Wednesday, September 08, 2010

மூக்கறுத்த நாயன்மார்! மீனவ நாயன்மார்!!

அடியார்களின் திருக்கதைகளைப் புனைவுகள் அதிகம் இன்றி..
மூல நூல்களில் (திருத்தொண்டர் தொகை/திருவந்தாதி) உள்ளது உள்ளவாறு..
அடுத்த தலைமுறைக்கும் ஏற்றாற் போல..
சென்று சேர்க்க வேணும் என்ற ஆசையில்..
ஒவ்வொரு நாயன்மாரின் நினைவு நாளின் (குருபூசை) போதும், இதோ...பந்தல் பதிவுகள்...

அந்த வரிசையில் இன்று...இவர்களைப் பார்க்கலாமா?

1. செருத்துணை நாயனார் (ஆவணிப் பூசம் - Sep 5, 2010)
அரசியின் மூக்கை, பொது மண்டபத்தில், அதுவும் அரசன் இருக்கும் போதே, அனைவரும் பார்க்க அறுத்தவர்! - ஐயோ! ஏன் இப்படிச் செஞ்சார்?
* அரசன் இவர் தலையை உடனே சீவி இருப்பானோ?
* இல்லை தன்னாலும் அடக்க முடியாத பெண்டாட்டியை அடக்கியவரே-ன்னு பரிசு கொடுத்திருப்பானோ? :)

2. அதிபத்த நாயனார் (ஆவணி ஆயில்யம் - Sep 6,2010)
மீனவ நாயன்மார் - மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை என்று முதலில் பாடியதே இவரு தான்! :)

3. புகழ்த் துணை நாயனார் (ஆவணி ஆயில்யம் - Sep 6,2010)
உறவுகள், உற்ற நண்பர்கள் கூட உதறி விட்டு நீங்கும் காலத்தில்,
பஞ்சம் வந்த போதும், பரமனை விட்டு நீங்காமல்...!


செருத்துணை நாயனார்:

அது என்ன செருத் துணை? செரு = போர்!
"செருவில் ஒருவன்" என்று முருகனைச் சொல்வது சங்கத் தமிழ்!
போரில் துணை நிற்பவர் = செரு+துணையார்!

வேளாளர் குடியில், தஞ்சையில் தோன்றியவர்! திருவாரூருக்கு இடம் பெயர்ந்து, சிவத் தொண்டிலேயே இருந்து விட்டார்! விளைச்சல் பூமியான தஞ்சையை இவரு எதுக்கு திருவாரூருக்கு இடம் பெயரணும்?

"மேன்மை கொள் சைவ நெறி, விளங்குக உலகமெல்லாம்" என்று சைவம் கொடி கட்டிப் பறந்த போது...சைவத்தின் தலை நகரம் எது?

"தென்னாடுடைய சிவனே" என்னும் தென்னாட்டில், தில்லை என்னும் சிதம்பரம் தானே, அப்போதும் இப்போதும் எப்போதும் சைவத்தின் தலைநகரம்?
எப்படி வைணவத்துக்கு ஒரு திருவரங்கமோ, அது போல் சைவத்துக்குத் தில்லை அல்லவா? இதென்னடா புதுசாத் தலைநகரக் கேள்வி-ன்னு நினைக்கறீங்களா? :)

தில்லை-ஆரூர்

தில்லை என்றுமே பெருமை மிக்க தலம் தான்! மறுப்பில்லை!
பொன்னம்பலத்துக்கு உள்ளே ஒரு சிறு அம்பலம்!
ஆடல் வல்லானின் அழகு அம்பலமாகும் அம்பலம் = சிற்றம்பலம்!
ஆனால் தில்லைக்கும் முன்னால்...
சைவத் தலைநகரமாகத் திகழ்ந்து விளங்கியது = திருவாரூர்!


"திருவாரூர் பிறந்தவர் தம் அடியார்க்கும் அடியேன்" என்றெல்லாம் புகழப் பெற்றது! இன்னிக்கும் திருவாரூரில் மாலை விளக்கு ஏற்றிய பின்னரே, பல சுற்று மாவட்ட சிவாலயங்களில் எல்லாம் விளக்கீடு செய்வது வழக்கம்!
"கோயில் பாதி, குளம் பாதி" என்னும் படிக்கு, மொத்த கோயிலின் நிலப்பரப்பும், குளத்தின் நிலப்பரப்பும் ஒன்றே என்று அமைந்த ஆலயம்!

* உலக நன்மைக்காக விடமுண்ட கண்டன்! அந்தத் தியாகத்தை நினைத்துப் பெருமாள் மனத்தளவில் ரசிக்கும் போது, அவரது மூச்சிலே மேலும் கீழும் இறங்கிய ஈசன்! அதே நடனக் கோலம் காட்டும் "தியாகேசன்" = திருவாரூர்!
* சுந்தரர் முதலான பல அடியார்கள் ஒன்று திரண்டு சைவம் வளர்த்த தலம் = திருவாரூர்! தேவாசிரிய மண்டபம் என்றே இன்றும் உள்ளது!

* "புற்றிடம் கொண்ட பெருமான்" என்று இறைவனுக்குப் திருப்பெயர்! இயற்கைச் சூழலில் புற்றில் தோன்றிய பெம்மானாக ஈசன் விளங்கும் தலம் = திருவாரூர்!
* புற்றிடங் கொண்ட பெருமான்-அல்லியங் கோதை என்று மூலவரும், வீதி விடங்கர்-முருகன்-மனோன்மணி அம்மன் என்று உற்சவரும் (ஊருலா மூர்த்தியும்), செங்கழுநீர் ஓடை முதலான செந்தமிழ்ப் பெயர்களை இந்த ஆலயத்தில் காணலாம்!

"ஆரூர்" என்று தமிழ்ச் சமயமாக, சைவம் தழைத்த காலம்!
பின்னர் தில்லைக்குப் பெயர்ந்து..பலவும் பெயர்ந்து போனது!
:(

ஓதுவார்கள், சைவத் திருமுறைகளை ஓதும் போது, "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லி முடிப்பது தான் வழக்கம்! (சிற்றம்பலம் = தில்லைச் சிற்றம்பலம்)
ஆனால் திருவாரூர் தலம், தில்லைக்கும் தொன்மையானபடியால்...இந்தத் தலத்தில் மட்டும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்லி முடிப்பதில்லை! தேவாரம் சொல்லி, அப்படியே நிறுத்தி விடுவார்கள்!

அனைத்து ஆழ்வார்களாலும் அதிகம் பாடல்களைப் பெற்ற தலம் என்று திருவரங்கத்துக்கு எப்படிப் பெருமையோ...
அதே போல், அதிகமான தேவாரப் பதிகங்கள் பெற்ற தலம் என்ற பெருமை திருவாரூருக்கே உண்டு! மொத்தம் 353 பாடல்கள்!

பின்னம் அவனுடைய "ஆரூர்" கேட்டேன்!
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்!
திருவாரூர் தியாகேசப் பெருமான் திருவடிகளே சரணம்!


சரி, நாம் கதைக்கு வருவோம், வாங்க...

செருத்துணையார் திருவாரூரில் சிவத் தொண்டில் காலங் கழிக்கலானார்!
என்ன, கொஞ்சம் கோவக்காரர்! வன்-தொண்டர்! சிவத் தொண்டுக்கு யாராச்சும் வலியப் போய் இடையூறு செஞ்சா பிரிச்சி மேஞ்சிருவாரு! :)

ஒரு முறை பல்லவ நாட்டு அரசர், கழற்சிங்கர் தம் மனைவியோடு ஆரூர் ஆலயத்துக்கு வந்தார்! ஒரே படோபடம்! அரசன் சும்மா வந்தாலும், கூட இருப்பவர்கள் அடிக்கும் கொட்டம் அப்பவே இருந்தது போல! ஆலயத்தில் "அனைவரும் அடியார்கள் தான்" என்ற நிலை மறந்து போனது! படோபடங்கள் தலை தூக்கியது! அரசரின் குழாம் தேவாசிரிய மண்டபத்துக்குள் நுழைகிறது!

முன்பு சுந்தர மூர்த்தி நாயனாரையே, அவர் சுற்றியுள்ள அடியார்களை ஏறெடுத்தும் பாராமல், செல்வாக்கால் நேரே வணங்கச் சென்ற போது, இதே தேவாசிரிய மண்டபத்தில் அல்லவா ஒருவர் (விறன்மிண்டர்) வெடித்துக் கிளம்பினார்?
"சுந்தரனும் அடியார் குழாத்தில் இல்லை; அவனுக்கு அருளும் ஈசனும் இனி நம் குழாத்தில் இல்லை! சுந்தரனும் புறகு! அவனை ஆளும் ஈசனும் புறகு!" என்று அறச் சீற்றம் கொண்ட இடம் அல்லவா இந்த தேவாசிரிய மண்டபம்?

அரசன் முன்னே வேகமாகச் சென்று விட...அரசி தான் சற்றுத் தாமதம்!
எப்பமே வீட்டில், பெண்கள் தானே கிளம்ப லேட் ஆகிறது? :)) ஒருவர் Fast Passenger என்றால் இன்னொருவர் Goods வண்டி போல் வந்தால் எப்படி? :))
ஏன் அரசியார் தாமதமாகச் செல்கிறார்? அவரை ஏதோ ஒன்னு ஈர்க்கிறது! என்ன அது?

மல்லிகை, முல்லை, இருவாட்சி, கதம்பம், அல்லி, அளரி, செந்தாமரை என்று பூசைக்காக மலர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன பூங்கோயில் மண்டபத்துள்!
மொத்த வாசனையும் அழகும் திரண்டு வந்து அரசியை நிலை கொள்ளாமல் செய்கிறது! என்ன தான் அரசியாய் இருந்தாலும், இப்படி அனைத்து மலர்களும் ஒரு சேர அவள் இது வரை கண்டதும் இல்லை! சூடிப் பரப்பி அனுபவித்ததும் இல்லை! ஆசை துடிக்கிறது!

அரண் மனையிலே காணாத சுகத்தை,
அரன் மனையிலே காண்கிறாள்!

முறையாக அனுபவிக்கலாமே? பூசைக்குப் பின் பிரசாதமாக அவளுக்கே தரப்படுமே!
ஆனால் ஆசை வெட்கம் அறியுமா?

இப்போதே அனுபவித்தாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டால்??
யார் தன்னைக் கேட்டு விட முடியும் என்ற அலட்சியத்தில், நடந்தாள் ராணி, தடந்தாள் பேணி! பூந்தொடையல் கையில்! பூவாசம் மெய்யில்! முகர்ந்து முகர்ந்து ஆனந்தித்தாள்!

எங்கிருந்து தான் வந்தாரோ செருத்துணை? இத்தனை படோபடங்களையும் ஆலயத்தில் பார்த்து வெறுத்துப் போனவர், அரசியின் அலட்சியம் கண்டு இன்னும் கோபமானார்! அருகில் உள்ள பூ-நார் சீவும் குறுங்கத்தி எடுத்து, அவள் நாசிக்கும் மலருக்கும் இடையே நீட்ட, வெள்ளல்லி எல்லாம் செவ்வல்லியாகிப் போனது! குபுகுபு என்று இரத்தம்!!


அடப் பாவி, அரசியின் மூக்கில் கத்தி பட்டு விட்டதா? இப்படிப் பெண்மயில் போல் துடிக்கிறாளே! பலரும் பாய்ந்து செருத்துணையைப் பிடித்துக் கொண்டனர்!

முன்னே போன பல்லவ அரசர் கழற்சிங்கர், சத்தம் கேட்டு ஓடோடி வருகிறார்! இந்த அடாத செயலைச் செய்தது யார் என்று சீறுகிறார்! அதிகாரம் அதட்டும் போது, பதில் உடனேவா வருகிறது? அனைவரும் தயங்கத் தயங்க...

செருத்துணை, குற்றத்தை ஒப்புக் கொண்டு, தானே இதைச் செய்ததாகக் கூறுகிறார்! நடந்த அத்தனையும் அவர் எடுத்துச் சொல்லச் சொல்ல...
ச்சே, இப்படியும் ஒரு எதிர்வினையா? அரசன் வாளை உருவி...

ஐயோ, செருத்துணை இன்றோடு காலியா?
யாரும் எதிர்பார்க்கும் முன்பே, மன்னன், அரசியின் கைகளை வாளால் வெட்டுகிறான்! வெட்டித் தலை குனிகிறான்! வெட்கித் தலை குனிகிறான்!
மக்கள் அதிர்ச்சியால் அரண்டு போகிறார்கள்!

காதலியிடம் Public Display of Affection கேள்விப்பட்டுள்ளோம்!
இது என்ன Public Display of Punishment-ஆக அல்லவா இருக்கு! :(

"முதல் தவறு கைகள் மீதல்லவா? அப்புறம் தானே மூக்குக்குச் சென்றது?" - இது அரசன் சொன்னது!
"முதல் தவறு மனதின் மீதல்லவா? அப்பறம் தானே கை மீறியது?" - இது நாம் சொல்வது!

மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ எனவே.....
மனத்தை உணர வைக்காமல்......, விழிக்கோ,கைக்கோ,நாசிக்கோ தண்டனை தந்து பயன் என்ன?
சுழற்றியதோ சாட்டை! சாபம் பம்பரத்துக்கா? இதென்ன போலிப் பண்பு??

* பூசைக்குரிய மலர் என்று பாராதது சிவ அபராதம் என்று சொன்னாலும்...
* ஆலயத்தில் அதிகாரம் காட்டியது அரசியின் பிழையே ஆனாலும்...
* அதற்கு, செருத்துணையார், அவசரத்தில் குறுங்கத்தி நீட்டி விட்டாலும்...
* அரசியே ஆனாலும் சிவாபராதம் அபராதமே என்று...இப்படிப் பலர் முன்னிலையில், அரச நீதி காட்டி விட்டார் கழற்சிங்கர்!

இது அரச நீதி வேண்டுமானால் ஆகலாம்! ஆனால் மேன்மை கொள் சைவ நீதி ஆகுமோ? = அன்பே சிவம்!
* இறைவனுக்குரிய மாலையைத் தான் சூடிக் கொண்டவள் = அவள் கைகளை யாரும் அரியவில்லையே! "சூடிக் கொடுத்த சுடர் கொடி" அல்லவோ ஆனாள்!
* இங்கோ, அரசிக்கு வேறு விதமாய் ஆகிப் போனது! ஏன்?

அவளுக்கோ மாலையின் மேல் ஆசையில்லை! அதை அணிந்தால், தான், அவனுக்கு ஏற்றவளாக இருப்போமா என்ற ஆதங்கம்!
இவளுக்கோ இறைவன் பால் உள்ள பற்றினால் அல்ல! தன் ஆசைக்கு, தன் வேட்கையை, பொதுவில் தணிவித்துக் கொள்ள முயன்று...அதுவும் தன் அதிகார பலத்தால்!

= நோக்கமே முக்கியம்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் "தத்தம்
கருமமே" கட்டளைக் கல்!

என்ன தான் அரச நீதியாகத் தண்டனை தந்தாலும், கழற்சிங்கர் சிறந்த சிவ பக்தரே! சைவத் தொண்டிலே சிறந்து, நாயன்மாராக விளங்கி நிற்கிறார்!
செருத்துணை நாயனார் குரு பூசையின் போது, இந்த இருவரையுமே வணங்கி நிற்போம்!


அதிபத்த நாயனார்:

நாகைப்பட்டினம் நுளைப்பாடி என்னும் மீனவச் சேரியில் பிறந்தவர் அதிபத்தர்! இவருக்கு ஈசனின் பால் எப்படியோ, அவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு வந்துவிட்டது! யாரிடமும் போய் வேதமோ, திருமுறையோ கேட்கவில்லை! ஈசனின் செயல்கள் அனைத்தையும் ஆய்ந்து முடித்து அவரைப் பற்றிக் கொள்ளவில்லை! இயல்பாகவே இயற்கையாகவே அமைந்து விட்ட ஈச-அன்பு!

ஒவ்வொரு நாளும் தான் கடலில் பிடிக்கும் மீன்களுள் சிறந்த மீனை, சிவனுக்கே அர்ப்பணம் என்று சொல்லி, மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவார்! மீன் பிடித்து மீண்டும், ஆற்றில் விட ஆசை-ன்னு அப்பவே பாடி இருக்கார் போல! :)

அதென்ன ஒத்தை மீனை மட்டும் விடுவது? அதென்ன, பிடித்துத் தானா விட வேண்டும், அப்படியே விடலாமே-ன்னு ஆளாளுக்குப் சில சக மீனவர்கள் கேலி பேசினாலும்...
அதிபத்தர் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை! அவர் சிவ-அன்பு அவர் மனத்தளவில்! அது ஊருக்கே விளம்பரம் செய்து அளித்த "சிவார்ப்பணமஸ்து" அல்ல! நடுக்கடலில் அளித்த சிவக்கொடை!

ஆனால் அன்றோ, அவர் கெட்ட நேரம், வலையில் ஒரு மீனும் சிக்கவில்லை! இன்னும் ஆழம் சென்று பார்த்தார்! ஆகா! ஏதோ பலமாக இழுக்கிறது! கொழுத்த மீன்கள் போல! வலையை மேலே இழுத்துப் பார்த்தால்...கொழுத்த மீன்"கள்" அல்ல!.........வெறும் ஒரு கொழுத்த மீன் மட்டுமே!

இப்பச் செய்வாரா சிவார்ப்பணம்? கொள்கை?? சிவம்???
ஹிஹி! ஞான, கர்ம யோகம் என்று விதம் விதமாய் அறிவுப் பசியெல்லாம், வயிற்றுப் பசிக்கு அப்புறம் தானே?
நமக்கெல்லாம் வாழ்க்கைக்கு, மிஞ்சி ஃப்ரீ டைமில் தானே தெய்வம்! அதுவும் நமக்கு ஒத்து வரும் கதைகள் கொண்டதாய் இருந்தால்! :)
அதிபத்தருக்கோ தெய்வத்தை மிஞ்சித் தான் வாழ்க்கை! என்ன செய்வார் அந்த ஒரே மீனை?

சிவார்ப்பணம் என்று வழக்கம் போல் கடலிலேயே விட்டார்! இவர் அதி-பத்தரா? அதி-பித்தரா?

அடப் பைத்தியமே, புவ்வா-வுக்கு என்ன பண்ணுவ? என்று சக மீனவர்கள் கேட்க...வெறும் புன்னகை மட்டுமே அவரால் அவர்களுக்குத் தர முடிந்தது!

மறு நாள், அந்த ஒரு மீன் கூடப் பிடிபடவில்லை! போச்சுறா...நல்ல சிவார்ப்பணம்! பகர் ஆர்வம் ஈ என்று கேட்காமலே சிலருக்குத் தரவல்ல இறைவன், இவருக்கு மட்டும் இவர் நிலை கண்டும் தரவில்லை போலும்! ஒரு வேளை ஈசனும் ஆராய்ந்து அருளேலோ ஆகி விட்டாரோ? :(

சேலெல்லாம் செவேல் செவேல் என்று மின்ன, இது சிலா மீனோ அல்லது சிலையோ என்னும் படிக்கு, பொற்சிலையாய் ஒரு பொன் மீன்...
வலையில் வந்து விழுந்தது! தகதகதக தகவென்றே ஓடி வா! சிவ சக்தி சக்தி சக்தியோடு ஓடி வா!

அதிசய மீனை விற்றால் வாழ்க்கையே அதிசயமாய் மாறிப் போகுமே! பொன்மீன், பொன்மீன் என்று உடன் இருந்த பரதவர்கள் எல்லாம் மகிழ்ந்து கூச்சல் இட...
அதிபத்தர் சற்றும் தாமதியாமல், அன்றைக்கு கிடைத்த ஒரே மீனை, பொன் மீன் என்றும் பாராமல்....."சிவார்ப்பணம்".....அலையிலேயே இட்டு விட்டார்!

கடல் நஞ்சை உண்டவன், இவர் ஈந்த மீனையும் உண்டானோ என்னவோ?
கீழைக் கடலில் நஞ்சுண்டவன் மேற்குச் சூரியனும் மறைந்து போகும் அளவுக்கு மின்ன...
பொன்னார் மேனியனே....மின்னார் செஞ்சடை மேல்....மன்னே மாமணியே...

அதிபத்தர் சிரம் மேல் கரம் கூப்பி, சிவசிவா என்றும் சொல்லத் தெரியாது, நாத் தழுதழுக்க...
சிவலோகத்தில் சிறப்புற்றிருக்கும் வண்ணம் இந்த அன்பனைத் தலையளித்து ஆண்டு கொண்டார் அம்பலவாணப் பெருமான்!

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
தங்கக் கவசம், வெள்ளிக் கதவு என்றெல்லாம் கொட்டும் கூட்டத்துக்கு இடையில்... அதிபத்த நாயனார் திருவடிகளே சரணம்!

8 comments:

 1. நல்ல பகிர்வு தல ;)

  ReplyDelete
 2. புகழ்த்துணை நாயனார் இனிமேல் தான் எழுந்தருளுவாரோ?

  ReplyDelete
 3. தில்லையின் மிக்க திருவாரூர்ப் பெருமைகளை இன்று தான் அறிந்தேன். நன்றி இரவி.

  ReplyDelete
 4. இவ்விரு நாயன்மார் கதைகளையும் கொஞ்சம் கொஞ்சம் அறிந்திருந்தாலும் விளக்கமாக அறிந்திருக்கவில்லை. இன்று படித்துத் தெரிந்துகொண்டேன். மறக்காமல் இருக்க ஈசன் அருள் புரியவேண்டும். நன்றி இரவி.

  ReplyDelete
 5. //குமரன் (Kumaran) said...
  புகழ்த்துணை நாயனார் இனிமேல் தான் எழுந்தருளுவாரோ?//

  :)
  கொஞ்சம் முடியலை குமரன்!

  இளையான்குடி மாற நாயனார் குருபூசை இன்னிக்கி! அப்போ புகழ்த்துணையும் சேர்த்துச் சொல்லி விடுகிறேன்!

  ReplyDelete
 6. //குமரன் (Kumaran) said...
  தில்லையின் மிக்க திருவாரூர்ப் பெருமைகளை இன்று தான் அறிந்தேன். நன்றி இரவி//

  தில்லையின் மிக்க திருவாரூர் - தலைப்பு எல்லாம் சூப்பரா வைக்கறீங்க குமரன்! :)

  ReplyDelete
 7. சொல்லுவதர்க்கு வார்த்தைகள் வரவில்லை திரு.ரவிசங்கர்.
  ஒவ்வொரு நாயன்மாரின் வரலாறுகளும் பனிக்க வைப்பவையே !
  ஆனாலும் செருத்துணை நாயனார்,அதிபத்த நாயனார் வரலாறு மிக்க பனிக்க வைத்தன! என்னில் அடங்கா நன்றிகள்.

  ReplyDelete
 8. சொல்லுவதர்க்கு வார்த்தைகள் வரவில்லை திரு.ரவிசங்கர்.
  ஒவ்வொரு நாயன்மாரின் வரலாறுகளும் பனிக்க வைப்பவையே !
  ஆனாலும் செருத்துணை நாயனார்,அதிபத்த நாயனார் வரலாறு மிக்க பனிக்க வைத்தன! என்னில் அடங்கா நன்றிகள்.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP