Friday, July 17, 2009

குமரனின் அப்பாவுக்கு அஞ்சலியும், ஆதி சங்கரர் அம்மாவும்!

ஆதி சங்கரர்! அவர் அன்னையின் ஒப்புதலுக்காக, எட்டு வயதில் ஒரு முதலை நாடகம் ஆடி, துறவறம் பூண்டார்! பூணும் முன்னர், தான் துறவியாகப் போய் விட்டாலும், அன்னையின் இறுதி நேரத்தில் தாமே வருவதாக வாக்களித்துச் செல்கிறார்! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறார்!

நாட்கள் நகர்ந்து, அத்வைத அரசாங்கம் நாடெங்கும் வளர்கிறது! சிருங்க-கிரி என்னும் சிருங்கேரியில் முதல் மடம் கண்டாகி விட்டது!
*ஞானப் பிழம்பாக ஞான யோகி,
* கர்மாக்களை மதிக்கும் கர்ம யோகி,
என்று சங்கரர் துவி (இரண்டு) யோகச் சக்கரவர்த்தியாக விளங்குகிறார்!

அப்படி இருந்தும்,
நஹி நஹி ரட்சதி டுக்ருண் கரணே = வெறுமனே மந்திரம் உருப் போடுதல் உன்னை ரட்சிக்காது!
பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்! கோவிந்தம் பஜ, மூட மதே! = மூட அறிவே, மூட ஞானமே! - கோவிந்தனைத் துதி! துதி! என்றே பக்தி மார்க்கமாகப் பாடுகிறார்!

கோதை இந்த "கோவிந்த" சப்தத்தை மூன்று முறை க்ளைமாக்ஸில் அடுத்தடுத்து வைக்கிறாள்!
* கூடாரை வெல்லும் சீர் "கோவிந்தா"
* குறை ஒன்றும் இல்லாத "கோவிந்தா"
* இற்றைப் பறை கொள்வாம் அன்று காண் "கோவிந்தா" - எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு!

கோ+விந்தன் = பசுக்களை உரிமை கொண்டாடிக் கொள்பவன்! காப்பவன்! நல்ல மேய்ப்பன்!
மேயும் உயிர்களைக் கூடவே இருந்து,
1. கொண்டு
2. காத்து
3. கொள்வதால்
இந்த கோவிந்த சப்தத்துக்கு மட்டும் மற்ற நாராயண சப்தங்களை விடத் தனிச் சிறப்பு! குறிப்பாக, "இறுதி" நேரங்களில் இந்தச் சப்தத்தை மென்மையாக எடுத்து ஓதுவார்கள்!
சிருங்கேரியில் இருக்கும் சங்கரருக்கு அன்று ஏனோ ஒரு உள்ளுணர்வு பொங்குகிறது! பகவான் காட்டிக் கொடுக்கிறான் காலடியை!

எப்பமே தன் காலடியைக் காட்டிக் கொடுக்கும் கோவிந்தன்,
இன்று அவர் காலடியைக் காட்டிக் கொடுக்கிறான்! அவர் ஊரான காலடியை!


அன்னையின் முடிவினை அறிந்து.....விரைகிறார் துறவி.....தவ யோகச் சீலர்!
அந்த பிரம்ம வேதாந்த மனசுக்கே மனம் பேதலித்துக் கொள்கிறது!
ஆற்றிலோ பெருக்கு அதிகம்! கடக்கவோ நேரம் ரொம்ப ஆகிறது!
விமானக் காலமா என்ன? நேரம் கடந்தே தாய்க்கு அருகில் வருகிறார்!

இதோ இன்னும் ஒரு சில நிமிடங்கள் தான்.....

தாய்க்கு வாக்களித்த படி "வெறுமனே" வர முடிந்ததே தவிர,
குறித்த காலத்தில் வந்து கோ தானம், மந்திர ஜபம் எல்லாம் செய்து வைக்க முடியவில்லை!
"மாத்ரு பஞ்சகம்" என்னும் உள்ளம் கரைக்கும் ஐந்தே பாடல்கள் பாடுகிறார் சங்கரர்!

1. தனன்யா தஸ்மை ஜனன்யை நமஹ!
= தனயன் சேவிக்கிறேன்! தாயே நமஹ! தந்தையும் ஆனாய் நமஹ!

2. காவி உடையில் என்னைக் கனவு கண்டு கலங்கிய அன்னையே! நமஹ!

3. நேரத்தில் வர முடியவில்லை! நீர்த் தானம், மந்திர ஜபம் முழங்க உனக்கு எதுவும் ஏற்பாடு செய்ய முடியவில்லை! என்னை மன்னிப்பாய் அன்னையே! நமஹ!

4. முத்தே என்று கொஞ்சிய உனக்கு வெத்து அரிசி ஈவேனோ? அன்னையே நமஹ!

5. பிரசவத்தில் அன்று நீ வலியால் கூவிய சொல்லை எல்லாம் இன்று நானும் கூவுகிறேன்! - அப்பா, கோவிந்தா, சிவா, முகுந்தா!
அஹோ ஜனன்யை! ரசிதோ யம் அஞ்சலீம்! அஞ்சலீம்!.....அன்னை கிளம்பி விட்டாள்!

தகப்பானாயும் இருந்து தனக்கு வழி காட்டினாளே! அவளுக்கு ஒரு வழி காட்ட சங்கரருக்குத் துடிக்கிறது!
சிவபெருமானைத் துதிக்கிறார்! - ஈசனே! நேசனே! நேயத்தே நின்ற நிமலா!

பூத கணங்கள் உடனே வருகின்றன!
ஆனால் பாம்புத் தோல் போர்த்தி வரும் கணங்களைக் கண்டு அன்னையோ நெளிகிறாள்! அஞ்சி நடுங்குகிறாள்!
சிவாய நம என்று சிந்தித்து இருப்பார்க்கு அபாயம் ஏது? என்று அந்தப் பேதைக்குத் தெரியவில்லை! பாவம்!

அவள் நிலையைப் புரிந்து கொள்கிறார் சங்கரர்!
அவளுடன் விவாதித்து அவள் ஆத்மாவுக்குத் தத்துவ உபதேசமாய் எதுவும் செய்யாமல்......உடனே விஷ்ணு புஜங்கம் பாடுகிறார்!

விசுத்தம் சிவம் சாந்தம் அத்யந்த ஹீனம்
பரம் பிரம்ம யம் வேத தஸ்மை நமோஸ்து!

- என்று சிவபெருமானும் அதே விஷ்ணு புஜங்கத்திலேயே வைத்துத் துதிக்கப் படுகிறார்! சிவ கணங்கள் கை கூப்புகின்றன! பெருமாளின் மெட்டும் சிவ தாண்டவ மெட்டாகவே இருக்கிறது!

முகே மந்த ஹாசம்! நகே சந்திர பாசம்!
கரே சங்கு சக்ரம்! சுரேசாதி வந்தியாம்!
புஜங்கே சயானாம்! பஜே பத்ம நாபம்!
நமஸ்தே! பிரபன்னார்த்தி! ஹரீம் நமஸ்தே!


அதோ!
அவரைப் போலவே தாங்களும் சங்கு சக்கரம் தாங்கிக் கொண்டு,
மந்தகாசம் பூத்து,
அவரின் சாரூப சேவகர்கள், ஜய விஜயர்களான தூதர்கள் வந்து நிற்கிறார்கள்!

அந்த மந்தகாசத்தைப் பார்த்து, இன்முகத்தைக் கண்டு, அன்னை இப்போது பயம் இல்லாமல் அவர்களுடன் செல்கிறாள்!

தான் வேண்டிய போது வந்த பூத கணங்களை வணங்கிச் சங்கரர் நன்றி தெரிவிக்கிறார்!
"எங்கு சென்றாலும் அந்தத் திருவடி நீழல் "ஓன்றில்" தானே இளைப்பாறுதல் இருக்கப் போகிறது" என்று கணங்களும் ஜயவிஜயர்களும் சிரித்த வண்ணம் செல்கின்றனர்!!

மாசில் வீணையும் மாலை மதியமும்
ஈசன் எந்தை இணையடி நீழலே!
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு!துறவி இறுதி காரியங்கள் செய்யக் கூடாது என்று சிலர் புத்தக நூல்களைக் காட்டி வாதாடுகிறார்கள்! ஆனால் சாஸ்திர வேதாந்த சங்கரர் அதைப் பொருட்படுத்தவில்லை!
வாக்களித்த வண்ணம் தாமே அனைத்தும் செய்கிறார்!
துறவும், காதலும், அன்பும் - எல்லாமே நிலைகள் தான்!
எதற்கும் எதுவும் தடையாக இருக்காது எம்பெருமானுடைய புத்தகத்திலே!


இன்று (17-July-2009),
நம் குமரனின் தந்தையார் - இறைத்திரு. நடராஜன் மல்லி சுந்தரராமன்
அவர்கள் மறைந்த பத்தாம் நாள்! அதற்கான தேறுதல் பதிவே இது! விவரப் பதிவு இங்கே!

நேற்று மதுரைக்குத் தொலைபேசும் போது, குமரனின் தம்பி, திரு. விஷ்வேஷ் அவர்களிடம் மட்டுமே பேச இயன்றது! அவரும் இந்தப் பத்தாம் நாள் தேறுதலை உறுதி செய்தார்! குமரன் சோர்வுடன் தூங்குவதாகவும் சொன்னார்!

நான் அண்ணா என்று அழைக்காவிட்டாலும், அடியேனின் மூத்தவரான, நம் ஆன்மீகச் செம்மல் குமரன்.....
* பத்தாம் நாள், தேறுதல் நாள் அன்று, மனம் தேறி,

* மேலும் பல நல்ல ஆக்கங்கள் நமக்குக் கொடுத்து,
* மகன் தந்தைக்காற்றும் உதவி...இவன் தந்தை எந்நோற்றான் கொல்? - எனும் சொல்! என்று யாவும் நல்லனவே நடக்க,
* அவர்கள் குல தெய்வம், திருப்பரங் குன்றத்து முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு அமைகிறேன்! நாராயண! நாராயண!


இந்தத் தேறுதல் நாளில் வழக்கமாக ஓதப்படும் தமிழ் வேதம் இதோ:

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கையெடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே.

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே.

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுகென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

21 comments:

 1. அடடா! இந்த விஷயம் எனக்கு தெரியாமல் பொய் விட்டதே. போன மாதம், பதிவர் தருமியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, விலாசம் சரியாகத் தெரிந்தால் உடல் நலம் இல்லாமல் இருக்கும் குமாரனின் தந்தையைப் பார்த்து வரலாம் என்று சொன்னதை, திரு குமரனிடம் மின்னஞ்சலில் தெரிவித்திருந்தேன். கொஞ்சம் பரவாயில்லை, இப்போது போய்ப் பார்க்க வேண்டாம் என்று பதிலும் சொல்லியிருந்தாரே. இறைவனது திருவுள்ளம் இப்படி இருந்திருக்கிறதா?

  குமாரனின் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதில், அடியேனும் சேர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 2. அஞ்ஜலியில் கலந்து கொள்கிறேன்.

  தேவ்

  ReplyDelete
 3. செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.
  அன்னாரின் அஞ்சலியில் சேர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 4. அஞ்சலியில் நானும் பங்கெடுக்கின்றேன், வருத்தங்களுடன்

  ReplyDelete
 5. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக ....

  ஆதி சங்கரரின் வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவத்தை தங்கள் விவரித்ததை படித்தபோது, அப்படியே A C திருலோகச்சந்தர் படத்தை பார்த்த பிரமிப்பு உண்டாகிறது :)

  ReplyDelete
 6. குமரனின் தந்தையின் ஆன்மா சாந்தி அடையவும், அவர் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனைகளுடன்...

  நன்றி கண்ணா.

  ReplyDelete
 7. இத்தனை நாட்கள் தெரியாமல் போய்விட்டதே!

  அண்ணாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 8. குமரனின் அப்பாவின் ஆத்மசாந்திக்கு நானும் வேண்டிக்கொள்கிறேன்
  வருத்தங்களுடன்
  ஷைலஜா

  ReplyDelete
 9. அடாடா! ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 10. பதிவுச்செம்மல் கண்ணபிரான் அவர்களால்தான் இப்படியெல்லாம் அஞ்சலி செய்ய வரும். கோவிந்தனை எத்தருணத்திலும் மறத்தலாகாது, குறிப்பாக இத்தருணத்தில் என்று சுட்டி, அக்கோவிந்த நாமமே நமது பற்றுக்கோல், அதுவே ஆறுதல், அது அணைப்பு, அதுவே அனைத்தும் என்று காட்டும் அழகு. நண்பர் குமரன் இறையருள் பெற்றவர். அவர் இத்துயரத்திலிருந்து மீண்டு, ஆறுதல் பெற்று நம்மிடும் மீளுவார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 11. // வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!//

  எல்லோருமே க்யூவில் நிற்கிறோம்.
  எப்ப யாருக்கு எங்க எப்படி டிக்கட் கிடைக்கும் என்பதையும்
  எப்படி ஒரு சென்டன்ஸிலே சொல்லியிருக்கிறது பாருங்கள் !!

  மறைந்தவருக்கு அஞ்சலி செலுத்தும் வரிசையில்
  நானும் உள்ளேன் ஐயா .  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 12. குமரனின் தந்தைக்கு என் அஞ்சலிகள் !!

  மிகவும் துயருரும் செய்தி. தந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்தார் மன நிம்மதி பெற என் பிரார்த்தனைகள்

  ReplyDelete
 13. குமரன் ஐயாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  இறைவா அவரின் தந்தையாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

  ReplyDelete
 14. எல்லோருமே க்யூவில் நிற்கிறோம்.
  எப்ப யாருக்கு எங்க எப்படி டிக்கட் கிடைக்கும் என்பதையும்
  எப்படி ஒரு சென்டன்ஸிலே சொல்லியிருக்கிறது பாருங்கள் !!

  இதையே நான் வேறு மதிரி கூறுவேன் 60 வயத் ஆகிவிட்டாலே பாஸ்பொர்ட் வந்தாச்சு இன்னும் விசா வரவில்லை என்ற நிலைதான். இருந்தாலும் பெற்றவர் பிரிவுக்கு வயது ஒரு ஆறுதல் இல்லை


  குமரன் இறையருள் பெற்றவர். அவர் இத்துயரத்திலிருந்து மீண்டு, ஆறுதல் பெற்று நம்மிடும் மீளுவார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 15. அஞ்சலி செலுத்திய அனைவர்க்கும் நன்றி!

  இப்போது தான் மதுரையில் இருக்கும் குமரனிடம் பேசினேன்!
  அனைத்தும் செவ்வனே நடந்து முடிந்து, திருப் பொடிக் குடத்தை (அஸ்தி கலசத்தை), திருவரங்கம் படிது துறை, கங்கையிற் புனிதமாய காவிரியில் கரைத்து,
  பத்தாம் நாள் தேறுதல் முடிந்து, சுப ஸ்வீகாரம் ஆயிற்று என்று கூறினார்!

  தேறுதல் சொன்ன அனைவர்க்கும் தன் நன்றியையும் சொன்னார்!

  ReplyDelete
 16. //எப்படி ஒரு சென்டன்ஸிலே சொல்லியிருக்கிறது பாருங்கள்//

  :)
  அதற்குப் பொருள் வேறு சூரி சார்!

  அதாச்சும்...
  அனைத்து மனிதர்களுமே பாரபட்சம் இன்றி வைகுந்தம் என்னும் அவன் திருவடி புகுவர்!
  இது மெய்யியல் விதி (Law/Theorem) என்பதையே மண்ணவர் விதி என்று குறிப்பிடுகிறார்!

  அதாச்சும்
  சரணாகதி செய்த பின்னர்
  "எல்லா" மனிதர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல், அனைத்து புண்ய பாவங்களைப் பொடியாக்கி,

  ஏற்கனவே மூட்டையில் உள்ள சஞ்சித கர்மாக்களையும் அழித்து,
  இனி வரப் போகிற ஆகாம்ய கர்மாக்களையும் அழித்து,

  * போய பிழையும்,
  * புகுதருவான் நின்றனவும்,
  தீயினில் தூசாகும்
  என்னும் படிக்கு

  பிராரப்த கர்மாக்களை மட்டும் இப்பிறவியிலேயே தீர்த்து,
  சரணம் என தனதாள் அடைந்தோர்க்கு எல்லாம்
  மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்

  மாம் ஏகம் சரணம் வ்ரஜ
  என்பது தான் அந்த
  "வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!"

  ReplyDelete
 17. // அதற்குப் பொருள் வேறு சூரி சார்! //

  அடியேனுக்கும் தெரியும் ஸார்.

  ஒரு லே மேன்ஸ் பார்லன்ஸ்லே வைகுந்தத்துக்குக் போறாள்னா
  மிச்சமிருக்கறவா மனசிலே என்ன ஒரு இமீடியட் ஸ்பான்டேனியஸ்
  ரெஸ்பான்ஸ் இருக்குமோ அல்லது இருக்கும் என நான் நினைக்கிறேனோ
  அதைத் தான் நான் பிரதிபலித்தேன்.

  நண்பர் திரு டி.ஆர்.ஸி யும் இதை வேறு விதமாக சொல்லியிருக்கிறார்கள்.

  நிற்க.
  நீங்கள் கோட் செய்திருக்கும் பாசுரத்தின் உட்பொருள் பிருஹத் ஆரண்யகத்திலும்
  இருக்கிறது. அது சொல்லப்போனால் ஒரு பன்டோராஸ் பாக்ஸ். ஒரு கன விவாதத்திற்கு
  பொருந்தும் டாபிக். அதை இங்கே செய்வது கான்ட்க்சுவல் இர்ரெலவன்ஸ் எனும்
  குற்றத்திற்கு ஆளாக நேரிடும். பிறிதொரு நேரம் இன்னொரு பதிவில் ( அது சம்பந்தமாக
  நீங்கள் எழுதாமல் இருக்கப்போவதில்லை) செய்யலாம். (அந்த வைகுந்த வாசி அனுக்ரஹம்
  இருந்தால் )

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 18. @சூரி சார்
  // அதற்குப் பொருள் வேறு சூரி சார்! //

  அடியேனுக்கும் தெரியும் ஸார்//

  ஹிஹி! உங்களுக்குத் தெரியும்-ன்னு அடியேனுக்குத் தெரியாதா? :)

  பெரியோர்கள் தங்கள் அவாவினால், "அறுபது வயது கடந்தவுடன் எதற்கும் தயார்"-ன்னு நீங்க பேசும் போது,
  அதை மறுத்து, இன்னும் தங்களை எல்லாம் பன்னாள் பல்லாண்டு வாழ்த்த, இப்படி மங்களகரமாத் திருப்பி விட்டுட்டேன்! :)

  பல்லாண்டும் பரமனைச் சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே!

  ReplyDelete
 19. நன்றி இரவிசங்கர். அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 20. //குமரன் (Kumaran) said...
  நன்றி இரவிசங்கர். அனைவருக்கும் நன்றி//

  Take care Kumaran!

  ReplyDelete
 21. மிகுந்த இடைவெளிக்குப்பின் ஆதி சங்கரர். படிக்க இதமான பதிவு.
  சங்கரரைப்பற்றி இன்னும் எழுதவும்.

  -விஜய்

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
* யாவையும் யாவரும் தானாய்,
* அவரவர் சமயம் தோறும்,
* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,
* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
* "பாவனை அதனைக் கூடில்,
* அவனையும் கூட லாமே
"!!!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP