Saturday, January 15, 2011

தை-01: வழி பிறந்தது! கோதைத் திருமணம்!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! தித்திப்பான தமிழ்த் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பொங்கும் மங்கலம், எங்கும் தங்குக! :)

என்னாங்க? பொங்கல் பொங்கிச்சா? இன்பம் பொங்கிச்சா? கரும்பைக் கடிச்சாச்சா? தொலைக்காட்சியில் மூழ்கிட்டீங்களா?
பதிவிலோ, தொலைக்காட்சியிலோ ரொம்ப மூழ்குறவங்களுக்கு, நாளைக்குச் சிறப்புப் பூசை உண்டு! உங்கள் கொம்புகளுக்கு சிறப்பு வர்ணம் அடிக்கப்படும்-ன்னு உங்க வீட்டுல சொல்றது காதுல விழலீங்களோ? :))


கோதைத் திருமணம்! ஆண்டாள் கல்யாணம்!
பொதுவா, மார்கழி முடிஞ்சதும், திருப்பாவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று விடும்! ஆனால் தமிழர் திருநாளான தை-முதல் நாளுக்கு, கோதை பாசுரம் பாடி வச்சிருக்கா-ன்னு பல பேருக்குத் தெரியாது!

சின்னப் பொண்ணுங்களுக்குத் தை மாசம்-ன்னா உயிராச்சே! தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்! வீட்டில் தானியமும் பணமும் கதிராடும் வேளையாச்சே! பொண்ணு மனசுல, காதல் திருமணம் சதிராடாதா? :) தமிழ் மறத்தி-கிராமத்துப் பொண்ணான எங்கள் கோதை, தைப் பிறப்பைப் பாடாமல் தான் இருப்பாளா என்ன?

வாங்க, அதை வேகமாப் பார்த்துட்டு, ஆண்டாள் திருமண வைபோகத்தையும் பார்த்துவிட்டு...மிக மிக மகிழ்ச்சியாகத் திருப்பாவைப் பதிவுகளை முடித்து வைப்போம்! :)
இதோ தை-01: "தை-ஒரு" திங்கள் என்னும் முதல் நாச்சியார் திருமொழி!

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண் டலமிட்டு மாசி முன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!

உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!


வேகமான பொருள்: காமவேளே! மன்மதா! உனக்கு அனங்கன்-ன்னு பேரு! அன்+அங்கம்=உடம்பில்லாதவன்! சிவ பெருமான் நெற்றிச் சோதியில் பொடியாகிய பொடியா!

தையொரு திங்கள் - ஆண்டாள் கல்யாணத்துக்காக,
ஷைலஜா அக்கா பிரத்யேகமாக போட்டு அனுப்பிய,
வண்ணக் கோலம் (தண்-மண்டலம்). க்ளிக்கி, பெரிதாக்கிப் பார்க்கவும்!


தை மாசமான இன்று, தரையை விளக்கி, தண்-மண்டலம் என்னும் குளிர்ச்சியான கோலம் இட்டோம்! மாசியின் முந்தின நாள் வரை (அதாச்சும் தை மாதம் முழுதும்), மணற் பொடிகளாலும், வண்ணப் பொடிகளாலும், தெருவை அழகுபடுத்தினோம்! தை மாசம் என்றாலே நீ வீடு தேடி வரும் வேளையாச்சே! அதான்!

எதற்கு உயிர் வாழ்கிறேன் தெரியுமா? காமன் என்னும் உன்னையும், சாமன் என்னும் உன் தம்பியையும் தொழுதேன்! ஏன் தெரியுமா?
பொறிகள் பறக்கும் அழகிய சக்கரத்தைக் கையில் பிடிச்சிருக்கானே...அந்த வேங்கடவன்! "அவனுக்கு-நான்" என்று உன் கரும்பு வில்லால் விதிப்பாயே!பொதுவா, மார்கழி நோன்பு முடிஞ்சதும், ரெண்டு மாசம் கழிச்சி, பங்குனியில் தான் (பங்குனி உத்திரம்) கோதைத் திருமணத்தைக் கொண்டாடுவார்கள், சொந்த ஊர்களான திருவரங்கம் மற்றும் வில்லிபுத்தூரில்!

ஆனால் வேங்கடவன்? எப்படா இவள், "வங்கக்கடல் கடைந்த" கடைசிப் பாசுரம் பாடி முடிக்கப் போகிறாளோ?-ன்னு காத்துக்கிட்டு இருக்கான் போல! வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! நோன்பு முடிச்ச கையோடு.....அவளை-அவன்.....அடுத்த நாளே லபக்! :)

இன்றும் திருமலை-திருப்பதியில், தைத் திருநாளான பொங்கலில் தான் ஆண்டாள் திருமணம்-கோதைப் பரிணயம் என்று கொண்டாடப்படும்! காலையில் வேங்கட மாப்பிள்ளை பாரி வேட்டை எல்லாம் நடத்தி, வீரம் கொப்பளிக்க வருவாரு! வந்து கைத்தலம் பற்றுவாரு! மாலை மாற்றல் அற்புதமாக நடக்கும்!
இவ்வளவு நாள், தான் சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!

ஆண்டாள் மாலை மாற்றல் காட்சியை, திருமதி. விசாகா ஹரி, சூப்பர் பாட்டு ஒன்றினால் விவரிப்பதைக் கேளுங்கள்! (மாலை சூட்டும் அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்துக் கொடுத்துள்ளேன்!)


கேட்பதற்கு மட்டுமான ஒலிச்சுட்டி!
மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
மாலடைந்து, மதிலரங்கன், மாலை அவர்தம் மார்பிலே,
மையலாள், தையலாள், மாமலர்க் கரத்தினாள்,

ரங்க ராஜனை, அன்பர் தங்கள் நேசனை,
ஆசி கூறி, பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட,
அன்புடன், இன்பமாய், ஆண்டாள் கரத்தினாள்,

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
பா-மாலை சாற்றினாள்! பூ-மாலை மாற்றினாள்!


அப்படியே கற்பனை பண்ணிப் பாருங்க அந்த அழகுத் திருக்கல்யாணத்தை!

*பெரிய திருவடியான கருடன், எங்கள் மாப்பிள்ளையை, வாயு வேகத்தில் பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2042, தைத் திங்கள் முதல் நாள் (15-Jan-2011), கார்த்திகை நட்சத்திரம் கூடிய தைப்-பொங்கல் நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,

* மதுரை-வில்லிபுத்தூர், பட்டர் பிரானின் செல்ல மகள்,
திருநிறை செல்வி. கோதைக்கும்
* திருநாடுடைத் தலைவன், அமலனாதிப் பிரான்,
திருநிறை செல்வன். அரங்கனுக்கும்
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* அன்பர்கள்-அடியார்கள் நீங்கள் எல்லாரும்... சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,
* ஆண்டாள்-அரங்கன் திவ்ய தம்பதிகளை,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறும்,

* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

- இப்படிக்கு,
மாதவிப் பந்தல்: கோதையின் ஆருயிர்-நட்புச் சமூகம்.


வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட....
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத...
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்ட...
நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்-தன்னை
காப்பு நாண் கட்ட...
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுத...
(கெட்டி மேளம், கெட்டி மேளம்.....)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்ற...
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மா-களிறு அன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்ய...
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க...
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்ட...
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு, ஆனைமேல்
மஞ்சனம் ஆட்ட...
(ஆயனுக்காகத் தான் "கொண்ட மணாவினை")
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!


இத்துடன், திருமகள் திருமணத்தோடு கூடிய திருப்பாவைப் பதிவுகள்...
மாதவிப் பந்தலில் நிறைவாகின! கனவுகள் நனவாகின!!


யம்மாடி கோதை,
"கனாக் கண்டேன் தோழீ நான்"-ன்னு முடியும் உன்னோட வரிகளை, ஒவ்வொரு பாட்டிலும் கட் பண்ணி விட்டேன்! வார்த்தைகளில் கூட, உன் ஆசையும்-கல்யாணமும், "கனா/கனவு" என்பதாக அமையாமல், "நனவு" என்றே இருக்க வேணும்! அதான்! "
வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்"-ன்னு எழுத மனசு வரலை! "வந்தென்னைக் கைத்தலம் பற்ற"...என்றே சொல்லத் தோனுது! Sorry dee, for the edit!

என் தோழீ...என்னை ஒரு காலும் மறக்க மாட்டேன் என்று என் முகம் பார்த்துச் சொல்லிவிட்டு...உன்னவனுடன், முகமெல்லாம் இன்பமாப் போய் வாடீ...

பாம்பணையில், உன் பிஞ்சுக் கால் விரல்கள் அழுத்தி,
பரபர என்று மேல் ஏறி, மால் ஏறி,
எங்கள் செல்வ மகள், தென்னரங்கச் செல்வனைச் சேர்ந்தாள்! சேர்ந்தாள்!

அவனுக்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு!

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!
பொங்கலோ பொங்கல்! இன்பமே பொங்கல்!

8 comments:

 1. Happy Pongal.
  Nethikku Aandal-PSP kalyaanam paarkkalai :(
  Aanal, "mooda nei peydhu mulangai vazhi vaara" kalyana sappadu nalla saapitten! :))
  Venkatavan-Aandal, ok!
  Aandal sannathi illadha ooru-la thaayarudan thirumanam-nu solli ketturikken.
  Aanal, namma PSP irukkare!
  avarukku "konjam" over!!
  Rangamannar irundhum, "naan irukken, naan irukken"-nnu kudu-kudu-nnu vandhu kalyaanam pannikitaaru!
  Ranga irukkirappa ivarukku enna velai anga????? :))
  Idhula vera margazhi full-a eppa paarthaalum green vastram!
  Konjam, illa, rombave over-a pogala??? :))

  ReplyDelete
 2. one more thing about PSP: gajendra moksham kooda ivar dhaan pannuvaaru!
  Anga, varadhar oruthar irukkare, avar-la "Gajendra moksham" pannanum?
  ippadi niraya people solli keturikken. :)
  ellam "naan dhaan irukkene"-nu over aasai!
  edhaiyum vittukodukaama ellam "naan irukken, naan irukken"-nu pannikiraaru indha PSP!
  Konjam nammaiyum ippadi paarthukatum-"naan un koodave irukken"-nu! :))

  ReplyDelete
 3. @KRS: உங்கள் பதிவை படித்தவுடன் என் உடல் எல்லாம் புல்லரிக்கிறது. என்னை போன்ற (ஆன்மீக?) கத்து குட்டிகளுக்கு உங்கள் பதிவுகள் ஓர் உன்னத வழிகாட்டி; உங்கள் பதிவு - எனக்கு இறைவன் கொடுத்த வரம்!

  // என்னை ஒரு காலும் மறக்க மாட்டேன் என்று என் முகம் பார்த்துச் சொல்லிவிட்டு...உன்னவனுடன், முகமெல்லாம் இன்பமாப் போய் வாடீ... //
  இந்த வைரவரிக்கு எதை கொடுத்தாலும் ஈடாகாது... ரொம்ப மனசை தொடுறீங்க. மனசு நிறைவா இருக்குது. நான் மட்டும் இந்நேரம் NEWYORK Mayorஆகா இருந்தால் அந்த பதிவியை உங்களுக்கு கொடுத்து இருப்பேன். இருப்பினும் இப்போது என் இதயத்தில் இடம் கொடுக்கிறேன்.

  இந்த வருடமும் எந்த இடையூறும் இல்லாமல் என் மார்கழி (பாவை) நோன்பை முடித்து வைத்த என் இறைவனுக்கும், என் ஆசான் மாணிக்கவாசகருக்கும், என் சகோதரி கோதைக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 4. //Rangamannar irundhum, "naan irukken, naan irukken"-nnu kudu-kudu-nnu vandhu kalyaanam pannikitaaru!
  Ranga irukkirappa ivarukku enna velai anga????//

  ஹா ஹா ஹா
  கோதைக்கு அரங்கன் (மன்னாதன்) முக்கியமா? விருந்தாவனத்தே கண்டோமே-ன்னு பாடிய PSP முக்கியமா? யார் இதில் கண்ணன்? :)

  ReplyDelete
 5. @kk
  //edhaiyum vittukodukaama ellam "naan irukken, naan irukken"//

  "மாம்" ஏகம் - இப்போ பொருள் புரிஞ்சுதா? :)

  ReplyDelete
 6. // Prasad said...
  @KRS: உங்கள் பதிவை படித்தவுடன் என் உடல் எல்லாம் புல்லரிக்கிறது. என்னை போன்ற (ஆன்மீக?) கத்து குட்டிகளுக்கு உங்கள் பதிவுகள் ஓர் உன்னத வழிகாட்டி; உங்கள் பதிவு - எனக்கு இறைவன் கொடுத்த வரம்!//

  அச்சிச்சோ! என்ன பிரசாத் இது? இறைவன் முன் யாருமே கத்துக்குட்டி இல்ல! கத்தாத குட்டியா இருக்கோம்...மா என்று கத்தும் குட்டியா மாறணும்! அவ்ளோ தான்! :)

  // இந்த வைரவரிக்கு எதை கொடுத்தாலும் ஈடாகாது... ரொம்ப மனசை தொடுறீங்க. மனசு நிறைவா இருக்குது//

  நன்றி! மனம் நிறைவது நல்லது தான்! மனதோட எழுதினாலும் படித்தாலும் மனம் நிறையும்!

  //நான் மட்டும் இந்நேரம் NEWYORK Mayorஆகா இருந்தால் அந்த பதிவியை உங்களுக்கு கொடுத்து இருப்பேன். இருப்பினும் இப்போது என் இதயத்தில் இடம் கொடுக்கிறேன்//

  நீங்க என்ன வைரமுத்துவா? நான் என்ன முதல்வரா? :) இம்புட்டு புகழ்ச்சியெல்லாம் தேவையா? :)

  //இந்த வருடமும் எந்த இடையூறும் இல்லாமல் என் மார்கழி (பாவை) நோன்பை முடித்து வைத்த என் இறைவனுக்கும், என் ஆசான் மாணிக்கவாசகருக்கும், என் சகோதரி கோதைக்கும் என் உளமார்ந்த நன்றிகள்//

  ஆங்! இது சரி, வாழ்த்தையும் நன்றியும், இவர்களுக்கே சொல்லுவோம்! நேயத்தே நின்ற நிமலன் என்பது தானே மாணிக்க வாசகரின் சொல்லாட்சி?

  ReplyDelete
 7. @KRS: Yes..
  one more thing:
  "nayaganai"
  "ambarame...selva baladeva" (Balaramar)
  "Nandagopalan marumagale nappinnai) Rukmini Thaayar....
  ippadi correct-aa PSP-kku porundhum thirupaavai. (ippa ranga ennai adikka varaporaaru)
  But, still PSP has insecurities :)))
  That's why He is going on wearing green :))
  That's why i said in kannan paatu comment: Perumal may be in 106 temples, but He has one Aandal only :))

  ReplyDelete
 8. அற்புதம் .. மிக மிக அருமை... விசாக ஹரியின் ஓசையை கேட்க வைத்தது தங்க மகுடத்தில் வைரம் பதிக்க செய்தது ... மிக்க நன்றி இந்த சேவைக்கு :))

  அடியேன்
  கண்ணன்

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP