Tuesday, February 07, 2012

தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு!

(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan.orgஅதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா? என்று ஆசிரியர் திரு. Patrick Harrigan கேட்க...அதற்கான பதிவு இது!

Murugan.org -இல் இன்று பதிப்பித்து உள்ளார்கள்! அதன் சுட்டி இதோ)


அன்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள்! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை!

தைப்பூசம்-ன்னா என்ன?
* பழனிப் பாதயாத்திரை
* மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
* வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
* திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!!
...இப்படி பல விழாக்கள்!
என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி...
அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் ஏந்திய நாளே = தைப்பூசம்! -ன்னு "புராணம்" சொல்லும்

ஆனா, இட்டுக் கட்டிய புராணமா இல்லாம, இயற்கைத் தமிழாக...
 "வேல்" என்றால் என்ன? -ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!

வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது-ன்னு இந்த ஆய்வுக் கட்டுரையில் சிறிது காண்போம்!


1. வேல் - பெயர்க்காரணம்:

வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
வெல் = வேல்!
’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
ஆகவே, வேல் = வெற்றி!

2. வேல் - தமிழ்த் தொன்மம்:

ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!

வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு!
திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது! பின்னாளில் தான் உருவமும், ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்!
ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்! இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது!
வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(

பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!
* பழமுதிர்சோலை, திருச்செங்கோடு,
* ஈழத்தில் செல்வர் சந்நிதி,
* மலேசியாவில் பத்துமலை,
* பல கிராம ஆலயங்கள் எல்லாம் வேல் வழிபாடு தான்!

3. வேலின் அமைப்பு:

வேல் எப்படி இருக்கும்?
அட, இதைச் சொல்லணுமா என்ன? வேலைப் பார்க்காத தமிழரும் உளரோ?
ஆனா, வேலின் அமைப்பு பற்றி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?

பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!
எஃகு ஒரு கலப்பு உலோகம்!
இரும்பு + கரிமம் (Carbon) குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி!

மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்!

ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க,
வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்!
"கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்"-ன்னு ஆண்டாள் பாடுவதையும் நோக்கவும்!

ஆலயத்தில் அழகுக்காகச் சார்த்தப்படும் தங்க வேல், வெள்ளி வேல், திருச்செந்தூர் வைரவேல் - இதெல்லாம் போர்க் கருவி அமைப்பில் வாரா!
தமிழ்த் திருமகனாம், முருகன் திருக்கை வேல் = எஃகு வேலே!



4. வேலின் தோற்றம்!

வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்
சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை - (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)
எறிந்தால், காற்றைக் கிழித்து வேகமாகச் செல்லக்கூடிய லேசான பளுவில் தான் வேல் செய்யப்படும்!
* வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடு அற்று (hollow) ஆக இருக்கும்!
* வேலின் முகமோ,  பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

வேல் எறிந்தால், திரும்பித் தானாக வராது! அதெல்லாம் சினிமாவில் தான்!:))
ஆழி (எ) சக்கரம், திரும்பி வரும்!
ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தவரான Aborigines பயன்படுத்திய Boomerang போலே!
சங்கத் தமிழில், முல்லை நிலக் காட்டுக் குடிகளின் ஆழி பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்!

5. வேலும் ஈட்டியும் ஒன்றா?

வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!
வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!
கான முயல் எய்த அம்பினில் - யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது 
என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு= அம்பு, யானைக்கு= வேல்!

6. வேலின் சிறப்புப் பெயர்கள்:
கூர் வேல், நெடு வேல்
சுடர் வேல், கொற்ற வேல்
வீர வேல், வெற்றி வேல்...
-ன்னு வேலுக்குத் தான் எத்தனை எத்தனை அடைமொழிகள்!

வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை

- இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா!

வேல் வழிபாடு:

சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது?
வேலன் வெறியாட்டு, வெறி அயர்தல்-ன்னு சொல்லுவாய்ங்க!
இதில்...."வேல்" ஒரு முக்கியமான பூசைப் பொருள்!

வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
பந்தல் இட்டு, பூ பல பெய்து
பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி
-ன்னு அலங்கரித்து (அணி செய்து), வேலை மையமாக நட்டு வழிபடுதல் வழக்கம்!

பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
முருகு என மொழியும் ஆயின்
கெழுதகை கொல்? இவள் அணங்கி யோற்கே
(ஐங்குறுநூறு, கபிலர்)

* அதாச்சும் தலைவியின் காதல் நோய் இன்னதென்று அறியாத தாய், தலைவியின் மேல் ஏதோ பித்து/சூர் இறங்கி விட்டதாக நினைத்து,
அதைப் போக்க முருகனுக்கு எடுக்கும் பூசை! இதை ஒரு ஆண் (வேலன்) நிகழ்த்துவான்!

* (அல்லது) தலைவியே, தன் காதலனைச் சேர முடியாது, அவன் ஒதுக்கியதால் அவனையே எண்ணியெண்ணி
அன்பு மிகுந்து போய், முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!

இதை ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!

* ஆண் ஆடும் போது = பூசை/குறி! கிடா வெட்டிப் பலி குடுத்து, அதன் குருதியை, அரிசியொடு கலந்து தூவுதல்
* பேதுற்ற பெண் ஆடும் போது = காதல் வலி! வெறியில் முருகனையே திட்டிப் பூக்களைத் தூவுவாள்!

தொல்காப்பியரும் இதற்கு ஒரு துறை ஒதுக்கி உள்ளார்! முருகனுக்கு உரிய காந்தள் பூச்சூடி ஆடுவது!
வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்)

காதல் வலி மிகுந்து போய் பெண்கள் ஆடிய வேலன் வெறியாட்டு, மிகவும் மனத்தை வலிக்க வைப்பவை!
ஒரு அழகிய மயில் (மஞ்ஞை), வெறி புடிச்சி ஆடினா எப்படி இருக்கும்? ஆடி ஆடியே, அழுது அழுது, உள்ளமும் உடலும் தேய்ந்து போனாள்!

கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல் 
அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள் 
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கு
சூர் மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே - (குறுந்தொகை 105, நக்கீரர்)

ஒரு கட்டத்தில், காதல் வலியால், முருகனையே "மடையா"-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைக் காணலாம்!

வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே! - (நற்றிணை 34)

"காதலன், என்னைத் திடீரென்று ஒதுக்கும் போக்கிலே துடிச்சிப் போய் நானே நொந்து போய் வாழுறேன்!
இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா!
உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தை?

நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை!
மடவை முருகா (மடப்பயலே முருகா)...
நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!!"
-ன்னு...இவள்....முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி....

இதை நினைக்கும் போதெல்லாம் என்னையும் அறியாமல், கண்ணில் தண்ணி தளும்பி நிக்கும்!


அவன் வேடத்தில் அவள்!

முருகன் வேடத்தில், வேலொடு வள்ளி!

இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், "வேலை" முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது என்று அறிந்தோம்!
இன்றும், தமிழ்க் குடியினர்/கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!

சிலப்பதிகாரத்தில் வேல்:
பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வேலைப் பற்றிச் சிறிதளவே சொல்லுவாரு; அதை ஈடுகட்டவோ என்னவோ....
சிலம்பில், இளங்கோவடிகள், வேலின் பெருமையை மிக விரிவாக, குன்றக் குரவையில் விவரிப்பார்!

வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!
சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்!
-ன்னு முருக பக்தரான நக்கீரரே, இரண்டு அடிகள் மட்டுமே பாட...

இரண்டே அடிகளா? இளங்கோ அடிகளா?
- என்று வேல் விருத்தத்தை, அன்றே பாடினார் சமணச் செல்வரான இளங்கோ! இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், 
ஏரகமும், நீங்கா இறைவன் கை "வேல்" அன்றே!
-ன்னு தொடங்கும் இளங்கோ, வரிசையாக, "வேல் வேல்"-ன்னு ஒரு வேல் விருத்தத்தை, நம்ம அருணகிரிக்கும் முன்பே பாடிவிட்டுச் செல்கிறார்!

சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே!
....
இணை இன்றி, தான் உடையான் - ஏந்திய வேல் அன்றே!
திரு முலைப் பால் உண்டான் - திருக் கை வேல் அன்றே!

-ன்னு சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, ’பாட்டு மடை’யாகப் பெருகி வரும்!

வேல் பற்றிய பக்தி-இலக்கிய நூல்கள்:

பின்னாளில், வேல் பற்றிய பல பக்தி-இலக்கிய நூல்கள் வந்துள்ளன!
* இதற்கு முக்கிய காரணம் = அருணகிரி!
தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி செய்த முயற்சிகள் சொல்லில் அடங்கா!

ஆலயங்களில், வடமொழி அதிகம் புழங்கத் துவங்கி விட்ட காலத்தில், வடமொழியைப் பகைத்துக் கொள்ள விரும்பாது,
அதனொடு கூடவே சென்று, சிறுகச் சிறுகத் தமிழை நுழைக்க, அவர் செய்த முயற்சிகள் பலப்பல!

இதற்கு, அவருக்கு முக்கிய ஊக்க சக்தி = இன்னொரு தமிழ்த் தெய்வமான திருமாலின் ஆலயங்களில், சில நூற்றாண்டுக்கு முன்பு தான், தமிழ் பரவலாகத் தழைக்கத் தொடங்கியிருந்த புரட்சியைக் கண்டார்!

வேதங்களுக்கு நிகராக ஆழ்வார் அருளிச் செயல் கருவறைகளில் ஓதுதல்!உற்சவங்களில் வேதங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆழ்வார்களின் தமிழை முன்னே ஓதிச் செல்ல....
இறைவனே தமிழின் பின்னால் வரும் காட்சிகளைக் கண்ட அருணகிரி, அதிலே மனம் பறிகொடுத்து,

திருமால் "வண்டமிழ் பயில்வார் பின்னே திரிகின்றவன்"-ன்னு பாடினார்!
இதே நிலை முருகன் ஆலயங்களிலும் வர வேண்டி, அவர் செய்த ஆரம்ப வேலைகள் பலப்பல!

அதில் ஒன்று தான், வேல் வழிபாடு!
* வேல் வகுப்பு
* வேல் விருத்தம்
= இவை வேல் வழிபாட்டை முன்னிறுத்த அருணகிரியார் செய்த பனுவல்கள்!
தனித்து வழி நடக்கும் என 
திடத்தும் ஒரு வலத்தும் இரு 
புறத்தும் அருகு அடுத்து இரவு
பகல் துணை அதாகும் 


திருத்தணியில் உதித்தருளும் 
ஒருத்தன்மலை விருத்தன் என 
உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே !!
(- வேல் வகுப்பு, அருணகிரிநாதர்)

அந்த வழியில் பின்னர் பாம்பன் சுவாமிகளும், வள்ளிமலை சுவாமிகளும், "வேல் மாறல்", "வேற் பதிகம்" போன்ற பனுவல்களை, வேலின் மீது செய்துள்ளனர்!

பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்!
பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!
வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!-அங்கோர் 
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது, வேலவா!!


சிக்கல் சிங்காரவேலன் வேல் வாங்கும் காட்சி:

"புராணப்படி" முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!
அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று கிளப்பிச் சொல்வாரும் உளர்!

முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்!
எந்தத் திருமுழுக்கும் (அபிஷேகம்) இல்லாமலேயே, ஒத்தி எடுக்கும் துணிகள், ஈரமாய் நனைவதைக் காணலாம் என்று கிளப்பிக் கூறுவர்!:)

முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

வேலுக்கு = உடம்பிடித் தெய்வம்-ன்னே பேரு!
= உடன் பிடித் தெய்வம்!
முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு! பார்த்து இருக்கீங்களா?

இன்னிக்கு பார்த்தீங்கன்னா....பல படைவீடுகளிலும் முருகன், தன் கையில் வேல் ஏந்தியே இருக்க மாட்டான்!
அவன் தோளிலே தனியாக, சார்த்தியே வைத்திருப்பார்கள்!

ஏனோ, அதைப் பார்க்கும் போதெல்லாம்....நானே அவன் தோளில் சாய்ந்து கொள்வது போல ஒரு உணர்வு எனக்கு!
என்னவனைப் போலவே, உயரமும் - நெடிதும் - அழகும் - அறிவுமான = வேல்!
தழுவ இனியது வேல்!
அவனைத் தழுவும் போது அவன் நழுவினால்.. போடா-ன்னு..
அவன் அந்தரங்க வேலைத் தழுவிக் கொள்வதில், இன்னும் சுகம்!:)

வேல் வேறு, முருகன் வேறல்ல!
வேலே = முருகன்! முருகனே = வேல்!
முந்து முந்து.....முருகவேள் என்னுள் முருகவேலாய் முந்து!!

வெஞ்சமரில் அஞ்சேல் என "வேல்" தோன்றும்...
முருகா என்று ஓதுவார் முன்!

உசாத் துணை (References):

1. தமிழ் இலக்கிய வரலாறு - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
2. முருகன் (அ) அழகு - திரு.வி.க
3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை (கழக வெளியீடு)
4. சிலப்பதிகாரம் - நாவலர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்
5. வேல் விருத்தம், வேல் வகுப்பு - அருணகிரிநாதர் (kaumaram.com) & Reforms of Arunagiri - Pongi Publications, Vallimalai
6. Tamil Traditions on Murugan - Dr.Kamil Zvelebil

31 comments:

  1. அருமை ! அருமை! பல செய்திகளை உள்ளடக்கிய சிறந்த கட்டுரை.

    தைப்பூச திருநாள் வாழ்த்துக்கள்

    அன்புடன்

    ReplyDelete
  2. சிறந்த ஆய்வுக்கட்டுரை இரவி! நல்ல தொகுப்பு! அருமையாக இருக்கிறது!

    ReplyDelete
  3. முழுதும் படித்தேன்
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

    ReplyDelete
  4. அருமை ! அருமை ! நானும் என் மனைவியும் தைபூசத்தின் significance பற்றி பேசி கொண்டிருந்தோம். உங்கள் விளக்கம் எங்கள் ஐயங்களை எல்லாம் போக்கிவிட்டது.

    ReplyDelete
  5. நல்லது! சிவ சிவ!
    மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
    கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
    நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
    தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

    ReplyDelete
  6. அருமையான ஆராய்ச்சி கட்டுரை- அரோகரா அரோகரா.
    எங்க ராகவன காணோம்? பதிவு எழுதறத விட்டுட்டாரா?

    சில ஐயங்கள்.
    1. முருகனுக்கு எங்கு வேல் கிடைத்தது. ஆதாரம், வேல் கிடைத்தது தான் தைப்பூசம் என்பதற்கு ஆதாரம்.
    2. திருச்செங்கோட்டில் வேலும் சேவலும் உள்ளது தான் சிறப்பு என்று நினைத்திருந்தேன். முருகனுக்கு உருவம் இல்லை என கேள்விப்பட்டதில்லை (அதாவது வேல் தான் உருவம் என்று) ஆதாரம்.
    3. பல கோயில்களில் முருகன் கையில் வேல் ஏந்தாமல் தோளில் சார்த்தி இருக்க காரணம்.

    உங்கள் பதில்களை விக்கியில் போட அனுமதி வேண்டும். எங்க கோயிலில் ஏன் வேல் வாங்கி நடறாங்க என்பது இப்ப புரியுது. வேல் கொடுப்பது பெரிய வேண்டுதல்.

    ReplyDelete
  7. வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
    வெல் = வேல்!
    ’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
    ஆகவே, வேல் = வெற்றி!

    well said!


    நல்ல இடுகை உழைப்பில் சிந்திய வரிகள்! கந்தன் அருள் கே ஆர் எஸ்ஸுக்கு இதற்காகவே கிட்டிவிடும்!

    ReplyDelete
  8. அகஸ்தியருக்காக இடுமப்ன் காவடி சுமந்து பழனியில் போரிட்டு மடிந்து காவடி வந்த கதையை விட்டு விட்டது ஏனோ?

    ReplyDelete
  9. வேல் பற்றி பல விபரங்கள் தெரிந்து கொண்டேன்!

    ReplyDelete
  10. @அனைவருக்கும் நன்றி

    @குறும்பன் - நலமா?

    //எங்க ராகவன காணோம்? பதிவு எழுதறத விட்டுட்டாரா//
    :)) நலமாக இருக்கான்!

    //உங்கள் பதில்களை விக்கியில் போட அனுமதி வேண்டும்//
    Okies! Panthal is free for all:)

    என்ன, ஒரே ஆதாரம் (தரவு) எல்லாம் கேட்டுப் பயமுறுத்துறீக?:)
    தரவு-ன்னாலே எனக்குப் பயம்!:)

    ReplyDelete
  11. @குறும்பன்
    //1. முருகனுக்கு எங்கு வேல் கிடைத்தது. ஆதாரம், வேல் கிடைத்தது தான் தைப்பூசம் என்பதற்கு ஆதாரம்//

    * வேல் கிடைத்த இடமாகப் புராணங்கள் சொல்பவை = வடக்கே கயிலை மலை!
    தமிழில் எழுதப்பட்ட கச்சியப்பரின் பின்னாளைய கந்த புராணமும் இதையே சொல்கிறது!

    "கயிலை யங்கிரி ஏகிய கந்தவேள்
    அயலின் மேவர ஆயிடை வைகினான்"
    - கந்த புராணம், உற்பத்திக் காண்டம்

    வேல் வாங்கிய நாள் தைப்பூசம்-ன்னும் புராணங்கள் தான் சொல்கின்றன!

    ஆயதற் பின்னர் ஏவில்மூ தண்டத் தைம்பெரும் பூசமும் அடுவ,
    நாயக மாவ தொருதனிச் சுடர்வேல் நல்கியே மதலை கைக் கொடுத்தான்
    ------

    பொதுவா ஓவியங்களில் உமையன்னை வேல் குடுப்பதாக இருக்கும்!
    ஆனா, கந்த புராணத்தின் படி, ஈசனே வேல் வழங்குகிறார்!

    என்ன-ன்னா, வேல்=சக்திவேல்! அது அன்னையின் அருள்கொடை!
    வேலுடன், இன்னும் 11 ஆயுதங்கள் (ஏகாதச உருத்திரர்கள்) அப்பனின் அருட்கொடை!

    அன்னையின் வேல் + அப்பனின் 11 ஆயுதங்களை, குமரன் கையில் குடுப்பது என்னவோ ஈசன்!
    ----

    இது புராணக் கதை மட்டுமே!
    சங்கத் தமிழ்ப் பண்பாட்டில், இந்தக் கதைகள் கிடையாது!
    வேல் என்பது சிறப்பான ஆயுதம்! அதைச் சிறப்பான குறிஞ்சிக் கடவுளுக்கு பண்பாட்டுச் சின்னமாக நட்டு வைத்தார்கள்! அவ்வளவே!

    ReplyDelete
  12. //2. திருச்செங்கோட்டில் வேலும் சேவலும் உள்ளது தான் சிறப்பு என்று நினைத்திருந்தேன்//

    செங்கோட்டில் அர்த்த நாரீஸ்வரர் எல்லாம் பின்னாளில்!
    சங்க காலத்தில் அங்கு முருகனே முதல் தெய்வம்! "சீர்கெழு செந்திலும் செங்கோடும்" என்பது சிலப்பதிகாரம்!

    திருக்கொடிமாடச் செங்குன்றூர் - செங்கோட்டு வேலவர் என்று உருவம் பெற்றிருந்தாலும், வேல் வழிபாடே ஆதி!

    //முருகனுக்கு உருவம் இல்லை என கேள்விப்பட்டதில்லை (அதாவது வேல் தான் உருவம் என்று) ஆதாரம்//

    சங்க கால முருகன்/திருமால் = தமிழ்க் கடவுள்கள்! இயற்கைக் கடவுள்கள்!
    * காட்டின் கருமை/பசுமை (அடர்த்தி) = திருமால்
    * மலை உச்சியின் சிவப்பு (அழகு) = முருகன்!

    மாயோன் மேவிய காடுறை,
    சேயோன் மேவிய மைவரை
    - என்பது தொல்காப்பியம்!

    முருகனுக்கு முதலில் உருவம் குடுக்கப்படவில்லை! குறிஞ்சி நிலப் பெண்களின் மேல் இறங்கும் இறை-ஆவியாகவே கருதி, வேலன் வெறியாடல் முதலியன நிகழ்த்தப்பட்டன!

    நடுகல்/ கந்து/ வேல் முதலிய இயற்கை வழிபாடு, படிப்படியாக வளர்ந்து, உருவம் பெற்றது!
    மேலும் வாசிக்க:
    * யார் தமிழ்க் கடவுள்? - http://madhavipanthal.blogspot.com/2008/03/blog-post_17.html
    * தமிழ்க் கடவுள் - சங்க இலக்கிய ஆதாரங்கள் http://madhavipanthal.blogspot.com/p/tamizhkadavul.html

    ReplyDelete
  13. //3. பல கோயில்களில் முருகன் கையில் வேல் ஏந்தாமல் தோளில் சார்த்தி இருக்க காரணம்//

    ஈழத்தில் போர் முடித்து, திருச்செந்தூர் திரும்பி, ஈசனை வழிபடும் போது, அப்போது அமரர்கள் அங்கு வந்து நன்றி சொல்ல...
    பாதிப் பூசையில் முகம் திருப்பிச் சிரிக்கும் திருக்கோலம்!
    சிவபூசை/அர்ச்சனைக்குரிய பூவும் அவன் கையில் இருக்கும்!
    = இதுவே நாம் இன்று காணும் திருச்செந்தூர்க் கருவறை உருவம்!

    * செந்தூரில் சிவபூசைக்குரிய கோலமாக இருப்பதால் = கையில் பூ
    * பழனியில், ஆண்டிக் கோலமாக இருப்பதால் = கையில் கோல்
    * சாமி மலையில், ஞான உபதேசக் கோலமாக இருப்பதால் = கையில் யோக தண்டம்

    மற்ற ஆலயங்களிலும் அருள் குடுக்கும் கோலமாக இருப்பதால் = வேலைக் கையில் ஏந்துவது போல் சிலை செய்வதில்லை! அதான் தோளில் தனியாகச் சார்த்தி வைக்கப்படுகிறது!

    மலேசியப் பத்துமலை (மலையின் கீழே), தமிழகத்தில் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே கையில் வேல் பிடித்தபடி காணலாம்!

    பெரும்பாலும் முருகன் கருவறைச் சிலைகளில், வேல் ஏந்தாதபடியே இருக்கும்!
    சில இடங்களில் பின் கையில் மட்டும் சக்தி & பாசம் ஏந்தியபடி இருக்கும்!

    திருமால் சிலைகள், சங்கு சக்கரம் ஏந்தியபடியே இருக்கும்!
    முருகன் சிலைகளில், வேல் ஏந்துவதில்லை!

    ReplyDelete
  14. //பெரும்பாலும் முருகன் கருவறைச் சிலைகளில், வேல் ஏந்தாதபடியே இருக்கும்!
    சில இடங்களில் பின் கையில் மட்டும் சக்தி & பாசம் ஏந்தியபடி இருக்கும்!//

    i never realized this. :)

    ReplyDelete
  15. நன்றி KRS. சில நூல்களில் இருந்து கொடுத்து சொன்னால் நம்பகத்தன்மை அதிகரிக்கும் (விக்கியில்) ஐயமிருப்பவர்கள் ஆதாரத்தை கண்டு தெளிவடையலாம் அல்லவா அதான் ஆதாரம் கேட்டேன். எங்கிருந்து இத்தகவலை புடிச்சாறு என்று நான் எண்ணியது போல் எண்ணும் மற்றவர்களுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  16. இரவி, முருகன் (சிலை) திருக்கையில் ஏந்தியபடி இருக்கும் சக்தியாயுதம் தான் சக்திவேல் (வேலின் சிறுவடிவம்) என்று நினைந்திருந்தேன். தவறா?

    ReplyDelete
  17. @குமரன்
    உறுதியாத் தெரியல குமரன்! ஆனா சக்தி என்னும் ஆயுதம் தான் வேல்-ன்னா, எதுக்கு ஒரே ஆயுதமான வேலை இரண்டு ஆயுதமா முருகன் கிட்ட வைக்கிறாங்க-ன்னு ஒரு கேள்வி எழும்!

    எனக்குத் தெரிந்த வரை...சக்தி, சூலம், வச்சிரம், குலிசம்-ன்னு 11 ஆயுதங்கள் ஈசன் குடுப்பது! கச்சியப்பரும் சக்தி(திறல்)-ன்னு ஆயுதங்களாச் சொல்லுறாரு!

    வேல் - நீண்ட ஒன்று! சக்தி - மிகவும் குறுகல்! வேல் குறுகலா எனக்குத் தெரிஞ்சி இல்ல!
    சக்தி என்று பேர் இருப்பதால், அதுவும் உமையன்னை கொடுத்த 'சக்தி'வேலோ?-ன்னு சிலருக்கு ஐயம் வந்திருக்கலாம்! மத்தபடி சக்தி=வேல் என்று உறுதியாச் சொல்ல தரவுகள் இல்லை!
    --------

    செந்தூர் மூலவரை, சிலைக்குப் பழுதாகி விட்டது-ன்னு அறுபதாண்டுக்கு முன்னே மாற்றினார்கள்!
    அப்போது காஞ்சி மட அறிவுரையின் படி, செந்தூர் முருகனுக்கு, சக்தி எனும் ஆயுதம், புதிய சிலையின் பின் கையில் வைக்கப்பட்டது! பழமுதிர் சோலையும் அப்படியே! முதலில் உருவமில்லை!

    ReplyDelete
  18. KRS pallandu pallandu pallayirathandu palakodi noorayiram aandu valga valamudan.


    Sakthivel

    ReplyDelete
  19. ஆஹா...வெற்றி வேலனின் வேலுக்குப் பின்னால் இத்தனை செய்திகளா?? வேலினை,அதன் அமைப்பினை எண்ணிப் பார்க்கிறேன்... வேலைக் கையில் ஏந்தி நிற்கும் காட்சியை எண்ணிப் பார்க்கும் போதே, அடடாஆஆ... என்ன கம்பீரம்.என்ன அழகு..... அதைப் போல ஒரு ஆயுதம் வேறு எதுவும் தலைவனின் கையில் இருக்கத் தகுதி வாய்ந்ததன்று..

    அன்னை பராசக்தியின் ஒட்டுமொத்த ஆதி சக்தியின் வடிவமே வேல்... அதை, அந்த ஆதி பராசக்தியின் உலகம் இயங்கும் சக்தியை வேலாக வாங்க, வெம்மையைத் தாங்க, அதன் மூலம் தீமையை அழிக்க வேலவனின் திருக்கரமன்று வேறு ஏது??

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகப்பெரிய முருக பக்தர்... ஒவ்வொரு கந்தசஷ்டியின் போதும் திருச்செந்தூரில் "சக்தி வேல்" என்ற தலைப்பின் கீழ் உரையாற்றுவார்... (அந்த உரையாடலின் முழுமையான வடிவம் இன்று வரை நமக்குக் கிடைக்கவில்லை. அதில் வேல்,வேலின் வழிபாடு என ஏகப்பட்ட தகவல்கள் ஒழிந்துள்ளன)...

    அந்த உரையாடலின் போது அவர் குறிப்பிட்டது," வெற்றிவேலனின் கையில் இருக்கும் வேல் ஜப்பானில் அமெரிக்கா போட்ட அணுகுண்டுகளை விட கோடி மடங்கு சக்தி வாய்ந்தது" என்று குறிப்பிட்டார்..

    அடுத்த நாள் தினத்தந்தி இந்தப் பேச்சை எடுத்துக்கொண்டு பின்வருமாறு செய்தி வெளியிட்டது."ஜப்பானில் அணுகுண்டு விபத்துக்குக் காரணம் முருகனின் வேல்-தேவர் பேச்சு" என்று முதிர்ச்சியற்ற செய்தியை வெளியிட்டது...

    மேலும், தேவர் அவர்கள் ப்ரத்யேகமான ஒரு முருகன் படத்தைத் தன் பூஜையறையில் வைத்து வழிபட்டு வந்தார்.. எப்போதும்,சாதாரணமாக அனைவரும் வணங்கும் முருகனின் படத்திற்கு வேல் முருகனின் தலைக்கு மேல் உயரமாக இருக்காது.. ஆனால், அவர் வணங்கிய படத்தில் வேலவன் தலைக்கு மேல் நீண்ட வேலோடு,அதைக் கையில் கொண்டு(மார்பில் தாங்கி அல்ல) இருப்பான்.... அந்தப் படம் எங்காவது கிடைத்தால் நான் பகிர்ந்து கொள்கிறேன்..

    இன்னும் வெட்டருவா,வேல் கம்பு என்று தான் கிராம தெய்வங்களை லட்சணம் கூறுகிறோம்... இதில் வேல் கம்பு என்பது மரக்குச்சியின் முனையில் எஃகினால் ஆன வேல் சொருகப்பட்டிருக்கும்... வேல் கம்பை விட, முழுதும் எஃகினால் செய்யப்பட்ட வேலைக் கையாளுவதில் இருக்கிறது சாமர்த்தியம்..

    நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றி வேலனின் அடையாளத்தை நன்றாக எடுத்தியம்பியதில் மனம் மகிழ்ந்து டெல்லியிலிருந்து கே.ஆர்.எஸ் அவர்களுக்கு என்னுடைய மனங்கனிந்த நன்றிகள்...

    ReplyDelete
  20. வேலை பிடித்தவனின் காலை தொழுபவர்கள் நாங்கள்-ன்னு முன்னர் ஜீ.ரா. எழுதிய ஒரு தொடர் ஞாபகத்திற்க்கு வந்தது.

    நானும் தொழுதுகொள்கிறேன் வேலையும், அதை பற்றியவனின் தாளையும்.

    ||
    o___

    ReplyDelete
  21. KRS

    Human Sperm (Side view) கூட பார்ப்பதற்கு வேல் போன்று உள்ளது(http://en.wikipedia.org/wiki/Sperm).வேலில் ஏதோ அறிவியல் உண்மையும் இருப்பது போல தெரிகிறது.ஈஸ்வரனின் நேத்ரத்தில் இருந்து தோன்றிய சேய்பரமன் ஆண்மையின் சின்னமா? போர்களின் போது முருகனை வழிபட்டுதான் செல்வார்களாம் (கட்டபொம்மன் உட்பட ).சொல்ல தெரியவில்லை.தெளிவுபடுத்தலாம். முருகா சரணம்!

    நாகராஜன்.

    ReplyDelete
  22. சத்ரு சமஹாரவேல் பதிகம் எதிரியை தவிடுபொடியாக்கும் . அனுபவத்தில் உணர்ந்தது இது. வேலைப்பற்றிய சிறந்த முழுவிவரங்களும் அடங்கிய கட்டுரை. நன்றி. தங்கள் தளத்திற்கு எனக்கு கிடைத்த விருதை பகிர்ந்திருக்கிறேன். ஏற்றுக்கொள்ள அழைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  23. http://kadambavanakuyil.blogspot.in/2012/02/blog-post.html என்னுடைய விருது அறிவிப்பு பதிவின் லிங்

    ReplyDelete
  24. அருமையான ஆராய்ச்சி கட்டுரை

    ReplyDelete
  25. வேலின் சிறப்பு: ஆழம் ,அகலம் , கூர்மை

    ReplyDelete
  26. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
    வீரவேல் முருகனுக்கு அரோகரா!
    ஞானவேல் முருகனுக்கு அரோகரா!

    ReplyDelete
  27. சிறந்த தளம் தோழரே உங்கள் முயற்சி மேலும் பலருக்கு சென்றடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. மிகுந்த முயற்சி எடுத்து எழுதிய பதிவு போல் தோன்றுகிறது;நிதானமாக வந்து படிக்கிறேன்..

    உங்கள் பதிவில்-பதிவுக்குள் தேடும் வசதியை ஏற்படுத்தவும்..எனது பதிவில் பார்த்தால் தெரியும்..

    உங்களது சில குறிப்பிட்ட பதிவுகளைத் தேட வசதியாக இருக்கும்...

    ReplyDelete
  29. Thanks for writing this blog, You may also like the Murugan vel

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP