Thursday, September 02, 2010

பழமொழி நானூறில் தமிழ்க் கடவுள்!

பழமொழி நானூறு என்பது திருக்குறள், நாலடியார் போல பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று!

மொத்தம் 400 பழமொழிகள்...ஒவ்வொரு வெண்பாவிலும் ஒவ்வொரு பழமொழி கோர்க்கப்பட்டு இருக்கு!
அப்பவே தமிழறிஞர்கள் எப்படியெல்லாம் வித்தியாசமாக நூல்களைச் செஞ்சிருக்காங்க பாருங்க!

பட்டிமன்றத்தில் கலந்துக்கிட்டு, "குடும்பத்தில் அதிகம் கத்துவது ஆண்களா பெண்களா?"-ன்னு வெத்துப் பேச்சு பேசி, கைத்தட்டல் பெறும் தமிழ் "அறிஞர்கள்" அல்ல சங்க காலக் கவிஞர்கள்! "நீ இருமினால் இயற்தமிழ், தும்மினால் இசைத்தமிழ்"-ன்னு எல்லாம் ஆட்சியாளரை உலா பாடத் தெரியாதவர்கள்!

தமிழ் மொழிக்கு வளம் சேர்க்க வல்ல நூல்களை எழுதி,
பண்டைத் தமிழ்க் குடிகளின் வாழ்வியலைப் பதிந்து வைத்துப் போன பண்பாளர்கள்!
பழமொழி நானூறு என்னும் இந்த நூலை எழுதியவர்: மூன்றுரை அரையனார்

வழி வழியாக மக்களிடையே வழங்கி வரும் பழமொழிகள், சுருக்கமா, ஆனா நச்-ன்னு இருக்கும்! கேட்ட மாத்திரத்தில் பதிந்து விடும்!
"அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு" என்பது இப்போதைய பழமொழி! இறை ஒருமைப்பாட்டுக்கு, பக்கம் பக்கமா புத்தகம் போட்டாலும் இந்த ஒரு பழமொழிக்கு ஈடாகுமா? பழமொழியின் Power அப்படி! :)

நிறை குடம் நீர் தளும்பல் இல் என்ற பழமொழியைப் பாட்டில் வைக்கிறார் ஆசிரியர்! அதே போல் இன்னொரு கவிதையில்...
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும் - என்று வைத்துப் போகிறார்! இப்படி 400 பழமொழிகளின் தொகுப்பு!

தொல்காப்பியரும் தமிழ்ப் பழமொழிகள் (முதுமொழி) பற்றிச் சொல்கிறார் பாருங்கள்!
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்,
ஏது நுதலிய முதுமொழி என்ப
இப்படியான பழமொழிகளை, சங்க காலத்தில் சில கவிஞர்கள் ஆங்காங்கே எடுத்து ஆண்டாலும்,....
ஒரே இடத்தில் திரட்டி வைக்க, புதுமையான யோசனை இந்தக் கவிஞருக்குத் தான் தோன்றியது! அதுவே 18 கீழ்க்கணக்கில் = பழமொழி 400!பழமொழிகளில், பண்டைத் தமிழ்க் குடிகளின் தெய்வமான திருமால் எங்கெல்லாம் வருகிறார்-ன்னு சும்மா பார்ப்போமா?

நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்,
உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,
மரையா கன்று ஊட்டும் மலை நாட! - மாயா;
நரை ஆன் புறத்து இட்ட சூடு.
(பாடல்: 48)

இதிலுள்ள பழமொழி: நரை ஆன் புறத்து இட்ட சூடு! அதாச்சும் வெள்ளைக் காளைக்குப் போட்ட சூடு போல்!
வெள்ளை மாட்டுக்குச் சூடு போட்டாற் போலே, நல்லவர்கள் செய்யும் தவறுகள் பளிச்-ன்னு தெரியும்!

மரையா கன்று ஊட்டும் மலை நாட = மலையாடு (வரை ஆடு = மரை ஆ);
அது தன் கன்றுக்குப் பாலூட்டும் மலைவளம் கொண்ட மலைநாடனே,
* வெள்ளை மாட்டுக்குப் போட்ட சூட்டை அந்த வெண்மையே எடுத்துக் காட்டுவது போல்...
* சான்றோர்கள் செய்யும் தவறுகளை, அந்தச் சான்றாண்மையே எடுத்துக் காட்டி விடும்!

இதுல எங்க திருமால் வந்தாரா? ஹா ஹா ஹா, முழுப் பாட்டையும் பாருங்க...

நிரை தொடி தாங்கிய, நீள் தோள் மாற்க்கு ஏயும்
= வரிசையாக தோள் வளை சூடிய, நீள் தோள் நெடியோன்
= மாலுக்கேயும் = மாலுக்கே ஆனாலும் = திருமாலுக்கே ஆனாலும்

உரை ஒழியாவாகும், உயர்ந்தோர்கண் குற்றம் = ஒழிக்க இயலாது, உயர்ந்தவர்கள் செய்யும் தவறுகள்!

அதாச்சும், திருமால் போன்று உயர்ந்தவர்களே ஆனாலும்...
உயர்ந்த தன்மையில் இருந்து கொண்டு செய்யும் சிறு குற்றமும், பளிச்-ன்னு தெரியும், வெள்ளைக் காளைக்குச் சூடு போட்டாற் போலே!

உயர்வுக்குத் திருமாலைக் காட்டுகிறார் கவிஞர்!
கடைச் சங்கத் தமிழ்க் குடியிலும், எத்தனை உயர்வு பெற்றிருந்த திருமால்...அந்த முல்லை நில மாயோனை விடவா நீங்கள் உயர்ந்தவர்கள்?
அது மாயோனே ஆனாலும் சரி, உயர்ந்தவர்கள் செய்யும் சிறு தவறும், பெரும் பிழையாய்த் தெரியும்! எனவே, சான்றோர்களே, தவறாது இருங்கள் என்று அறிவுறுத்துகிறார்! = Model Code of Conduct, for Models! :)


அடுத்த பாட்டில் "நாரணம்" என்ற தமிழ்ச் சொல்லையே கையாளுகிறார் கவிஞர் மூன்றுரை அரையனார்!
நாரணம் தமிழ்ச் சொல்லா? என்பதை இராம.கி ஐயாவின் பதிவில் பாருங்கள்!

காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர்
உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்கு
நல்ல நாராயம் கொளல்.
(பாடல்: 79)

இதில் உள்ள பழமொழி: நரிக்கு நாராயம் கொள்வார்களா? அதாச்சும் ஒரு குறு நரியைப் பிடிக்க, யாராச்சும் நாராய அம்பினை எய்துவார்களா?

காழ் ஆர மார்ப = முத்து மாலை மார்பனே
கசடு அறக் கை காவாக் கீழாயோர் செய்த பிழைப்பினை = கசடில்லா ஒழுக்கத்தைக் காக்க மாட்டாத கீழானவர்கள்...அவர்கள் தன்னளவில் செய்யும் ஈனச் செயலுக்காக...

மேலாயோர் உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல் = மேலான சான்றோர்கள், மனத்தில் எடுத்துக் கொண்டு, பதிலுக்குப் பதில் ஊக்கலாமா?
நரிக்கு நல்ல நாராயம் கொளல் = அது, நரிக்கு நாராய அம்பு எய்தாற் போலே! அது தேவையா?


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)


அன்பர்களே,
18 கீழ்க் கணக்கோடு.....
சங்கத் தமிழிலே தமிழ்க் கடவுள் என்பதற்கான....
இது காறும் வந்த தரவுகள் - பதிவுகள் அனைத்தும் நிறைந்தன!

5 comments:

 1. கண்ணபிரான் .. எவ்வளவு அழகா எழுதறீங்க..இது தெரியாம நானும் 4000 த்தை இதனை நாளா உருட்டீட்டு இருக்கேன். ஒரு வருசமாத்தான்.. திருமலையில இருக்கிற கடவுள் தமிழ் கடவுள்னு தெரிஞ்ச பிறகுதான்.. படிச்சதெல்லாம் கன்னடத்தில தான். எங்க ஊருக்கு திருமலை தான் nearest கோவில்... vishitadvaitham நா என்ன ரொம்ப கொழப்புராங்களேன்னு படிக்கப்போயி தான் அந்த இங்கிலீஷ் புத்தகத்தில நம்ம நம்மாழ்வார் பத்தி நெறைய எழுதி இருக்கவும் 4000 த்தை படிக்க ஆரம்பிச்சேன்..உங்க பதிவு தெரிஞ்சிருந்தா...i would have got more insights.. அந்த முறை நீங்க சொன்ன மாதிரி தமிழ்ல தான் அர்ச்சனை பன்னீட்டு வந்தேன்.. ( அன்று இவ்வுலகம் )

  ReplyDelete
 2. நாராயம் என்பது நாராயண அம்பு தானா இரவி?

  ReplyDelete
 3. தோராயமா நாராயம்! :)

  அனைத்து உரையாசிரியர்களின் கூற்றும் அப்படியே! மாற்றுப் பொருள் இருந்தாச் சொல்லுங்க குமரன்!

  ReplyDelete
 4. குமரன்
  இந்தாங்க ம.இராசமாணிக்கனார் உரை
  http://www.tamilvu.org/slet/servlet/l2A00.l2A00exp?a=80&b=71&c=80

  ReplyDelete
 5. நன்றி இரவி. உரையாசிரியர்கள் என்ன சொல்லியிருக்காங்கன்னு பாக்க இணையப் பல்கலைகழகத்திற்குத் தான் போக வேண்டும்; நேரம் கிடைக்கும் போது - என்று குறித்து வைத்திருந்தேன். நீங்களே தேடித் தந்துட்டீங்க. நன்றி.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
* யாவையும் யாவரும் தானாய்,
* அவரவர் சமயம் தோறும்,
* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,
* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
* "பாவனை அதனைக் கூடில்,
* அவனையும் கூட லாமே
"!!!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP