Wednesday, September 01, 2010

பதினெண்கீழ்க் கணக்கில் தமிழ்க் கடவுள்!

18 கீழ்க் கணக்கு நூல்களில், அற நூல்களைத் தவிர்த்து, அகம்/புறம் என்று வாழ்வியல் அழகு நூல்களும் உள்ளன! No Moral Science, Only Life's Beauty! :)

அகத்திணை:
1. ஐந்திணை ஐம்பது
2. திணைமொழி ஐம்பது
3. ஐந்திணை எழுபது
4. திணைமாலை நூற்றைம்பது
5. கைந்நிலை
6. கார் நாற்பது

புறத்திணை:
1. களவழி நாற்பது

இந்த நூல்களிலெல்லாம் தமிழ்க் கடவுள் பற்றி வரும் குறிப்புகளைப் பார்ப்போமா?
மற்ற 18 கீழ்க்கணக்கு நூல்களான - திருக்குறள், திரிகடுகம், நான்மணிக் கடிகை, பழமொழி நானூறு - இவற்றுள் எல்லாம் வரும் குறிப்புகளை முன்னரே பார்த்து விட்டோம்! அவை அற நூல்கள்! இன்று பார்க்க இருப்பவை அக நூல்கள்!
கார் நாற்பது:

கார் காலக் குறிப்புகள் (மழைக் காலம்) ஒவ்வொரு கவிதையிலும் வருவதால், இது கார் நாற்பது! எழுதியவர்: மதுரைக் கண்ணங் கூத்தனார்! சங்கப் புலவர்கள் பல பேரு மதுரைக் காரவுங்களாத் தான் இருப்பாங்களோ? :)
தோழி தலைவிக்குப் பருவம் காட்டி வற்புறுத்தல்: கார்கால வானவில்லில் திருமால் சூடும் மாலை

பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
வருதும் என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து?

கடல் போல் கரு வண்ணனாகிய திருமால்! அவன் மார்பில் தவழும் தார் (மாலை)! எப்பமே அது பல வண்ணங்களைக் கொண்டு தானே இருக்கும்! வனமாலையோ, வண்ணமாலையோ?
அதே போல் இந்த வானவில் (திருவில்) இத்தனை நிறங்களோடு தோன்றுகிறதே! மழைக்காலம் துவங்கப் போகிறதோ?

கார்காலத்தில் வந்து விடுவேன்-ன்னு சொன்ன உன் தலைவன் இன்னும் வரவில்லை-ன்னு ஏங்குகிறாயா? சரி சரி பதறாதே!
அங்கே பார், வானம் கருவுற்றுச் சத்தம் போடுகிறது! பூப்பூவாய் தூவப் போகிறது! அதற்குள் அவர் வந்து விடுவார்! ரொம்ப கவலைப்படாதேடீ!


திணைமாலை நூற்றைம்பது:

இந்த நூல்......குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைப் பாடல்களும் கொண்டது! மொத்தம் 150 கவிதைகள்!

எழுதியவர் ஒருவரே - பெயர்: கணிமேதாவியார்!
ஏலாதி என்ற நூலை எழுதியவரும் இவரே! கணித வல்லுநர் (என்னைய போல), ஆனால் கவிதையிலும் என்னமா கலக்குறார் பாருங்க :))

மாயவனும் தம் முனும் போலே, மறிகடலும்
கானலும் சேர் வெண்மணலும் காணாயோ? - கானல்
இடையெலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடையெலாம் புன்னை புகன்று?
(நெய்தல் திணை: 58)

மாயவனும் தம் முனும் = மாயோனும், அவன் முன்னவனான வாலியோனும்(பலதேவன்) விளையாடும் இயற்கைக் காட்சியைப் பாரேன்!
* ஒன்று கருங்கடல்!
* இன்னொன்று வெள்ளை மணல் கானல் சோலை! (கடலோரக் கானல் சோலை)

கருமையான கடலின் அலை, அந்த வெள்ளை மணலை முட்டி முட்டி விளையாடுவது, கருப்பான கண்ணன், வெளுப்பான வாலியோனுடன் விளையாடுது போலவே இருக்கே!
அந்தக் கானல் சோலையிலே, ஞாழல் மரம் (கோங்க மரம்), தாழை, புன்னை மரம் என்று அடர்த்தியாக இருக்கே! பாராயோ?

இந்தப் பாடல் "நெய்தல்" திணை என்றாலும், "முல்லை" நில இறைவன் மாயோன்.....இங்கும் அழகாகப் பேசப்படுகிறான் பாருங்கள்!

நெய்தல் நில வருணன்/மருத நில வேந்தன் எல்லாம் வெறும் நில அடையாளங்களாக மட்டும் நின்று விட்டனர்; ஆலயமோ, கூத்தோ, மக்கள் வாழ்விலோ அவர்கள் இடம் பெறவில்லை!
மாயோனும் சேயோனும் மட்டுமே நிலம் கடந்து, பல மக்களாலும், வாழ்வியலில் கலந்து பேசப்படுவதை, இதே போல் பல சங்கக் கவிதைகளில் காணலாம்!

அதே திணைமாலை-150 இன் தொடர்ச்சியாக....முல்லைத் திணை (96 & 97)
இருள்பரந்து ஆழியான் தன்னிறம்போல் தம்முன்
அருள்பரந்த ஆய்நிறம் போன்றும் - மருள்பரந்த
பால்போலும் வெண்ணிலவும் பையரவு அல்குலாய்
வேல்போலும் வீழ் துணைஇ லார்க்கு.

பாம்பு போல் வளைந்த அல்குல் (இடுப்பு) கொண்ட தோழீ...
ஆழிப்படை (சக்கரப்படை) ஏந்தும் மாயோனின் நிறம் போல் இருள் பரவும் வேளை!
அவன் முன்னவன் வாலியோன் போல் வெள்ளொளி மதி பரவும் வேளை!
ஆனால் என்னைப் போல்......காதல் துணை அருகிலே இல்லாதவர்க்கோ....,
இந்த வேளை வேல் போல் கொடியதாய் இருக்குதேடீ!


பாழிபோல் மாயவன்தன் பற்றார் களிற்று எறிந்த
ஆழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழி
மான்மாலை தம்முன் நிறம்போல் மதிமுளைப்ப
யான்மாலை ஆற்றேன் நினைந்து.

தோழியே, அதோ கதிரவன் மேற்கு மலை-முகட்டை முட்டுகிறான் பார்! மாயோனாகிய திருமாலின் ஆழி (சக்கரம்).....
பகைவரின் யானையை, தலையில் போய் முட்டுவது போல் முட்டும் இந்தச் சிவந்த காட்சியைப் பாரேன்!

அந்த மாயோனுக்கு முன்னவன் வாலியோனைப் போல், வெள்ளையாய் நிலவும் எழுகிறது! இப்படி மயக்கும் மாலைப் பொழுதில், நான் தான் அவரையே நினைத்து ஆற்றாமல் உள்ளேன் போலும்!


ஐந்திணை ஐம்பது: திருமால்+முருகன் என்று இருவரையும் ஒரு சேரக் காணும் கவிதை

இந்த நூலும் ஐந்திணைக்குப் 10 பாடல்கள் வீதம், 50 கவிதைகள் கொண்ட தொகுப்பு! எழுதியவர்: மாறன் பொறையனார்!

மாறன் = பாண்டியப் பெயர், பொறை = சேரப் பெயர்! இவர் இரண்டு வழி வம்சமான இல்லத்தவர் போலும்! அதான் இப்படிப் பெயர் வைத்துள்ளார்கள்!
அதான் போலும் இவரும் மாயோன்-சேயோன்-ன்னு இருவரையுமே ஒரு சேரப் பாடுகிறார்!

மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன் தார்பூப்ப ஈதோ
மயங்கி வலன் ஏருங் கார்.
(முல்லை: 01)

அடி நல்லவளே, என் தோழீ, மேகம் திரளுது பார்! கார் காலம் வந்து விட்டுது!
மல்லரை எல்லாம் அடக்கிய மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் - நம் மாயோனின் உருவம் போல கருமேகங்கள் திரண்டு விட்டன!

அந்த மாயோன் மேகத்தில், முருக வேல் மின்னல்!
கருமேகத் திரளில், கடம்ப மாலை சூடிய முருகனின் வேல் போல், பளிச்சென்று மின்னல் மின்னுதே!
மலையரண்களின் மேல் வேல் எய்த முருகனின் கொன்றைப் பூக்கள் பூக்கத் துவங்கி விட்டன! கார்காலம் வந்து விட்டதே! சொன்னபடி அவரும் வந்து விடுவார்!

இப்படித் திருமாலும் முருகனுமாய் ஒரு சேரக் காணும் காட்சி, முல்லை நிலத்தில்!
குறிஞ்சியின் முருகன் முல்லைத் திணையிலும் வருவது தெரிகிறது அல்லவா?
இரு பெரும் தமிழ்க் கடவுள், மாயோன்-சேயோன் காட்சிகள் பதினெண் கீழ்க் கணக்கில்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

2 comments:

 1. அருமையான தொகுப்பு

  கார்காலம் என்றால்
  கண்முன்னே
  கார்மேக வண்ணன் தான்

  ReplyDelete
 2. அருமை இரவி! மாயவனும் தம்முன்னும் சேயவனும் போற்றப்படும் இடங்களைத் தொகுத்துத் தந்ததற்கு நன்றி.

  நலம் தானே?

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
* யாவையும் யாவரும் தானாய்,
* அவரவர் சமயம் தோறும்,
* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,
* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
* "பாவனை அதனைக் கூடில்,
* அவனையும் கூட லாமே
"!!!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP