Wednesday, July 09, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - 1

"என்ன இது லூசுத்தனமான கேள்வி? இறைவன் தானே எல்லாருக்கும் மோட்சம் அருளுவதாக சொல்லுவாங்க! அவருக்கே மோட்சம் கிடைக்குமா-ன்னு கேட்டா என்ன அர்த்தம்? வர வர உங்க விளையாட்டுக்கு அளவே இல்லாமப் போச்சு கேஆரெஸ்!" - அப்படி-ன்னு என்னைத் திட்ட வரீங்க தானே? :-)

என்னங்க பண்ணறது! நம்ம ஸ்ரீதர் நாராயணன் அண்ணாச்சியோட Dragon Fly Effect-ல மாட்டிக்கிட்டேன்-ல! அதான் இப்படி எல்லாம் எடக்கு மடக்கா யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்!:-)
போதாக்குறைக்குப் பொன்னப்பா-ன்னு எங்க பாலாஜி வேற "அவர் என்ன லூசா?"-ன்னு சங்கிலிக் கேள்வித் தொடர்-ல கேட்டிருந்தாரா? அதான் இப்படி ஒரு லூசான யோசனை.....
அட, பேசாம மேற்கொண்டு பதிவைப் படிங்கப்பு :-)

அன்று காவிரிக் கரையில் இராமாயண உபன்னியாசம்...விபீஷண சரணாகதி கட்டம்...
அப்போ தான் இந்தக் கேள்வி எழுகிறது! லூசுத்தனமான இந்தக் கேள்வியைக் கேட்கிறது கேஆரெஸ் இல்லீங்கப்பா!
சாட்சாத் ஒரு விற்பன்னர்! அறிவும் அன்புமாய் கலந்து தன் மாணாக்கருக்குச் சொல்லிக் கொடுப்பவர்! அவர் போய் இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா? சிலர் நெளிகிறார்கள்! சிலர் முகம் சுளிக்கிறார்கள்!

அம்மா மண்டபத்து ஆலமரத்தின் கீழே ஒரே சலசலப்பு!
ஆல இலைகள் சலசலக்க, ஆற்று நீர் சலசலக்க, ஆசார்யன் கேட்ட கேள்வியால் ஆட்கள் எல்லாம் சலசலக்க, அடியார்கள் சலசலக்க...
"அந்த வீடணன் துரோகி தானே?" - இதுவல்ல கேள்வி! இதை மெள்ள இன்னொரு பதிவில் பார்த்துக்கலாம்! :-)
"சொல்லுங்க பார்ப்போம், இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா?" - இது தான் அந்த மகாகுரு கேட்ட கேள்வி! இதை மட்டும் இந்தப் பதிவுத் தொடரில் பார்ப்போம்! :-)



அண்ணன் இராவணன் மிகவும் இழிவாகப் பேசி வெளியேறச் சொல்லி விட்டான்! இந்திர சித்தோ சீற்றப்பன் ஆகி, சிற்றப்பனைச் சிறுமைப்படுத்தி விட்டான்!
இலங்கையை விட்டு, மனைவியை விட்டு, மக்களை விட்டு ஓடோடி வருகிறான் வீடணன். கண்ணீர் மல்க கும்பகருணனின் நிலையையும் எண்ணிக் கொண்டே வருகிறான்! நண்பர்கள் நால்வர் அவனுடன் பறந்து வருகிறார்கள்!

இராமன் இருக்கும் இடம் வந்து சேர்கிறான் வீடணன்...பார்த்தாலே தெரிகிறது அவர்கள் அசுரர்கள் என்று! உடனே குரங்கினப் படைகள் சூழ்ந்து அவர்களை விரட்டப் பார்க்கின்றன!
இன்னும் வீடணன் வானத்தை விட்டுக் கீழே இறங்கவில்லை! இறங்கினால் அதோகதி தான்!

அதோகதியில், யார் கதி? அதோ கதி! அதோ கதி! என்று அடியவர்க்கு அதோ...கதியாக கண்ணுக்குத் தெரிகிறானே! இராமன்! அதோ நம் கதி! - இதுவே வீடணனின் அப்போதைய மனநிலை!

கார் தான் எனும் மெய்நீர் உரையும் என்ன
கண்ணன் கழல் அடைந்து உய்ய வந்தேன்!
ரக்ஷமாம் சரணாகதம்! ராகவாய மகாத்மனே!
சர்வ லோக சரண்யாய, விபீஷணம் உபாஸ்திதம்!

"அன்பர்களே! என் பேர் வீடணன்; இலங்கைப் பேரரசன் இராவணனின் தம்பி! அண்ணனை நல்வழிப்படுத்த முடியவில்லை! துரத்தி விட்டனர்! புகல் ஒன்று இல்லா அடியேன், அண்ணலின் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்! போய் இராமனிடம் சொல்லுங்கள்;

சர்வ தர்மங்களையும் விட்டு விட்டேன், அவன் ஒருவனே சரணம் என்று வந்துள்ளேன்!
குடும்பத்தை விட்டேன், சுற்றத்தை விட்டேன்,
செல்வத்தை விட்டேன், பதவியை விட்டேன்,
நாட்டை விட்டேன், மானத்தை விட்டேன்,
ஊர் தூற்றி ஏசுமோ என்னும் சுய கெளரவம் விட்டேன்!
அண்ணனை விட்டேன், ஆயின் அண்ணலை விடேன்!!

இலங்கையில் இருந்து வந்த முதல் அகதி அடியேன் தான்!
அண்ணலிடம் போய் என் சரணாகதியைச் சொல்லி ஆற்றுப்படுத்துங்கள்!"



சுக்ரீவனுக்குச் சந்தேகம், அங்கதனுக்குச் சந்தேகம், ஜாம்பவானுக்குச் சந்தேகம், இன்னும் எத்தனை பேரோ, அத்தனை பேருக்கும் சந்தேகம்!

"இதுவா சரணாகதி? இவன் மேலே இருக்கான்! அண்ணல் கீழே இருக்கார்! ஒரு பணிவு வேணாம்? ஆணவம் பிடித்த அசுரன், சரணாகதி செய்யும் லட்சணத்தைப் பாருங்கள்!

இவன் எதிரியின் ஒற்றனே தான்!
இல்லையென்றால், ஏதாவது தவறு செய்தபடியால் இவனை இராவணன் அடித்து விரட்டி இருப்பான்!
இல்லையென்றால், மண்ணாசை பிடித்துப் போய் மானம் இல்லாமல் உதவி கேட்டு வந்திருப்பான்!
இவனைச் சேர்த்துக் கொள்ளவே கூடாது!" - சொல்வது சுக்ரீவன்! புன்னகை பூப்பது இராமன்!

இதில் நகைச்சுவை என்னவென்றால் "மண்ணாசை பிடித்துப் போய் மானம் இல்லாமல் உதவி கேட்டு வந்திருப்பான்!" என்பதைச் சுக்ரீவன் சொன்னது தான்!
சில மனிதர்களுக்கு ஒரு வேடிக்கையான குணம்: தனக்கொரு நியாயம்; பிறர்க்கொரு நியாயம்! தன் கருத்துக்கு ஒரு நியாயம்! மற்றவரின் அதே கருத்துக்கு வேறொரு நியாயம்! ஐயன் வள்ளுவனே சிரிக்கிறான்!
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற் பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு?

நாத்திகனுக்கு,
சீதை எனும் பெண்ணை இழிவாகப் பேசினால் - அது நியாயம்!
ஆனால் பெண்ணை மற்றவர்கள் இழிவாய்ப் பேசி, பெண்ணுரிமை மறுத்தால் அது அநியாயம்!
ஆத்திகனுக்கு,
நந்தனார் பாஷை தெரியாமல் செய்யும் பூசை - அது நியாயம்! புராணமாகும்!
ஆனால் அடுத்த வீட்டுக் குப்பன், ஏதோ அவன் அறிந்ததை ஓதி வழிபட்டால், அது மட்டும் தீட்டாகும்! :-)

ஆனால் இப்படி இரட்டை இரட்டை நிலை எடுக்கத் தெரியாதவன் தானே உண்மையான அடியவன்!
வீடணனின் நிலைமை அங்கே ஒரே ஒரு அடியவனுக்குத் தான் தெரிந்திருந்தது!
இப்போது சரணாகதி செய்பவனின் நிலை, அப்போது சரணாகதி செய்தவனுக்குத் தெரிந்திருந்தது!
யார் அந்த அடியவன்? சிறிய திரு அடியவன்?
சரணம் கேட்டு வந்திருப்பவன் கொடியவனா? இல்லை கொடி-அடியவனா?
இராமன் கூட்டிய சபையில், பக்தனுக்காக ஒரே ஒரு குரல்!
- அது அன்றும், இன்றும், என்றும், எம் அன்பன் ஆஞ்சநேயனின் குரல்! சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!


உபன்னியாசம் மிக அழகாக போய்க் கொண்டு இருக்கும் வேளையில்...
"அச்சோ! நான் தேறுவேனா?" - இப்படி ஒரு குரல் முன் வரிசையில் இருந்து!
அரற்றும் கூக்குரல் அது!....
பாதியில் எழுந்து அரற்றுகிறார் ஒரு சீடர்!

"இத்தனை பேர் இருக்கும் சபையில், இப்படியா ஒரு சீடன் நடந்து கொள்வது? ச்சே! இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் சீடனாகச் சேர்த்துக் கொண்டால், இப்படித் தான் ஆகும்! ஒரு இங்கிதமும் தெரியாது! அழகானதொரு உபன்னியாசம் இப்படிப் பாதியில் நின்று போனதே!" - சீடர்கள் சில பேரின் பொருமல்!

"என் சீடனே! என்ன புதுப் பழக்கம்? ஏன் திடீர் என்று இப்படிப் பாதியில் அரற்றுகிறாய்? என்ன ஆனது உனக்கு?"

"சாமீ...விசயம் தெரியாமல் போயும் போயும் இந்தப் பெருமாளுக்கு நான் ஒரு அன்பன் ஆனேனே!
பெண்டாட்டி, புள்ளை, சொத்துபத்து, பதவி-ன்னு எல்லாம் விட்டுட்டு வந்தான் ஒருவன்! அவனை நடுவானத்தில் நிறுத்தி வைத்து விட்டு, இப்படியா விசாரித்துக் கொண்டு இருப்பார்கள்? இது தானா அந்த இராமனின் குணம்?
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ-ன்னு நேற்று சொன்னீங்களே! ஆனா இப்படி ஆயிடிச்சே சாமீ...

"ஓ...இதனால் உனக்கு என்ன கஷ்டம்? அச்சோ, நான் தேறுவேனா என்று ஏன் கத்தினாய்?"

"இப்படி அனைத்தையும் விட்டுட்டு், அவன் ஒருவனே கதி-ன்னு வந்தான்! அவனுக்கே இந்தக் கதி-ன்னா.....
ஒன்னுத்தையும் விடாம, சும்மா ஒப்புக்கு இருக்கும் அடியேனுக்கு என்ன கதியோ?
அவனாச்சும் ரெண்டு மந்திரம், ரெண்டு பாட்டு சொன்னான்! எனக்கு அது கூடத் தெரியாதே!

குருவே, எங்களை எல்லாம் உபன்னியாசத்தின் முடிவில் சரணாகதி செய்யுமாறு சொன்னீங்களே?...
நான் சரணாகதி செய்தால், யார் யாரை எல்லாம் கூட்டி, என்னென்ன விசாரணை எல்லாம் நடக்குமோ, தெரியலையே?

அட இராமா! இதுவா சரணாகதி? இதுவா உன் பரங்கருணை? இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?"

(தொடரும்....)

60 comments:

  1. இறைவனையே இருக்கிறானா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிற கலிகாலம்.
    ஆகவே மோட்சம் இருக்கிறதா என்பதற்கும், அங்கே இறைவனுக்கு கோட்டா இன்றி அட்மிசன்
    கிடைக்குமா என்பதற்கும் விவாத மேடை வைத்தால் தப்பில்லை கே.ஆர்.எஸ்!

    ReplyDelete
  2. //"என்ன இது லூசுத்தனமான கேள்வி? இறைவன் தானே எல்லாருக்கும் மோட்சம் அருளுவதாக சொல்லுவாங்க! அவருக்கே மோட்சம் கிடைக்குமா-ன்னு கேட்டா என்ன அர்த்தம்? //

    :)

    மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கடவுள்(கள் மூன்று தொழில் செய்தாகனுமே) ஏற்படுவதற்கு தற்போது இருக்கும் கடவுள்(கள்) வழிவிடமாட்டாங்களா ?

    அடவடியாக இருக்கே.

    ReplyDelete
  3. //நம்ம ஸ்ரீதர் நாராயணன் அண்ணாச்சியோட Dragon Fly Effect-ல மாட்டிக்கிட்டேன்-ல! //

    ஏன்? ஏன் இந்த யுத்த வெறி? எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்கிறேன்.

    பதிவை படிச்சிட்டு அப்பாலீக்கா வர்றேன் :-))

    ReplyDelete
  4. நான் போட்ட பின்னூட்டம் எங்கே ?

    ReplyDelete
  5. //அது அன்றும், இன்றும், என்றும், எம் அன்பன் ஆஞ்சநேயனின் குரல்! சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!//

    அருமை... அருமை... அருமை...

    ReplyDelete
  6. படமாக போட்டு இடத்தை நிரப்பி
    த்தான்
    வீடனன்போல் கொள்வாய் சரண்!

    - ஒண்ணுமில்லை, அதுக்கள்ளே தொடரும் போட்டுட்டதாலே!

    ReplyDelete
  7. நவீன விபீஷண சரணா கதி??

    வார்த்தைச் சித்தரின் விளையாட்டு எப்போதும் போல அழகு.

    ReplyDelete
  8. தலைவரே இப்புடி திடீர்னு தொடரும் போட்டீங்களே, எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது. பெருமாளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளதால் இந்த மாதிரி விஷயங்கள் மீண்டும் மீண்டும் படித்தால் தான் விளங்கும் போல, அதுவும் உங்கள் பதிவுகள் போல் எளிமையாக வேறொன்றும் இல்லை.

    ReplyDelete
  9. //SP.VR. SUBBIAH said...
    இறைவனையே இருக்கிறானா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிற கலிகாலம்.

    //

    சுப்பையை சார்,
    நாத்திகனையும் கடவுள் தானே படைக்கிறார் ?
    உங்களுக்கு ஏன் உவப்பாக இருக்கிறது?

    பின்னனி பாடகி ஜானகி அம்மா பாடிய ஒரு பக்தி பாடலில்,

    "நாத்திகத்தைப் பேச நாக்கு தந்தது யாரடி ...?' ன்னு பாடி இருப்பாங்க.

    ReplyDelete
  10. //ஏன்? ஏன் இந்த யுத்த வெறி? //

    அது கொல வெறி! சரியாச் சொல்லுங்க.

    //எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்கிறேன்.//

    நீங்க பேசித் தீத்துக்கலாமுன்னு சொல்லறீங்க. எனக்குத் தெரிஞ்சு சிலர் பேசியே தீத்துக்கட்டறதில் மன்னருங்க. என்னமோ போங்க.

    ReplyDelete
  11. ரவி அண்ணா, சரணாகதி தத்துவத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம். ஒப்பிலா அப்பன், உப்பிலியப்ப பெருமான், "மாம் ஏகம் சரணம் விரஜ:" என்று அருள்பாலிக்கிறார். எம்பெருமான் ஏழுமலையான் தன் பாதார விந்தத்தை காட்டி பற்றிக் கொள்ள சொல்கிறார். ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் சரணாகதியை மிக உத்தமமாக உபதேசித்துள்ளார்கள்.ஏன்? ஏன்? ஏன்?

    அனைவரும் பெருமாளை சரணாகதி அடையும் வழியையும், அதன் பெருமைகளைப் பற்றியும் அதிகமாக சொல்லக் காரணம் என்ன?.

    பெருமாளை நித்யம் தொழுது, தனக்குரிய தர்மங்களையும், கருமங்களையும் சிறப்பாக செய்தால் மோட்சம் கிட்டாதா? சரணாகதி ஒன்று தான் வழியா?

    ReplyDelete
  12. //பெருமாளை நித்யம் தொழுது, தனக்குரிய தர்மங்களையும், கருமங்களையும் சிறப்பாக செய்தால் மோட்சம் கிட்டாதா? சரணாகதி ஒன்று தான் வழியா?//

    ராகவன்,
    ஒரு சின்ன கேள்வி. பாஞ்சாலி கிருஷ்ணனிடம் சரணடைய அவளுக்கு எவ்வளவு நேரம் தேவைப்பட்டது?

    கஜேந்திரன் சரணாகதி அடைந்த உடனே பெருமாள் எப்படி ஓடி வந்தாருனு படிச்சிருக்கீங்களா?

    இதை சிந்திச்சா பதில் ரொம்ப சுலபமா கிடைக்கும்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  13. தொடரின் மிச்ச பாகங்களையும் படிக்க காத்திருக்கேன்னு மட்டும் சொல்லிக்கறேன். :)

    ReplyDelete
  14. //Raghavan said...
    ரவி அண்ணா, சரணாகதி தத்துவத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்//

    ஏன்னா, அதில் தான் "கதி" இருக்கு! :-)

    //ஏன்? ஏன்? ஏன்?//

    ஷூ! கொஞ்சம் வெயிட் மாடி! ஒவ்வொரு பதிவா விரியும்! இப்படி அவசரப்பட்டா எப்படி? :-)

    //சரணாகதி ஒன்று தான் வழியா?//

    எதுவுமே இது தான் வழி-ன்னு கிடையாது!
    இறைவன் ஒருவனே வழி!
    நானே "வழியும்" ஜீவனுமாய் இருக்கிறேன் என்பது இயேசு பெருமானின் வாக்கியம்! :-)

    சரணாகதி எல்லாரும் சொல்வது போல் அவ்வளவு சுலபமான வழி இல்லை! அதுக்குக் குழந்தை மனசு வேணும்! பெரியவர்களை விடக் குழந்தைகளுக்குச் சரணாகதி மிகவும் எளிது! :-)

    அப்புறம் ஏன் எல்லா பெரியவர்களும் இதை எளிது எளிது-ன்னு சொல்றாங்கன்னா...
    மத்ததுக்கு எல்லாம் அறிவு, ஞானம், உழைப்பு, சாதனம்...எல்லாம் தேவை!

    சரணாகதிக்கு மனசு மட்டும் போதும்!
    நம்ம மனசு தான் நம்ம கிட்ட இருக்கே! நம்ம சொல்ற பேச்சைக் கேட்குமே! அதான் சரணாகதி ரொம்ப ஈசி :-)))

    ReplyDelete
  15. //மதுரையம்பதி said...
    தொடரின் மிச்ச பாகங்களையும் படிக்க காத்திருக்கேன்னு மட்டும் சொல்லிக்கறேன். :)//

    அடியேன் சந்திரமெளலீஸ்வர தாசன்! :-)
    "அந்தப்" பதிவின் எஃபெக்ட்டு தாண்ணே இது! அதான் இங்கே-க்கு அங்கேயே சொல்லி வைத்தேனே! :-))

    ReplyDelete
  16. // SP.VR. SUBBIAH said...//

    வாங்க வாத்தியார் ஐயா! நலமா?

    //இறைவனையே இருக்கிறானா இல்லையா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிற கலிகாலம்//

    கலி இல்லாத காலத்திலும் நாத்திகர்கள் இருந்தாங்களே! ஆனா அவிங்க எல்லாம் நல்ல நாத்திகர்கள் :-)

    //ஆகவே மோட்சம் இருக்கிறதா என்பதற்கும், அங்கே இறைவனுக்கு கோட்டா இன்றி அட்மிசன்
    கிடைக்குமா என்பதற்கும்//

    ஹா ஹா ஹா!

    //விவாத மேடை வைத்தால் தப்பில்லை கே.ஆர்.எஸ்!//

    இந்தத் தொடர் அப்படிப் போகாது ஐயா! இதில் சரணாகதி பற்றியும், மனசு இருந்தா மார்க்கம் உண்டு பற்றியும்,

    சாதி மத பேதமின்றி, தத்துவ பேதமின்றி, அனைவருக்கும் மோட்சம் உண்டு - வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே - என்று தான் விரியும்! பயப்படாதீங்க! :-)

    ReplyDelete
  17. //கோவி.கண்ணன் said...
    மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கடவுள்(கள் மூன்று தொழில் செய்தாகனுமே) ஏற்படுவதற்கு தற்போது இருக்கும் கடவுள்(கள்) வழிவிடமாட்டாங்களா ?
    அடவடியாக இருக்கே.//

    ஹிஹி!
    வாங்க கோவி கடவுளே வாங்க!
    உலகின் புதிய கடவுள் நீங்களா? செல்வனா?

    உங்களுக்கு வழி விடத் தான் இப்படி ஒரு திட்டமா? நடத்துங்க ராசா நடத்துங்க! :-)

    சரி, முத்தொழில்-ல நீங்க என்னா தொழில் கோவி அண்ணா?

    ReplyDelete
  18. //Sridhar Narayanan said...
    ஏன்? ஏன் இந்த யுத்த வெறி?//

    ஹிஹி!
    எம்புட்டு நாள் தான் Butterfly effect? அதான் for a change, dragon fly effect! :-)

    //எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்கிறேன்//

    அதெல்லாம் தீக்க முடியாது! நாங்க உங்க பரம விசிறிகள்!

    கமலின் ஆஸ்தான குரு நீங்க தான்!
    கமலின் சிந்தனைக் குளம் (Think Tank) நீங்க தான்! :-)

    //பதிவை படிச்சிட்டு அப்பாலீக்கா வர்றேன் :-))//

    இது என்ன தியரி அண்ணாச்சி? :-)
    இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா என்று குழப்பறேன்-ல! அதான் chaos theory! அதான் நீங்க ஞாபகம் வந்தீங்க!

    ReplyDelete
  19. //கோவி.கண்ணன் said...
    நான் போட்ட பின்னூட்டம் எங்கே ?
    //

    யார் பதிவுக்குப் போட்ட பின்னூட்டம் அண்ணா? :-)

    ReplyDelete
  20. //வெட்டிப்பயல் said...
    //அது அன்றும், இன்றும், என்றும், எம் அன்பன் ஆஞ்சநேயனின் குரல்! சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!//

    அருமை... அருமை... அருமை...//

    பாலாஜி...பாலாஜி...பாலாஜி!
    :-)

    ReplyDelete
  21. //மண்ணாசை பிடித்துப் போய் மானம் இல்லாமல் உதவி கேட்டு வந்திருப்பான்!" என்பதைச் சுக்ரீவன் சொன்னது தான்!
    //

    வேறும் மண்ணாசை மட்டுமல்ல அண்ணே, சுக்ரீவனும் மனைவியை பிரிந்த துயரில் இருந்தான், அந்த பீலீங்க்ஸை ராமானால் தான் உணர முடியும்னு உதவி கேட்டு வந்தான். :))

    "மானம் கெட்டு" என்ற வரிகள் எல்லாம் கம்பரோ வால்மீகியோ பாடிய வரிகளில் இருக்கா?
    ஐ மீன் தரவு..? தரவு..? :))

    இல்லாட்டி இதுவும் தற்குறிப்பேற்ற அணியில் எழுதப்பட்டதா? :p

    அடுத்த பார்ட்டுக்கு வெய்டிங்க். :)

    ReplyDelete
  22. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    படமாக போட்டு இடத்தை நிரப்பி
    த்தான்
    வீடனன்போல் கொள்வாய் சரண்!//

    வெண்பா வாத்தி, ப்ளீஸ் கம் ஹியர்! :-)

    //- ஒண்ணுமில்லை, அதுக்கள்ளே தொடரும் போட்டுட்டதாலே!//

    என்ன ஜீவா, பதிவில் ஏதாச்சும் தப்பாக சொல்லிட்டேனா?
    தொடரும் போட்டது, சிந்தனைக்குத் தான்! ஐந்து பதிவுகளில் முடித்து விடலாம்! அத்வைதம், துவைதம் என்றும் கொஞ்சம் தொட்டுச் செல்லலாம்! சங்கரர் கட்டாத தத்துவக் கரையா?

    ReplyDelete
  23. //பெருமாளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளதால் இந்த மாதிரி விஷயங்கள் மீண்டும் மீண்டும் படித்தால் தான் விளங்கும் போல,//

    ஹிஹி, ஒரு நிமிசம் ஜி.ரா தான் இந்த கேள்வி கேட்டு இருக்காரோ?னு ஆடி போயிட்டேன். :p

    ReplyDelete
  24. //வல்லிசிம்ஹன் said...
    நவீன விபீஷண சரணா கதி??//

    எஸ்ஸூ!
    நம் போன்ற நவீன விபீஷணர்களின் சரணாகதி தான் வல்லியம்மா!

    //வார்த்தைச் சித்தரின் விளையாட்டு எப்போதும் போல அழகு//

    :-))

    ReplyDelete
  25. //Raghavan said...
    தலைவரே இப்புடி திடீர்னு தொடரும் போட்டீங்களே, எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது//

    எல்லாம் அவனே புரியுமாறு புரிவான்!
    தொடரும் எல்லாம் ஒரு சுவாரசியம் இல்லையா? அப்பப்போ long trip-இல் பிரேக் எடுத்தாத் தான், ஜாலியா இருக்கும்!

    //பெருமாளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளதால் இந்த மாதிரி விஷயங்கள் மீண்டும் மீண்டும் படித்தால் தான் விளங்கும் போல//

    ரொம்ப படிக்க வேண்டாம்!
    படிப்பைக் காட்டிலும் பிடிப்பு தான் வேணும் ராகவன்! ஸோ, டோன்ட் வொர்ரி பா:-)

    //அதுவும் உங்கள் பதிவுகள் போல் எளிமையாக வேறொன்றும் இல்லை//

    :-)
    அடியேன் எளியேன்! என்னிடம் கருவூலம் எல்லாம் பெருசாக இல்லை! அடியேன் சிற்றஞ் சிறிய ஞானத்தன்! :-)

    எளிமையே சுமையின்மை! சுமையின்மையே இனிமை! :-)

    ReplyDelete
  26. //சரணாகதிக்கு மனசு மட்டும் போதும்!
    நம்ம மனசு தான் நம்ம கிட்ட இருக்கே! நம்ம சொல்ற பேச்சைக் கேட்குமே! அதான் சரணாகதி ரொம்ப ஈசி :-)))//

    ஆஹா! உங்க மனசு நீங்க சொல்றபடி கேட்குதா...இது ஒண்ணே போதுமே நீங்க ஒரு ஆழ்வார்/நாயன்மார்ன்னு சொல்ல... :))

    என்னோட 'அந்த' பதிவுல சூரி சார் வந்து மனசு நம்ம சொன்னபடி கேட்கறது பத்தி கொஞ்சம் சொல்லியிருக்காரு. நேரம் கிடைக்கும் போது பாருங்க கே.ஆர்.எஸ்.

    ReplyDelete
  27. வீடணன் அடைக்கலத்திற்கு வரும் போது கும்பகருணன் உறங்கிக் கொண்டல்லவா இருந்தான்? அவன் வழியனுப்பியதாகக் கூறுகிறீர்களே?!

    கடைசிப் பகுதியில் அடியார் அரற்றத் தொடங்கியவுடன் சுவை கூடத் தொடங்கிவிட்டது. அதுவரை முன்னுரையாக அமைந்தது என்று நினைக்கிறேன். :)

    ReplyDelete
  28. //அட இராமா! இதுவா சரணாகதி? இதுவா உன் பரங்கருணை? இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?"
    (தொடரும்....)//

    அதானே! அட கண்ணா! எப்போ தொடரும்?

    //படிப்பைக் காட்டிலும் பிடிப்பு தான் வேணும் ராகவன்! //

    இது சூப்பரு :)

    ஸ்ரீராமஜயம்! ஸ்ரீராமஜயம்! ஸ்ரீராமஜயம்!

    ReplyDelete
  29. ambi said...
    //பெருமாளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளதால் இந்த மாதிரி விஷயங்கள் மீண்டும் மீண்டும் படித்தால் தான் விளங்கும் போல,//

    ஹிஹி, ஒரு நிமிசம் ஜி.ரா தான் இந்த கேள்வி கேட்டு இருக்காரோ?னு ஆடி போயிட்டேன். :p//

    ஹா ஹா ஹா!
    ஆடிப் போனீங்களா? ஜிராவிடம் ஓடிப் போனீங்களா அம்பி? :-)
    avar ragavan, ivar raghavan!
    sariyaa paarunga!

    ReplyDelete
  30. @கோவி அண்ணா
    //சுப்பையை சார்,
    நாத்திகனையும் கடவுள் தானே படைக்கிறார் ?
    உங்களுக்கு ஏன் உவப்பாக இருக்கிறது?//

    நாத்திகர்களைக் கடவுள் படைப்பதில்லை அண்ணா!
    நாத்திகர்களை ஆத்திகர்கள் உருவாக்குகிறார்கள்!
    ஆத்திகர்களை நாத்திகர்கள் உருவாக்குகிறார்கள்!
    :-)))

    ReplyDelete
  31. //இலவசக்கொத்தனார் said...
    //ஏன்? ஏன் இந்த யுத்த வெறி? //
    அது கொல வெறி! சரியாச் சொல்லுங்க.//

    அட இதுக்கெல்லாம் கூட கரெக்சனா? ஸ்ரீதர் யுத்த காண்டத்துக்கு ரைமிங்கா யுத்த வெறி-ன்னு சொன்னாரு! இது கூட உங்களுக்குப் புரியலையா கொத்ஸ்? Dragonfly Effect Class எடுக்கச் சொல்லணும் உங்களுக்கு:-)

    //நீங்க பேசித் தீத்துக்கலாமுன்னு சொல்லறீங்க. எனக்குத் தெரிஞ்சு சிலர் பேசியே தீத்துக்கட்டறதில் மன்னருங்க. என்னமோ போங்க//

    ஆகா!
    யாருங்க அந்த மன்னரு? உங்களுக்குத் தெரிஞ்சவரு-ன்னு வேற சொல்றீங்க! ஒரு இன்ட்ரோ கொடுங்க! :-)

    ReplyDelete
  32. //வெட்டிப்பயல் said...
    ராகவன்,
    ஒரு சின்ன கேள்வி. பாஞ்சாலி கிருஷ்ணனிடம் சரணடைய அவளுக்கு எவ்வளவு நேரம் தேவைப்பட்டது?

    கஜேந்திரன் சரணாகதி அடைந்த உடனே பெருமாள் எப்படி ஓடி வந்தாருனு படிச்சிருக்கீங்களா?

    இதை சிந்திச்சா பதில் ரொம்ப சுலபமா கிடைக்கும்னு நினைக்கிறேன்//

    சூப்பரு...
    ஆல் கேள்வீஸ் ஆஸ்க்ட் இன் மாதவிப்பந்தல் ரீ டைரக்டட் டு வெட்டிப்பந்தல் :-)

    பாலாஜி சொல்லும் கோணத்தில் யாராச்சும் யோசித்தீர்களா?
    குமரன், ராகவன் (ஜிரா) - வந்து மேல் விளக்கம் ப்ளீஸ்!

    ReplyDelete
  33. //அம்பி said...
    வேறும் மண்ணாசை மட்டுமல்ல அண்ணே, சுக்ரீவனும் மனைவியை பிரிந்த துயரில் இருந்தான், அந்த பீலீங்க்ஸை ராமானால் தான் உணர முடியும்னு உதவி கேட்டு வந்தான். :))//

    உண்மை! மறுக்கவில்லை அம்பி!
    சுக்ரீவனை மட்டம் தட்டவில்லை! ஆனால் காரணம் அதே தான் என்றாலும் நிலைப்பாடுகள் எப்படியெல்லாம் மாறுகின்றன என்பதைத் தான் சொல்ல வந்தேன்!

    சுக்ரீவ வரிகளைக் கேட்டு இராமனே சிரிப்பான்!
    வானராதிபதே வாக்யம் ச்ருத்வா
    சர்வானு தீட்சயது
    ச்த் உத்ஸ்மாயமனஸ்து...என்று வரும்!

    வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்
    தஞ்சு என நம் வயின் சார்ந்து உளான் அலன்;
    நஞ்சினிற் கொடியனை நயந்து கோடியோ?
    அஞ்சன வண்ண! என்று அறியக் கூறினான்

    வீடணன் விஷத்தை விடக் கொடியவன் என்று தான்
    சுக்ரீவன் முதலில் கடுஞ்சொல்லாய் சொல்லுவான்! அதனால் தான் கொடியவனா? இல்லை கொடி-அடியவனா? என்றும் எழுதினேன்!

    ஸோ நோ தற்குறிப்பேற்றம்ஸ்! :-)

    //அடுத்த பார்ட்டுக்கு வெய்டிங்க். :)//

    வெயிட்டீஸ்!

    ReplyDelete
  34. BTW,
    சுக்ரீவனுக்கு உண்மையை உணர்த்தி, அண்ணல் அவனையே போய் வீடணனை அருகே அழைத்து வரச் சொல்லுவார் பின்பு!

    ஆதலான், "அபயம்" என்ற
    போதத்தே அபய தானம்
    ஈதலே கடப்பாடு என்பது;
    இயம்பினீர் என்பால் வைத்த
    காதலான்; இனி வேறு எண்ணக்
    கடவது என்?கதிரோன் மைந்த!
    கோது இலாதவனை நீயே
    என்வயின் கொணர்தி என்றான

    ReplyDelete
  35. //மதுரையம்பதி said...
    ஆஹா! உங்க மனசு நீங்க சொல்றபடி கேட்குதா...இது ஒண்ணே போதுமே நீங்க ஒரு ஆழ்வார்/நாயன்மார்ன்னு சொல்ல... :))//

    அலோ...
    நான் நம்ம மனசு-ன்னு சொன்னேன்!
    என் மனசு எங்க இருக்கு-ன்னு எனக்கே தெரியலையே அண்ணா! நான் எங்க போயி தேறப் போறேன்? நீங்க வேற! :-)

    //என்னோட 'அந்த' பதிவுல சூரி சார் வந்து மனசு நம்ம சொன்னபடி கேட்கறது பத்தி கொஞ்சம் சொல்லியிருக்காரு. நேரம் கிடைக்கும் போது பாருங்க கே.ஆர்.எஸ்//

    ச்ரவணம், கீர்த்தனம், விஷ்ணோர் ஸ்மரணம், பாத சேவனம்
    அர்ச்சனம், வந்தனம, தாஸ்யம், சைக்யம், ஆத்ம நிவேதனம்!

    படிச்சாச்சே! சூரி சார் மிக அருமையா ஒவ்வொரு நிலையும் விளக்கி இருக்காரு!

    ReplyDelete
  36. //நான் சரணாகதி செய்தால், யார் யாரை எல்லாம் கூட்டி, என்னென்ன விசாரணை எல்லாம் நடக்குமோ, தெரியலையே?
    அட இராமா! இதுவா சரணாகதி? இதுவா உன் பரங்கருணை? இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?"//

    ரொம்ப அருமையா முடிச்சிருக்கீங்க...

    நேத்து நான் படிக்கும் போது இது இல்லையே :-(

    ReplyDelete
  37. பதிவையும் படிச்சாச்சு, படிச்சாச்சு. பின்னூட்டமும் படிச்சாச்சு, படிச்சாச்சு. எப்பவும் போல சூப்பர்தான்.

    இ.கொ.

    கொலை எல்லாம் ஒருவாட்டி செய்யறது. யுத்தம் தான் திருப்பி திருப்பி ஆள் அட்ரஸே இல்லாத போற மாதிரி செய்வாங்க. :-))

    ReplyDelete
  38. //குமரன் (Kumaran) said...
    வீடணன் அடைக்கலத்திற்கு வரும் போது கும்பகருணன் உறங்கிக் கொண்டல்லவா இருந்தான்? அவன் வழியனுப்பியதாகக் கூறுகிறீர்களே?!//

    உம்ம்ம்...மன்னிக்கவும்! இதோ போய் கம்பனில் சரி பார்க்கிறேன்!

    வீடணன் தன் பேச்சின் போது இரணியன்-பிரகலாதன் கதையை இராவணனுக்கு எடுத்துச் சொல்லுவான்! வால்மீகியில் இது கிடையாது!
    வீடணனுக்கும் கும்பகருணனுக்கும் ஆழ்ந்த பாசம்! கும்பகருணனும் இதற்கு ஒப்பான் என்று பல முறை சொல்லுவான்! மானசீக பந்தம் இருவருக்குள்ளும்!

    சரி....கும்பகருணனும் வீடணனும் பேசிக் கொள்ளும் உரையாடல் எப்போது வரும்?
    தார்க்கோல மேனி மைந்த
    என் துயர் தவிர்த்தி ஆயின்
    "கார்க் கோல மேனியானைக்
    கூடுதி கடிதின்" என்றான்!

    //கடைசிப் பகுதியில் அடியார் அரற்றத் தொடங்கியவுடன் சுவை கூடத் தொடங்கிவிட்டது. அதுவரை முன்னுரையாக அமைந்தது என்று நினைக்கிறேன். :)//

    ஆமாம் குமரன்!
    வீடணன் கதையல்ல நாம் பார்க்கப் போவது! அது முன்னுரை தான்! காட்சி அமைப்பு அனைவருக்கும் புரியுமாறு இருந்ததா?

    ReplyDelete
  39. கவிநயா said...
    //அட இராமா! இதுவா சரணாகதி? இதுவா உன் பரங்கருணை? இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?"
    (தொடரும்....)//

    அதானே! அட கண்ணா! எப்போ தொடரும்?/

    இன்னிக்கி இரவு?
    பட் அம்பி இஸ் ஆஸ்கிங் ஃபார் தரவு?
    இரவா? தரவா??
    எது வேணும், நீங்களே சொல்லுங்கக்கா! :-)

    ReplyDelete
  40. //வெட்டிப்பயல் said...
    //நேத்து நான் படிக்கும் போது இது இல்லையே :-(//


    //இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்//

    இதை மட்டும் அப்புறம் சேர்த்தேன் பாலாஜி; ஆபீஸ்-ல இருந்து பத்து மணிக்குத் தான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்! மொதல்ல சில சில சொற்கள் கோர்வையா வரலை! அதை எல்லாம் வீட்டுக்கு வந்த பின்னாடி சேர்த்தேன்!
    மத்தபடி பதிவின் சாரம் அதே தான்!

    ReplyDelete
  41. எனக்கு தரவெல்லாம் வேணாம் கண்ணா :) தொடருங்க, இரவு :)

    ReplyDelete
  42. //ஸ்ரீதர் நாராயணன் said...
    இ.கொ.
    கொலை எல்லாம் ஒருவாட்டி செய்யறது. யுத்தம் தான் திருப்பி திருப்பி ஆள் அட்ரஸே இல்லாத போற மாதிரி செய்வாங்க. :-))//

    இது அட்ரஸ் இல்லாமப் போகச் செய்யற யுத்தம் இல்ல!
    உங்களுக்கு ஒரு தனி blogspot address உருவாக்கச் செய்யற யுத்தம்! :-)

    Koths,
    dragonfly.blogspot.com nalla irukka namma sridhar-kku? :-)

    ReplyDelete
  43. //ஹிஹி, ஒரு நிமிசம் ஜி.ரா தான் இந்த கேள்வி கேட்டு இருக்காரோ?னு ஆடி போயிட்டேன். //

    அப்பனே முருகா! ஞானபண்டிதா என்னைய மட்டும் காப்பாத்து !!

    ReplyDelete
  44. ஆக ராமனையே வம்புக்கு இழுக்கிறிர்கள் யாருக்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் உங்களுக்கு இல்லை இடம் மோட்சத்தில்.அடுத்த தொடரில் புண்ணியம் தேட முயலுங்கள்

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  45. //இதில் நகைச்சுவை என்னவென்றால் "மண்ணாசை பிடித்துப் போய் மானம் இல்லாமல் உதவி கேட்டு வந்திருப்பான்!" என்பதைச் சுக்ரீவன் சொன்னது தான்!
    சில மனிதர்களுக்கு ஒரு வேடிக்கையான குணம்: தனக்கொரு நியாயம்; பிறர்க்கொரு நியாயம்! தன் கருத்துக்கு ஒரு நியாயம்! மற்றவரின் அதே கருத்துக்கு வேறொரு நியாயம்! ஐயன் வள்ளுவனே சிரிக்கிறான்!//

    தன்னை போல தானே மற்றவனை பார்க்கிறான் சுக்ரீவன்!

    என்ன கே.ஆர்.கதைய மாத்துரீங்க?

    இதை சரியா சொல்லுங்க!

    ReplyDelete
  46. ///கவிநயா said...
    எனக்கு தரவெல்லாம் வேணாம் கண்ணா :) தொடருங்க, இரவு :)//

    சூப்பர்-கா! தங்கள் ஆணை! என் பதிவு!

    எலே அம்பி! அக்காவே சொல்லியாச்சு! :-)

    ReplyDelete
  47. Raghavan said...
    //ஹிஹி, ஒரு நிமிசம் ஜி.ரா தான் இந்த கேள்வி கேட்டு இருக்காரோ?னு ஆடி போயிட்டேன். //

    அப்பனே முருகா! ஞானபண்டிதா என்னைய மட்டும் காப்பாத்து !!
    //

    ஹா ஹா ஹா :-)

    ReplyDelete
  48. //விஜய் said...
    ஆக ராமனையே வம்புக்கு இழுக்கிறிர்கள் யாருக்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் உங்களுக்கு இல்லை இடம் மோட்சத்தில்//

    ஒப்பிலா இராம பக்தரான தாங்கள் சொன்னால் சரியாத் தான் இருக்கும் விஜய்! :-)

    அடியேனுக்கும் விருப்பமில்லை மோட்சத்தில்! :-)

    //அடுத்த தொடரில் புண்ணியம் தேட முயலுங்கள்//

    நீங்க பதிவுக்கு வந்து ஆசியுரைப்பதே அடியேன் புண்ணியம் தான்! :)

    ReplyDelete
  49. //சிவமுருகன் said...
    தன்னை போல தானே மற்றவனை பார்க்கிறான் சுக்ரீவன்!
    என்ன கே.ஆர்.கதைய மாத்துரீங்க?//

    என்ன சிவா சொல்றீங்க?
    சுக்ரீவன் தன்னைப் போலத் தான் மற்றவனையும் பார்க்கிறான்! அது வரை சரி தான்!

    ஆனால் தான் செய்ததில் நியாயம் பார்க்கும் சுக்ரீ-க்கு, அடுத்தவன் அதே செய்ததில் நியாயம் பார்க்க முடியவில்லை! :-))

    ReplyDelete
  50. //Koths,
    dragonfly.blogspot.com nalla irukka namma sridhar-kku? :-)//

    உங்களுக்கு விஷயமே தெரியாதா? இப்போ அவருக்கு கிடைச்சு இருக்கும் பட்டத்திற்கேற்ப அவருக்கு kamalsguru.blogspot.com என்ற பதிவுதான் சரி வரும்! :)

    அப்படியே 50க்கு வாழ்த்தும் சொல்லிக்கிறேன். :)

    ReplyDelete
  51. //அடுத்த தொடரில் புண்ணியம் தேட முயலுங்கள்//

    நீங்க பதிவுக்கு வந்து ஆசியுரைப்பதே அடியேன் புண்ணியம் தான்! :)

    சார் தப்ப எடுதிட்டீங்க போலிருக்கு.
    பொருத்தருள்க.

    பணிவன்புடன்
    விஜய்

    ReplyDelete
  52. //விஜய் said...
    சார் தப்ப எடுதிட்டீங்க போலிருக்கு.
    பொருத்தருள்க//

    ஆகா!
    சாரும் இல்ல! மோரும் இல்ல! கேஆரெஸ்-ன்னே கூப்புடுங்க!

    தப்பா-ல்லாம் எடுத்துக்கலை விஜய்!

    உங்களைச் சாக்காக வைத்து, அடியேன் எழுத்துக்களின் மேல் கோபமாக உள்ள சில வலைப் பெரியவர்களுக்கும் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்!

    சிலருக்கு அதீத இராம பக்தி! விளையாட கூடக் கூடாது இராமனிடம்! ஆனால்...மனதில் பளார் என்று அறையறாப் போலச் சொல்லணும்-னா, சில சமயம் இராமனை வம்புக்கு இழுத்துத் தான் ஆகணும்!

    நல்லது நடக்கணும்-னா சில நேரங்களில் இப்படி நிந்தனை போலவும் செய்ய நேரிடும்! ஆனா அந்த நிந்தனைக்குண்டான பொறுப்பையும் பகவத் பிரசாதமாகவே ஏத்துக்கிடணும்! :-)


    என்ன செய்வது...?
    ஆண்டவன் சேவையைக் காட்டிலும்
    அடியார் சேவை அலாதியானது அல்லவா? :-)

    //பணிவன்புடன்
    விஜய்//

    ஹிஹி!
    பணிவு வேண்டாம்! அன்பே போதும்! :)

    ReplyDelete
  53. //இலவசக்கொத்தனார் said...
    உங்களுக்கு விஷயமே தெரியாதா? இப்போ அவருக்கு கிடைச்சு இருக்கும் பட்டத்திற்கேற்ப அவருக்கு kamalsguru.blogspot.com என்ற பதிவுதான் சரி வரும்! :)//

    ஜூப்பரு!
    ராஜ்கமலின் ராஜகுரு = ஸ்ரீதர்

    //அப்படியே 50க்கு வாழ்த்தும் சொல்லிக்கிறேன். :)//

    50-இலும் ஆசை வரும்!
    50-இலும் கொத்தனார் வரும்!

    ReplyDelete
  54. சுக்ரீவனும், மற்ற வானரர்களும் மனம் சமாதானம் அடையவில்லை. சுக்ரீவன் சொல்கின்றான்:” தன் சொந்த சகோதரனையே ஆபத்தில் விட்டுவிட்டு ஓடி வந்து விட்ட இவன் வேறு யாரைத் தான் காட்டிக் கொடுக்க மாட்டான்?” என்று சொல்லவே, ராமர் சிரித்துக் கொண்டே சொல்கின்றார்:” விபீஷணன் உலக இயல்புப் படியே இங்கே வந்துள்ளான். ஒரு அரசனுக்கு ஆபத்து நேரிடும் போது அவன் உறவினர்கள் எவ்வாறேனும், அவனைத் தாக்கி நாட்டைக் கைப்பற்றவே முயல்கின்றனர். இவன் அம்மாதிரியே இங்கே வந்திருக்கின்றான். இவனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை வந்துள்ளது. அரக்கர்களிடையே அச்சம் தோன்றிவிட்டதை இவன் வரவு நமக்கு உணர்த்துகின்றது. இவன் இங்கே வந்திருப்பதால் அரக்கர்களிடையே பெரும் பிளவும் உண்டாகலாம். சுக்ரீவா, எல்லா சகோதரர்களும் பரதனைப் போன்றவர்கள் அல்ல. எல்லா மகன்களும் ராமனைப் போன்றவர்கள் அல்ல. எல்லா நண்பர்களும் சுக்ரீவனைப் போன்றவர்கள் அல்ல. “ என்று
    http://sivamgss.blogspot.com/2008/05/52.html

    ReplyDelete
  55. //விஜய் said...

    ஆக ராமனையே வம்புக்கு இழுக்கிறிர்கள் யாருக்கு கொடுத்தாலும் கொடுப்பார்கள் உங்களுக்கு இல்லை இடம் மோட்சத்தில்.அடுத்த தொடரில் புண்ணியம் தேட முயலுங்கள்

    தி.விஜய்
    http://pugaippezhai.blogspot.com
    //

    ஆமாம்.. மோட்சத்துக்கு கேட் கீப்பர் சொல்லிட்டாரு... பாத்து ஜாக்கரதையா நடந்துக்கோங்க ;)

    ReplyDelete
  56. @வெட்டி
    விஜய் சும்மா வெளையாட்டுக்குத் தான் சொன்னாரு! அதான் மீண்டும் வந்து விளக்கம் சொல்லிட்டாரே!
    கேலி செய்யாதீங்க! அவரும் இராமனின் அன்பர் தான்!

    யப்பா, ஒத்தை வரியில ஒன்பது சிக்சர் அடிக்கறீங்க! :-)

    ReplyDelete
  57. //கீதா சாம்பசிவம் said...//

    வரவேணும் கீதாம்மா! வரவேணும் ஜெர்ரியம்மா!
    இராமாயணத் தொடர் பதிவர், அடியேன் இராமாயணப் பதிவுக்கு வருவது சாலவும் பொருத்தம்! :-)

    //ராமர் சிரித்துக் கொண்டே சொல்கின்றார்://

    சரியே!

    //இவனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை வந்துள்ளது//

    தவறு!
    மறுக்கிறேன்!

    வால்மீகி, கம்பன் இருவருமே வீடணனை ராஜ்ஜியம் கேட்கும் ஆசைக்காரனாகக் காட்டவில்லை! வீடணன் கேட்காமலேயே, திடீரென்று சமுத்திர நீர் கொண்டு, போருக்கு முன்பே பட்டாபிஷேகம் செய்வது இராமன் தான்!

    வீடணன், அதற்கு முன்பே அரசன் தான்!

    //சுக்ரீவா, எல்லா சகோதரர்களும் பரதனைப் போன்றவர்கள் அல்ல. எல்லா மகன்களும் ராமனைப் போன்றவர்கள் அல்ல. எல்லா நண்பர்களும் சுக்ரீவனைப் போன்றவர்கள் அல்ல.//

    இது சரியே!
    சுக்ரீவன் உதவும் குணம் கொண்ட நல்ல நண்பன் தான்! ஆனால் போகத்தில் சில சமயம் மறப்பான்! அவனை மென்மையாக இடித்துக் காட்டித் தான் இராமன் சிரிக்கிறான்! பின்னர் அவனையே போய் வீடணனை அழைத்து வரச் சொல்கிறான்!

    ReplyDelete
  58. //வால்மீகி, கம்பன் இருவருமே வீடணனை ராஜ்ஜியம் கேட்கும் ஆசைக்காரனாகக் காட்டவில்லை! //

    விபீஷணனுக்கு ராஜ்ய ஆசை வந்துவிட்டது என்று ராமர் சுக்ரீவனிடம் கூறுவதாய் வால்மீகி சொல்லி இருக்கின்றார். ஆதாரம் கிடைச்சதும்கொண்டு வரேன்.

    ReplyDelete
  59. சொல்லத் தான் நினைக்கிறேன்! பின்னூட்டம் போடத் தான் துடிக்கிறேன்! வலைப்பூவிருந்தும் சொல்வதற்கு வார்த்தையுடன் தவிக்கிறேன் solukeran
    imsaiarsankal
    thanks
    muthukumar

    ReplyDelete
  60. தலைப்பே கிறுகிறுக்க வைக்கிறதேன்னு படிச்சா அடேயப்பா ரொம்ப ஆழ்ந்துதான் எழுதி இருக்கீங்கப்பா...ஆனாஎனக்கும் ராகவன் மாதிரி கேக்கத்தோணும் அடிக்கடி சரிவர நம்கடமைகளை செய்யும்போது சரணாகதி எதுக்குன்னு?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP