Saturday, May 07, 2011

ஓட்டல் கறியைக் கேட்டவனே! ஜம்புலிங்கமே ஜடா ஜடா!!

சிவச் செம்மல்களான திருத்தொண்டர்களின் கதையை, பூசிய புனைவுகள் அதிகம் இல்லாமல்...மூலநூலில் இருப்பது போலவே...
இக்கால/எக்கால நிலைக்கும் ஏற்றாற் போல் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக.....

சிறுத்தொண்ட நாயனார் (எ) பரஞ்சோதி...அவரின் நினைவுநாள்= சித்திரை மாதம் பரணி (May-03,2011)

"காசே தான் கடவுளடா" படம் பார்த்து இருப்பீங்க! அதில் தேங்காய் சீனிவாசன் ஆடும் சாமியார் வேடம் தான் படத்தின் நாடி நரம்பான காமெடியே! படத்தின் ஹீரோவும் தேங்காய் சீனிவாசனே! முத்துராமன் அல்ல! :) படத்தில் அவர் எடுத்து விடும் பாட்டு செம கலக்கல்!
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா :)

இந்தப் பாட்டில் ஒரு வரி வரும்! அந்த நாயன்மாரைத் தான் இன்று பதிவிலே பார்க்கப் போகிறோம்!
சைவப் பொருளாய் இருப்பவனே அன்று
ஓட்டல் கறியை கேட்டவனே....
ஹிஹி...பிள்ளைக்கறியை கேட்டவனே...
அதே அதே சபாபதே! அதே அதே சபாபதே!

ஆகா! பிள்ளைக் கறியைக் கேட்கலாமா? அப்படியே கேட்டாலும் கொடுத்து விடுவதா? தப்பில்லையா?
Pedophile, Infanticide-ன்னு எல்லாம் கொதிச்சி எழ மாட்டாங்களா? சல்மான் கான் தின்ற மானே அவரை ஓட ஓட விரட்டும் போது, பிள்ளைக் கறியின் கதி???

* இறைவனே வந்து பாட்டை எழுதினாலும் குற்றம் குற்றமே-ன்னு சொன்ன உறுதி,
* இறைவனே வந்து பிள்ளைக் கறி கேட்டால் குற்றம் குற்றமே-ன்னு சொல்ல முடியாமல் போனது ஏன்??



அவன் பெயர் "வாதாபி கொண்ட" பரஞ்சோதி! அறிவாளி + வீரன்!
கற்ற கல்வியோ = ஆயுர்வேதம்; உற்ற கலையோ = சிற்ப வேலை; செய்த தொழிலோ = போர்! :)
இப்படியான கலவையான பரஞ்சோதி, பரணி பிறந்தான் தரணி ஆள்வான்!

சோழ வளநாடான திருச்செங்காட்டங்குடி (கணபதீஸ்வரம்) தான் அவனோட சொந்த ஊர்! திருவாரூர் பக்கம்! சோழத்தில் பிறந்தவன் பல்லவத்துக்கு வருகிறான்....வேலைக்கு!
காஞ்சியில் ஆயனாரின் மகளான சிவகாமியைக் காப்பாற்றி, புலிகேசியிடம் பிடிபட்டு-விடுபட்டு, மகேந்திர வர்ம பல்லவன் மனதிலே இடம் பற்றி, பல தீரச் செயல்களால் பல்லவத் தளபதி ஆகின்றான்!

பின்பு நரசிம்ம வர்ம பல்லவனுடன் சாளுக்கியம் சென்று, வாதாபி நகரத்தையே கொளுத்தி, அங்கிருந்த "வாதாபி கணபதியை" தமிழகம் கொண்டு வருகிறான் இந்த வெற்றி வீரன்! - வாதாபி கணபதிம் பஜேஹம்!
விநாயகரையே அறியாத தமிழகம், இதன் பின்பு தான் விநாயக வழிபாடு கொண்டது என்று சொல்வாரும் சிலர் உண்டு! ஆனால் அதற்குப் போதுமான தரவுகள் இல்லை!

இந்தப் போரின் கொடூர உக்கிரத்தால் மிகவும் மனம் சலித்துப் போனான் பரஞ்சோதி! மன அமைதியை விரும்பிச் சொந்த ஊருக்கே திரும்புகின்றான்! சிவ பக்தியிலே திளைக்கின்றான்!
திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்களைக் காஞ்சியில் கேட்டுக் கேட்டு...
தெய்வத் தமிழ் ஓதுவாரான அப்பரின் பதிகச் சக்தி, அவன் மனசிலே பதிவுச் சக்தியாகி விட்டது!

தன் தந்தையின் அருமைத் தளபதியான பரஞ்சோதிக்கு நரசிம்ம வர்ம பல்லவனும் விடை கொடுத்து அனுப்புகின்றான்!

ஆனால் பெரிய புராணம் பாட வந்த சேக்கிழார் சுவாமிகள், என்ன காரணமோ தெரியலை...சில பல புனைவுகள்....

வாதாபியை வென்றதற்கு பரஞ்சோதியின் சைவப்பிடிப்பு தான் காரணமாம்! அதை லேட்டாக உணர்ந்து கொண்ட மன்னன்...........
"அச்சோ, ஒரு நல்ல சிவபக்தரை அரசியலிலும் போரிலும் நாம் ஈடுபடுத்தி விட்டோமே" என்று பயந்து போய், அவருக்கு விடை கொடுத்து விடுகிறானாம்!
வாதாபியை எரித்த "கருணையே உருவான" பரஞ்சோதியும் சொந்த ஊருக்குத் திரும்பி, வழக்கம் போல் சைவத்தில் திளைக்கிறார் என்று மாற்றி எழுதுகிறார் :)

இதனால் சாதித்தது என்ன?
* ஒரு ஊரையே கொளுத்தவல்ல தளபதியின் மன மாற்றம்-அகவியல் மறைந்து விடுகிறது!
* அப்பரின் தேவாரத் தமிழ்ப் பதிகம் மனத்திலே தோற்றுவிக்கும் மாற்றம் மறைந்து விடுகிறது!
* ஒரு போர் வெறியனைக் கூட ஈசனின் அன்பனாக மாற்ற வல்ல அகவியல் மாற்றம் பின்னுக்குப் போக...
* சிவபக்தர் தாமாக எதுவும் எரிக்கலை! மன்னன் தான், சிவபக்தர் என்று தெரியாமல் அவரைத் தளபதியாக வைத்திருந்தான் என்ற புனைவு முன்னுக்கு வந்து விடுகிறது!

ஏன் இப்படி?
சைவ வேளாளப் பெருந்தகையான "தெய்வச்" சேக்கிழார் இப்படிச் செய்ய மாட்டாரே?
சேக்கிழார் சுவாமிகளின் கால கட்டம், குலோத்துங்க சோழனின் கால கட்டம்!

அதற்குச் சில நூற்றாண்டு முன்பு தான், சைவ சமயத்தை, சமண-பெளத்த சமயங்களிடம் இருந்து மீட்டு வென்று இருந்தன பக்தி இயக்கங்கள்!
சிறப்பான சமண-பெளத்த சமயங்கள்...ஒரு கட்டத்தில் அரசாங்கத்தை மட்டுமே சார்ந்து போய், சோர்ந்து போய் விட, பொதுமக்கள் இயக்கமாக பக்தி இயக்கம் வென்று காட்டியது!

ஆனால் விடுதலை பெற்ற பின் காங்கிரசைக் கலை என்று காந்தியடிகள் சொன்னது போல் செய்யாமல்...வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள.....
கிடைத்த "வெற்றி"யை "வெறி"யாக்கிக் கொள்ளச் சிலர் முனைந்து விட்டனர்! அரச-அந்தண-வேளாள மேட்டுக்குடிகள்!
("வேளாள"-ன்னு எழுதியமைக்கு வீட்டில் இன்னிக்கி திட்டு நிச்சயம் :)


"ஈசனுக்காக" என்பது போய்...
"சைவத்துக்காக" எந்தத் தியாகமும் செய்யத் தயாராய் இருக்கணும் என்று பல புனைவுகள் உருவாக்கப்பட்டு விட்டன!

* சமயத்தின் பேரால் மனைவியைக் கேட்டாலும் கொடுக்கும் மனசு
* பிள்ளையைக் கேட்டாலும் கொடுக்கும் மனசு
* சிவன் சொத்து குல நாசம் என்ற பயமுறுத்தல்...போன்ற பின்னல்கள் எல்லாம் பின்னப்பட,
ஏற்கனவே இருந்த திருத்தொண்டர்களின் உண்மையான கதையும் திரிந்து போய் ஆங்காங்கே மாற்றம் கண்டுவிட்டன! :((

புனிதா (காரைக்கால் அம்மை), கண்ணப்பன், நந்தனார், நீலகண்டக் குயவனாருக்கு ஈடாக...
* சுற்றம் கொன்ற கோட்புலியார்,
* தன் மனைவியையே ஈந்த இயற்பகை,
* பிள்ளையை வெட்டித் தரத் துணிந்த பரஞ்சோதி,
* தந்தையின் காலை வெட்டிய சண்டேசர்...

தொண்டர்களின் இயற்கையான வாழ்க்கை நிகழ்ச்சிகளின் மேல் புனைவுகள் ஏற்றப் பட்டு, ஏற்றம் பட்டன!
நந்தனாரைத் தில்லைத் தீட்சிதர்கள் "வாங்கோ வாங்கோ" என முகமும் அகமும் மலர வரவேற்றனர் என்றும் எழுதப்பட்டது!

"இது உங்க சிதம்பரம், மிஸ்டர் நந்தன்; நீங்க தாராளமா உள்ளே வரலாம்; எங்களுக்கு அப்ஜெக்ஷனே இல்லை! பொன்னம்பலம் Always Free For All;
ஆனா நெருப்பில் இறங்கிப் "புனிதப்"படுத்திக்கிட்டு தரிசனம் பண்ணணும்-ங்கிறது பகவத் சித்தமாப் போயிட்டதே" - இப்படிப் புனைந்து நலம் உரைக்கப்படுகிறது சேக்கிழாரின் பெரிய புராணத்தில்! அட முருகா! :(

புனிதா, கண்ணப்பன், நந்தனார், நீலகண்டக் குயவனார் போன்றோரின் மாசில்லாத "சிவ-அன்பு" ஒரு புறம் இருந்தாலும்......
சமயத்தை நிலை+நாட்டணும்-ன்னா, வெறுமனே கருணை போதுமா? சிவ-"அன்பு" மட்டும் போதுமா? அதான் இப்படியான "மதப் பிடிப்பு"! :(

ஏனோ தெரியலை...ஆழ்வார்களின் கதைகளில் இப்படியான அதீதப் புனைவுகள் "அதிகம்" இருப்பதில்லை, அந்தச் சமயத்திலே பல அபத்தங்கள் இருப்பினும்!
So Called தாழ்ந்த குலத்து ஆழ்வாரை அடித்து ரத்தம் வரச் செய்த அர்ச்சகர்-ன்னு ஒளிக்காமல் மறைக்காமல் வருகிறது!
இறந்தவரை உயிர்ப்பித்தல், மண்ணைப் பொன்னாக்குதல், "மேஜிக்"/பரிகார விஷயங்கள் அதிகம் இருப்பதில்லை! ஒழுங்கா கதை எழுதலை போல! அப்படி எழுதி இருந்தால், இன்னும் ஜோராப் பரவி இருக்குமோ என்னவோ!

அதனால் தானோ என்னவோ...சைவக் குடும்பத்தில் பிறந்தூறிய என்னிடம்...நாலாயிர ஈர்ப்பு...வேணாம்...தமிழ்மண விருதுப் பதிவிலேயே பார்த்தோமே...சொன்னால் விரோதமிது...அவரவர்களே உய்த்து உணரட்டும்!
எனக்கு இருக்கவே இருக்கு புனிதாவின் வாழ்க்கை! கிட்டத்தட்ட அவளும் நானும் ஒன்னே!

அது, ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, சமண-பெளத்த சாரணர்களோ...எவராயினும், அடியவர்கள் அடியவர்களே!
புனைவைச் செய்தவர்கள் இவர்கள் அல்லர்! இதைப் புரிந்து கொண்டாலே போதும்!
புனைவை மட்டுமே படித்துவிட்டு, "சீ இவனெல்லாம் நாயன்மாரா?" என்று கோட்புலி நாயானார் பதிவில் வீசியது போல், அவசரப்பட்டு ஏசி விடாதீர்கள்!
புனைவுகளால் அடியார்களின் உண்மையான பெருமைக்கு மாசு வந்து விடாது! அவர்களின் ஞான-பக்தி வைராக்கியம் அப்படி! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!


நாம் கதைக்கு வருவோம்...பரஞ்சோதி எப்படிச் "சிறுத் தொண்டன்" ஆனான்?
போரின் குற்ற உணர்வால் மனம் வெதும்பிய பரஞ்சோதி, கிராமத்தில் மீதி வாழ்நாளைக் கழித்தான்...
பல சிவனடியார்களிடம் பணிந்து நடக்கத் தொடங்கினான்! நாவுக்கு-அரசான அப்பர் பெருமானின் பணிவைக் கண்டவன் ஆயிற்றே!

ஆனாலும் முன்னாள் தளபதி என்கிற பயங் கலந்த மரியாதை மற்றவர்களுக்கு இருக்கத் தான் செய்தது!
இதனால் அடியார்கள் உடனான நெருக்கம் குறைவதைக் கண்ட பரஞ்சோதி, தன்னை இன்னும் தாழ்த்திக் கொண்டான்! "தொண்டன்" என்று கூடச் சொல்லாது, "சிறிய தொண்டன்" என்றே வழங்க...அதுவே "சிறுத்தொண்டர்" என்று ஆகிப் போனது!

அன்று ஒரு நாள்...
பரிவதில் ஈசனைப் பாடி, அன்பே சிவமான ஈசன்...பைராகி (பைரவ சிவயோகி) வேடம் பூண்டு கொண்டார்! பரஞ்சோதி வீட்டு வாசலின் முன்னே பசியோடு...பிட்டுக்கு மண் சுமந்தும் பசி ஆறாத பெருமான்!

சந்தன நங்கை என்னும் பணிப்பெண்: "வாங்க ஐயா! எஜமான் வீட்டில இல்லை! சிவனடியாருக்கு உணவிட்ட பின்னர் தான், தானும் உண்பாரு! அதான் கோயில் பக்கமாப் போய் இருக்காரு! நீங்க உள்ளே வந்து உட்காருங்க, இதோ வந்துருவாரு!"

பைராகி: "நான் உள்ளே வர முடியாது! உள்ளே அவன் மனைவி தனியாக இருக்கிறாள்!"

வெண்காட்டு நங்கை (பரஞ்சோதியின் மனைவி..ஓடோடி வந்து): "சுவாமிகளே, இப்படி அமருங்கள்! இதோ வந்து விடுவார்! பசியாய் இருப்பின் பாதகமில்லை, அவர் வராமலேயே உணவிடுகிறேன்! வாருங்கள்"

பைராகி: "இல்லை பெண்ணே! அது சரி வராது! அவன் வந்தால் என்னை ஆலயத் திண்ணையில் வந்து பார்க்கச் சொல்"


அவன் வந்தான், அவள் சொன்னாள்,
அவன் ஓடினான், அவரை நாடினான்,
ஆனால் பைராகியோ அவன் வாழ்விலே பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார்!

"நாங்கள் அகோரியைப் போல! அதிகம் சாப்பிட மாட்டோம்! ஆனால் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டும் சாப்பிடுவோம்! எனக்கு மனித மாமிசம் வேண்டும்! அதுவும் இளம் பிஞ்சு மாமிசம்! வளமான தலைச்சன் பிள்ளையின் வறுத்த கறி!
அதெல்லாம் உங்க ஊரில் கிடைக்காது! சுடுகாட்டுப் பக்கம் தான் கிடைக்கும்! என் பசி என்னோடு போகட்டும்! உனக்கேன் வம்பு? உன்னால் அதெல்லாம் தர முடியாது! தொந்தரவு செய்யாமல் போய்விடு!"

போய்விட வேண்டியது தானே!
என்ன திமிரு! இளம்பிஞ்சு மாமிசமாம் - பிள்ளையின் வறுத்த கறியாம்!
என்னமோ வடை கறி, சால்னா, முட்டைப் போண்டா கேக்குறாப் போல கேக்குறாரு! அயோக்கிய யோகி! அப்படியே அலேக்காப் பிடிச்சி ஜெயிலுக்குள்ளாற போட வேணாமா? :)

பரஞ்சோதி, ஒரு வகையான குற்ற உணர்விலேயே இருப்பவன்! ஒரு ஊரையே கொளுத்தியவன் ஆயிற்றே! என்ன காரணமோ தெரியலை, அந்த க்ஷத்ரிய இரத்தம் இன்னும் ஒரு ஓரமாத் துடிக்குது போல;
தான் இப்போது கடைபிடிக்கும் பிராயச்சித்தம்-சைவக் கொள்கையைக் காப்பாத்தணும்-ன்னு நினைச்சிக்கிட்டு ஒப்புக் கொண்டான்! ஆனால்.....?

பிள்ளைக் கறிக்கு எங்கே போவது?
பகுத்தறிவு அரசியல்வாதியா இருந்தா, யாருக்கும் தெரியாம, தேர்தலுக்கு முன்னாடி நரபலி-பிள்ளைப்பலி கொடுத்திருக்கலாம்! ஆனா பரஞ்சோதிக்குத் தான் பகுத்தறிவு பத்தாதே!
இன்னொருத்தர் பிள்ளையைக் கோழி அமுக்கறாப் போல அமுக்கிக் காவு கொடுப்பதற்குப் பதில்...தன் பிள்ளையையே காவு கொடுக்கத் துணிஞ்சிட்டான் பாவி..(அ) முன்னாள் தளபதி!

ஐயோ, அவன் மனைவி என்ன பட்டாளோ, எப்படி அழுதாளோ, நமக்குத் தெரியாது! ஊருக்கும் தெரியாது!
ஊரை எரித்த வெறி அடங்கி, அதுவே கொள்கை வெறியாக மாறினால்? = இப்படித் தான் ஆகும்!

வெட்டத் "துணிந்தான்"......வெட்டிப் பையலான பரஞ்சோதியின் மன உறுதிக்கு ஈசனே பயந்து விட்டார்...! இப்படியும் ஒருவனா?

அன்பே சிவம் என்று ஆன பின்னரும், பழைய குற்றவுணர்ச்சியால் இன்னமும் தவிக்கும் இந்த "வெறி"யனை இப்படியே விட்டு வைக்கக் கூடாது என்று தன்னிடமே சேர்த்துக் கொண்டான் கயிலையான்!
சீராளா என்று அந்தப் பிஞ்சின் பேர் சொல்லி அழைக்க, பிள்ளை-தாய்-தந்தையைத் தன் கயிலையில் அணைத்து இணைத்துக் கொண்டான் ஈசன்!


மூலநூலான திருத்தொண்டர் திருவந்தாதியில் இவ்வளவே இருக்க....
ஏதோ வெட்டிச் சமைத்தே விட்டது போல் "நாடக பாவனை" சேர்த்து... "வரலாறு" ஆக்கி விட்டார் சேக்கிழார் சுவாமிகள்!

என்ன செய்வது.......குலோத்துங்க சோழச் சக்கரவர்த்திகளின் கீழ், அரச-அந்தண-வேளாள முறைமைக்கு, எங்கள் ஈசனையே காவு கொடுத்தாவது சைவத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும் அல்லவா!
மனம் வலித்தால் இந்தப் பத்தியைத் தவிர்த்து விடுங்கள்! ஏன்-னா இனி எழுதுவது சேக்கிழார்...

பிள்ளைச் சீராளனைப் பள்ளியில் இருந்து அவசர அவசரமாய் அழைத்து வர...
பிள்ளைச் சீராளனைத் தாய், தன் இரு தொடையிலே தாங்க...
பிள்ளைச் சீராளன் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சிரிக்க...
பிள்ளைச் சீராளன் கழுத்திலே ஒரே வெட்டில்......

இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கி,
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்க, காதலனும்
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்ய,
தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார்
(12ஆம் திருமுறை: பெரிய புராணம்)

பிள்ளைக் கனி-அமுதை,
பிள்ளைக் கறி-அமுதாய்ப் படைக்க...
இவ்ளோ தான் சோறா? "தலைக்கறி இல்லையா?"
-இப்படிக் கேட்டாராம் சைவச் செம்மலான சிவபெருமான்!

என் முருகா! அசுரன் என்று கூடப் பாராது, வரம் வழங்கும் நம் குலத்தந்தை ஈசனா இப்படிக் கேட்பார்?
அவனவன் சுக போகத்தை எடுத்துக் கொள்ள, விஷத்தை எடுத்து உண்ட கண்டனா இப்படிக் கேட்பார்?...ஆனாலும் கேட்டாராம்! பெரிய புராணத்தில் சொல்கிறார்கள்!
கறி செய்யும் போது பெரும்பாலும் தலையை நீக்கி விடுவது வழக்கம் தானே! பெற்றவர்கள் சிவயோகிக்கு என்ன பதில் சொல்வது-ன்னே தெரியாமல் பரிதவிக்க...
சிறந்த சைவக் குடிப்பிறந்த பெண்ணான வேலைக்காரி சந்தனநங்கை, "இப்படி ஆனாலும் ஆகும்-ன்னு எனக்குத் தெரியும்! எது-ன்னாலும் சைவ யோகிகளின் மனம் கோணவே கூடாது! அதான் ஒதுக்கிய தலையை, யாரும் அறியாமல், நான் தனியாக கறி சமைத்து வைத்துள்ளேன்" என்று கூறினாளாம்! :(

சரி...இத்துடன் முடிந்து விட்டதா?

"தனியாக உணவருந்திப் பழக்கமில்லை" என்று சிவயோகி சொல்ல, தன் பிள்ளையின் கறியைத் தானும் உண்ணத் துணிந்த பரஞ்சோதி....!
"உங்கள் பிள்ளையை வரும் போது பார்த்தேனே, அவனையும் கூப்பிடுங்கள்" என்று சைவ யோகி சொல்ல....சீராளா என்று அவரே கூவி அழைக்க...

பிள்ளையோ மாயமாய் ஓடி வர...யோகி மறைந்தார்! வேலைக்காரி உட்பட, அந்த வீட்டுக்கே சைவப் பெருவாழ்வு கிட்டியது! சுபம்!!

இது வரையாச்சும் கதை! போனால் போகுது...
ஆனால் இன்றளவும், இந்தப் "படையல்" செங்காட்டங்குடியில் நடத்தப்படுகிறது!
"சீராளங்கறி" என்றே "பிரசாதத்துக்கு" பெயர்! :(

பயப்படாதீங்க...பிள்ளைக் கறி அல்ல! மரக் கறி தான்!
வருஷத்துக்கு ஒரு நாள் மட்டுமே இது "நிவேதி"க்கப்படும்! இதை உண்டால் குழந்தைப் பாக்கியம் உண்டாகும் :(
இன்னொருத்தன் பிள்ளையின் பேரால் கறி - அதை உண்டால் தனக்குப் பிள்ளை பிறக்கும் - அடா அடா, எவன் பிள்ளையோ நமக்கென்ன கவலை? அவரவர் வாழ்வு அவரவர் கையில்! "பிரசாதத்துக்கு" கூட்டம் கூட்டமாகப் "பக்தர்கள்".... :((

உங்க பிள்ளையின் பேரால் அர்ச்சனை மட்டும் தானே பண்ணுவீங்க! ஆனா உங்க பிள்ளையின் பேரால் கறி போடுறாங்கன்னா?...
ரவி கறி, ராகவன் கறி-ன்னு போட்டா, சும்மா விட்டுருவீங்களா? ஆனால் சீராளங் கறி-ன்னா மட்டும் நமக்குப் "பிரசாதம்"-ல்ல? Hypocrisy? முருகா! :(

சிறுத்தொண்டன் (எ) பரஞ்சோதி செய்யாத பலவும் செய்ததாகச் சொல்லி, ஒரு எளிய அடியவனின் வாழ்வில் நடந்த ஒரு துன்பியல் சம்பவத்தை...
கன ஜோரான நாடகமாக மாற்றி விட்டோம்! உம்ம்ம்ம்....சிவம் பெரிதா? சைவம் பெரிதா?? = மேன்மை கொள் "சைவ நீதி" ஓங்குக உலகமெல்லாம்!

இன்றளவும் "சீராளன் கறி" ஆலயத்தில் தேவை தானா? என்பதை அவரவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்!!
முருகா, நம் காதலை எப்போதும் உடனிருக்கும் நீ மட்டுமே அறிவாய்! உன் மனச்சாட்சியே என் மனச்சாட்சி!

* சிவச் செம்மல்களான திருத்தொண்டர்களின் கதையை....
* பூசிய புனைவுகள் அதிகம் இல்லாமல்...
* மூலநூலில் (திருத்தொண்டர் திருவந்தாதி) இருப்பது போலவே...
* இக்கால/எக்கால நிலைக்கும் ஏற்றாற் போல் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக.....
இன்று சிறுத்தொண்ட நாயனார் (எ) பரஞ்சோதி...அவரின் நினைவுநாள்-குருபூசை!!

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கும்
மெய் அடியார்கள் திருவடிகளே சரணம்!

குழந்தை, சீராளன் திருவடிகளே சரணம்!!

சைவப் பொருளாய் இருப்பவனே - அன்று
ஓட்டல் கறியைக் கேட்டவனே....
ஹிஹி...பிள்ளைக் கறியை கேட்டவனே...
அதே அதே சபாபதே!
அதே அதே சபாபதே!

30 comments:

  1. 1. கோவி அண்ணாவுக்கு இப்பதிவைச் சமர்ப்பிக்கின்றேன்! :)
    2. கோட்புலி நாயனார் பதிவில், "இவனா அடியவர்?" என்று என்னிடம் சீறிப் பாய்ந்த, என் தம்பி வெட்டிப்பயல் பாலாஜிக்கும் இப்பதிவைச் சமர்ப்பிக்கின்றேன்!

    ReplyDelete
  2. குழந்தையை அரிஞ்சாளா!!! அது என்ன கேரட்டா பீன்ஸா... ஐயோ பெருமாளே நெனைச்சு பார்த்தாலே உடம்பு நடுங்குதே... இதெல்லாம் மெய்யாகவே நடந்திருக்க வாய்ப்பும் உண்டோ?
    முன்னாள் தளபதி துணிந்தாலும் அவர் மனைவி நிச்சயம் சும்மா விட்டிருந்திருக்க மாட்டார்

    ReplyDelete
  3. போர் உக்கிரத்தால் மனஞ்சலித்த பரஞ்சோதி =தென்னிந்திய அசோகர்?
    இதற்குமேல் படிச்சதெல்லாம்
    'ஏண்டாப்பா படிச்சோம்?'ன்னு நினைக்கவச்சது.

    ReplyDelete
  4. கருத்தும், கருத்தின் ஆழமும், விளக்கமும் மிக மிக அருமை!
    மேன்மை கொள் சைவ நீதி ஓங்குக உலகமெல்லாம்

    ReplyDelete
  5. @இந்திரன்
    கேரட்டா? பீன்ஸா? - என்ன ஒரே சைவமாச் சொல்றீக? அசைவம் கிடையாதா? :)

    //இதெல்லாம் மெய்யாகவே நடந்திருக்க வாய்ப்பும் உண்டோ?//

    சிறுத்தொண்டர் மெய்யாலுமே இருந்தார்! பிள்ளையைக் கொடுக்கத் துணிந்தார்! அவ்ளோ தான்! இந்த கேரட் பீன்ஸ் அரிஞ்சது எல்லாம் பின்னாடி சும்மா ஒரு "இதுக்கு" எழுதிட்டாங்க! ஆனா வரும் தலைமுறைக்கு இது மோசமான உதாரணமாப் போயிடும்-ன்னு தெரியாமப் பண்ணது; அது சிவபெருமான் பேருக்கு களங்கமாகப் போய் விடக் கூடாது என்பதே என் ஆதங்கம்!

    ReplyDelete
  6. @லலிதாம்மா
    பரஞ்சோதி = அசோகரா? அரோகரா?? :)

    //இதற்குமேல் படிச்சதெல்லாம்'ஏண்டாப்பா படிச்சோம்?'ன்னு நினைக்கவச்சது//

    உம்ம்ம்...பெரிய புராணத்தில் வருவதைத் தானேம்மா எழுதினேன்! அது கூட கொஞ்சம் லைட்டன் பண்ணி!
    மற்ற புத்தகங்களை/சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடுகளைப் பாருங்க! வெட்டின தலையின் படத்தோட ஏதோ "பெருமையாச்" சொல்லி இருப்பாங்க :(

    ReplyDelete
  7. //Prasad said...
    கருத்தும், கருத்தின் ஆழமும், விளக்கமும் மிக மிக அருமை!//

    :)
    சீராளன் கறி - இன்னிக்கும் ஆலயத்தில் வேணுமா? வேணாமா? அதைச் சொல்லுங்க பிரசாத்! :)

    //மேன்மை கொள் சைவ நீதி ஓங்குக உலகமெல்லாம்//

    மேன்மை கொள் சிவபெருமான் ஓங்கினாலே போதும்! "சைவநீதி" என்பதெல்லாம் தீவிரத்துக்குத் தான் இட்டுச் செல்லும்!

    ReplyDelete
  8. //இம்சை அரசி said...
    cha.. enda padichomnu irukku :(((//

    Sorryம்மா ஜெயந்தி, நலமா?

    ReplyDelete
  9. இந்தப் பதிவு குறித்த ஆதங்கத்தை, பல சைவ அன்பர்கள் தனி மடலில் என்னிடம் வருத்தப்பட்டு இருந்தார்கள்; சீறியும் இருந்தார்கள்! அவர்கள் எல்லாரும் என்னை மன்னிக்கவும்! எனக்குச் சைவம் என்றோ வைணவம் என்றோ அமைப்பு ரீதிகள் தெரியவில்லை! என் துடிப்பு சிவபெருமானைக் குறித்தே! வரும் தலைமுறைகளில், அங்கு களங்கம் வந்துவிடக் கூடாது என்பதே என் கவலை!

    நாயன்மார் கதைகளைப் படித்து விட்டு, Terrorஆ இருக்கு-ன்னு எல்லாம் வரும் தலைமுறை தவறாகப் புரிந்து கொண்டால், அது அடியவர்களுக்கும், சிவபெருமானுக்கும் தான் களங்கமாய்ப் போய் முடியும்! அதான் மூலநூலில் இருந்து சொல்லும் இந்த முயற்சி! அதைப் புரிஞ்சிக்கிட்டீங்க-ன்னா நலம்!

    கோட்புலி நாயனார் பதிவில் கூட மூலநூலில் இருந்து தான் சொன்னேன்! அதுக்கே வாசகர் ரியாக்ஷன் எப்படி இருந்துச்சி-ன்னு பார்த்தீங்க-ல்ல?

    வெட்டி பாலாஜியை விடுங்க, அப்படித் தான் எகிறுவான்! ஆனால் அடக்கமே உருவான குமரன், சிறந்த ஆன்மீகப் பதிவர், ஆன்மீகப் பதிவுகளின் சூப்பர் ஸ்டார் எனப்படுபவர் - அவரே இது என்ன Terrorஆ இருக்கு என்று கேட்டாரு-ன்னா, மத்தவங்க, இனி வரும் சின்னப் பசங்க மனதில் அப்படித் தோனாது-ன்னு என்ன நிச்சயம்?

    ஐயோ தெய்வ குத்தம் போன்ற மிரட்டல் எல்லாம் வரும் தலைமுறையிடம் செல்லாது! கேள்வியோடு முன்னாடி நிக்கும்! சிவபெருமானுக்கு அப்படியொரு பேரு தேவையா? அதை யோசிச்சிங்கீன்னா என் மேல் கோவம் கொள்ள மாட்டீர்கள்! புனைவை நீக்கி, மெய் அடியார் புகழைக் காப்பதே முக்கியம்! வெளியில் இன்னொரு பெரியார் தோன்றி, ஈசனைப் பிடித்து உலுக்கு முன், நம்மை நாமே திருத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை!

    பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்
    ஆனால்
    இப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ????

    திருச்சிற்றம்பலம்!

    ReplyDelete
  10. //நாயன்மார் கதைகளைப் படித்து விட்டு, Terrorஆ இருக்கு-ன்னு எல்லாம் வரும் தலைமுறை தவறாகப் புரிந்து கொண்டால்..//

    அது தான் உண்மை... தங்கள் பதிவைப் படிக்கும் முன்புவரை நான் கேரட் பீன்ஸ் அறிந்தது 'உண்மை' தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். திருத்தொண்டத்தொகை மூலநூலில் அங்ஙனம் இல்லையென்பதை இப்பதிவின் வாயிலாகத்தான் அறிந்தேன்....

    இந்து மதங்கள் இப்படியான மூடப் பிற்போக்குக் கருத்துக்களையே கூறிக்கொண்டிருப்பவைஎன்று முற்போக்குத்தனமாக சிந்திப்பதாக தப்புக்கணக்கு போட்டிருந்தேன்.

    இரு வாரங்கள் முன்புதான் பந்தலைக் கண்டேன். என் கருத்துக்களை மாற்றியே தீர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டீர்கள்...

    ReplyDelete
  11. இந்த பதிவுக்கு பின்னூட்டம் எழுதனும்னு தோணுது..
    காலைல முழுசா படிச்சுட்டு போனேன்.. இப்ப இன்னொரு முறை படிக்க வந்தேன்..ஒன்னு இதில புரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா ... கே ஆர் எஸ் உண்மையான ஆதங்கத்தோடவும், நேர்மையோடவும் சில விசயங்களை அவருக்கே உண்டான பாணியில எழுதி இருக்கிறார்.. இந்த கதை கன்னடத்துல சினிமாவாகவும் வந்திருக்கு( பக்த சீராள), 63 நாயன்மார்கள் கதையை ' ரகளே' என்ற கவிதை படைப்பாய் கன்னடத்திலும் ?11vathu நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கிறது.. அதில் சில சம்பவங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.. ஸ்கூல் ல படிச்சப்பவே.. பெரிய புராணத்திற்கும் இதுக்கும் சில வேறுபாடுகள் இருந்தன அப்படீன்னு தோனுச்சு .. இளையான்குடி மாறர் கதையும் பரஞ்சோதி நாயனார் கதையும் கொஞ்சம் கலந்திருக்கும்...இப்ப சரியா ஞாபகம் இல்லை..
    அதிலும் கொஞ்சம் கொடூரமகத்தான் சித்தரிதிருப்பாங்க சிவபெருமானை .. மனுஷ மனம் ஆன்மீகத்துல சில குறிப்பிட்ட கட்டத்தை கடக்குற வரை.. கடவுளை பற்றி சில வரையறைகளை வகுத்திருக்கும்.. தப்புன்னு சொல்ல வரல.. அதில ஒன்னு... சிவபெருமான் அவரோட பக்தர்களை ரொம்பவும் சோதனைக்கு ஆளாக்குவாருன்னு என் கூட வேலை செய்யுறவங்க சொல்ல கேட்டிருக்கிறேன்..கடவுளை குறித்த அன்பை விட ,பீதி மனசுல ஆழமா பதிஞ்சிரும் போல..
    அதற்குத்தான் ஒரு நியாயமான விமரிசனம் சமயத்துக்கு தேவைப்படுது..அப்படித்தான் சநாதன தர்மம் எல்லா காலக்கட்டத்தையும் தாண்டி வந்திருக்கு...மந்திரங்கள் ஓதி ஆகுதியில மிருக பலியிடுற கட்டத்தில இருந்து, religion has refined itself.. with changing times.. பௌத்தமும் சமணமும் ஒரு சில விமரிசனங்களை செய்து, பிறகு சனாதன தர்மத்தை மறைமுகமா சீர் செய்தது போல.. ஒரு சங்கரர் தோன்றி, ராமானுஜர் தோன்றி, எனக்கு மோட்ச ப்ராப்தி கிடைக்காம போனாலும், இத்தனை சனங்களுக்கு மோட்சம் கிடைக்கும்னா நான் நரகம் புகுந்தாலும் பரவைல்லைன்னு சொல்ல வச்சு, சமயத்தை மேலும் மெருக்கேற்றியிருக்கு...ஒரு காலக்கட்டதில ஏழையா இருந்தா சொந்த சமயத்தை கடைபிடிக்க முடியாத நிலை கூட இருந்தது... ( ஜிசியா வரியை பத்தி சொல்லுறேன் )... எல்லாத்தையும் தாண்டி தானே நாம இப்ப படிச்சு, பேசி, கிழிச்சு, திட்டிட்டு, பின்னூட்டமிட்டு , புண் படுத்தீட்டிருக்கோம் .
    அதனால தான் இந்த பதிவுல இருந்த நேர்மை நெஞ்ச தொட்டதனால பெருசா எழுத வந்தேன்.. அட , சொல்லறது சரியாத்தானே இருக்குன்னு தோனுச்சு .. அதுதான் நெறைய பேசுனேன்..மத்தபடி எல்லா தரவுகளும் தெரிஞ்சு பெசுறேன்னான்னு எனக்கே தெரியாது...( krs..மிக சொற்ப்பமா ஆங்கிலம் கலந்து எழுதினேனா?)

    ReplyDelete
  12. //ஒரு காலக்கட்டதில ஏழையா இருந்தா சொந்த சமயத்தை கடைபிடிக்க முடியாத நிலை கூட இருந்தது... ( ஜிசியா வரியை பத்தி சொல்லுறேன் )... //

    பதிவுக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் இவ்விடத்தே ஜிசியா வரியைப் பற்றி அவசியம் கருதிப் பகிர்கிறேன்...

    முகமதிய ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய தருமத்துக்குட்பட்ட சகாத் வரி முசுலீம்கள் மீது விதிக்கப்படது. அதற்கு ஈடாக முசுலீம் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டதே ஜிஸியா வரியாகும்.
    ஒப்பீட்டளவில் ஜிஸியா வரியை விட சகாத் வரி சில மடங்குகள் அதிகம் என்பது கொசுறு தகவல்

    http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/201-jizya-vari/

    ReplyDelete
  13. சிறுத்தொண்டர் குழந்தையை அரியத்துணிந்தது வரை உண்மை. சரி. அதன் பின் 'உண்மையில்' என்னதான் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் அண்ணா...

    ReplyDelete
  14. //இம்சை அரசி said...
    cha.. enda padichomnu irukku :(((//

    ஜெ..
    சும்மாப் படிக்கும் நமக்கே இப்படி இருக்கேம்மா! பிள்ளையின் பேரால் இன்றளவும் கறி கொடுத்தா எப்படி இருக்கும்?

    இந்த வழக்கத்தை ஆதீனங்கள்/சைவ நல்லன்பர்கள் தலையிட்டு நிறுத்தினா நல்லா இருக்கும்! அதற்குப் பதில் தேவாரப் பள்ளிச் சிறுவர்களுக்கு அன்று விருந்து படைக்கலாம்!

    ReplyDelete
  15. மூலநூலான திருத்தொண்டர் திருவந்தாதியில் உள்ளபடியே தெரிந்து கொண்டது நிறைவாக இருக்கிறது.

    ReplyDelete
  16. @இந்திரன்
    //இந்து மதங்கள் இப்படியான மூடப் பிற்போக்குக் கருத்துக்களையே கூறிக்கொண்டிருப்பவைஎன்று//

    எம்மதமாயினும்...மதங்கள்-ன்னு வந்துட்டாலே மூடத்தனங்கள்/மூர்க்கத்தனங்கள் ரெண்டுமே கொஞ்சமாச்சும் இருக்கும்! ஏன்னா இறைவனைக் காட்டிலும் மதமே அங்கு முக்கியம் பெறுகிறதல்லவா! இந்து மதமும் அதற்கு விதிவிலக்கல்ல! என்ன தான் நாம "சனாதன தர்மம்"-ன்னு தத்துவமாப் பேசினாலும், நடைமுறையில் கடைப்பிடிக்காத வரை, அவை சிறப்பு பெறாது! அந்தணர் என்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல, குணத்தின் அடிப்படையில் - குண கர்ம விபாசக-ன்னு தான் கீதை சொல்லுது! ஆனா நடைமுறையில்? பெரியார் வந்து தானே கிளப்பி விட வேண்டி இருந்தது! இராமானுசர் வந்து தானே தமிழ் கருவறையில் நுழைய முடிந்தது! அது போல் புதுப்பித்துக் கொண்டே இருந்தால் தான் மக்களுக்குப் பயன்படும்/பண்படும்!

    அதனால் தான் தமிழில் "மதம்"-ன்னு சொல்லாது, "சமயம்"-ன்னு சொல்லிப் போந்தனர்! சமயம் = பக்குவமாய்ச் சமைப்பது, மனங்களை! Religious = மதம்! Spiritual = சமயம்! ஆழ்வார்களுக்கு "வைணவ மதம்" கிடையாது! அவர்கட்கு ஆவி திருமாலே! வைணவம் அல்ல! கண்ணப்பருக்கு ஆவி ஈசனே! "சைவ நீதி" அல்ல!

    //இரு வாரங்கள் முன்புதான் பந்தலைக் கண்டேன். என் கருத்துக்களை மாற்றியே தீர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளிவிட்டீர்கள்...//

    ஹா ஹா ஹா
    அவசரப் பட வேணாம்! உரசிப் பார்த்து, தங்கம் தானா என்று அறிந்து, மாற்றிக் கொள்ளலாம்! மாற்றம் அவரவர் அகவியல் மாற்றமாக இருந்தாத் தான் நிலைக்கும்! பந்தல் போன்றவை எல்லாம் வெறும் புறவியல் அக ஊக்கிகளே! :)

    நானும் உங்களைப் போலத் தான்! முன்னாள் தி.க அன்பன்! :)
    http://madhavipanthal.blogspot.com/2008/06/blog-post_26.html
    பகுத்தறிவை வெறுமனே "நம்பாமல்".....பகுத்தறிவையும் "பகுத்தறிந்து" கொண்டால் - இனி எல்லாம் சுகமே!

    ReplyDelete
  17. //ஒப்பீட்டளவில் ஜிஸியா வரியை விட சகாத் வரி சில மடங்குகள் அதிகம் என்பது கொசுறு தகவல்//

    சூப்பர்! தரவுகளோடு பொருத்திப் பார்த்துச் சொன்னமைக்கு நன்றி இந்திரன்! :) I always like this data/fact based approach, than opinion based approach!

    //சிறுத்தொண்டர் குழந்தையை அரியத்துணிந்தது வரை உண்மை. சரி. அதன் பின் 'உண்மையில்' என்னதான் நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள் அண்ணா...//

    ஊகிக்கத் தான் முடியும் இந்திரன்! ஏன்-ன்னா மூலநூலில் அதற்கு அப்புறம் குறிப்பு இல்லை! பாரதிராஜா படம் போலத் தான்...காதல் வெற்றி, வெள்ளைத் தேவதைகள் வாழ்த்து...அதுக்குப்பறம் குடும்பம் எப்படி நடத்தினாங்க-ன்னு தெரியாது! :))

    பரஞ்சோதியின் குற்ற உணர்வால் தான் அவ்வாறு துணிந்தான்! என் ஊகம் என்னவென்றால், வந்தது ஈசனோ அல்லது ஒரு சான்றோரோ...அவனைத் திருத்தி ஆட்கொண்டு இருக்கலாம்! அதன் பிறகு அவன் தொண்டில் கவனம் செலுத்தி மறைந்து போயிருக்கலாம்! அவனுக்குத் தான் நாயன்மார் ஆகப் போறோம்-ன்னே தெரியாதே! அவனளவில் அக மாற்றம், அம்புட்டு தானே! இந்த நாயன்மார் என்னும் பகுப்பு பின்னாளில் தானே! So, he also served, who only stand and wait!

    ReplyDelete
  18. @நிகழ்காலத்தில்...
    நல்லா இருக்கீங்களா?

    //மூலநூலான திருத்தொண்டர் திருவந்தாதியில் உள்ளபடியே தெரிந்து கொண்டது நிறைவாக இருக்கிறது.//

    மகிழ்ச்சி! இயன்றவரை அந்தந்த நாயன்மாரின் குருபூசை நாளின் போது இவ்வாறு தர முயல்கிறேன்! தகவற் பிழை ஏதேனும் இருப்பது போல் தெரிந்தாலும், தயங்காது சுட்டிக் காட்டுங்கள்!

    ReplyDelete
  19. @சரவணன் அண்ணா
    நெடிய பின்னூட்டத்துக்கும் உங்கள் புரிதலுக்கும் மிக்க நன்றி!
    கன்னட சினிமா நிறைய பார்ப்பீங்களோ? கலக்குறீக! :)
    Yes, you are right! Religion has refined itself with time, that too because of great visionaries and leaders like Sankara/Ramanuja and Mentors like Arunagiri etc..In fact Periyar also contributed to cleansing of many religious ills! I wud offer many credits to him for his "anti" service! That really helped!

    ReplyDelete
  20. //அதனால தான் இந்த பதிவுல இருந்த நேர்மை நெஞ்ச தொட்டதனால//

    :)
    நேர்மையா?
    உம்ம்ம்ம்ம்..நன்றி!

    இந்தப் பதிவைப் படிக்கும் ஒரு ஜீவன் இருக்கு! அது முன்பெல்லாம் என் கூட ஜாலியாப் பதிவுச் சண்டை போடும்! :)
    அந்த ஜீவனின் மனதில், என் நோக்கம் நேர்மை தான் என்று தோன்றும் வரை...நான் நேர்மையற்றவனாகவே இருந்து கொண்டு முருகா எனக் காத்திருப்பேன்!

    ReplyDelete
  21. யார் அந்த ஜீவன் அண்ணா... நான் புதுசு. நேக்கு சொல்லப்படாதா.... :)

    ReplyDelete
  22. இன்றோடு செமஸ்டர் over :) சற்று நேரத்தில் வைகைப் பயணம்... ஒரு மாதம் இணையம் cutttttu.

    ReplyDelete
  23. கிறித்துவ நாயகி பாவம் எங்க இன்னும் காணோம் . . ? எழுதி முடிச்சு பத்திரமா சுவிஸ் லாக்கர் ல போட்டு வச்சுருக்கேளா... அவாளா வெளியிடுறதுக்கு முன்னாடி நீங்களாவே போட்டுருங்கோ....

    ReplyDelete
  24. @இந்திரன்
    ஜாலியா ஊருக்குப் போயிட்டு வாங்க! மதுரையோ மதுரை! கள்ளழகர் இறங்குறாப் போல இறங்கிட்டு வாங்க! :)

    கிறிஸ்துவ நாயகி பாவம் நீங்க வந்த பொறவு இடுகிறேன்!
    இதென்ன அவா, இவா பாஷை! நோ நோ! :)

    ReplyDelete
  25. அன்பின் ரவி,

    //சீராளன் கறி - இன்னிக்கும் ஆலயத்தில் வேணுமா? வேணாமா? அதைச் சொல்லுங்க பிரசாத்! //

    சீராளன் கறி மட்டுமல்ல ஆடு பலி, கோழி பலி, ரத்தச் சோறு படையல் மண் சோறு விரதம் இதை எல்லாம் கண்டிப்பதும் தவிர்ப்பதும் நல்லது என்பது என் கருத்து.


    //மேன்மை கொள் சிவபெருமான் ஓங்கினாலே போதும்! "சைவநீதி" என்பதெல்லாம் தீவிரத்துக்குத் தான் இட்டுச் செல்லும்!//

    "அன்பே சிவம்" எனும் சைவ நீதி எப்படி தீவிரத்துக்கு இட்டுச் செல்லும்????????

    ReplyDelete
  26. @பிரசாத்
    மண்சோறு முதலான சில நாட்டார் வழக்கங்களைத் தவிர்க்கச் சொல்லத் தான் முடியுமே தவிர கண்டிக்க முடியாது! அருட்திரு வள்ளலாராலேயே முடியவில்லை! ஆனால் சீராளன் கறி நாட்டார் வழக்கம் அல்ல! மனித வள மீறல் அல்லவா!

    //"அன்பே சிவம்" எனும் சைவ நீதி எப்படி தீவிரத்துக்கு இட்டுச் செல்லும்????????//

    நாசர் சொல்லுற அன்பே சிவம் போலவா? :)

    அன்பே சிவம் என்பது "சைவ" நீதி அல்ல! அன்பு என்பது பொது! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

    மேன்மை கொள் சைவ நீதி ஓங்குக உலகமெல்லாம்-இதில் என்னென்ன "நீதி"-ன்னு கச்சியப்ப சிவாச்சாரியார் பட்டியல் போடுவாரு! படிச்சிப் பாருங்க! :)

    பொது நீதி வேண்டுமானால் உலகமெல்லாம் ஓங்கலாம்! ஆனால் "சைவநீதி" உலகெல்லாம் ஓங்க முடியாது! இந்தியநீதியே ஆம்ஸ்டர்டாமில் செல்லாது! :) அதான் சொன்னேன், ஒரு தனிப்பட்ட "மதநீதி" (Justice) உலகெல்லாம் ஓங்கணும்-ன்னா அது தீவிரத்துக்கு இட்டுச் சென்று விடும்!

    மேன்மை கொள் ஈசனின் கருணை, தழைக்கட்டும் உலகமெல்லாம்! அதுவே நல்ல அணுகுமுறை!

    ReplyDelete
  27. ///இதென்ன அவா, இவா பாஷை! நோ நோ! :)///

    உபயம்: ஈராண்டு கால கழக வாசம்.
    சமாதானம் கூறினாலும் தப்பு தான். திருத்துகிறேன். ஒரு நல்ல சமாசாரம் சொல்லட்டுமா? பந்தலுக்கு வந்த பின் அந்த வெறுப்புணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது. அதுவும் மஹா மஹா ஸ்ரீ இராமானுசரை அறிந்தபின்...
    பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு பாராட்டுவது குற்றம் எனில், பிறப்பை மட்டுமே கொண்டு 'அவாளின்' மேல் வெறுப்பு கொண்டதும் தப்பு தான். ஆனாலும் இன்னமும் கணிசமான பிராமணர்கள் கண்மூடித்தனமான உயர்வு மனப்பான்மையுடன் தான் உள்ளனர் என்பது வருத்தம் தருகிறது.

    ReplyDelete
  28. @இந்திரன்
    //பந்தலுக்கு வந்த பின் அந்த வெறுப்புணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது//

    மிக்க மகிழ்ச்சி!

    //அதுவும் மஹா மஹா ஸ்ரீ இராமானுசரை//

    ஹிஹி! இராமானுசர்-ன்னே சொல்லுங்க! மகா மகா எல்லாம் என்னதுக்கு? யாரையும் ஏத்தி விடவும் வேணாம்:)

    //பிறப்பை மட்டுமே கொண்டு 'அவாளின்' மேல் வெறுப்பு கொண்டதும் தப்பு தான்//

    :)
    உண்மையே! வீதியில் இறங்கிப் பெரியார் போல் போராடினால் அப்போ சரி! இயல்பான பழகு வாழ்க்கையில், எல்லாரும் ஓர் நிறை! வெறுக்கவும் வேண்டாம், வால் பிடிக்கவும் வேண்டாம்!:)

    //ஆனாலும் இன்னமும் கணிசமான பிராமணர்கள் கண்மூடித்தனமான உயர்வு மனப்பான்மையுடன் தான் உள்ளனர் என்பது வருத்தம் தருகிறது//

    மாற்றம் மட்டுமே நிலையானது! மாறாதவர்கள் அடித்துச் செல்லப்படுவார்கள்! உள்ளத்தில் எம்பெருமானை உண்மையாக உணர்ந்தால் இப்படிச் செய்ய மாட்டார்கள்! ஆனால் தான், தன் அமைப்பு, இதற்குப் பின் தானே இறைவன்?:)

    அப்பப்போ பந்தலில் எழுதி, மனசாட்சியைக் குத்தி விட வேண்டியது தான்!:)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP