Thursday, December 28, 2006

ரங்கா - அடியேன் உனக்கு அடியேன்! - 2

இதற்கு முந்தைய பதிவு இங்கே!

அகார உகார மகாரங்களின் சேர்க்கை "ஓம்"காரம். ஆங்காரம் அழிய ஒங்காரம் வேண்டும்! நண்பர் ஜிரா ஓங்காரம் பற்றி ஒரு நல்ல பதிவிட்டிருந்தார். அது அடியேனைப் போன்ற ஆன்மீக ஞானமில்லாத் தற்குறிகளுக்குப் புரியுமா?
அடியேனுக்குத் தெரிந்த ஓங்காரம் எல்லாம், பானைக்குள் இருந்து வரும் ஓங்கார சப்தம் தான்! என்னது, பானைக்குள் ஓங்காரமா? ஆம், ஆழ்வார் பாசுரக் காட்சி!


om-pots-krishna

குட்டிக் கண்ணன், வெண்ணெய் முழுதும் உண்டு விட்டு, காலி வெங்கலப் பானையை நடுக்கூடத்தில் வைத்துத் தட்டுகிறான்!
தோம் தோம் தோம் என்ற சப்தம் போய்,
ஓம் ஓம் ஓம் என்ற பிரணவ சப்தம் ஒலிக்கிறது!
பிரணவ மந்திரம் = அ+உ+ம்.
அதன் நடு நாயகமான உகாரம் = காத்தல் தொழில் அல்லவா?
காக்கும் கடவுள் பரந்தாமன், கண்ணன் தானே?
தெய்வக் குழந்தை ஓங்கார ஒலி கேட்டு, உகார சப்தத்தில் உவக்கின்றது!




நேற்று அரங்கத்தில் பிள்ளைப் பெருமாள் ஐயா, அரங்கனிடம் என்ன கேட்டார்? "பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தாயே" என்று கேட்டார்!
அதற்குப் பதில் ஆயர்ப்பாடியில் தான் உள்ளது. கண்ணனின் ஊரான ஆயர்ப்பாடிக்குப் போகலாம் வாருங்கள். ஆயர்ப்பாடிக்குப் போகணும்னா "விசா" வேண்டுமே! என்ன விசா? கோபியர்களைப் போல் குழந்தை மனம் வேண்டும். அது தான் அந்த விசா!

ஆயர்ப்பாடியில் அன்று சிறுவர்க்கு எல்லாம் ஒரே கும்மாளம்; கண்ணன் லாவகமாக வெண்ணெய் திருடி எல்லா நண்பர்களுக்கும் வாரி வாரிக் கொடுக்கிறான்.
ஒரு கோபிகையின் வீட்டில் நுழைகிறது மழலைப் பட்டாளம். கருப்புப் பானையில் மடக்கு போட்டு வெண்ணையை மூடி வைத்துள்ளார்கள்.
கையை விட்டான் கண்ணன்; வந்து விட்டாள் அந்தக் கோபிகை!
ஓடி விட்டனர் எல்லாரும். நம் கண்ணனும் ஓடியே போய் இரு பெரும் பானைகளுக்கு நடுவில் ஒளிந்து கொண்டான்.

புறங்கையில் வெண்ணெய் ஒட்டிக் கொண்டுள்ளதே! அதை நக்கினான். உடனே, அங்கிருந்த மணி ஒன்று டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு என்று தானே அடிக்கிறது!
*அடேய் மணி! என்னைக் காட்டிக் கொடுக்கிறாயா என்று கேட்டது குழந்தை! - "இல்லை சுவாமி, அடியேன்!" என்கிறது அந்த மணி!

கண்ணன் மீண்டும் உண்ண, மணியோ மீண்டும் அடிக்கிறது!
*அடப்பாவி, "அடியேன்" என்று சொல்லிவிட்டு அடிக்கிறாயே!
சுவாமி நான் சொன்ன அடியேன் வேறு!
"மணியாகிய அடியேன்" என்று தான் சொன்னேனே தவிர "அடிக்க மாட்டேன்" என்று சொல்லவில்லையே! :-)
நீங்கள் உண்பது நிவேதனம் அல்லவா? அப்போது மணி ஒலிப்பது தானே என் கடமை! - ஹூஹூம், இது வேலைக்கு ஆகாது என்று தெரிந்து குழந்தை எழுந்து ஓடுகிறான்!




கோபிகை இதைப் பார்த்து விட்டாள்! அடே கண்ணா என்று துரத்திக் கொண்டே ஓடுகிறாள்! பின்னால் யசோதையும் வந்து விட்டாள்!
குழந்தை ஓடியே போய் ததிபாண்டன் என்றவன் வீட்டுக்குள் ஒளிகிறது!
ததிபாண்டன் இடையரில் கடையன்! தயிர்க் கடையன்.
படிப்பறிவு எல்லாம் கிடையாது! மிகவும் எளியன்! ஆனால் அன்பே உருவானவன்; அடிக்கக் கூட மாட்டான், மாட்டை!


dhathi-pandan

அவன் வீட்டிலோ எல்லாக் குடங்களிலும் தயிர் நிரம்பி வழிகிறது!
ஓரமாய் ஒரு காலிப் பானை தென்பட, குழந்தை அதற்குள் குதித்து ஒளிந்து கொள்கிறது! இதைத் ததிபாண்டன் பார்த்து விட்டான்!
பானை மேல் ஒரு மூங்கில் தட்டு போட்டு மூடி, அதன் மேல் சாய்ந்து கொண்டான்.

யசோதை: ததிபாண்டா, அந்தத் திருட்டுக் கண்ணன் இங்கே ஓடி வந்தானே! பாத்தியா? அவன் இன்று என்னிடம் அடி வாங்காமல் தப்பவே முடியாது, பார்க்கலாம்!
பாண்டன்: யசோதாம்மா, கண்ணனை நான் பாத்தே மாசக் கணக்குல ஆகுதே! இங்கு வர மாட்டேனே! என்னிடம் ஏற்கனவே ஒரு முறை பிடிபட்டான்; அதிலிருந்தே எனக்கும் அவனுக்கும் ஆகாது! - கூசாமல் பொய் சொன்னான்!

எல்லாரும் போய் விட்டார்கள்; ஆனால் பாண்டன் எழுந்திருக்கவே இல்லை!
* அடே பாண்டா, விலகு! எனக்கு மூச்சு முட்டுது என்று குழந்தை பானையில் இருந்து குத்துகிறது!
கண்ணா, உனக்குப் பானையில் இருந்து விடுதலை வேணும்னா, எனக்கும் நீ விடுதலை கொடுக்க வேணும்! மோட்சம் என்ற விடுதலை கொடுக்க வேணும்!

* என்னது மோட்சமா? மோட்சம் என்றால் உனக்கு என்னன்னு தெரியுமா?
எல்லாம் தெரியும்! கோவிலில் அந்த நாமக்காரப் பூசாரி சொல்வாரே! சாமி கூடவே இருக்கலாம் என்று! அது தானே எனக்கும் வேணும்!
சும்மா கேள்வி எல்லாம் கேட்காதே கண்ணா! பிறவி என்கிற பானையிலிருந்து எனக்கு மோட்சம் வேண்டும்; உன்னால் கொடுக்க முடியுமா? முடியாதா??


paanai-moksham

* ததி பாண்டா, சற்று முன்னர் கூசாது பொய் சொன்ன உனக்கா மோட்சம்?
உனக்கு மட்டும் என்ன? இந்தப் பானைக்கும் சேர்த்தே கொடுப்பேன் மோட்சம்!

கண்ணன் பானைக்குள் இருந்து எழுகிறான்!
அவன் வாக்கை மெய்யாக்க, வைகுந்த விமானம் வருகிறது; பாண்டனையும், பானையும் சேர்த்தே ஏற்றிக் கொள்கிறது! ஆச்சாரியர்கள் தங்கள் வியாக்யானத்தில், "வைகுந்தம் சென்றால், இப்போதும் அந்தப் பானையைக் காணலாம்", என்று சுவைபட உரைப்பார்கள்!




இந்த நிகழ்ச்சியைத் தான் பிள்ளைப் பெருமாள் ஐயா சொல்கிறார்.
"பொய் சொன்னவனுக்குத் தானே நீ அன்று மோட்சம் கொடுத்தாய்?" என்று உரிமையாக, கோபத்துடன் கேட்டார்!
பெருசா என்னைப் பாத்து, பக்தி செய்தாயா, சரணாகதி செய்தாயா என்று எல்லாம் கேள்வி கேட்டாயே ரங்கா! அந்தப் பாண்டனோ இல்லை பானையோ பக்தி பண்ணியதா? கர்ம யோகம் செய்ததா?

சரணாகதின்னா என்னன்னு அதுக்கு மட்டும் தெரியுமா? உன்னை வணங்க அதற்குக் கைகள் தான் உண்டா? அதற்குத் தரவில்லை நீ மோட்சம்? அடியேன் ஒரு பானை விலை கூடவா பெற மாட்டேன்?

அரங்கன் அசந்து போய் விட்டான்! பின்னே இப்படி கிடுக்கிப்பிடி போட்டால்!
* பிள்ளையே! மோட்சத்தை விட ருசியான ஒன்றை உமக்குத் தருகிறேன்.
அது தான் தமிழ்ச்சுவை!
அதை உண்ணத் தான் நானே, இங்கே துயில் கொண்டு இருக்கிறேன்!
நீவிர், பராசர பட்டரின் சீடராய் இருந்து, அட்டப் பிரபந்தம்-(கலம்பகம், மாலை, அந்தாதி, ஊசல்) என்னும் அரும் பெரும் தமிழ் நூல் செய்து, பின்னர் எம்மை வந்து அடைவீராக என்று அருளினான்.


624%20SRGM%20VIMANA

பிள்ளை மகிழ்ந்து விட்டார்; ஆனாலும் விடவில்லை!
ரங்கா என் கேள்விக்கு இன்னும் நீ பதில் சொல்லவே இல்லையே!
மெத்தப் படித்த தசரதன், தர்ம நியாயங்கள் எல்லாம் பேசி, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிரையே விட்டானே! அவனுக்கு வெறும் சொர்க்கம் தானே கிட்டியது!
படிப்பு வாசமே இல்லாத பாண்டன்! கூசாது சொன்ன பொய்க்கு பேசாது அருளினாயே மோட்சம்! அது ஏன்?

* பிள்ளைப் பெருமாள் ஐயாவே! தசரதன் என்றில்லை; பீஷ்மர், துரோணருக்கும் இப்படித் தான் கிட்டியது! தெரியுமா?
இன்றோடு பகல் பத்து முடிகிறது!
நாளை மோட்ச ஏகாதசி என்று போற்றப்படும் வைகுந்த ஏகாதசி அல்லவா? மேலும் கீதை பிறந்த நாளாயிற்றே!
அன்று உன் சந்தேகம் தீர்க்கிறேன்! இராப்பத்தில் இயம்புகிறேன்! சரியா?
சரி, சரி நீர் பேசினது போதும்! எனக்கு அலங்காரம் ஆகட்டும்!
அடியவர் கண்ணுக்கு எல்லாம் நான் அழகாகத் தெரிய வேண்டும் அல்லவா?

36 comments:

  1. அருமை! அருமை!!!

    இந்த கதை இதுவரை அறியாத ஒன்று!!!

    பதிவிற்கு மிக்க நன்றி KRS...

    ReplyDelete
  2. "கதை முடிந்து கத்தரி காய்த்ததோ?"
    கதி+அரி என்பது கத்தரி ஆயிற்றாம்.
    கதி = வழி,முத்தி,வைகுந்தம்
    அரியிருக்கும் இடத்துக்கு வழி கிட்டியதோ? என்பதாம்.

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரியும் மிக ஆழமாக இருக்கிறது இரவிசங்கர். அருமை. மிக நன்றாக சொல்லிக் கொண்டு போகிறீர்கள். ததிபாண்டனின் பெயரைக் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நான் அறியாத கதை இது. ததிபாண்டன் என்றால் தயிர்குடத்தான். அவன் தான் மட்டுமில்லாமல் தன் தயிர் குடத்திற்கும் முக்தி பெற்றுத் தந்துவிட்டானே. :-)

    அடியேன் என்று சொல்லி பின்னர் அடித்த மணியின் நகைச்சுவையை இரசித்தேன். பின்னர் நிவேதனம் ஆகும் போது மணியடிக்கவேண்டியதைச் சொன்னதையும் இரசித்தேன். :-)

    ஆயர்பாடி போக என்னிடம் விசா இல்லை. அதனால் உங்கள் பதிவிற்கு வந்தேன். இங்கே வர விசா தேவையில்லை போலிருக்கிறதே. :-)

    நல்ல ஐயம் தான் பிள்ளை பெருமாள் ஐயங்காருக்கு. பெருமாள் தான் பதில் சொல்லாமல் நாளைக்குச் சொல்கிறேன் என்று இழுத்தடிக்கிறார். அதனாலென்ன? தினமும் எனக்குத் தரிசனம் தர அவருக்கும் விருப்பம் என்று தெரிகிறது.

    ReplyDelete
  4. ததி பாண்டன் கதையை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்....உங்கள் கற்பனையும் ஆருமை.

    நன்றி ரவி...

    ReplyDelete
  5. என்னதான் கேட்ட கதை என்றாலும், சொல்பவர் சொன்னால், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாமே!

    அதிலும், நம் ரவி சொன்னால்,... மோட்சம் நிச்சயம்!

    பாவம் குமரன்! இன்னமும் நம் ரவியை சரியாகப் புரிந்து கொள்ள வில்லை!

    நாளைக்கும் இது போல ஒரு தொக்கு வைத்து 5 நாட்கள் வரை இவ்வின்பம் தொடரப் போகிறதுஎன்பதை அறியவில்லை!
    :))

    ReplyDelete
  6. மிக அழகான வருணனை!

    நம்மாழ்வார் பரத்துவம், வைராக்கியம் என்று பேச ஆரம்பித்து 10, 10தாக தர ஆரம்பித்தவுடன், கேட்கின்ற மக்கள், 'அம்மாடி! நமக்கு எங்கே இந்த பரத்துவம் புரியப்போவது? நமக்கு என்று வைக்கிராயம் வரப் போகுது!' என்று சொல்லிக் கிளம்ப ஆரம்பித்தனர்.

    உடனே காரிமாறன், 'பத்துடை அடியவர்க்கு எளியவன்' என்று கண்ணன் கதை சொல்ல ஆரம்பித்தார். கிளம்பிய சனம் அப்படியே உட்கார்ந்துவிட்டதாம்.

    அந்த நீர்மை, எளிமை...அது தானே எல்லோரையும் கிறங்க அடிக்கிறது!

    வாழ்க.

    ReplyDelete
  7. ததிபாண்டாவின் கதை அருமை!

    அதுபோலவே என்னிடம் ஒரு குட்டிகதை இருக்கிறது!

    அனுப்பிவைக்கிறேன் - அதை நீங்களே வலையேற்றுங்கள்

    SP.VR.சுப்பையா

    ReplyDelete
  8. @ரவி.கதை சொல்வது அதை எல்லாரையும் ஆவலுடன் கேட்கவைப்பது என்பது உங்களுக்கு கை வந்த கலை.தினமும் வந்துபார்க்கத்த்தூண்டும் பதிவுகள்,பதுகாக்கபடவேண்டியபதிவுகள்.

    ReplyDelete
  9. மதிமயங்கிப் போனேனே மாலனே இன்று
    ததிபாண்டன் மோட்சம் தெரிந்து.

    ReplyDelete
  10. iam loving this!!!
    Rock on!! :)

    ReplyDelete
  11. sri KRS,

    y'sterday posted one.
    result of vidukathai(Motcham) is not only for dadipandavan&his OMKARA Kudam but also to ur MP followers also.is it not?

    is there any english literal- translation on Thiruppavai in blog pl

    sundaram

    ReplyDelete
  12. ஓங்காரம் பற்றி முன்னர் இட்ட ஒரு இடுகை. விருப்பமிருப்பின் காணலாம்.
    http://njaanamuththukkal.blogspot.com/2006/04/47.html

    ReplyDelete
  13. பிறவிப் பிணி தீர்க்கும் கதைகள்..


    அடியேன் என்று சொன்ன மணி அடித்த கதையை படித்துள்ளேன்...
    தாங்கள் இவ்விடம் சொன்ன விதம் மிக அருமை..

    குழந்தை கண்ணனின் படங்களை மிகவும் ரசித்தேன்...

    இராப்பத்து பகல்பத்து என்றால் என்னவென்று நானறியேன்...

    படித்தறிய தங்கள் பக்கங்களை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்.

    நன்றிகள் பல.

    ReplyDelete
  14. //வெட்டிப்பயல் said...
    அருமை! அருமை!!!
    இந்த கதை இதுவரை அறியாத ஒன்று!!!//

    நன்றி பாலாஜி!

    ReplyDelete
  15. //ஞானவெட்டியான் said...
    "கதை முடிந்து கத்தரி காய்த்ததோ?"
    கதி+அரி என்பது கத்தரி ஆயிற்றாம்.

    கதி = வழி,முத்தி,வைகுந்தம்
    அரி = பெருமாள்//

    சிலேடை அருமை ஞானம் ஐயா!
    கதி அரி எங்கும் காய்க்கட்டும்!
    கனியட்டும்!!

    கதை இன்னும் முடியவில்லை :-)

    ReplyDelete
  16. // குமரன் (Kumaran) said...
    ஒவ்வொரு வரியும் மிக ஆழமாக இருக்கிறது இரவிசங்கர். அருமை. மிக நன்றாக சொல்லிக் கொண்டு போகிறீர்கள். //

    நன்றி குமரன்.
    அன்பர்கள் ஊக்கம், அரங்கன் அருள்!

    //அடியேன் என்று சொல்லி பின்னர் அடித்த மணியின் நகைச்சுவையை இரசித்தேன்.//

    உங்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும்! ஜிராவுக்கும் பிடிக்கும்! ஆனா ஆளைக் காணோமே!
    பட விமர்சனம் எங்காச்சும் போயிருக்காரா? :-)

    ReplyDelete
  17. //குமரன் (Kumaran) said...
    அதனால் உங்கள் பதிவிற்கு வந்தேன். இங்கே வர விசா தேவையில்லை போலிருக்கிறதே. :-)//

    அடியேன் பதிவுக்கு விசாவா?
    விசா தேவையே இல்லை!
    சாவி தான் தேவை!

    அரங்கன் அருளை மனதிற் பூட்டித் திறக்கும் சின்ன சாவியே போதும்!:-)

    //பெருமாள் தான் பதில் சொல்லாமல் நாளைக்குச் சொல்கிறேன் என்று இழுத்தடிக்கிறார்.//

    உண்மை! உண்மை!
    அது தான் கை வந்த கலையாச்சே அவருக்கு! SK ஐயாவும் அதே தானே சொல்கிறார்! :-)

    ReplyDelete
  18. //Mathuraiampathi said...
    ததி பாண்டன் கதையை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்....உங்கள் கற்பனையும் ஆருமை//

    நன்றி மெளலி சார்.
    இது முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் செய்யும் உபன்யாசத்தில் வரும் ஒரு சிறு காட்சி.

    அடியேன் கொஞ்சம் விளையாட்டைச் சேர்த்து பதிவில் வார்த்தேன் அவ்வளவே!

    ReplyDelete
  19. //SK said...
    என்னதான் கேட்ட கதை என்றாலும், சொல்பவர் சொன்னால், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாமே!
    அதிலும், நம் ரவி சொன்னால்,... மோட்சம் நிச்சயம்!//

    SK ஐயா, தங்கள் அன்புக்கு நன்றி.
    கதை முன்பே கேட்டுள்ளீர்களா?

    //பாவம் குமரன்! இன்னமும் நம் ரவியை சரியாகப் புரிந்து கொள்ள வில்லை!//

    :-)))
    உங்களுக்குக் குறும்பு அதிகம் ஐயா!
    கோவியார் சொன்னது 10000% சரி!
    இன்னொரு No Publish பின்னூட்டத்தில் தமிழ் அன்பரைக் குறும்பு செய்தீர்!

    தங்கள் ஆலோசனைப் படி "அதைப் பண்ணியா" என்ற சொல்லை மாற்றி விட்டேன்!

    //நாளைக்கும் இது போல ஒரு தொக்கு வைத்து 5 நாட்கள் வரை இவ்வின்பம் தொடரப் போகிறதுஎன்பதை அறியவில்லை!//

    நீங்களே முற்றும் உணர்ந்தவர்! :-)

    ReplyDelete
  20. //நா.கண்ணன் said...
    மிக அழகான வருணனை!//

    நன்றி கண்ணன் சார்.

    //உடனே காரிமாறன், 'பத்துடை அடியவர்க்கு எளியவன்' என்று கண்ணன் கதை சொல்ல ஆரம்பித்தார். கிளம்பிய சனம் அப்படியே உட்கார்ந்துவிட்டதாம்.//

    ஹி ஹி
    கண்ணன் என்றால் கட்டிப் போடுபவன் போலும்! அவனைப் போய்க் கட்டப் பார்த்தாளே யசோதை, பாவம்! :-)

    ReplyDelete
  21. //SP.VR.சுப்பையா said...
    ததிபாண்டாவின் கதை அருமை!//

    நன்றி வாத்தியார் ஐயா.

    //அதுபோலவே என்னிடம் ஒரு குட்டிகதை இருக்கிறது!
    அனுப்பிவைக்கிறேன் - அதை நீங்களே வலையேற்றுங்கள்//

    அழகாகச் செய்யலாம் சுப்பையா சார். கூட்டாகவே செய்யலாம்; அனுப்பி வையுங்கள்!

    ReplyDelete
  22. மீதிக்கதைக்கு நன்றி! அது சரி, தமிழ்மணம் பட்டையைத் திருடியது யார்? :-)

    ReplyDelete
  23. //தி. ரா. ச.(T.R.C.) said...
    @ரவி.கதை சொல்வது அதை எல்லாரையும் ஆவலுடன் கேட்கவைப்பது என்பது உங்களுக்கு கை வந்த கலை.//

    நன்றி திராச ஐயா!
    கதையின் கருப்பொருள் கண்ணன் அல்லவா காந்தம்!
    அடியேன் ஒரு பொடியேன்; அவ்வளவே!

    //தினமும் வந்துபார்க்கத்த்தூண்டும் பதிவுகள்,பதுகாக்கபடவேண்டியபதிவுகள்//

    எம்பெருமானைப் பற்றி இன்னும் என்னென்னவோ! அத்தனையும் வலையேற்ற அவன் அருள் வேண்டும்!

    ReplyDelete
  24. ஓ சரி சரி, தமிழ்மணப் பட்டை permalink-இல் இருக்கிறது.. முகப்புப் பக்கத்தில் தான் காணவில்லை :)

    ReplyDelete
  25. //ஓகை said...
    மதிமயங்கிப் போனேனே மாலனே இன்று
    ததிபாண்டன் மோட்சம் தெரிந்து//

    நன்றி ஓகை ஐயா!
    உங்களுக்காக, குடந்தைப் பாசுரங்கள் இரண்டு இட்டிருந்தேன். பார்த்தீர்களா? பிடித்தனவா?

    ReplyDelete
  26. //CVR said...
    iam loving this!!!
    Rock on!! :)
    //

    நன்றி CVR.

    ReplyDelete
  27. // ஞானவெட்டியான் said...
    ஓங்காரம் பற்றி முன்னர் இட்ட ஒரு இடுகை. விருப்பமிருப்பின் காணலாம்.
    http://njaanamuththukkal.blogspot.com/2006/04/47
    //

    இதோ அடுத்த பதிவு எழுதி முடித்து, படிக்க வருகிறேன் ஐயா.

    ReplyDelete
  28. //Anonymous said...
    sri KRS,
    y'sterday posted one.
    result of vidukathai(Motcham) is not only for dadipandavan&his OMKARA Kudam but also to ur MP followers also.is it not?//

    சுந்தரம் சார்
    MP followers=?
    மாதவிப் பந்தல்??

    followers எல்லாம் இல்லை; நல்லன்பர்கள் தான் சார்.
    எல்லாரும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!

    //is there any english literal- translation on Thiruppavai in blog pl//

    தேசிகன் வலைப்பதிவில் தமிழ் ஆங்கிலம் இரண்டும் இருக்குமே!
    இதோ சுட்டி.
    http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=thiruppavai_fifteen

    ReplyDelete
  29. ததி பாண்டன் கதை பற்றீ தெரியாமலேயே இதுவரை இருந்துவிட்ட எனக்கு திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தேன் என சொல்லிக்கொள்ளவும் வெட்கமாக இருக்கிறது...எத்தனை இயல்பாய் அருமையாய் சுவையாய் எழுதி இருக்கிறீர்கள்! பாராட்ட வார்த்தை இல்லை. அரங்கத்துப் படங்கள் அத்தனையும் நினைவலைகளை புரட்டுகின்றனவே..
    திருவரங்கப்ரியா

    ReplyDelete
  30. RAVI,this is the exellent one,speecially ADIYEN,ARANGAN ARULVANAGA.
    anbudan
    srinivasan.

    ReplyDelete
  31. ததிபாண்டன்,பிள்ளை ஐயங்கார் காட்சிகள் இனிமை ரவிசங்கர்.
    எல்லோரையும் அரங்கனையும் கண்ணனையும் காட்டி கொடுக்கும் நீங்கள் பல்லாண்டு கதைகள் சொல்ல வேண்டும்.டிவியில் கூட பார்க்கமுடியாத ரங்ககோபுரக் காட்சிகள் இன்னும் அருமை.
    நன்றி நன்றி.

    ReplyDelete
  32. //சாத்வீகன் said...
    பிறவிப் பிணி தீர்க்கும் கதைகள்..//

    ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர்கள் சாத்வீகன்!

    //அடியேன் என்று சொன்ன மணி அடித்த கதையை படித்துள்ளேன்...
    தாங்கள் இவ்விடம் சொன்ன விதம் மிக அருமை..//

    நன்றிங்க!

    ReplyDelete
  33. //சேதுக்கரசி said...
    மீதிக்கதைக்கு நன்றி! அது சரி, தமிழ்மணம் பட்டையைத் திருடியது யார்? :-) //

    கண்ணனோ? பிடியுங்கள் அவனை! :-)

    //சேதுக்கரசி said...
    ஓ சரி சரி, தமிழ்மணப் பட்டை permalink-இல் இருக்கிறது.. முகப்புப் பக்கத்தில் தான் காணவில்லை :)//

    முகப்பில் வராத பட்டை போலும்! :-)

    நன்றி சேதுக்கரசி! வாக்களிக்கத் தானே தேடினீர்கள்? :-)

    ReplyDelete
  34. //ஷைலஜா said...
    ததி பாண்டன் கதை பற்றீ தெரியாமலேயே இதுவரை இருந்துவிட்ட எனக்கு திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தேன் என சொல்லிக்கொள்ளவும் வெட்கமாக இருக்கிறது//

    அதனால் என்ன ஷைலஜா! அரங்கன் அன்பு பற்றி தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே! அதுவே போதும்!

    //...எத்தனை இயல்பாய் அருமையாய் சுவையாய் எழுதி இருக்கிறீர்கள்!//

    நன்றி திருவரங்கப்ரியா.

    ReplyDelete
  35. //Anonymous said...
    RAVI,this is the exellent one,speecially ADIYEN,
    //

    நன்றி ஸ்ரீநிவாசன் சார்!

    ReplyDelete
  36. // வல்லிசிம்ஹன் said...
    எல்லோரையும் அரங்கனையும் கண்ணனையும் காட்டி கொடுக்கும் நீங்கள் பல்லாண்டு கதைகள் சொல்ல வேண்டும்.//

    நன்றி வல்லியம்மா!
    அவன் அருளாலே அவன் கதை சொல்வோம்! அவனைப் பற்றிக் கதைப்பதே இனிமை அல்லவா?

    //டிவியில் கூட பார்க்கமுடியாத ரங்ககோபுரக் காட்சிகள் இன்னும் அருமை//

    சில personal collection வல்லியம்மா!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP