Tuesday, June 09, 2009

சிவலிங்கம் மேல் துப்பிய சைவப் பெண்மணி!

மக்கா, என்னடா இது, பதிவு ஒன்னு பின்னால ஒன்னு, தினமும் வந்துக்கிட்டே இருக்கே-ன்னு யாரும் சந்தேகப் படக் கூடாது! சொல்லிட்டேன்! ஆமா! :)
இன்னிக்கு ஞான சம்பந்தர் குரு பூஜை (Jun-09, 2009)!

ஆளுடைய பிள்ளை, நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்றெல்லாம் அவருக்கு ஏற்றம்! இன்று தமிழ்ச் சைவ சமயம் இந்த நிலையில் இருக்கிறதென்றால், அதற்கு வித்திட்ட வெற்றிப் பிள்ளை, சம்பந்தரே ஆவார்!

உமையன்னையின் முலைப்பால் உண்டு மலைப்பால் பாடிய பாடல் = தோடுடைய செவியன்! இங்கிட்டு போய் அதன் பாடலழகைப் பார்க்கலாம்!
சம்பந்தரைப் பற்றித் தான் நமக்கு நல்லாத் தெரியுமே! அதுனால நாம இன்னிக்கி பார்க்கப் போறது அதிகம் அறிமுகம் இல்லாத ஒரு நாயன்மாரைப் பற்றி! அவருக்கும் இன்று தான் குரு பூஜை!
அவர் பெயர் திருநீல நக்க நாயனார்! கேள்விப்பட்டு இருக்கீயளா?

சொல்லப் போனா அவர் மனைவிக்குத் தான் இன்னும் ஏற்றம்!
ஆனால் ஏனோ தெரியவில்லை, நாயனார் பேரைச் சொன்னவர்கள், அவர் மனைவி பற்றி வரும் போது, பேரைக் கூடச் சொல்லாமல் விட்டு விட்டார்கள்! ஏன்?

அந்தப் பெண் தான் சிவலிங்கம் மீது எச்சில் துப்பியவள்! அதுவும் கருவறைச் சிவலிங்கத்தின் மீது! - ஆகா! என்ன திமிரு? என்ன ஆணவம்? என்ன அபசாரம்?
கருவறைக்குள் பெண்கள் நுழையலாமா? நுழையத் தான் விடுவார்களா? முதற்கண் இந்தப் பெண் கருவறைக்குள் எப்படிப் போனார்? போய் எச்சிலும் துப்பினார்?

அட எப்படியோ போனார்! விடுவீங்களா! அவர் கணவர் நீலநக்கர் கோயில் வேலையில் உள்ள அந்தணர்! அவர் பணி புரிவதால் இவரும் உள்ளே போக முடிந்ததோ என்னமோ? நாம கதைக்கு வருவோம்!


சாத்தமங்கை ஆலயம் (நன்றி: templepages.com)

காவிரி பாயும் பூவிரி சோலையான சோழநாடு! அங்கே சாத்தமங்கை (சீயாத்தமங்கை) என்னும் ஊர்! நாகை-நன்னிலம் ஏரியா! திருநள்ளாற்றுக்கு அருகில்-ன்னு வச்சிக்குங்களேன்!

அங்கே அந்தணர் குலத்திலே பிறந்தவர் தான் இந்த நீலநக்கர்! வேதம் எல்லாம் கரைச்சிக் குடிச்சவர்! ஆகம விற்பன்னர்! சிவாகம விதிப்படி ஊர்க் கோயிலில் தினமும் பூசை செய்வார்! நியம நிஷ்டைகளில் இருந்து இம்மி கூட பிசக மாட்டார்! மற்ற அர்ச்சகர்களையும் பிசக விட மாட்டார்! அம்புட்டு சிம்ம சொப்பனம்! :)

ஆனால் மனத்தால் சிவபெருமான் மேல் மாளாத காதல் கொண்டவர்! ஈசனை ரொம்பவும் பிடிக்கும் அவருக்கு! ஆனால் ஆச்சாரமா? காதலா??-ன்னு வரும் போது......ஆச்சாரமே! நியமமே! என்ற கொள்கை உடையவர்! தங்களுக்கு-ன்னு "விதிக்கப்பட்டதை" தவறாம செய்யணும்-ன்னு, மாங்கு மாங்கு-ன்னு "செய்து" கொண்டே இருப்பவர்!

அன்னிக்கு சிவபெருமானுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம்! சாத்தமங்கை கோயிலுக்கு அயவந்தி என்ற பெயரும் உண்டு!
இறைவன் = அய வந்தீஸ்வரர்; இறைவி = உபய புஷ்ப லோசனி
அழகு தமிழில், நான்முக நாதர் - இருமலர்க் கண்ணி


அன்றைய ஆருத்ரா பூஜை செய்ய நீலநக்கர் கருவறைக்குள் நுழைந்தார்.
குளித்து முடித்து, குடுமியை அவிழ்த்து விட்டு, மேனியெங்கும் விபூதி மணக்க, யாரிடமும் எதுவும் பேசாமல், நமோ பவாயச, ருத்ராயச, நம சர்வாய...ன்னு முணுமுணுத்தபடி உள்ளே வருகிறார். சிற்றஞ் சிறு காலை. மெல்லிய குளிர். அபிஷேகத்தைத் துவக்குகிறார்!
பூசைப் பொருட்களும் மாலைகளும் நிறைய இருக்கு. பாரம் அத்தனையும் அவர் ஒருவராலேயே சுமக்க முடியவில்லை போலும். அவர் மனைவியும் கூடவே கூடையில் சுமந்து வருகிறார்.

மனைவிக்கு கருவறை நுழைவு புது அனுபவமோ என்னமோ, உடம்பெல்லாம் புல்லரிக்கிறது! ஆனானப்பட்ட திருமாலும் காணாத ஈசனை..........................
இவ்வளவு அருகில் இருந்து காண்கிறோமே என்ற பதைபதைப்பு போலும்! சிவ சிவ என்று அவளுக்குத் தெரிந்ததை முணுமுணுக்கிறாள்! கூடையைக் கீழே இறக்கியது தான் தாமதம்! ஐயோ....

சிவலிங்கத்தின் மேல் பெரிய விஷச் சிலந்தி!
சுதைச் சிலம்பி என்னும் கொடிய வகை! மேலே விழுந்தாலே போதும்! படபட-ன்னு கொப்புளங்கள் எழும்பி விடும்! எரிச்சல் எடுக்கும்! குளிர்ந்த நீரை ஊற்றிக் கொண்டே இருந்தாலும் அம்புட்டு சீக்கிரம் அடங்காது!

அந்தச் சிலந்தி ஈசனின் திருமேனி மீது விழுந்து கிடக்கிறது!
கருவறை உத்தரத்தில் இருந்து விழுந்ததோ இல்லை பூமாலையில் எங்காச்சும் ஒட்டிக் கொண்டு இருந்ததோ? பொதுவா ரோஜாச் செடியில் சிலந்தி வலையும் பெரும்பாலும் இருக்கும்! பார்த்து பார்த்து தான் ரோஜாவைப் பறிக்கணும்! எப்படிப் பறித்தார்களோ தெரியலையே!

தாயுள்ளம் பதறுகிறது! விடம் உண்ட கண்டனுக்கு விஷச் சிலந்தி ஆபத்தா-ன்னு எல்லாம் நினைக்கத் தோணலை அவளுக்கு!
ப்பூ...ப்பூ....த்து...த்தூதூ
ப்பூ...ப்பூ....த்து...த்தூதூ


ஊதி எடுப்பது போல் ஊதுகிறாள்!
அவள் ஊத ஊத, எச்சில் பட்டுத் தெறிக்கிறது சிவலிங்கத் திருமேனியில்!
ஆருத்ரா அதுவுமாய் எச்சிலாபிஷேகம்! உமையொரு பாகனுக்கு உமிழ் நீர் அபிஷேகம்! :)

ரெளத்திரம் ஆகி விட்டார் நீலநக்கர்! கோபம் குபுகுபு என்று பொங்குகிறது!
அவருக்குச் சிலந்தி விழுந்தது கூடக் கண்ணுக்குத் தெரியவில்லை!
கண்ணை மூடிக்கிட்டு, அவருண்டு, அவர் மந்திரம் உண்டு-ன்னு இருப்பவருக்கு கண்ணில் படவில்லை போலும்!
மனைவியின் ஊனக் கண்ணுக்குத் தெரிந்தது கூட அவர் ஞானக் கண்ணுக்குத் தெரியவில்லையோ! இது தான் அனுஷ்டான ஆழமோ?

நாயனார்: "அறிவில்லாதவளே! என்ன காரியம் செய்தாய்? புத்தி இல்லை? ஆருத்ரா அதுவுமாய் குளிரக் குளிர அபிஷேகம் செய்துண்டு இருக்கேன்! அதைக் கெடுப்பது போல் வந்து வாயால் ஊதுகிறாயே? பால் சூடாக இருக்கும்-ன்னு ஊதினாயோ? பெண் புத்தி பின் புத்தி! எத்தனை காலமாய் நம்ம வீட்டில் இருக்கிறாய்? பாலாபிஷேகப் பாலைச் சுட வைப்பதில்லை-ன்னு கூடவா தெரியாது?"

மனைவி: "ஐயோ! அப்படியில்லீங்க"

நாயனார்: "என்ன அப்படியில்லை? உன் எச்சில் பூரா, பகவான் மேல் பட்டிருக்கு! அனாச்சாரம்! துராச்சாரம்! அபசாரம்! இப்போ நான் இன்னொரு முறை முதலில் இருந்து அபிஷேகம் செய்யணும்! ச்சே!"

மனைவி: "என்னங்க! அதோ பாருங்கள்! அங்கே...அங்கே...சிலந்தி ஓடுகிறது! அதோ...அதோ...
எவ்ளோ பெரிசு பாருங்க! விஷச் சிலந்தி! ஈசன் திருமேனியில் கிடந்தது! அதான் ஊதினேன்!"

நாயனார்: "எதுக்கெடுத்தாலும் ஒரு பதிலை வச்சிருப்பியே! சிலந்தி இருந்தா அதை அப்புறப்படுத்த ஆயிரம் வழி இருக்கே! எந்த மடையனாச்சும் இப்படி ஊதித் தள்ளுவானா?"

மனைவி: "மன்னித்துக் கொள்ளுங்கள்!"


நாயனார்: "இந்தச் சிவலிங்கம் ஆகமப் பூர்வமாக ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டது-ன்னு உனக்குத் தெரியாதா? எத்தனை எத்தனை சங்காபிஷேகம் பார்த்திருக்கும் இந்தச் சிவலிங்கம்?
பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஈசனுடைய ஜீவனே இதிலே இருக்கு-ன்னு, மற்றவாளுக்கு வேணும்னா தெரியாம போகலாம்! நம்ம வீட்டுப் பொண்ணு உனக்கே தெரியலீன்னா எப்படி?"

மனைவி: "ஜீவனுள்ள பகவானாச்சே-ன்னு தான் நானும் அப்படிச் செய்தேங்க! சிலந்தி விஷம் ஏறிடுமோ-ன்னு பயம்! வீட்டில் இருக்கும் பிள்ளைகள் மேல் பூச்சி விழுந்தா ஊதுறாப் போல ஊதிட்டேன்!
ஏதோ சட்டு-ன்னு அப்போ அதான் தோனித்து! தர்ப்பைக் குச்சியால் அகற்றி இருக்கலாமோ-ன்னு இப்போ தான் தோனுது! செஞ்சது தவறு-ன்னா மன்னித்து விடுங்கள் சுவாமி!"

நாயனார்: "ஓ...ஆக......இப்போ கூட நீ செஞ்சது தவறு-ன்னு உனக்குத் தோனலை! தவறா "இருந்தா" பொறுத்துக்கோங்க-ன்னு தான் இப்பவும் பேசுற! இல்லை இல்லை! இது சரி வராது!"

மனைவி: "என்னாங்க..."

நாயனார்: "உன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பாமரத்தனமாகச் செய்யலாம்! பிற்பாடு விளக்கம் சொல்லிச் சரி கட்டிக்கலாம் என்பதெல்லாம் ஆன்மீகம் இல்லை!
அதுக்குன்னு ஒரு வரைமுறை இருக்கு! அது புரியாத உன்னோடு இனி எனக்குப் பேச்சு இல்லை! என்னை விட்டு அகன்று விடு! உன் வழியை நீ பார்த்துக் கொள்!"

மனைவி: "ஐயோ! என்னங்க இப்படியெல்லாம் பேசறீங்க? வேணாங்க! மன்னிச்சிருங்க! இல்லை வேறு ஏதாச்சும் தண்டனை கொடுங்க! ஆனா இப்படியெல்லாம் பேசாதீங்க!"

நாயனார்: "இல்லை! இனி நாம் பேருக்குத் தான் கணவன்-மனைவி! நமக்குள் எல்லாம் முறிந்தது!"

வார்த்தைகள் இடி போல் இறங்கின! மனைவி அழுதபடி கோயிலின் வாசலில் ஒதுங்குகிறாள்!
எச்சில் பட்ட தோஷத்துக்கு மீண்டும் இன்னொரு முறை பிராயச்சித்த அபிஷேகம் ஆரம்பிக்கிறார் நீலநக்கர்! தீப ஆராதனைகள் தொடர்கின்றன! சிவோஹம்! சிவோஹம்!


சாத்தமங்கை ஆலயம் (நன்றி: templepages.com)

"நீலநக்கா!"

நாயனார்: "யாரது?"

ஈசன்: "கனவில் வந்த ஈசனைக் கூட அடையாளம் காண முடியவில்லையா நீலநக்கரே? ஆகமப் பிரகாரம் வராமல் சும்மா கனவில் வந்ததால் உமக்கு அடையாளம் தெரியவில்லையோ?"

நாயனார்: "சுவாமி...தாங்களா? வர வேணும்! வர வேணும்! என் பாக்கியம்! என் குலம் செய்த பாக்கியம்! என் முன்னோர் செய்த பாக்கியம்! என் பூஜை புனஸ்காரங்கள் பொய்யாகவில்லை! ஆகா என் பூஜை புனஸ்காரங்கள் பொய்யாகவில்லை!"

ஈசன்: "ஒரு வரியில் இத்தனை "என்"-ன்னா? ஹா ஹா ஹா! பூஜை புனஸ்காரம் பொய்யாகிவிடுமோ-ன்னு சந்தேகம் வேற இருந்ததா உமக்கு? ஏன் இப்படி "பொய்யாகவில்லை, பொய்யாகவில்லை" என்று இத்தனை முறை குதூகலிக்கிறீர்?"

நாயனார்: "அப்படியில்லை சுவாமி! உங்களைப் பார்த்த சந்தோஷம்! எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை!"

ஈசன்: "பேசுவது எல்லாம் இருக்கட்டும்! இதோ...நீ பூஜை புனஸ்காரம் செய்த அழகைப் பார்! என் தோளைப் பார்! என் ஒரு பக்கத்துக் கன்னத்தைப் பார்!"

நாயனார்: "ஐயோ! இது என்ன இப்படிக் கெண்டு கெண்டாக கொப்பளம்! வீங்கி இருக்கே! நீலம் பாய்ந்து இருக்கே! இது என்ன விபரீதம்?..."

ஈசன்: "விபரீதம் விபரீதம்-ன்னு இப்பவும் பேசிக்கிட்டு தானே இருக்கே? பட்ட இடத்தில் திருநீறு பூசுவோம்...துளசியும் நெல்லி இலையும் அரைத்துப் பூசுவோம்-ன்னு தோனுதா உனக்கு? சரி, இப்போ என் இடப்புறம் தோளைப் பார்! கன்னத்தைப் பார்! தலையைப் பார்"

நாயனார்: "ஆகா! ஒரு பக்கம் மட்டும் தான் கொப்பளம் பூத்துக் கிடக்கு! இன்னொரு பக்கம் இல்லையே! இது எப்படிச் சாத்தியம்?"

ஈசன்: "உன் மனைவி ஊதியதால் சாத்தியம்! அவள் எச்சில் பட்டதால், சிலந்தி பட்ட இடம் ஈரமானது! குளிர்ந்ததால் கொப்பளம் எழவில்லை!
நீ பிராயச்சித்த அபிஷேகம் செய்கிறேன் பேர்வழி-ன்னு தேனை ஊற்றத் தொடங்கினாய்! தேன் சூடு-ன்னு தெரியாதா? இந்தப் பக்கமெல்லாம் கொப்பளம்! திருப்தி தானே?"

நாயனார்: "சுவாமீமீமீ...."



ஈசன்: "யார், யாரைத் தள்ளி வைப்பது? என்ன கேட்டாய் அவளை? ஜீவனுள்ள பகவானை எச்சிற்படுத்தலாமா-ன்னு தானே கேட்டாய்? இப்போ நான் உன்னைக் கேட்கிறேன்.......ஜீவனுள்ள பகவானை விஷத்தால் இம்சைப்படுத்தலாமா?
எனக்கு ஜீவன் இருக்கு-ன்னு உனக்கும் தோனலையே?
எச்சிற்படுத்தக் கூடாது...ஆனால் இம்சைப்படுத்தலாம்! அப்படித் தானே?"

நாயனார்: "ஐய்யய்யோ! அறிவீனனாய் போனேனே! சுவாமி என்னை மன்னியுங்கள்! மன்னியுங்கள்!"

ஈசன்: "மன்னிப்பா? எல்லாம் முறிந்தது-ன்னு சொல்ல எனக்கும் எவ்வளவு நேரம் ஆகும்?
உன் இஷ்டத்துக்கு என்ன வேண்டுமானாலும் பண்டிதத்தனமாகச் செய்யலாம்! பிற்பாடு விளக்கம் சொல்லி சுலோகம்/பாட்டு எழுதி விடலாம் என்பதெல்லாம் ஆன்மீகம் இல்லை! அதுக்குன்னு ஒரு அன்பு இருக்கு!
அது புரியாத உன்னோடு இனி எனக்குப் பேச்சு இல்லை! என்னை விட்டு அகன்று விடு! உன் வழியை நீ பார்த்துக் கொள்"

நாயனார்: "ஐயோ! என் வார்த்தைகளை எனக்கே சொல்றீங்களே பெருமானே! உத்தமியை நோகடித்தேனே! உத்தம அன்பை நோகடித்தேனே!
"என்னை" மன்னித்து விடுங்கள்! இல்லையில்லை! "அடியேனை" மன்னித்து விடுங்கள்!

ஆயிரம் கர்மா செய்து என்ன பயன்? பகவானை, "என் பகவான்" என்று பாவிக்கத் தெரியாமப் போச்சே! ஞானம், கர்மம், பக்தி எல்லாம் அந்தப் பாவனைக்குத் தானே!
எரியும் விறகுக் கட்டையானது குளிரைப் போக்க மட்டுமே-ன்னு தெரியாமல், விறகுக் கட்டையைப் போய் கெட்டியாக, சாஸ்திரம் சாஸ்திரம்-ன்னு அணைத்துக் கொண்டேனே! சிவா சிவா!
இதோ ஓடுகிறேன் கோயிலுக்கு! அவளிடம் மன்னிப்பு கேட்டால் தான் என் தாபம் அடங்கும்!" ......................

கனவு கலைந்தது! குடும்பம் சேர்ந்தது!



பின்னாளில் மனம் திருந்தி், மனையாளோடு, சிவத் தொண்டு புரிந்து வந்தார் திருநீலநக்கர்! சாத்திர அபிமானத்தை விட்டொழித்து, சாத்திரத்தின் உள்ளத்தையே பார்த்து வாழ்ந்து வந்தார்!
அதற்காக நியம நிஷ்டைகளை எல்லாம் விட்டு விடவில்லை! ஆனால் அவற்றில் அபிமானம் கலக்கவில்லை! மாறாக அன்பு கலந்தது!

ஞானசம்பந்தர் பின்னாளில் சாத்தமங்கையில் இவர் வீட்டுக்கு எழுந்தருளினார்!
அப்போது கூடவே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும் அவர் மனைவியும் சம்பந்தருடன் வந்தார்கள்! அவர்கள் சாதியால் பாணர்கள்! அந்தணர் வீட்டில் பாண சாதிக்கெல்லாம் இடம் உண்டோ? பாணன் கருவறைக்குள் தான் வருவானோ?....ஆனால் முன்பு போல் நீலநக்கரிடம் பழைய அபிமானங்கள் எல்லாம் இப்போது இல்லை!

வந்தவர்களை எங்கே தங்க வைப்பது? வீடோ சிறிசு! இடமோ சம்பந்தருக்கு மட்டும் தான் ஏற்பாடு செய்து இருக்கு! மனைவியின் ஆலோசனையைக் கேட்க....

அன்றாடம் தான் வேள்வி செய்யும் வேதிகை! அந்த இடத்திலேயே இடம் ஒதுக்கிக் கொடுத்தார் நீலநக்கர்! வேள்வித் தீ முன்னை விட வலம் சுழித்துப் பிரகாசமாக எரிந்தது! பெரும் இசைவாணரும் அடியாருமான திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் மனங் குளிர்ந்தார்! சம்பந்தப் பெருமானும் பதிகம் பாடி அருளினார்!

வேதமாய் வேள்வியாகி விளங்கும் பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகம் நிலைதான் சொலல் ஆவதொன்றே
சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழுஞ் "சாத்தமங்கை"
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே!
- (தேவாரம், மூன்றாம் திருமுறை)

பின்னாளில், சம்பந்தரின் நல்லூர் திருமண விழாவில், மாப்பிள்ளையான சம்பந்தருக்கே புரோகிதம் பார்த்தார் நீலநக்கர்! சம்பந்தர் சோதியுள் கலந்த போது, நீலநக்கரும் அவர் மனைவியாரும் அதே சோதியுள் கலந்தனர்!
அவர்களோடு திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், முருக நாயனாரும், அதே சோதியுள் கலந்தனர்!

ஆக இன்று தான் (Jun-09-2009) அனைவருக்குமே குருபூஜை!
* திரு ஞான சம்பந்தர் திருவடிகளே சரணம்!
* திரு நீலநக்கர் - அவர் மனைவியார் (பெயர் குறிப்பிடப் படவில்லை) திருவடிகளே சரணம்!
* முருக நாயனார் திருவடிகளே சரணம்!
* திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருவடிகளே சரணம்!

43 comments:

  1. அருமையான பதிவு - முன்பு சொன்னதைப் போலவே எப்படி இவ்வளவு எளிய நடையில் கருத்துச் சொல்கிறீர்கள்!
    இன்று எமது ஊரிலும் குருபூசை வெகு விமரிசையாக நடத்தப்பட்டதாக எனது தாயார் தொலைபேசியில் தெரிவித்திருந்தார்.
    முதலில் வந்து சுருக்கமாக எழுதுகிறேன்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. its good to read ... pls keep writing... from london.. ragu

    ReplyDelete
  3. நல்லவேளை அந்த புராணத்தை வைத்து சிவலிங்கத்தின் மீது எச்சில் துப்பி வழிபடுவது என்கிற ஒரு வழக்கம் வரவில்லை.
    :)

    ReplyDelete
  4. //தங்க முகுந்தன் said...
    முன்பு சொன்னதைப் போலவே எப்படி இவ்வளவு எளிய நடையில் கருத்துச் சொல்கிறீர்கள்!//

    ஹா ஹா ஹா! சில பேருக்கு அது தான் பிடிக்காமலும் போகிறது தங்க முகுந்தன் ஐயா! :)

    மக்களுக்காக அவதாரங்களில் தன்னைத் தானே இறக்கிக் கொண்டு எளிமையாக்கிக் கொள்கிறான் அல்லவா! அதே போல் தான்! அடியவர்கள் பலரையும் அடையும் பொருட்டு நாமும் நம்மை எளிமையாக்கிக் கொள்ளணும்-ன்னு நினைச்சாலே போதும்! எளிமை வந்துரும்! :)

    //இன்று எமது ஊரிலும் குருபூசை வெகு விமரிசையாக நடத்தப்பட்டதாக எனது தாயார் தொலைபேசியில் தெரிவித்திருந்தார்//

    சூப்பர்! நான்கு நாயனாருக்கும் ஒரே நாளில் குருபூசை அல்லவா!

    //முதலில் வந்து சுருக்கமாக எழுதுகிறேன்! வாழ்த்துக்கள்!//

    நன்றி! நன்றி!

    ReplyDelete
  5. //Anonymous said...
    its good to read ...//

    நன்றி திரு. ரகு!

    //pls keep writing...//

    அப்படியே செய்கிறேன்! :)

    ReplyDelete
  6. //கோவி.கண்ணன் said...
    நல்லவேளை அந்த புராணத்தை வைத்து சிவலிங்கத்தின் மீது எச்சில் துப்பி வழிபடுவது என்கிற ஒரு வழக்கம் வரவில்லை.
    :)//

    என்னடா, கோவி கருத்து வரலையே-ன்னு பார்த்தேன்! :)))

    முதலில்:
    இது புராணக் கதை இல்லீங்கண்ணா! இது வாழ்ந்தவர் வரலாறு!

    இரண்டாவது: எச்சில் துப்பியது Instantaneous! கண்ணப்பர் கல் எறிந்தார் என்பதற்காக நீங்கள் கல் எறிய முடியாது அல்லவா?

    நல்ல வேளை, தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெங்காயம் தந்தது, அவர் கால வழக்கம் என்பதால்...
    இன்றும் எடைக்கு எடை-ன்னு அவர் பிறந்த நாளில் வெங்காயம் தராமல் விட்டார்களே நம்ம அரசியல்வாதிகள்! :)

    ReplyDelete
  7. அழகா சொல்லியிருக்கீங்க. உண்மையான அன்புக்கு இணை ஏது?

    ReplyDelete
  8. எங்கள் ஊரில் நான்கு நாயன்மார் குருபூசைகளும் தனித்தனியாகவே நடக்கிறது!
    சித்திரைச் சதயம் - அப்பர்
    வைகாசி மூலம் - சம்பந்தர்
    ஆனி மகம் - மாணிக்கவாசகர்
    ஆடிச் சுவாதி(சோதி) - சுந்தரர்
    காலையிலிருந்த மதியம் வரை 3 மணி நேரம் அவர்கள் பாடல்கள் - பெரிய புராணத்தில் அவர்களுடைய சரித்திரம் சொல்லும் பகுதி - உரைநடையிலும் வாசிக்கப்படும். மாணிக்கவாசகரின் குருபூசையன்று திருவாசகம் முழுவதும் முற்றோதப்படும்.

    மன்னிக்கவும் சில விடயங்கள் தவறாக இருப்பதால் கருத்திடுகிறேன்.

    "இது புராணக் கதை இல்லீங்கண்ணா! இது வாழ்ந்தவர் வரலாறு!"

    இது புராணக் கதையே தான் - வாழ்ந்தவர் வரலாறுந்தான் - பெரிய புராணம் எனப்படுகின்ற திருத்தொண்டர் புராணம் - சேக்கிழாரால் பாடப்பட்டது. இதற்கு முதலில் இந்த 63 தனியடியார்களையும் - 9 தொகையடியார்களையும் பற்றி 7ந் திருமுறை பாடிய நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் தமது திருத்தொண்டர் தொகையில் பாடியிருக்கிறார். திருமுறைகளை இராஜராஜ சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க தொகுப்பித்த நம்பியாண்டார் நம்பியும் 11ந் திருமுறையில் திருத் தொண்டர் திருவந்தாதியில் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். இதன் பின்னரே பெரிய புராணம் 12ஆந் திருமுறையாக சேர்க்கப்பட்டது.

    இரண்டாவதாக "கண்ணப்பர் கல் எறிந்தார்" என்றிருக்கிறது - அதுவும் தவறு!
    கண்ணப்பர் பொன்முகலி ஆற்றங்கரையில் இருந்த காளத்தியப்பருக்கு பூசை செய்தவர். எறிபத்தர் தான் மறவாது கல் எறிந்து வழிபாடு செய்தவர் .

    ReplyDelete
  9. //தங்க முகுந்தன் said...
    சித்திரைச் சதயம் - அப்பர்
    வைகாசி மூலம் - சம்பந்தர்
    ஆனி மகம் - மாணிக்கவாசகர்
    ஆடிச் சுவாதி(சோதி) - சுந்தரர்//

    நால்வரின் குருபூசை நாட்களையும் கொடுத்தமைக்கு நன்றி தங்க முகுந்தன் ஐயா!

    பலருக்கும் பெரும்பாலும் தனித்தனி நாளில் தான் நடக்கும்! மறைந்த தினம் அல்லவா! சம்பந்தர் குரு பூசையில் தான் இவ்வாறு மற்ற மூன்று நாயன்மார்களையும் சேர்ப்பது வழக்கம்! ஏனென்றால் அனைவரும் ஒரே நாளில், அதே இடமான நல்லூர் திருமண விழாவில் முக்தி பெற்றனர்!

    //காலையிலிருந்த மதியம் வரை 3 மணி நேரம் அவர்கள் பாடல்கள் - பெரிய புராணத்தில் அவர்களுடைய சரித்திரம் சொல்லும் பகுதி - உரைநடையிலும் வாசிக்கப்படும்//

    அருமை! இவை அனைத்து சிவாலயங்களிலும் வரவேண்டும்! தமிழ்நாட்டில், நாயன்மார் பாசுரங்கள் கருவறைக்குள்ளேயே ஓதப்படும் நாள் எந்நாளோ?

    //மன்னிக்கவும் சில விடயங்கள் தவறாக இருப்பதால் கருத்திடுகிறேன்//

    தாராளமாகச் சொல்லுங்க!

    //இது புராணக் கதையே தான் - வாழ்ந்தவர் வரலாறுந்தான் - பெரிய புராணம் எனப்படுகின்ற திருத்தொண்டர் புராணம்//

    ஹிஹி! கோவி அண்ணா சொல்லும் "புராணம்" என்பதற்கு வேறு பொருள்! கற்பனைக் கதை! அதான் புராணம் இல்லை வரலாறு-ன்னு அவர் பாணியில் அவருக்குப் பதில் சொன்னேன்! :)

    //இரண்டாவதாக "கண்ணப்பர் கல் எறிந்தார்" என்றிருக்கிறது - அதுவும் தவறு!//

    சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா! எறிபத்தரே கல்லெறிந்து அதைத் தினப் பூசையாக நடத்தியவர்!

    ஆயின் கண்ணப்பரும் கல்லைக் கையாண்டுள்ளார். வாயில் பொன்முகலி ஆற்று நீரை உமிழ்ந்து, தான் கால் செருப்பால் சென்னியில் உள்ள பழைய பூ அலங்காரங்களைக் களைந்து, கல்லால் திருவுருவையும் தேய்த்து திருத்தி, நாயடி செருப்படி முதலானவும் செய்ததாகவே பெரிய புராணப் பாடல்கள் தெரிவிக்கின்றன!

    ReplyDelete
  10. // கவிநயா said...
    அழகா சொல்லியிருக்கீங்க. உண்மையான அன்புக்கு இணை ஏது?//

    நன்றி-க்கா! அன்பிலார் எல்லாம் தமக்குரியர்! ஆசாரத்தில் அன்பும் கலக்கும் போது பிறர்க்குரியர்! :)

    ReplyDelete
  11. சைவ செம்மல் இரவிசங்கர் கண்ணபிரான் வாழ்க வாழ்க! திருஞானசம்பந்தப்பெருமான் & மற்ற அடியவர்களின் குருபூசையன்று மறக்காமல் இடுகை இட்ட உங்களை அன்றி வேறு யாரை சைவ செம்மல் என்று அழைப்பது?!

    ReplyDelete
  12. நக்க பிரான் என்றால் என்ன பொருள் இரவி? சிவபெருமானை நக்கபிரான் என்ற பெயரால் பல முறை அழைக்கிறார் நம்மாழ்வார். சைவத் திருமுறைகளிலும் இந்தப் பெயர் சிவபெருமானுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா? திருநீல நக்க நாயனார் என்ற இந்த அடியவரின் திருப்பெயரைப் பார்த்தால் இருக்கும் போல் தோன்றுகிறது.

    ReplyDelete
  13. அயன் என்றால் பிரம்மன்; அதனால் அயவந்திசுவரர் என்றால் நான்முகநாதர். சரி தான். அயன் என்ற பெயர் பிரம்மனுக்குத் தமிழில் மட்டுமே தானே வழங்கப்படுகிறது? வடமொழியிலும் உண்டா?

    அண்மையில் வந்த திரைப்படத்திற்கு அயன் என்று பெயர் வைத்திருந்தார்கள். அப்படியென்றால் என்ன பொருள் என்று சிலர் கேட்டபோது தெரியவில்லை என்றேன். இப்போது தான் தோன்றுகிறது - ஒரு வேளை அந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு, பெயர் வைத்தவர்களுக்கு பிரம்மனின் 'அயன்' என்ற பெயர் தெரிந்திருக்குமோ என்று. :-)

    ReplyDelete
  14. நாயன்மார் கதையோட இன்னொரு கதையும் கூடவே இந்த இடுகையில் ஊடாடுவது போல் இருக்கிறது. உண்மையா எனக்கு மட்டுமே தோன்றும் தோற்ற மயக்கமா? :-)

    ReplyDelete
  15. //முதலில்:
    இது புராணக் கதை இல்லீங்கண்ணா! இது வாழ்ந்தவர் வரலாறு!//

    திருவிளையாடல் புராணங்களில் எவை எல்லாம் நடந்த கதை என்று பார்த்தால்......விடுங்க.....ஒண்ணுஞ் சொல்லிக்கிறதுக்கு இல்லை :)

    63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுத்த பிறகு சிவனே முக்தி அடைஞ்சிட்டார் போல, அதுக்கு பிறகு ?
    :)))

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    நாயன்மார் கதையோட இன்னொரு கதையும் கூடவே இந்த இடுகையில் ஊடாடுவது போல் இருக்கிறது. உண்மையா எனக்கு மட்டுமே தோன்றும் தோற்ற மயக்கமா? :-)
    //
    அது என்ன கதை ?
    கேஆர்எஸ் நாயனார் ஆகிட்டாரா ?

    ReplyDelete
  17. //குமரன் (Kumaran) said...
    சைவ செம்மல் இரவிசங்கர் கண்ணபிரான் வாழ்க வாழ்க!//

    :)))

    "கண்ணன் அருள் கேஆரெஸ்" என்பதே என் அடையாளமாக இருக்க விரும்புகிறேன், குமரன்!

    சைவச் செம்மல் போன்ற பட்டங்கள் எல்லாம் அடியேன் தகுதிக்கு மீறியவை!
    மேலும் சைவச் செம்மல் பட்டயம் நண்பனிடம் உள்ளது! அவனிடமே இருக்கட்டும்! :)

    //திருஞானசம்பந்தப்பெருமான் & மற்ற அடியவர்களின் குருபூசையன்று மறக்காமல் இடுகை இட்ட உங்களை அன்றி வேறு யாரை சைவ செம்மல் என்று அழைப்பது?!//

    :)

    அடியவர்கள் எவராயினும் எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள்!

    ReplyDelete
  18. //கோவி.கண்ணன் said...
    அது என்ன கதை ?
    கேஆர்எஸ் நாயனார் ஆகிட்டாரா ?//

    கெளம்பிட்டாங்கய்யா! கெளம்பிட்டாங்க!
    கோவி அண்ணா, என்னைய நந்தனார் ஆக்கிப்புடாதீங்க! :)

    குமரன் வேற ஏதோ சொல்ல வராரு-ன்னு நினைக்கிறேன்! எனக்கும் ஒன்னும் புரியலை! கதைக்குள்ள கதையா?
    //அவர்கள் சாதியால் பாணர்கள்!// - திருப்பாணாழ்வாரை "நைசா" நுழைக்கிறேன்-ன்னு வழக்கம் போல ஒரு குற்றச்சாட்டு கெளம்புமே! அதுவா? :)

    ReplyDelete
  19. கதை சூப்பரு ;)

    நன்றி தல ;)

    ReplyDelete
  20. //குமரன் (Kumaran) said...
    நக்க பிரான் என்றால் என்ன பொருள் இரவி? சிவபெருமானை நக்கபிரான் என்ற பெயரால் பல முறை அழைக்கிறார் நம்மாழ்வார்.//

    நம்மாழ்வார் சமணத்து அருக தேவரையும் நக்கன் என்றே குறிப்பார் என்று நினைக்கிறேன்!

    நக்கன் = சிவபிரான், அருகர்
    என்று இருவருக்குமே புழங்கப்படுகிறது!
    நிர்வாணம் (அ) குறைந்த ஆடைகள் மட்டுமே உடுத்தியவரை நக்கன் என்ற சொல் குறிப்பதாய் நாலாயிர அருளிச் செயல் ஈட்டில் வாசித்த ஞாபகம்!

    //சைவத் திருமுறைகளிலும் இந்தப் பெயர் சிவபெருமானுக்கு வழங்கப்பட்டிருக்கிறதா?//

    என்ன இப்படிக் கேக்கறீங்க? சம்பந்தரின் நமச்சிவாயத் திருப்பதிகத்தில் வருமே! நீங்க பதிவே போட்டீங்களே?
    தக்க வானவர் ஆத் தகுவிப்பது
    "நக்கன்" நாமம் நமச் சிவாயவே

    நக்கன் சிவபெருமானின் திருநாமம் தான்!

    //திருநீல நக்க நாயனார் என்ற இந்த அடியவரின் திருப்பெயரைப் பார்த்தால் இருக்கும் போல் தோன்றுகிறது//

    சிவனாரின் பெயரைத் தான் நக்கன் என்று இவருக்கும், இவர் பெற்றோர்கள் வைத்திருப்பர் போலும்!

    ReplyDelete
  21. //குமரன் (Kumaran) said...
    அயன் என்றால் பிரம்மன்; அதனால் அயவந்திசுவரர் என்றால் நான்முகநாதர். சரி தான்//

    அப்போ உபய புஷ்ப லோசனி? :)

    //அயன் என்ற பெயர் பிரம்மனுக்குத் தமிழில் மட்டுமே தானே வழங்கப்படுகிறது? வடமொழியிலும் உண்டா?//

    புரோகிதரை/அந்தணரை ஐயன்-ன்னு சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது! அதனால் பிரம்மாவை ஐயன்/அயன்-ன்னு சொல்லி இருக்கலாம்!

    வடமொழியில் அயன்? தெரியலையே குமரன்! ஹய-ன்னா குதிரை! அய-ன்னா?
    தலபுராணம் பிரம்மா இங்கு தவம் செய்து, சரஸ்வதியை அடைந்ததாகவும் சொல்லும்!

    //அண்மையில் வந்த திரைப்படத்திற்கு அயன் என்று பெயர் வைத்திருந்தார்கள்//

    ஓ...சினிமா எல்லாம் கூட நீங்க பார்க்கறீங்களா?
    அண்ணி, படத்துக்கு வாங்க-ன்னு ஒங்கள கூட்டிப் போயிருப்பாங்க போல! :)))

    //அப்படியென்றால் என்ன பொருள் என்று சிலர் கேட்டபோது தெரியவில்லை என்றேன். இப்போது தான் தோன்றுகிறது - ஒரு வேளை அந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு, பெயர் வைத்தவர்களுக்கு பிரம்மனின் 'அயன்' என்ற பெயர் தெரிந்திருக்குமோ என்று. :-)//

    அயன் = தலைவன் என்ற பொருளும் உண்டு!
    ஐயா/ஐயன்/ஐய்யனார்/அயன்/அய்யனார்

    ReplyDelete
  22. //கோவி.கண்ணன் said...
    திருவிளையாடல் புராணங்களில் எவை எல்லாம் நடந்த கதை என்று பார்த்தால்......விடுங்க.....ஒண்ணுஞ் சொல்லிக்கிறதுக்கு இல்லை :)//

    ஹிஹி!
    நீங்க எங்க வரீங்க-ன்னு தெரியுது!
    நானும் அங்கேயே வருவேன்!
    நந்தனாரை நம்பறீங்க-ல்ல? நீல நக்கரையும் நம்பித் தான் ஆகணும்! Take All or Take None! :)

    "கற்பனை என்று எண்ணத் தகுந்த" சம்பவங்கள் - நரி பரி ஆகியது, பிட்டுக்கு மண் சுமந்தது - போன்றவற்றை மட்டுமே வச்சி நீங்க புருடாணம்-ன்னு நினைக்கலாம்!
    ஆனால் நான் சொல்வது, சொல்லப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே வைத்து, ஆட்களே இல்லை-ன்னு சொல்லிறாதீங்க-ன்னு தான்!

    63 பேரும் இருந்தார்கள்! அவர்கள் வரலாறு பதியப்பட்டுள்ளது! அதனூடே சில "புராண" நிகழ்வுகளும் சேர்த்தே பதியப்பட்டன! போதுமா? :))

    //63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுத்த பிறகு சிவனே முக்தி அடைஞ்சிட்டார் போல, அதுக்கு பிறகு ? :)))//

    சிவனார் நித்ய முக்தர்! அவருக்கு ஏது முக்தி? :)

    ReplyDelete
  23. //ஸ்வாமி ஓம்கார் said...
    அருமை அருமை அருமை//

    வாங்க ஸ்வாமி! ரசித்தமைக்கு நன்றி! :)

    ReplyDelete
  24. //கோபிநாத் said...
    கதை சூப்பரு ;)
    நன்றி தல ;)//

    நீ எழுதற கதையை விடவா கோபி? அது சொந்தக் கதை!
    இது சொக்கன் கதை! :))

    ReplyDelete
  25. //ஹிஹி!
    நீங்க எங்க வரீங்க-ன்னு தெரியுது!
    நானும் அங்கேயே வருவேன்!
    நந்தனாரை நம்பறீங்க-ல்ல? நீல நக்கரையும் நம்பித் தான் ஆகணும்! Take All or Take None! :)
    //

    நாயன்மார்கள் இருந்தார்களா இல்லையா என்றெல்லாம் நான் கேட்கவில்லை. அவர்களுக்கு புனிதம் கற்பித்து கூறப்பட்ட மிதமிஞ்சிய கட்டுகதைகளைத் தான் குறிப்பிட்டேன்.

    உதாரணத்துக்கு ஞானசம்பந்தர் பார்வதியின் முலைப்பால் அருந்தியது. இவை உண்மையாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா ?

    ஏனெனில் உருவங்கள், உருவகங்கள் பக்தி நெறி கற்பனையின் நீட்சி மட்டுமே. உருவ வழிபாட்டு உருவங்கள் எந்த ஒரு காலத்திலும் 'தோன்றி' இருக்க வாய்ப்பே இல்லை. உதாரணத்துக்கு இறைக் கொள்கையை ரொம்பவும் கேள்வி கேட்டால், நமக்கு மேல 'ஒருவன்' ஒருக்கிறான் என்கிற பதிலும், அதுவே முடிவு என்று ஒற்றைத் தன்மையில் தான்
    எல்லா காலங்களிலும் முடிக்கிறார்கள், உங்கள் நிலையும் கூட கடவுள் குறித்த கேள்வியில் அப்படி ஒரு பதிலுடன் முடியும்.

    பிறகு எங்கே பார்வதி, கணபதி, முருகன், முலைப்பால் ?

    அந்தகாலத்து நாயன்மார்களை ஒப்பிடும் போது கிருபானந்தவாரியார், வள்ளலார் ஆகியோர் எந்த விதத்தில் குறைந்தவர் ?
    அவர்களுக்கு ஏன் எந்த கடவுளும் முன் தோன்றி அருளவில்லை ?

    ReplyDelete
  26. *நக்க பிரான்*
    நக்நன் என்பதன் தமிழ் வடிவம் நக்கன் - திகம்பரன் .
    தாபஸ வேடம் தோன்றுமாறு திசைகளை ஆடையாக உடுத்தியவன்.

    தேவ்

    ReplyDelete
  27. *நக்க பிரான்*
    நக்நன் என்பதன் தமிழ் வடிவம் நக்கன் - திகம்பரன் .
    தாபஸ வேடம் தோன்றுமாறு திசைகளை ஆடையாக உடுத்தியவன்.

    தேவ்

    ReplyDelete
  28. //அவர்களோடு திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரும், முருக நாயனாரும், அதே சோதியுள் கலந்தனர்!//

    கூடவே குலச்சிறை நாயனார் மற்றும் மங்கையர்கரசி ஆகியோரும் புகுந்ததாக சேக்கிழார் எழுதி இருக்கிறார்

    ReplyDelete
  29. //கோவி.கண்ணன் said...
    கூடவே குலச்சிறை நாயனார் மற்றும் மங்கையர்கரசி ஆகியோரும் புகுந்ததாக சேக்கிழார் எழுதி இருக்கிறார்//

    கோவி அண்ணா
    இதைக் கொஞ்சம் சரி பார்த்துச் சொல்லுங்களேன்!
    அப்படீன்னா இவர்களுக்கும் இன்னிக்கி தான் குருபூசை இருந்திருக்கணும்! ஆனால் இல்லை! So, Confirm Please!

    ReplyDelete
  30. //R.DEVARAJAN said...
    *நக்க பிரான்*
    நக்நன் என்பதன் தமிழ் வடிவம் நக்கன் - திகம்பரன் .
    தாபஸ வேடம் தோன்றுமாறு திசைகளை ஆடையாக உடுத்தியவன்//

    வாங்க தேவ் சார்!
    வடமொழியில் அது நக்நனா? திகம்பர முனிகளைப் போல் ஆடையற்றவன் அல்லது ஆடை குறைந்தவன் என்பது சரி தான் போல! பொருளுரைத்தமைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  31. //கோவி.கண்ணன் said...
    நாயன்மார்கள் இருந்தார்களா இல்லையா என்றெல்லாம் நான் கேட்கவில்லை. அவர்களுக்கு புனிதம் கற்பித்து கூறப்பட்ட மிதமிஞ்சிய கட்டுகதைகளைத் தான் குறிப்பிட்டேன்//

    நீங்கள் "மிதமிஞ்சிய"-ன்னு குறிப்பிட்டதை நான் தவறு-ன்னு சொல்ல மாட்டேன்! ஆனால்
    குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள்
    மிகை நாடி மிக்க கொளல்!

    புனிதப் பூச்சுகள் என்பது உலகம் முழுதும் பல சமயங்களின் அங்கம்! சமயங்கள் என்ன, அரசியல்/சமூக இயக்கங்களின் அங்கமாகக் கூட இருக்கு! அப்துல் கலாம், பெரியார் போன்ற தலைவர்களுக்கும் இப்படிப் பூசுவதுண்டு! காலத்துக்கு ஏற்றாப் போலே! :)

    சில சமயங்கள் கொறைச்சலா பூசும், சில சமயங்கள் கொஞ்சம் ஓவரா பூசும்!

    யாரென்றே அறியாத ஒரு தினக்கூலியாக இருந்த நந்தனாரை ஆகா ஓகோ-ன்னு தீட்சிதர்கள் மனசார வரவேற்றார்கள். அதன் பின்னர் தான் தீக்குழிக்குள் ஏகுமாறு இறைவன் ஆக்ஞை என்று கூறினார்கள்-ன்னு சொல்லும் போது கொஞ்சம் ஓவரா இருக்கா போலத் தான் தெரியும்!

    திருப்பாணாழ்வரை இப்படியெல்லாம் வரவேற்கவில்லை! கல்லால் அடித்தார்கள் என்று உண்மையை ஒப்புக் கொண்டு அப்படியே சொல்லும் சமயங்களும் கவிஞர்களும் உண்டு!

    அதுக்குத் தான் சொல்றேன்!
    மிகை நாடி மிக்க கொளல்!

    ReplyDelete
  32. @கோவி அண்ணா
    //உதாரணத்துக்கு ஞானசம்பந்தர் பார்வதியின் முலைப்பால் அருந்தியது. இவை உண்மையாக இருக்க முடியும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா ?//

    இருக்கிறது!

    முலைப்பால் அருந்தியது-ன்னு சொன்னா, சினிமாவில் காட்டுவது போல் சரஸ்வதி ராகவேந்திரக் குழந்தையைத் தூக்கி ஊட்டுவது போல்-ன்னு ஏன் நினைச்சிக்கறீங்க?

    முருகப்பெருமானுக்கே கார்த்திகைப் பெண்கள் தான் பாலூட்டினர். அன்னையின் பாலமுது முருகனுக்கே கிட்டாமல், அடியவரான சம்பந்தருக்குக் கிட்டியது-ன்னா எப்படி? இதை ராகவனிடம் சிங்கையில் கேட்டிருக்கலாமே? கேட்டீர்களா? :)

    //ஏனெனில் உருவங்கள், உருவகங்கள் பக்தி நெறி கற்பனையின் நீட்சி மட்டுமே//

    இல்லை!
    அது நீட்சி இல்லை! மாட்சி!

    உருவம் அற்ற நீர், பிடித்து வைக்கும் பாத்திரத்தின் உருவத்தைப் பெறும்!
    ஆனால் நீர்த் துளியோ, அது குழாயிலோ, மண்ணிலோ, விண்ணிலோ, ஏன் எப்பமே Spherical-ஆ இருக்குன்னு தெரியுமா?
    அதே தத்துவம் தான் இறை உருவின் மாட்சி!

    உருவமற்றது தான் உயர்ந்தது, உருவம் கொள்வது மனித மன விகாரம்! எனவே தாழ்ந்தது என்பதே தாழ்வான ஒரு மனக் கற்பனை!


    //உதாரணத்துக்கு இறைக் கொள்கையை ரொம்பவும் கேள்வி கேட்டால், நமக்கு மேல 'ஒருவன்' ஒருக்கிறான் என்கிற பதிலும், அதுவே முடிவு என்று ஒற்றைத் தன்மையில் தான்
    எல்லா காலங்களிலும் முடிக்கிறார்கள்//

    யாரிடம் என்ன கேள்வியைக் கேட்டால் என்ன பதிலைப் பெறுவோம்-ன்னு இருக்குல்ல? :)
    மேலும் அந்தக் கேள்வியின் நோக்கம் என்ன? பெறும் பதிலை வைத்து என்ன செய்வதாக உத்தேசம்-ன்னும் இருக்குல்ல?
    Window Shopping கேள்விகளுக்கு ஆன்மீகத்தில் Window Shopping பதில்கள் தான்! :)))

    //உங்கள் நிலையும் கூட கடவுள் குறித்த கேள்வியில் அப்படி ஒரு பதிலுடன் முடியும்//

    இல்லை! அப்படி முடியாது!

    ReplyDelete
  33. //நாயன்மார்களை ஒப்பிடும் போது கிருபானந்தவாரியார், வள்ளலார் ஆகியோர் எந்த விதத்தில் குறைந்தவர் ?
    அவர்களுக்கு ஏன் எந்த கடவுளும் முன் தோன்றி அருளவில்லை ?//

    அவர்களுக்கு முன் தோன்றி அருளவில்லை என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?
    அவர்கள் சொன்னார்களா? அவர்களுக்கு இறைவன் அருளவில்லை என்று அவர்களைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்!

    நாயன்மார்களை விட வள்ளலார் குறைந்தவர் என்ற எண்ணம் வரக் காரணம் என்ன?
    வள்ளலாருக்கு முலைப்பால் கிடைக்காததாலா?
    வள்ளலார் குழந்தைக்குத் திருவொற்றியூர் வடிவுடையம்மன் சோறு போட்டாங்களாமே! பொய்-ன்னு வள்ளலாரைச் சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்!

    ஒரு அடியார் வாழ்வில் நடந்த "உசத்தியான" கதை இன்னொரு அடியார் வாழ்வில் நடக்கலை, இல்லை நமக்குத் தெரியலீன்னா, அவர் நாயன்மாரை விட குறைந்தவர் ஆகி விடுவாரா?

    கதையை வைத்தா மேன்மை?
    உள்ளத்து விதையை வைத்து இல்லையா?

    ReplyDelete
  34. ஆத்மார்த்த அன்பும் பக்தியும் என்றும் உன்னதமானது என்பதை இந்தப்பதிவு(ம்) நிரூபிக்கிறது... சபரி நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை

    ReplyDelete
  35. கண்ணபிரான் ஐயா, தங்கள் ஒவ்வொரு பதிவிலும் பல் வேறு அருமையான செய்திகள் கிடைக்கின்றன.

    இப்பதிவில் நக்கன்

    எட்டுத் திக்குகளே என் ஐயனின் ஆடைகள்.

    பிக்ஷாடணராக ஐயன் தாருகாவனம் சென்றதும் திகம்பரராகத்தான்,

    பைரவராக அவர் கட்சி தருவதும் நக்கராகத்தான்

    அருமை தங்கள் தொண்டு தொடர நக்கனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  36. //Kailashi said...
    கண்ணபிரான் ஐயா, தங்கள் ஒவ்வொரு பதிவிலும் பல் வேறு அருமையான செய்திகள் கிடைக்கின்றன. இப்பதிவில் நக்கன்//

    நன்றி கைலாஷி ஐயா! எல்லாம் கூடி இருந்து குளிர்ந்தேலோ தான்! :)

    //பிக்ஷாடணராக ஐயன் தாருகாவனம் சென்றதும் திகம்பரராகத்தான்,
    பைரவராக அவர் கட்சி தருவதும் நக்கராகத்தான்//

    மற்ற நேரங்களிலும் புலித்தோல் ஆன குறைந்த ஆடை தான்! என்றுமே நமசிவாயன் நக்கன் தான்! நம்மைச் சொக்கும் சொக்கன் தான்!

    ReplyDelete
  37. //ஷைலஜா said...
    ஆத்மார்த்த அன்பும் பக்தியும் என்றும் உன்னதமானது என்பதை இந்தப்பதிவு(ம்) நிரூபிக்கிறது...//

    ஆமாம்-க்கா! ஞானத்துக்குத் தான் நூலும், மேற்கோள்களும், விதிகளும் தேவை! இறை-அன்புக்கு? அன்பு எப்படிச் செய்யறது ஏதாச்சும் Book இருக்கா என்ன? :)

    //சபரி நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை//

    அவளும் எச்சிற் பழத்தைத் தான் கொடுத்தாள்!
    நல்ல காலம் அவளை யாரும் திட்டலை! :)

    ReplyDelete
  38. ரவி,
    பதிவு இட்டு சில நாட்கள் ஆகிவிட்டாலும் பின்னூட்டு அளிக்க தோன்றுகிறது.
    மிகவும் சுவையாக கதை சொல்கிறீர் ! :-)
    வாழ்க உமது திருப்பணி !!
    ****
    //குமரன் (Kumaran) said...
    அயன் என்றால் பிரம்மன்; அதனால் அயவந்திசுவரர் என்றால் நான்முகநாதர். சரி தான்//

    அப்போ உபய புஷ்ப லோசனி? :)
    ****

    அயன் வந்தித்த(துதித்த, போற்றிய) ஈஸ்வரர் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

    //அயன் என்ற பெயர் பிரம்மனுக்குத் தமிழில் மட்டுமே தானே வழங்கப்படுகிறது? வடமொழியிலும் உண்டா?//
    வடமொழியில் "அஜ:" என்று பிரமனை அழைப்பார்கள். ( "அஜ:" என்றால் பிறப்பிலி என்றும் பொருள் தரும், ஆடு (goat) என்றும் பொருள் தரும்.) தமிழ் படுத்தும் பொழுது அயன் என்று மாறி இருக்கலாம். வடமொழியில் தாமரை பூ "பங்கஜம்" என்று வரும். தமிழில் பங்கயம் என்று பிரயோகிப்பர்.

    "பங்கயக் கண்ணன் என்கோ ! பவள செவ்வாயன் என்கோ !" என்று நம்மாழ்வார் பாசுரம்.
    அல்லது தமிழில் இருந்து இந்த பதங்கள் வடமொழிக்கு சென்று இருக்கலாம். :-)

    ~
    ராதா

    ReplyDelete
  39. //Radha said...
    ரவி, பதிவு இட்டு சில நாட்கள் ஆகிவிட்டாலும் பின்னூட்டு அளிக்க தோன்றுகிறது//

    அதனால் என்னங்க ராதா? ரெண்டு வருசம் கழிச்சியெல்லாம் பின்னூட்டம் போட்டிருக்காங்க மக்கள்! :)

    //மிகவும் சுவையாக கதை சொல்கிறீர் ! :-)//

    இந்தச் சிரிப்புக்கு என்ன பொருளோ? :)

    //அயன் வந்தித்த(துதித்த, போற்றிய) ஈஸ்வரர் என்று பொருள் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்//

    ஆமாம்! நீங்க சொல்வது சரியே! அய+வந்தி+ஈஸ்வரன்!
    நான்முக நாதர்-ன்னு பொதுவாச் சொன்னேன்!
    பிரமன் பணி பெருமான் என்ற பெயர் இன்னும் பொருத்தமா இருக்கு!

    //வடமொழியில் "அஜ:" என்று பிரமனை அழைப்பார்கள். தமிழ் படுத்தும் பொழுது அயன் என்று மாறி இருக்கலாம்//

    உம்ம்ம். மற்றதெல்லாம் பொருந்துகிறது! ஆனால் அஜ = பிறப்பிலி என்றால் பிரம்மனுக்கு பிறப்பிறப்பு உண்டே! எப்படி?

    ReplyDelete
  40. ****
    //மிகவும் சுவையாக கதை சொல்கிறீர் ! :-)//
    இந்தச் சிரிப்புக்கு என்ன பொருளோ? :)
    ****
    :))

    ****
    //வடமொழியில் "அஜ:" என்று பிரமனை அழைப்பார்கள். தமிழ் படுத்தும் பொழுது அயன் என்று மாறி இருக்கலாம்//

    உம்ம்ம். மற்றதெல்லாம் பொருந்துகிறது! ஆனால் அஜ = பிறப்பிலி என்றால் பிரம்மனுக்கு பிறப்பிறப்பு உண்டே! எப்படி?
    ****
    நண்பரே, அது எப்படி, ஒரு கேள்வியுடன் நிறுத்தி விட்டீர்கள் ?
    அஜ என்றால் ஆடு என்பது மட்டும் பிரமனுக்கு பொருந்துகிறதா? :-)
    அஜ = பிறப்பிலி என்றும் பொருள் உண்டு என்று தான் சொன்னேன். பிரமன் பிறப்பிலி என்று அல்ல.

    பிறப்பிலி என்ற அர்த்தத்தில் வரும் பொழுது மகாவிஷ்ணு பரமசிவன் இருவருக்கும் இந்த நாமங்கள் பிரயோகப்படுத்த படுகின்றன.
    "அஜ சர்வேஷ்வர சித்த சித்தி சர்வாதிர் அச்யுத:" என்று விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் வரும்.

    அஜ: என்று பிரமனுக்கு சொல்லும்பொழுது என்ன அர்த்தத்தில் குறிப்பிடுகிறார்கள் என்பதை பற்றி அவ்வளவு தெளிவு இல்லை.
    ~
    ராதா

    ReplyDelete
  41. அன்பின் கேயாரெஸ்

    நல்லதொரு விவாதம் - வழக்கம் போல குமரன் கோவி ரவி மூவரும் சேர்ந்து பல்வேறு செய்திகள் அலசி இருக்கிறீர்கள். அருமை அருமை - நல்வாழ்த்துகள் கேயாரெஸ் - நட்புடன் சீனா

    ReplyDelete
  42. Wooow மிகவும் அருமையான பதிவு, இன்று தான் நான் இவர்கதை அறிந்தேன்,
    நேரில் நடப்பது போன்று/திரைப்படம் பார்பது போன்ற உணர்வோடு..

    நன்றி

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP