Friday, April 24, 2009

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்- தமிழ் ஈழம்- கடைசி நேர முயற்சிகள் என்ன?

அலுவல் வேலையா லண்டன் சென்று, நேற்று இரவு தான் ஊர் திரும்பினேன்! லண்டனில் சக அலுவலகத் தோழி ஒருத்தி (ஈழத்துப் பெண்)! அவளிடம் பேசும் போது சில ஈழ விஷயங்கள் பார்வைக்கு வந்தன! அவள் சொன்னது: "90% வரை ஒளித்தல் மறைத்தல் இல்லாது, அனைத்து தரப்பு நியாயங்களோடே, பி.பி.சி-யின் ஈழச் செய்தி வழங்கல் நல்லதொரு விஷயம்!" - இதோ மொத்த ஈழ விவகாரங்களுக்கான பி.பி.சி சுட்டி!

ஆனால் இந்தப் பதிவை, வழியில் எழுதிக்கிட்டு வரும் போதே, அந்தக் "கடைசி நேரம்" ஈழத்தில் வந்து விட்டு இருக்குமோ? வந்து விட்டு இருக்குமோ?-ன்னு பயந்து பயந்து எழுத வேண்டிய ஒரு அவல நிலை! :(


ஈழத் தமிழர்களுக்கு கீழ்க்கண்ட பேச்சுகள் எவ்வளவு உதவிகரமா இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?

* எம்.ஜி.ஆர், பிரபாகரனுக்கு தம் வீட்டில் விருந்து அளித்து, மஜ்ஜை எலும்பு கடிக்கக் கொடுத்தார்!
* கருணாநிதி சபாரத்தினத்துக்கு மட்டுமே நண்பர்! பிரபாகரனுக்கு அல்ல!
* ஜெயலலிதாவின் திடீர் ஈழ அக்கறைக்குக் காரணம் என்ன?
* வைகோ ஒரு தனி மனிதருக்காக ரத்த ஆறு ஓடும்-ன்னு சொன்னது சரியா?
* காவி வருண் காந்திக்கு ஒரு நியாயம், கருப்பு வைகோவுக்கு இன்னொரு நியாயமா?

* திருமா இப்படிச் சோடை போய் விட்டாரே!
* மருத்துவர் ராமதாஸ் செய்யும் சித்து மருத்துவ ஈழ லேகியம்!
* விஜய்காந்துக்கு உண்மையான ஈழ அக்கறை உண்டா?
* பத்ம ஸ்ரீ பட்டத்தைப் பாரதிராஜா திருப்பிக் கொடுக்கட்டும்!
* சீமான், அமீர் செய்வது அடாவடியா? அக்கறையா?

* இந்த நேரத்தில், 20-Twenty கிரிக்கெட் போட்டிகள் தேவையா?
* இங்கு ஸ்டிரைக் நடத்தினா, அங்கு சீஸ் ஃபையர் வருமா? ஃபாரஸ்ட் ஃபையர் வருமா?
* உண்ணாவிரதம் இருக்கும் மகளிரைப் பார்த்து கனிமொழி கலங்கியது நீலிக் கண்ணீரா? போலிக் கண்ணீரா?
* இத்தாலியின் பெண் எத்தாலியும் அறுக்கிறாளே!
***
***
***
இப்படி அவரவர் வசதிக்கேற்ப, எதுகை மோனையாப் போட்டு, வருஷக் கணக்கா "பேசிக்கிட்டே" இருக்கலாம்! ஏன் தலைமுறை தலைமுறையாவும் கூடப் பேசலாம்!

ஈழம் என்னும் இழவு வீட்டில் கூட "நான் அப்பவே தீர்மானம் போட்டேனே"-ன்னு சுயம் பேசுவது = மூவேந்தர் காலத்தில் இருந்து, இன்று வரை, தமிழ் இனம் மட்டுமே தவம் இருந்து வாங்கி வந்திருக்கும் ஒரு பிரத்யேக சாபம்!

அதனால் இது போன்று "பயன் தரும்" பேச்சுக்களை வேணாம்-ன்னு சொல்லலை! ஆனால் அதையெல்லாம் ஒரு ஆறு மாசம் கழிச்சி வச்சிக்கிட்டா என்ன? அப்போ அக்கு வேறு ஆணி வேறு அலசி ஆராய்ந்து வரலாற்றுப் புத்தகத்தில் இதெயெல்லாம் ஒவ்வொன்னா ஏற்றுவோம்! ஆனால் இப்போது???

இந்தப் பதிவின் நோக்கம்:
யார் யார், ஈழத் தமிழர்களை, எப்போது எல்லாம், எப்படி எல்லாம் கைவிட்டார்கள் என்பது பற்றிய அலசல் அல்ல! அந்த அலசல் செய்ய எண்ணுபவர்கள் தயவு செய்து இந்தப் பதிவிற்குள் வர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

இந்தப் பதிவின் நோக்கம்:
இப்போதைய உருப்படாத நேரத்திலும், உருப்படியா ஒன்னு ரெண்டாவது தேறுமா-ன்னு பார்க்கத் தான் இந்தப் பதிவு!
கடைசிக் கட்டத்தில் என்னென்ன சிறு முயற்சிகள் சாத்தியம் என்பதைப் பற்றிய ஆலோசனைகளை வாங்கி, "தகுந்தவர்களிடம்" சேர்ப்பிப்பதே!

யார் இந்தத் "தகுந்தவர்கள்"?
* நார்வே ஏற்கனவே கையைச் சுட்டுக் கொண்டு ஒதுங்கிருச்சி!
* ஐ. நா. சபை சொல்லியே கேக்க மாட்டேங்குறானுங்க!
* அமெரிக்கா பேச்சு கூட எடுபடாது போல இருக்கே!

அம்புட்டு விடாப்பிடித்தனம் இருக்கும் சூழலில்....பெருசா என்ன தான் செய்ய முடியும்-ன்னு கேக்கறீங்களா?செய்ய முடியும்!

மக்களுக்காக கொள்கையா? கொள்கைகளுக்காக மக்களா?

வாழும் கலை அமைப்பின் ஆன்மீகத் தலைவர் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்பவர் - இவரை நம்மில் பல பேருக்கும் தெரியும்-ன்னே நினைக்கிறேன்! எனக்கும் இவர் பற்றிய விபரங்கள் கேள்வி ஞானம் தான்!
இவர் சென்ற வாரம் இலங்கை சென்று வந்திருக்கிறார்! மூனு நாள் பயணம்! (Apr 20,21,22)

பெருசா எல்லாம் ஒன்னும் சாதிச்சிடலை அவரு! ஆனா ஈழ அரசியல், ஈழ வரலாறு, ஈழ இயக்கம்-ன்னு சாகும் நேரத்திலும் "பேசிக்" கொண்டு இருக்காமல்...
கொஞ்சம் தைரியமாகவே இலங்கைக்குள் காலடி எடுத்து வச்சிருக்காரு மனுசன்!

அவர் பயணத்தின் காணொளிப் (வீடியோ) படங்களைப் பார்த்தேன்!
* கொழும்பில் புத்த மதத் துறவிகள் கிட்ட பேச்சு!
* மகா "கனம்" பொருந்திய ராஜபக்சே "ஐயா" கிட்ட போயி சந்திப்பு!
* எல்லாத்த விட முக்கியமா, வவுனியா ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் நம்ம தமிழர்களை நேரில் போயி பார்த்து, ஆறுதல்!

அவர்களுக்கு Trauma/மனச்சிதைவுக்கு சில மாற்று முயற்சிகள்-ன்னு ஏதோ தம்மால முடிஞ்சதை ஏற்பாடு பண்ணிட்டு வந்திருக்காரு!
பெருசா எல்லாம் ஒன்னும் பண்ணிடலை! ஆனா இந்த ஸ்ரீ ஸ்ரீ சொன்ன ஒரே ஒரு வாசகம் மட்டும், இன்னும் என் மனசுக்குள்ளாற ஓடிக்கிட்டு இருக்கு:

"துன்பத்தில் இருக்கும் போது உதவிக்கு வராத ஆன்மீகம்-ன்னா, எதுக்கு அந்த ஆன்மீகம்?"

நீங்களும் அசைபடங்களைப் பாருங்கள்!


சரி, இவரை வச்சிக்கிட்டு கடைசி நேர முயற்சியா, ஏதாச்சும் குறைஞ்ச பட்சமாவது செய்ய முடியுமா?
இந்த நேரத்திலும் ராஜபக்சேவைப் போயி நேராப் பாக்க முடியும்-ன்னு இருக்கும் இவர் போன்றோரை வச்சிக்கிட்டு என்ன செய்யலாம்?

1. தப்பி வந்து இராணுவ முகாம்களில் இருக்கும் தமிழர்களை இலங்கை அரசு பட்டியல் எடுத்து அடையாள அட்டை கொடுக்கிறது!
அந்தப் பட்டியலை ஐ.நா-விடமோ, செஞ்சிலுவைச் சங்கத்திடமோ, இல்லை பொதுவான நிறுவனத்திடமோ பகிரச் சொல்ல வேண்டும்!

நாளை இந்த அகதிகளுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சுனா? யார் யாருக்கு என்னென்ன ஆச்சு என்பதை அவர்கள் குடும்பங்கள் அறிய இது உதவிகரமா இருக்கும்! உலகமே அறிய உதவியா இருக்கும்!

இத்தனை பேர் தப்பிச்சி வந்தாங்க! இத்தனை பேர் இன்னும் உயிரோடு தான் இருக்காங்க! - என்ற தகவலால், இலங்கை அரசாங்கம் மீது குறைந்தபட்ச நம்பிக்கை வர வாய்ப்பு இருக்குன்னு சொல்லி இதைப் பெற்றுக் கொடுக்க வேணும்! அரசாங்கத்திடம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தொடர்ந்து வலியுறுத்த எல்லா முயற்சியும் எடுக்க வேண்டும்!

இராணுவ ரகசியம் தானே வெளியே சொல்லக் கூடாது! தப்பி வந்து மக்களின் பேரைக் கூடவாச் சொல்லக் கூடாது?
அவர்களில் யாரேனும் புலிகள்-ன்னு சந்தேகப்பட்டால், அதையும் தனிக் கலரில் அடையாளம் இட்டே கொடுக்கட்டுமே? கொடுங்கய்யா! அது போதும்!

2. இரண்டு லட்சம் தமிழர்கள் சாவதற்குப் பதில் ரெண்டாயிரம் தமிழர்கள் செத்தால் போதுமானது! அதுக்கு ஏதாச்சும் பண்ண முடியுமா? இப்படி எழுத எனக்கே வெட்கமா இருக்கு! :((

மண் அணை உடைக்கப்பட்ட பின் வெளியேறிய தமிழர்கள் ஐம்பாதாயிரம்-ன்னு ஒரு பேச்சுக்கு வச்சிப்போம்! இன்னும் வன்னிப் பகுதியில் மாட்டிக் கொண்டிருக்கும் மற்ற மக்களின் உயிர்களை முடிந்த மட்டும் எப்படிக் காப்பாற்றலாம்?

பெளத்த மற்றும் இதர சமயத் துறவிகளையோ, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இயக்கத்தினரையோ வன்னிக் காட்டுக்குள் அனுப்பினால், தமிழர்களை மீட்டுக் கொண்டு வர முடியுமா? சாத்தியமா? வர நினைப்பவர்கள் வந்து விடட்டும்! அப்பறம் உங்க "ஒண்டிக்கு ஒண்டிகளை" வைத்துக் கொள்ளுங்களேன்!


3. முகாம் மாறி, இப்போது "அதி"காரத்தில் இருக்கும் கருணா போன்ற தமிழர்களின் ஆலோசனையைப் பெற்று, அவர்கள் அறிந்து வைத்திருக்கும் ரகசிய வழி, காட்டின் வேறு வழிகளைத் திறந்து விட முடியுமா? மேலும் மக்கள் வெளியேற ஏதாச்சும் செய்ய முடியுமா?

4. உணவுப் பொட்டலம் மற்றும் மருந்துகளை முகாம்களுக்கு மட்டும் கொடுக்காமல், வன்னிக் காட்டில் அடைபட்டிருக்கும் மற்றவர்களுக்கும் ஓரிரு முறையாச்சும் "வீசச்" செய்ய முடியுமா? குறிப்பாக குழந்தைகள் பசியால் சாகாமல் இருக்க இது உதவியா இருக்கும்!

5. பன்னாட்டுப் பத்திரிகையாளர்களைக் கூட அனுமதிக்க வேணாம்! அவர்கள் எடுக்கும் படத்தை எல்லாம் பாத்துத் தான் பாவப்பட்ட ஜீவன்களின் நிலைமையை அறியணும்-ன்னு அவசியமில்லை! மருத்துவர்களையாவது அனுமதிக்க வழி வகை செய்து தர முடியுமா? அட் லீஸ்ட் பெண் மருத்துவர்கள்?

இது போன்ற சின்ன சின்ன முயற்சிகள்! இப்படி எதை எதையெல்லாம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கேட்டுப் பெற முடியும்-ன்னு நினைக்கறீங்க? யோசிச்சிச் சொல்லுங்களேன்!
அவர்களுக்கே தோனாதது, ஸ்ரீ ஸ்ரீ-க்கே தோனாதது கூட உங்களுக்கு ஒரு வேளை தோனலாம்! அதை ஒன்னாத் திரட்டி அவருக்கு அனுப்பி வைச்சா.....

அவரால் முடிந்த வரை, அவரும் கடைசி நேர முயற்சியாய் முயற்சிக்கட்டும்!
சில சமயம், பெரிய உலக்கைகளை விட,
இவரைப் போன்ற சிறிய துரும்பு தான் பல் குத்தவும் உதவுகிறது!

அதற்கப்புறம் தமிழனின் தலை விதி! :(((

அது புத்தரோ, பெருமாளோ, இல்லை வேறு எதுவோ...
ஈழத்து மக்களுக்கு இறுதி நேரச் சிறு உதவிகள் எது கிடைச்சாலும்...
புத்தம் சரணம் கச்சாமி-ன்னு சொல்ல அடியேனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை!
மக்களுக்காகத் தான் கொள்கை! கொள்கைக்காக மக்களைக் காவு கொடுத்தல் கூடவே கூடாது!

புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி!

23 comments:

 1. I agree with you.

  ReplyDelete
 2. // Anonymous said...
  I agree with you//

  அனானி ஐயா! agree-not agree பத்தி எல்லாம் கவலை இல்லை! உங்களுக்கு வேறு ஏதாச்சும் யோசனை தோன்றினால் சொல்லுங்களேன்!

  ReplyDelete
 3. நல்ல பதிவு, எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை...போன்றவை செய்யலாம், இலங்கை வாழ் மக்களுக்காக என்ற பெயரில். எல்லா கோவில்களிலும்,( பள்ளிகள், கல்லூரிகள் , ஆபிஸ் ... ) அரிசி, மருந்து, துணி போன்ற அத்தியாவசிய பொருட்கள் ...சேகரித்து , சரியான இடத்துக்கு அனுப்பலாம். ... இதற்காக, பணம் அனுப்ப வேண்டிய முகவரிகளை பதிவுகளில் கொடுக்கலாம்.

  ReplyDelete
 4. //அது ஒரு கனாக் காலம் said...
  நல்ல பதிவு, எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை...போன்றவை செய்யலாம்//

  :)
  பூஜை எல்லாம் மன அமைதிக்காக தாங்க! ஆனா அதுக்கும் முன்னாடி உசிரு இருக்கே! அதைக் காப்பாத்தணும்-ல?
  மொதல்ல உசுரு! அப்பறம் மனசு!
  அதுக்கு ஸ்ரீ ஸ்ரீ போல நபர்கள் இலங்கை அரசிடம் என்ன பேசி வாங்க முடியும்-ன்னு யோசிக்கணும்!

  //எல்லா கோவில்களிலும்,( பள்ளிகள், கல்லூரிகள் , ஆபிஸ் ... ) அரிசி, மருந்து, துணி போன்ற அத்தியாவசிய பொருட்கள் ...சேகரித்து , சரியான இடத்துக்கு அனுப்பலாம். ...//

  இது தப்பி வந்த பின் உள்ள மக்களுக்கு! நல்ல யோசனை!
  ஆலயங்களில் இதுக்குன்னே உண்டியலும் உணவுப் பொருள் சேகரிப்பு எல்லாம் வைக்கலாம்!

  மொதல்ல, சண்டை நடக்காத முகாம்கள் போன்ற இடங்களில் தொண்டு நிறுவனங்களைக் கொஞ்சம் கொஞ்சமா அனுமதிப்பது! இதுக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சமரசம் பேசி வாங்கிக் கொடுத்தா நல்லா இருக்கும்!

  ReplyDelete
 5. நல்லதொரு பதிவு அண்ணா..
  எனக்குத் தோன்றிய சிறு யோசனை.

  1. மருத்துவக் குழு மட்டுமல்லாது.. இங்கிருந்து விருப்பமுள்ளவர்கள் இலங்கை சென்று அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் இருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் புரியலாம்.. இரத்த தானம், முகாம் அமைத்தல், அனாதரவாய் விடப்பட்ட குழந்தைகளாஇ கவனித்தல், உணவு வழங்கல் இன்னும் பல..

  என்னால் ஒரு வாரம் அங்கே இருந்து பணி செய்ய இயலும்..

  ReplyDelete
 6. //Raghav said...
  நல்லதொரு பதிவு அண்ணா..
  எனக்குத் தோன்றிய சிறு யோசனை//

  ராகவ்!
  மொதல்ல காலைக் காட்டுப்பா!
  தலை அல்லால் கைம்மாறு இலனே! -//என்னால் ஒரு வாரம் அங்கே இருந்து பணி செய்ய இயலும்..// என்று சொன்னதுக்கு! இப்படிச் சொல்லவும் ஒரு மனசு வேணும், ஒரு தில் வேணும்!

  //1. மருத்துவக் குழு மட்டுமல்லாது.. இங்கிருந்து விருப்பமுள்ளவர்கள் இலங்கை சென்று அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுடன் இருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் புரியலாம்..//

  நல்ல யோசனை தான்! இன்று இரவு கிடைச்ச யோசனைகளை மட்டும் தொகுத்து ஸ்ரீ ஸ்ரீ-க்கு மின்னஞ்சல் தட்டுகிறேன்!

  ஆனா இந்த யோசனை உடனடியா நடக்காது-ன்னு தான் நினைக்கிறேன்! அம்புட்டு சீக்கிரம் இதுக்கெல்லாம் சிங்கள அரசாங்கம் ஒத்துக்குமா? மொதல்ல மருத்துவர்களை மட்டும் உள்ளே விடுறாங்களா-ன்னு பார்ப்போம்!

  உன்னையும் என்னையும் உள்ளே எப்படி விடுவதாம்? நீயோ நானோ ஒரு வேளை புலியா இருந்துட்டா? மறைவுக் காமிரா வச்சி ஃபோட்டோ புடிச்சிட்டா? அரசாங்கத்துக்கு-ன்னு ஒரு கர்மா வச்சிக்கிட்டு, அதுவும் "கர்ம யோகத்துல" ஸ்ட்ராங்கா நிக்குதுல்ல? :))

  ஸ்தாபனத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, பகவானை (புத்த பகவானை) விட்ட வினை தான் இத்தனையும்!

  இதெல்லாம் நாமளும் நம்ம மனசும் கற்க வேண்டிய பாடம்!
  தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
  என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ!

  ReplyDelete
 7. //அனானி ஐயா! agree-not agree பத்தி எல்லாம் கவலை இல்லை! உங்களுக்கு வேறு ஏதாச்சும் யோசனை தோன்றினால் சொல்லுங்களேன்!//

  புலிகள் சரணடைந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு + அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நிறுத்தம் என ராசபக்சேவை ஒப்புக்கொள்ள வைக்கலாம். பின்பு பிரபாகரனை இதற்கு ஒப்பவைக்கலாம். இதற்காக இந்திய தமிழர் பிரபாகரனை நோக்கி போராடவும் செய்யலாம்.

  ReplyDelete
 8. முதலில் புலிகள் சரண் அடைய வேண்டும். பிறகு பொது மன்னிப்பு கொடுக்கலாம் (புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும்)
  இந்த சாமியார் தான் பெங்களூரில் தமிழ் நாட்டிற்க்கு காவேரி தண்ணீர் கொடுக்க கூடாது என்று போராட்டம் செய்தவர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக பார்த்த கதை தான் இது.

  ReplyDelete
 9. //Anonymous said...
  புலிகள் சரணடைந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு + அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நிறுத்தம் என ராசபக்சேவை ஒப்புக்கொள்ள வைக்கலாம்//

  உம்.....இதைச் செய்ய பல ஆட்கள் முன் வருவார்கள்! ஐ.நா, மற்றும் வேறு சில அரசாங்கத் தூதர்கள் ராஜபக்ஷேவைப் போய் சந்திக்கவாச்சும் முடியும்!

  //பின்பு பிரபாகரனை இதற்கு ஒப்பவைக்கலாம். இதற்காக இந்திய தமிழர் பிரபாகரனை நோக்கி போராடவும் செய்யலாம்//

  திரு.பிரபாகரன் அவர்களை ஒப்ப வைக்க யார் முன் வருவார்கள்? அவர் நலம் விரும்பும் அரசியல் தலைவர்கள், அவருக்கு வேண்டுகோளாச்சும் விடுப்பார்களா?

  போகும் மக்களை போக விட்டுருப்பா-ன்னு இங்குள்ள தலைவர்களும் யாரும் சொன்னா மாதிரியே தெரியலை! :(

  எதிரிகளை அவரே பார்த்துக் கொள்வார்! நலம் விரும்பும் நல்ல நண்பர்கள் தான் அவருக்கு வாய்க்க வேண்டும்!
  இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
  கெடுப்பார் இலானும் கெடும்!

  ஆனால் இதெல்லாம் நடப்பது ஒரு கனவு போலத் தான்!
  ஈழம் கூட அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்! மொதல்ல அப்பாவி மக்கள் சண்டை நடக்கும் இடத்தில் இருந்து வெளியேறினால் போதும்-ன்னு ஆகிப் போச்சே! அடக் கடவுளே! :(

  ReplyDelete
 10. //C said...
  இந்த சாமியார் தான் பெங்களூரில் தமிழ் நாட்டிற்க்கு காவேரி தண்ணீர் கொடுக்க கூடாது என்று போராட்டம் செய்தவர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக பார்த்த கதை தான் இது//

  ஹிஹி!
  அது எப்படிங்க ஐயா, இப்படியெல்லாம் பேச முடியுது?
  அந்தச் சாமியாரு தண்ணி காட்டினாரா இல்லையா? நல்லவரா-கெட்டவரா என்பதை எல்லாம் ஒரு மாசம் கழிச்சி வச்சிக்குங்களேன்!

  இப்போ, தனியொரு மனுசனா போயி வந்திருக்காரு-ல்ல? அவரால் எதுனா சின்ன காரியமாச்சும் ஆக முடியுமோ, அதை மொதல்ல முடிச்சிக்க, யோசிங்க ஐயா! யோசிங்க!

  ஒருத்தர் ஒரு முயற்சியில் இறங்கினாலும், உடனே அவன் குலம் கோத்திரம்-ன்னு ஆதியோடு அந்தமாக வரலாறு பேசும் வழக்கம் என்னைக்குத் தான் தமிழ் இனத்தில் மறையுமோ? முருகா!

  இலங்கை அரசுக்கு ஜாதகம், ஜோசியம்-ன்னு நம்பிக்கை இருந்து தொலைச்சாலும் அதை வச்சியாவது, ஸ்ரீஸ்ரீ போன்றவர்கள் ஏதாச்சும் செய்ய முனையலாம்! மக்கள் வெளியேறும் வரை போரைத் தடுத்து நிறுத்தினாப் போதும்!

  அதுக்கு இது போன்ற கொல்லைப்புற வழிகள் கூட ஏதாச்சும் உதவியா இருந்தா, அதைக் கூட நாம தயங்காம ஏத்துக்கலாம்!

  //முதலில் புலிகள் சரண் அடைய வேண்டும்.//

  முதலில் மக்கள் வெளியேற வேண்டும்!

  சரண்-முரண்-சண்டை எல்லாம் அப்புறம் தான்!

  ReplyDelete
 11. நல்ல தேவையுள்ள பதிவு. ஆனால் இப்போதல்ல.

  ReplyDelete
 12. மதிபாலாவை அப்படியே வழிமொழிகிறேன்...

  //நல்ல தேவையுள்ள பதிவு. ஆனால் இப்போதல்ல.
  //

  ReplyDelete
 13. // மதிபாலா said...
  நல்ல தேவையுள்ள பதிவு. ஆனால் இப்போதல்ல//

  எப்போது?
  சீக்கிரமா? இல்லை லேட்டா? :)
  என்ன சொல்ல வரீங்க மதிபாலா?

  ReplyDelete
 14. //ஊர் சுற்றி said...
  மதிபாலாவை அப்படியே வழிமொழிகிறேன்..//

  :)
  நன்றி ஊர் சுற்றி!
  மதிபாலாவுக்கு கேட்ட கேள்வியை அப்படியே உங்களுக்கும் வழிமொழிகிறேன்!

  ReplyDelete
 15. :)

  - மலைநாடான்

  ReplyDelete
 16. //Anonymous said...
  :)

  - மலைநாடான்//

  வாங்க மலைநாடான் ஐயா! நலமா?
  இந்தச் சிரிப்பானுக்குப் பொருள் என்னவோ? அதுவும் அனானியா ஒரு சிரிப்பான்!

  ReplyDelete
 17. அவர் ஈழத்தில் நடைபெறும் கொடுமைகளை ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து தனி நிகழ்ச்சியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்தால் போதும். மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.

  அவருக்கு இருக்கும் செல்வாக்கு மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் இரண்டையும் ஈழம் நோக்கித் திருப்ப வேண்டும்.

  ஒரு ஈழத் தமிழன்

  ReplyDelete
 18. அவர் ஈழத்தில் நடைபெறும் கொடுமைகளை ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து தனி நிகழ்ச்சியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்தால் போதும். மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.

  அவருக்கு இருக்கும் செல்வாக்கு மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் இரண்டையும் ஈழம் நோக்கித் திருப்ப வேண்டும்.

  ஒரு ஈழத் தமிழன்

  ReplyDelete
 19. கண்ணா நலமா?
  வேறிடத்தில் நின்றதால் அனானிப் பிரவேசம்.

  98ல் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இலங்கையின் 50வது சுதந்திரக் கோண்டாட்டத்தை முன்னிட்டு புத்திஜீவிகள், முற்போக்காளர்கள் நடாத்திய ஒரு கருதரங்கில் மூவின மக்களும் கலந்திருந்தனர். அந்த மேடையில் சிங்களப் புத்திஜீவிகள் சிலர் து படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் தாராக்கியிடம் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசச் சொன்னார்களாம். அதற்குத் தாராக்கி 50 வருடச் சுதந்திர காலத்தில் புத்திஜீவிகள் எனச் சொல்லப்படுகின்ற உங்களுக்கு இங்குள்ள சிறுபான்மையினம் ஓடுக்கப்படுவது தெரியவில்லை என்பது உண்மையை மறைக்க முற்படும் செயல் என்பதாகும். ஆகவே அது குறித்து நான் பேசவில்லை என்று கூறி வெளியேறிவிட்டார்
  இந்த பதிவையும், பதிவுடன் தொடர்புடைய சிறி ரவிசங்கர் சுவாமிகளையும் நினைக்க அந்த விடயமே நினைவுக்கு வந்தது.
  நியாய அநியாயங்களுக்கப்பால் ஒரு அமைப்பின் மீதான தாக்குதல் எனக்கூறி ஒரு இன அழிப்புக்குத் துணையாக இருப்பதை இந்தியா வெளிப்படையாகவே செய்கிறது. அந்த அழிவைத் தடுக்கத் தகுதிப்பாடுடையவர்கள் உரிய நேரத்தில் அதைச் செய்யாதிருந்து விட்டு, இழவுவீட்டுக்கு இனிப்புக் கொண்டு வந்து, இந்தியா தவறிழைத்துவிட்டது எனப் பாவ மன்னிப்புக் கோருவதைப் பாசாங்கு என்பதா..? பண்பட்ட நடிப்பு என்னபதா..? அல்லது வாழுங்கலை மையத்தின் ஆன்மீக வர்த்தகமென்பதா..? நினைத்தேன் சிரித்தேன்.
  புத்தன் தேசம் மட்டும் புத்தனைக் கைவிட்டு நிற்கவில்லை. இந்திய தேசத்தின் அசோகச் சக்கரமும் தான் அர்த்தமற்றுப் போயிற்று. அவ்வளவுதான்...
  இப்படி எழுதக் கூடாதென்பதற்காகத்தான் சிரித்தேன்.

  ReplyDelete
 20. //Anonymous said...
  அவர் ஈழத்தில் நடைபெறும் கொடுமைகளை ஒரு தொலைக்காட்சியில் தொடர்ந்து தனி நிகழ்ச்சியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்தால் போதும். மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்//

  மக்கள் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் சிங்கள அரசு அவருக்குத் தீர்ப்பு வழங்கிரும்! :)

  குறைந்தபட்ச சாத்தியங்களைச் சொல்லுங்க ஐயா!
  உணர்ச்சிப் பூர்வமான முழங்கல்களை அரசியல்வாதிகள் செய்து கொள்ளட்டும்!

  //அவருக்கு இருக்கும் செல்வாக்கு மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் இரண்டையும் ஈழம் நோக்கித் திருப்ப வேண்டும்//

  இது சாத்தியமானது தான்! அமெரிக்க/ஐரோப்பியத் தலைவர்களை அவரும் சந்தித்து நெருக்குதல் கொடுக்கலாம்! பெளத்த மதத் தலைவர் தலாய்-லாமாவிடம் கலந்து பேசி ஒரு வாரம் போர் நிறுத்தமாச்சும் பெற்றுத் தரலாம்!

  (தலாய் லாமா சொன்னா, இலங்கை அரசு கேட்குமா என்பது வேறு விஷயம்)

  ReplyDelete
 21. //மலைநாடான் said...
  கண்ணா நலமா?
  //

  உம்...இருக்கேன்-யா! கை வெட்டுப்பட்ட ஈழக் குழந்தை ஒன்னை வீடியோவில் பார்த்ததில் இருந்து தான் கொஞ்சம் மனசே சரியில்லை! அதுக்கு ஒரு வயசு கூட இருக்காது! :(

  //உரிய நேரத்தில் அதைச் செய்யாதிருந்து விட்டு, இழவுவீட்டுக்கு இனிப்புக் கொண்டு வந்து, இந்தியா தவறிழைத்துவிட்டது எனப் பாவ மன்னிப்புக் கோருவதைப் பாசாங்கு என்பதா..? பண்பட்ட நடிப்பு என்னபதா..?//

  நீங்க கோவிச்சிக்கலை-ன்னா ஒன்னு சொல்லட்டுமா?
  அது பாசாங்காவோ இல்லை ஆன்மீக வர்த்தகமாவே கூட இருக்கட்டும்!
  ஆனால் அந்த வர்த்தகத்தால் இன்னும் சில ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்படுமானால், இப்போதைக்கு அது போதுமானது!

  இந்த வர்த்தகத்தின் பின்னுள்ள நோக்கத்தை ஆறு மாசம் கழிச்சி வெளிக் கொணர்ந்து கொள்ளலாம்! காலம் எங்கும் ஓடி விடாது!

  தமிழனின் இனமான உணர்ச்சியில், அவரவர் சுயநலம் கலந்து இன்னும் சிக்கலாக்கி விட்ட நிலையில், இவராவது "பேசிக்" கொண்டு இருக்காமல், "தந்தி அடித்துக்" கொண்டிருக்காமல், "நீ தான்டா காரணம், நான் தான்டா காரணம்" போன்ற சவடால்கள் இல்லாமல்...Trauma Care என்று அளவில் இறங்க முடிகிறதே! அது வரையாச்சும் சந்தோஷம்!

  இதுக்காக இவரை யாரும் போற்ற வேண்டாம்!
  வேலையை மட்டும் வாங்கிக் கொள்வோம்!

  //இப்படி எழுதக் கூடாதென்பதற்காகத்தான் சிரித்தேன்//

  நீங்க தாராளமாக எழுதலாம் ஐயா! உணர்ச்சிகளுக்கு வடிகால் தேவை தான்!

  ஆனால் லட்சக் கணக்கான உயிர்களுக்கே வடிகால் தேவைப்படும் போது...
  உயிர் முந்தி!
  உணர்ச்சி பிந்தி!

  ReplyDelete
 22. அதாச்சும்
  கப்பலில் போய்க் கொண்டிருக்கும் போது தவறிப் போய் கலைஞரின் பேரக் குழந்தை கடலுக்குள் விழுந்துட்டான்-ன்னு வச்சிப்போம்!

  அப்போ கையில் கிடைத்த கயிறை எடுத்து வீச மாட்டாங்களா?
  நீ கயிறு போடாதே, நீ அந்தக் கட்சிக்காரன்-ன்னு பேச வாய் வருமா?

  வேற கட்சிக்காரன் கிட்ட கூடுதல் நைலான் கயிறு இருந்தா கெஞ்சிக் காலில் விழுந்தாவது வாங்கி வீசுவாங்க-ல்ல? ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்லிக் கொண்டா இருப்பாங்க அந்தத் திகில் நேரத்தில்?

  அது போன்ற ஒரு "செயல் ரீதியான" உணர்வு, இங்கு வராமல் போனது தான் தமிழினத்தின் சாபம்!

  தூதரை அனுப்பி ஒன்னும் நடக்கலையா? இதைச் செய்து பாருங்களேன்! அதைச் செய்து பாருங்களேன்-ன்னு விதம் விதமா ஆலோசனையைக் கொட்டாமல், நீ லாயக்கு இல்ல, நான் லாயக்கு இல்ல, நீ அப்பவே இதைப் பண்ணி இருக்கணும் போன்ற "பேச்சுகள்" தான் அதிகம்!

  ஆனால் கண்ணெதிரே கடலுக்குள் பேரக் குழந்தை விழும் போது இப்படி நீ லாயக்கு இல்ல போன்ற பேச்சுகள் வருமா? கயிறு போதலையா? சீலை எல்லாத்தையும் ஒன்னா முடி போட்டு வீசுங்க-ன்னு விதம் விதமா ஆலோசனை பறக்கும்-ல?

  முருகா! தமிழ்ச் சாதியின் சாபக் கேடு இது தானோ?

  சொல்ல மறந்துட்டேனே! இது வரை சொன்ன சின்னச் சின்ன ஆலோசனைகளைத் தொகுத்து, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்!

  ReplyDelete
 23. ஐயா,

  இதுஎல்லாம் நடக்குமான்னு தெரியல, நடந்த தான் விடிவு கிடைக்கும்.

  சும்மா ஒவ்வொரு கட்சிகளும், ஒவ்வொரு இயக்கங்களும் தனித்தனியா போராடுரத விட்டுட்டு ஒட்டு மொத்த தமிழ்நாடே ஒன்ன போராடனும். ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல, காலவரையற்ற போராட்டம். எடுத்துக்காட்டா தமிழ்நாடு முழுக்க நாலு நாள் வேலை நிறுத்தம் என்ன ஆகும், இந்திய ஆடி போய்விடும் உலகமே திரும்பி பார்க்கும். அப்போ கண்டிப்பா விடை கிடைக்கும்.

  முடிந்தால் தமிழ் நாட்டில் இருக்கும் அனைவருக்கும் இந்த செய்தியை கொண்டு சேருங்கள்

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP