Thursday, February 25, 2010

சிங்கத்தையே சிம்மாசனத்தில் அமரச் சொன்ன ஆண்டாள் !! ஏன் ??'ங்களால் இனிமேல் ஆவதொன்றும் இல்லை. நீயே அருள் கூர்ந்து எங்களை நோக்கினால் தான், சாபம் போல் உள்ள எங்கள் துக்கம் தீரும்!' என்று கண்ணனை வேண்டுகின்றனர் பாவையர் .... ’அங்கண்மா ஞாலத்து’ என்று தொடங்கும் 22-ம் திருப்பாவைப் பாசுரத்தில்.

கண்ணனுக்கும், கோபிகையருக்கும் உரையாடல் அடுத்த (23-வது) பாசுரத்திலும் தொடர்கிறது ...

***

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து, உறங்கும்*
சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து*
வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி*
மூரி நிமிர்ந்து, முழங்கிப் புறப்பட்டு*
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா!* உன்
கோயில் நின்று இங்கனே போந்தருளி* கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!
திருப்பாவை-23

'மழைக் காலத்தில், மலைக் குகையில் தன் பேடையுடன் சேர்ந்து இருந்து உறங்கும் சீர்மையான சிங்கம், வெயில் காலம் வந்து விட்டதை உணர்ந்து, நெருப்புப் பொறி பறக்கும் கண்களை விழித்து, பிடரி மயிர்கள் எழும்படி எல்லாப் பக்கங்களிலும் அசைந்து, உதறி, உடல் ஒன்றாகும்படி நிமிர்ந்து, கர்ஜனை செய்து, வெளிப் புறப்பட்டு வருவது போல,

காயாம்பூ நிற வண்ணனே! நீ உன் திருக்கோயிலில் இருந்து, இவ்விடத்திலே எழுந்து அருளி, அழகிய சிம்மாசனத்தில் உட்கார்ந்து, நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து அருள வேண்டும்!'

(மாரி - மழை, மழைக்காலம்; முழைஞ்சு - குகை; மன்னி - நிலைத்து, பிணைந்து; கிடந்து - படுத்து; சீரிய - வீரம் நிறைந்த; வேரி மயிர் - வாசனையுள்ள பிடரி மயிர்; மூரி நிமிர்ந்து - உறங்கியதால் வளைந்த உடல் நிமிர்ந்து; போதருமா - வருமாறு; பூவைப்பூ - காயாம்பூ, ஊதா நிறமுள்ள பூ; போந்து அருளி - வந்து அருளி; கோப்பு - அழகு, கட்டுப்பாடு)

***

பேய்ப்பெண்: கண்ணா! மழைக்காலம் (மாரி) வந்து விட்டது! இது, பிரிந்தவர் கூடும் காலம்! அப்படியிருக்க, நாங்கள் மட்டும் உன்னை விட்டுப் பிரிந்து இருக்கலாமா?

(மழைக்காலம், ஸுக்ரீவன் தான் ராமனுக்குச் செய்த வாக்குறுதியை மறந்து, கிஷ்கிந்தையில் தன் மந்திகளுடன் சேர்ந்திருந்த காலம்;

ராமனும், மால்யவான் எனும் மலையில் உள்ள குகையில் தங்கி இருந்ததாக, ஆண்டாள் ராமாயணத்தில் கூறுகின்றாள்)

கண்ணன் (படுக்கையில் இருந்தே): ம்ம்ம்ம்....


நாயகப் பெண்: கண்ணா! உனக்கே இது நல்லா இருக்கா? நாங்கள் இங்கு நீ இல்லாம தவிக்கிறோம்! ஆனால் நீயோ, மலைக் குகையில் (மலை முழைஞ்சில்) சிங்கம் தன் பேடையுடன் உறங்குவது போன்று, நப்பின்னையின் ஸ்பர்ஸ சுகத்தாலே (மன்னி), நன்கு உறங்குகிறாய் (கிடந்து)!

(சிங்கம் உறங்கும் பொழுது கூட, நாம் அருகில் செல்ல பயப்படுவோம்! அது போல, இவர்களும் தள்ளி இருந்தே கண்ணனிடம் பேசுகிறார்கள்!)

தேசமுடையாள்: கண்ணா! நீ இவ்வளவு நேரம் நப்பினையுடன் சேர்ந்து (மன்னி) இருந்தது போதும்! எங்களையும் கொஞ்சம் கவனி!


கண்ணன் (சிரிப்புடன்): நான் 'மன்னி’' ருந்தேனா! எப்படி?

(மன்னி’ - ஆணும், பெண்ணும் பொருந்தி இருத்தல், எதுவும் செய்யாமல் அமைதியாகப் படுத்து இருத்தல், என்ற இரு பொருள் உண்டு!

இந்தப் பாசுரத்திற்கு, முதல் அர்த்தமே அதிகம் பொருந்தும் - இவன், ’நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன்’ ஆயிற்றே! 45-ம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் உரையும் அப்படியே!

பொருத்தம்’ என்பது, உடலளவில் மட்டுமல்ல - உள்ளம், உரை, செயல் அளவில்! இப்படி இருப்பவர்கள், இன்று வரை இரண்டே தம்பதியர் தான் - லக்ஷ்மி நரசிம்மன், சிவன் பார்வதி! எப்படி என்று பார்க்கலாமா?)

***

இடம்: திருக்கடையூர்
நேரம்: உதை வாங்கும் நேரம்

(ஒரு சிறுவன், கோயிலுக்குச் சென்று கொண்டிருக்கிறான்! அவன் பக்கத்தில், நாலைந்து முரட்டு ஆசாமிகள், கையில் கயிற்றுடன்)


யம தூதர்கள்: டேய் சிறுவா! நீ தானே மார்க்கண்டேயன்?

மார்க்கண்டேயன் (அவர்கள் உருவத்தைப் பார்த்து, பயத்துடன்): ஆமாம்! உங்களுக்கு என்ன வேண்டும்?

யம தூதர்கள்: நீ தான் வேண்டும்! இன்றுடன் உன் ஆயுள் முடிகிறது! உன்னை அள்ளிட்டு வரச் சொல்லி உத்தரவு!

(அவர்கள் விரட்ட, அவன் கோயில் சன்னிதிக்குள் ஓடிச் சென்று, லிங்கத்தைக் கட்டிக் கொள்கின்றான்; யமதூதர்கள் குழம்பி, யமனிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றனர்; யமனே நேரில் புறப்பட்டு வருகின்றான்)


யமன்: அடே சிறுவா! நீயே வரயா, நான் கயிறு போடணுமா?

(மார்க்கண்டேயன் பதில் பேசாது, இன்னும் இறுக்கமாக லிங்கத்தைக் கட்டிக் கொள்ள, யமனுக்குக் கோபம்! கயிறு போடுகிறான். அது சிவன் மீதும் சேர்த்து விழுகிறது! இதைக் கவனியாது யமன் கயிற்றை இழுக்க, சிவன் மிகவும் கோபமாக, அங்கே தோன்றுகிறார்)

சிவன்: நானே யமனுக்கு யமன்! எனக்கே யமனா!

யமன் (பயந்து): பிரபோ! மன்னியுங்கள்! இழுக்க நினைத்தது மார்க்கண்டேயனை! வந்ததோ நீர்! மார்க்கண்டேயனை என்னிடம் விட்டு விடுங்கள்!

சிவன் (கோபத்துடன்): அவன் என் பக்தன்! அவனை விட்டு விடு!

யமன்: பிரபோ! இன்றுடன் மார்க்கண்டேயன் First Innings ஒவர்! Follow-on பண்ணினால் தான் அடுத்த Innings!

சிவன் (கண்கள் சிவக்க): நீ எனக்குப் போட்டே கயறு! நான் உன்னை ஆக்குவேன் பயறு!


(கோபத்துடன், யமனை, இடது காலால் உதைக்கிறார்; யமன், அலறியபடியே சற்று தூரம் சென்று விழுகிறான்

எழுந்த யமன், கிள்ளிப் பார்த்துக் கொள்கிறான். சிவனிடம் உதை வாங்கிய அந்தக் கணத்தில், 'செத்தோம்' என்று நினைத்தவனுக்கு, 'உயிருடன் இருக்கிறோமா' என்ற சந்தேகம்! நடந்தவற்றை நினைத்துப் பார்க்கிறான்! பொறி தட்டுகிறது!

தன் மீது பட்ட திருவடிகள், மெதுவாக இருந்தது! கொலுசு அணிந்திருந்தது! விஷயம் புரிய, சிவன் அருகில் செல்கிறான்)

யமன்: பிரபோ! அர்த்தநாரீஸ்வரா! என்னை உதைக்க நினைத்தது நீயாக இருந்தாலும், உதைத்தது அன்னை! என்னுயிர் தப்பியது! என்னே அவள் கருணை!எண்ணம் நீ, செயல் அவள்! சொல் நீ, உணர்ச்சி அவள்! உடல் நீ, உயிர் அவள்!

இருவருக்கும் என் வணக்கங்கள்! என் பிழையை மன்னியுங்கள்!

(அவனும், அவளும் 'மன்னி' இருக்கும் அர்த்தநாரீஸ்வரனை வணங்கி, மார்க்கண்டேயனை விட்டுச் செல்கிறான் யமன்)

(மார்க்கண்டேயர் கதையை இங்கு சொல்வதற்கு, ஒரு காரணம் உள்ளது:

நரசிம்ம புராணத்திலும், மார்க்கண்டேய வரலாறு விரிவாக உள்ளது! ஆனால் அதில் யமன், யமாஷ்டகத்தைச் சொல்லி, விஷ்ணுவிடம் மார்க்கண்டேயருக்காக சாகாவரம் வாங்கியதாகச் சொல்லப்படுகிறது [Ch 7-10]. இந்த யமாஷ்டகமும், ம்ருத்யுஞ்சய ஸ்லோகத்திற்குச் சமமாகக் கருதப் படுகிறது)

***

(கண்ணன், பாவையர் உரையாடல் தொடர்கிறது ...)

கோதுகலப் பாவை: சிரிக்காதே கண்ணா! எரிச்சலா வருது!

கண்ணன் ('வைகுந்தத்தில் தான் தூங்க சுதந்திரம் இல்லை; இங்குமா!' என்று நினைத்து): ஏஏஏஏன்?

மாமான் மகள்: முதலில், உனக்காக ஏங்கும் உன் பக்தர்கள் வந்துள்ளோம் என்று புரிந்து கொள் (அறிவுற்று)!

கண்ணன் (இன்னும் படுத்துக் கொண்டே): சரி! அப்புறம்?

அம்மன்: உன் அடியவர்கள் துன்பம் அடைகிறார்கள் என்று கோபப்படு (தீ விழித்து)!

அனந்தலுடையாள்: கண்ணா! நாங்கள் என்ன கதையா சொல்கிறோம்? முதலில், தூங்கும்போது கலைந்த உன் அழகிய வாசனை உடைய (வேரி) திருமுடியை (மயிர்) சரி செய்து (பொங்க, எப்பாடும் பேர்ந்து, உதறி) கொள்!

கண்ணன் (சில நொடிகள் கழித்து): ஆச்சு! இன்னும் ஏதாச்சும் இருக்கா?

அருங்கலம்: கண்ணா! உறக்கத்தால் வளைந்த உன் உடலை நிமிர்த்து (மூரி நிமிர்ந்து), படுக்கையில் இருந்து எழுந்திரு!

கண்ணன்: காபி எங்கே? அது வந்தால் தான் சோம்பேறித்தனம் போகும்!

பொற்கொடி: நாங்கள், உன்ன பார்க்காமல் நொந்து Noodles ஆயிட்டு இருக்கோம்! உனக்கு மட்டும் காப்பி கேக்குதா? எழுந்திரு!

(கண்ணன், சலிப்புடன், எழுந்து கட்டிலில் உட்கார்ந்து கொள்கிறான்)

கண்ணன்: இப்போது திருப்தியா!


புனமயில்: கண்ணா! சிங்கம் கர்ஜனை (முழங்கி) செய்வதைக் கேட்ட உடனேயே, அதன் எதிரிகள் அடங்கும்! நீயும் படுக்கையில் இருந்து கிளம்பி (புறப்பட்டு) அது போல வா (போதருமா போலே)!

***

றங்கிய சிங்கம் செய்வதாக ஆண்டாள் சொன்னவை:

அறிவுற்று, தீ விழித்து, வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து, உதறி, மூரி நிமிர்ந்து, முழங்கி, புறப்பட்டு, போதரும்

இரணியன் தூணைத் தட்டியவுடன், அதில் இருந்த நரசிம்மன், இந்த 9 செயல்களையும் செய்து, பக்தனைக் காப்பாற்ற வெளியே வருகின்றானாம்!

(சிங்கத்தின் இந்தச் செயல்களுக்கு, 'ஸிம்ஹவனகுப்தி ந்யாயம்' என்ற பெயர் உண்டு)

இந்த 9 செயல்களையும் குறிக்கவே, அஹோபிலத்தில் உள்ள நவ நரசிம்மர்கள் என்று பெரியோர் கூறுவர்!

***

(கண்ணன், கோபிகைகள் உரையாடல் தொடர்கிறது)

கண்ணன்: எதற்குப் புறப்படவேண்டும்? இங்கேயே சொன்னால் என்ன?

செல்வப் பெண்டாட்டி: காயாம்பூ நிறத்தவனே (பூவைப்பூ வண்ணா)! எது பேசினாலும், இங்கிருந்து வேண்டாம்! நீ இங்கேயே இருந்து சொன்னால், ’அது படுக்கைப் பேச்சு! போது விடிஞ்சாப் போச்சு!'

கண்ணன்: வேறு எங்கே வரணும்?

நற்செல்வன் தங்கை: நீ முதலில் ஒரு ஆசனத்தில் அமர்ந்திரு! பின் கேட்கிறோம்!

கண்ணன் (விளையாட்டாக): Chair கொண்டாந்தீங்களா?

போதரிக் கண்ணினாள்: கண்ணா! சாதாரண மனிதர்களுக்குத் தான் Chair, Sofa எல்லாம்!

அரசர்களுக்கு, சிங்காசனம் (சிங்காசனம்)!

தேவர்களுக்கு, மேன்மையுடைய சிங்காசனம் (சீரிய சிங்காசனம்)!

ஆனால் நீயோ தேவர்களுக்குத் தலைவன்! எனவே உனக்காக, ஒரு அழகான, மேன்மையுடைய சிங்காசனம் (கோப்புடைய சீரிய சிங்காசனம்) கொண்டு வந்தோம்!


கண்ணன் (விளையாட்டு பயத்துடன்): ஐயோ! சிங்கத்தின் மேல் உக்காரணுமா? பயமாயிருக்குப்பா! வேணாம்ப்பா!

***

இடம்: மாந்தோப்பு
நேரம்: பைத்தியம் முற்றும் நேரம்

(தோப்புக் காவலன், ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கிறான்; ஒரு வழிப்போக்கன் அங்கு வருகிறான்)

காவலன்: ஏம்ப்பா! மாம்பழம் நிறையத் தொங்குகிறதே! பறித்துச் சாப்பிட்டுச் செல்லுங்கள்!

வழிப்போக்கன் (வாயை பிளந்து கொண்டு): சும்மாவேவா!

(வழிப்போக்கன் பறிக்க முயற்சிக்க, காவலன் எழுந்து, உதவி செய்ய அருகே வருகிறான்)

காவலன் (அருகே வந்தவுடன்): இப்படி ஒரு அக்கிரமம் உண்டோ? யார் வீட்டுத் தோப்பில் யார் பறிப்பது? உன் சொத்தா இது? போ இங்கிருந்து!

(காவலன், இப்படித் தொடர்ந்து, உட்காரும்போது சாப்பிடச் சொல்லியும், பறிக்கும் போது விரட்டியும் வந்ததைக் கண்ட சிலர், இவனுக்குப் பைத்தியம் என்கின்றனர்.

ஒரு வயதானவர் மட்டும், அவன் உட்கார்ந்த இடத்தைத் தோண்டச் செய்கிறார்! அங்கே, ஒரு சிங்காசனம் இருந்தது! அது தான் விக்கிரமாதித்தன் சிங்காசனம்!


நீதி, நேர்மை, தானம், தர்மம் சிந்தனைகளுடனே அதன் மீது அரசாட்சி செய்தான், விக்கிரமாதித்தன்! இந்தச் சிங்காசனமே போஜ ராஜனுக்குக் கிடைத்தது!)

***

(கண்ணன், பாவையர் உரையாடல் தொடர்கிறது ...)

பாவை: கண்ணா! நீயோ, ஏலாப் பொய்கள் உரைப்பவன்! உன்னை உடனே நம்ப முடியாது! ஆனால், சிங்காசனத்திற்கு என்று ஒரு தன்மை உண்டு! அதில் அமர்ந்து பதில் சொன்னால், நீதி, தானம், தர்மம், நியாய சிந்தனை, எல்லாம் இருக்கும்!

எனவே, நீ சிங்காசனத்தில் அமர்ந்து சொன்னால் தான் நீ சொல்வதை நாங்கள் நம்ப முடியும்!

கண்ணன் (கோபத்துடன்): என்னை நம்பவில்லை என்றால் என்னிடம் ஏன் வந்தீர்கள்?

மந்திரப் பட்டாள்: கண்ணா! கோபிக்காதே! இதுவரை, நீ உறங்கிய அழகு, அமர்ந்த அழகு, இரண்டையும் பார்த்துவிட்டோம்! நீ நிற்கும் அழகையும் நடக்கும் அழகையும் நாங்கள் ரசிக்க வேண்டும்! அதற்காகத் தான் இந்த ஏற்பாடு!

கண்ணன் (கோபம் தணிந்து): சரி! அந்த ஆசனம் எங்கே உள்ளது!

கோபிகைகள் (மொத்தமாக): வாசலில்!

கண்ணன் (சந்தேகத்துடன்): என்ன! எல்லோரும், ஒரு மார்க்கமாகவே வந்தது போல் தெரியுது?

நங்கை: படுக்கையில் இருந்து (உன் கோயில்) எழுந்து நின்று (நின்று), நடந்து வந்து (போந்து) சிங்காசனத்தில் அமர்ந்து (கோப்புடைய சீரிய சிங்காசனத்திருந்து) கொள்! தயவு செய் (அருள்)!


(திருநீர்மலை எனும் திவ்ய தேசத்தில், இந்த நான்கு கோலங்களையும் ஒருங்கே தரிசிக்கலாம்)

***

இடம்: தசரதன் அரண்மனை
காலம்: நடக்கும் காலம்

(தசரதன், சுமந்திரன் மூலம் ராமனைக் அழைக்கிறான்)

தசரதன்: ராமா! நலமா!


ராமன்: தந்தையே! தாங்கள் நலம் தானே!

தசரதன்: எல்லாம் நலம்! எல்லோரும் சௌக்கியம்! சரி! போய் வா!

ராமன்: சரி தந்தையே!

(திரும்பிச் செல்கின்றான், ராமன்)

தசரதன்: ராமா! ஒரு நிமிடம் இங்கே வா!

ராமன் (திரும்பி வந்து): தந்தையே! தங்கள் உடல் நலம் சரியாக இருக்கிறதா?

தசரதன்: நான் இப்போது தான் சந்தோஷமாக இருக்கிறேன்! நீ போ! போகும் போது, அப்படியே இன்னும் ஒரு முறை இங்கே வந்து, என்னைப் பார்த்து விட்டுப் போ!

ராமன் (’இன்று என்னாயிற்று இவருக்கு' என்று குழம்பினாலும்): சரி தந்தையே!

(அப்படியே, இன்னும் ஒரு முறை வந்து செல்கிறான்)

கௌசலை: உங்களுக்கு என்ன ஆயிற்று இன்று?

தசரதன்: உனக்குமா புரியவில்லை?

ராமன் எதிரில் வரும்போது, அவன் முன்னழகு, யானையின் நடை அழகு! அதனை ரசித்தேன்!

அவனைத் திரும்பிப் போகச் சொன்னது, சிங்க நடை போன்ற அவன் பின்னழகை ரசிக்க!


அவனைத் திரும்பி வரச் சொன்னது, அவன் திரும்பும்போது, புலி போன்ற அவன் நடை அழகை ரசிக்க!

இன்னுமொரு முறை வரச் சொன்னது, சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள!

கௌசலை: என்ன சந்தேகம்?

தசரதன்:ராமனைச் சிங்க நடை என்று சொல்ல வேண்டுமா, அல்லது, சிங்கத்தை ராம நடை என்று சொல்ல வேண்டுமா?’ என்ற சந்தேகம், என் மனதில் வெகு நாளாக உண்டு! அதைத் தீர்த்துக் கொள்ள!

***

ம்பெருமான் நடக்கும் அழகை - குறிப்பாக, அரங்கன் நடையை - வர்ணிக்க இயலாது.


(காஞ்சிக் குடை, அரங்க நடை, திருப்பதி வடை, மேல்கோட்டை முடி என்பர் பெரியோர்)

இன்று, குலசேகரர் திருநட்சத்திரம்! எனவே, அவர் வர்ணித்த ராமனின் நடையைத் தான் அடியேன் மேலே கூறினேன். இதோ அந்தப் பாசுரம்:

வா, போகு, வா, இன்னம் வந்து ஒரு கால் கண்டு போ* மலராள் கூந்தல்*
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா* விடையோன் தன் வில்லைச் செற்றாய்*
மா போகு நெடுங்கானம் வல்வினையேன்* மனம் உருக்கும் மகனே!* இன்று
நீ போக, என் நெஞ்சம்* இரு பிளவாய்ப் போகாதே நிற்குமாறே!
- பெருமாள் திருமொழி (9-4)

('இப்படி அழகான நடை நடக்கும் உன்னையும், சீதையையும், காட்டிற்குப் போ! 14 வருடங்கள் வராதே என்றேன்!' என்று தசரதன் புலம்புவதாக ஆழ்வாரின் நடை!)

***

(பாவை உரையாடல் தொடர்கின்றது ...)

கண்ணன் ('எல்லோரும் ஒரு Plan-ஓட தான் வந்தீர்களா' என்று நினைத்து): அமர்ந்தாயிற்று! இப்போது சொல்லுங்கள்! என்ன வேண்டும் உங்களுக்கு?


நாணாதாள்: உனக்குத் தெரியாதா கண்ணா?

கண்ணன் ('ஆஹா! புதுசா ஒரு Bit-ஆ இன்று' என்று நினைத்து): நீங்கள் தானே வந்தீர்கள்! நீங்களே சொல்லுங்கள்!

நாவுடையாள்: கண்ணா! நாங்களோ சிறுமிகள்! அதுவும், அறிவொன்றும் இல்லாத ஆய்ப்பாடியில் பிறந்த சிறுமிகள்! எங்களுக்கு, வலக்கை எது, இடக்கை எது என்றே தெரியாது!

கண்ணன் (அவள் கைகளைப் பிடித்து): இதோ! இது வலக்கை! இது இடக்கை!

இளங்கிளி: கண்ணா! எப்போதும் Joke தான் உனக்கு! Be Serious! ’நாங்கள் அறிவிலிகள்! எங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று தெரியாது' என்று சொல்ல வந்தோம்!

நீ, ஒரு கையில் வைரத்தையும், ஒரு கையில் குச்சி மிட்டாயையும் காண்பித்து, எது வேண்டும் என்று கேட்டால், நாங்கள் குச்சி மிட்டாயைத் தான் எடுத்துக் கொள்வோம்!

ஆண்டாள் எனும் பாவை (குறுக்கே புகுந்து): நாங்கள் வந்த காரியம் எது (யாம் வந்த காரியம்)? எங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்று ஆராய்ந்து பார்க்கும் (ஆராய்ந்து), என்ற பொறுப்பு உன்னுடையது!

எங்களுக்கு எது நல்லதோ அதை நீ அருள வேண்டும் (அருள்)! நாங்கள் கேட்டதைத் தான் நீ கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் அல்ல!

(தசாவதாரங்களையும் ஆண்டாள் திருப்பாவையில் சொல்லி இருந்தாலும், நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று ஆராயும் பொறுப்பை நரசிம்மனிடமே விட்டது மிக விசேஷம்!)

***

சில வியாக்கியான கர்த்தாக்கள், இதை, க்ருஷ்ணாவதார ரகசியம் என்பர்:

மாரி - பாற்கடலில்
மலை ... சிங்கம் - உறங்கும் எம்பெருமான்
அறிவுற்று ... போலே - அவதார நேரம் வந்தது என்று தெரிந்து
நீ ... இருந்து - அங்கிருந்து, பூமிக்கு வா என்று
யாம் ... அருள் - பூமாதேவி (ஆண்டாள்) முறையிடுகின்றாள்

அடுத்த பதிவில், ஆண்டாளின் அடுத்த பிரபந்தமான நாச்சியார் திருமொழி தொடரும்!

- நாச்சியார் நரசிம்மர் தொடர்வார்

16 comments:

 1. அன்பர்களுக்கு

  இந்த வருடம் திருப்பாவை உபன்யாசம் செய்யச் சென்ற பொழுது ஒரு நாள், ஒரு புதிய பக்தர், 'தினமும் நாங்கள் மூன்று தொலைக் காட்சிகளில், திருப்பாவை உபன்யாசம் கேட்கிறோம்! இது நாலாவது! நீங்கள் ஏதாவது புதிதாகச் சொல்வீர்கள் என்று நினைத்தே இங்கு வருகின்றோம்' என்றார்!
  ஆரம்பத்திலேயே 'Pressure'!!

  திருப்பாவை பற்றி எழுதுபவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் இது தான் பிரச்சனை!

  கடந்த சுமார் 1,000 ஆண்டுகளாக,
  - ஒவ்வொரு மார்கழி மாதமும்,
  - உலகின் பல மூலைகளிலும் உள்ள சில ஆயிரம் கோயில்களிலும்,
  - கடந்த சில வருடங்களாகத் தொலைக் காட்சிகளிலும்,
  - அதற்கு முன்பு வானொலியிலும்,
  - பல ஓலைச் சுவடிகளிலும், பல புத்தகங்களிலும்,
  - தமிழ்ப் புலவர்களாலும், பல மொழி அறிஞர்களாலும்,
  - பாகவதர்களாலும், கத்துக் குட்டிகளாலும்,
  - கர்நாடக இசைக் கலைஞர்களாலும்,
  - தினமும் வைணவக் கோயில்களில் அர்ச்சகர்களாலும்,
  - தினமும் வைணவர்களின் வீட்டிலும்,

  'பிரித்து மேயப்படும்' ஒரே இலக்கியம் - 240 வரிகள் மட்டுமே கொண்ட திருப்பாவை!

  இப்படிப் பலர் முன்னமேயே 'மேய்ந்து' விட்டதால், இனிமேல் அடியேன் 'மேய்வதற்கு' புதிய பாவைப் புல் கிடைக்குமா என்பது சந்தேகமே!

  எனவே, இந்தப் பதிவில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு முன்னமேயே தெரிந்திருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது இது தான்:

  .ignore

  அல்லது

  cat 'இந்தப் பதிவு' > /dev/null

  செய்து விடுங்கள்!

  (ஹி... ஹி... ஒரு காலத்தில், Programmer ஆக இருந்ததன் விளைவு தான் இது)

  அன்புடன்,
  ரங்கன்

  ReplyDelete
 2. ஹேய் கோதை!
  வெல்கம் பேக் டு பந்தல்!
  எப்படிடீ இருக்கே? :)

  ReplyDelete
 3. ஏன்டீ

  உன் அப்பா வேயர் குலத்துதித்த விட்டு சித்தர் நலமா?
  உன் சோதி மணி மாடம் தோனும் வில்லிபுத்தூர் நலமா?
  உன் பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் திருவரங்கம் நலமா?

  உன் மாதவிப் பந்தல் நலமா?
  உன் கோலக் கிளி நலமா?

  உன் திருமுடிப் பாண்டியன் கொண்டை நலமா?
  அதில் உள்ள இராக் கொடி நலமா?

  அதில் சூட்டிய சூரிய சந்திர பிரபைகள் நலமா?
  அதில் அசைஞ்சி ஆடும் முத்து வடத் தொங்கல் நலமா?
  உன் பின்னிய கூந்தல் கரு நிற நாகம் நலமா?

  உன் ஒளிக் கண்ணாடி முகம் நலமா?
  உன் நெற்றியில் கர்ப்பூரம் கலந்திட்ட ஸ்ரீசூர்ண ரேகை நலமா?
  உன் துடிதுடிக்கும் அல்லி விழி நலமா? முல்லை நகை நலமா?

  காற்றிலாடும் தோடும் செவிப்பூவும் நலமா?
  மூக்கிலாடும் புல்லாக்கு நலமா?

  அவர் கிள்ளி விளையாடும் கன்னங்கள் நலமா?
  போடா என்று என்னைச் சதா பழிக்கும் அந்தத் திரு இதழ்கள் நலமா? :)

  சங்கு வரிக் கழுத்து நலமா?
  தாயீ, உன் திருமாங்கல்யம் நலமா?

  உன் திருமார்பில் புரளும் தண்ணந் துழாய் நலமா?
  முத்தும், நவமணியும், பச்சைக் கல் மரகதமும்,
  கொத்தும் பவழக் கல் ஆரங்கள் தாம் நலமா?
  உன் காசு மாலையும், மாங்காய் மாலையும் நலமா?

  அவர் சூடிக் களைந்ததைத் தானே இப்போது உடுத்துகிறாய்? இல்லை இன்னமும் நீ தான் சூடிக் கொடுத்துக்கிட்டு இருக்கீயா? :)
  தொங்கல், தொடையல், கண்ணி, கதம்பம் என்று உன் மாலைகள் எல்லாம் நலமா?

  கை வங்கிச் சூடகம் நலமா?
  வளையோசை கலகல கலவென உன் பச்சைக் கண்ணாடி வளையொலிகள் நலமா?
  உன் இடுப்பு தசாவதார ஒட்டியானம் நலமா?

  உன் பச்சைப் பட்டுச் சேலை நலமா?
  அதில் பட்டுத் தெறிக்கும் கருநீல நட்சத்திர வெள்ளிச் சரிகைகள் நலமா?

  கிங்கிணி வாய்ச் செய்தானை தாமரைப் பூப்போலே உன் காற் சதங்கை நலமா?
  அம்மி மிதித்து போட்டு விட்ட அந்த வெள்ளி மெட்டி நலமா?

  அந்தப் பிஞ்சு பிஞ்சு French Fries...கால் விரல்கள் நலமா?
  அதைப் பிடித்து விட்டுச் சொடுக்கு எடுக்கும் எங்கள் மாயோன் நலமா? அவன் மாயங்கள் நலமா?

  வாடீடீடீ
  உன் மாதவிப் பந்தல் மேல்
  பல் கால் குயில் இனங்கள் கூவின காண்!

  ReplyDelete
 4. //'பிரித்து மேயப்படும்' ஒரே இலக்கியம் - 240 வரிகள் மட்டுமே கொண்ட திருப்பாவை!//

  :)

  //இப்படிப் பலர் முன்னமேயே 'மேய்ந்து' விட்டதால், இனிமேல் அடியேன் 'மேய்வதற்கு' புதிய பாவைப் புல் கிடைக்குமா என்பது சந்தேகமே!//

  பல தலைமுறைகள் கங்கை நீரைக் குடித்து விட்டதால்,
  இந்தத் தலைமுறைக்கு கங்கை நீர் கிடைக்குமா என்று கேட்பாங்களா ரங்கன் அண்ணா? :)

  என் தோழியின் பாவை...
  கங்கையைப் போல், காவிரி போல், கருத்துக்கள் ஊறும் உள்ளம்!

  தொட்டனைத்து ஊறும் மணற்கேணி - மாந்தர்க்கு
  கற்றனைத்து ஊறும் கோதை! :)

  ReplyDelete
 5. //நீ, ஒரு கையில் வைரத்தையும், ஒரு கையில் குச்சி மிட்டாயையும் காண்பித்து, எது வேண்டும் என்று கேட்டால், நாங்கள் குச்சி மிட்டாயைத் தான் எடுத்துக் கொள்வோம்!//

  ஆமாம்!
  அதுவும் நீ பாதி தின்று தரும் குச்சி மிட்டாய்! :)

  கடித்துத் தந்த உன் குச்சி மிட்டாயினைக் கடித்துச் சுவைத்ததுண்டு!
  சூடிக் களைந்த நின் பீதக ஆடை
  சூடும் இத் தொண்டர்களோம்!

  ReplyDelete
 6. //இன்று, குலசேகரர் திருநட்சத்திரம்!//

  Happy Birthday Kulasekara!

  இன்று உங்கள் நினைவாக வழக்கம் போல் இடும் பதிவை இந்த ஆண்டு இட முடியலையே-ன்னு நினைச்சேன்!
  ரங்கன் அண்ணா பதிவுக்குள் ஒரு சிறு பத்தியாக இட்டு நிறைத்து விட்டார்! நன்றி!

  இதோ...சென்ற ஆண்டு குலசேகரன் பதிவு!

  ReplyDelete
 7. மிக அழகாக, காட்சிகள் மாறி மாறி வரும், தைலப் பெருக்கு போன்ற இடுகை. நன்றி அரங்கன் அண்ணா.

  ReplyDelete
 8. ராமனும், மால்யவான் எனும் மலையில் உள்ள குகையில் தங்கி இருந்ததாக, ஆண்டாள் ராமாயணத்தில் கூறுகின்றாள்:)))

  ஆண்டாள் ராம காவியம் எழுதி இருக்காங்களா!!நாச்சியார் திருமொழி , திருப்பாவை , ராம ... இன்னும் என்னன்னால்லாம் எழுதி இருக்காங்க!

  ReplyDelete
 9. நீ இவ்வளவு நேரம் நப்பினையுடன் சேர்ந்து (மன்னி) இருந்தது போதும்! எங்களையும் கொஞ்சம் கவனி!:))

  அடா அடா அடா 3rd picture what a fantastic picture. எந்த கோவிலில் இந்த மாதிரி அலங்காரம் பண்றாங்க

  ReplyDelete
 10. சிவன் (கண்கள் சிவக்க): நீ எனக்குப் போட்டே கயறு! நான் உன்னை ஆக்குவேன் பயறு!:))

  சிவன் TR படம் நெறைய பார்த்திருப்பார் போல . . அடுக்கு மொழில கலக்குராருப்பா!

  ReplyDelete
 11. 'தினமும் நாங்கள் மூன்று தொலைக் காட்சிகளில், திருப்பாவை உபன்யாசம் கேட்கிறோம்! இது நாலாவது! நீங்கள் ஏதாவது புதிதாகச் சொல்வீர்கள் என்று நினைத்தே இங்கு வருகின்றோம்' என்றார்!
  ::)))

  யாராச்சும் ஆண்டால மாத்தி கேக்குறாங்களா! இல்லை
  திருப்பாவையை மாத்தி கேக்குறாங்களா! இல்லை
  ஆனா விளக்கத்தை மட்டும் மாத்தி மாத்தி கேக்குறாங்க!

  ReplyDelete
 12. அன்பரே

  //ஆண்டாள் ராம காவியம் எழுதி இருக்காங்களா!!நாச்சியார் திருமொழி , திருப்பாவை , ராம ... இன்னும் என்னன்னால்லாம் எழுதி இருக்காங்க!//

  ஹி... ஹி...

  ஆண்டாள் இயற்றிய பிரபந்தங்கள் - மூன்று!

  ஆண்டாள் வாய்மொழியாக, தமிழில் இரண்டு - திருப்பாவை, நாச்சியார் திருமொழி!

  மற்றொன்று வடமொழியில்!

  பூமாதேவியின் காது, பாம்புப் பொந்து! இதில் இருந்து, ஒரு வேடன் தோன்றுகின்றான்! பாம்புப் புற்றில் (வன்மீகத்தில்) இருந்து தோன்றியதால், அவன் பெயர், வான்மீகி! அவன் இயற்றிய பிரபந்தமே, ராமாயணம்! இது, பூமாதேவியின் செவி மொழி!

  ReplyDelete
 13. KRS

  //உன் மாதவிப் பந்தல் நலமா?
  உன் கோலக் கிளி நலமா?//

  இரண்டும் நலம்!

  ReplyDelete
 14. குமரன்

  //மிக அழகாக, காட்சிகள் மாறி மாறி வரும், தைலப் பெருக்கு போன்ற இடுகை. நன்றி அரங்கன் அண்ணா.//

  நன்றி.

  ReplyDelete
 15. //சிவன் TR படம் நெறைய பார்த்திருப்பார் போல . . அடுக்கு மொழில கலக்குராருப்பா!//

  சிவன் பாத்தரான்னு தெரியாது. இந்த dialog எழுதினவர் பார்த்திருக்காரு!

  ReplyDelete
 16. //பல தலைமுறைகள் கங்கை நீரைக் குடித்து விட்டதால்,
  இந்தத் தலைமுறைக்கு கங்கை நீர் கிடைக்குமா என்று கேட்பாங்களா ரங்கன் அண்ணா? :)//


  இன்னும் 40 வருஷம் தான் இருக்குமாமே கங்கை நீர்? அப்படியா :-)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP