த "இல்லை"-யை வைத்துக் கொண்டு விளக்கு ஏற்ற முடியுமே!

எனது இல்லை, எனது இல்லை!
= எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது! என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ...ஏதோ ஒன்றுக்காக கொடுக்கப்பட்டது!

யாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா? பொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது! செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க!
= இப்படி எல்லாமே.....கிடைச்சதும் அடைஞ்சதும் தானே?


இப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்தை உச்சரிக்கிறார்!
அவருக்கு நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல! - அதனால் "வையம்" என்றே துவங்குகிறார்

தமிழ் இலக்கியங்கள் பலவும் "உலகம்" என்னும் முதற் பொருள் வைத்தே தொடங்குவது போல்...ஆதி பகவன் முதற்றே "உலகு" என்பது போல்....
வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, அருளிச்செயல் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு!
உலகம், கடல், ஞாயிறு போற்றுதும்-ன்னு சிலப்பதிகாரம் போலவே துவங்குது!

வையம்=தகளியா, வார்கடலே=நெய்யாக
வெய்ய கதிரோன்=விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!


உலகத்தை அகல் ஆக்கினேன், சூழ்ந்த கடலை நெய்யாக்கினேன்,
காக்கும் கதிரவனை நெருப்பாக்கி்னேன்...
சக்கரம் ஏந்தியவன் திருவடிக்கு, தமிழ்ச் சொல்மாலை சூட்டினேன்!
மனித குலத்தின் "இடர்" எனும் இருள் நீங்காதா?

முதல் விளக்கு ஏற்றியாகி விட்டது! ஏற்றிய விளக்கைக் காத்துக் கொள்ள வேண்டுமே! விளக்கில் இருந்தே விளக்கு எடுக்கிறார் பூதத்தார்!

அன்பே=தகளியா ஆர்வமே=நெய்யாக
இன்புருகு சிந்தை=இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்!


அன்பை அகல் ஆக்கினேன், ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கினேன்,
(வேதம், படிப்பு-ன்னுல்லாம் வரைமுறை இல்லாமல், "ஆர்வம்" என்பதே ஆதாரம்)
அவனை உருகி மகிழும் சிந்தனைத் திரி ஆக்கினேன்...
அதில் விளக்கு ஏற்றினேன்! நாராணன் என்பானுக்கு ஞானத் தமிழைச் சொன்னேனே!

* உலகத்தை ஒரு விளக்காகவும்,
* அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்கணும்?
முதல் விளக்கு = புற இருள் அகற்ற = அதான் உலகம்/சூரியன்!
இரண்டாம் விளக்கு = அக இருள் அகற்ற = அதான் அன்பு/சிந்தனை!!

இறைவன் தெரிய வேண்டும் என்றால், இந்த இரண்டு விளக்குகளும் ஏற்ற வேணும்!
லட்சம் லட்சமாய்ச் செலவழிச்சி, லட்ச தீபம் ஏற்றினாலும் தெரியாதவன்....
இந்த இரண்டு விளக்குக்கும் தெரிவான்!
இதையே முதலாழ்வார்கள் ஏற்றி நமக்கு ஒளி காட்டினார்கள்!இப்போ நல்லாத் தெரியுது, அந்த நாலாம் ஆசாமி யார் என்று! ஆகா...பெருந் திருடன்! அடே...நீயா எங்களை இப்படிப் போட்டு நெருக்கித் தள்ளியது???
பொய்கை-பூதம் ஏற்றிய விளக்கின் ஒளியிலே, பேயார் அந்தக் கள்வனைக் கண்டு விடுகிறார்!

திருக்கண்டேன்! பொன்மேனி கண்டேன்! திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்! - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்! புரிசங்கம் கைக்கண்டேன்!
என்னாழி வண்ணன்பால் இன்று!!


விளக்கின் ஒளியில் முதலில் கண்ணில் பட்டது யார்?
கடவுளா? இல்லை! - ஒரு பெண்!
ஆமாம்! கள்வனின் காதலி, அவன் மார்பிலே இருக்கிறாள்! = திருக் கண்டேன்!

பொன்மேனி கண்டேன்! - அட, ஆழ்வார் கூடப் பொய் சொல்வாரா என்ன?
பொன்மேனி சிவபிரானுக்கு உரியது ஆயிற்றே! பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு அசைத்து......என்பதல்லவா பாட்டு!

பெருமாள் நீல மேனியன் ஆயிற்றே! "நீலமேனி கண்டேன்"னு தானே சொல்லணும்? பொன்மேனி கண்டேன் = ஏன் இந்தப் பொய்?
இவரு நெசமாலுமே இறைவனைக் கண்டரா? இல்லை சும்மானா வர்ணனையா? மெய் விளக்க வந்த பொய் விளக்கோ தமிழ்ப் பாசுரங்கள்???


நீலமேகக் கல்-னு ஒரு இரத்தினக் கல் இருக்கு! அது உண்மையான கல்லா-ன்னு எப்படிச் சோதனை செய்வது?
அதை பாலில் போடணும்! போட்டா, முழுப் பாலும் அப்படியே, சொட்டு நீலம் கணக்கா..... நீலமா மாறிடும்!

அதே போல், திருமகள் விலை மதிப்பில்லா பொன் "மணி"! பெண் "மணி"! - அவள் நிறமும் அப்படியே!

அன்பர்கள் எல்லாம் இறைவனைச் சேவிக்க வருகிறார்கள்!
அவர்கள் தொலைவில் வரும் போதே, அவர்களை இவள் பார்த்து விடுகிறாள். தன் குழந்தையின் வருகையைத் தெருக்கோடியிலேயே காணும் ஒரு தாய் போல, அவன் திருமார்பில் இருந்து எட்டி எட்டிப் பார்க்கிறாள்!

கைத்தாங்கலாக, அவன் மார்பிலும் கை வைக்க...எட்டிப் பார்க்க...
அவள் தீண்டிய அடுத்த நிமிடம்....
அந்தக் கருப்பனும் வெளுப்பன் ஆகி விட்டான்!

நீலமேகக் கல் பட்டவுடன், பால் நீலமானதைப் போல், நீலமேனியாய் இருந்தவன், அவள் தீண்டல் பட்டு, மின்ன ஆரம்பித்து விட்டான்!

அதான், திருக் கண்டேன்-னு அன்னையை முதலில் பார்த்த ஆழ்வார், அடுத்து பொன்மேனி கண்டேன்-னு சொல்லிட்டார்!

பொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்! -
பொருட் செல்வம் தரும் அவள், அவனையும் ஒரு பொருளாகச் செய்து விட்டாள்!
இப்படி மனைவியின் மகிமையால், அவனுடைய குடும்ப கலரு போய், நல்லா செவ செவன்னு, மனைவியின் கலரு ஆயிட்டான் ! :)


அருக்கண் "அணி" நிறமும் கண்டேன்-னு உண்மையைப் போட்டு உடைக்கறாரு! அருக்கண்-அருக்காணி:))

அவன் கையில் பொன்னாழி என்னும் சக்கரம் கண்டேன்!
புரிசங்கம் என்னும் வலம்புரிச் சங்கு கண்டேன்!
என் ஆழிவண்ணன் பால் இன்று! - என்று பாடி முடிக்கிறார்! அவன் "ஆழி வண்ணன்" தான் என்று இறுதியில் சொல்லி, "பொன்மேனி" கண்டேன் என்று தான் முதலில் சொன்னது அவளையே என்றும் காட்டுகிறார்!

இப்படி மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்!
இடைகழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு!
தூய தமிழ்ப் பெயர்களான ஆயனார் - பூங்கோவல் நாச்சியார் என்றே பெயர்கள்!

திருக்கோவிலூர் எம்பெருமான், ஓங்கி உலகளந்த உத்தமன் கோலத்தில்!


பொதுவா கோயில்களில், பெருமாள் நின்னுக்கிட்டு இருப்பார்! இல்லை உட்கார்ந்துகிட்டு இருப்பார்! இல்லை படுத்த வண்ணம் இருப்பார்! - நின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தக் கோலங்களைச் சொல்லுவாய்ங்க!

ஆனா நடந்தான்-னு இன்னொரு கோலமும் இருக்கு!
அதாச்சும் காலைத் தூக்கி நடக்குறா மாதிரி ஒரு pose! அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்! அதில் திருக்கோயிலூர் மிக முக்கியமான ஒன்று!* பொய்கையாழ்வார் = 100 வெண்பாவும்,
* பூதத்தாழ்வார் =100,
* பேயாழ்வார் = 100
- இந்த முன்னூறும் தான் தமிழ்ப் பாசுரங்களின் துவக்கம்!
- அது துவங்கிய இடம்-னு புண்ணியம் கட்டிக் கொண்ட ஊர், திருக்கோயிலூர்!

தமிழ் வேதங்களுக்குப் பேதம் என்பதே இல்லை!
* மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை!
* இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லை!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்று! = சாதி அந்தணர்களேலும், நுமர்களைப் பழிப்பார் ஆகில், அவர்கள் தான் புலையர் போலும், அரங்க மா நகருளானே!
சமணத்தை ஏசாமல், சிவனையும் சேர்த்தே போற்றிற்று! ஒவ்வொரு பதிகத்தின் பத்தாம் பாட்டிலும் சமணத்தைச் சிலர் ஏசியது போலெல்லாம் அது ஏசவில்லை!

வடமொழி வேதங்களை இன்ன இன்ன ஆட்கள், இன்ன இன்ன காலங்களில், இப்படி இப்படித் தான் ஓத வேண்டும் என்று நெறிமுறைகள் இருக்கு! பெண்கள் ஓதவே கூடாதாம்!
ஆனால் தமிழ் வேதமான திருவாய்மொழி அப்படி இல்லை!
ஆண்-பெண் யார் வேண்டுமானாலும் ஓதலாம்! - எந்தச் சாதியினரும், எந்த வேளையிலும் ஓதலாம்!


அந்தப் பாசுரங்களைச் செய்த ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேரில், ஒன்பது பேர் மற்ற குலங்களில் இருந்து வந்தவர்கள்!
இவர்கள் செய்து வைத்த வேதத்தைத் தான், பெருமாள் கோவில்களில், "உயர் குலம்" என்று சொல்லிக் கொண்டவர்கள், இன்னிக்கும் ஓதிக் கொண்டு உள்ளனர்!

வேள்விகள், பூசைகள், சடங்குகள் - இது எல்லாம் கடந்தது தான் தமிழ் வேதம்! இதற்கு ஒப்பும் இல்லை! மிக்கும் இல்லை!


சரி...வந்தது வந்தோம்...திருக்கோயிலூர்...தென் பெண்ணை ஆற்றங்கரையில் இறங்கலாமா?

பாரியின் நட்புக்காக, தன் உயிரையே கொடுத்த தமிழ்ச் செம்மல் கபிலர்
- அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறையும், கபிலர் குன்றாய், பெண்ணையாற்றில்!


இன்னிக்கி என்ன, முதலாழ்வார்கள் பற்றிய திடீர் பதிவு-ன்னு பாக்குறீங்களா? = நா. சொக்கனின் இந்தப் பதிவைக் காணுங்கள்! வெவரம் புரியும்!:)

தமிழில்....பல வகை உண்டு
1. செந்தமிழ்
2. செழுந்தமிழ்
3. அந்தமிழ்
4. நற்றமிழ்
5. தீந்தமிழ்

6. பைந்தமிழ்
7. தனித் தமிழ்
8. இன் தமிழ்
ஆனால் ஆழ்வார்களால், தமிழுக்குக் கிடைத்த புதிய தமிழ்...
9. ஈரத் தமிழ்!! = "ஆழ்ந்து" போனதால் வந்த.....ஈரப் பாசுரங்களின்.....ஈரத் தமிழ்!!!

20 comments:

 1. மற்ற ஆழ்வார்கலைப் பொறாமை பட வைத்துவிட்டீர்களே. எங்களை பற்றி எப்போ பாடப் போகிறீர்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள். தேனினும் இனிமையாக உள்ளது உங்கள் எழுத்து. அதன் சாரமோ எனக்கு விவரிக்கப் போதிய அறிவில்லை! வளர்க உங்கள் பணி!
  amas32

  ReplyDelete
 2. //பொன்னார் மேனியேனே! பொய் சொன்னாரோ ஆழ்வாரே?//
  What's with the "Sensational" title? lol...

  ReplyDelete
 3. அருமையான விளக்கம்.

  வாழ்க.

  அன்புடன்,
  இராம.கி.

  ReplyDelete
 4. such a wonderful article with clear explanation.samy

  ReplyDelete
 5. @KRS: Jus noticed, my second comment never got published!
  The post is phenomenal...needless to say, i loved it. :)
  And, the pics are awesome too.
  Especially, the one in which you have "closed up" on thaayar in His chest...it is breathtakingly beautiful. i have been looking at dat pic for soo long now!

  ReplyDelete
 6. சரி, இது ஏதோ பண்டாரப் பதிவு என்று விட்டு விலகத் தலைப்பட்டேன். அப்போதுதான் திரு. இராம.கி. இதில் பின்னூட்டம் இட்டிருப்பதைக் கவனித்தேன். அவர் எழுதியிருந்ததும் நேர்முறையாக (positive) இருந்ததா, அது காரணம் இப் பதிவு முழுதையும் வாசித்தேன். தொடுப்புக் கொடுத்திருந்த பதிவையும் சேர்த்து வாசித்தேன்.

  //தமிழ் வேதங்களுக்குப் பேதம் என்பதே இல்லை!
  மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை! இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லை!
  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்று! சமணத்தை ஏசாமல், சிவனையும் சேர்த்தே போற்றிற்று!//

  இவையெல்லாம் இதுவழி யன்றி வேறு எங்கு கிட்டியிருக்கக் கூடும்!

  இப் பதிவின் வழி, திருக்கோவிலூர் போகும் - கபிலர் குன்றையும் பார்க்கும் - அவாவினை எம்முள் ஏற்றிவிட்டீர்கள்.

  வாழ்க!

  ReplyDelete
 7. அமுத உண்ட
  ஆனந்தம்

  வாழ்த்துகள்

  ReplyDelete
 8. வந்துகொண்டிருக்கிறேன் பதிவின் தலைப்பைப்படித்தாலே பரவசம்!

  ReplyDelete
 9. //ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! //

  >>>காய்ஞ்சிபோயி?:ஆனாலும் என்ன அவர் காஞ்சன்(தங்கம்) ஆச்சே ஒளிவீசுமேஉடலில்!

  //மூவரும் நின்று கொண்டே, பேசிப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்! ட்விட்டரில் நாம் கழிப்பதைப் போலவே :)
  []
  /// அதுசரி:)
  //நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல! - அதனால் "வையம்" என்றே துவங்குகிறார்
  தமிழ் இலக்கியங்கள் பலவும் "உலகம்" என்னும் முதற் சொல் வைத்தே தொடங்குவது போல்...ஆதி பகவன் முதற்றே "உலகு" என்பது போல்....வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, அருளிச்செயல் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு!
  உலகம், கடல், ஞாயிறு போற்றுதும்-ன்னு சிலப்பதிகாரம் போலவே துவங்குது////

  உலகம் வையம் என்று தான்பலரும் ஆரம்பிக்கிறார்கள் உண்மைதான் ..உங்கதோழிகூட திருப்பாவைல இரண்டாம்பாட்டில்(அல்லதுமுதல்பாட்டை காப்பாய் வைத்துக்கொண்டால்) வையத்து வாழ்வீர்காள் என்கிறாள்.

  //

  அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்கணும்?
  முதல் விளக்கு = புற இருள் அகற்ற = அதான் உலகம்/சூரியன்!
  இரண்டாம் விளக்கு = அக இருள் அகற்ற = அதான் அன்பு/சிந்தனை!!

  ///

  அருமை. அகத்திலே அன்பிருந்தால் புறத்திலே ஒளி தானாய் வராதோ?

  திரும்பிவரேன்
  இப்போ அன்போடு போறேன்:)

  ReplyDelete
 10. திருக்கண்டேன்! பொன்மேனி கண்டேன்! திகழும்
  அருக்கன் அணி நிறமும் கண்டேன்! - செருக்கிளரும்
  பொன்னாழி கண்டேன்! புரிசங்கம் கைக்கண்டேன்!
  என்னாழி வண்ணன்பால் இன்று!!

  >>>>பொன்மேனி விளக்கம் அருமை.நானும் இப்படி நினச்சேன். ஆனா ரவிமாதிரி உணர்ந்து அழகா விளக்கத்தெரியவில்ல.

  ReplyDelete
 11. மொத்தத்தில் மிக அருமையான பதிவு..ஒவ்வொருவரியையும் ரசிச்சேன் ரவி. ஆழ்வார்களைப்பற்றி என்ன எழுதினாலும் ஆழ்ந்து போகிறது மனசு.
  இன்னமும் திருக்கோவிலூரைப்பார்க்கவில்லையே என இருக்கிறது.

  ReplyDelete
 12. முதலாழ்வார்களைப் பற்றி இந்த இடைகழி நிகழ்வினைத் தவிர வேறு ஏதேனும் தகவல்கள் உண்டா இரவி?

  ReplyDelete
 13. Your explanations are very good.I like it.Please write often .

  ReplyDelete
 14. நல்ல இடுகை.

  //சமணத்தை ஏசாமல், சிவனையும் சேர்த்தே போற்றிற்று!//
  ஏசவில்லையாக இருக்கலாம் (நான் படித்தவறை), ஆனால் எல்லாமே திருமால் தான் என்பது போன்ற பாடல்கள் இருக்கின்றன அல்லவா.

  இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
  வலிந்து வாதுசெய்வீர்களும் மற்று நும் தெய்வமும் ஆகி நின்றான்

  //
  போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மையின்னே
  தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே,
  சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்,
  ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே
  //

  திருமால் தான் ஒரே கடவுள்.
  அவரை வழிபட்டா தான் சுவர்க்கம். ஆனா எல்லாரும் சுவர்க்கம் போயிட்டா உலகம் என்னத்துக்கு ஆகும் (இந்தப் புரிதல் சரியா?)
  அதனால் தான் உங்களை சிறுதெய்வங்களை வழிபடவச்சிருக்கான் இந்த மாயம் வல்ல திருக்குருகூர் ஆதிநாதன்.
  அதை புரிஞ்சிகிட்டு (அவனை வணங்க) ஓடி வாங்க.

  இதெல்லாம் 'ஏசுதல்' இல்லை. ஆனா நிச்சயமா ஒரு teasing தொனி இருக்கு.
  இன்னைக்கு சகஜமா எடுத்துக்கற மாதிரி அன்னிக்கு எடுத்துகிட்டு இருக்க மாட்டாங்க.

  அந்த பாடல்கள்ல ஒரு பாட்டுல சிவபெருமானை 'நக்கபிரான்'னு பாடுறார் (நகுதலுக்கு உரியவன்?)
  நாராயணன் அருள்னாலதான் மார்க்கண்டேயனுக்கு சிவபெருமாள் அருள் புரிய முடிஞ்சதுங்கறார்.

  'எல்லாம் ஒரே பரம்பொருள்' ங்கற மாதிரி இல்லை (பொய்கையாழ்வாரோட 'அரன் - நாரணன் நாமம் ஆண்விடை-புள் ஊர்தி') , சிவபெருமானின் பெருமையாக வழக்கமா வழங்கப்பட்ட ஒரு புராணக்கதையை குறிப்பிட்டு மறுக்கிறார். Confrontationalஆ தான் இருக்கு.

  ஆகஸ்ட் வாக்குல ஆழ்வார் திருநகரி போயிருந்தேன். அங்க கோவில்ல இந்த பதிகத்தைப் பதிச்சிருந்தாங்க. ரசமா இருந்ததால குறிச்சிட்டு வீட்டுக்கு வந்ததும் அந்த பத்து பாட்டும் படிச்சேன்.

  நாலாயிரமும் அனேகமா படிச்சவங்களுக்கு இன்னும் எதாவது பாடல்கள் தெரியலாம்.

  ReplyDelete
 15. வாங்க @dagalti
  நீங்கள் குறிப்பிடுவது சரியே!

  பொதுவாக, அன்றைய வைணவத்தில், பிற தெய்வ வடிவங்களை அதிகம் பாட மாட்டார்கள்; இழிக்கவும் மாட்டார்கள்! ஆலயங்களில் நவக்கிரகங்கள் கூட இருக்காது! பரிகார ஹோமங்கள்-ன்னு ஒன்னும் கிடையாது!

  திருமால் என்னும் வடிவம் - அதன் மீது நாயகி பாவத்தில் இருக்கும் இவர்கள்...இன்னொரு ஆண் வடிவினை அதிகம் பேசாததற்கு இதுவே நுண்காரணி!
  --------------

  நீங்கள் தந்த பாசுரம், மாறன் நம்மாழ்வாரின் திருவாய்மொழி!

  //அந்த பாடல்கள்ல ஒரு பாட்டுல சிவபெருமானை 'நக்கபிரான்'னு பாடுறார் (நகுதலுக்கு உரியவன்?)//

  அச்சச்சோ! தவறு தவறு!
  நக்கன் = ஆடைகள் துறந்த ஞானி (திகம்பரச் சைவர்கள்)!
  சிவபிரானின் இன்னொரு வடிவம் = நக்கன் (நக்நன் என்பதன் தமிழ்த்திரிபு)

  "நக்கன்" காண் நக்கரவம் அரையில் ஆர்த்த
  நாதன் காண் பூத கணம் ஆட ஆடும்...
  ன்னு அப்பர் பெருமான் தேவாரம்! அப்பரே அப்படித் தான் அழைக்கிறார்!

  சில பாசுரங்கள் குறித்துச் சொல்கிறேன்...
  நீங்கள் தந்த பாசுரத்தின் கவிஞரான நம்மாழ்வார்...பல இடங்களில், ஈசனை, திருமாலின் வலப்பக்கத்து உறைபவனாகப் பாடுவார்!

  தான் மோட்சம் புகும் அந்தக் கடைசிப் பாட்டிலும்...
  முனியே நான் முகனே, "முக்கண்ணப்பா" என்று ஈசனையும் மறக்காமல், சேர்த்தே குறிப்பிடுவார்!

  கண்டிப்பா அவருக்குத் தலைவன் = திருமால் தான்!
  அதில் மாற்றுக் கருத்தில்லை!
  ஆனால்...எள்ளல்/ஏச்சு இருக்காது! (contnd)

  ReplyDelete
 16. @dagalti

  //திருமால் தான் ஒரே கடவுள்.
  அவரை வழிபட்டா தான் சுவர்க்கம். ஆனா எல்லாரும் சுவர்க்கம் போயிட்டா உலகம் என்னத்துக்கு ஆகும் (இந்தப் புரிதல் சரியா?)//

  :)
  திருமாலே=பரம் என்று கண்டிப்பா ஆழ்வார் சொல்லத் தான் செய்வார்!
  வேதம் சொல்வதும் அஃதே! இதை மாற்று சமயத்தவரான ஆதிசங்கரரும் உறுதிப்படுத்துவார்!

  மாற்று சமயத்தவர்களே வேதத்தை அப்படி உறுதிப்படுத்தும் போது, ஒரு திருமால் அடியவரான ஆழ்வார் அப்படிச் சொல்வதில் பெருசா ஒன்னும் வியப்பில்லை!

  ஆனா...அந்தப் பாட்டுக்கு நீங்கள் சொன்ன பொருள் இல்லை! teasing தொனியும் இல்லை! பாட்டை மறுகா படிங்க...அதன் முன்னே-பின்னே பாட்டையும் சேர்த்து!

  //
  போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மையின்னே
  தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே,
  //

  இதர தெய்வ வடிவங்களையும் போற்றுமாறு/பேணுமாறு...உங்களைத் தேற்றி வச்சிருக்கான் ஒருவன் = திருமால்!
  ஏன்?
  எல்லாரும் திருமாலே-ன்னு அவன் அடியைப் பற்றிக் கொண்டால், அனைவரும் ஒரே நேரத்தில் வைகுந்தம் புகுந்து விடுவர்! உலகில் சுவை/வாழ்வு என்பதே இருக்காது!

  //
  ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே
  //

  இது அவன் மாயம்! அந்தப் பாவியின் மாயத்தைப் புரிஞ்சிக்கிட்டு, எல்லாரும் ஓடுங்க ஓடுங்க-ன்னு...தலைவி, அவன் மீது ஊடல் கொண்ட நிலையில், திட்டுவது போல் கொஞ்சுவதாகப் பாசுரம்!:))
  ------------

  "வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி" வைத்தாய்-ன்னும் முன்னாடி பாடுவார்! அதாச்சும் குளத்தில் துறைகள் பலப்பல இருந்தாலும், குடிக்கும் நீர் அவனே என்பது கருத்து!

  "அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்"-ன்னும் பாடுவார்! எந்த இறையும் குறைவில்லை என்பது கருத்து!

  ஏன் குறைவில்லை?-ன்னு சொல்லும் போது மட்டும், அதுவும் என் அப்பன் திருமாலின் வடிவமே என்று முடிப்பார்! அது இயற்கை தானே! அவர் சார்ந்ததை அப்படித் தான் அவரால் சொல்ல முடியும்!

  சமணரும் அவன் வடிவே! சமணமும் ஒரு படித்துறையே என்று 1000 ஆண்டுக்கு முன் சொல்வது அரிதல்லவா?
  இது, வேறு சில தீவிரக் கவிஞர்களின் பாடல்களில் கிடைக்காது! சமணம் என்று வந்தாலே சீறுவார்கள்! சமணமும் சிவபெருமானின் வடிவம் தான் என்று சொல்வார்களா? மாட்டார்கள்!
  ------------

  ஞான சம்பந்தர் ஒவ்வொரு 10ஆம் பாட்டிலும், பயங்கரமா இடித்துத் திட்டுவார்!
  * பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
  * குணமிலாப் புன் சமணர் புத்தர்
  * புல்லறிவாளர், வீடில்லாச் சமணர்
  * மயிர் பிடுங்கு கோப்பாளிகள்
  ....ன்னு எல்லாம் வசவு பலமா இருக்கும்:((

  இவரைப் பின்பற்றி...பின்னால் வந்த சுந்தரர், இன்னும் பலப்பல பேரும்...ஏன், நான் என்னளவில் பெரிதும் மதிக்கும் அருணகிரியும் கூட...இப்படி எழுதிவிட்டார்கள்!

  அருணகிரி, பொது மகளிரைத் திட்டுவதோடு இல்லாமல்,
  "தலைபறி கதறிய பரபாதத் தருமிகள்", "தலைமயிரைப் பறித்து, கருமிகள் சமண சமயிகள்"-ன்னு எல்லாம் திட்டுவார்!

  இப்படியான ஒரு பகையுணர்ச்சி இல்லாத கவிஞர்கள்-ன்னு சொல்லணும்-ன்னா...
  * அப்பர் பெருமான் = சாந்தமே உருவானவர்!

  அவரே சமணத்துக்கு மாறி, பின்பு மீண்டும் சைவத்துக்கே வந்தவர் தானே! அதனால் ஒரு "தண்மை" இருக்கும் பாட்டில்! சமணர்களின் கொல்லாமை நெறியும் போற்றிப் பேசுவார்!

  அதே போல் நம்மாழ்வார்! பழிச்சொல் ஒன்று இருக்காது...
  பல ஆழ்வார்களும் இப்படியே! பழிக்கவே மாட்டார்கள்!

  மிகத் தீவிரமான திருமழிசை ஆழ்வார் ஒருவரே..."நின்னை அறியார் சமணர்/அயர்வு உற்றார் பவுத்தர்" என்று ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பாடுவார்! உன்னை அறிய மாட்டார்கள், அயர்ச்சியே காரணம் என்ற அளவில் மட்டும் நின்றுவிடும்!

  அனல் வாதம்/ புனல் வாதம் என்று அறிவு நூல்களைக் கொளுத்துவது எல்லாம் இருக்கவே இருக்காது!
  ---------

  இப்படியெல்லாம் ஏசாததால், ஆழ்வார்கள் சிவனை/அருகரை வணங்குவார்கள் என்றும் பொருளாகாது!
  அவர்கள் தலைவன் = திருமாலே! அதில் மறுப்பே இல்லை!

  ஆனால் எதையும் எள்ளி ஏசாமல், பகையுணர்ச்சியால் பழிக்காமல்...சமண, சிவ வடிவமும் எங்கள் திருமாலின் ஒரு வடிவமே என்றே சொல்லப்படும்! அக்காலத்தில் அதுவே பெரிய விடயம் அல்லவா!!!

  அதான் பதிவில், "திராவிட வேதம்" என்று சிவச் செல்வரான சித்தராலேயே போற்றப்பட்ட நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்குப் பேதமில்லை என்று குறிப்பிட்டேன்!

  "சாதி அந்தணர்களேலும், நுமர்களைப் பழிப்பார் ஆகில், அவர்கள் தான் புலையர் போலும், அரங்க மா நகருளானே!"
  -ன்னு ஆச்சார அந்தணர்களை ஒரே போடு போடும் துணிவு, 1000 ஆண்டுக்கே முன்பே இருந்தது வியப்பல்லவா!

  அதுவே பதிவின் கருத்துக்கான தரவுகள்!

  ReplyDelete
 17. @dagalti
  நானே ஒரு முருகக் காதலன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்!:)

  ஆனால் இலக்கியம், தமிழ்-ன்னு வரும் போது, எதையும் சாராது, உள்ளது உள்ளவாறே நோக்கி, எடுத்து வைப்பதில் தவறில்லை! அதான் என் முருகனுக்கும் பிடிக்கும்!

  இந்தப் பகையுணர்ச்சி/பழிச்சொல் எல்லாம் மனித உணர்ச்சி தானே! அதுக்கு ஈசனோ, முருகனோ என் செய்வார்கள்?

  நம் இலக்கியங்களில் உள்ளதை உள்ளவாறு உணர்ந்து, அதில் நன்னெறிகளை மட்டும் மனசுக்குள் வச்சிக்கணும்! மற்ற சம்பவங்கள் வரலாறு! அதை மாற்றி எழுத முடியாது! ஆனால் படித்து உணர்ந்து கொள்ள முடியும்!
  = இதுவே என் பணிவான சிந்தனை! டகால்ட்டியின் செறிவான பின்னூட்டத்துக்கு என் வாழ்த்துக்களும், நன்றியும்!:)

  ReplyDelete
 18. //ஏன் குறைவில்லை?-ன்னு சொல்லும் போது மட்டும், அதுவும் என் அப்பன் திருமாலின் வடிவமே என்று முடிப்பார்! அது இயற்கை தானே! அவர் சார்ந்ததை அப்படித் தான் அவரால் சொல்ல முடியும்!//

  //சமணரும் அவன் வடிவே! சமணமும் ஒரு படித்துறையே என்று 1000 ஆண்டுக்கு முன் சொல்வது அரிதல்லவா?//

  ஆமாம். இதிலெல்லாம் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சம்மந்தர் பாடல்களோட எல்லாம் ஒப்பிடவே முடியாது.

  ஒரு digression:
  >>
  எனக்கு சைவ இலக்கியத்துல அதிக பரிச்சயம் கிடையாது. நாலாயிரத்துலயாவது கொஞ்சம் கொஞ்சம் படிச்சிகிட்டு இருக்கேன். இதுல நிறைய relatableஆ இருக்கிற மாதிரி தோணுது. நிறைய அன்றாட தருணங்கள் கவிதைக் கணங்களா இருக்கறது ஒரு காரணமா இருக்கலாம். அவ்வளொ சுலபமா சைவ இலக்கியங்கள்ல ஆழ முடியலை. படிச்சவரை அனேகப் பாடல்கள் தீவிரமான தொனி உள்ளதாவும், 'அருள் வேண்டும் நாயேன்' ங்கற மாதிரியும் இருக்கு. பெரியபுராண கதைகள் சிலபல, goryயா இருக்கு. பரிச்சயம் வளராததுக்கு இந்த தயக்கம் தான் காரணம்.
  <<

  நான் சீண்டல் தொனி-னு சொன்னது ஒப்புமைக்காக இல்லை.
  'வலிந்து வாது செய்யுற நீங்களுமே அவன் தான்' ங்கற கருததை சொல்லலை 'வலிந்து வாது செய்வீர்கள்' அப்படிங்கறது 'வம்படியா வந்து சண்டை போடுறீங்கள்ல...' அப்படின்னு இருக்கறதுல எனக்கு ஒரு குறும்பு தெரிஞ்சது.
  அதேபோல நீங்க கும்புடாம இருக்கறதுக்கும் மாயன் தான் காரணம் அப்படின்னு சொல்றதுலயும்.
  அதுக்கு மேல யார் வாதம் பண்ண முடியும்!

  ReplyDelete
 19. இன்னிக்கு மட்டுமா என்னிக்குமே ஆழ்வார்கள் அதிலும் முதலாழ்வார்கள்தான் முன்னில்.

  'பொன்மேனி' கண்ட மெய் ஞானிகள் அல்லவா!!!!

  அணுஅணுவாக 'அணி'யை ரசித்தேன்.

  ReplyDelete
 20. முதலாழ்வார்கள் வைபவத்தை பக்தியுடன் படித்திருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன், இப்படி நடைமுறைத் தமிழில் யதார்த்தமான பெட்டி கமெண்ட்களோடு அனுபவிப்பதும் அருமை

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP