Thursday, May 26, 2011

ஈழம்: "யாழ்ப்பாண" நாயன்மார்?

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்! சிவனருட் செல்வரான நாயன்மார்களின் கதையைப் "புராண மிகை" இன்றிச் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக...
இன்று திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்! (இசைப் பதிவு)

அது என்னாங்க "யாழ்ப்பாணம்"? = ஈழத்தின் சோகம்? :(
ஆங்கிலத்தில் திரிந்ததோ......Jaffna! வெறும் சொல் தான்!
சிங்களத்தில் திரிந்ததோ........வாழ்க்கை என்ற பெருங் கனவு!

திருநீலகண்ட "யாழ்ப்பாண" நாயனார் = இவருக்கும் ஈழத்துக்கும் என்ன தொடர்பு?
பொதுவாகவே ஈழத்தில் சைவம் அதிகம்; வைணவம் குறைவு! பொன்னாலை, துன்னாலை, வல்லிபுர ஆழ்வார் = இவை மட்டுமே இன்னொரு தமிழ்க் கடவுளான திருமாலின் தொன்மையான ஆலயங்கள்!

அப்படியிருக்க, யாழ்ப்பாண நாயனார் = ஈழத்தில் இருந்து தோன்றிய ஒரே நாயன்மார் இவர் தானா?
அவரின் குருபூசை (நினைவு நாள்) இன்று! வைகாசி மூலம் (May 20, 2011)...பார்க்கலாமா கதையை?


யாழ்ப்பாணம் = யாழ்+பாணம்
* யாழ் = பண்டைத் தமிழிசைக் கருவி (இன்றைய வீணை போல)
* பாணம் = பண் என்ற வேர்ச்சொல்! பண்=ராகம்! அதை இசைக்கும் பாணர்கள்! அவர்கள் வாழ்ந்த இடம் பாணம்!

சங்க காலத்தில் கவிஞர்/புலவர் என்பவர்கள் கவிதைகளை எழுத மட்டுமே செய்வார்கள்! அதற்கு இசை அமைத்து, பண் கூட்டிப், பாடவும் செய்பவர்கள் யார்?=பாணர்கள்!
எ.கா: கண்ணதாசன் = கவிஞர்; எம்.எஸ்.விஸ்வநாதன் = பாணர் :))

பாணர்கள் பெரும்பாலும் நாடோடிகள்! ஊர் ஊராகச் சென்று கலையில் ஈடுபட்டு மகிழ்ந்தும் மகிழ்வித்தும் வாழுபவர்கள்! பாணருக்குத் துணை=விறலி! நாட்டியம் செய்வோள்!
ஆக, கவிஞர்-பாணர்-விறலி = இயல்-இசை-நாடகம்! புரிகிறது அல்லவா?

தமிழிசைக்கு உண்டான இருபெரும் கருவிகள் = யாழ், குழல்! குழலி இனிது யாழ் இனிது என்ப, தம் மக்கட் மழலை சொல் கேளாதவர்!
இதில் குழல், தமிழ்க் கடவுளான மாயோனுக்கு உரியது! ஒரு சில பாணர்கள் யாழிலே வல்லவர்கள்! இன்னும் சிலர் குழலில் வல்லுநர்கள்! ஆக..யாழ்ப்பாணம் = யாழில் வல்ல பாணர்கள் தங்கிய குடி!

ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் பல யாழ்ப்பாணங்கள் உண்டு!
எப்படி ஆயர்ப்பாடி = ஆயர்கள் தங்கிய பாடிகளைக் குறிக்குமோ,
அதே போல் யாழ்ப்பாணம் = பாணர்கள் தங்கிய ஊரைக் குறிக்கும்!

ஆனால் ஈழத்தில் இருக்கும் பாணர் குடியே மிக்க புகழுடன் சிறந்து விளங்கியதால், அதுவே நாளடைவில் "யாழ்ப்பாணம்" என்று ஆயிற்று! (ஏழ்-பனை நாடு என்பதே யாழ்ப்-பாணம் எனத் திரிந்தது என்பாரும் உளர்)


அப்போ, திருநீலகண்ட "யாழ்ப்பாணர்" மட்டுமே ஈழத்தில் இருந்து வந்த ஒரே நாயன்மாரா?
=
இல்லை! நாயன்மார் வரிசையில், ஈழத் தமிழர்கள் யாரும் வைக்கப்படவில்லை!

நீலகண்டர் பேரில் "யாழ்ப்பாணம்" இருப்பதால் தான் இந்தக் குழப்பம்! ஆனா இவரோட ஊர், தமிழகம்! நடுநாட்டில் இருக்கும் எருக்கத்தம் புலியூர்!
=> திருநீலகண்ட+யாழ்ப்பாணர் = யாழிலே வல்ல பாணர் குடியில் பிறந்த நீலகண்டர் என்றே கொள்ள வேணும்!

ஆடல் வல்லான் நம் சிவபெருமானை, புலி(முனிவன்) வழிபட்ட இடங்கள் ஐந்து! அவையே=புலியூர்!
1. திருப்பாதிரிப் புலியூர்
2. எருக்கத்தம் புலியூர்
3. ஓமம் புலியூர்
4. பெரும் புலியூர்
5. பெரும்பாற்றப் புலியூர் (தில்லை)

இதிலே எருக்கத்தம் புலியூரிலே தோன்றியவர் திருநீலகண்டர்! பல இசை நுணக்கங்களைக் கற்றார்! யாழில் ஏழிசை மீட்டி வல்லவர் ஆனார்! அத்தனையும் சிவபெருமான் புகழ் பாடும் இசை!
இவருடைய மனைவி: மதங்க சூளாமணி! நாட்டியப் பேரொளி! கணவனும் மனைவியுமாக சிவத் தொண்டில், இசையில் காலம் கழித்தார்கள்!

ஒருமுறை இருவரும் மதுரைக்குச் சென்றார்கள்! கோயில் பிரகாரத்தில் உட்கார்ந்து யாழ் மீட்டினார் நீலகண்டர்!
தரையோ ஈரம்! சதசத! கீழே ஊன்றிய யாழின் நரம்பு இதனால் கெட்டு விடுமே! யாழின் நரம்பு தளர்ந்தால், இசை என்னவாகும்?

ரசிகமணியான சிவபெருமான், அடியவர்கள் கனவிலே தோன்றி, பாணருக்குப் பலகை செய்து கொடுக்கச் சொன்னார்!
அவர்களோ இசைக்காக் ஆர்வத்தால், பொற்பலகையே செய்து கொடுக்க, அதில் அமர்ந்து யாழ் மீட்டினார் நீலகண்டர்!

பின்னர் பல திருத்தலங்களுக்குச் சென்று, தமிழிசை பரப்பினார் நம் பாணர்! பொதுவாக ஞானசம்பந்தரின் பாடல்களை யாழில் மீட்டுவதே அவருடைய வழக்கம்! இருவரும் சம காலத்தவர் அல்லவா!

திருவாரூருக்கு வந்து சேர்ந்தார் நீலகண்டர்! ஆனால் ஆலயத்துக்குள் செல்ல முடியவில்லை! அவர் குடிப்பிறப்பே காரணமாம்! :(
பாணர் வெளியில் இருந்தே வாசிக்க, இசைக்கு மயங்கி, நேர் வழியாக இல்லாமல், வடக்கு வாசல் வழியாக, கொஞ்ச நேரம் உள்ளே வர "அனுமதித்தாராம்" ஈசன்! = இது மூல நூலான திருத்தொண்டர் திருவந்தாதியில் இல்லை! ஆனால் சேக்கிழார் மட்டும் இவ்வாறு பெரிய புராணத்தில் சொல்கிறார்!

இதை எடுத்துக் கொள்வதா? வேண்டாமா? என்பதை அவரவருக்கு விட்டு விடுகிறேன்!
ஈசன் நந்தியையே விலக்கி, ஊர் அறிய ஒரு அடியவனின் பெருமையைக் காட்டிக் கொடுப்பாரே அன்றி, "புறவாசல் வழியா வந்துக்கோ" என்றெல்லாம் சொல்ல மாட்டார்! ஈசனின் "கருணை"த் திறம் அத்தகையது! அதை "உணர்ந்தாலே" போதும்!

கந்தர்வக் குரலோன் யேசுதாஸ், மலையாள ஆச்சார சீலர்களின் கெடுபிடியால், இன்றும் குருவாயூர் கோயிலுக்குள் நுழைய முடியாமல், வெளியில் இருந்தே பாடுவது போல் அல்லவா இருக்கு? :(
* மாற்று மதத்தவரான யேசுதாஸ், "மானம் பார்க்காது", அவன் ஒருவனுக்காகவே வெளியில் நிற்கும் மாட்சி எங்கே?
* இன்றைய சங்கராச்சாரியார்கள், அரசு மரியாதை கிடைக்கலை-ன்னு, இராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்தைப் புறக்கணிக்கும் "மாட்சி" எங்கே? முருகா! :(


ஆளுடைய பிள்ளையான திருஞான சம்பந்தர்!
அவர் பாடல்களைத் தானே நம்முடைய பாணர் தன்னோட யாழில் மீட்டுகிறார்? சம்பந்தரைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது அவருக்கு!
கவிஞனைக் காணத் துடித்த ரசிகன்! பதிவரைக் காணத் துடித்த வாசகன்!:) உடனே செல்கிறார் சீர்காழிக்கு!

முன் பின் பார்த்துக் கொள்ளாத இருவரும், கலையால்-இசையால்-தமிழால் ஒன்றுகின்றனர்!
அவர் பாட்டை இவர் வாசித்துக் காட்ட...இவர் வாசிப்புக்கு அவர் பாட...நட்பு இறுகி வெள்ளம் போல் ஓடுகிறது! ஆனால் ஆனால் ஆனால்.....

சம்பந்தப் பிள்ளை கொஞ்சம் "டகால்ட்டிப்" பிள்ளை போல! :) வம்பு செஞ்சி பார்க்கத் துடிக்கிறது! :)
யாழில் வாசிக்கவே முடியாத ஒரு கடினமான பாட்டை, வேண்டுமென்றே ஒரு வித்தியாசமான மெட்டில்...எழுதிக் காட்டுகிறது! = யாழ் முறிப் பண்!

இந்த விளையாட்டு நம் பாணருக்குத் தெரியவில்லை! தோழனின் பாட்டுக்கு இசையமைக்க முடியலையே என்று நொந்தே போய் விட்டார்!
அச்சோ, தோழனின் பாட்டை வாசிக்கவும் வக்கில்லாத எனக்கு எதற்கு யாழ்? என்று அதை முறித்துப் போட முயல...

ஆகா! "தோழனைக் கும்மியடிக்க நினைத்த நான் எங்கே, எனக்காகத் தன் இசையையே ஒடுக்கத் துணிந்த தோழன் எங்கே?" - என்று கலங்கினார் சம்பந்தப் பெருமான்! யாழை முறிக்கவிடாமல் தடுத்து, இரு கைகளையும் அப்படியே அணைத்துக் கொண்டார்!

இந்த யாழ்முறிப்பண் தான், பின்னாளில் அடாணா ராகம் ஆகி, இன்றும் கச்சேரிகளில் பாடுகிறார்கள்! யார் தருவார் இந்த அரியாசனம்-ன்னு சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி கலக்குவாரே! அது இந்த அடாணா தான்!சம்பந்தரின் திருமணப் பேச்சு நிச்சயிக்கப் படுகிறது சைவப் பெரியவர்களால்! ஆனால் அவருக்கோ திருமணத்தில் நாட்டமில்லை!
ஆனாலும் உடன்படுகிறார்! நல்லூரில் திருமணத்தின் போது ஏற்படும் பெரும் தீயில்/ஜோதியில் மணமகன் சம்பந்தர் முதலான அனைவரும் உட்புக...
சம்பந்தரின் தோழரான திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உட்புகுகின்றார்! அதுவே இந்நாள்! வைகாசி மூலம்! குருபூசை!

இதே நாளில், இதே திருமணத்துக்கு வந்த, இன்னும் இரண்டு நாயன்மார்களும் மறைந்து போகிறார்கள்!
* முருக நாயனார் - இவர் சிவபூசைக்குப் பூத்தொடுத்து வாழ்ந்தவர்! அதற்கு மேல் வாழ்க்கைக் குறிப்பு கிடைக்கவில்லை!
* நீலநக்க நாயனார் - சிவலிங்கம் மேல் துப்பிய அவர் மனைவி - முன்பே பந்தல் பதிவில் பார்த்துள்ளோம்! இங்கே!

நீலகண்டர் என்ற அதே பேரில் இன்னொரு நாயன்மாரும் இருப்பதால் (மனைவியைத் தொடாது வாழ்ந்த திருநீலகண்டக் குயவனார்)...,
நம் பாணரைத் "திருநீலகண்ட யாழ்ப்பாணர்" என்று சேர்த்து அழைப்பதே வழக்கம்!


தேவாரத்தில் இடம் பெற்றுள்ள பண்கள், மொத்தம் = 21

பகற் பண், இராப் பண், பொதுப் பண்கள் என மூன்று வகை!
* பகலில் பாடுவது = காந்தாரம், இந்தளம், நட்டபாடை முதலான 10 பண்கள்
* இரவில் பாடுவது = தக்கராகம், மேகராக குறிஞ்சி முதலான 8 பண்கள்
* பொதுப் பாட்டு = செவ்வழி, தாண்டகம் முதலான 3 பண்கள்

அப்பர் சுவாமிகள் (திருநாவுக்கரசப் பெருமான்) மட்டுமே, தமிழிசைப் பெரும் தொண்டாக...வேறு எவருமே பாடாத, 4 புதிய பண்களை உருவாக்கி அமைத்தார்! = தாண்டகம், நேரிசை, இந்தளம், விருத்தம்!

பின்னாளில்...சிதம்பர "மகாமகோபாத்யர்களால்" தேவார ஓலைச்சுவடிகள் கரையான் பிடித்த போது...
அதை மீட்டெடுத்து, கிடைத்தவற்றை மட்டும் வகுத்துக் கொடுத்தார் நம்பியாண்டார் நம்பி! ஆனால் அவரால் இசைப் பண்கள் என்னவென்று அறிய முடியவில்லை! தேவாரப் பாட்டிலும் அதற்கான குறிப்பில்லை!

ஆனால்....இறைவன் அருளால்...நம் "யாழ்ப்பாணர்" மரபிலே தோன்றிய பெண் ஒருத்தி, அதே எருக்கத்தம் புலியூரில் வாழ்பவள்...அவள் தான், "இது தான் இந்தப் பாட்டுக்குப் பண்ணாக இருக்க முடியும்" என்று எல்லாத் தேவாரப் பதிகத்துக்கும் வகுத்துக் கொடுத்தாள்! "தல-முறை"யில் அடுக்கப்பட்ட தேவாரம், "பண்-முறை"க்கு மாறியது!

தாயீ...உன் பேரை இவங்க சொல்லலை! இருந்தாலும் நீ நல்லா இருக்கணும்! தெய்வத் தமிழிசைக்கு, தேவாரப் பண்ணிசைக்கு முகம் தெரியாத முதல்வளே, உனக்கு வணக்கம்!

* நாளும் தமிழிசையைப் பரப்பிய "திருநீலகண்ட யாழ்ப்பாணர்" திருவடிகளே சரணம்!
இதே நாளில் மறைந்த மற்ற நாயன்மார்களான...
* முருக நாயனார் திருவடிகளே சரணம்!
* நீலநக்க நாயனார் திருவடிகளே சரணம்!
* திருஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்!

24 comments:

 1. பதிவரைக் காணத் துடித்த வாசகன்!:) இது உமக்கு முற்றிலும் உண்மை தம்பி. தொடருங்கல்......

  அன்புடன்

  ReplyDelete
 2. * மாற்று மதத்தவரான யேசுதாஸ், "மானம் பார்க்காது", அவன் ஒருவனுக்காக நிற்கும் மாட்சி எங்கே?
  * சங்கராச்சாரியார்கள், அரசு மரியாதை கிடைக்கலை-ன்னு, இராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்தைப் புறக்கணிக்கும் "மாட்சி" எங்கே? முருகா! :(
  அவரவர் பார்வைகளில் ஆயிரம் காரணங்கள்! அருமையான இழையில் controversies வேண்டாமே!

  ReplyDelete
 3. இரவி,

  மதுரைக்கோவிலில் எந்த வாசல் வழியாக நுழைந்து யாழ்ப்பாணர் பொற்பலகையில் அமர்ந்து இசைத்தார் என்று திருத்தொண்டர் புராணம் சொல்கிறது?

  ReplyDelete
 4. @santa
  நன்றி!

  நீங்க யாரு-ன்னு தெரியலை! தம்பி-ன்னு வேற கூப்புடுறீக :)

  ReplyDelete
 5. @திருத்திரு ஐயா

  முடிந்த வரை தவிர்க்கப் பார்க்கிறேன் ஐயா! Controversy is not my motive! இறைவனைக் கொள்ளும் உள்ளங்கள், அதன் "ஆத்மார்தத்தை" புரிந்து கொள்ள வேணும் என்பதற்கே அவ்வப்போது எடுத்துச் சொல்வது!

  I have always focussed on process NOT persons, in panthal!

  இங்கும் காஞ்சி சங்கராச்சாரியார்களின் "செய்கை" பற்றி மட்டுமே அடிமன விசாரணை! அவர்களின் மற்ற தனிப்பட்ட செய்திகளைப் பற்றி அல்ல!

  சொன்னால் விரோதமிது தான்! :) என்னிடம் சிலர் கோவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்! யார் சொன்னாலும் நான் சொல்லக் கூடாது-ன்னு எதிர்பார்ப்பு:)
  But I dont blog for social networking! I wish to kindle the hearts, so that they "offer" unbounded love to the Lord!

  ReplyDelete
 6. @குமரன்

  மதுரையில் வெளிப் பிரகாரத்தில் தான் பாடுகிறார்! பொற்பலகையும் அப்படியே! அடியவர்கள் மூலம் "தன் திரு முன் உய்க்குமாறு" ஈசன் சொல்வதாக சேக்கிழார் வரிகளில் வருகிறது! அது ஆலய நுழைவாகவும் இருக்கலாம்! ஆனால் எந்த வாசல்-ன்னு எல்லாம் சொல்லவில்லை!

  திருவாரூருக்கு வரும் போது தான், வழக்கப்படி வெளியில் இருந்து இசைக்க, புறவாசல் வழியா வரலாம்-ன்னு கன்செஷன் கொடுப்பதாக சேக்கிழார் குறிப்பிட்டுச் சொல்கிறார்!

  ReplyDelete
 7. பாடல் வேண்டுமானால்...இதோ:

  மதுரையில்:
  ஆலவாய் அமர்ந்தார் "கோயில் வாயிலை அடைந்து நின்று"
  பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கி...

  மற்றவர் கருவிப் பாடல் மதுரை நீடு ஆலவாயில்
  கொற்றவன் திருவுள்ளத்துக் கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம்
  அற்றைநாள் கனவில் ஏவ அருள் பெரும் பாணனாரைத்
  தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார்

  திருவாரூரில்:
  அமரர் நாடாளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார்

  கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும்
  ...
  ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டுப் பாடக் கேட்டு அங்கண்
  வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார்

  ReplyDelete
 8. Folks, Sorry! Looks like some tech issue in Blogger embedded comments! Thanks for pointing out in emails!
  So, I switched to the old comment form, for now! Sorry, If u had typed and lost your comments!

  ReplyDelete
 9. நன்றி இரவி. திருத்தொண்டர் புராணம் திருத்தொண்டர் வரலாற்றை மேற்பூச்சுகள் இன்றி சொன்னதோ இல்லையோ தெரியாது; ஆனால் சேக்கிழார் காலத்தில் இருந்த குமுக நிலையைப் பற்றி அறிவதற்கு நல்ல கருவி. அதனால் தான் திருவாரூரிலும் மதுரையிலும் வெவ்வேறு நிலை இருந்ததா, ஏறக்குறைய ஒரே மாதிரி நிலை தானா என்று அறிய, விளக்கம் கேட்டேன். நன்றி.

  ReplyDelete
 10. அருமையான விளக்கம் சகோ. பலர் யாழ்ப்பாண நாயனர் என்றதும் ஈழத்தில் இருந்து வந்தவர் என நினைக்கின்றார்கள்.

  யாழ்ப்பாண உருவான கதை ஒன்று சில யாழ் வரலாறு நூல்களில் இருக்கின்றன.

  காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த வீரராகவன் என்னும் யாழ்பாணன் - இசைக் கலைஞன் .. ஈழம் சென்று 7ம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் ஆட்சி செய்த அக்கபோது மன்னனிடம் இசைப் பாடினான். அவனின் இசையில் மகிழ்ந்த அம்மன்னன் = வேண்டியதைக் கேள் என்றான். அதனால் அவன் தான் நாடாள ஒரு தேசம் வேண்டும் என்றான்.. அதனால் மக்களே இல்லாமல் இருந்த வெலிகம எனப்படும் மணற்றியை அம்மன்னன் அவனுக்குப் பரிசளித்தான்.

  இதனால் தொண்டை நாட்டுக்கு வந்த அவன் ... தமதுக் குடும்பத்தோது வெலிகம் சென்று குடியேறினான் ... அப்போது பல்லவர் ஆட்சி நடந்த காஞ்சிபுரத்தில் இருந்து சில மக்களை தமது நாட்டில் குடியேற்றும்படி கோரவே .. அதற்கு ஈடாக உப்பையும், முத்துக்களையும் தருவதாக வீரராகவன் கூறினான்.

  அதன் பின்னரே காஞ்சிபுரத்தில் இருந்து பலர் சென்று வெலிகமவில் குடியேறினார்கள். அதன் பின் வீரராகவன் ஒரு நகரை உருவாக்கி அதற்கு யாழ்ப்பாணன் பட்டினம் எனப் பெயரிட்டான் ... அதனால் அது யாழ்ப்பாணம் என மாறியது.

  இன்றளவும் யாழ்ப்பாணத்தில் தொண்டமனாறு என்னும் ஊரு உள்ளது ... அது தொண்டைமண்டலத்தின் நியாபகமாக ஏற்பட்டு என்பர். அதே போல யாழ்ப்பாணத்தின் மிகப் பழமையான கோயில் வல்லிபுரம் விஷ்ணு ஆலயம் என்பர். வல்லிபுரம் என்பது வெலிபுர என்ற இடத்தில் வீரராகவன் ஏற்படுத்திய விஷ்ண் ஆலயாமாகும்.

  வீரராகவனுக்குப் பின் அங்கு சோழர்கள் ஆட்சியில் அனைத்தும் சைவமயமானது என்பது தன் உண்மை. இந்தக் கதை உண்மையா எனத் தெரியாது. யாழ் நூல்கள் அதனைத் தான் கூறுகின்றன. ஆகையால் உண்மை இல்லாமலும் இல்லை என்பது தான் உண்மை

  ReplyDelete
 11. பாணர்கள் யாருன்னு அருமையான விளக்கம் தந்திருக்க ரவி.. பாட்டு இசைப்பவங்க தானே? எதுக்கு கோவிலுக்குள்ள எல்லாம் விட மாட்டாங்க?சரி விடு, நமக்கு எதுக்கு வம்பு..சும்மா உன் கிட்ட விளக்கம் தான் கேட்டேன்..அமலனாதிபிரான் எழுதினவரு மேல நிறைய மரியாதை, ஏன் அவரை ஒதுக்கி வெச்சிருந்தாங்கன்னு ஒரு சந்தேகம் இருந்தது..அதுனால தான் டவுட்டு கேட்டேன்

  ReplyDelete
 12. @குமரன் அண்ணா
  //ஆனால் சேக்கிழார் காலத்தில் இருந்த குமுக நிலையைப் பற்றி அறிவதற்கு நல்ல கருவி//

  Lemme disagree on this! :)

  சேக்கிழார் காலக் குமுக/சமூக நிலையை ஆராய, பெரிய புராணம் எவ்வளவு தூரம் உதவும் என்று தெரியவில்லை!
  நந்தனார், ஒரு ஆள் அரவம் இல்லாத கிராமத்திலேயே, ஆலயத்துள்ளே நுழைய முடியாதவராக இருக்கும் பட்சத்தில், தில்லையில் தீட்சிதர்கள் அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர் என்று எழுதுகிறார்! இது அக்காலக் குமுக நிலையை எப்படிக் காட்டும்? வேண்டுமானால் oppositeஆக எடுத்துக் கொண்டால் காட்டுமோ என்னவோ? :))

  * அதற்காக சேக்கிழாரின் கவியாற்றலையும் அழகுத் தமிழையும் ஒதுக்கி விட முடியாது!
  * மேலும் அடியவர்கள் தான் கருப்பொருளாக வைக்கப்பட்டு உள்ளார்கள்!
  * வயலில் நாற்று நடுவது (பதியம் வைப்பது) போல, அடியவர்களைக் கொண்டே, மேலும் பல அடியவர்களை பெருமானிடம் சேர்ப்பிக்க முடியும்!
  * அதனால் தான் அடியவர்கள் கதையை, ஆங்காங்கு காணும் கல், உமி நீக்கி, இக்கால நிலைக்கு ஏற்றாற் போல் சொல்லிக் கொண்டு வருகிறேன்!

  எங்கேனும் தவறு/பிழை தென்பட்டால், தயங்காது சுட்டிக் காட்டவும்!

  ReplyDelete
 13. //அதனால் தான் திருவாரூரிலும் மதுரையிலும் வெவ்வேறு நிலை இருந்ததா, ஏறக்குறைய ஒரே மாதிரி நிலை தானா என்று அறிய//

  ஆரூர் = தில்லையினும் தொன்மையானது திருவாரூர்!

  * வைணவத்துக்கு திருவரங்கம் போல், ஒரு காலத்தில் சைவத்தின் தலைநகரமும் இதுவே!
  * இன்றளவும் தேவாரத் திருமுறைகளில், ஆரூருக்கே அதிக பாடல்கள்!
  * ஆரூரில், ஓதுவார்கள் தேவாரம் ஓதும் போது, "திருச்சிற்றம்பலம்" என்று முடிப்பதில்லை! சிற்றம்பலம் சிதம்பரத்தைக் குறிப்பதால், அதனினும் மிக்க ஆரூரில், அதைச் சொல்லும் வழக்கம் இல்லை!

  ஆருரைப் போலவே தான் தில்லை கட்டப்பட்டிருக்கு!
  மூலவராக லிங்கம் இருந்தாலும், தியாகேசருக்கே அதிக முக்கியத்துவம்! அதே போல் தான் தில்லையிலும்! நடராஜருக்கே முதலிடம்!
  வீடு போல ஓடு வேய்ந்த கூறை, ஆயிரங்கால் தேவாசிரிய மண்டபம், கோயில் பாதி குளம் பாதி என்று பல ஒற்றுமைகள்!

  திருவாரூர் போய் இருக்கீங்களா குமரன்?

  அங்கு முருகனின் ஒயில் எனக்கு ரொம்பப் பிடிக்கும்! ஸ்டைலா இருப்பான்! பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டேன்! பிச்சி ஆனேன்! :)

  ReplyDelete
 14. ஆரூர்-ன்னு சொல்லி இப்போ என்னை romance-க்கு தள்ளுறீக:)

  ஆரூர் முருகன் ஸ்டைல் பத்தி நினைக்கச்சொல்ல...இந்தத் திருப்புகழ் தான் ஓடியாரும்! தாலாட்டு ஸ்டைலில் சூப்பரா இருக்கும்! எனக்கு அவன் கால் பிடிச்சி விட்டு தூங்க வைக்கறாப் போலவே இருக்கும் :)

  பாலோ தேனோ பாகோ வானோர்
  பாரா வாரத்(து) அமுதேயோ
  தாலோ தாலே-லோபா டாதே
  தாய்மார் நேசத்(து) அனுசாரம்

  ஆலோல் கேளா மேலோர் நாண்மால்
  ஆனா தேனல் புனமே போய்
  ஆயாள் தாள்மேல் வீழா வாழா
  ஆளா வேளைப் புகுவோனே!

  சேலோ(டே) சேர் ஆரால் சாலார்
  சீர் ஆரூரில் பெருவாழ்வே
  சேயே வேளே பூவே கோவே
  தேவே தேவப் பெருமாளே!!

  ReplyDelete
 15. @சரவணன் அண்ணா
  //பாட்டு இசைப்பவங்க தானே? எதுக்கு கோவிலுக்குள்ள எல்லாம் விட மாட்டாங்க? சரி விடு, நமக்கு எதுக்கு வம்பு..சும்மா உன் கிட்ட விளக்கம் தான் கேட்டேன்..//

  இது அக்கால நிலைமை! அதுக்கு நாம ஒன்னும் பண்ண முடியாது-ண்ணா! You can never apply today's correction to yesterday's mistake! இன்னிக்கும் தொடராம இருந்தாச் சரி!

  ஆனா தொடருது!
  "சாதி" ரூபமாக இல்லாமல் "பண" ரூபத்தில்!

  பணம் இருந்தா கிட்டக்கப் போய்ப் பார்க்கலாம்! மத்தவாள் எல்லாம் எட்ட நின்னு சேவிச்சாலே போதும்! :((

  திருப்பதி-திருமலையில் இந்த அடாவடித்தனத்துக்கு நடுவே ஒரேயொரு ஆறுதல்:
  பணத்துக்குத் தனி வரிசை போட்டாலும், கருவறைக்கு முன் எல்லா வரிசையும் ஒன்னாக் கலந்து விட்டுறானுங்க!
  எம்புட்டுக் காசு குடுத்தாலும், எம்பெருமான் முன்னாடி, ஏழை பாழையோடு இடிபட்டுத் தான் பார்த்தாகணும்!

  ஆனா காஞ்சிபுரம், அல்லிக்கேணி, வடபழனி-ன்னு பல பெருமாள், முருகன் கோயில்ல எல்லாம் ஸ்பெசல் டிக்கெட்டு இல்லீன்னா எட்டி நின்னு தான் சேவிக்கணும்!
  சிதம்பரம் இன்னும் மோசம்! காசு குடுக்காட்டி பொன்னம்பலத்தில் ஏறி நின்னே பாக்க முடியாது! படிக்கட்டுக்கும் கீழே நின்னு தான் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் சுமாராப் பார்க்க முடியும்! ஒன்லி பால்கனி தரிசனம்! :((

  வடபழனி ஆலயத்துள் ராகவன், மற்றும் அம்மா-அப்பா கூடச் சேர்ந்து போன போது, மற்ற பக்தர்கள் எல்லாம் எட்டி நின்னு சேவிக்க, நாங்க மட்டும் உள்ளே போகும் போது, கூசிச்சி! ஏதோ அவிங்க எல்லாம் என்னையே பாக்குறாப் போல ஒரு குற்ற உணர்வு!
  ஆனா, நெரிசலில், அம்மா-அப்பாவின் வயது கருதி, போனோம்! நானும் ராகவனும் மட்டும் போயிருந்தா அப்போ விஷயமே வேறு!

  நாட்டுல ரெண்டே தரிசனம் - தர்ம தரிசனம்/அதர்ம தரிசனம்!
  இதுக்கு, Church, Mosque எல்லாம் எவ்ளோ தேவலை! இராமானுசர் இன்னிக்கி இருந்தார்-ன்னா, கோயில் கொட்டத்தை நொறுக்கி இருப்பாரு!

  பந்தல் வாசகர்களுக்கு:
  கூடுமானவரை, "அதர்ம தரிசனம்" செய்யாதீங்க!

  எப்ப மாறுதோ அப்போ மாறும்! அது வரை, ஓய்வான வேளைகளைத் தேடிப் பிடித்து, கூட்டமில்லா நேரங்களில் தரிசனம் செய்யலாம்! அதான் உற்சவர் வெளியே வராரே! அவரைக் கிட்டக்கப் பார்த்தாலும் அழகு தான்! அமைதி தான்!

  ReplyDelete
 16. //அமலனாதிபிரான் எழுதினவரு மேல நிறைய மரியாதை, ஏன் அவரை ஒதுக்கி வெச்சிருந்தாங்கன்னு ஒரு சந்தேகம் இருந்தது..அதுனால தான் டவுட்டு கேட்டேன்//

  திருப்பாணாழ்வாரை ஒதுக்கித் தான் வச்சாங்க! காரணம் = அக்கால அதிகாரமான ஜாதி!
  அவரு பாணர் குலம்! நரம்பு, தோல்-ன்னு பதப்படுத்திக் கருவி செய்யறவனை எப்படிக் கோயிலுக்குள்ளாற விடுவாங்க? கோயில் என்பது அதிகார மையம் ஆச்சே!

  ஆனா அப்படி ஒதுக்கி வச்சதை மறைக்காமல், நந்தனார் கதையைப் போல் "நைசாக" மாத்தாமல், உண்மையாகப் பதிந்து வைத்தன வைணவ இலக்கியங்கள்! அந்த அதிகார மையத்தைக் கண்டனமும் செய்தன!

  லோகசாரங்கர் என்னும் அரங்கன் கோயில் அர்ச்சகர் கல்லால் அடிச்சி, திருப்பாணாழ்வார் நெற்றியில் ரத்தம் கொட்டியது என்பதை "மறைக்காமல்" எழுதின! வாங்கோ வாங்கோ ஆனால் தீயிறங்கிப் புனிதப்படுத்திக்கிட்டு வாங்கோ-ன்னு அர்ச்சகர்கள் வரவேற்றார்கள்-ன்னு எல்லாம் மாற்றி எழுதலை!

  அப்படி அடிச்ச அர்ச்சகர், அடியார் பழித்தலுக்கு ஆளாகி, கண் பார்வை மந்தமாகிப் போக, குருடன் போல் தடவித் தடவித் தான் கருவறைக்குச் செல்ல முடிந்தது! அவர் கனவில் ஏதோ ஒன்று உணர்த்தப்பட, வெட்கம் பாராது, மன்னிப்பு கேட்டார்! கண்ணு போனாலும் ஆச்சாரம் போகக் கூடாது-ன்னு சொல்லலை!பாணரைச் சுமந்து வந்தார்!பாணரிடம் மன்னிப்பு கேட்டார்! இதையும் அப்படியே எழுதின வைணவ இலக்கியங்கள்!

  இந்த நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டு தானோ என்னமோ, இன்னொரு ஆழ்வாரான தொண்டரடிப்பொடிகள்...தன் பாசுரத்தில் இந்த அதிகார மையத்தை ஓப்பனாகச் சாடி, சாதி பார்த்தவர்களை வாங்கு வாங்கு-ன்னு வாங்குகிறார்!

  அமர ஓர் அங்கம் ஆறும்
  வேதம் ஓர் நான்கும் ஓதி
  தமர்களில் தலைவர் ஆய
  சாதி அந்தணர்கள் ஏலும்

  நுமர்களைப் பழிப்பார் ஆகில்
  நொடிப்பதோர் அளவில் ஆங்கே
  அவர்கள் தாம் புலையர் போலும்
  அரங்க மா நகருளானே!

  இப்படி வேதம் ஓதும் அர்ச்சகர்கள் தான் புலையர்-ன்னு சொல்லும் அறத்துணிவை, அதுவும் அக்காலத்திலேயே...இதை வேறெங்கும் நான் காண்டதில்லை! அதனால் தான் "நைசாக" மேற்பூச்சுகள் பூசாத நாலாயிரம் என்னளவில் பிடித்துப் போனது!

  மற்றபடி சேக்கிழாரின் இலக்கியச் சுவை, ஈசனை அவர் வருணிக்கும் விதம் எல்லாம் மிகவும் பிடிக்கும்! அவருக்கு என்ன compulsion-ஓ என்னமோ? :(

  ReplyDelete
 17. இக்பால் செல்வன்
  வாங்க, வணக்கம்! தகவல்கள் நிறைந்த பின்னூட்டத்துக்கு நன்றி!

  //காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த வீரராகவன் என்னும் யாழ்பாணன்//

  நீங்கள் சொன்னதால் நானும் தேடிப் பார்த்தேன்! இதோ திண்ணைக் கட்டுரை! நல்லூரும் யாழ்ப்பாணமும்

  ஆனால் வீரராகவன் என்ற பெயர் சற்றே இடிக்கிறது! நிச்சயம் அவர் அந்தகக் கவி வீரராகவராக இருக்க முடியாது! அவர் அருணகிரியார்/வில்லிபுத்தூரார் சமகாலத்தவர்! 15th CE!
  மற்றபடி தொண்டமணாறு போன்ற பெயர்களை மட்டுமே வைத்துக் கொண்டு முடிவுக்கு வர முடியாது! மேலும் வரலாற்று ஆய்வு தேவை!

  ஈழத் தமிழர்களின் வரலாறு இன்னும் தொன்மையானது! Not just 15th CE! ஐந்து-ஏழாம் நூற்றாண்டான ஞான சம்பந்தரும் ஈழம் பற்றிப் பாடியுள்ளார்! முதலாழ்வார்கள் குறிப்பும் உள்ளது!
  அதற்கும் முன்பே சிலப்பதிகாரம், ஈழ மன்னன் கண்ணகி கோட்டத்துக்கு வருகை தந்தது பற்றியும் பேசுகிறது! ஆனால் பேசுபொருள் ஈழம் அல்ல, யாழ்ப்பாண நகரம் மட்டுமே என்பதால், இன்னும் ஆய்வு தேவை!

  வல்லிபுர ஆழ்வார் திருமால் ஆலயம் மிகத் தொன்மையானதே!
  ஆனால் அதை மட்டுமே வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மன்னர்கள் ஆரம்ப காலத்தில் வைணவம் சார்ந்து இருந்தார்கள் என்று அவசரப்பட்டு முடிவு கட்ட மாட்டேன்!

  //வீரராகவனுக்குப் பின் அங்கு சோழர்கள் ஆட்சியில் அனைத்தும் சைவமயமானது என்பது தன் உண்மை//

  :)
  ஈழம் வென்ற முதலாம் பராந்தகன் முதற்கொண்டு பெரும்பாலான சோழர்கள் பிற சமயங்களை ஒதுக்கவில்லை! ஆனால் பெரிதும் ஆதரித்தது சைவ சமயமே என்பது வெள்ளிடை மலை!

  எதுவாயினும் யாழ்ப்பாண நகர வரலாற்று ஆய்வு, அகழ்வாராய்ச்சி எல்லாம் பல அரிய தகவல்களைக் கொண்டு வரும்!
  ஆனால் அதான் யாழ் நூலகத்தையே கொளுத்திட்டாங்களே! தமிழரின் மனித உயிர்களே அல்லாடும் போது, இப்போது ஆராய்ச்சியெல்லாம் பின்னணி தான்! முன்னணியாகச் செய்ய வேண்டுவன நிறைய உள!

  ReplyDelete
 18. //மற்றபடி சேக்கிழாரின் இலக்கியச் சுவை, ஈசனை அவர் வருணிக்கும் விதம் எல்லாம் மிகவும் பிடிக்கும்! அவருக்கு என்ன compulsion-ஓ என்னமோ? :(//
  படிச்சிட்டு வா.வி. சி. ( வாய் விட்டு சிரிக்கிறேன்)..

  நான் தனியாக திருமலைக்கு போனப்ப எல்லாம் தரும தரிசனத்தில தான் போயிருக்கேன்..இனிமேல் அதர்ம தரிசனம் செய்யாம இருக்க முயற்ச்சி செய்யறேன்..

  ReplyDelete
 19. அதர்ம தரிசனமோ, தர்ம தரிசனமோ, இறைவன் சந்நிதியிலும், எனக்கு கார் கொடு, வீடு கொடு, என் பிள்ளைக்கு வேலை கொடு என்றெல்லாம் நம்மைப் பற்றியே நினைக்காமல், அவன் புகழைப் பாடி, அவனை நினைந்து வரவேண்டும்.
  அதை மறந்து விட வேண்டாம்.

  ReplyDelete
 20. //எனக்கு கார் கொடு, வீடு கொடு, என்றெல்லாம் நம்மைப் பற்றியே நினைக்காமல், அவன் புகழைப் பாடி//

  இது நெம்ப கஷ்டம் :)
  வீடு கொடு = பறை தருவாய்
  நகை கொடு = சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
  :))))

  பரவாயில்லை! மொதல்ல அப்படித் தான் கேட்கத் தோனும்! Atleast கண்ட இடத்தில் கேட்காம, லஞ்சம் மூலமாக் கேட்காம, அவன் கிட்டயே டைரக்ட்டா கேக்குறது ஒரு வகையில் நல்லது தான்!

  கொஞ்சம் கொஞ்சமா, அவனைப் பார்த்துப் பார்த்து, அவன் திருமேனி அழகில் மயங்க மயங்க...இதெல்லாம் மறந்து போய், உன்னைக் கொடு, உன்னைக் குடு, என்னைத் தருவேன்-ன்னு வந்து நின்னுரும்! :)

  ReplyDelete
 21. ஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன். தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் ...நன்றி
  அன்புடன்
  வேல்தர்மா
  ஜெர்மனி

  தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
  முகவரி:
  http://www.devarathirumurai.wordpress.com

  www.devarathirumurai.blogspot.com

  தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது.

  ReplyDelete
 22. Profile போட்டோ பார்த்துட்டு நேராக வந்துட்டேன்....;)))

  கலக்குறிங்க தல ;)

  ReplyDelete
 23. //ANGOOR said...
  ஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன்//

  நன்றி வேல்தர்மா!

  //தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் ..//

  :)
  சிவப் பணி = ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

  ReplyDelete
 24. @கோபி
  //Profile போட்டோ பார்த்துட்டு நேராக வந்துட்டேன்....;)))//

  மாப்பி, ஒனக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆயிருச்சி!:)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP