Showing posts with label தமிழ் விக்கிபீடியா. Show all posts
Showing posts with label தமிழ் விக்கிபீடியா. Show all posts

Tuesday, March 18, 2008

***ஆன்மீகப் பதிவுகளால் தமிழுக்கு நன்மையா? - ரவிசங்கர் அலசுகிறார்!

இணையத் தமிழ் முயற்சிகளில் நாம் நன்கறிந்த நண்பர், நம்ம ரவிசங்கர்!
என்னோட namesake! அன்புள்ள ரவி-ன்னு அவருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போது, என்னை நானே அன்பாக் கூப்பிட்டுகுற மாதிரி இருக்கும்!

நான் எங்க போனாலும் எனக்குன்னே போட்டியா அங்கேயும் யாரோ ஒரு ரவிசங்கர் வந்துடறாங்கப்பா! தமிழுலகில் ரவிசங்கர், ஆன்மீக உலகில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இசை உலகில் சிதார் ரவிசங்கர் - வேறு யாராச்சும் ரவிசங்கர் பதிவுலகில் இருக்கீங்களா சாமீ? :-)

நம்ம ரவி கையொப்பம் கூட தமிழில் தான் இடுவாரு! தமிழ் விக்கிபீடியாவுல அவர் ஆர்வமும் முயற்சிகளும் அளவில்லாதது! காலத்துக்கும் பயன்படுறா மாதிரி சில பங்களிப்புகள் அமைந்து விடும்! அதுல ஒன்னு தமிழ் விக்கிபீடியா!
தமிழுக்கும், வருங்காலத் தமிழ் இணைய முயற்சிகளுக்கும் காலத்துக்கும் பயன்படுறா மாதிரி இன்றைய ஆன்மீகம் ஏதாச்சும் செய்ய முடியுமா?
இப்படி எல்லாம் யோசிச்சிக்கிட்டு இருக்கும் போது தான், நம்ம ரவியை நேர்காணலாம்-ன்னு தோணிச்சி!
நாம் எழுதும் ஆன்மீகப் பதிவுகளால் யாருக்கென்ன லாபம்? எங்கோ படிச்சதை எல்லாம் எழுதிக் குவிக்கிறோம், அவ்வளவு தானா? நமக்குத் தெரிஞ்சதைச் சொல்லி, பின்னூட்டத்தில் நமக்குத் தெரியாததை நண்பர்கள் சொல்லி...
இப்படின்னு ஒரு நட்பு வட்டத்துக்குள் மட்டும் முடிஞ்சி போறது தானா ஆன்மீகப் பதிவுகள்?

சங்க இலக்கியத்தில் இருந்து, மெல்ல மெல்ல பக்தி இலக்கியம் வளர்ந்த காலகட்டத்தில், தமிழ் மொழிக்குத் தான் எத்தனை எத்தனை பங்களிப்புகள்! அந்தாதி, உலா, விருத்தம் என்று புதுப்புது கவிதை வகைகள்! பிள்ளைத் தமிழ் என்று ஒன்று வருவதற்கு பெரியாழ்வார் அல்லவா முன்னோடி! சந்தக் கவிக்கு அருணகிரி செய்த பங்களிப்பு எத்துணை பெரிது!
அன்றைய ஆன்மீகப் பதிவுகள் இல்லைன்னா இன்று ஆலயங்களில் தமிழ் ஏது? - இப்படிப் பல பரிமாணங்களை வளர்த்தவை தான் அன்றைய ஆன்மீகப் பதிவுகள்!

இது போன்றதொரு பரிணாம வளர்ச்சி இப்போதும் வேண்டும் தானே! எத்தனை காலம் தான் முன்னோர் நட்ட மரங்களில் இருந்து பழம் பறித்துத் தின்போம்? நாம் நல்ல முன்னோர்களாய் ஆக முடியாதா? - இன்றைய ஆன்மீகப் பதிவாளர்களும், பின்னூட்டாளர்களும் இது குறித்தும் அவ்வப்போது யோசிக்க வேண்டும் என்பதே என் அவா! பல சமயங்களில் இது பற்றி நண்பர்களுடன் விவாதித்தும் இருக்கிறேன்!

இந்த நட்சத்திர வாரத்தில், நண்பர் ரவியின் முன் வைத்த சில கேள்விகளை, உங்கள் முன்னும் வைக்கிறேன்.
ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டம் என்ன? - தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!


1. ஆன்மீகம் என்பது தனி மனிதன், தானாய் மனதில் உணர்ந்து கொள்வது! அப்படி இருக்க, ஆன்மீகப் பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையா?

ரவி: ஆன்மீகம் தனி மனிதன் உணர்வது தான் என்றால் அப்புறம் ஏன் ஆன்மீகச் சொற்பொழிவுகள், நூல்கள் எல்லாம்? அப்போ இவற்றை எடுத்துரைக்க ஏதோ ஒரு தேவை இருக்கிறது தானே? அதே போல் பதிவுகளையும் இவற்றை எடுத்துரைக்கத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
பதிவுகள், பதிவுலகம் என்று ஏதோ கட்டம் கட்டி பார்க்கத் தேவை இல்லை. வாழ்க்கைத் தேவைகளுக்கு எல்லா ஊடகங்கள், கருவிகளையும் பயன்படுத்துவது போல் பதிவுகளையும் பயன்படுத்தலாம்.


2. நீங்கள் ஆன்மீகம்/இலக்கியம் கலந்த பதிவுகள் படிப்பீர்களா? இல்லை போரடிக்கும் என்று ஓடிவிடுவீர்களா? எதைப் படிப்பீங்க? எதை விடுப்பீங்க?

ரவி: ஆன்மீகப் பதிவுகள் அறவே படிப்பது இல்லை எனலாம். ஆன்மீகப் பாடல்களுக்கான சொற் பொருள் விளக்கம் தந்து தமிழின் இனிமையை உணரச் செய்வது போல் எழுதும் பதிவுகளை அவ்வப்போது எட்டிப் பார்ப்பது உண்டு. இலக்கியப் பதிவுகள் வாசிப்பதும் குறைவு தான்.
நண்பர்கள் எழுதும் சிறுகதைகள் என்றால் மட்டும் ஒன்றிரண்டு வாசிப்பதுண்டு. நன்றாக கவிதைகள் எழுதும் 4,5 பதிவர்களை நினைவு வைத்துப் படிப்பதுண்டு. அவ்வளவு தான். bore அடிக்கிறதா என்பதை விட முக்கியமான காரணம், கணினியில் நீளமாக எழுதப்படும் கதைகள், தொடர் கதைகள் படிப்பது சிரமமாக உணர்கிறேன்.

தவிர, கணினி வாசிப்புப் பழக்கத்தில் பெரும்பாலும் பக்கங்களை வேகமாக உருட்டி வாசித்து வேண்டிய தகவல்களைப் பெறப் பழகி இருக்கிறோம் என்பதால் வரிக்கு வரி வாசித்து அனுபவிக்க வேண்டிய இலக்கியப் படைப்புகளைப் படிப்பதற்குத் தோன்றுவதில்லை.


3. ஆன்மீகப் பதிவுகளால் தமிழ் மொழிக்கும், தமிழ் இணையத்துக்கும் ஏதாச்சும் நன்மை இருக்கா?

ரவி: நிச்சயமாக நிறைய நன்மைகள் உண்டு. அரசியல், திரைப்படம் முதலிய துறைகளைப் போன்றே ஆன்மீகமும் தமிழர் வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் பெற்றிருக்கு.
இது தொடர்பான உள்ளடக்கங்களை இணையத்தில் உருவாக்குவது மூலம் கணிசமான எண்ணிக்கையிலான தமிழர்களை ஈர்த்து கணினியில் தமிழ் படிக்க, எழுத வைக்க இயலும்.
ஆன்மீகத்தின் மூலம் உள்ளே வருபவர்கள் அதைத் தொடர்ந்து பிற துறைகளிலும் ஈடுபாட்ட காட்டித் தொடர முடியும். வேறு துறைகளுக்கு நகராமல் ஆன்மீகத்திலேயே தங்கினாலும் சரி தான்.

தமிழ் மொழிக்கான நன்மை என்று நான் கருதுவது:
அ) சிந்திக்கும் போது நம் சிந்தனையில் உள்ள வேற்று மொழிக் கலப்பை உணர்வதில்லை. ஆனால் எழுதும் போது அவை உறுத்தி நல்ல தமிழில் எழுத முற்படுவோம். இன்னும் இந்து, இஸ்லாம், கிறித்தவம் என்று எந்த சமயமானாலும் அதில் வேற்று மொழித் தாக்கம் பெரிதளவு இருக்கிறது.
சமயம் குறித்த வரலாறு, சிந்தனைகள், மெய்யியல் கூறுகளை எழுதும் போது அவை குறித்த தமிழ்ச் சொற்களை உருவாக்கவும் இலக்கியங்களில் ஏற்கனவே இவற்றுக்கு பொருத்தமாக இருக்கும் சொற்களை ஆளவும் முயல்வோம்.
ஒரு வழியில் இது பழமையான துறை ஒன்றில் தமிழ் வழிச் சிந்தனையை ஊக்கப்படுத்தும்.

ஆ) எந்தத் துறை குறித்தும் தமிழில் அறியும் நிலை வர வேண்டும். அந்த வகையில் சமயம் குறித்தும் இணையத்தில் தேவையான உள்ளடக்கத்தை உருவாக்க இது உதவும்.


4. சமூக அவலங்கள், மொழி வெறுப்பு, தாக்குதல்கள் - இவை மிகும் போதெல்லாம் இது போன்ற பதிவுகளின் பங்கு என்ன? (எடுத்துக்காட்டு; தில்லைப் பிரச்சனை)

ரவி: ஒரு பெரிய பிரச்சினை தீப்பற்றி எரியும் போது இது போன்ற பதிவுகளின் பங்கு என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தாலும் அது நிகழ் உலகில் தாக்கத்தை ஏற்படுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால், பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு நாளும் அந்தந்த சமயங்கள் குறித்த தவறான புரிதல்களைத் தவிர்க்க இப்பதிவுகள் உதவலாம்.

மிகவும் உணர்ச்சிப்பூர்வமான இந்த விசயங்களில் நிகழுலகில் நேரடியாகப் பார்த்து உடனுக்குடன் கேட்டு அறிவது சிரமம். அந்த இடைவெளியை இந்தப் பதிவுகள் போக்கும். நிறைய கிறித்தவ, இசுலாமியப் பதிவுகளைப் பார்த்து இருக்கிறேன். அவற்றின் மூலம் சில விசயங்களில் அவற்றைப் பற்றிய மேம்பட்ட புரிதல் பெற்று இருக்கிறேன்.

வைணவக் கோயில்களில் தமிழ்ப் பாசுரங்கள் பாடுவார்கள் என்பதே நீங்களும் குமரனும் சொல்லித் தான் எனக்குத் தெரியும். இது போல சின்னச் சின்ன விசயங்கள். எப்போதாவது எட்டிப் பார்க்கும் எனக்கே இப்படி என்றால் தொடர்ந்து ஆன்மீகப் பதிவுகளைப் படிப்பவர்களுக்கு இன்னும் கூடுதல் புரிதல் வரலாம்.


5. ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டம் என்னவா இருக்கும்/இருக்கணும்-னு நினைக்கறீங்க?

ரவி: ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டம் என்றெல்லாம் எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஆன்மீகப் பதிவர்கள் நிரப்ப வேண்டிய இடைவெளி ஒன்று உண்டு. பல ஆன்மீகப் பதிவுகளைப் படித்தால் துணுக்குத் தோரணங்களாகப் பல சுவாரசியமான விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறதே தவிர, அந்தந்த சமயங்கள் குறித்து தெளிவான, ஆவணப்படுத்தப்பட்ட வரலாறோ விவரங்களோ கிடைப்பதில்லை.

எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் பௌத்த சமயம் பற்றிய கட்டுரைகளைப் பார்க்கலாம். பௌத்த சமயம் குறித்த ஆர்வமுடைய 19 வயதே உடைய இளைஞர் ஒருவர் அங்கு அச்சமயம் குறித்து விரிவாக எழுதி வருகிறார்.

ஆனால், பௌத்தர்களை விட கூடுதல் எண்ணிக்கையில் இந்து, இசுலாமியர், கிறித்தவர் குறித்த இது போன்ற கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது இல்லை. விக்கிப்பீடியாவின் தாக்கம் குறித்து உங்களுக்கு நான் எடுத்துரைக்கத் தேவை இல்லை. தகவல் தேடுவோரின் முதன்மை ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த வேளையில், சமயம் குறித்த தகவல்களைத் தேடுவோர் ஒவ்வோர் ஆன்மீகப் பதிவரின் தளத்துக்கும் வருவதை விட இது போன்ற தளங்களைத் தேட கூடுதல் வாய்ப்புகள் உண்டு. எனவே, ஆன்மீகப் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் மட்டும் இயங்காமல் விக்கிப்பீடியா போன்ற முயற்சிகளிலும் பங்கு கொள்ள வேண்டும். விக்கிப்பீடியாவில் இயங்குவது சிரமமாக இருந்தால் குறைந்தது அந்தந்த சமயங்கள் குறித்த கூட்டுப் பதிவுகள் தொடங்கி தங்கள் பாணியில் ஆனால் அதே வேளை விரிவாகவும் தெளிவாகவும் வரலாற்றுத் தகவல்களை ஆவணப்படுத்தி எழுத வேண்டும்.

நன்றி. உங்கள் நட்சத்திர வாரத்துக்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரவி
.....
நன்றி ரவி,
அன்புடன்
ரவி
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP