திருமதி. ஓபாமா - அமெரிக்காவின் முதல் பெண்மணி!

அவர் எப்படி? தேறுவாரா? ஓபாமாவுக்கு ஈடு கொடுப்பாரா? அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற மரியாதையைத் தகுந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள அவரால் முடியுமா? - இப்படியும் ஒரு கருத்துக் கணிப்பு நடைபெற்றது, தேர்தலின் போது!
60% மக்கள் - மிஷேல் ஓபாமாவை ஆதரித்து வாக்களித்தனர்!
35% மக்கள் - அவரால் முடியுமா என்று ஐயப்பட்டனர்.
ஆக, இதிலும் ஓபாமா தம்பதியருக்கு வெற்றி தான்! மக்கள் நிற வேற்றுமையைப் பாராட்டவில்லை என்பதையே இதுவும் உறுதிப்படுத்துகிறது!
குடியரசுக் கட்சியின் டென்னிசி மாகாணக் கிளை, திருமதி ஓபாமா-வை தேர்தல் பிரசாரத்தின் போது பலமுறை வம்புக்கு இழுத்தது! Primary என்னும் முதல் சுற்றில், அவர் பேசிய போது,
First time in my adult life, I am proud of my country because it feels like hope is finally making a comeback.
எனது வாலிப வயதில் முதன் முறையாக, நான் நாட்டை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நம்பிக்கை மீண்டும் வருவது போல உணர்கிறேன் - என்று குறிப்பிட்டார்.
இதைத் திரித்து, கறுப்பினக் கணவர் அதிபர் பதவிக்கு நிற்பதால் மட்டுமே, அவர் முதன் முறையாக நாட்டை நினைத்துப் பெருமைப்படுகிறாரா? இல்லையென்றால் படமாட்டாரா? - என்று சிக்கலான கேள்விகளை எழுப்பினார்கள்! இதோ சுட்டி
சில பத்திரிகைகளும், அவரை வெறும் வீட்டுத் தலைவி என்றும், Mrs. Grievance (திருமதி. வருத்தம்) என்றும் எழுதின!
ஆனால் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகக் கடந்து, கணவரின் வெற்றிக்கு, பின்னணியில் வெகுவாக உழைத்தார்! அதிகம் வாய் திறக்காது, பல பிரச்சாரங்களில், செயல்முறைகளில் மட்டுமே ஈடுபட்டார்.
ஓபாமாவும், தன் மனைவியைத் தாக்குவோரைக் கடிந்து கொண்டார். "குடும்பம் சிவிலியன்கள் போல! அவர்களைப் போருக்குள் இழுப்பது அமெரிக்க அரசியல் பண்பாட்டுக்கு இழுக்கு" என்று சொன்னவுடன் எல்லாம் அடங்கியது!

வெள்ளை மாளிகைத் தலைவிக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
திருமதி ஓபாமா அவர்களே!
உலகத் தலைவர்களை உங்கள் மாளிகைக்கு வரவேற்கத் தயாராகும் அதே சமயத்தில்,
* உலகில் நிறவெறி குறையவும்,
* அதே சமயம் ஒடுக்கப்பட்ட நிறத்தினர் தாழ்வு மனப்பான்மை கொள்வதைக் குறைக்கவும்,
* ஆப்பிரிக்காவில் ஒடுக்கப்பட்ட குழந்தைகள் நலம் காணவும், உங்களால் முடிந்த முயற்சிகளை எல்லாம் எடுங்கள்! இனி ஆப்பிரிக்கக் குழந்தைகளின் அவலங்களைப் படங்களில் தேடினாலும் கிடைக்காது என்று உத்வேகம் உங்களைச் சூழட்டும்!
வெள்ளை மாளிகை,
உங்களால் மேலும் வெண்மை பெறட்டும்!
வாழ்த்துக்கள் மிஷேல் ஓபாமா! :)






