Showing posts with label Chidambaram Deekshithars. Show all posts
Showing posts with label Chidambaram Deekshithars. Show all posts

Sunday, February 08, 2009

சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன?

Update:(Mar-24,2009,10:30am)
* நந்தனார் மனு, தமிழக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!

* நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர். கனிமொழி அவர்களிடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!

* Mar-21 அன்று, நாமக்கல் சிபி அண்ணா, இதை அலுவலகத்தில் சேர்ப்பித்தார்!

* இம்முயற்சியில் பெரிதும் உதவிய தமிழ் உலகம் குழுமம்-மணியம் ஐயா மற்றும் ஆல்பர்ட், நாக. இளங்கோவன் ஐயா, மதுமிதா அக்கா, அதிகாலை.காம் நவநீதன், அபி அப்பா மற்றும் அனைத்து ஆர்வலர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றி! ஒப்பமிட்டவர்க்கெல்லாம் ஓங்கிய நன்றி!

தேர்தல் காலமே ஆனாலும், செல்பவர் காதுக்கும், கருத்துக்கும் இது சென்று சேர்ந்து விட்டால்...
பிறகு சிறிது சிறிதாக உருப் பெறும்! தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டுவோம்!

திருநாளைப் போவார், நந்தனார் திருவடிகளே சரணம்! திருச்சிற்றம்பலம்!

......Previous updates and the post below:

தில்லையில் இப்போதே நந்தனார் சிலையை மீள்-நிறுவி வி்ட்டால்...
பின்னர் யாராலும் அதன் மீது மீண்டும் கை வைக்க முடியாது! - கண்டிப்பா ஒரு தயக்கம் இருக்கும்!

இதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு!
http://www.petitiononline.com/Chid2009/petition.html

உங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக!
அடியேன்,
அம்பலவாணர் பேரால், மிக மிக நன்றி! திருச்சிற்றம்பலம்!


Update:(Feb-12,2009,12:15pm)
Tried a small pictorial representation.(Based on gopala krishna bharathi, u.ve.sa accounts and malarmannan’s article in thinnai)

"பழைய" நந்தனார் சிலை பற்றிய குறிப்புகள்:
1. ஆளுயரச் சிலை
2. கைகளில் கடப்பாரையோடு
3. கூப்பிய கரம்
4. தோளில் மண்வெட்டி
5. நின்ற திருக்கோலம்

* மீண்டும் வடிவமைக்க நேர்ந்தால் இந்தக் குறிப்பு சற்று உதவும்-ன்னு நினைக்கிறேன்!
* இருந்த இடம்: நிருத்த சபை நடராஜரைப் பார்த்தவாறு, தெற்குத் தூணில்! (நிருத்த சபை என்பது பொன்னம்பலத்துக்கு தெற்கே இருப்பது!)


தில்லையில் நந்தனாருக்கு
உங்கள் கையொப்பம்!


பல மாற்றுக் கருத்துடை அன்பர்களும் தங்கள் கையொப்பம் இட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி! நன்றி! நன்றி!!
இந்த நன்முயற்சியை மேலும் முனைப்பாக்க, எல்லாத் தரப்பினரும், தயங்காது யோசனை சொல்லுங்கள்!

* அன்று தில்லைக்குள் வர, நந்தனார் வரவேற்கப்பட்டரா? என்ற ஆய்வைத் தற்சமயம் விடுவோம்!
* இன்று தில்லைக்குள் வர, நந்தனாரை முழுமூச்சாய் வரவேற்போம்! பூரண பொற் குடம் எடுப்போம்!




பதிவு:

திருச்சிற்றம்பலம்! தில்லையம்பல நடராஜப் பெருமானின் காரியங்களை, "தான் வைத்ததே சட்டம்" என்று தனிப்பட்ட முறையில் நடத்திக் கொள்ளாமல், பொதுவில் நடத்த, நீதிமன்ற உத்தரவு ஆகியுள்ளது என்று அனைவரும் அறிவீர்கள்! (Feb-2, 2009)

அடியார்கள் முயற்சி கைக்கூட, இறைவன் திருவுள்ளம் சேர, இது வாராது வந்த வெற்றி! நெஞ்சுக்கு நீதி! முயற்சி திருவினை ஆக்கும்!
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்!
- என்று ஐயன் சொன்னது, மெய்யாலுமே அம்பலம் ஏறி உள்ளது! தில்லை அம்பலம் ஏறி உள்ளது!

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்...
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!!!


இவை வெறும் வரிகள் அல்ல! அம்பலவாணனை ஒவ்வொரு கோணத்தில் (angle) இருந்தும் பார்த்தவர்களுக்கு, இந்தக் குமிழ் சிரிப்பு கட்டாயம் தெரிந்திருக்கும்!
ஆண்களையும், பெண்களையும் ஒரு சேர ஈடழிக்க வல்ல குமிழ் சிரிப்பு! தீட்சிதர்கள் மொழியில் சொல்லணும்-ன்னா ஜகன் மோஹனாகாரம்!

இனி என்ன? அவ்வளவு தானா?
தீட்சிதர்களின் ஆதிக்கம் ஒடுங்கியதாலேயே, நல்ல விடயங்கள் எல்லாம் தானாய் நடந்து விடுமா என்ன? இனி என்ன செய்யணும் என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா? இது தொடர்பாகச் செய்ய வேண்டிய சில ஆக்கங்கள் பற்றி, முன்பு இட்ட பதிவு இதோ!

மேற்சொன்ன பதிவைப் பிரதி எடுத்து, அப்போது இரு தரப்புக்கும், அஞ்சல் (தபாலில்) அனுப்பி இருந்தேன்! சென்ற அக்டோபர் மாதம், அம்மா-அப்பா மணிவிழாவுக்கு இந்தியா சென்றிருந்த போது, தில்லை செல்லும் வாய்ப்பும் கிட்டியது!
அப்போது மதிய வேளை! தீட்சிதர் ஒருவரிடம்/இருவரிடம் பதிவுலகக் கருத்துக்கள் பற்றி லேசாப் பேச்சு கொடுத்த போது, நான் தான் அப்படி தபால் அனுப்பிச்ச ஆளு-ன்னு தெரியாம, என் கிட்டயே, என்னைத் திட்டித் தீர்த்தார்! இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது! :)

ஆனால் சென்ற விஷயம் அம்மா-அப்பா விழா என்பதால், நானும் எதுவுமே பதில் பேசவில்லை! "சமத்துப் பிள்ளையா" இருந்து விட்டேன்! கடைசியா முடிக்கும் போது, நான் தான் அந்த மாதவிப் பந்தல்-ன்னு சொன்னேன்! சொன்னது தான் தாமதம்....முகம் மாறியது! ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அவரும் சிரித்து விட்டார்! :))))

தாங்கள் வைத்ததே சட்டம்! 100% Obedience! மறுப்புரை, கருத்து விவாதங்கள் - இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத ஜனநாயகவாதிகள் நம் தீட்சிதப் பெருமக்கள்!
கருத்துக்களைப் பேசக் கூடக் கூடாது, பேசினால் கோபித்துக் கொள்வோம் என்ற போக்குள்ளவர்களிடம், அரசும் தொழில் முறை ரீதியாகவே (Professionalism) நடந்து கொள்ளல் நலம்!



ஜூனியர் விகடன் செய்தி: (Feb-11-2009)
அறநிலையத் துறை அதிகாரிகள் புடை சூழ, விழுப்புரத்திலிருந்து அறநிலையத் துறை இணை ஆணையர் திருமகள், சிதம்பரத்துக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில் அதிகாரிகளில் சிலரிடம், தீட்சிதர்கள் எதிர்ப்பைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். உடனே அதிரடிப்படை போலீஸாரும், வஜ்ரா மற்றும் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

இந்தப் பரபரப்பின் 'க்ளைமாக்ஸா'க இரவு ஒன்பது மணி அளவில் அதிகாரிகள் கோயிலுக்குள் நுழைந்தனர். அதேநேரம், நானூறுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் அதிகாரிகளை வழிமறித்தனர்.
அவர்களின் வழக்கறிஞர் சிவக்குமாரிடம் நீதிமன்றத் தீர்ப்பையும், அரசு உத்தரவையும் கொடுத்த இணை ஆணையர் திருமகள், "ஒழுங்கா வழிவிடுங்க..." என்றார்.
சில நிமிட வாக்குவாதத்துக்குப் பிறகு அரசிடம் கோயிலை ஒப்படைக்க தீட்சிதர்கள் சார்பாக சம்மதித்துக் கையெழுத்திட்டார் சிவக்குமார்.
உடனடியாக தில்லை காளியம்மன் கோயிலின் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாரையே நடராஜர் கோயிலுக்கும் செயல் அலுவலராக நியமித்து ஆணை பிறப்பித்தார் திருமகள். அன்றிரவே, கோயில் அலுவலகச் சுவர்களில், இந்தத் தகவல் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.

மறுநாள் மூன்றாம் தேதி கோயிலுக்கு வந்த செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், கீழக் கோபுரம் அருகே இருந்த ஒரு இடத்தில் அலுவலகத்தை அமைத்து நிர்வாக வசதிக்காக பத்து தற்காலிகப் பணியாளர் களையும் நியமித்தார்.

இந்நிலையில் நம்மிடம் பேசிய தீட்சிதர்கள், "தலைமுறை தலைமுறையாகக் கோயிலை நம்பியே வாழ்ந்து வருகிறோம். அரசு இவ்வளவு வேகமாகச் செயல்படுவதைப் பார்த்தால், எங்களை கோயிலை விட்டே அப்புறப்படுத்தி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. நாங்கள் மேல் முறையீடு செய்யப் போகிறோம்.
அதன் தீர்ப்பு வரும் வரை, இப்படி தடாலடியான காரியங்கள் செய்வதை அரசு கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்..." என்றனர்.
(பத்திக்கும் படத்துக்கும் நன்றி: ஜூனியர் விகடன்)


சரி...........விகடன் செய்தியைப் பார்த்ததில் இருந்து, நமக்கே இருக்கும் உள்ளுணர்வில் இருந்து, அடுத்த கட்டம் நன்றாகத் தெரிகிறது! = மேல் முறையீடு! உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த வழக்கு மேலும் நீட்டிக்கும்! இடைக்காலத் தடை கேட்டுப் பெற்றால் கூட ஆச்சரியம் இல்லை!

அதனால் அரசு செய்ய வேண்டியது என்ன? உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

1. ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை
2. நிர்வாகம் தொடர்பானவை

என்னென்னு கிடு கிடு-ன்னு பார்க்கலாமா? நீங்களும் விட்டுப் போனவற்றைச் சொல்லுங்கள்! தொகுத்து தமிழக அரசுக்கும், இணை ஆணையர் திருமகளுக்கும், மின்னஞ்சலில் கூட அனுப்பி வைக்கலாம்!


ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை:

1. நந்தனார் என்னும் திருநாளைப் போவார் நாயனார் சிலையை உடனே தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்! நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு, அவர் திருவுருவச் சிலை முன்பு இருந்தது! அப்புறம் "மாயமானது"!
எங்கு இருந்ததோ, அங்கேயே நந்தனாரை நிறுவி, வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்!
பழைய சிலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை! உடனேயே புதிய சிலை ஒன்றினைத் தக்க ஸ்தபதி செய்து கொடுப்பார்!
இதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு செய்து முடித்தால் மிகவும் நலம்! மிகவும் சுலபமான வேலை தான்! அதிக நேரமில்லை!

வருகிற Feb-23 மகா சிவராத்திரி! - அதற்குள் நந்தனார், நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு இருப்பது பெரும் சிறப்பு!

தமிழக ஆலயங்களின் வருவாய், தமிழக அரசுக்குப் பல வழிகளில் துணை செய்கிறது! எனவே இந்த நற்செயலை (சத் காரியத்தை), உடனே செய்து கொடுக்க,
* தமிழக அரசு நன்றிக் கடன் பட்டுள்ளது என்பதை மட்டும் இங்கே ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!
* முதல்வர் கலைஞர் இதைத் தன் தனிப்பட்ட பணியாக எடுத்துச் செய்து கொடுத்தால், தில்லைத் தெய்வத் தமிழில், அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்!

நந்தனார் சிலை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்: கோபால கிருஷ்ண பாரதியின் கீர்த்தனைகள், உ.வே.சா குறிப்புரைகள் மற்றும் அரசு அலுவலர்களின் கட்டுரைகள்!
இந்தத் திண்ணைக் கட்டுரையையும் அவசியம் வாசிக்கவும்!

2. திருக்கோயில் ஓதுவார்கள், இப்போது கீழிருந்து தேவாரப் பதிகங்களை ஓதுகிறார்கள்!
ஆறுகால பூசையின் போது, தீட்சிதர்கள் தங்கள் வழிபாடுகளை முடித்த பின்னர், மணி அடிப்பார்கள்! பின்னர் ஒரு ஓதுவார், தமிழ்ப் பதிகம் ஓத ஆரம்பிப்பார்!
ஆனால் கருவறைக்கு (சிற்றம்பலம்) வெளியே உள்ள பொன்னம்பல மேடையில் இருந்து அல்ல! அந்த மேடையின் படியிறங்கி, கீழே வளாகத்தில் ஒரு ஓரமாய் நின்று ஓதுவார்!

இனி அவரைப் பொன்னம்பல மேடையில் ஏறிப் பதிகம் பாடச் சொல்ல, ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்! அவர் தனியாகப் பாடாமல், உடன் இன்னொருவர் துணைக்கு நின்றால் நலம்! பொது மக்களும் கூடவே தேவாரம் பாடினால், இன்னும் இன்னும் நலம்!

3. ஆலய வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள், ஓலைச் சுவடிக் குறிப்புகள், இன்னும் இதர வரலாற்று ஆதாரங்களை, உடனே டிஜிடைஸ் (Digitization) செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்! தொல்பொருள் துறையின் உதவியை நாடி, குறைந்த பட்சம் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது நலம் பயக்கும்!

4. சிறிய அளவிலான தேவாரத் திருமுறைகள் பள்ளியை, தில்லையில் துவக்க வழி வகை உள்ளதா என்று அறநிலையத் துறை ஆராய வேண்டும்! இதற்கான பூர்வாங்க முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்!

5. சைவத் திருமடங்கள் - திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுர ஆதீனம், காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இன்னும் பல மடத் தலைவர்கள் ஒன்று கூடி, தமிழக அரசுக்கு வழிகாட்டுச் செயல் முறை (Policy Guidelines) ஒன்றை வகுத்துக் கொடுக்க வேண்டும்!

வைணவத் தலைநகரம் திருவரங்கம்! அதே போல் சைவத் தலைநகரம் தில்லை!
திருவரங்கத்தில் கோயில் ஒழுகு என்ற தினப்படி நடத்தை விதிமுறைகளை இராமானுசர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்து வைத்தார்! அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியான ஒழுகு முறைகள்! இன்னிக்கும் அது நடைமுறையில் இருக்கு!

தமிழ் வழிபாடு, தமிழ் விழாவான பகல் பத்து-இராப் பத்து, கருவறைக்குள் அர்ச்சகர்களே முன்னின்று சொல்ல வேண்டிய தமிழ்ப் பாசுரங்கள் என்னென்ன = என்று அனைத்தும் அதில் இருக்கு!
It is a kind of Code Book! Koil Ozhugu!
அதைத் திருவரங்க ஜீயர்களிடம் கேட்டுப் பெற்று, ஒரு உசாத் துணை (Reference) போலப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இது யோசனை தான்! கட்டாயம் இல்லை! ஆனால் அது போல ஒரு செயல்முறை Code Book-ஐத் திருமடங்கள் உருவாக்கித் தரவேண்டும்!

6. நடராஜப் பெருமானின் ஆலயக் குடமுழுக்கு, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! கடைசியாக நடந்தது 1987! இருபத்தி இரண்டு வருடங்கள் ஓடி விட்டன!
மூச்சுக்கு மூச்சு, கர்மானுஷ்டானம், கர்மானுஷ்டானம், என்று வாய் கிழியப் பேசும் தீட்சிதர்கள், 22 ஆண்டுகளாக குடமுழுக்கு இல்லாமல், ஒரு ஆலயம் நடத்தி வருகிறார்கள்!

ஆலயக் குடமுழுக்கு படோபடத்துக்கு அல்ல! சன்னிதிகள் சீரமைப்பிற்கே! வீட்டுக்கே அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாச்சும் வெள்ளை அடிக்கிறோம்! இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தானே? எனவே அரசு குடமுழுக்குக் குழுவை உடனே அமைத்தல் வேண்டும்!


நிர்வாகம் தொடர்பானவை:
1. கோயிலின் பொருள் ஆதாரங்களை, தனித்த ஆய்வாளர்கள் (Independent Evaluator) கொண்டு கணக்கெடுத்து, அதை வெள்ளை அறிக்கையாகப் பொது மக்கள் முன் வைப்பது!

2. ஆலய அளவில், சிறிது காலத்துக்குத் தினப்படி சந்திப்புகள் (Daily Status Meeting) நடத்துவது!

3. தீட்சிதப் பிரதிநிதிகளுடன் ஆணையர் அமர்ந்து பேசி, கொள்கை முடிவுகள் இன்னின்ன என்று தெளிவாக விளக்கி விடுவது!
அவர்கள் எதிரியாகப் பார்க்கப்பட மாட்டார்கள்! எனவே பழைய கசப்பை மறந்து பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோருவது!

4. ஆயிரம் தான் இருந்தாலும், தீட்சிதர்களும் இறைவனுக்குப் பணி செய்யும் வேலையில் இருப்பவர்கள் தான்! அவர்கள் எதிர்காலம், அவர்கள் மாத ஊதியம், அறநிலையத் துறையில் அவர்களுடைய ஊழியர் நிலை என்ன - இது போன்றவற்றையும் தெளிவாக விளக்கி விடுதல் நலம் பயக்கும்!

5. தில்லை நடராஜப் பெருமானின் திருக்கூத்தைப் பார்த்தாவாறு, அந்த மண்டபத்துக்கு வெளியேயே, மிக அருகில் கோயில் கொண்டுள்ளார் கோவிந்தராசப் பெருமாள்! மண்டபத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால், நேராக நடராசரையும், இடப் பக்கம் திரும்பி, பெருமாளையும் சேவிக்கலாம்!

இந்தப் பெருமாள் கோயில் மட்டும் ஏற்கனவே அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கு! அதனால் அதன் ஊழியர்களையே, ஆரம்ப கால அவசரப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
தேவை: சில விரைவான நடவடிக்கைகள்! மேல் முறையீடுகளுக்கு முன்பாக, குறிப்பாக நந்தனார் சிலை நிறுவுதல்!


தில்லை பற்றிய கருத்துச் சண்டைகள் நிறையவே நடந்துள்ளன! ஆனால் இப்போது கடமை நேரம்!
உங்களுக்குத் தோன்றும் வேறு யோசனைகள் என்ன? முன் வையுங்களேன், நண்பர்களே, சக பதிவர்களே!
* அவசரத் தேவை!
* நெடுங்காலத் தேவை!
* ஆன்மீக விடயம்!
* நிர்வாக விடயம்!

ஒன்றாகத் தொகுத்து, அறநிலையத் துறைக்கும், உதவி ஆணையர் திருமகள் அவர்களின் மின்னஞ்சலுக்கும் யோசனைகளாக அனுப்பி வைக்கலாம்! என்ன சொல்றீங்க?

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!
Read more »

Thursday, March 06, 2008

சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி ஐயாவுக்கும் ஒரு பகிரங்கக் கடிதம்!

அன்புள்ள ஆறுமுகச்சாமி ஐயா!
சிவராத்திரித் திருநாள் அதுவுமாய், வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!

இந்தத் தள்ளாத வயதிலும், தனி ஒரு ஆளாகத் துவங்கி, பின்னர் சில மெய்யான இயக்கங்களின் உதவியுடனும் போராடி வென்று உள்ளீர்கள்! மிகவும் பாராட்டுதல்கள்!
பல ஆன்மீக அமைப்புகளும் திருமடங்களும் தீர்த்து வைக்காத பிரச்சனையைத், தனி ஒரு மனிதராக/சிறு இயக்கமாகக் கைக்கொண்டு போராடி இருக்கீங்க! ஓரளவு வெற்றியும் பெற்று இருக்கீங்க!

இந்த வெற்றி என்றும் நிலைத்திருக்க வேண்டும்!
ஒவ்வொரு முறையும் நீங்கள் வந்து பாடினால் தான், தமிழ் கருவறைக்குள் நுழைய முடியும் என்று ஆகி விடக் கூடாது!
உங்களுக்குப் பிறகு யார்?
அடியேன் சில பார்வைகளை உங்களுக்குச் சுட்டிக் காட்ட விழைகின்றேன்!
உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையில், இவற்றைக் கருணை கூர்ந்து கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!


1. இந்நேரம் சிறையில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டு இருக்கலாம்! சிறையில் இருந்த போது, தமிழ் ஆர்வலர்கள் சிலர் சிற்றம்பலத்தில் ஏறிப் பதிகங்கள் பாடியுள்ளதையும்,
முன்பு எதிர்த்த தீட்சிதர்கள் இப்போது பிரச்சனை எதுவும் செய்யாமல், பாடியவர்களுக்கு மாலை மரியாதைகள் செய்துள்ளதையும் பத்திரிகைகளில் பார்த்தோம்! நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்!

2. தாங்கள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்தவுடன், உங்கள் மனமெல்லாம் ஆடல்வல்லானைக் காண வேண்டும் என்றே இருக்கும்! பதிகம் பாடிச் சேவிக்க உங்கள் மனம் துடியாய்த் துடிக்கும்! அறிவேன்!

ஆனால்...அத்தி பூத்தாற் போல் அமைதி பூத்துள்ளது!

எனவே...போராட்ட கோஷங்கள் ஏதுமின்றி, ஆரவாரங்களைக் குறைத்துக் கொண்டு, அரசியல் கட்சிகளைத் தவிர்த்து, தில்லை அம்பலத்துக்கு வாருங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

முன் கூட்டியே தங்கள் வருகையை அறிவித்து விடுங்கள்! காவல்துறைக்கு உதவியாய் இருக்கும்!
தீட்சிதர்களும் பழைய கசப்புடன் உங்களை எதிர் நோக்காது, குறைந்த பட்சம் தங்களை மனத்தளவில் தயார் செய்து கொள்வார்கள்!

3. இந்த முறை தங்கள் ஆலய வழிபாடு அமைதியாக நடக்க வேண்டும் என்பதே என் அவா! அதுவும் சிவராத்திரி அதுவுமாய் அமைதி தேவை!
முன்பு நடந்தது போல், மோதலில், தரிசனத் தடை ஏதும் நிகழ்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு உள்ளது!

பொன்னம்பல மேடையில் நீங்கள் பதிகம் ஓதித் தொழுதவுடன், (முடிந்தால்) மலர் மாலைகளைக் கொணர்வித்து, 
வழிபாட்டுப் பொறுப்பில் உள்ள தீட்சிதர்களிடம் உங்கள் கைகளால் கொடுக்கவும்! - குறைந்த பட்ச நல்லெண்ண முயற்சியாக இது அமையும்!
பாக்களால் நீங்கள் அலங்கரியுங்கள்!
பூக்களால் அவர்கள் அலங்கரிக்கட்டும்!

4. இத்துடன் இரு தரப்பும் வீம்புக்குச் செய்யும் சில செயல்களை நிறுத்திக் கொள்ளுதல் நலம்! உங்களை ஆதரித்த இயக்கங்கள், குறிப்பாக அரசியல் கட்சிகளுக்கு நன்றி கூறி விடையளித்து விடுங்கள்!
குறிப்பாக முதல்வர் கலைஞருக்கும், காவல்துறைக்கும், அறநிலையத் துறைக்கும் நன்றி அறிவிப்பு செய்யுங்கள்! போராட்டம் ஓய்ந்தது என்றும் அறிவித்து விடுங்கள்!
இனி அரசியல் சாராத சமூக இயக்கங்கள் உங்கள் பக்கத்துணை இருந்தாலே போதும்!


5. இனி நீங்கள் தினமும் பொன்னம்பல மேடையேறிப் பதிகம் பாடிக் கொண்டிருக்கத் தேவையில்லை! அதை விட பெரிய பொறுப்பு உங்களுக்குக் காத்துக் கொண்டுள்ளது! என்னவென்று அடுத்த பத்தியில் சொல்கிறேன்!

தற்சமயத்துக்கு உங்கள் சீடர்கள் எவரிடமாச்சும் இந்தப் பாடும் பொறுப்பைக் கொடுத்து விடுங்கள்! முதல் கொஞ்ச நாட்களுக்கு உங்கள் சீடர்களின் கால அட்டவணையை அனைவரும் அறியக் கொடுத்து விடுதல் இன்னும் நலம்!

இன்னின்ன வேளைகளில் பொன்னம்பலம் மேல் நின்று அவர்கள் பதிகம் பாடுவார்கள் என்பதை முன்னரே அறிவித்து விடுங்கள்!அதன் பிறகு சிறிது சிறிதாக மைய நீரோட்டத்தில் இந்த வழக்கம் கலந்து விடும்!

எவ்வளவு நாள் தான் நீங்கள் ஒருவரே இதை எல்லாம் செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள்? உங்களுக்குப் பிறகு தொடர்ந்து யார் செய்யப் போகிறார்கள்?
அரசியல் கட்சிகள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் கழண்டிக் கொள்ளும்! பிரச்சனைகள் இல்லாத இடத்தில் அவர்களுக்கு வேலை இருக்காதே?

மனதில் வையுங்கள்:
தமிழில் ஆன்மீகத்தை வளர்க்கணும், பக்தி இயக்கத்தைச் செழிக்கச் செய்யணும் என்பது அவர்களின் குறிக்கோள் அல்ல!
சமயப் புரட்சி, சமயத்தின் உள்ளேயே இருந்து வந்தால் தான்... காலமெல்லாம் நிலைத்து நிற்கும்!
6. இனி உங்களுக்குப் பெரிய பொறுப்பு-ன்னு சொன்னேன் அல்லவா? இது தான்! 
= சிவாலயங்களில் தமிழ் வழிபாடு!

இதை நீங்கள் மணி கட்டினால் இன்னும் நலமாக இருக்கும்!
ஏன் என்றால் இப்போது நீங்கள் ஒரு வெற்றியாளர்! உங்கள் வாக்குக்கு இனி மதிப்பு அதிகம்!

முடிந்தால் அனைத்து சைவ மடத் தலைவர்களுக்கும் கடிதம் ஒன்று எழுதுங்கள்! சிவாலயங்களில் தமிழ் வழிபாடு எந்தெந்த வகையில் அமையலாம் என்பதைக் கூடிப் பேசி, ஒரு பொதுக் கருத்துக்கு வரவேண்டும்; இதற்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு அவர்களை வேண்டவும்!

அக்கூட்டத்தில் காய்தல், உவத்தல் இன்றி அனைத்துச் சாதியனரையும், அவர்கள் சார்ந்த திருமடங்களையும் அழைத்துப் பேசவும்!
நீங்கள் ஆகம முறைகளில் வல்லவர் இல்லை என்றாலும் பரவாயில்லை! அந்தந்தத் திருமடத் தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்! நீங்கள் ஒரு இணைக்கும் பாலமாக செயல்பட்டாலே ஒரு பெரிய ஊட்டமாக இருக்கும்!

ஒவ்வொரு பூசைக்கும் உண்டான தெய்வத் தமிழ் மறைகளை வரையறுத்து, அவற்றைக் கூட்டுப் பரிந்துரையாகச் சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், ஆலய நிர்வாகத்தின் முன்னர் வையுங்கள்!
அதிகாலைப் பள்ளியெழுச்சி முதற்கொண்டு, உச்சிகாலம், அர்த்தசாமம் முதலான ஒவ்வொரு வழிபாட்டுக்கும் பொது வரையறைகள் வகுக்கப்பட வேண்டும்! பாடல்களும் பதிகங்களும் ஏற்கனவே கொட்டிக் கிடக்கின்றன! தொகுப்பு தான் தேவை!

பூசை வேளைகளில், வடமொழி வேதங்களை சிவாச்சாரியர்கள் முழங்குவது போல், இப்படி வகுக்கப்பட்ட தமிழ் மறைகளை ஓதும் நடைமுறை....கொஞ்சம் கொஞ்சமாக வழக்கத்தில் கொண்டு வந்துவிட வேண்டும்!
இராமானுசரால், வைணவ ஆலயங்களில் உள்ளது போல், it will completely integrate with the system!
மன்னிக்கவும்...வேகத்தில் ஆங்கிலம் வந்திருச்சி! இந்த நடைமுறைகள் அனைத்தும், சிவாலய நீரோட்டத்திலும் இணைந்து, இயைந்து விடணும்!

7. மேற்சொன்ன ஆக்கங்கள் எல்லாம் படிக்கவும் பார்க்கவும் எளிதே தவிர, ஒரே நாளில் மாற்றம் வந்துவிடாது என்பது அடியேனுக்கும் தெரியும்!
ஆனால் அதற்கான முயற்சிகளுக்கு மணி கட்டும் தருணமிது!
நல்ல சமயமடா! - இதை நீ நழுவ விடுவாயோ என்கிற பாடல் தான் நினைவுக்கு வருது! இதற்கான ஆரம்ப வேலைகளை நீங்கள் துவக்கி வைத்தால்...அடியோங்கள் உங்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருப்போம்!

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டர் தொகையில் வருவது போல...
திருவாரூர் பிறந்தவர் தம் அடியார்க்கும் அடியேன்என்ற வரிசையில்.....
ஆறுமுகச் சாமியின் அருள்முயற்சிக்கு அடியேன்
ஆன்றதமிழ் ஓதுவார் தம் அடியார்க்கும் அடியேன்

என்று சேர்த்துப் பாடி மகிழ்வோம்!

வெறுப்பு சிவம் ஆகாது! மொழி வெறுப்பும் சிவம் ஆகாது!
அன்பே சிவம்! அருளே சிவம்!
உங்கள் இந்த வெற்றி்க்கும், இனி வரப் போகும் வெற்றிக்கும், வைணவ முறையில் சொல்லுவதைப் போல் வாழ்த்து சொல்லி முடிக்கிறேன்!
அடியார்கள் வாழ, (அரங்க) தில்லை நகர் வாழ,
(சடகோபன்) 
அப்பர் தண்டமிழ் நூல் வாழ - கடல் சூழந்த
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!


தில்லையம்பல தீட்சிதப் பெருமக்களே,
சிவராத்திரித் திருநாள் அதுவுமாய், வணக்கம்! வாழிய நலம்! அனேக நமஸ்காரங்கள்! :-)

தெரிந்தோ, தெரியாமலோ பல சம்பவங்கள் நடந்து விட்டன! அவப் பெயர்கள் பரவி விட்டன!
Good Judgement comes from experience!
and experience comes from Bad Judgement!

உங்கள் நலமும், சமய நலனும் மேம்பட ஒரு பொன்னான வாய்ப்பாக இந்தச் சம்பவங்களை எடுத்துக் கொள்ளுங்கள்!

வரலாற்றில் நுழைந்து, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், நீங்கள் தில்லை வாழ் அந்தணர்கள் தானா? என்றெல்லாம் இப்போது நான் பேசப் போவதில்லை!
You can never go into the past and apply today's corrections for yesterday!

ஆனால் "தமிழ் விரோதி" என்று முத்திரை தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மேல் குத்தப்பட்டு விட்டது!
அதைத் துடைத்து எறிவது தான், தற்போது உங்கள் முதல் பணியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்! கீழே சொல்லியுள்ள சில கருத்துக்களைப் படித்துப் பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

1. இப்போதெல்லாம், உங்கள் வாயால் தமிழ்ப் பதிகங்களைப் பாடுகிறீர்கள்! - ஆனால் எங்கே?....
கருவறைக்கு வெளியில்! = ஒவ்வொரு இரவும் பெருமானின் திருவடி, பள்ளியறைக்கு எழுந்தருளும் போது பாடப்படும் பதிகங்கள் தமிழ்ப் பதிகங்களே!
பின்னர் எப்படி இந்த அவப்பெயர் உங்களுக்கு வந்தது என்று யோசித்துப் பார்த்தீர்களா? உங்கள் முரட்டுப் பேச்சுகளும் செய்கைகளும் தான் பாதிப் பிரச்சனைக்குக் காரணம்!

பொதுப் பிரச்சனைகளில் உங்கள் நிலைப்பாட்டை அன்புடனும் பொறுப்புடனும் விளக்க வேணும்! தமிழில் அன்பே சிவம் என்பது உங்களுக்கும் தெரியும்! உங்க பாஷையில் சொல்லணும்னா..
மாதாச பார்வதீ தேவி
பிதா தேவோ மகேஸ்வரஹ
பாந்தவா சிவ பக்தாய = என் பந்துக்கள், உற்றார் உறவினர் எல்லாம் சிவனடியார்கள் என்று தான் உங்கள் ஸ்லோகமும் சொல்கிறது!
பின்னர் ஏன் இத்துணை காழ்ப்பு?

2. பொன்னம்பல மேடை கருவறைக்குச் சமானம்! அதனால் தான் மற்றவர்கள் அங்கு ஏறிப் பாடக் கூடாது என்பது உங்கள் வாதம்.
ஆனால் தட்சிணை/கட்டணம் பெற்றுக் கொண்டு பக்தர்களை அந்த மேடையில் ஏற்றுகிறீர்கள் அல்லவா? அப்புறம் எப்படி அது கருவறை ஆகும்?

சிற்றம்பலம்-சிதம்பர ரகசியம்-அம்பலவாணர்-சிவகாமி
அதே மேடையில் பெரிய புராண அரங்கேற்றம் எல்லாம் நிகழ்ந்துள்ளதே!

பீடத்தில் உள்ள நடராஜப் பெருமான் இருக்கும் குறுகலான சிற்றம்பலம் மட்டுமே கருவறை! பொன்னம்பலம் அல்ல!
சிற்றம்பலம் நுழைவேன் என்று ஆறுமுகச் சாமியோ வேறு எவருமோ கோரவில்லை! - இதை நினைவில் வையுங்கள்!

3. சரி, தள்ளு முள்ளு சம்பவங்களுக்கு மன்னிப்பு கோரி விட்டீர்கள்! நீங்கள் பொன்னாடை போர்த்தி தமிழ் ஆர்வலர்களுக்கு மதிப்புச் செய்த காட்சியைப் பத்திரிகைகளில் பார்த்தோம்! மிக்க மகிழ்ச்சி! இங்கிருந்தே உங்கள் course correctionஐத் துவக்கினால் நலம்!

4. அடுத்த முறை ஆறுமுகச்சாமி வரும் போது, கோயிலில் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்பு செய்யுங்கள்! = இது ஒரு குறைந்தபட்ச நல்லெண்ண முயற்சியாக அமையும்!
அடியார்கள் பிரச்சனைக்காக இறைவனே தூது நடந்த கதை உண்டு! அதனால் இவருக்குப் பூர்ண கும்பம் அளிப்பதை மரியாதைக் குறைச்சலாக நினைக்க வேண்டாம்!

அவர் மேடையில் பாடி முடித்து விட்டுப் போகட்டும்!
என் பேராசை: அவர் பாடும் போது, அவருடன் சேர்ந்து நீங்களும் பாடினால், அடியேன் மிக மிக மகிழ்வேன்!

5. இதற்குப் பிறகு, நீங்கள் பெரிதும் மதிக்கும் வைதீக மடத் தலைவர் + தமிழ்ச் சமயத் தலைவர் = இருவரின் முன்னிலையில்-இரு தரப்பும் சந்தித்துப் பேசுங்கள்!
பிரச்சனைகள் என்னென்ன, அவற்றின் குறைந்த பட்சத் தீர்வு (common minimum program) என்ன என்பதை அடையாளம் கண்டு பட்டியல் போடுங்கள்!
எது ஐதீகக் குறைச்சல் என்று நீங்கள் கருதுகிறீர்கள் என்பதைத் தெளிவாக முன்வையுங்கள்!
இதன் முடிவுகளை தமிழக முதல்வருக்கு இரு தரப்பும் நேரில் சென்று விளக்குங்கள்!

6. இதைச் சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள்! முடிந்தால் ஆலயப் பொறுப்பை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்!
அதற்கு ஈடாக உங்கள் தேவைகளை அரசிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்! நீங்களாகக் கொடுக்கும் போது உங்கள் மதிப்பு கூடத் தான் செய்யும்!

இதே போல், பல சண்டைகளுக்குப் பிறகு, திருவரங்கத்துக் கோயில் சாவியை அதன் தலைமை அர்ச்சகர் என்ன செய்தார் தெரியுமா? இராமானுசரிடம் கொடுத்துவிட்டுப் பொறுப்பை ஒப்படைத்த கதை தெரியும் அல்லவா?
அதைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள்! காலமெல்லாம் போற்றப்படுவீர்கள்!

உங்கள் அடுத்த தலைமுறையில் எத்தனை பேர் பூசை செய்ய வரப் போகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? விருப்பம் இல்லையென்றால் அவர்கள் மேல் பூசைப் பொறுப்பைத் திணிக்காதீர்கள்!

7. Men may come and Men may go! But Nataraja Peruman should go on forever!

எக்காரணம் கொண்டும் இனியொரு முறை தில்லைச் சன்னிதியில் போலீஸ் தடியடி, நீங்களும் எண்ணெய் எறிந்து வீசுவது - இது எல்லாம் நடக்கவே கூடாது!
பொன்னம்பலம் "நடன" அம்பலம்! "ஆட்டம் போடும் அம்பலம்" அல்ல!

போலீஸ் இவ்வளவு களேபரத்திலும், சட்டையைக் கழட்டி விட்டுத் தான் உள்ளே செல்கிறார்கள்! அவர்களுக்கே அவ்வளவு அக்கறை என்றால், தில்லைக் கோயிலை நிர்வாகம் செய்யும் உங்களுக்கு பத்து மடங்கு பொறுப்பு அதிகம்!

நீங்கள் சீர் குன்றினாலும், நடராஜப் பெருமானின் ஆலயம் சீர் குன்றக் கூடாது!
உங்கள் பெயர் பங்கப் பட்டாலும், நடராஜப் பெருமானின் திருப்பெயருக்குப் பங்கம் வரக்கூடாது!
இப்படி நீங்கள் நினைப்பது உண்மையானால், அதற்காகச் சில தியாகங்களைச் செய்ய உங்கள் மனத்தைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்!
அதுவே ஈஸ்வர கடாட்சமாக உங்களைக் காக்கட்டும்! சிவோஹம்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP