Thursday, April 02, 2009

படகோட்டியா? தம்பியா?? - இராமன் மனம் யாருக்கு?

நாம் எல்லாம் விமானத்தில் சொந்த ஊர் போய் இறங்கியவுடன் என்ன செய்வோம்?
விமான நிலையத்திலிருந்து நேரே வீட்டுக்கு தானே ஓட்டம்? பின்பு அவரவர் வசதிற்கு ஏற்ப, குளித்து விட்டோ குளிக்காமலோ, இட்லி-வடை-தோசை-சாம்பார், காரச்சட்னி, புதினாச் சட்னி,தேங்காய்ச் சட்னி,வெங்காய்ச் சட்னி என்று விதம் விதமா வெட்டி விட்டு தானே மறு வேலை? அப்புறம் தானே நண்பர்களைப் பார்க்கப் போவதோ, இல்லை பதிவர் சந்திப்போ, மற்றது எல்லாம்?

ஆனால் ராமன் என்ன செய்தான்?
அவனும் புஷ்பக விமானத்தில் வந்து இறங்குகிறான். பதினாலு ஆண்டுகள் கழித்துச் சொந்த ஊருக்கு வருகிறான். நேரே எங்கு போகிறான்?


இராமாயணம் போல் புகழ் அடைந்த காவியமும் இல்லை! இராமாயணம் போல் சர்ச்சைக்குள்ளான காவியமும் இல்லை! - அப்படி ஒரு ராசி, குணசீலனான இராமனுக்கு!
எந்த இந்திய மொழியாகிலும் சரி, அதில் மகாபாரதம் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் இராமாயணம் இருக்கும்! - ஏன்?

காவியமாக இல்லையா? சரி, இலக்கியத்திலோ இசையிலோ இருக்கும். அதுவும் இல்லையா? சரி, கிராமத்து எசப்பாட்டாக இருக்கும்.
இப்படி எல்லார் மனத்துக்கும் இனியவன் தான் நம் இராமன்!
இன்று அவன் பிறந்த நாள்; இராம நவமி! (Apr 03, 2009)! So, Happy Birthday - ராமா!
அட, அவனுக்கு மட்டும் தான் பிறந்த நாளா? நாளைக்கு, அதுக்கு மறு நாள்-ன்னு அடுத்தடுத்து.....Happy Birthday - பரதா, இலக்குவா, சத்ருக்கனா! :)

எனக்கு என்னவோ, இராமனைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும், இன்று அவன் அன்பர்களைப் பற்றிப் பேசவே மனம் விழைகிறது.
அனுமனைப் பற்றி பேசலாம் தான்; ஆனால், அனுமனுக்கோ இராமனைப் பற்றிப் பேசுவது தான் பிடிக்கும்! இராமனுக்கோ அனுமனைப் பற்றிப் பேசினால் தான் மனம் களிக்கும்! ஹூம் என்ன செய்யலாம்?


இராம காதையில், இராமனுக்குக் கூடப் "பெருமாள்" என்ற பட்டம் வெளிப்படையாகக் கிடையாது! இராமப் பெருமாள் என்று யாராச்சும் சொல்கிறார்களா? ஆனால், எண்ணி இரண்டே இரண்டு பேருக்குத் தான் பெருமாள் என்ற சிறப்பு.
* இளைய பெருமாள் - இலக்குவன்
* குகப் பெருமாள் - குகன்


குலசேகரர், பெரியாழ்வார், திருமங்கை முதலான ஆழ்வார்களும், இராமானுசர், தேசிகன் முதலான ஆச்சாரியர்களும் குகனைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
என்று இராமனின் அடையாளங்களுள் ஒன்றாக, குகனையே குறிக்கிறார் பெரியாழ்வார்.

0171

குகனைப் பற்றி நம் எல்லாருக்குமே தெரியும்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் கதையில் ஒரே ஒரு அத்தியாயம் வருகிறானா இந்தக் குகன்? அவனுக்குப் போய் இவ்வளவு சிறப்பு ஏன்?

முருகப் பெருமானுக்கும் குகன் என்ற பெயருண்டு.
பெரிய மலைகள் இருந்தும் அங்கு வாழாது, ஆன்மா என்னும் குகையில் வாழ்பவன் தான் குகன்! நிடத நாட்டுக் காட்டுத் தலைவன்; கங்கைக் கரைப் படகோட்டி. இராமனைப் பார்க்காமலேயே பேரன்பு கொண்டு இருந்தவன்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.
என்பது வள்ளுவ மறை அல்லவா?

இலங்கையில் வெற்றி பெற்ற பின், எல்லாரும் ஊர் திரும்புகிறார்கள் புஷ்பக விமானத்தில்! பெரும் களைப்பு; வழியில் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தில் சற்றே ஓய்வு! ஆனால் ஓய்வெடுக்க எல்லாம் நேரமே இல்லை. உடனே விரைந்தாக வேண்டும். பதினாலு ஆண்டு காலம் முடிய, இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளன.

அயோத்திக்கு வெளியே, நந்திக் கிராமத்தில் பரதன் காத்துக் கொண்டு இருக்கிறான். சமயத்துக்குள் வரவில்லை என்றால் தீக்குளித்து விடுவான்!
அப்புறம் என்ன வாழ்ந்து என்ன பயன்? விமானத்தில் சென்றாலும் நேரம் ஆகிறதே; அதை விட விரைந்து சென்று, செய்தி சொல்ல வல்லவர் யார்? நம்ம சொல்லின் செல்வர் தானே!


"ஆஞ்சநேயா, எனக்குத் தயை கூர்ந்து ஒரு உதவி செய்வாயா?"

"சுவாமி, என்ன இது பெரிய வார்த்தை? அடியேனுக்கு ஆணையிடுங்கள்!"

"அப்படி இல்லை ஆஞ்சநேயா! நீ இது வரை செய்த உதவிகளுக்கே, நான் எத்தனை பிறவி எடுத்து உனக்குக் கைம்மாறு செய்யப் போகிறேனோ தெரியவில்லை? மேலும் அதென்னமோ, உயிர் காக்கும் பொறுப்பெல்லாம் உன்னிடமே வருகிறது.
நீ பறந்து சென்று...’பின்னால் அனைவரும் வந்து கொண்டே இருக்கிறோம். அப்படியே தாமதம் ஆனாலும் அவசரப்பட்டு விட வேண்டாம்’என்று பரதனுக்கு அறிவிப்பாயாக! இந்தா முத்திரை மோதிரம்! செல்! சென்று சொல், ஒரு சொல்!"

ஆனால் இராமன் இன்னும் முழுக்க முடிக்கவில்லை; ....இழுத்தான்.
"ஆங்...மாருதீ, மறந்து போனேனே! போகும் வழியில் கங்கையை ஒட்டிச் சிருங்கிபேரம் என்ற ஊர் வரும். அங்கு என் அன்பன், அடியவன், குகன் எனபவன் இருக்கிறான். அன்று என்னையே கரையேற்றியவன் தான் இந்தக் குகன். அவனுக்கும் "வந்து கொண்டே இருக்கிறோம்", என்று அறிவித்துவிட்டே நீ செல்வாயாக!"

அனுமன், இந்த அவசரத்தில் இது தேவையா? என்பது போல் ஒரு கணம் தயங்குகிறான்!

"ஆஞ்சநேயா...தம்பி பரதனின் உயிர் முக்கியம் தான். கால அவகாசமும் குறைவாகத் தான் உள்ளது! ஆனால் அதற்காகக் குகனைப் பார்த்தும் பார்க்காது போல் செல்ல முடியுமா?
எனவே, விஷயத்தைக் குகனிடம் ஓடிக் கொண்டே சொல்லி விடு. சொல்லிக் கொண்டே ஓடி விடு!"

இராமன் கூற்றாக: (யுத்த காண்டம் - மீட்சிப் படலம்)
"இன்று நாம் பதி போகலம், மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும்" என்று ஏயினன்..."
--------------------------------------------------------------------------
பின்னர், அனுமன் செயலாக:
"சிந்தை பின் வரச் செல்பவன்,
குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம் கூறி
, மேல் வான்வழிப் போனான்"0169

யாருக்கு வரும் இந்த கருணை? இன்று அவனவன் எல்லாவற்றிலும் "தானே" இருக்க வேண்டும்;
அடுத்தது "தன் குடும்பம்" தான் இருக்க வேண்டும் என்று அலைகிறான். முதலில் தன் முனைப்பு, பின்பு தமர் முனைப்பு!
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவை உண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்
, என்கிறார் பாரதிதாசன்.

இராமனுக்கு, இழந்தது எல்லாம் இப்போது கிட்டி விட்டது. வேலையும் முடிந்து விட்டது. இனி யார் தயவும் தேவை இல்லை.
அண்ட பகிரண்டமும் அஞ்சும் இலங்கேஸ்வரனையே வென்றாகி விட்டது!
அயோத்திக்குக் கீழே உள்ள நாடுகள் எல்லாம் இனி நட்பு நாடுகள் தான்! கூட்டணி பலமாக அமைந்து விட்டது! :) இனி யார் என்ன செய்ய முடியும்?

எங்கோ ஒரு படகோட்டி, எப்போதோ படகு வலித்தான் - இது என்ன பெரிய விஷயமா? இதை விடப் பல பேர், பெரிய உதவி எல்லாம் செய்துள்ளார்கள்.
அப்படி இருக்கும் போது, ஏன் இந்தக் குகன் மேல் மட்டும் அவ்வளவு கரிசனம்? - அதுவும் தம்பியின் உயிரைக் காக்கும் தருணத்திலும்?


அங்கு தான் மறைபொருள் உள்ளது. பொதுவாக இராமாவதாரத்தில், தன்னை இறைவனாக வெளிக்காட்டாமல், மனிதனாக வாழ்ந்து காட்டியதாகச் சொல்லுவார்கள். ஆனால் குகன் போன்றோரின் விடயங்களில் தான், இந்த தெய்வத்தன்மை தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது!

1. எளியவர்க்கும் எளியவனாகும் எளிவந்த தன்மை.
2. அதே சமயம், தன்னை எளிதில் வந்து அடையும்படி,
தன் நிலையையும் வைத்துக் கொள்வது.
இறைவனின் திருக் கல்யாண குணங்களில் இவ்விரண்டும் தலையாய குணங்கள். (வடமொழியில், இந்தக் குணங்களுக்குச் சிறப்புப் பெயர் சொல்லுவார்கள், சட்டென்று நினைவுக்கு வரவில்லை; அறிந்தவர் சொல்லுங்களேன்)
தன்னையே தன் அன்பர்களுக்குக் கொடுத்து விடும் குணம்!
தம்மையே தம்மவர்க்கு நல்கும் தனிப் பெரும் பதம்! - எது அது?

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை,
முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத், தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை,
'ராமா' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக், கண்களின் தெரியக் கண்டான்!


காட்டு வாசி; கறியும் மீனும் உண்பவன்; குளித்தானோ இல்லையோ; தாழ்ந்த சாதி; தொட்டால் தீட்டு! - இப்படி எல்லாம் பார்க்க முடிந்ததா இராமனால்? தொட்டால் தீட்டு! - ஆனால் தழுவினால் கூட்டு!! :))

ஏன் இப்படி?... ஏன் என்றால், இறை அன்புக்கு வரை இல்லை, முறை இல்லை!
சாதி இல்லை, சுத்தம் இல்லை!
மனிதன் இல்லை, மிருகம் இல்லை!
உயர்வு இல்லை, தாழ்வும் இல்லை!
இதுவே இராம காதையின் சூட்சுமம்.

அன்பு திரும்பக் கிடைக்குமா என்று கூடத் தெரியாமல், அன்பு செய்வதே - குகன்!

"நின் அருளே புரிந்திருந்தேன், இனி என்ன திருக் குறிப்பே?"
- இது பெரியாழ்வார் திருமொழி
- இது குகப் பெருமாளின் இதய மொழி
- இது மாதவிப் பந்தலின் முகப்பு மொழி!

அன்பே சிவம். அன்பே இராமம்!
குகப் பெருமாள் திருவடிகளே சரணம்!


2007! பதிவெழுத வந்து புதுசு! அப்போ (இப்போவும் தான்) விளிம்பு நிலைப் பதிவரா இருந்தேன்! :) அப்போ இராம நவமிக்கு எழுதிய பதிவின் மீள்பதிவு தான் இது!
காலம் இஸ் ஃபளையிங்-ல? இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இராமா! :)
Happy Birthday! Enjoy your day! :)

25 comments:

 1. ஸ்ரீராமஜெயம்!

  வரேன் ராமநாமம் சொல்லிவிட்டு!

  ReplyDelete
 2. \\"ஆங்...மாருதீ, மறந்து போனேனே! போகும் வழியில் கங்கையை ஒட்டிச் சிருங்கிபேரம் என்ற ஊர் வரும். அங்கு என் அன்பன், அடியவன், குகன் இருக்கிறான். அன்று என்னையே கரையேற்றியவன் தான் இந்தக் குகன்.
  அவனுக்கும் "வந்து கொண்டே இருக்கிறோம்", என்று அறிவித்துவிட்டே நீ செல்வாயாக!"

  அனுமன் இந்த அவசரத்தில் இது தேவையா என்பது போல் ஒரு கணம் தயங்குகிறான்!

  "ஆஞ்சநேயா...தம்பி பரதனின் உயிர் முக்கியம் தான். கால அவகாசமும் குறைவாகத் தான் உள்ளது! ஆனால் அதற்காகக் குகனைப் பார்த்தும் பார்க்காது போல் செல்ல முடியுமா?
  எனவே, குகனிடம் ஓடிக் கொண்டே சொல்லி விடு. சொல்லிக் கொண்டே ஓடி விடு!"

  "இன்று நாம் பதி போகலம், மாருதி! ஈண்டச்
  சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
  நின்ற காலையின் வருதும்" என்று ஏயினன்...

  சிந்தை பின் வரச் செல்பவன், குகற்கும் அச் சேயோன்
  வந்த வாசகம் கூறி, மேல் வான்வழிப் போனான்.
  \\

  சிந்தை பின்வரச் செல்பவன் அனுமன்;குகற்கும் வந்த வாசகம் கூறியவன் அவனாகவா அல்லது இராகவன் சொல்லியா?

  பாடலைப் பார்த்தால் சிறிது குழப்பம்...இல்லை,கேஆர்எஸ் எழுதினா சரியாத்தான் இருக்கும்னு வச்சுக்கிறோம்...
  :))))

  வாலி 'கண்ட' செய்தியை நாமப் பெருமைக்கு எடுத்திட்டீங்க...

  குகனின் பெருமைகளை எப்படி கம்பர் நுண்மான் நுழைபுலமா சொல்லிருக்காருண்ணு தெரியனும்னா,எஸ்.ராமகிருஷ்ணனின் 'தம்பியர் இருவர்' படிங்க.கங்கை வெளியீடுன்னு நினைக்கிறேன்....

  ஆயிரம் இராமர் நினக்கு இணையாக மாட்டான்னு பரதனை 'இனம்' கண்டவன் குகன்...அவன் என்ன குல,கல்விப் பிரிவுகளுக்குள் அடங்குபவனா?

  ReplyDelete
 3. //ஷைலஜா said...
  ஸ்ரீராமஜெயம்!//

  வெற்றித் திரு ராகவம்! :)

  //வரேன் ராமநாமம் சொல்லிவிட்டு!//

  வாங்க-க்கா!

  ReplyDelete
 4. //அறிவன்#11802717200764379909 said...
  சிந்தை பின்வரச் செல்பவன் அனுமன்;குகற்கும் வந்த வாசகம் கூறியவன் அவனாகவா அல்லது இராகவன் சொல்லியா?//

  இராகவன் சொல்லியே!

  //பாடலைப் பார்த்தால் சிறிது குழப்பம்...இல்லை,கேஆர்எஸ் எழுதினா சரியாத்தான் இருக்கும்னு வச்சுக்கிறோம்...
  :))))//

  ஹா ஹா ஹா! அந்தத் தப்பை மட்டும் பண்ணவே பண்ணாதீங்க அறிவன்! கேஆரெஸ் வெறும் அடியேன் பொடியேன்! அதனால் தாராளமாச் சுட்டிக் காட்டுங்க! :)

  முழுப்பாட்டும் தரேன்! அப்போ உங்க ஐயம் நீங்கிரும்!

  //வாலி 'கண்ட' செய்தியை நாமப் பெருமைக்கு எடுத்திட்டீங்க...//

  ஆமாம்! எதிரிக்கே தெரியும் "நாமப் பெருமை"-ன்னா, அன்பனான குகனுக்குத் தெரியும் "நாமச் சுவை"!

  //குகனின் பெருமைகளை எப்படி கம்பர் நுண்மான் நுழைபுலமா சொல்லிருக்காருண்ணு தெரியனும்னா,எஸ்.ராமகிருஷ்ணனின் 'தம்பியர் இருவர்' படிங்க.கங்கை வெளியீடுன்னு நினைக்கிறேன்....//

  ஆகா! நியூயார்க்கில் எங்கிட்டு போய் தேடுவேன்? ஆசையைக் கெளப்பி விட்டா எப்படி? அடுத்து சென்னை வரும் போது புத்தகத்தை வாங்கிற வேண்டியது தான்! தம்பி விஷயம்-ன்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும்! அதுவும் "ராமத்"-தம்பிகள்! :)

  ReplyDelete
 5. //ஆயிரம் இராமர் நினக்கு இணையாக மாட்டான்னு பரதனை 'இனம்' கண்டவன் குகன்...அவன் என்ன குல,கல்விப் பிரிவுகளுக்குள் அடங்குபவனா?//

  குகன் அன்பில் அடங்குபவன்!
  குலமாவது? கல்வியாவது? மீனும், தேனும் தருகிறோமே என்னும் ஆச்சாரமாவது?
  இறைவன் குலப் பெரியவர்களைத் தழுவி அணைக்கவில்லை!
  வேதக் கல்வி கற்ற ரிஷிகளைத் தழுவி அணைக்கவில்லை!
  குகனை அல்லவா தழுவி அணைத்தான்! அது தான் நாம் எல்லாரும் உணர வேண்டிய சூட்சுமம்! தக்க சமயத்தில் எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி அறிவன்!

  ReplyDelete
 6. ஸ்ரீராமநாமம் ஒரு வேதமே !

  சீதா பிராட்டி சமேத ராமச்சந்திரன் திருவடிகளே சரணம்..

  ReplyDelete
 7. @அறிவன் ஐயா...
  //சிந்தை பின்வரச் செல்பவன் அனுமன்;குகற்கும் வந்த வாசகம் கூறியவன் அவனாகவா அல்லது இராகவன் சொல்லியா?

  பாடலைப் பார்த்தால் சிறிது குழப்பம்...இல்லை,கேஆர்எஸ் எழுதினா சரியாத்தான் இருக்கும்னு வச்சுக்கிறோம்...:))))//

  அதாச்சும் அனுமனுக்குப் பரதனே யாருன்னு தெரியாது. அதனால் தான் முத்திரை மோதிரம் வாங்கிக்கிட்டு போறான்! இப்படி இருக்க குகனைத் தெரியவா போகுது? அப்படி இருக்க, அனுமன் தானாகவே இறங்கி, குகனிடம் சொல்லிப் போவானா என்ன?

  அதனால் இராமன் சொன்ன சொல் படியே, குகனிடம் சொல்லிப் போகிறான் என்றே கொள்ள வேண்டும்! பாட்டின் வரிப் பொருளை மட்டுமே நோக்காமல், கருப் பொருளையும் சேர்த்து தான் நோக்க வேணும்!...

  இதை வால்மீகியும் சொல்கிறார்!
  (Valmiki Ramayana, Yuddha Kanda, Canto CXXV, Sloka 4, 5)
  Go to Ayodhya and announce my arrival. But before that go to Srngaverapura, inform Guha that I am safe and am returning.
  Reaching Srngaverapura (earlier) communicate in my name my welfare to Guha, the suzerain lord of Nisadas, who dwells in the woods. Guha will feel actually delighted to hear of me as being safe and sound and free from anxiety. He is my friend, as good as my own self.

  அடியேன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்-ன்னு எப்போதுமே அனுமானிக்காமல், சந்தேகப்பட்டீர்கள் என்றால் தயங்காது கேளுங்க!

  ReplyDelete
 8. //படகோட்டியா? தம்பியா?? - இராமன் மனம் யாருக்கு//

  குகப் பெருமானும், ஸ்ரீராமனுக்கு தம்பி தானே!!

  ReplyDelete
 9. //Raghav said...
  ஸ்ரீராமநாமம் ஒரு வேதமே !//

  எப்படி-ன்னு சொல்லுங்க ராகவ்! அறியத் தாருங்களேன்!

  //சீதா பிராட்டி சமேத ராமச்சந்திரன் திருவடிகளே சரணம்..//

  சீதா பிராட்டி சமேத இராமச்சந்திரன் திருவடிகளான ஆஞ்சநேய சுவாமி திருவடிகளே சரணம்!

  ReplyDelete
 10. //Raghav said...
  //படகோட்டியா? தம்பியா?? - இராமன் மனம் யாருக்கு//
  குகப் பெருமானும், ஸ்ரீராமனுக்கு தம்பி தானே!!//

  ஹா ஹா ஹா!
  அப்படியில்லை ராகவ்! என்ன தான் உடன்பிறப்பே, உடன் பிறவா சகோதரியே-ன்னு இப்பல்லாம் வாயால சொன்னாலும், அவரவர் "ரத்த பாச" உடன்பிறப்பைத் தானே "உண்மையான" உடன்பிறப்பா நினைக்கிறாங்க? அதே போல் இராமனும் குகனைச் சும்மா வாயால மட்டும் தான் "தம்பி"-ன்னு சொன்னானா?

  இந்தக் கேள்விக்கு விடை தான் - படகோட்டியா? தம்பியா?? - இராமன் மனம் யாருக்கு? :)

  ReplyDelete
 11. நண்பர் ரவி,
  ஒரு எண்ணம் வர பாடல்களைப் பார்த்தேன்.

  பாடல் 10297: சித்திரகூடத்தில் விருத்துண்ணம் ராமன் அனுமனை அழைத்தல்.

  அரைசரே ஆதி ஆக,
  அடியவர் அந்தம் ஆக,
  கரை செயல் அரிய போகம்
  துய்க்குமா கண்டு, இராமற்கு
  அரைசியல் வழாமை நோக்கி
  அறுசுவை அமைக்கும் வேலை,
  விரை செறி கமலக் கண்ணன்,
  அனுமனை விளித்துச் சொன்னான்.

  பாடல் 10298: சொல்லும் செய்தி.

  ‘இன்று நாம்பதி ஏகுமுன்
  மாருதி! ஈண்டச்
  சென்று தீது இன்மை செப்பி,
  அத் தீமையும் விலக்கி
  நின்ற காலையின் வருதும் ‘
  என்று
  ஏயினன், நெடியோன்;
  ‘நன்று ‘எனா, அவன் மோதிரம்
  கைக்கொடு நடந்தான்.

  பாடல் 10299: அனுமன் செயல்

  தந்தை வேகமும், தனது
  நாயகன் தனிச்சிலையின்
  முந்து சாயகக் கடுமையும்,
  பிற்பட முடுகி,
  சிந்தை பின்வரச் செல்பவன்,
  குகற்கும் அச்சேயோன்
  வந்த வாசகம் கூறி,
  மேல்
  வான்வழிப் போனான்.

  வால்மீகி explicit ஆக சொன்னதை கம்பர் ஏன் உள்ளடக்கமாக சொன்னார் எனத் தெரியவில்லை...

  ஆயினும் பதிவுச் சுவைக்காக மன்னித்து விடலாம்...

  :))))

  ReplyDelete
 12. ஆகா...
  கம்ப ராமாயணப் பாடல்களுக்கு நன்றி அறிவன்! ஆனால் பதிவுச் சுவைக்காக மன்னிக்க எல்லாம் தேவை இல்லை! :))
  ஏன்-னா இது பதிவுச் சுவைக்காக மட்டும் சொல்லவில்லை! உண்மையும் அது தான்! பின்னூட்டத்தில் வால்மீகியும் கொடுத்திருக்கேனே! இராமன் சொல்லித் தான், குகனிடம் அனுமன் அறிவித்து விட்டுப் போவதாக வால்மீகியும் சொல்கிறார்! ஆனால் அதையே கம்பர் பாடலில் "வரிக்கு வரி" தேடினால் கிடைக்காது!

  இது இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
  காவிய "வரிகளை" மட்டுமே வைத்துப் பொருள் கொள்ளாது, முன்னும் பின்னும் பார்த்து பொருள் கொள்ளணும்! அப்போ தான் முழுமை பெறும்!

  குகனை யாரென்றே அறியாத அனுமன் எப்படி இறங்கிச் சொல்லி விட்டுப் போவான்? இராமன் சொன்னதால் சொல்லி விட்டுப் போகிறான்!

  காவிய வரியோடு, கவிஞன் மனதும், காவியத்தின் ஆத்மாவும் படிப்பதும் மிகவும் முக்கியம்!

  ReplyDelete
 13. லாஜிகலாக நீங்கள் சொல்வது சரி..

  வார்த்தைகளுக்குள் வானம் அளவு பொருள் வைக்கும் கம்பன் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை....

  இன்னும் கொஞ்சம் தேடுகிறேன்..

  ReplyDelete
 14. //அறிவன்#11802717200764379909 said...
  இன்னும் கொஞ்சம் தேடுகிறேன்..//

  thedungaL aRivan! neenga theda theda engaLukku kamba raamaayaNa virunthu thaan :)

  ReplyDelete
 15. //So, Happy Birthday - ராமா!
  அட, அவனுக்கு மட்டும் தான் பிறந்த நாளா? நாளைக்கு, அதுக்கு மறு நாள்-ன்னு அடுத்தடுத்து.....Happy Birthday - பரதா, இலக்குவா, சத்ருக்கனா! :)//

  ரிப்பீட்டிக்கிறேன் :)

  இராமனைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் நெகிழ்ச்சிதான். அதுவும் கேஆரெஸ் மொழியில்... கேட்கவும் வேணுமா? :)

  ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்!

  ReplyDelete
 16. 1. எளியவர்க்கும் எளியவனாகும் எளிவந்த தன்மை.
  2. அதே சமயம், தன்னை எளிதில் வந்து அடையும்படி, தன் நிலையையும் வைத்துக் கொள்வது.
  இறைவனின் திருக் கல்யாண குணங்களில் இவ்விரண்டும் தலையாய குணங்கள். (வடமொழியில், இந்தக் குணங்களுக்குச் சிறப்புப் பெயர் சொல்லுவார்கள், சட்டென்று நினைவுக்கு வரவில்லை; அறிந்தவர் சொல்லுங்களேன்)
  கேஆர்ஸ்க்கு அறிந்தது அறியாதது புரிந்தது புரியாதது எல்லாம் அவருக்குத் தெரியும் இருந்தாலும் ஏதோ உள்குத்து இருக்கிறது இதில். இருந்தாலும் ஏற்கனவே குத்து வாங்கி பழகியதால் சொல்கிறேன்.
  சௌலப்யம் சௌசீல்யம் என்பார்கள்
  ராமனிடத்தில் குகனுக்கு அன்புக்கு காரணம் கம்பரி வாயிலாக கேட்டால்
  ""கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இப்
  பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்னை
  ஈர் கிலாக் கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கித்
  தீர்கிலேன் ஆனது ஐய செய்குவேன் அடிமை என்றான்.""

  குகன் இப்போதுதான் முதல் முதலாக ராமனைப் பார்க்கிறான். இருந்தாலும் உன்னை இந்தக் கோலத்தில் பார்த்த என்கண்னை பறித்து எறியாத கள்வன் நான் என்கிறான். இந்த அன்பே ராமனைக் கவரக் காரணம்.

  நல்ல நாளில் நல்ல பதிவை படிக்கும் தன்மையைக் கொடுத்த தம்பிக்கு நன்றி

  ReplyDelete
 17. \\அன்பு திரும்பக் கிடைக்குமா என்று கூடத் தெரியாமல், அன்பு செய்வதே - குகன்!\\

  அருமையான வரிகள்...நல்ல பதிவு தல ;))

  \\இன்று அவன் அன்பர்களைப் பற்றிப் பேசவே மனம் விழைகிறது.\\

  உங்க மனம் இப்படி விழைகிறது...என்னோட மனம் எப்படா நம்ம பதிவுலக இராமாயணம் வருமுன்னு விழைகிறது. ;))

  ReplyDelete
 18. //கவிநயா said...
  இராமனைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் நெகிழ்ச்சிதான். அதுவும் கேஆரெஸ் மொழியில்... கேட்கவும் வேணுமா? :)//

  ஆமாம்-க்கா! கேஆரெஸ் மொழி-ன்னு இல்லை! யார் மொழியிலும் ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே!
  கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?-ன்னு நம்மாழ்வார் வாக்கு! ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா!

  ReplyDelete
 19. //தி. ரா. ச.(T.R.C.) said...
  (வடமொழியில், இந்தக் குணங்களுக்குச் சிறப்புப் பெயர் சொல்லுவார்கள், சட்டென்று நினைவுக்கு வரவில்லை; அறிந்தவர் சொல்லுங்களேன்)

  கேஆர்ஸ்க்கு அறிந்தது அறியாதது புரிந்தது புரியாதது எல்லாம் அவருக்குத் தெரியும் இருந்தாலும் ஏதோ உள்குத்து இருக்கிறது இதில்//

  ஹா ஹா ஹா! :)

  //இருந்தாலும் ஏற்கனவே குத்து வாங்கி பழகியதால் சொல்கிறேன்//

  அட ராமா! நான் போய் குத்துவேனா திராச ஐயா? அதுவும் உங்களை! முருகக் குழந்தைப் பாதக் குத்தெல்லாம் குத்தாகுமா? :)

  //சௌலப்யம் சௌசீல்யம் என்பார்கள்//

  அதே! அதே! நன்றி! (அறி வினா என்றாலும், மக்கள் ஈடுபாடு-க்காக இப்படி கேட்பது சில சமயம் வழக்கம்! ஆனால் அதுக்காக எல்லாம் அறிந்ததாக அர்த்தம் ஆகி விடுமா என்ன? அடியேன் அறிவீனா தான்! :)

  //""கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இப்
  பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்னை
  ஈர் கிலாக் கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கித்
  தீர்கிலேன் ஆனது ஐய செய்குவேன் அடிமை என்றான்.""//

  நீங்க உங்க கம்பன் சோலைப் பதிவை ஏன் நிறுத்தியே வச்சிருக்கீங்க திராச? மீள்-துவங்கக் கூடாதா?

  //நல்ல நாளில் நல்ல பதிவை படிக்கும் தன்மையைக் கொடுத்த தம்பிக்கு நன்றி//

  தம்பியா? அவருக்கு வேணும்னா தம்பி! உங்களுக்குக் குமாரன் மாதிரி! நன்றி திராச! இது மீள் பதிவு தான்! அப்போது இட்ட போதும் வந்து இந்தக் கார்குலாம் கம்பனின் பாடலைச் சொன்னீங்க-ன்னு நினைக்கிறேன்! மலரும் நினைவுகள்!:)

  ReplyDelete
 20. //கோபிநாத் said...
  உங்க மனம் இப்படி விழைகிறது...என்னோட மனம் எப்படா நம்ம பதிவுலக இராமாயணம் வருமுன்னு விழைகிறது. ;))//

  ஆகா! ஞாபகப் படுத்திட்டியா? போச்சு கோப்பி! எனக்கு அந்தப் பாசக்காரச் சூர்ப்பனகை மேல ஒரே பயம்! அதான் கொயட்டா இருக்கேன்! :))

  ReplyDelete
 21. எத்தனையோ தடவை ஊருக்குப் போயிருக்கேன் - ஆனா ஒரு தடவையும் நீங்க சொன்ன மாதிரி இட்லி - வடை - தோசை - சாம்பார், காரச்சட்னி, புதினாச்சட்னி, தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னின்னு - போனவுடனே சாப்புட்டதில்லை. எப்பவும் புளியோதரை தான். சில நேரம் தக்காளி சாதம். ஏன்னு தெரியலை. :-)

  இராமப்பெருமாள்ன்னு சொல்றதில்லை தான். ஆனால் இராகவப்பெருமாள்ன்னு சொல்றதுண்டே.

  'சேயோன் வந்த வாசகம்'? என்னையா இது ஒரு புதுக் குழப்பம்? ஒருத்தர் முருகனைப் பெருமாளேன்னு பாடறார்ன்னா இன்னொருத்தர் இராகவனை சேயோன்னு பாடறார். கருநிறமுகில் தானே இவர்? எப்ப சேயோன் ஆனார்?

  இது மீள்பதிவா? புதுசா படிக்கிற மாதிரி தான் இருக்கு விளிம்புநிலை மூத்த பதிவரே. :-)

  ReplyDelete
 22. ரொம்பத் தாமதமா வரேன்.

  ரொம்ப நாளைக்கு அப்புறமாவும் வரேன். நன்றி ரவி. ஆன்மீகம் இன்னும் ஆன்மாவை விட்டு விலகாமல் இருக்க நீங்கள் அனைவரும் செய்யும் பணி இனியது.வேண்டுவது.நம்புவது.
  மீனாட்சி கருணையும்,ராகவன் நலமும் ஆட்சியும் கண்ணன் அருளும் மிக வேண்டும்.

  ReplyDelete
 23. //வல்லிசிம்ஹன் said...
  ரொம்பத் தாமதமா வரேன். ரொம்ப நாளைக்கு அப்புறமாவும் வரேன்//

  ஹா ஹா! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் வல்லீம்மா!

  //பணி இனியது.வேண்டுவது.நம்புவது.
  மீனாட்சி கருணையும்,ராகவன் நலமும் ஆட்சியும் கண்ணன் அருளும் மிக வேண்டும்.//

  அது தானே குணானுபவம் வல்லீம்மா!
  அவனைப் பேசியும், பாடியும், கொண்டும், கொடுத்தும், தொண்டும், செய்தும்...களி்த்திருப்போம்!

  ReplyDelete
 24. //குமரன் (Kumaran) said...
  எத்தனையோ தடவை ஊருக்குப் போயிருக்கேன் - ஆனா ஒரு தடவையும் நீங்க சொன்ன மாதிரி இட்லி - வடை - தோசை - சாம்பார், காரச்சட்னி, புதினாச்சட்னி, தேங்காய்ச் சட்னி, வெங்காயச் சட்னின்னு - போனவுடனே சாப்புட்டதில்லை. எப்பவும் புளியோதரை தான். சில நேரம் தக்காளி சாதம். ஏன்னு தெரியலை. :-)//

  ஆகா! அம்மா எனக்கு ஏர்போர்ட்டிலேயே சுகியம், கொழுக்கட்டை-ன்னு லைட்டாச் செஞ்சி எடுத்தாருவாங்க! :)

  //இராமப்பெருமாள்ன்னு சொல்றதில்லை தான். ஆனால் இராகவப்பெருமாள்ன்னு சொல்றதுண்டே.//

  நீங்க எந்த ராகவனைச் சொல்றீங்க? டி.ராகவன்? ஜி.ராகவன்? :)

  //மூத்த பதிவரே. :-)//

  மூ நெடில் இல்லை! மு குறில்!
  எழுத்துப் பிழை இல்லாம எழுதப் பழகுங்க குமரன்! :)

  ReplyDelete
 25. //'சேயோன் வந்த வாசகம்'? என்னையா இது ஒரு புதுக் குழப்பம்? ஒருத்தர் முருகனைப் பெருமாளேன்னு பாடறார்ன்னா இன்னொருத்தர் இராகவனை சேயோன்னு பாடறார். கருநிறமுகில் தானே இவர்? எப்ப சேயோன் ஆனார்?//

  இதற்கு சுவையான கம்ப விளக்கம் இருக்கு குமரன்!
  சேயோன் வந்த வாசகம்! சேயோன் யார்? இராமனா? இல்லை! ஆனால் ஆமாம்! :))

  பாடலைப் ஃபுல்லாப் பாருங்க! யார் யார் எல்லாம் வராங்க?
  தந்தை வேகமும் = வாயு வேகமும்,
  தனது நாயகன் தனிச்சிலையின் முந்து சாயகக் கடுமையும் = இராமன் வேகமும்
  பிற்பட முடுக சிந்தை பின்வரச் செல்பவன் = மனோ வேகம்!

  குகற்கும் அச்சேயோன் வந்த வாசகம் கூறி, மேல்
  வான்வழிப் போனான் = ஏற்கனவே முதலடியில் இராமனைச் சொல்லியாச்சி! அப்போ இந்தச் சேயோன் யாரு? சிவப்பானவனா? சேய்மையானவனா? சேய்மையில் இருப்பவனா? - கண்டு புடிங்கோ! :)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP