Monday, February 18, 2008

ஒரு பெண் மனசு, ஆண் மனசு, ஆழ்வார் மனசு!

"என்னாங்க குழந்தையைக் கொஞ்ச நேரம் பாத்துக்குங்களேன்! வீல் வீல்-ன்னு அழுவறான் பாருங்க!"

"பசியா இருக்கும். வந்து பால் குடும்மா. இதப் போயி என் கிட்டச் சொன்னா நான் என்ன பண்ண முடியும்?"

"அட, இப்ப தாங்க கொடுத்தேன்! அரை மணி கூட ஆவலை! தூக்கத்துக்கு அழுவறான்! தெரியலை உங்களுக்கு?"

"ஆமா, வீல் வீல்-னு அழுவாம, சக்கரம்-சக்கரம்-ன்னா அழுவும் குழந்தை? என்ன தான் நீ பெருமாள் பக்தையா இருக்கலாம்! ஆனா இதெல்லாம் டூ மச் டீ ராசாத்தி!"

"இந்தக் குசும்பை எல்லாம் உங்க Blogல மட்டும் வச்சிக்குங்க! அங்க தான் உங்க சேட்டைக்கு எல்லாம் ஹிஹின்னு சிரிக்கற கூட்டம் இருக்கு!
அடுக்களையில் உங்களுக்குத் தானே மசால் வடை சுட்டுகிட்டு இருக்கேன்! ச்சே போதாக் குறைக்கு இந்த Fire அலாரம் வேற!"

"உம்ம்ம்ம்ம்"

"என்னாங்க...அப்படி என்ன தான் இருக்கோ அந்தப் பதிவுல! கொஞ்ச நேரம் குழந்தையைப் பாட்டு பாடித் தான் தூங்க வையுங்களேன். அதுக்குக் கொஞ்சம் வாயசைச்சிப் பாடினாப் போதும். தூங்கிடும் அந்தப் பையன்! தாலாட்டு பாடினாக் கொறைஞ்சாப் போயிடுவீங்க?"

"ஆம்பிளைங்க தாலாட்டு பாடறதா? அடிப்பாவி! குழந்தை வீல் வீல்-ன்னு அழுவறதை நிறுத்திட்டு வேல் வேல்-னு என்னைப் பொளந்தாலும் பொளந்துடும், என் அதி அற்புதக் குரலைக் கேட்டு! :-)


ஒரு ஆண் தன் குழந்தையிடம் எந்த அளவுக்கு அன்பில் உருக முடியும்-னு நினைக்கறீங்க மக்களே? அதுவும் வெளிப்படையாக உருக முடியுமா?

ஒரு பெண்ணின் மனசு ஒரு பெண்ணுக்குத் தான் தெரியும்-னு சொல்லுவாய்ங்க!
விதி வசத்தால் வளர்ப்புத் தாயிடம் வளர்கிறது ஒரு குழந்தை. பெற்ற தாய் அதைக் காண மாட்டாமல் ஏங்கி ஏங்கிச் சாகிறாள். இதை ஒரு ஆண் சொல்லிச் சொல்லி உருகுகிறான்!
ஒரு பெண்ணின் மனசு ஒரு ஆணுக்குத் தான் தெரியும்-னு சொல்லலாமா?
யார் இந்த ஆண்மகன்-னு கேட்கறீங்களா? அவர் பல போர்களைக் கண்டு வென்ற ஒரு பேரரசர்! அஞ்சாத சிங்கம் என் காளை!

ஆகா...இருக்கவே முடியாது! போர்க்களத்தில் வேல் பிடித்து தழும்பேறிய கையா, வெண்மல்லிப் பூவைத் தொடுக்கும்?

ஹிஹி! தொடுத்ததே! மல்லிகைப் பூவை அல்லை! அதை விட மென்மையான மழலைப் பாட்டை! - அந்த மழலை பாடிய வீரன் பெயர் குலசேகரன்.
கொல்லி நாட்டு அரசன். சேர மன்னன். இன்றைய மலையாள தேசம்! வேணாடு (திருவிதாங்கூர் பகுதி), குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவை இவன் ஆட்சிக்கு உட்பட்டவை!

அரசனாய் இருந்து பல வெற்றிகளைக் கண்டவன், திடீர் என்று ஆழ்வாராய் மாறி விட்டான்(ர்)! கொல்லி நகர் கோழியர் கோன், குலசேகராழ்வார் ஆகி விட்டார்!
இன்று அவர் தம் பிறந்த நாள் - Feb 18, 2008! (திருநட்சத்திரம் - மாசியில் புனர்பூசம்) ; வாங்க அவர் "அம்மாவாகிய நான்" கதையைக் கொஞ்சம் பார்க்கலாம்!கண்ணனைப் பெற்ற தேவகி, அதற்கு மேல் ஒன்றுமே காணவில்லை!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்கிறான். பலரும் கண்ணன் வளர்ச்சியைப் பல விதமாய் வந்து சொல்கிறார்கள்.
கோல மயில் கொண்டை, குறும்புக் கண்கள், கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பு,
இட்டும் தொட்டும் கவ்வியும், நெய்யுடை உணவை மெய்ப்பட விதிர்த்தும்,
அவனோ சிறு கை நீட்டிக் குறு குறு நடந்து வரும் அழகு! இவளுக்கோ குறு குறு என்று வருவது அழுகை!

தன் பிள்ளையை ஊரார் எல்லாம் வர்ணிக்க, தன் கண்களால் தான் காண முடியாத கொடுமை எந்தவொரு தாய்க்கும் தகப்பனுக்கும் வரவே கூடாது!
விதி வசத்தால் கொடுத்து விட்டாள்! மோசமானவர்களிடம் சிக்கிக் கொண்டு வளரவில்லை அந்தக் குழந்தை! யசோதை அங்கு நன்றாகத் தான் வளர்க்கிறாள்! இருந்தாலும் யசோதை மேல் தேவகிக்குக் கோபம் கோபமாய் வருகிறது! பொறாமை பொத்துக் கொண்டு வருகிறது! :-)
எதற்காம்?
கண்ணன் வாயில் விரலை வைத்து, ஜொள்ளு விட்டுக் கொண்டு, "கெக்கே பிக்கே" என்று உளறும் உளறலை இவள் கேட்க முடியவில்லையாம்! ஆனால் யசோதை கேட்கிறாளே என்று பொறாமை! ஆனால் அப்போது கூட "பாவி மக அந்த யசோதை", "கடங்காரி எனக்குப் போட்டியா வந்தா" என்றெல்லாம் வையவில்லை! தெய்வ நங்க யசோதை-ன்னு திட்டுகிறாள் தேவகி! :-)

விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே

உண்மையிலேயே தேவகி யசோதையைத் திட்டினாளோ இல்லையோ, ஒரு ஆண்பிள்ளை இவ்வளவு நோட் பண்ணிப் பாட முடிகிறது என்றால், எப்படிப்பட்ட தாய் மனம் பாருங்கள் ஆழ்வாருக்கு!

ஆலைநீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயுத் தடங் கண்ணினன் தாலோ ...
ஏலவார் குழல் என்மகன் தாலோ

என்று தாலேலோ பாடி

எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல்
கோலமாம் குல சேகரன் சொன்ன
என்று முடிக்கிறார்.


இப்படிக் கண்ணனில் தொடங்கிய குலசேகரர், பின்னாளில் இராமன் மேல் பேரன்பு பூண்டு விட்டார். பாசுரத்தில் முழு இராம கதையும் சொன்ன ஒரே ஆழ்வார் இவர் தான்! கம்பருக்கு முன்னோடி என்று கூட இவரைச் சொல்லலாம்!

ஒரு கட்டத்தில், இராவணன் சீதையைக் கவர்ந்து சென்று விட்டான்; இராமன் தாளாது அழும் கட்டம்! அதைக் கேட்ட மாத்திரத்தில் துடித்து எழுந்து, சேர நாட்டுப் படைகளை எல்லாம் இலங்கைக்குக் கிளம்ப ஆணை இட்டாராம்! ஹிஹி...அமைச்சர்கள் எல்லாரும், "மன்னவா, இராமாயணம் எப்போதோ முடிந்து விட்டது, நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது உபன்னியாசம் தான்", என்று சொல்லி உணர்ச்சி நிலையில் இருந்து இயல்பு நிலைக்குக் கூட்டி வருகிறார்கள்!
இப்படி ஒன்றிப் போய், தாயினும் மேலாகப் பரிந்தெடுத்து தாலாட்டுகிறார் இராமன் என்னும் திருக் குழந்தையை!
மன்னு புகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னிநன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே
என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ


என்னைப் பெத்த ராசா-ன்னு ஊரில் சொல்லுவார்கள்! "என்னுடைய இன்னமுதே" என்று ஒரே சொல்லில் குழைந்து விட்டார் பாருங்கள்!
இராவண வதத்தை, இரத்தக் களறியைச் சொன்னால் இராமன் என்னும் குழந்தை பயப்படுவானோ என்னமோ, அதனால் வெட்டினாய், குத்தினாய் என்று எல்லாம் பாடாமல், "சிந்துவித்தாய்" என்று லைட்டாகச் சொல்லி நிறுத்தி விடுகிறார் தாலாட்டில்!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்து அடிவணங்க அரங்க நகர்த் துயின்றவனே
காவிரி நல்நதி பாயும் கண்ணபுரத்தென் கருமணியே
ஏவரி வெஞ் சிலை வலவா இராகவனே தாலேலோ


இறைவனுக்குத் தேவர், அசுரர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது! யாவருக்கும் பொதுவானவன்! குணத்தை மட்டுமே கண்டு ஆராய்ந்து அருளுபவன்! அதனால் தான் "தேவரையும் அசுரரையும்" படைத்தவனே என்று சேர்த்தே பாடித் தாலாட்டுகிறார்!
முழுத் தாலாட்டுப் பாடலும் கேட்கணுமா? இங்கே!


குலசேகர ஆழ்வார் திருவரசு


பெருமாளிடம் மட்டும் அன்பு செலுத்தாது, அடியார் கூட்டத்துடன் கூட அன்பு செலுத்தி வாழ்ந்து வந்தார் குலசேகரர்!
அடியாருடன் அவர் அதிக நேரம் செலவழிப்பதைக் கண்ட சபையினர் சில பேர் எரிச்சல் கொண்டனர். அடியார் கூட்டத்தை விரட்டி விட்டால் மன்னர் மறுபடியும் கேளிக்கைகளில் இறங்கி விடுவார் என்பது அவர்கள் கணக்கு.

உடனே அரச சபையில் ரத்னமாலை திருட்டுப் போனது. பக்த கோஷ்டியினர் தான் திருடினர் என்று பழி சுமத்தப்பட்டது. குலசேகரர் மிகவும் வருந்தினார். பரமனின் தூய அடியவர்கள் ஒருபோதும் இப்படிச் செய்ய மாட்டார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்!
"நானும் தானே அடியாருடன் அடியாராய் இருந்தேன்! நானும் திருடி இருக்கலாம் அல்லவா? அப்படிச் செய்திருந்தால் என்னைப் பாம்பு பிடுங்கட்டும்" என்று ஒரு குடத்தில் பாம்பை வைத்து அதற்குள் கையிட்டார். பாம்பு அவரைக் கடிக்கவில்லை. அடியார் அவமதிப்பும் ஒழிந்தது!

இதற்குப் பின் குலசேகரர் அரச பதவியைத் துறந்து விட்டார். இதற்குச் சரித்திரச் சான்றுகளும், சேக்கிழார் புராணத்தில் குறிப்புகளும் உள்ளன. தன் மகனுக்குப் பட்டம் கட்டி விட்டு அடியவர் கூட்டத்தில் இணைந்து விட்டார்; ஊர் ஊராகச் சென்று இறைத் தொண்டும் தமிழ்த் தொண்டும் செய்து, இறுதியில் திருவரங்கம் சென்றார். அங்கே இறுதி நாட்களைக் கழித்து, பரமபதம் அடைந்தார்!

இவர் பாடியதைக் குலசேகரன் திருமொழி என்று சொல்லவில்லை! "பெருமாள்" திருமொழி என்றே சிறப்பித்துப் பாடுகிறார்கள்!இவ்வளவு சொல்லிட்டு முக்கியமான ஒன்னை மட்டும் சொல்லலைன்னா எப்படி?
இன்றைக்கு பெருமாள் இருக்கும் இடம் எல்லாம், இவரும் சேர்ந்தே இருக்குமாறு நீங்காத இடம் ஒன்றை இவர் பிடித்து விட்டார்! - Permanent Resident! :-) எப்படித் தெரியுமா?

வேங்கடவா! உன் கோயிலில் அரை நிமிடத் தரிசனத்துக்குத் தானே இவ்வளவு கூட்டம், இவ்வளவு தள்ளு முள்ளு! இன்னொரு முறை பார்க்க மாட்டோமா, என்று எக்கி எக்கி பார்ப்பது! எதுக்கு இவ்ளோ கஷ்டம்?
உன் கருவறைக்கு முன்னால் வாசற்படியாய்க் கிடந்து விடுகிறேன்!
அப்போது யார் என்னைத் தள்ள முடியும்? யார் என்னை "ஜருகண்டி" சொல்ல முடியும்?
படியாய்க் கிடந்து, நாளெல்லாம் உன் பவள வாயைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்! திரை போட்டாலும் சரி, நடை சாத்தினாலும் சரி, என்றுமே என் கண்ணை உன் மீது இருந்து எடுக்கவே முடியாது!

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே


எவ்வளவு காதல் பாருங்கள்! எவ்வளவு பரிவு பாருங்கள்!
இன்றும் பெருமாள் கருவறை வாசப்படிக்கு "குலசேகரன் படி" என்று தான் பெயர்! ஆரத்தி இந்த வாசற்படிக்கும் காட்டப்படுகிறது! திருமலை மட்டும் இல்லை! உலகில் எந்தவொரு பெருமாள் கோயில் ஆனாலும், கருவறை வாசப்படி குலசேகரன் படி தான்!

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்! ஒரு மரமானாலும் பழமுதிர் சோலையில் மரமாவேன் என்ற கண்ணதாசன் பாட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? குலசேகரன் பாட்டில் இருந்து தான்! (முழுப்பாடலும் இங்கே!)

வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே = வேங்கடக் குளத்தில் கொக்காய் பிறக்க மாட்டேனா!
மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே = வேங்கடச் சுனையில் ஒரு மீனாய் தவழ மாட்டேனா!

வேங்கடத்துச் செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே = வேங்கட மலையில் செண்பக மரமாய் நிற்க மாட்டேனா!
மலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே = வேங்கட மலையிலே கொடிக் கம்பமாய் நிற்க மாட்டேனா!

கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே = வேங்கடத்தில் ஒரு ஆறாகப் பாய மாட்டேனா!
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே = அவன் வாசல் படியாய் கிடந்து, தித்தித்து இருக்கும் பவள வாய் சேவித்து இருக்க மாட்டேனா!

எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே = எம்பெருமான் பொன் மலை மேல் ஏதாச்சும் ஒன்னாய் ஆக மாட்டேனா!
குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!!

21 comments:

 1. // "கெக்கே பிக்கே" என்று உளறும் // ஆஹா, ஆஹா, ஆஹா, ஆஹா! கண்ணன் எங்க வூட்டுப் புள்ளப்பா;-)))

  ReplyDelete
 2. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
  // "கெக்கே பிக்கே" என்று உளறும் // ஆஹா, ஆஹா, ஆஹா, ஆஹா! கண்ணன் எங்க வூட்டுப் புள்ளப்பா;-)))//

  யக்கா...சத்தியமாச் சொல்லுறேன்!
  அதை எழுதும் போது, நீங்க தான் ஞாபகம் வந்தீங்க! :-))))

  ReplyDelete
 3. குலசேகரப் பெருமாள் இராமபிரானுக்குத் தாலாட்டு பாடுனது தெரியும். கண்ணனுக்குத் தாலாட்டுப் பாடுனது பெரியாழ்வார் தானே. இன்னைக்குப் பெரியாழ்வார் திருநட்சத்திரமான்னு முழிச்சுக்கிட்டே படிச்சேன். ஆக கோசலையாக மட்டுமில்லாம தேவகியாகவும் உருமாறியிருக்காரு கொல்லிகாவலர்ன்னு இன்னைக்குத் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப நன்றி இரவிசங்கர்.

  பெருமாள்ன்னு இவரை அழைப்பது பெருமாளான இராமபிரானைப் பாடியதாலா இல்லாட்டி அவரோட அரச குலப் பெயரிலேயே அந்தப் பெருமாள் உண்டா? சேரமான் பெருமாள்ன்னு இன்னொரு கொல்லி காவலரும் இருந்திருக்கிறாரில்லையா?

  எங்கே பொருந்துமோ அங்கெல்லாம் இந்தச் சுட்டுகளை இட்டுவிடுங்கள் இரவிசங்கர். ஏதோ என்னால் ஆன தொண்டு.

  http://kannansongs.blogspot.com/2007/09/68.html

  http://koodal1.blogspot.com/2006/06/200_03.html

  ReplyDelete
 4. ஹேப்பி பர்த்டே குல்ஸ்!! (அதாங்க நம்ம குலசேகரப் பெருமாள்!!)

  ReplyDelete
 5. //குமரன் (Kumaran) said...
  இன்னைக்குப் பெரியாழ்வார் திருநட்சத்திரமான்னு முழிச்சுக்கிட்டே படிச்சேன்//

  குமரன்,
  பெரியாழ்வார் நட்சத்திரம் ஆனியில் சுவாதி! குலசேகரருக்கும் மாசியில் புனர்பூசம்!

  இதுக்கு ஏதோ ஒரு பாட்டே தனியா இருக்குதுன்னு நினைக்கிறேன்! உங்களுக்குத் தெரியுமா?

  //ஆக கோசலையாக மட்டுமில்லாம தேவகியாகவும் உருமாறியிருக்காரு கொல்லி காவலர்ன்னு இன்னைக்குத் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப நன்றி இரவிசங்கர்//

  தேவகி புலம்பல் முழுக்கப் படிச்சுப் பாருங்க குமரன்! நான் இங்கே ரொம்ப டைல்யூட் பண்ணித் தான் கொடுத்திருக்கேன்! :-)

  //பெருமாள்ன்னு இவரை அழைப்பது பெருமாளான இராமபிரானைப் பாடியதாலா இல்லாட்டி அவரோட அரச குலப் பெயரிலேயே அந்தப் பெருமாள் உண்டா?//

  இவர் அரச குலத்துக்கே அந்தப் பெயருண்டு! சேரமான் பெருமாள் நாயனார் கூட இருக்காரே!
  ஆனால் இராமனை அதிகம் பாடியதால் பெருமாள் திருமொழி என்பது நிலைத்துப் போயிற்று!

  ஆழ்வார்களிலேயே பெருமாள் இவர் தான் அல்லவா குமரன்? வேறு எந்த ஆழ்வாருக்கும் "பெருமாள்" என்கிற பட்டம் உண்டா?

  //எங்கே பொருந்துமோ அங்கெல்லாம் இந்தச் சுட்டுகளை இட்டுவிடுங்கள் இரவிசங்கர். ஏதோ என்னால் ஆன தொண்டு//

  ஏதோவா?
  என்ன இப்பிடிச் சொல்லிட்டீங்க! இட்டுடறோம்! இட்டுடறோம்:-)

  ReplyDelete
 6. //இலவசக்கொத்தனார் said...
  ஹேப்பி பர்த்டே குல்ஸ்!! (அதாங்க நம்ம குலசேகரப் பெருமாள்!!)//

  ஓ...கொத்ஸ்-க்கு ஈடு கொடுக்க குல்ஸ்-ஆ?
  நல்லாத் தேன் இருக்கு! :-)

  ReplyDelete
 7. நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் ரவி. இரண்டுமே தாலாட்டுத்தான் ஆனால் ஒன்று மகன் நம்மிடம் இல்லையே என்ற தாயின் ஏக்கம், மற்றது மணி வயிறு வாய்த்த மகனை கொண்டாடும் பெருமை, மொத்தத்தில் இரண்டுமே அருமை.

  ஷோபா

  ReplyDelete
 8. //Dreamzz said...
  kanna kattuthu :)//

  தல, காதலுக்கு கண்ணில்லை!
  அதான் கண்ணைக் கட்டுதோ? :-)))

  இதுவும் காதல் தான் ட்ரீம்ஸ்! சில கவிதைகளைப் படிச்சீங்கினா, உடனே காதலிக்க ஓடிடுவீங்க! அப்படி இருக்கும் சில பாசுரங்கள்!

  ReplyDelete
 9. //Shobha said...
  இரண்டுமே தாலாட்டுத்தான் ஆனால் ஒன்று மகன் நம்மிடம் இல்லையே என்ற தாயின் ஏக்கம், மற்றது மணி வயிறு வாய்த்த மகனை கொண்டாடும் பெருமை//

  ஆமாங்க ஷோபா!
  முன்னது இல்லாத குழந்தைக்குத் தாலாட்டு!
  பின்னது இருக்கும் குழந்தைக்குத் தாலாட்டு!

  இதை ஒரு ஆண்மகன் பாடி உருகியது என்னை மிகவும் கவர்ந்தது! ஆணுக்குள் எப்படி இவ்வளவு தாய்மை ஒளிஞ்சிருக்கு-ன்னு பாருங்களேன்!

  ReplyDelete
 10. குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!!

  ReplyDelete
 11. தல

  அருமை..அருமை.. ;)

  தேவகியின் பொறமை கலந்த கோபத்தை எவ்வளவு அழகாக சொல்லியிருக்காரு...மிகவும் ரசித்தேன் தல ;))

  \\உன் கருவறைக்கு முன்னால் வாசற்படியாய்க் கிடந்து விடுகிறேன்!\\

  புதிய தகவல்..மிக்க நன்றி தல ;)

  ReplyDelete
 12. \\குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!!\\

  சரணம்..சரணம் !

  ReplyDelete
 13. நேத்திக்கே படிச்சிருக்கவேண்டிய பதிவு வழக்கம்போல தாமதம் எனக்கு..கொடுத்துவைக்கணுமே எல்லாத்துக்கும்!
  சுகப்ரமம் ரிஷி வியாசர் பெரியாழ்வார் இவர்களுக்கு கிருஷ்ணாவதாரம்தான் ஆசையாம் வால்மீகிக்கு ராமாவதாரம் மீது ரொம்பப்பிரீயம்
  அதுபோல குலசேகரருக்கு கருஷ்ணாவதாரத்தை சொன்னாலும் ராமாவதாரத்தின்மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்று சொல்கிறார்கள்.
  சுவாமி தேசிகன் குலசேகர ஆழ்வாரைப்பற்றி சொல்லும்போது'தூய குலசேகரன்' என்கின்றார்.மகாராஜாவாய் இருந்தவர் 'ஊனேறு செல்வத்துடற்பிறவி யான் வேண்டேன் " "வானாளும் செல்வமும் மண்ணரசும் நான் வேண்டேன்" எனப்பாடியவர்.
  ஆழ்வார் பெருமைகளை இங்கு பதிவிட்ட உங்களுக்கு அரங்கன் அருள் கிடைக்கட்டும் ரவி!

  ReplyDelete
 14. //மதுரையம்பதி said...
  குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!!
  //

  மெளலி அண்ணா, ரெண்டு சரணம் போட்டாச்சா! சரி இந்த வருசம் ஆபீசுல டபுள் போனஸ்! :-)

  ReplyDelete
 15. //கோபிநாத் said...
  தேவகியின் பொறமை கலந்த கோபத்தை எவ்வளவு அழகாக சொல்லியிருக்காரு...மிகவும் ரசித்தேன் தல ;))//

  கோபிக்குத் தான் அம்மா-ன்னா உயிராச்சே! ஏன் ரசிக்க மாட்டீங்க! :-)

  \\உன் கருவறைக்கு முன்னால் வாசற்படியாய்க் கிடந்து விடுகிறேன்!\\
  புதிய தகவல்..மிக்க நன்றி தல ;)//

  நம்ம மக்கள்ஸ் படிக்க ஈசியா லோக்கல் இஷ்டைல்ல சொன்னேன் தல! அடுத்த முறை போகும் போது பாருங்க! தெரியும் குலசேகரன் படி!

  ReplyDelete
 16. //ஷைலஜா said...
  சுகப்ரமம் ரிஷி வியாசர் பெரியாழ்வார் இவர்களுக்கு கிருஷ்ணாவதாரம்தான் ஆசையாம் வால்மீகிக்கு ராமாவதாரம் மீது ரொம்பப்பிரீயம்
  அதுபோல குலசேகரருக்கு கருஷ்ணாவதாரத்தை சொன்னாலும் ராமாவதாரத்தின்மீது மிகுந்த ஈடுபாடு உண்டு என்று சொல்கிறார்கள்//

  அட, ஷைல்ஸ் பின்னூட்டமே, பாதிப் பதிவைப் படிச்ச எஃபெக்ட்டு!
  அடுத்த மாசம் இந்தியப் பயணத்தின் போது, மாதவிப் பந்தலை ஷைலஜா கிட்ட கொடுத்துட்டுப் போயிறலாமா-ன்னு பாக்குறேன்! என்னா சொல்றீங்க மக்களே? :-)

  //ஆழ்வார் பெருமைகளை இங்கு பதிவிட்ட உங்களுக்கு அரங்கன் அருள் கிடைக்கட்டும் ரவி!//

  தங்கள் ஆசிக்கு அடியேன் தலை வணங்குகிறேன் குருஜி! :-)

  ReplyDelete
 17. "இந்தக் குசும்பை எல்லாம் உங்க Blogல மட்டும் வச்சிக்குங்க! அங்க தான் உங்க சேட்டைக்கு எல்லாம் ஹிஹின்னு சிரிக்கற கூட்டம் இருக்கு

  படிக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு. தங்கமணிகைக்கு ஒரு ஜோடி வைர வளயல் போடுங்க

  குலசேகர ஆழ்வார் கண்ணனை குழந்தையாய் வாலிபனாய் பல்வேறு கோணங்களில் அலசி இருக்கிறார். ரவியின் கருத்துடன் உடன்பாடு.

  ReplyDelete
 18. //தி. ரா. ச.(T.R.C.) said...
  "இந்தக் குசும்பை எல்லாம் உங்க Blogல மட்டும் வச்சிக்குங்க! அங்க தான் உங்க சேட்டைக்கு எல்லாம் ஹிஹின்னு சிரிக்கற கூட்டம் இருக்கு

  படிக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு. தங்கமணிகைக்கு ஒரு ஜோடி வைர வளயல் போடுங்க//

  நான் திட்டு வாங்குறதுன்னா திராச ஐயாவுக்குச் சர்க்கரைக் கட்டி போல! :-)

  //குலசேகர ஆழ்வார் கண்ணனை குழந்தையாய் வாலிபனாய் பல்வேறு கோணங்களில் அலசி இருக்கிறார். ரவியின் கருத்துடன் உடன்பாடு//

  நன்றி திராச.
  குலசேகரர் சிறந்த இசைக் கவியும் கூட திராச! நீலாம்பரிப் பாடல்கள் எல்லாம் கலக்கி இருப்பாரு!

  ReplyDelete
 19. http://www.youtube.com/watch?v=lfbkANORruQ

  அருணா சாய்ராம் - குறை ஒன்றுமில்லை

  Soul stirring by combining Rajaji and Kulasekar.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP