Monday, March 08, 2010

நரசிம்மனைக் காணாத பாவையின் புலம்பல்இடம்: தென் தமிழ் நாட்டில், ஒரு வீட்டு முகப்பு
காலம்: மாசி மாதத்தின் முதல் பகுதி
நேரம்: ஓடும் நேரம்

(நம் 'பாவை', தன் வீட்டின் வாசலில், புலம்பிக் கொண்டே கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள்)
பாவை (தனக்குள்ளே): மார்கழி மாதம் நோன்பிருந்தால் வேண்டிய மணாளன் கிடைப்பான் என்று சொன்னார்களே? அதற்காகத் தானே 30 பாசுரங்கள் எழுதி, நோன்பு நோற்றேன்? தை மாதம் முடிந்து, மாசியும் ஆரம்பித்து விட்டதே? கண்ணனைக் காணோமே? வரட்டும், பேசிக்கறேன்!

(அப்போது, தெருவின் முனையில், ஒரு அழகன் வந்து கொண்டிருக்கிறான்)

பாவை (காதலன் வந்து விட்டான் என்று நினைத்து): வா! இப்போது தான் வழி தெரிந்ததா?

மன்மதன் (அருகில் வந்து): என்னம்மா! என்னை ஏன் கூப்பிட்டாய்!

பாவை (நிமிர்ந்து பார்த்து): சே ... நீயா? ... என்ன மன்மதா? என் காதலனோ என்று நினைத்தேன்! என்ன வேண்டும் உனக்கு?

மன்மதன்: ஓஹோ! உனக்குக் காதலன் உண்டா? யார்? பக்கத்துத் தெரு பத்மநாபனா?

பாவை: ம்ஹும்!

மன்மதன்: கோடி வீட்டுக் கோவிந்தனா?

பாவை: ஏய்! உளராதே! என்னை, மானிடர் யாருக்காவது கல்யாணம் செய்து வைக்க நினைத்தால், தற்கொலை தான்!

மன்மதன்: பின்னே? தேவர்கள், கந்தர்வர்கள், இவர்களில் யாரையாவது ....

பாவை: அந்த level-க்கு எல்லாம் நாங்கள் இறங்க மாட்டோம்! Straight-ஆ தல - அதான் ... அந்த வேங்கடவன் - அவன் தான் என் குறி!

மன்மதன்: பேராசை தான் உனக்கு!

பாவை: ஏன் இருக்கக் கூடாதா? ... சரி ... வந்தது தான் வந்தாய்! கேசவ நம்பிக்குக் கால் பிடித்து விடும் பாக்கியம் கிடைக்கும்படி, உன் கரும்பினால் ஏதாவது செய்யேன்?


மன்மதன்: அதுக்கு வேற ஆளைப் பாரு!

(ஓடி விடுகிறான் மன்மதன்)

***

இடம்: அதே ஊர்
நேரம்: பங்குனி மாதத்தில் ஒரு நாள்

('காமன் வரும் காலமான பங்குனி வந்த பிறகும் கண்ணன் வரவில்லையே!' என்று கோபம் கொண்ட அந்தப் பாவை, தன் தோழிகளோடு, ஆற்றங்கரைக்குச் சென்று மணல் வீடு - சிற்றில் - கட்டிக் கொண்டிருக்கின்றாள். இதற்கிடையில், 'நம்மை அடைவதற்கு, நாம் தானே உபாயம்! இவள் வேறு ஒரு தேவதையை - மன்மதனை - நாடும்படி நாம் நடந்து கொண்டோமே', என்று கண்ணன் வருந்துகிறான்; அவளைச் சமாதானப் படுத்த நினைத்து, ஆற்றங்கரைக்கு வருகின்றான்)


பாவை (கோபத்துடன்): நாங்கள் காமனுக்காகக் காத்திருக்கிறோம்! நாராயணா! நீ ஏன் இங்கு வந்தாய்!

(கண்ணன், பதில் பேசாமல் மணல் வீடுகளைத் தன் காலால் இடறி அழிக்க முற்படுகிறான்)

தோழிகள் (அனைவரும் சேர்ந்து): இன்று முழுவதும் முதுகு வலியுடன் நாங்கள் கட்டிய இந்த மணல் வீடுகளை ஏன் அழிக்க நினைக்கிறாய்! தீமை செய்யும் ஸ்ரீதரா! இதுவும் எங்கள் பாவமே!

(கண்ணன் மணல் வீடுகளை அழிக்கத் தொடங்குகிறான்)

ஒரு தோழி: கண்ணா! கஜேந்திரன் போன்ற மிருகங்களுக்கு இரக்கப் படும் நீ, மனிதர்கள் மேல் இரக்கம் காட்ட மாட்டாயா?

கண்ணன்: நீங்களோ என் மீது கோபப் படுகிறீர்கள்! நான் ஏன் உங்களிடம் இரக்கம் காட்ட வேண்டும்?

பாவை: கள்ள மாதவா! உன் மேல் எங்களுக்குக் கோபம் இல்லை! உன்னைக் காணாததால் உடல் நைந்து, உள்ளம் உருகி இருக்கிறோம், அவ்வளவு தான்!

(அப்படியும் கண்ணன் அதற்குள் ஓரிரு வீடுகளை அழித்து விடுகிறான்)

பாவை: நீ ஒரு கால், கடலின் மேல் அணை கட்டினாய்! அது உனக்குப் பெருமை! உன் காலால் வீட்டை அழிக்கிறாயே! இதனால் உனக்கு என்ன பயன்?

(அப்படியும் கண்ணன் கேளாமல், எல்லா மணல் வீடுகளையும் அழிக்கிறான்; வருத்தம் அடைந்த பாவையர் அனைவரும் கூடிப் பேசி, ஒரு முடிவுக்கு வருகிறார்கள் - தங்கள் வீடுகளுக்கு உடனே சென்று, கண்ணன் வர முடியாதபடி முன் கதவு, பின் கதவு இரண்டையும் பூட்டிக் கொள்வது என்று! அப்படியே செய்தும் விடுகிறார்கள். மூவுலக மண்ணையும் அளந்தவனுக்கு, வீடுகளில் புகுவதா கஷ்டம்? பாவையின் வீட்டில், முகம் காட்டி, அழகாய்ச் சிரித்துக் கொண்டு நிற்கின்றான்!)

பாவை (திடுக்கிட்டு): கோவிந்தா! நீ எப்படி உள்ளே வந்தாய்?


கண்ணன்: முற்றம் புகுந்து வந்தேன்!

பாவை: அங்கு எங்கள் சிற்றிலை சிதைத்தது போதாதா? ஏன் இங்கு வந்தாய்? உனக்கு இன்னும் எங்களிடமிருந்து என்ன வேண்டும்?

(கண்ணன், அதற்குப் பதிலாக, அவளை வலுக்கட்டாயமாக அணைத்துக் கொள்கிறான்)


பாவை: சீதை மணாளனே! சிற்றிலோடு, எங்கள் சிந்தையும் நீ கலைத்து விடுகிறாயே! இந்தப் பக்கம் வருபவர்கள், நம்மை இப்படிப் பார்த்தால் ஏதாவது சொல்வார்களே?

(பாவை சற்றே சிணுங்கினாலும், அவள் கோபம் மறைகிறது! ஒரு வழியாக, கண்ணனைப் பார்த்ததால் நிம்மதி அடைகிறாள்)

***

(கண்ணன், முன் பாசுரத்தின் முடிவில், பாவையருடன் கூடியதை அறிந்து, பெண்களை நிலவறையில் அடைத்து வைக்கின்றனர் பெற்றோர். அவர்கள் மெலிந்து விட்டதைப் பார்த்து, இரக்கம் கொண்டு பனி நீராட அனுமதிக்க, அவர்கள் ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கின்றனர்)

ஒரு தோழி (திடீரென்று): ஐயோ! நம் உடைகளில் பாதியைக் காணவில்லை!

(சுற்றும் முற்றும் பார்த்தவர்கள், மரத்தில் கண்ணன் உடைகளோடு உட்கார்ந்திருப்பதைப் பார்க்கின்றனர்)

கண்ணன்: அடைத்து வைக்கப்பட்ட நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?
பாவை: அரவணை மேலாய்! பனி நீராட பெற்றோர்கள் அனுமதியுடன், இரவு முடியும் முன்னரே நீராடுவதற்கு வந்தோம்!

கண்ணன்: அப்படியெனில், சூரியன் எழும் வரை ஏன் இங்கு இருந்தீர்கள்?

பாவை: இனிமேல் இங்கு வரமாட்டோம்! எங்கள் துணிகளைக் கொடு!

(கண்ணன், திடீரெனக் கீழே குதித்து, மீத உடைகளையும் எடுத்துச் செல்கிறான்; அவன் இவர்களுடன் கூடி இருக்க நினைக்க, இவர்களோ உடைகளை எடுத்து சென்றுவிட நினைக்கிறார்கள்; அங்கே ஒரு 'மினி' பாரதம் நடக்கிறது)

தோழி: மாயனே! நீ எவ்வாறு இங்கே வந்தாய்? காளியன் தலையில் குதித்த மாதிரி, நீ கீழே குதித்து எங்கள் உடையைத் திருடலாமா? துணிகளைக் கொடுத்து விடு!

கண்ணன்: அப்படியென்றால், மேலே ஏறி வந்து ஆடைகளை எடுத்துக் கொள்ளுங்கள்!


(இடந்தப் பேச்சை நம்பி சில பாவையர் மேலே ஏறி வர, கண்ணன் அவர்களை உற்றுப் பார்த்து, புன்முறுவல் செய்கின்றான்)

ஒரு தோழி (வெட்கப்பட்டு): ராமா! இது என்ன சிறு பிள்ளைத்தனம்! ஒரு பெண்ணுக்காக இலங்கையை அழித்த நீ, பல பெண்களைத் தவிக்க விடுகிறாயே?

இன்னொரு பெண் (கோபத்துடன்): குரங்குகளுக்குத் தலைவனாக இருந்தவன் தானே நீ! அது தான் குரங்கு வேலை செய்கிறாய் இப்பொழுது!

பாவை (சமாதானமாக): கரிய பிரானே! மீன்கள் எங்கள் கால்களைக் கடிக்கின்றன! நாங்கள் தேள் கொட்டியது போல வேதனைப் படுகின்றோம்! நீரிலே நின்று நடுங்குகிறோம்!

கண்ணன்: நானும் நீங்கள் வெளியே வாருங்கள் என்று தானே சொல்கின்றேன்.

மற்றொரு தோழி: குடக் கூத்தனே! நீ நீதியற்ற செய்கையைச் செய்கின்றாய்! உன் விளையாட்டைத் தவிர்த்து, உடனே உடைகளைக் கொடுத்து விடு!

கண்ணன்: நீரில் அதிக நேரம் விளையாடியது நீங்கள் தான்! உங்களோடு பொழுது போக்கலாம் என்று அதிகாலையிலேயே நான் வந்து, இந்த மரத்தில் முடங்கிக் கிடந்து, நானல்லவோ வேதனைப் படுகின்றேன்? என்னைத் தவிக்க விட்டது நீங்கள் தான்!

ஒரு தோழி: ஊழி முதல்வா! எங்களுக்கும் உன்னுடன் விளையாட ஆர்வம் உண்டு! ஆனால், பெற்றோர்கள் பார்த்தால், வம்பு!

கண்ணன்: பெற்றோர்கள் பார்த்தால் என்ன? என் முறைப் பெண்களுடனும், நான் மணமுடிக்கும் வயதும் உள்ள தானே நான் விளையாடுகிறேன்?

பாவை: ஆயர் கொழுந்தே! உனக்கு மாமியார், பெரியவர் உறவு முறை உடையவர்களும் இங்கு இருக்கின்றனர்! ஆகவே, நீ இத்தகைய செயல்களைச் செய்யக் கூடாது!

கண்ணன்: என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து வந்திருந்தால், மாமியாரையும், மக்களையும் கூட்டிக் கொண்டா வருவீர்கள்?

பாவை (கோபப்படுகிறாள்): வெட்கம் கெட்டவனே! உனக்கு அந்த இருள், பிறந்ததில் இருந்தே உதவி செய்கிறது! உன் தாயாரும் உன்னைக் கண்டிப்பதில்லை! இல்லை, பூதனையின் பேய்ப் பாலை உண்டதனால் உனக்கு புத்தி பிசகிற்றோ?

(கண்ணன், போனால் போகிறது என்று, உடைகளைக் கொடுக்கிறான்; அதனால் பாவையர் கோபம் தணிந்து, கண்ணனிடம் சிறிது நேரம் கூடிவிட்டு, வீட்டிற்குச் செல்கின்றனர்)

***

ற்றங்கரையில், கண்ணனும், பாவையும், தோழிகளும் சேர்ந்திருந்தாலும், அப்போது சென்ற கண்ணன் மீண்டும் வரவில்லை!

வெகு நாட்கள் கழிந்து விடவே, பாவைக்கு கண்ணனைப் பிரிந்த ஏக்கம் அதிகமாகிறது! இவனைப் பார்ப்போமா, மாட்டோமா என்ற சந்தேகம் வருகின்றது! தரையில் வட்டம் போட்டு, 'ஒத்தையா இரட்டையா' விளையாடுகிறாள்!


தரையில், ஒரு பெரிய வட்டம்! அதில், பல மனம் தோன்றியவாறு, பல சுழிகள் - பெரியதும், சிறியதுமாக - போடுகிறாள்!

எத்தனை சுழிகள் என்று எண்ண ஆரம்பிக்கின்றாள்! இரட்டையாக் வந்தால், (கண்ணனுடன் சேருகின்ற) காரியம் கை கூடுமாம்! ஒத்தையாக வந்தால், காரியம் கைகூடாது! கண்ணன் வரமாட்டானாம்! இப்படி, அந்தக் 'கூடலை'ப் பார்த்துப் பேசுகின்றாள் நம் பாவை!

- திருமாலிருஞ்சோலை அழகன் திருவடிகளில் அடியேன் சேவகம் செய்ய முடியுமென்றால், கூடிடு!
- வேங்கடவனும், கண்ணபுரத்தானுமானவன் வந்து என் கை பற்றுவான் என்றால், கூடிடு!
- தேவகி, வசுதேவரின் மகன் வருவானென்றால், கூடிடு!
- காளியன் மேல் நடமாடிய கூத்தன் வருவானெனில், கூடிடு!
- குவலயாபீடத்தை உதைத்தவன், நம் தெருவுக்கு வந்து என்னுடன் கூடிவானாகில், கூடிடு!
- கம்சனைக் கொன்ற மதுரையரசன் வருவானெனில் கூடிடு!
- சிசுபாலன், பகாசுரன் போன்றோர்களை அழித்தவன் வருவானெனில் கூடிடு!
- கன்று மேய்ப்வன் வருவானென்றால் கூடிடு!
- அடி ஒன்றினால் உலகளந்தான் வருவானெனில் கூடிடு!
- கஜேந்திரனுக்கு துயர் தீர்த்தவன், என் துயர் தீர்க்க வருவானெனில், நீ கூடிடு கூடலே!
'கூடல்' என்ன செய்தது?

***

த்து முறை கூடலைக் கேட்டும், அது பதில் சொல்லவில்லை (ஒவ்வொரு முறையும், 'ஒத்தை'யாகவே வந்தது!)

'கூடலுக்கு உயிரில்லை; எனவே அது நான் சொல்லியதைக் கேட்கவில்லை! என்னுடனும் பேசவில்லை!'தனக்குத் தானே அறிவுரை சொல்லி, தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறாள், காதல் தலைக்கேறிய அந்தப் பாவை!

சரி, இனிமேல், உயிருள்ளது, அறிவுள்ளது ஒன்றின் காலில் விழலாம் எனத் தோன்றுகிறது!

விழுகின்றாள் நம் பாவை! எம்பெருமான் குழலூதும் போது, அருகே இருக்கும் பாக்கியத்தைப் பெற்றது, வார்த்தை கேட்டால் சில சமயங்களிலாவது பதில் சொல்லும் பழக்கம் உடையதும், சிறிது அறிவுள்ளதுமான - குயிலின் காலில்!

***

இடம்: அருகே ஒரு சோலை
காட்சி: குயில் பத்து

பாவை: குயிலே! மாதவனை நினைத்து ஏங்கி, இளைத்து, என் வளையல் தொலைந்து விட்டது! என் பவள வாயனை வரச் சொல்லு!


(குயில், தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு, அங்கேயே நிற்கிறது)

பாவை: உன்னை இங்கே நிற்கச் சொல்ல வில்லை! என் உயிர், வேங்கடவனைக் காணாமல், தத்தளிக்கின்றது! நீ விளையாடாமல், வேங்கடவனிடம் என் நிலைமையைச் சொல்லிக் கூவ வேணும்!

குயில்: க்க்.. க்க்... க்.. க்க்க்.. கூஊ (இவ்வளவு நாள், எனக்கு ஒரு கைப்பிடி பழைய சாதம் கூடப் போடாமல் வெறுப்பேத்தினாயே! இப்ப மட்டும் உனக்கு நான் வேணுமாக்கும்?)

பாவை: த்ரிவிக்கிரமனை, இங்கே வரும்படி கூவினால், உனக்கு, இனிய சோறும், பால் அமுதும் தந்து வளர்த்த என் கிளியை நட்புக் கொள்ளச் செய்வேன்!

குயில்: க்கி... க்.. க்க்க்க்... (கிளிக்குப் பால் சோறு, எனக்கு மட்டும் பழைய சோறா?)

பாவை: நீ இருடீகேசனை வரச் சொன்னால், என் தலையை உன் காலடியில் வைப்பேன்! அவன் வந்தவுடனே அவனை நான் கவனிக்க வேண்டி இருக்கிறது!

குயில்: கு.. கு.. கு.. கு.. (அவன் வந்தவுடனே நீ ஓடிப் போயிடுவே! நான் உக்காந்து பஜனை செய்வதா?)

(நயமாகச் சொல்லியும், உதவி செய்வதால் கிடைக்கும் பலன்களைச் சொல்லியும், சரணாகதி அடைந்தும், குயில் கேட்காததால், மிரட்டுகிறாள்)

பாவை: இப்போது வாமனனை நீ அழைக்கவில்லை என்றால், உன்னை இந்தச் சோலையில் இருந்து துரத்தி விடுவேன்!

மிரட்டலைக் கேட்ட குயில் என்ன செய்தது?

- குயில் பத்து தொடரும்

26 comments:

 1. நல்ல கருத்துக்கள். பாசுரங்களின் அருமையான விளக்கங்கள், மிக்க அருமை, எப்படி இருக்கீங்க கே.ஆர் எஸ். அப்பா அம்மா நலமா? விசாரித்தாக கூறவும். நன்றி.

  ReplyDelete
 2. மிரட்டலைக் கேட்ட குயில் என்ன செய்தது?:::))))

  மிரட்டலை கேட்ட குயில் சிறிதும் அஞ்சாமல் ஆண்டாளை ஏமாற்றியது.
  அச்சோ! கண்ணன் வரவில்லையே என்ற ஏக்கத்துடன் துக்கம் தொண்டையை அடைக்க
  feeling- la வீட்டுக்கு போய் ஆண்டாள்
  தூங்கிட்டாங்க!
  தூங்கின பிறகு............கனவு

  ReplyDelete
 3. இவள் வேறு ஒரு தேவதையை - மன்மதனை - நாடும்படி நாம் நடந்து கொண்டோமே', என்று கண்ணன் வருந்துகிறான்:::)))))

  மன்மதனும் கண்ணனே!!!

  ReplyDelete
 4. Dear rangan sir,

  ஆழ்வார் பாசுரங்களிலும் ஆழ்வார்கள் பற்றியும் இருக்கும் சந்தேகங்களை பந்தலில் பதிவிடுகிறேன்.
  எம் பதிவுகள் அதிகம் கேள்வி வடிவிலேயே இருக்கும்
  Sorry…

  அப்படியும் கண்ணன் அதற்குள் ஓரிரு வீடுகளை அழித்து விடுகிறான்::))

  உண்மையிலேயே கண்ணன் மண் வீடுகளை அழித்தானா!!

  ReplyDelete
 5. என் தோழி வந்தாலே பதிவு கலகல-ங்குது! :)
  ரங்கன் அண்ணா...
  நீங்க எழுதின பல இடுகைகளில் இதுவும், சென்ற இடுகையுமே என்னை மிகவும் கவர்ந்தது! :)

  இதுல எனக்கு மிகவும் பிடிச்ச திருவாடைத் திருட்டு, அதாங்க கோபிகா வஸ்த்ராபஹரணம் இருக்கு! :))

  ReplyDelete
 6. aariya koothadinalum kaasu kaariyathil kan vaiyada thaandavakonae....chellam nanna ezludhura....ezludina pathaduda ambi.... purichidutho

  poiymaiyae pesi pozludhinai surukkum puzluthalai pulaiyanaen...

  kannan marugaman
  chennai

  ReplyDelete
 7. //மன்மதனும் கண்ணனே!!!//

  நோ நோ!
  கண்ணனும் மன்மதனே-ன்னு சொல்லுங்க!

  மன்மதனும் கண்ணனே-ன்னு மன்மதன் கிட்ட எல்லாம் போக முடியுமா?

  கண்ணனும் மன்மதனே-ன்னு கண்ணன் கிட்ட போகலாம்-ல்ல? :)

  ReplyDelete
 8. //பித்தனின் வாக்கு said...
  மிக்க அருமை, எப்படி இருக்கீங்க கே.ஆர் எஸ். அப்பா அம்மா நலமா? விசாரித்தாக கூறவும்.//

  சுதாகர் சார்
  எப்படி இருக்கீக? அம்மா அப்பா நலமே!
  தனி மடல் அனுப்பறேன்! ஆனா அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்லிக்கறேன்!

  மாதவிப் பந்தல்-ன்னாலே கேஆரெஸ் கிடையாது! :)
  இப்போது இங்கு பதிவிடுவது ரங்கன் அண்ணாவும், ராகவ்-வும் தான்!
  அடியேன் வெறும் பொம்மைப் பார்வையாளன் மட்டுமே! :)

  எனவே இந்தப் பதிவு இட்டது ரங்கன் அண்ணா என்ற நினைவோடு படிக்கவும்! கீழே "Posted By"-ன்னு இருக்கும் பாருங்க!

  ReplyDelete
 9. //எத்தனை சுழிகள் என்று எண்ண ஆரம்பிக்கின்றாள்! இரட்டையாக் வந்தால், (கண்ணனுடன் சேருகின்ற) காரியம் கை கூடுமாம்! ஒத்தையாக வந்தால், காரியம் கைகூடாது! கண்ணன் வரமாட்டானாம்//

  அய்யய்யோ...அப்படியெல்லாம் சொல்லி அவ மனசை உடைச்சறாதீங்க! நானே உடைஞ்சி போயிருவேன்! :(

  கூடல் என்பது ஒரு வகை விளையாட்டு...

  கண்ணைத் துணியால் கட்டிக் கொள்ளனும்!
  கோல மாவைக் கையில் எடுத்துக் கொண்டு, தரையைத் தொடாமல், ஒரு வட்டம் வரையணும்!
  வரைஞ்ச வட்டம் கூடித்தானால், அவனும் கூடுவான்!

  மூன்று முறை போட்டுப் பார்க்கலாம்! இரண்டு முறை கூடித்தானால் கூடுவான்!

  அப்படியும் கூடலைன்னா?
  ஐயோ! ஆண்டாள்...பதறாதேடீ...

  பத்து முறை போட்டுப் பாரு!
  பத்துக்கு ரெண்டு மட்டுமே வந்தால் கூடப் பரவாயில்லை! இரட்டைப் படையாக வந்திருக்கு-ல்ல? அவன் கட்டாயம் கூடுவான்! கட்டாயம் கூடுவான்!

  எம்பெருமானே, இவளை இதுக்கும் மேல் அலைக்கழிக்காதே!
  பாவம்...எங்கோ ஒரு மூலையில், ஜீவனைத் தாங்க மாட்டாது, அன்றாடம் தாங்கிக்கிட்டு இருக்கா! இவளைக் கூடிடு கூடலே! கூடிடு கூடலே!

  தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
  வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்
  பள்ளி கொள்ளும் இடத்து, அடி கொட்டிட
  கொள்ளும் ஆகில் நீ கூடிடு கூடலே!

  காட்டில் வேங்கடம், கண்ணபுரம் நகர்
  வாட்டம் இன்றி மகிழ்ந்துறை வாமனன்!
  ஓட்டராய் வந்து என் கைபற்றித் தன்னொடு
  கூட்டும் ஆகில் நீ கூடிடு கூடலே!

  நீ கூடிடு கூடலே!
  நீ கூடிடு கூடலே!

  ReplyDelete
 10. //பாவை: ஏய்! உளராதே! என்னை, மானிடர் யாருக்காவது கல்யாணம் செய்து வைக்க நினைத்தால், தற்கொலை தான்!//

  :)
  Wish, I cud say something here! Murugaa!

  ReplyDelete
 11. //மன்மதன்: அதுக்கு வேற ஆளைப் பாரு!
  (ஓடி விடுகிறான் மன்மதன்)//

  ஹா ஹா ஹா!
  மன்மதனுக்கு ஒரு தம்பி வேற இருப்பான்-ல்ல? அவனையும் கூப்பிட்டு கோதை கும்மி அடிப்பாள் அல்லவா? :)

  //நீ ஒரு கால், கடலின் மேல் அணை கட்டினாய்! அது உனக்குப் பெருமை! உன் காலால் வீட்டை அழிக்கிறாயே! இதனால் உனக்கு என்ன பயன்?//

  சிற்றில் சிதைத்தல் என்பது ஆண் குழந்தைகள் விளையாட்டு!
  பெண் குழந்தைகள் கட்டும் சிற்றிலை, ஆண் குழந்தைகள் தட்டி விடும் விளையாட்டு, தமிழ் இலக்கியத்தில் எப்போ வந்துச்சு, ஏன் வந்துச்சு, இது சரியா-ன்னு தெரியலை! :)

  ஆனால் இங்கு கண்ணன் சிதைக்கும் சிற்றில்...வெறும் விளையாட்டுச் சிற்றில் மட்டும் இல்லை! அதையும் தாண்டிச் சிதைக்கின்றான்!

  விதம் விதமான மணல் கோட்டைகள் கட்டி, அது இல்லாட்டா இது, இது இல்லாட்டா அது-ன்னு வாழத் தோனுது! தன் முயற்சியில் பலதும் செய்து பார்க்கத் தோனுது! ஆனால் மனத்தால் வாழ ஏனோ தோனலை!

  பேதையின் மணற் கோட்டையைச் சிதைத்து
  மனக் கோட்டைக்கு ஈடளிக்கும் பிரான்!
  என் சிற்றில் வந்து சிதைத்துவிடே!

  என் பால் நோக்காயே ஆகிலும்
  நின் பற்றல்லால் பற்றில்லேன்!
  என் சிற்றில் வந்து சிதைத்துவிடே!
  மற்றை நம் காமங்கள் மாற்றிவிடே!

  ReplyDelete
 12. //பாவை (சமாதானமாக): கரிய பிரானே! மீன்கள் எங்கள் கால்களைக் கடிக்கின்றன! நாங்கள் தேள் கொட்டியது போல வேதனைப் படுகின்றோம்! நீரிலே நின்று நடுங்குகிறோம்!

  கண்ணன்: நானும் நீங்கள் வெளியே வாருங்கள் என்று தானே சொல்கின்றேன்//

  :))
  அதானே! வெளியே வாங்க!

  கதவைத் திற, காற்று வரும்-ன்னு சொன்னாரு ஒருத்தரு! :)
  காற்று எல்லாம் வராது! நீங்க தான் வெளியில் வரணும்!

  சுயநலமா, ஷார்ட்கட்-ல எல்லாம் காற்று வராது!
  காற்று வேணும்-ன்னா, நீங்க தான் வெளியில் வரணும்!

  "உங்களை" விட்டு வந்து ஆகணும்!
  "எனக்கு" தியானம்,
  "எனக்கு" ஞானம்,
  "எனக்கு" யோகம்,
  "எனக்கு" சமாதி -ன்னு ஆத்ம சாஷாத்காரத்தில் முடங்கினா இப்படித் தான் ஆகும்!
  "உனக்கு" நாங்கள்,
  "உனக்கு" தொண்டு
  "உனக்கே" நாம் ஆட்செய்வோம்-ன்னு பரமாத்ம சாஷாத்காரம் மட்டுமே என்றும் நிலைக்கும்!

  ReplyDelete
 13. //மற்றொரு தோழி: குடக் கூத்தனே! நீ நீதியற்ற செய்கையைச் செய்கின்றாய்! உன் விளையாட்டைத் தவிர்த்து, உடனே உடைகளைக் கொடுத்து விடு!//

  கண்ணன் செஞ்ச இந்த வஸ்திரா அபஹரணம் (ஆடைத் திருட்டு)...பயங்கரமான ஹாட் டாபிக்!

  ரங்கன் அண்ணா, சில கேள்விகள்
  1. இதைச் செய்யும் போது கண்ணன் வயசு எத்தனை?
  2. அந்தப் பெண்கள் செய்தது சரியா? கண்ணன் செய்தது சரியா? :)
  3. இவன் ஆடையை ஒளிச்சி வச்சா தப்பில்லை! ஆனால் துச்சாதனன் ஆடையை இழுத்தால் மட்டும் தப்பா? :))
  4. ரொம்ப பேர், அவிங்க அவிங்க sensationalize பண்ணும் இந்த கோபிகா வஸ்திரா அபஹரணத்தில் உண்மையாலுமே நடந்தது என்ன? :)

  ReplyDelete
 14. //குயில்: க்கி... க்.. க்க்க்க்... (கிளிக்குப் பால் சோறு, எனக்கு மட்டும் பழைய சோறா?)//

  ஹிஹி! நல்ல கேள்வி! பாவம் குயில்...
  ஏன் கோதையின் தோளில் குயில் அமராமல், கிளி அமர்ந்தது?

  ReplyDelete
 15. KRS

  //என் தோழி வந்தாலே பதிவு கலகல-ங்குது! :)
  ரங்கன் அண்ணா...
  நீங்க எழுதின பல இடுகைகளில் இதுவும், சென்ற இடுகையுமே என்னை மிகவும் கவர்ந்தது! :)//

  வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி! நன்றி!

  ReplyDelete
 16. //மிரட்டலை கேட்ட குயில் சிறிதும் அஞ்சாமல் ஆண்டாளை ஏமாற்றியது.
  அச்சோ! கண்ணன் வரவில்லையே என்ற ஏக்கத்துடன் துக்கம் தொண்டையை அடைக்க
  feeling- la வீட்டுக்கு போய் ஆண்டாள்
  தூங்கிட்டாங்க!
  தூங்கின பிறகு............கனவு//

  ஆஹா!

  ’ஆண்டாள்’-ன்னு நான் சொல்லவே இல்லையே! அடுத்து என்ன வரும்ன்னு வேற கண்டு பிடிச்சிடீங்களே :-)

  Hats-Off!

  ReplyDelete
 17. ராஜேஷ் ஸார்

  //மன்மதனும் கண்ணனே!!!//

  மன்மதன் கண்ணன் இல்லை!

  சிவபெருமானால் எரிக்கப் பட்ட மன்மதன், மீண்டும் உருவம் பெரும் பொருட்டு, க்ருஷ்ணனுக்கும், ருக்மிணிக்கும், ப்ரத்யும்னன் எனும் மகனாகப் பிறந்ததாக பாகவதம் கூறும்!

  ஆனால் நீங்கள் கூறுவதில் ஒரு உயர்ந்த தத்துவம் ஒன்று உண்டு!

  எல்லா ஆத்மாவும் கண்ணனே! அப்படி நமக்கு நினைக்கும் பக்குவம் வந்து விட்டால், மன்மதனும் கண்ணன் தான்!

  இந்த நினைவு யாரிடமெல்லாம் இருக்கிறது என்று கண்ணன் அவ்வப்போது பரீட்சித்துப் பார்க்கிறான். ஆனால், இப்படி நடந்து கொள்வதில் ஒருவரும் முழு வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை - பிரகலாதனைத் தவிர (இதைப் பின்னால் எழுதுகிறேன்)!

  ReplyDelete
 18. ராஜேஷ்

  //உண்மையிலேயே கண்ணன் மண் வீடுகளை அழித்தானா!!//

  இன்னேரம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

  நாச்சியார் திருமொழியில் வாரணமாயிரம் திருமொழியில் நரசிம்மன் வருகிறான்! அதுவும், கனவில்! இதற்கு முன்னுரை தான் இந்தப் பதிவு - உன்ன்மையில், முதல் 5 திருமொழிகளின் சுருக்கம்!

  இதில் 2-வது திருமொழி - நாமமாயிரம் - மணல் வீடோபாக்கியானம்!

  திருமொழியில், ஆண்டாள் நேரடியாக, ‘மணல் வீடுகளை நீ அழித்தாய்’ என்று பாசுரங்களில் கூறவில்லை. ஆனால், திருமொழியின் 9-வது பாசுரத்தில்,

  ‘சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ? கோவிந்தா!’

  என்று சொல்வதற்கான பொருள்:

  ’கோவிந்தா! மணல் வீடுகளை ஏற்கனவே நீ கலைத்து விட்டாய்! அது போதாதென்று, இப்போது (உன் அழகால்) எங்கள் சிந்தையையும் கலைத்து விடுவாய் போலிருக்கிறதே!’

  ஆண்டாள் இப்படிச் சொல்வதனால், கண்ணன் மணல் வீடுகளை அழித்ததாகவே எண்ண வேண்டும்!

  (நமக்கெல்லாம் பிரபந்தங்களுக்குப் பொருள் சொல்லிக் கொடுத்த பெரியவாச்சான் பிள்ளை, இந்தப் பாசுரத்திற்கு, இப்படித்தான் இதற்குப் பொருள் சொல்கிறார்)

  ReplyDelete
 19. KRS

  //ஹிஹி! நல்ல கேள்வி! பாவம் குயில்...
  ஏன் கோதையின் தோளில் குயில் அமராமல், கிளி அமர்ந்தது?//

  ஹி..ஹி..ஹி.. அதுவா! வந்து ... குயில் டெம்பரவரி, கிளி, பர்மனண்டு!

  ReplyDelete
 20. //இன்னேரம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!//

  ’இந்நேரம்’-னு படிங்க! நெசமாலுமே, இது Typo தாங்க!

  ReplyDelete
 21. //சிற்றில் சிதைத்தல் என்பது ஆண் குழந்தைகள் விளையாட்டு!
  பெண் குழந்தைகள் கட்டும் சிற்றிலை, ஆண் குழந்தைகள் தட்டி விடும் விளையாட்டு, தமிழ் இலக்கியத்தில் எப்போ வந்துச்சு, ஏன் வந்துச்சு, இது சரியா-ன்னு தெரியலை! :)//

  பாகவதத்தில் சொல்லப்பட்ட கண்ணனின் விளையாட்டுக்களில், ’மணல் வீட்டை அழித்தல்’ இல்லை!

  இந்த விளையாட்டு, தமிழுக்கே உரித்த ஒன்று!

  ’சிற்றிலிழைத்தல்’ என்பதற்கு, வேறு பொருள் ஒன்று உண்டு!

  காதலர்கள் (தம்பதியரும் கூட), ஆற்றங்கரையில் (அல்லது கடற்கரையில்) மணலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பர்.

  இருவரில் யாராவது ஒருவருக்குக் கோபம் வரும்!

  ஆனால், பொது இடத்தில் கத்திச் சண்டை போட முடியாதே!

  எனவே, முகம் கொடுத்துப் பேசாமல், கோபத்தை வேறு விதமாக வெளிப்படுத்துவர். கைகளால் மணலை அளைந்து கொண்டிருப்பர்!

  இது இருவருக்கும் பொதுவானதே!

  இந்தக் கோபம், பெரும்பாலும் விளையாட்டுக் கோபம் அல்லது, சீக்கிரம் முடிந்து விடும் கோபம்!

  இதற்கு, ’சிற்றிலிழைத்தல்’ என்று பெயர்!

  சிறு + இல் = சிற்றில்! மணலில் கட்டப் படும் சிறிய வீடு (வேறு ’சிறிய வீடு’ இல்லை)!

  மணல் வீடு தான் கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை!

  கோபத்துடன், முகம் கொடுத்துப் பேசாமல், மணலில்/தரையில் கைகளை அளைந்து கொண்டு இருந்தாலே, ’சிற்றிலிழைப்பதாக’ அர்த்தம்!

  வேறு யாரும் பார்க்காத சமயத்தில், இருவரும் மீண்டும் அணைத்துக் கொள்வதிலேயே பெரும்பாலும் இந்தக் கோபம் முடிவுக்கு வரும்!

  இருவரில் ஒருவர், மணல் வீட்டை முழுவதுமாகக் கட்டினால், கோபம் சற்று பெரியது என்று அர்த்தம்! யாராவது ஒருவர், மற்றவருக்கு ‘அன்பளிப்பு’ கொடுத்தால் தான் கோபம் முடிவுக்கு வரும்!

  ஏனெனில், அங்கு அவர்கள் கட்டுவது, ’மணல் + இல்’ அல்ல! ’மன + இல்’!

  இது, ”’காம ஸமாஸ்ரயணத்திற்கு’ ஒரு முக்கியமான அங்கம்” என்றே காப்பியங்களும், பிரபந்த வியாக்கியானங்களும் கூறுகின்றன.

  ஆண்டாளும் இந்தப் பொருளையே தன் பாசுரத்திலும் குறிப்பிடுகிறாள்!

  ‘எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால், இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்!’

  என் வீடு புகுந்து, என்னை வலுக்கட்டாயமாக நீ அணைத்துக் கொண்டாய்! இதனால், எனக்கு கோபம் இல்லை! வருத்தமும் தீர்ந்தது! இது தான் எங்களுக்கும் வேண்டும்!

  ஆனாலும், ’இந்த நிலையில் நம்மை யாராவது பார்த்தால், பழி சொல்ல மாட்டார்களா?’ என்று சொல்லி முடிக்கின்றாள்!

  இந்த விளக்கம், வைஷ்ணவ சுதர்ஸனா ஆசிரியர் கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் எழுதிய ’நாச்சியார் திருமொழி வியாக்கியானத்தில்’ இருந்து கிடைத்தது!

  ReplyDelete
 22. KRS

  //ரங்கன் அண்ணா, சில கேள்விகள்//

  அய்யோ! மாட்டிக்கிட்டேன்! உங்களுக்குத் தெரியாததா? ஏன் இந்த விஷப் பரீட்சை (எனக்கு)?

  //1. இதைச் செய்யும் போது கண்ணன் வயசு எத்தனை?//

  தேனுகாசுர வதம் வரை, கண்ணன், ’கௌமார’ பருவம் - 1-6 வயது.

  ஆயர் குல வழக்கப்படி, 6 வயது வந்தவுடன் சிறுவர்கள் மாடு மேய்க்கலாம். இந்தப் பருவம், பௌகண்டப் பருவம் எனப்படுகிறது.

  அதன் பிறகு, சில ‘இலையுதிர் காலங்கள் கடந்ததாக, பாகவதம் கூறும். எனவே, கண்ணனுக்கு, சுமார் 12-14 வயது இருக்கலாம். அவன் வயது ஒத்த பருவத்தினரான கோபிகைகள், அந்தக் கால வழக்கப்படி, திருமண வயது (10-14 வயது) அடைந்ததால், தகுந்த வரன் வேண்டி காத்யாயனி விரதம் இருந்ததாகவும் பாகவதம் கூறும்.

  //2. அந்தப் பெண்கள் செய்தது சரியா? கண்ணன் செய்தது சரியா? :)//

  ஆடைகளைக் களைந்தது கோபியர்.

  //3. இவன் ஆடையை ஒளிச்சி வச்சா தப்பில்லை! ஆனால் துச்சாதனன் ஆடையை இழுத்தால் மட்டும் தப்பா? :))//

  கோபியர்கள் நதியில் நீராடும்போதும், கண்ணன் பெருமைகளையே பாடியதாக பாகவதம் கூறும்.

  கண்ணனை அனுபவிக்கத் தானே இவர்கள் இந்த விரதம் இருந்தனர்? அவர்களே வேண்டி விரதம் இருக்கும் போது, கண்ணன் அவர்கள் வேண்டியதைத் தானே செய்தான்?

  ஆனால், துச்சாதனன், திரௌபதி வேண்டியா ஆடையை உருவினான்?

  கண்ணனையும், துச்சாதனையும் Compare பண்ணுவது ரொம்ப ரொம்பத் தப்புங்கோ!

  4. ரொம்ப பேர், அவிங்க அவிங்க sensationalize பண்ணும் இந்த கோபிகா வஸ்திரா அபஹரணத்தில் உண்மையாலுமே நடந்தது என்ன? :)

  வெளியே வந்த பெண்கள், ஒரு கையினால் தங்களை மறைக்க முயற்சி செய்து கொண்டு, ஒரு கையினால் கண்ணனுக்கு வணக்கம் தெரிவித்தனர்.

  (எவன் ஒரு கையினால் அச்சுதனை வணங்குகிறானோ அவன் கை வெட்டப் படுவதே தகுந்த தண்டனை என்று கூறப்படுகிறது - பாகவதம், பிருந்தாவன லீலை 10.22.22-23).

  ’நீங்கள் உங்களையே எனக்கு அர்ப்பணித்த போது, நான் வேறு, நீங்கள் வேறு என்ற பாகுபாடு ஏன்?

  பக்தியோடு, பகவானுடன் (என்னுடன்) ஒன்றிவிட்ட பின்னர், அந்த பகவானின் அம்சத்தையே உங்கள் உடலிலும் அல்லவா காண வேண்டும்? இதை உணர்த்தவே இந்த நாடகம்’ என்கிறான் கண்ணன்!

  ’என்னிடம் சித்தத்தை வைத்தவர்களுடைய காமம் பிறவிப் பிணியைக் கொடுக்கும் காமமாக இருக்காது; இதைச் சோதிக்கவே ஆடைகளை எடுத்தேன்’ என்று கண்ணன் அவர்களிடம் கூறுவதாக பாகவதத்தில் சுகர் கூறுகிறார் (10.22.27-29).

  ReplyDelete
 23. //KRS
  அய்யோ! மாட்டிக்கிட்டேன்! உங்களுக்குத் தெரியாததா? ஏன் இந்த விஷப் பரீட்சை (எனக்கு)?//

  :)
  எனக்கு ஒன்னுமே தெரியாதே-ண்ணா! அப்படி இருக்கத் தானே பிடிச்சி இருக்கு! :)

  //ஏன் இந்த விஷப் பரீட்சை//

  விஷம் வந்தாப் பிறகு தான் அமுதம் வரும்! அதனால் தான்! :)

  //1. இதைச் செய்யும் போது கண்ணன் வயசு எத்தனை?
  ** எனவே, கண்ணனுக்கு, சுமார் 12-14 வயது ** //

  ஆக...
  ஒரு அஞ்சாங் கிளாஸ், ஆறாங் கிளாஸ் பையன் - கண்ணன்!
  இப்போ, கோபிகா வஸ்திராபஹரணம் என்பதைப் படிச்சிப் பாருங்க! விரசமாத் தெரியாது! :)


  பல மேல்நாட்டு விளக்கங்களாலும், வாசிப்புகளாலும், ரொம்ப பேர், அவிங்க அவிங்க மனப் போக்குக்கு ஏற்றவாறு sensationalize பண்ணிக்கிட்டாங்க! :))

  ReplyDelete
 24. //2. அந்தப் பெண்கள் செய்தது சரியா? கண்ணன் செய்தது சரியா? :)//
  ** ஆடைகளைக் களைந்தது கோபியர் **//

  :)
  பொது இடங்களில் ஆடைகளை முழுதுமாகக் களைந்து குளிக்கக் கூடாது என்பது வழக்கம்! - ஆண்/பெண் இருவருக்குமே பொருந்தும் - இன்னிக்கு குற்றாலம் போய் பாருங்க...வெவரம் புரியும்! :)

  கோபிகைகள், ஏதோ ஒரு ஜாலியில், அப்படி ஆடை களைந்து பொது இடத்தில் குளிக்க...
  அப்ப தான் Civics பாடம் படிச்சிக்கிட்டு இருக்கும் கண்ணன், வழக்கமான தன் வாலுத்தனத்தைக் காட்டினான்! அவ்வளவே! :)

  //கண்ணனையும், துச்சாதனையும் Compare பண்ணுவது ரொம்ப ரொம்பத் தப்புங்கோ!//

  ஹிஹி! சும்மா தான்! என் கண்ணனை, தோழியின் காதலனை, நான் ஓட்டாம, யாரு ஓட்டப் போறா? :)

  ReplyDelete
 25. நல்ல உரையாடல்!! வாழ்த்துக்கள்!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP