Showing posts with label தமிழிசை. Show all posts
Showing posts with label தமிழிசை. Show all posts

Saturday, May 26, 2012

திருப்புகழ் Geographic Atlas!

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
இந்த இனிய செய்தியை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்!

Thirupugazh Geographic Atlas என்ற அடியேனின் சிறு பணியை,
முருகனின் தனிப்பெரும் தளமான, murugan.org இல் பதிப்பித்துள்ளார்கள்!

மேலே வாசிங்க:)

திருப்புகழ் = தமிழ்க் கடவுளாம், காதல் முருகன் மீதுள்ள தமிழ் மாலை!
* "முத்தைத் தரு" ன்னு துவங்கி....
* "ஏறு மயில் ஏறி" ன்னு நிறையும்!

இந்த ரெண்டு பாடலையும் விட்டுட்டுப் பார்த்தால்....
மீதமுள்ள பாடல்கள் பெரும்பாலும், Murugan Atlas or Murugan Map என்றே சொல்லிவிடலாம்!
ஒவ்வொரு ஊராக, அந்தந்த முருகன் மேல் பாடப்பட்டவை!

திருப்புகழ் தோன்றிய இடம்:
* திருவண்ணாமலை (அருணகிரி) = 79
* வயலூர் = 18

அறுபடை:
* திருப்பரங்குன்றம் = 14
* திருச்செந்தூர் = 83
* திரு-ஆவி-நன்-குடி (பழனி) = 97
* திரு-ஏர்-அகம் (சாமிமலை) = 38
* திருத்தணிகை = 64
* பழமுதிர்சோலை = 16

* வள்ளிமலை = 10
* தமிழ் ஈழம் = 15
.....இன்னும் பலப்பலச் சிற்றூர்கள்/ பேரூர்கள்


Hey, அங்கே வா, இங்கே வா ன்னு கூப்பிட்டுக் கூப்பிட்டு, பல ஊர்களைக் காட்டினான்!
அருணகிரியும், அவன் கூப்பிட்ட ஊருக்கெல்லாம் போய், தலம் தலமாகப் பாடியுள்ளார்!

ஒவ்வொரு பாட்டிலும், அந்த ஊரின் கதையோ, வரலாறோ கூட ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்!
= தமிழக ஊர் ஆய்வாளர்களுக்கு இது ஒரு ஆய்வுச் சுரங்கம்!

பல பதிப்பகங்கள், திருப்புகழைப் பதிப்பித்துள்ளன!
அவை சமய அளவில் மட்டும் இருக்கும்!
ஆனா இன்னும் துழாவினால், தமிழக ஊர்ப் பெயர் ஆய்வுகள், இசைக் குறிப்பு ஆய்வுகள் ன்னு....திருப்புகழ் = ஒரு கருவூலம்! புதையல்!!





அத்தனை திருப்புகழ் ஊர்களையும், ஒரே வரைபடத்தில் (Map), ஒன்னாத் திரட்டி...
* அந்தந்தப் புள்ளிகளின் மீது உலாவினால் = ஊர்ப்பெயரும்
* அந்தந்தப் புள்ளிகளைச் சொடுக்கினால் = அந்தந்தத் திருப்புகழும்
வருமாறு, ஒரு சின்ன பணியை - பலநாள் ஆசையைச் செய்த நிறைவு! இதோ உங்கள் Murugan Atlas:))
------------------------------------------------------------------------------------------------------------

இதை, தோழன் இராகவன் பிறந்தநாளான இன்று (May-27-2012).....
திருமுருகனின் மயில் கழுத்தில்...
மாலையாக அணிவித்துப் பணிகிறேன்!
Happy Birthday Ragava!:)



குறிப்பு:
1. காதல் முருகனின் இடுப்பு = Hairpin Bend! Plz drive with caution:)

2. திருப்புகழை வெறுமனே படிச்சாப் பிடிபடாது;
பாடணும் (அ) வாய்விட்டுப் படிக்கணும்! அப்போ தான் அந்தச் சந்தம் கொஞ்சும்!

3. திருப்புகழ், எனக்கு முதல் அறிமுகம், அம்மாவின் தங்கையான சுகுணாச் சித்தியின் வீட்டில்!
May be 4th-5th std! சும்மா பத்தோட பதினொன்னா, ஏதோவொரு சாமிப் புத்தகமா இறைஞ்சிக் கிடந்தது....
ஓவியத்தில் அன்பு மிக ஊறி
ஓம் எழுத்தில் அந்தம் அருள்வாயே!
படித்தவுடன் என்னமோ செய்ய....அவர்கள் வீட்டில் இருந்து திருடிக் கொண்டு வந்தது!:) Lifco பதிப்பக, Blue Color Book is still there, torn & ottufied with tape:))



இந்த Murugan Atlas முயற்சிக்கு நன்றி:
1. murugan.org editor, Mr. Patrick Harrigan
2. kaumaram.com, for their pdf links
3. VTS = VT சுப்ரமணியப் பிள்ளை

VTS = திருப்புகழ் ஓலைச்சுவடிகளை ஊர் ஊராகச் சென்று சேகரித்தவர்,.... உவேசா வின் சேகரிப்புக்கெல்லாம் முன்னாலேயே...
இன்றும், திருத்தணிக் கோபுரத்தைப் பார்த்தவாறு மண்ணில் உறங்கும் எளிய மனிதர் = VTS!
மொத்தம் 16000 பாடல்கள் என்பார்கள்! கிடைத்தது = 1328 பாடல்களே!



பின்னூட்டம் (Feedback):
இந்த Thirupugazh Geographic Atlas இல் வேறேதேனும் Idea, Suggestion, Improvement - உங்களுக்குத் தோன்றினால்....
பின்னூட்டமாகவோ, மின்னஞ்சலிலோ சொல்லவும்! (shravan.ravi@gmail.com)
----------------------

இராகவனுக்கு இனிப்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Read more »

Thursday, May 26, 2011

ஈழம்: "யாழ்ப்பாண" நாயன்மார்?

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்! சிவனருட் செல்வரான நாயன்மார்களின் கதையைப் "புராண மிகை" இன்றிச் சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக...
இன்று திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்! (இசைப் பதிவு)

அது என்னாங்க "யாழ்ப்பாணம்"? = ஈழத்தின் சோகம்? :(
ஆங்கிலத்தில் திரிந்ததோ......Jaffna! வெறும் சொல் தான்!
சிங்களத்தில் திரிந்ததோ........வாழ்க்கை என்ற பெருங் கனவு!

திருநீலகண்ட "யாழ்ப்பாண" நாயனார் = இவருக்கும் ஈழத்துக்கும் என்ன தொடர்பு?
பொதுவாகவே ஈழத்தில் சைவம் அதிகம்; வைணவம் குறைவு! பொன்னாலை, துன்னாலை, வல்லிபுர ஆழ்வார் = இவை மட்டுமே இன்னொரு தமிழ்க் கடவுளான திருமாலின் தொன்மையான ஆலயங்கள்!

அப்படியிருக்க, யாழ்ப்பாண நாயனார் = ஈழத்தில் இருந்து தோன்றிய ஒரே நாயன்மார் இவர் தானா?
அவரின் குருபூசை (நினைவு நாள்) இன்று! வைகாசி மூலம் (May 20, 2011)...பார்க்கலாமா கதையை?


யாழ்ப்பாணம் = யாழ்+பாணம்
* யாழ் = பண்டைத் தமிழிசைக் கருவி (இன்றைய வீணை போல)
* பாணம் = பண் என்ற வேர்ச்சொல்! பண்=ராகம்! அதை இசைக்கும் பாணர்கள்! அவர்கள் வாழ்ந்த இடம் பாணம்!

சங்க காலத்தில் கவிஞர்/புலவர் என்பவர்கள் கவிதைகளை எழுத மட்டுமே செய்வார்கள்! அதற்கு இசை அமைத்து, பண் கூட்டிப், பாடவும் செய்பவர்கள் யார்?=பாணர்கள்!
எ.கா: கண்ணதாசன் = கவிஞர்; எம்.எஸ்.விஸ்வநாதன் = பாணர் :))

பாணர்கள் பெரும்பாலும் நாடோடிகள்! ஊர் ஊராகச் சென்று கலையில் ஈடுபட்டு மகிழ்ந்தும் மகிழ்வித்தும் வாழுபவர்கள்! பாணருக்குத் துணை=விறலி! நாட்டியம் செய்வோள்!
ஆக, கவிஞர்-பாணர்-விறலி = இயல்-இசை-நாடகம்! புரிகிறது அல்லவா?

தமிழிசைக்கு உண்டான இருபெரும் கருவிகள் = யாழ், குழல்! குழலி இனிது யாழ் இனிது என்ப, தம் மக்கட் மழலை சொல் கேளாதவர்!
இதில் குழல், தமிழ்க் கடவுளான மாயோனுக்கு உரியது! ஒரு சில பாணர்கள் யாழிலே வல்லவர்கள்! இன்னும் சிலர் குழலில் வல்லுநர்கள்! ஆக..யாழ்ப்பாணம் = யாழில் வல்ல பாணர்கள் தங்கிய குடி!

ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் பல யாழ்ப்பாணங்கள் உண்டு!
எப்படி ஆயர்ப்பாடி = ஆயர்கள் தங்கிய பாடிகளைக் குறிக்குமோ,
அதே போல் யாழ்ப்பாணம் = பாணர்கள் தங்கிய ஊரைக் குறிக்கும்!

ஆனால் ஈழத்தில் இருக்கும் பாணர் குடியே மிக்க புகழுடன் சிறந்து விளங்கியதால், அதுவே நாளடைவில் "யாழ்ப்பாணம்" என்று ஆயிற்று! (ஏழ்-பனை நாடு என்பதே யாழ்ப்-பாணம் எனத் திரிந்தது என்பாரும் உளர்)


அப்போ, திருநீலகண்ட "யாழ்ப்பாணர்" மட்டுமே ஈழத்தில் இருந்து வந்த ஒரே நாயன்மாரா?
=
இல்லை! நாயன்மார் வரிசையில், ஈழத் தமிழர்கள் யாரும் வைக்கப்படவில்லை!

நீலகண்டர் பேரில் "யாழ்ப்பாணம்" இருப்பதால் தான் இந்தக் குழப்பம்! ஆனா இவரோட ஊர், தமிழகம்! நடுநாட்டில் இருக்கும் எருக்கத்தம் புலியூர்!
=> திருநீலகண்ட+யாழ்ப்பாணர் = யாழிலே வல்ல பாணர் குடியில் பிறந்த நீலகண்டர் என்றே கொள்ள வேணும்!

ஆடல் வல்லான் நம் சிவபெருமானை, புலி(முனிவன்) வழிபட்ட இடங்கள் ஐந்து! அவையே=புலியூர்!
1. திருப்பாதிரிப் புலியூர்
2. எருக்கத்தம் புலியூர்
3. ஓமம் புலியூர்
4. பெரும் புலியூர்
5. பெரும்பாற்றப் புலியூர் (தில்லை)

இதிலே எருக்கத்தம் புலியூரிலே தோன்றியவர் திருநீலகண்டர்! பல இசை நுணக்கங்களைக் கற்றார்! யாழில் ஏழிசை மீட்டி வல்லவர் ஆனார்! அத்தனையும் சிவபெருமான் புகழ் பாடும் இசை!
இவருடைய மனைவி: மதங்க சூளாமணி! நாட்டியப் பேரொளி! கணவனும் மனைவியுமாக சிவத் தொண்டில், இசையில் காலம் கழித்தார்கள்!

ஒருமுறை இருவரும் மதுரைக்குச் சென்றார்கள்! கோயில் பிரகாரத்தில் உட்கார்ந்து யாழ் மீட்டினார் நீலகண்டர்!
தரையோ ஈரம்! சதசத! கீழே ஊன்றிய யாழின் நரம்பு இதனால் கெட்டு விடுமே! யாழின் நரம்பு தளர்ந்தால், இசை என்னவாகும்?

ரசிகமணியான சிவபெருமான், அடியவர்கள் கனவிலே தோன்றி, பாணருக்குப் பலகை செய்து கொடுக்கச் சொன்னார்!
அவர்களோ இசைக்காக் ஆர்வத்தால், பொற்பலகையே செய்து கொடுக்க, அதில் அமர்ந்து யாழ் மீட்டினார் நீலகண்டர்!

பின்னர் பல திருத்தலங்களுக்குச் சென்று, தமிழிசை பரப்பினார் நம் பாணர்! பொதுவாக ஞானசம்பந்தரின் பாடல்களை யாழில் மீட்டுவதே அவருடைய வழக்கம்! இருவரும் சம காலத்தவர் அல்லவா!

திருவாரூருக்கு வந்து சேர்ந்தார் நீலகண்டர்! ஆனால் ஆலயத்துக்குள் செல்ல முடியவில்லை! அவர் குடிப்பிறப்பே காரணமாம்! :(
பாணர் வெளியில் இருந்தே வாசிக்க, இசைக்கு மயங்கி, நேர் வழியாக இல்லாமல், வடக்கு வாசல் வழியாக, கொஞ்ச நேரம் உள்ளே வர "அனுமதித்தாராம்" ஈசன்! = இது மூல நூலான திருத்தொண்டர் திருவந்தாதியில் இல்லை! ஆனால் சேக்கிழார் மட்டும் இவ்வாறு பெரிய புராணத்தில் சொல்கிறார்!

இதை எடுத்துக் கொள்வதா? வேண்டாமா? என்பதை அவரவருக்கு விட்டு விடுகிறேன்!
ஈசன் நந்தியையே விலக்கி, ஊர் அறிய ஒரு அடியவனின் பெருமையைக் காட்டிக் கொடுப்பாரே அன்றி, "புறவாசல் வழியா வந்துக்கோ" என்றெல்லாம் சொல்ல மாட்டார்! ஈசனின் "கருணை"த் திறம் அத்தகையது! அதை "உணர்ந்தாலே" போதும்!

கந்தர்வக் குரலோன் யேசுதாஸ், மலையாள ஆச்சார சீலர்களின் கெடுபிடியால், இன்றும் குருவாயூர் கோயிலுக்குள் நுழைய முடியாமல், வெளியில் இருந்தே பாடுவது போல் அல்லவா இருக்கு? :(
* மாற்று மதத்தவரான யேசுதாஸ், "மானம் பார்க்காது", அவன் ஒருவனுக்காகவே வெளியில் நிற்கும் மாட்சி எங்கே?
* இன்றைய சங்கராச்சாரியார்கள், அரசு மரியாதை கிடைக்கலை-ன்னு, இராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்தைப் புறக்கணிக்கும் "மாட்சி" எங்கே? முருகா! :(


ஆளுடைய பிள்ளையான திருஞான சம்பந்தர்!
அவர் பாடல்களைத் தானே நம்முடைய பாணர் தன்னோட யாழில் மீட்டுகிறார்? சம்பந்தரைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது அவருக்கு!
கவிஞனைக் காணத் துடித்த ரசிகன்! பதிவரைக் காணத் துடித்த வாசகன்!:) உடனே செல்கிறார் சீர்காழிக்கு!

முன் பின் பார்த்துக் கொள்ளாத இருவரும், கலையால்-இசையால்-தமிழால் ஒன்றுகின்றனர்!
அவர் பாட்டை இவர் வாசித்துக் காட்ட...இவர் வாசிப்புக்கு அவர் பாட...நட்பு இறுகி வெள்ளம் போல் ஓடுகிறது! ஆனால் ஆனால் ஆனால்.....

சம்பந்தப் பிள்ளை கொஞ்சம் "டகால்ட்டிப்" பிள்ளை போல! :) வம்பு செஞ்சி பார்க்கத் துடிக்கிறது! :)
யாழில் வாசிக்கவே முடியாத ஒரு கடினமான பாட்டை, வேண்டுமென்றே ஒரு வித்தியாசமான மெட்டில்...எழுதிக் காட்டுகிறது! = யாழ் முறிப் பண்!

இந்த விளையாட்டு நம் பாணருக்குத் தெரியவில்லை! தோழனின் பாட்டுக்கு இசையமைக்க முடியலையே என்று நொந்தே போய் விட்டார்!
அச்சோ, தோழனின் பாட்டை வாசிக்கவும் வக்கில்லாத எனக்கு எதற்கு யாழ்? என்று அதை முறித்துப் போட முயல...

ஆகா! "தோழனைக் கும்மியடிக்க நினைத்த நான் எங்கே, எனக்காகத் தன் இசையையே ஒடுக்கத் துணிந்த தோழன் எங்கே?" - என்று கலங்கினார் சம்பந்தப் பெருமான்! யாழை முறிக்கவிடாமல் தடுத்து, இரு கைகளையும் அப்படியே அணைத்துக் கொண்டார்!

இந்த யாழ்முறிப்பண் தான், பின்னாளில் அடாணா ராகம் ஆகி, இன்றும் கச்சேரிகளில் பாடுகிறார்கள்! யார் தருவார் இந்த அரியாசனம்-ன்னு சரஸ்வதி சபதம் படத்தில் சிவாஜி கலக்குவாரே! அது இந்த அடாணா தான்!



சம்பந்தரின் திருமணப் பேச்சு நிச்சயிக்கப் படுகிறது சைவப் பெரியவர்களால்! ஆனால் அவருக்கோ திருமணத்தில் நாட்டமில்லை!
ஆனாலும் உடன்படுகிறார்! நல்லூரில் திருமணத்தின் போது ஏற்படும் பெரும் தீயில்/ஜோதியில் மணமகன் சம்பந்தர் முதலான அனைவரும் உட்புக...
சம்பந்தரின் தோழரான திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உட்புகுகின்றார்! அதுவே இந்நாள்! வைகாசி மூலம்! குருபூசை!

இதே நாளில், இதே திருமணத்துக்கு வந்த, இன்னும் இரண்டு நாயன்மார்களும் மறைந்து போகிறார்கள்!
* முருக நாயனார் - இவர் சிவபூசைக்குப் பூத்தொடுத்து வாழ்ந்தவர்! அதற்கு மேல் வாழ்க்கைக் குறிப்பு கிடைக்கவில்லை!
* நீலநக்க நாயனார் - சிவலிங்கம் மேல் துப்பிய அவர் மனைவி - முன்பே பந்தல் பதிவில் பார்த்துள்ளோம்! இங்கே!

நீலகண்டர் என்ற அதே பேரில் இன்னொரு நாயன்மாரும் இருப்பதால் (மனைவியைத் தொடாது வாழ்ந்த திருநீலகண்டக் குயவனார்)...,
நம் பாணரைத் "திருநீலகண்ட யாழ்ப்பாணர்" என்று சேர்த்து அழைப்பதே வழக்கம்!


தேவாரத்தில் இடம் பெற்றுள்ள பண்கள், மொத்தம் = 21

பகற் பண், இராப் பண், பொதுப் பண்கள் என மூன்று வகை!
* பகலில் பாடுவது = காந்தாரம், இந்தளம், நட்டபாடை முதலான 10 பண்கள்
* இரவில் பாடுவது = தக்கராகம், மேகராக குறிஞ்சி முதலான 8 பண்கள்
* பொதுப் பாட்டு = செவ்வழி, தாண்டகம் முதலான 3 பண்கள்

அப்பர் சுவாமிகள் (திருநாவுக்கரசப் பெருமான்) மட்டுமே, தமிழிசைப் பெரும் தொண்டாக...வேறு எவருமே பாடாத, 4 புதிய பண்களை உருவாக்கி அமைத்தார்! = தாண்டகம், நேரிசை, இந்தளம், விருத்தம்!

பின்னாளில்...சிதம்பர "மகாமகோபாத்யர்களால்" தேவார ஓலைச்சுவடிகள் கரையான் பிடித்த போது...
அதை மீட்டெடுத்து, கிடைத்தவற்றை மட்டும் வகுத்துக் கொடுத்தார் நம்பியாண்டார் நம்பி! ஆனால் அவரால் இசைப் பண்கள் என்னவென்று அறிய முடியவில்லை! தேவாரப் பாட்டிலும் அதற்கான குறிப்பில்லை!

ஆனால்....இறைவன் அருளால்...நம் "யாழ்ப்பாணர்" மரபிலே தோன்றிய பெண் ஒருத்தி, அதே எருக்கத்தம் புலியூரில் வாழ்பவள்...அவள் தான், "இது தான் இந்தப் பாட்டுக்குப் பண்ணாக இருக்க முடியும்" என்று எல்லாத் தேவாரப் பதிகத்துக்கும் வகுத்துக் கொடுத்தாள்! "தல-முறை"யில் அடுக்கப்பட்ட தேவாரம், "பண்-முறை"க்கு மாறியது!

தாயீ...உன் பேரை இவங்க சொல்லலை! இருந்தாலும் நீ நல்லா இருக்கணும்! தெய்வத் தமிழிசைக்கு, தேவாரப் பண்ணிசைக்கு முகம் தெரியாத முதல்வளே, உனக்கு வணக்கம்!

* நாளும் தமிழிசையைப் பரப்பிய "திருநீலகண்ட யாழ்ப்பாணர்" திருவடிகளே சரணம்!
இதே நாளில் மறைந்த மற்ற நாயன்மார்களான...
* முருக நாயனார் திருவடிகளே சரணம்!
* நீலநக்க நாயனார் திருவடிகளே சரணம்!
* திருஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP