குமரனின் அப்பாவுக்கு அஞ்சலியும், ஆதி சங்கரர் அம்மாவும்!

நாட்கள் நகர்ந்து, அத்வைத அரசாங்கம் நாடெங்கும் வளர்கிறது! சிருங்க-கிரி என்னும் சிருங்கேரியில் முதல் மடம் கண்டாகி விட்டது!
*ஞானப் பிழம்பாக ஞான யோகி,
* கர்மாக்களை மதிக்கும் கர்ம யோகி,
என்று சங்கரர் துவி (இரண்டு) யோகச் சக்கரவர்த்தியாக விளங்குகிறார்!
அப்படி இருந்தும்,
நஹி நஹி ரட்சதி டுக்ருண் கரணே = வெறுமனே மந்திரம் உருப் போடுதல் உன்னை ரட்சிக்காது!
பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்! கோவிந்தம் பஜ, மூட மதே! = மூட அறிவே, மூட ஞானமே! - கோவிந்தனைத் துதி! துதி! என்றே பக்தி மார்க்கமாகப் பாடுகிறார்!
கோதை இந்த "கோவிந்த" சப்தத்தை மூன்று முறை க்ளைமாக்ஸில் அடுத்தடுத்து வைக்கிறாள்!
* கூடாரை வெல்லும் சீர் "கோவிந்தா"
* குறை ஒன்றும் இல்லாத "கோவிந்தா"
* இற்றைப் பறை கொள்வாம் அன்று காண் "கோவிந்தா" - எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு!
கோ+விந்தன் = பசுக்களை உரிமை கொண்டாடிக் கொள்பவன்! காப்பவன்! நல்ல மேய்ப்பன்!
மேயும் உயிர்களைக் கூடவே இருந்து,
1. கொண்டு
2. காத்து
3. கொள்வதால்
இந்த கோவிந்த சப்தத்துக்கு மட்டும் மற்ற நாராயண சப்தங்களை விடத் தனிச் சிறப்பு! குறிப்பாக, "இறுதி" நேரங்களில் இந்தச் சப்தத்தை மென்மையாக எடுத்து ஓதுவார்கள்!

சிருங்கேரியில் இருக்கும் சங்கரருக்கு அன்று ஏனோ ஒரு உள்ளுணர்வு பொங்குகிறது! பகவான் காட்டிக் கொடுக்கிறான் காலடியை!
எப்பமே தன் காலடியைக் காட்டிக் கொடுக்கும் கோவிந்தன்,
இன்று அவர் காலடியைக் காட்டிக் கொடுக்கிறான்! அவர் ஊரான காலடியை!
அன்னையின் முடிவினை அறிந்து.....விரைகிறார் துறவி.....தவ யோகச் சீலர்!
அந்த பிரம்ம வேதாந்த மனசுக்கே மனம் பேதலித்துக் கொள்கிறது!
ஆற்றிலோ பெருக்கு அதிகம்! கடக்கவோ நேரம் ரொம்ப ஆகிறது!
விமானக் காலமா என்ன? நேரம் கடந்தே தாய்க்கு அருகில் வருகிறார்!
இதோ இன்னும் ஒரு சில நிமிடங்கள் தான்.....
தாய்க்கு வாக்களித்த படி "வெறுமனே" வர முடிந்ததே தவிர,
குறித்த காலத்தில் வந்து கோ தானம், மந்திர ஜபம் எல்லாம் செய்து வைக்க முடியவில்லை!
"மாத்ரு பஞ்சகம்" என்னும் உள்ளம் கரைக்கும் ஐந்தே பாடல்கள் பாடுகிறார் சங்கரர்!
1. தனன்யா தஸ்மை ஜனன்யை நமஹ!
= தனயன் சேவிக்கிறேன்! தாயே நமஹ! தந்தையும் ஆனாய் நமஹ!
2. காவி உடையில் என்னைக் கனவு கண்டு கலங்கிய அன்னையே! நமஹ!
3. நேரத்தில் வர முடியவில்லை! நீர்த் தானம், மந்திர ஜபம் முழங்க உனக்கு எதுவும் ஏற்பாடு செய்ய முடியவில்லை! என்னை மன்னிப்பாய் அன்னையே! நமஹ!
4. முத்தே என்று கொஞ்சிய உனக்கு வெத்து அரிசி ஈவேனோ? அன்னையே நமஹ!
5. பிரசவத்தில் அன்று நீ வலியால் கூவிய சொல்லை எல்லாம் இன்று நானும் கூவுகிறேன்! - அப்பா, கோவிந்தா, சிவா, முகுந்தா!
அஹோ ஜனன்யை! ரசிதோ யம் அஞ்சலீம்! அஞ்சலீம்!

.....அன்னை கிளம்பி விட்டாள்!
தகப்பானாயும் இருந்து தனக்கு வழி காட்டினாளே! அவளுக்கு ஒரு வழி காட்ட சங்கரருக்குத் துடிக்கிறது!
சிவபெருமானைத் துதிக்கிறார்! - ஈசனே! நேசனே! நேயத்தே நின்ற நிமலா!
பூத கணங்கள் உடனே வருகின்றன!
ஆனால் பாம்புத் தோல் போர்த்தி வரும் கணங்களைக் கண்டு அன்னையோ நெளிகிறாள்! அஞ்சி நடுங்குகிறாள்!
சிவாய நம என்று சிந்தித்து இருப்பார்க்கு அபாயம் ஏது? என்று அந்தப் பேதைக்குத் தெரியவில்லை! பாவம்!
அவள் நிலையைப் புரிந்து கொள்கிறார் சங்கரர்!
அவளுடன் விவாதித்து அவள் ஆத்மாவுக்குத் தத்துவ உபதேசமாய் எதுவும் செய்யாமல்......உடனே விஷ்ணு புஜங்கம் பாடுகிறார்!
விசுத்தம் சிவம் சாந்தம் அத்யந்த ஹீனம்
பரம் பிரம்ம யம் வேத தஸ்மை நமோஸ்து!
- என்று சிவபெருமானும் அதே விஷ்ணு புஜங்கத்திலேயே வைத்துத் துதிக்கப் படுகிறார்! சிவ கணங்கள் கை கூப்புகின்றன! பெருமாளின் மெட்டும் சிவ தாண்டவ மெட்டாகவே இருக்கிறது!
முகே மந்த ஹாசம்! நகே சந்திர பாசம்!
கரே சங்கு சக்ரம்! சுரேசாதி வந்தியாம்!
புஜங்கே சயானாம்! பஜே பத்ம நாபம்!
நமஸ்தே! பிரபன்னார்த்தி! ஹரீம் நமஸ்தே!
அதோ!
அவரைப் போலவே தாங்களும் சங்கு சக்கரம் தாங்கிக் கொண்டு,
மந்தகாசம் பூத்து,
அவரின் சாரூப சேவகர்கள், ஜய விஜயர்களான தூதர்கள் வந்து நிற்கிறார்கள்!
அந்த மந்தகாசத்தைப் பார்த்து, இன்முகத்தைக் கண்டு, அன்னை இப்போது பயம் இல்லாமல் அவர்களுடன் செல்கிறாள்!
தான் வேண்டிய போது வந்த பூத கணங்களை வணங்கிச் சங்கரர் நன்றி தெரிவிக்கிறார்!
"எங்கு சென்றாலும் அந்தத் திருவடி நீழல் "ஓன்றில்" தானே இளைப்பாறுதல் இருக்கப் போகிறது" என்று கணங்களும் ஜயவிஜயர்களும் சிரித்த வண்ணம் செல்கின்றனர்!!
மாசில் வீணையும் மாலை மதியமும்
ஈசன் எந்தை இணையடி நீழலே!
உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு!

துறவி இறுதி காரியங்கள் செய்யக் கூடாது என்று சிலர் புத்தக நூல்களைக் காட்டி வாதாடுகிறார்கள்! ஆனால் சாஸ்திர வேதாந்த சங்கரர் அதைப் பொருட்படுத்தவில்லை!
வாக்களித்த வண்ணம் தாமே அனைத்தும் செய்கிறார்!
துறவும், காதலும், அன்பும் - எல்லாமே நிலைகள் தான்!
எதற்கும் எதுவும் தடையாக இருக்காது எம்பெருமானுடைய புத்தகத்திலே!
இன்று (17-July-2009),
நம் குமரனின் தந்தையார் - இறைத்திரு. நடராஜன் மல்லி சுந்தரராமன்
அவர்கள் மறைந்த பத்தாம் நாள்! அதற்கான தேறுதல் பதிவே இது! விவரப் பதிவு இங்கே!
நேற்று மதுரைக்குத் தொலைபேசும் போது, குமரனின் தம்பி, திரு. விஷ்வேஷ் அவர்களிடம் மட்டுமே பேச இயன்றது! அவரும் இந்தப் பத்தாம் நாள் தேறுதலை உறுதி செய்தார்! குமரன் சோர்வுடன் தூங்குவதாகவும் சொன்னார்!
நான் அண்ணா என்று அழைக்காவிட்டாலும், அடியேனின் மூத்தவரான, நம் ஆன்மீகச் செம்மல் குமரன்.....
* பத்தாம் நாள், தேறுதல் நாள் அன்று, மனம் தேறி,
* மேலும் பல நல்ல ஆக்கங்கள் நமக்குக் கொடுத்து,
* மகன் தந்தைக்காற்றும் உதவி...இவன் தந்தை எந்நோற்றான் கொல்? - எனும் சொல்! என்று யாவும் நல்லனவே நடக்க,
* அவர்கள் குல தெய்வம், திருப்பரங் குன்றத்து முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு அமைகிறேன்! நாராயண! நாராயண!
இந்தத் தேறுதல் நாளில் வழக்கமாக ஓதப்படும் தமிழ் வேதம் இதோ:
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கையெடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே.
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேதநல் வாயவர் வேள்வியுள் மடுத்தே.
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுகென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!







