Wednesday, March 27, 2013

சங்கத் தமிழில் காவடி இருக்கா?

பங்குனி உத்திரம் (Mar 27, 2013)
அவன் திருமண நாள் -ன்னு "புராணம்"

புராணம் பத்தியெல்லாம் எனக்குக் கவலையில்லை;
எது-ன்னாலும், அவனுக்கும் அவளுக்கும் = திருமணம்! Happy 1st Night, Muruga:)

இன்று, பழனி மலை முழுதும், பலப்பல காவடிகள்;
* சாஸ்திரம் அறியாத எளிய மக்களுக்கும்-முருகனுக்கும் உள்ள நேரடித் தொடர்பு = "காவடி"!
* காவடியை, ஆச்சாரக்காராள் தூக்குவதில்லை; எளிய அன்பர்கள் மட்டுமே தூக்குறாங்க!

வாங்க, இன்னிக்கி... காவடியின் "உண்மையான" கதையைப் பார்க்கலாமா? = சங்கத் தமிழில் காவடி!
* என்னாது, சங்கத் தமிழ்-லயே காவடி இருக்கா?
* அதியமானை எதிர்த்து, ஒளவை காவடி தூக்கினாளா?:)


ஆமாம்!
இலங்கை அரசாங்கத்துக்கு, இந்தியா "காவடி தூக்குது" -ன்னு பொருளே -veஆ மாறிப் போச்சி, இன்னிக்கி;
ஆனா, அன்று?
தன் எதிர்ப்பைக் காட்டவே, ஒரு தமிழச்சி, காவடி தூக்கினாள்!

எதிர்ப்பைக் காட்ட, மாணவர்கள், தங்கள் மனசாட்சிக் கொந்தளிப்பை இன்று தூக்குகிறார்கள்;
முருகா, எத்தனை நாள்...? நான் மடிவதற்குள், ஈழத்தின் மானத்தை ஒரு துளியேனும் காண்பேனோ?

ஈழத் தவிப்பு = உலகம் அறிஞ்ச உண்மை; ஆனாலும் நிலை நாட்ட முடியலையே;
வெளித் தேசம் கூட வேணாம்; சொந்த பாரத தேசத்திலேயே நிலைநாட்ட முடியலையே!

*"சமயப் பொய்"-யெல்லாம் நிலை நாட்ட முடியுது; ஆனா ஒரு உண்மையை நிலைநாட்ட இத்தனை பாடா?
*ஆயிரம் தரவுகள் இருந்தும், நிலைநாட்ட இத்தனை மெனக் கெடணுமா?

= இதுவொரு மனத் தோல்வி-இனத் தோல்வி... தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும்!
= கந்தனுக்குப் பதிலாக, கண்டுகொள்ளாமைக்கு நாம் "காவடி தூக்கி" விட்டோமோ?:(

("காவடி" பற்றிய இந்த ஆய்வுக் கட்டுரை, murugan.org -இல், ஆசிரியர் Patrick Harrigan கேட்டுக் கொள்ள எழுதியது; அங்கே பதிப்பித்து உள்ளார்கள்)


அரும்பெறல் "மரபின்" = பெரும்பெயர் முருக!
அந்த "மரபின்" தனித்த அடையாளம் = காவடி!


* மொட்டை போடுதல் = திருப்பதியிலும் உண்டு; சமணக் குடும்பங்களில் கூட உண்டு;
* அலகு குத்தல் = அம்மன் கோயில்களில் உண்டு; வெறியாடலும் உண்டு!
* ஆனா காவடி??? = வேற எங்காச்சும் இருக்கா?

நீங்களே யோசிச்சிப் பாருங்க!
இந்த நாட்டார் வழக்கம் = முருகனோடு மட்டும் உறவாடுவது ஏனோ?

இடும்பன் (எ) அசுரன், அகஸ்திய மகரிஷியின் இரண்டு மலைகளைத் தூக்கி வந்தான்; 
பாதி வழியில் கீழே வச்சிட்டுத் தூங்கும் போது...
அது மேல மாம்பழச் சுப்பிரமணியன் aka முருகன், ஏறி நின்னுக்கிட்டான்;

தூங்கி எழுந்த அசுரனோ, மறுபடியும் தூக்க முடியாமல், முருகனை இறங்கச் சொல்ல, Caretaker of the Mountain = ஆளு "க்ளோஸ்";
இன்னொருத்தர் சொத்து மேல முருகன் ஏறி நின்னதும் இல்லாம, அவனைச் சாவடித்தலே = "தர்மம்"":)
அசுரன் சாகும் போது, தன்னைப் போலவே, பக்தர்களும் காவடி தூக்கிட்டு வரணும்-ன்னு வேண்டிக்கிட்டான்; டொட்ட டொய்ங்க்... End of Puranam:)


இதனால் தான் முருகனுக்குக் காவடியா???

= எத்தனை சுலபமா, பூர்வகுடி மக்களின் வாழ்வியல் - தொன்மவியல், அடிபட்டுப் போயிருச்சே???:(
= பண்டைத் தமிழ் மக்களின்/ குறிஞ்சி நில மக்களின் தொன்மம் = காவடி; தமிழ்க் கடவுளின் முருகவியல்!
நினைவில் நிறுத்துங்க: 
"புராணம்" -ன்னு கதையைக் கட்டினா, தமிழ்த் தொன்மம் அழிஞ்சீரும்!:(

போதாக் குறைக்கு, ஒளவை (எ) பெருமை மிக்க சங்கத் தமிழ்ப் பெண்;
ஆனா அவ மேலயும் "புராணக்" கப்சா;

மொத்தம் 6 ஒளவையார்கள், தமிழ் இலக்கியத்தில் (Refer here)
அதிலே, முதலாம் ஒளவை = அதியமான் காலம் (3rd BCE - 2nd CE);

அதியமான் காலத்தில், எப்படி ஒருவர் கைலாஸத்துக்குப் போய், "பழம் நீ அப்பா" பாட முடியும்? அப்படீன்னா...
...இயேசு பிறந்து, கிபி 2 க்குப் பிறகு தான், முருகனே வளர்ந்தான்; பெரியவன் ஆனான்-ன்னு ஆயீருமே?:))

ha ha ha; "புராணத்துக்கு" அம்புட்டு Continuity போதாதுங்க:))

தப்பில்லை! புராணம், புராணமா இருக்கட்டும் (Mythology)! ஆனா, அதை, வாழும் தமிழ்ச் சான்றோர் மேல், "இட்டுக் கட்டக்" கூடாது;
Will you include Great English Poet, Shakespeare in Harry Potter "story" & make him do pooja for Potter?:)
நக்கீரர், ஒளவை = சங்கத் தமிழ் மாண்பு; அதை நாம மதிச்சி நடக்கணும்! "மனசில்" ஓரமா இருத்துவோம்;

(Pl Note: Only the movie is based on such "puranams"; We cannot blame KBS amma for this; She just 'acted' in the movie; She is so immaculate; Her life repeats in my life)
-----
= (திருவிளையாடற் புராணம்);
அ to ஹ = 48 சம்ஸ்கிருத எழுத்தும் 48 சங்கப் புலவரா ஆச்சி; கூடவே 49ஆவதா, சிவபெருமானும் சங்கத்தில் உட்கார்ந்தாரு;
= Are all my great tamizh poets formed from Sanskrit??

இப்படியெல்லாம், தமிழைப் பின்னுக்குத் தள்ளும் "சமயக் கதைகள்"?
அதுவும் கருணை வள்ளலான ஈசனின் பேரைச் சொல்லி? இந்தச் சமயப் போக்கு, மனசுல ஒட்டவே மாட்டேங்குது முருகா...
ஈசனா? மதமா? = எனக்கு ஈசனே போதும்;

= Sorry da Muruga, Even if it is You or Your dubakoor stories, Not at the cost of Tamizh Dignity! அன்றில் இருந்து இன்று வரை, இப்பிடியே இருக்கேனே:( எதுக்கு ஊரார் பகை? என்னை மாத்திறக் கூடாதா, முருகய்யா?
-----
அப்போ, "காவடி" -ன்னா என்னய்யா?
அது எப்படி, தமிழ்த் தொன்மமான முருகனுக்கே உரியதாச்சு? பார்க்கலாமா?


புறநானூற்றில் காவடி?

தமிழ் அகராதியில் சும்மா போயி, பொருள் பாருங்க; காவுதல் = தூக்குதல்;
காவு + அடி = காவடி!
அதாச்சும், தூக்கும் தண்டு = "காவும்" தடி!
மலையில் பாரம் சுமக்க, பூர்வ குடி மக்களுக்கு, இது ஓர் எளிய கருவி (Simple Machine)

Physics-ல படிச்சிருப்பீங்களே? Fulcrum, Lever -ன்னுல்லாம் நெட்டுரு போட்ட ஞாபகம் இருக்கா?:)
A lever is a beam connected to a hinge, called a fulcrum;
Human Fulcrum ஆகும் போது = அதே Lever காவடி ஆகின்றது! இரு புறமும் (எடை) சமன் செய்தல் = Balancing!

Mechanical Advantage of a lever (MA) = Balance of Torque, about the fulcrum = m1/m2 = a2/a1
பயந்துறாதீக; ஒங்கொப்பராண, ஒங்கள 8th Std கூட்டிப் போவ மாட்டேன்:)

இப்படி, எடையைச் சமன் செய்யும், பூர்வ குடிகளின் கருவியே = காவடி!

குறிஞ்சி மக்கள், பாரம் தூக்கிக்கிட்டு, மலை ஏறுவது கடினம்; அதான் எடையைப் பரவி, பின்பு சுமந்து செல்லுதல்!
(மலைப் பிரதேசங்களில், ரெண்டு ஆளுங்களையே இரு புறமும் உட்கார வச்சி, எளிதாகச் சுமந்து விடலாம், காவடியின் உதவியால்)

சரி புரிஞ்சுது; ஆனா காவடி = ஏன் முருகனுக்கு மட்டுமே ஆனது?

* ஏன்னா, முருகன்= குறிஞ்சிக் கடவுள் = மலையும் மலை சார்ந்த இடமும்!
* திருமால்= முல்லைக் கடவுள் = காடும் காடு சார்ந்த இடமும்!

மலைப் பாதையில், இம்புட்டு நீளமாத் தூக்கிச் செல்லலாம்;
ஆனா அடர்ந்த காட்டிலே? =  அந்த நீளத்துக்கு வழியெல்லாம் செடிகொடியில் முட்டும்:)
(#jokeonly: காதலன் முருகன் முட்ட மாட்டான்; அப்பா திருமால் முட்டுவாரு:))

செங்குத்தான மலை; நடந்தாலே மூச்சு வாங்கும்; அதில் பாரம் சுமக்க, எளிய வழி!
அந்த மரபே, அந்த மக்களின் கடவுள் = சேயோன் (எ) முருகனுக்கும் ஆனது;

மற்ற இரண்டு தமிழ்க் கடவுளான திருமாலுக்கோ/ கொற்றவைக்கோ, காவடி ஆகவில்லை! "மலைத்" தெய்வத்துக்கு மட்டுமே ஆனது!

காவடியின் பல்வேறு பெயர்கள், தமிழ் இலக்கியத்தில்!
* காமரம்,
* காத் தண்டு, காவடித் தண்டு,
* காவணப் பத்தி
* காவுப் பொருட்டு

புறநானூற்றிலும் காவடி வருகிறது; தூக்குறது யாரு? = ஒளவை-யாரு!:)


அதியமான் நாடு = தகடூர் (மலை நாடு); 
அதனால், ஒளவையாரும் காவடி எடுக்கின்றார்!

ஒளவையைத் தன் நாட்டிலேயே இன்னும் கொஞ்சம் நாள் வச்சிக்கிடணும்-ன்னு அதியனுக்கு ஆசை;
So, அவளுக்கு மட்டும் இன்னும் பரிசில் குடுக்கலை:)

இது தெரியாமல், ஒளவைக்கோ கோவம்; "போடா, உன் பரிசிலே வேணாம்; நீயாச்சி, நானாச்சி;
கெளம்புறேன்" -ன்னு மூட்டை கட்டுறா, தன் Luggage-ஐ! எதில்? = ஒரு காவடியில்:)

வாயி லோயே வாயி லோயே
பரிசிலர்க்(கு) அடையா வாயி லோயே
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! 

(புறநானூறு 206; வாயில் நீட்டித்த அதியமான் நெடுமான் அஞ்சியை, ஒளவை பாடியது)

* எத்திசை செலினும் அத்திசைச் சோறே = நான் எங்கிட்டு போனாலும் சோறு கெடைக்கும்டா; ஒன்னைய நம்பி என் தமிழ் இல்லை!
* காவினம் கலனே = என் பொருட்களையெல்லாம் காவுகிறேன் (தூக்குகிறேன்); காவு தடியில் (காவடியில்) இதோ தூக்குறேன்; Tata; Bye:)

என்ன வீறாப்பு பாருங்க, செந்தமிழ்க் கிழவிக்கு:)

* இன்னிக்கி "காவடி தூக்குறான்" -ன்னா பொருளே வேற:(  டில்லிக்குக் காவடி எடுக்கும் அமைச்சர் -ன்னா, குனிந்து குனிந்து கெஞ்சுதல்!
* ஆனா, அன்னிக்கி பாருங்க... "காவடி எடுக்கறேன்" -ன்னா, ஒன்னை நம்பி நான் இல்ல, கெளம்பறேன் -ன்னு மான உணர்ச்சி!

ஒளவை மட்டுமா காவடி? பின்னாளில், கம்பனும் காவடி எடுக்குறான்!

அரத்த நோக்கினர். அல் திரள் மேனியர்.
பரித்த காவினர். பப்பரர் ஏகினார் -
திருத்து கூடத்தைத் திண் கணையத்தொடு
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே

(பால காண்டம் - எழுச்சிப் படலம் 768; தயரதன், திருமணத்துக்கு வரும் வழியிலே கண்ட மலைக் காட்சிகள்)

* "பரித்த கா"வினர் = காவடித் தண்டைச் சுமந்து சென்றார்கள்;
* யார்? = பப்பரர் என்னும் மலைவாழ் மக்கள்;
* அரத்த நோக்கினர் = சிவந்த கண்கள்;
* அல் திரள் மேனியர் = கருத்த உடம்பு;
காவடியில் பாரம் தூக்கிக்கிட்டு மலையேறுகின்றனர்;

இது தாங்க, "புராணம் கலவாத", தமிழ்க் காவடியின் கதை!
வாங்க, நாம காவடிச் சிந்துக்குப் போவோம்! 
அங்கே தானே என் மனசுக்குப் பிடிச்ச = இசை = இருக்கு?:)


மொத்தம் எத்தனை விதமான காவடிகள்?

"பால் மணக்குது, பழம் மணக்குது" -என்னும் பாட்டில், ரமணி அம்மாள், பல காவடிகளின் பேரைப் பட்டியல் போடுவாங்க; செம குத்துப் பாட்டு:)

பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடியாம்!
சக்கரக் காவடி, சந்தனக் காவடி, சேவற் காவடியாம்!
சர்ப்பக் காவடி, மச்சக் காவடி, புஷ்பக் காவடியாம்!

இது இல்லாம...
பூங் காவடி, காசுக் காவடி, அன்னக் காவடி, விபூதிக் காவடி -ன்னு சுமந்து செல்வார்கள், அவரவர் மனசு வேண்டுதலின் படி!
இப்பல்லாம் பறவைக் காவடி-ன்னு ஒன்னு பிரபலம் ஆயிருச்சி, குறிப்பா மலேசிய - சிங்கையில்;
அதாச்சும் தான் எதுவும் சுமக்காமல், முழுக்கக் குத்திக் கொண்டு, அவரை Crane (அ) Machine சுமக்கும்; பறவை போல் இவர் ஊசலாடுவதால், பறவைக் காவடி!

இப்படியான "அதீத உடல் வருத்திக் கொள்ளல்" பற்றி நான் ஒன்னும் தப்பாச் சொல்லலை;
ஆனா இதிலிருந்து சிறுவர்களுக்கு மட்டுமாச்சும் விலக்கு அளித்து விடுங்கள், Please...

முருகனை, மனசால் எண்ணியெண்ணிச் "சுமக்கும்" இன்பத்தை விட, பேரின்பம் வேறு இல்லை!
மனசால் "சுமந்து" செல்லுதலே நலம்; மெஷின் நம்மைச் சுமத்தல் அத்தனை நலம் அன்று; (என் தனிப்பட்ட கருத்து மட்டுமே; மன்னிக்க)

காவடியாட்டம் இரண்டு வகை:
1) பக்திக் காவடி
2) ஆட்டக் காவடி

பக்திக் காவடி பற்றி மேலே பேசினோம்;
ஆட்டக் காவடி அப்படியல்ல! அது ஒரு நாட்டுப்புறக் கலை!

ஒரு தண்டிலே, அலங்காரமாக் கூடு கட்டியிருக்கும்; மயில் இறகுகள் சொருகியிருக்கும்; விதம் விதமாய் ஆட்டம்!
* தலை, நெற்றி, தோள்
* முதுகு, கழுத்து, வயிறு
இப்படிப் பல உறுப்பிலும் வச்சி வச்சி, முன்னும் பின்னும் ஆட்டும் கலை!

நாதசுரம்-தவில் இசை!
சில சமயம்... பம்பை, கிடுகிட்டி, தமுக்கும் அடிப்பாங்க; ஆனா மெட்டு எப்பமே அந்தப் புகழ் பெற்ற மெட்டு தான் = காவடிச் சிந்து;

தோளில் தான் காவடியை நிறுத்துவாங்க;
கையால அடவு செஞ்சிக்கிட்டே, காவடியைத் தலைக்குக் கொண்டாந்து, சுழற்று சுழற்று -ன்னு சுழற்றுவாங்க;
கையில் பிடிக்காமலேயே, இத்தினி சுத்து சுத்தினாலும், அது கீழே விழாது!

என்னால இப்பிடியெல்லாம் ஆட முடியாது:)
கிராமத்துப் பூசையில், ஆயா(பாட்டி) பாடி, ஊருக்கே எடுத்துக் குடுப்பாங்க போல;
ஒவ்வொருத்தராச் சுமந்து போறதோட சரி;

தோழனோடு எப்பவாச்சும் ஒரு முறை போகும் போது, முருகனுக்குக் காவடி எடுக்கணும்-ன்னு மனசுக்குள்ள ஒரு ஆசை!


* பின்னாளில் வந்த சிற்றிலக்கியங்கள் = ஒன்னுல கூடக் காவடி பற்றிப் பேச்சில்லை!
* சந்தம் செய்யவே வந்த நம் சொந்தக் கவி = அருணகிரியும், ஏனோ காவடி பற்றி ஒன்னுமே பாடலை;

அதனால் என்ன?
19th CE-இல் புண்ணியம் கட்டிக் கொண்டார் ஒரு "தெலுங்கர்" = தமிழ்க் கடவுளை!
அவர் பேரு = அண்ணாமலை ரெட்டியார்;
காவடிச் சிந்தைப் பாடிப் பாடிப், பிரபலம் ஆக்கினார்;
* அதுக்காக, காவடி பிறந்ததே = 19th CE-இல் தான்-ன்னு அவசரப்பட்டு முடிவு கட்டீறக் கூடாது;
* அதற்கும் முன்பே, எளிய மக்கள் - நாட்டார் வழக்கில் இருந்தது தான்; ஆனா இலக்கிய எல்லைக்குள் வரலை;

திருமங்கை என்ற முன்னாள் கள்வன் - பின்னாள் ஆழ்வார் (7th-9th CE); இதை இலக்கியத்துக்குள் கொண்டு வந்து கொடுத்தார்;
நந்திபுர விண்ணகரம் என்னும் ஊருக்குப் போவும் போது, வழியில் அலுப்பு தட்டாம இருக்க, எசப்பாட்டாய், பெருமாள் மேல் பாடிய "சிந்துப் பாடல்கள்"!

= இதுக்குப் பேரு வழிநடைச் சிந்து!
= இதையே, காவடி தூக்கிக்கிட்டு பாடினா, காவடிச் சிந்து!

"சிந்து" என்றால்  3x3  சீராய், அடுக்கும்!
= குறளடி, சிந்தடி, அளவடி, நெடில் அடி, கழிநெடில் அடி -ன்னு தமிழிசைக் கூறுகள்; யாப்பு இலக்கணமும் கூட;

செந்திலில் பொங்கிடும் அலைகள்  (3) - திருச்
செந்தூர் முருகனின் கலைகள் (3) - கந்த
வேல் ஆனது  சூரா திபன்  (4),
மேல் ஆனதைக்  கூறா க்கிய (4)

வீரா அதி தீரா (3)

பல்லவி (எடுப்பு), அனுபல்லவி (தொடுப்பு) -ன்னு "சாஸ்த்ரீயமா" இருக்காது; நேரடியாச் சரணம்; முருகனே சரணம்:)

இந்த மெட்டு பிரபலமாகி விட்டதால், இன்று கர்நாடக இசையிலும் பாடுறாங்க; ஆனா, உன்னி கிருஷ்ணன் முதலான பல பேரும் "இழுத்து இழுத்து"ப் பாடுறாங்க; அந்தோ!
காவடிச் சிந்தின் அடிநாதமே அந்த "வேகம்" தான்; சும்மாக் குத்துப் பாட்டு கணக்கா, காலு தானாவே ஆடணும்!:)
கழுகுமலைக் கோயிலின் முன்பு...
சென்னிக் குளநகர் வாசன் - புகழ்
தேறும் அண்ணாமலைத் தாசன் - செப்பும்
செகம் மெச்சிய மதுரக்கவி
அதனைப்புது வரையில் புனை 
தீரன் அயில் வீரன்!

அருணகிரி நாவில் பழக்கம் - தரும்
அந்தத் திருப்புகழ் முழக்கம் - பல
அடியார்கணம் மொழி போதினில்
அமராவதி இமையோர் செவி 
அடைக்கும் அண்டம் உடைக்கும்!

"உடைக்கும்" -ன்னு உடைக்குறா மாதிரிப் பாடணும்; இழுக்கக் கூடாது:)
ரெட்டியார், அப்படித் தான் மெட்டு போட்டாரு!
கழுகுமலை முருகன் மீதும், சென்னிக்குள முருகன் மீதும், அவரு போட்டுள்ள பாடல்கள், சும்மா "கும்"-ன்னு இருக்கும்!

பின்னால் வந்த தமிழ்த்-தேசியக் கவி, நம்ம சுப்பிரமணிய பாரதியும், இந்த மெட்டில் சில கண்ணிகளைச் செஞ்சிருக்கான்;
எல, ரெட்டியாரு-பாரதியாரு எல்லாரும் ஒரே ஊர்க்காருவக தானே-ல்ல?:)

பச்சைத் திருமயில் வீரன்
அலங் காரன் கெளமாரன்
பணிசுப்பிர,  மணியற் கருள் அணிமிக் குயர், தமிழைத் தரு
பக்தர்க் கெளிய சிங்காரன் ...


தூக்கு மேடையில் ஒரு காவடிச் சிந்து:

"ஆர்மோனியம்" காதர் பாட்சா -ன்னு ஓர் இசைக் கலைஞர்;
அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்துப் பாட்டிலே அவருக்கு ஓர் ஈர்ப்பு;

இசுலாமியர் தான்; ஆனாலும், கழுகுமலை முருகன் மீது ஈடுபாடு;
"காதர்" பாட்சா = "காவடிச் சிந்து" பாட்சா ஆகிவிட்டார்:)

ஆனா, பாவம் ஏதோவொரு வழக்கில் சிக்கிக்கிட்டாரு போல; அப்பாவிக்குத் தூக்குத் தண்டனை;
"உன் கடைசி விருப்பம் என்ன?" = தூக்கு மேடையில் அதிகாரி கேட்ட போது,
"காவடிச் சிந்தை ஆர்மோனியத்தில் ஆசை தீரப் பாடணும்" என்றார் பாட்சா;

சுருளிமலை மேவும் சீலா - உனைத்
தோத்தரித்தேன் சுப்ரமண்ய வேலா - பசுந்
தோகை மயில் - மீதில் ஏறி
வாகுடனே - காத்(து) அருளும்
துய்யா முரு கைய்யா!

கேட்டார்கள், மனம் மயக்கும் தமிழிசையை; ஒரு தாள வாத்தியமும் இல்லாம, தானாவே இசை கூட்டும் சந்தம்!
நேரம் கடந்து போனதே தெரியாமல், அதிகாரிகள் ரசித்துக் கொண்டிருக்க... முடிவில் தூக்கு மேடை ஏறினார் காதர் பாட்சா!

ஆனால், உடன் இருந்த வழக்கறிஞர், ஒரு புதுப் பிரச்சனையைக் கிளப்பினாரு...

"காதர் பாட்சா என்னும் இவரை, மாலை சரியாக 6:00 மணிக்குக், உயிர் பிரியும் வரை, தூக்கில் தொங்க விடுங்கள்" - இதுவே நீதிபதியின் தீர்ப்பு;

ஆனால் காலம் கடந்து விட்டது; 6:45 pm
"தண்டனை உரிய காலத்தில் நிறைவேற்றப்படாததால், ஒன்று ரத்து செய்ய வேண்டும், இல்லை அப்பீல் செய்ய வேண்டும்"
- விதிகளை அந்த அலுவலர் சுட்டிக் காட்ட... அன்று "தலை" தப்பிய பாட்சா, பின்பு நீதிமன்றத்திலும் "தலை" தப்பினார்!

என் "தலை" வைத்து... உன் இணையடி காக்க!
முருகா, என் தலையை வைத்தாச்சும், உன்னை நான் காப்பேன்-டா, நீ என்னைக் காக்காவிடினும்...


பங்குனி உத்திரக் காவடிப் பதிவு இதுவே;
காவும் = (தூக்கும்)
காவு + தடி = காவடி!

அந்தக் காவடிக்கு நாயகனே! என் காதலுக்கும் நாயகனே!


* அரும் பெறல் மரபின் பெரும் பெயர் =  காவடி!
* பூர்வ குடிகளின் தமிழ்த் தொன்மம் = காவடி!

சங்கத் தமிழ்க் கடவுளாம் முருகனின்,
சங்கத் தமிழ்க் காவடி வாழி!

24 comments:

  1. காவடி பற்றிய சிந்தனைக் கருவூலம் இது.
    கந்தனுக்கு அரோகரா

    வேலா ! என் வினை தீர்க்க வழியொன்று தா என கவி நயா எழுதிய கவிதை சில நாட்களுக்கு முன்னே படித்தேன்.

    கந்தா உனை காவடிச் சிந்துவிலே பாடிய காதருக்கும் கருணை காட்டினை .
    விந்தா ! உன் வேலுக்கு அரோகரா ! உன் மயிலுக்கு அரோகரா ..

    சுப்பு தாத்தா.
    www.kandhanaithuthi.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. dank u sury sir; not karuvoolam and all; just a few thoughts; thatz it:)

      Delete
  2. ரொம்ப நாள் கழித்து கண்ணன் முருகன் பதிவோடு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி! நலந்தானே? காவடி பற்றி பல செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்றி கண்ணா.

    ReplyDelete
    Replies
    1. nalama akka? yes, after lonnnng time:)
      irukken ka! howz amman paattu?

      Delete
  3. ஆறுதலை அழகன் பாட்சா தலை காத்த விஷயம் படித்து சிலிர்த்தேன் !

    முருகா!உன் அன்பனுக்கு இப்படிப்பட்ட அருமையான பதிவுகள் அடிக்கடி

    எழுதத்தேவையான நேரமும் உடல் நலமும் அருள்வாயப்பா!

    ReplyDelete
    Replies
    1. //உடல் நலமும் அருள்வாயப்பா//

      :) நன்றிம்மா
      என் உடல் அவனுக்குத் தானே சொந்தம்; அதனால் அவனுக்கே அவன் அருளிக்க வேண்டியது தான்:)

      Delete
  4. அருமை ./ ஒ இதுதான் காவடியா
    அப்ப இடும்பன் கதை ?

    ReplyDelete
  5. அருமையான பதிவு, வாழ்த்துக்கள். மேலும் இதுபோல் பல நால்ல ஆராய்ச்சி தகவல்களை தந்து தமிழுக்கு தொண்டாற்ற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. dank u santa;
      this was already written for murugan.org; just re-posted here:)

      Delete
  6. காவினெம் கலனே'ன்னு என்னுடைய அண்டா,குண்டா வெல்லாம் தூக்குறென்னுதானே சொல்லுறா ஔவைப்பாட்டி...காவடித் தண்டுக்கு, காவுதல் என்ற சொல் மூலம் என்றார் வலிந்து பொருள் கொள்றாப்போல இருக்கே..

    ReplyDelete
    Replies
    1. நலமா அறிவன்? ரொம்ப நாளாச்சு; I am "extinct" these days:)

      "வலிந்து பொருள்" கொள்ளுறாப் போல இருக்கா?
      அட ஆண்டவா;
      மக்கள் புராணத்தை அப்படியே ஏத்துக்கறாக; ஆனா உண்மையச் சொன்னா மட்டும் "வலிந்து கொள்ளுறதா" பாக்குறாகளே; இத எங்கிட்டுப் போய் அழுவேன்? முருகா:)

      காவு+அடி=காவடி
      http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=204&pno=24
      (மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் நூலில் இருந்து)

      One more..
      http://www.tamilvu.org/courses/diploma/d061/d0614/html/d0614202.htm

      Delete
  7. கே.ஆர்.எஸ்,

    நீண்ட நாட்களாச்சு, ஆனாலும் அருமையான காவடி புராணத்தோடு வந்திருக்கீங்க.

    நல்ல தகவல்கள், காவடிக்குறித்து நீங்க சொன்ன இலக்கிய குறிப்பெல்லாம் சரியே, ஆனால் முருகனுக்கு வழிப்பாடாக காவடி தூக்குவதை இவ்விலக்கிய குறிப்புகள் எப்படி "ஜஸ்டிபை" செய்ய முடியும்.நமது மக்களிடம் காவடி புழக்கத்தில் இருந்தது என்பது ஒரு தனி கதை, முருகனுக்கு காவடி எடுப்பது என்பது தனிக்கதை, அது இரண்டையும் இப்படி இணைப்பதால் நிறுவ வருவது என்னவோ?

    காவடி என்பது மனித தேவைகளுக்காக இருந்த அமைப்பே, முருகனை வழிப்படாத வடக்கிழக்கு மாநிலங்கள்,மற்றும் சீனாவில் எல்லாம் காவடி அமைப்பினை பாரம் தூக்க, நீர் கொண்டு வர பயன்ப்படுத்துவது பன்னெடுங்காலமாக உண்டு.

    இராமயணத்திலே வரும் சிரவணன் காவடியில் பெற்றோரை சுமந்து சென்றதையும் அறிவீர்கள்,ஆனால் வட இந்தியாவில் முருகனுக்கு கோவிலே கிடையாது.

    எனவே முருகனுக்கு வழிப்பட காவடி தூக்குவது என்பது புராணம் சார்ந்தே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்க சொன்ன இடும்பன் புராணம் அது போன்றதே.

    எனவே காவடி வரலாற்றை, முருகனுக்கு சுமத்தி வரலாற்று ரீதியாக முருகனுக்கான வழிப்பாட்டுக்கு ஒரு தொன்மவியல் அடையாளம் கொண்டு வர அவசியம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. //காவடி என்பது மனித தேவைகளுக்காக இருந்த அமைப்பே//

      Perfect! கப்-ன்னு புடிச்சிக்கிட்டீங்க வவ்வால்! வாழ்க:)

      //ஆனால் முருகனுக்கு வழிப்பாடாக காவடி தூக்குவதை இவ்விலக்கிய குறிப்புகள் எப்படி "ஜஸ்டிபை" செய்ய முடியும்?//

      சொல்லி இருக்கேனே! Will summarize again;

      காவடி = மலை-மக்கள் பயன்பாடே;
      அதுவே அந்த மலை மக்களின் தெய்வமான, முருகனுக்கும் ஆகி வந்தது;

      For example, தினை/ தினை மாவு, ஏன் முருகனுக்கு மட்டும் விசேடம்?
      ஏன்னா, அது குறிஞ்சி மக்களின் உணவு; அதையே, தங்கள் நிலத் தெய்வமான சேயோனுக்கும் முன் வைச்சாங்க; அதே போலத் தான் காவடியும்!

      ஆனா, இந்த அடிப்படை வாழ்வியலான தமிழ்த் தொன்மத்தை மறைச்சி, ஏதோ சம்ஸ்கிருத புராணம் கெளப்பி விட்டு,
      அதைத் தமிழ்த் தொன்மமான முருகன் மேல் ஏத்தியதால் வந்த வினை; அதையே சொல்லியுள்ளேன்;

      சங்கத் தமிழில் இறை/ நடுகல்/ நாத்திகம் = இங்கே காண்க!

      Delete
  8. எலே இளங்கிளியே எங்கடீ இருக்க ?

    ReplyDelete
    Replies
    1. hey, என்ன, "என்னடீ" -ன்னு கூப்புடுற? அடிங்க:)

      sorry ragu, i am away in a child cancer camp & not much internet here;
      also, in kinda "dejected" state; thatz why away from many things;
      will email, take care & wish u bliss in a sensual love life-marriage life:)

      Delete
  9. நிறைய‌ த‌க‌வ‌ல்க‌ள் த‌மிழின் அழ‌கோடு த‌ந்திருக்கிறீர்க‌ள். நீண்ட‌ நாட்க‌ளுக்குப் பின்பு, மிக‌வும் சுவையுட‌ன், மூச்சு விடாம‌ல் வாசித்து முடித்த‌ ப‌திவென்றால் இது ஒன்று தான். ந‌ன்றி,

    ReplyDelete
    Replies
    1. //மூச்சு விடாம‌ல்//

      பெரிய்ய்ய்ய பதிவு -ன்னு சொல்லுறீங்களா?:)
      என்ன செய்வது; தரவுகள்-ஆய்வுக் கட்டுரை-ன்னா அப்படி அமைந்து விடுகிறது;

      Delete
  10. தமிழ் இலக்கியங்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் சொல்லும் பாங்கு அருமை தொடர்ந்து செய்யுங்கள் உங்கள் பணியை

    ReplyDelete
  11. எங்களுக்காக இரங்கேலோ ரெம்பாவாய்...

    எப்போது திரும்பி வர்றதா உத்தேசம்??

    ReplyDelete
  12. எங்க ஊர் பக்கத்தூரு தான் சிந்துகவி பாடிய அண்ணாமலை கவிராயர் = சென்னிகுளம்,

    காவடி பற்றிய நல்ல விளக்கம் முருகா

    ஆனா காவடி தமிழர்களுக்கு மட்டுமேவா?

    வட இந்தியாவில சிவனுக்கு நிறைய காவடி எடுக்குறாங்களே?

    சாவன் மாதத்தில்? நம்ம தமிழ் மாதத்தில ஆடி..?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP