Sunday, August 09, 2009

நான் - வீடு - வாசப்படி!

"ஹேய் டார்லிங்! என்னடீ இது மாயம்? ஒரு வாரம் டூர் போயிட்டு, இப்பத் தான் வீட்டுக்குள்ளாறயே நுழையறேன்! இன்னும் கதவைக் கூடத் தட்டல! காலிங் பெல் கூட அடிக்கல! அதுக்குள்ளாற எப்படி, நான் தான் வந்து நிக்குறேன்-ன்னு தெரியும்? படீர்-ன்னு கதவைத் தொறக்கற?"

"ஓ...அதுவாங்க! நீங்க பிரேசில் போகும் போது, காலை-ல ஷேவ் பண்ணீங்களே? அப்போ உங்க கழுத்தைப் பிடிச்சி முத்தம் கொடுத்தேனே? அதை முத்தம்-ன்னா நினைச்சீங்க? ஹிஹி!
அப்போ உங்க கழுத்துச் செயின்-ல ஒரு காமிரா செட் பண்ணி அனுப்பிச்சேன்! அது தான் உங்கள சரியாக் காட்டிக் கொடுத்துரிச்சி! நீங்க ரியோ-ல அடிச்ச லூட்டி உட்பட இப்ப வந்து நின்ன எல்லாத்தையும்!" :)

"அடிப்பாவி! நான் என்ன வேல்-முருகனா? இல்லை வேவு-முருகனா? விளையாடாதே! உண்மையச் சொல்லுடீ வள்ளீ, என் கள்ளீ!"

"உக்கும்! இந்தப் பேச்சுக்கு எல்லாம் ஒன்னும் கொறைச்சல் இல்ல!
அது இல்லீங்க! நீங்க போனதுக்கு அப்புறம்.....அப்புறம்......
உங்க ஞாபகமாகவே இருந்துச்சா? நீங்க எப்போ திரும்பி வருவீங்க வருவீங்க-ன்னு பாத்துப் பாத்து, பூத்துப் பூத்து,

என் கண்ணும் மனமும் படியிலேயே தங்கிருச்சி...
நான் வாசப்படியாவே மாறிட்டேனா?
வாசப் பொடி பூசும் நான், வாசப் படி ஆகிப் போனேன்!"


"ஆகா!"

"அதான் நீங்க திரும்பி வந்த போது, "படியாய்க் கிடந்த நான்",
நீங்க கதவைத் தொட்ட மாத்திரத்தில், கதவு திறந்து விட்டது!" :)


என்னேடி?
தட்டு முன்பு தாழ் திறந்து விட்டாயே? என்று உரைத்தான்!
விட்டுப் பிரியாதார் மேவும் ஒரு பெண் நான்!
பிரிந்தார் வரும் வரைக்கும் பேதை - தெருவில்
கருமரத்தாற் செய்த கதவு!


இது பாவேந்தர் பாரதிதாசன் காட்டும் வாசற்படி கவி ஓவியம்!
குலசேகராழ்வார் காட்டும் வாசற்படி கவி ஓவியம் போலவே!



பிறக்கிறோம்! பிறக்கிறோம்! பிறக்கிறோம்!

எப்படிப் பிறக்கிறோம்? = எல்லாருக்கும் தெரியும்!
எதுக்குப் பிறக்கிறோம்? = யாருக்குமே தெரியாது! :)

* நாம் பிறந்தது நமக்கே ஞாபகம் இருக்கா? = சத்தியமா இல்லை! :)
* இறைவனுடனான உறவு நமக்கு ஞாபகம் இருக்கா? = சத்தியமா இல்லை! :)
அட நாம பொறந்ததே ஞாபகம் இல்லை! அப்பறம் தானே இதெல்லாம் ஞாபகம் இருக்கறதுக்கு?

* நாம் பிறந்தது நமக்கே "ஞாபகம்" இல்லை என்பதால் = "நாம் இல்லை" என்று ஆகி விட மாட்டோம்! :)
* இறைவனுடனான உறவு நமக்கு "ஞாபகம்" இல்லை என்பதால் = "அவனும் இல்லை" என்று ஆகி விட மாட்டான்! :)

ஆனாலும் அடுத்தவங்க பிறப்பதைப் பார்த்துக்கிட்டு தான் இருக்கோம்! நாமளும் அப்படித் தான் பிறந்திருப்போம்-ன்னு நம்பறோம்! :)
அறிவியல் வேற இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கு! அதனால் "புரிந்து" கொள்கிறோம்!

அதே போல்...
அடியவர்கள், இறைவனுடன் உறவு கொள்வதைப் பார்க்கிறோம்! நமக்கும் அப்படித் தான் உறவு-ன்னு நம்பறோம்! :)
ஆன்மீகம் வேற இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கு! அதனால் "புரிந்து" கொள்கிறோம்! :)

ஆன்மீகம் சொல்லிக் கொடுத்திருக்கு-ன்னு தான் சொன்னேன்! மதம் சொல்லிக் கொடுத்திருக்கு-ன்னு சொல்லலை! மதம் வேறு! ஆன்மீகம் வேறு!
* மதம் = Religion! ஆன்மீகம் = Spirituality!
* மதம் = இறைவனை நிறுவனப்படுத்தும்! ஆன்மீகம் = நம்மை நிலைநிறுத்தும்!

மீண்டும் அதே கேள்வி!
* எப்படிப் பிறக்கிறோம்? = எல்லாருக்கும் தெரியும்!
* எதுக்குப் பிறக்கிறோம்? = யாருக்குமே தெரியாது! :)


சரி, கேள்வியை மாத்திப் போடுவோம்!
எதுக்குப் பிறக்கிறோம்-ன்னு கேட்க வேணாம்!
எப்படி இருப்பதற்காகப் பிறக்கிறோம்? = இன்பமாய் இருக்கப் பிறக்கிறோம்!

அவன்: "உம்ம்ம்...எப்படி இன்பமாய் இருக்கப் போறடீ? ரொம்ப கஷ்டமாச்சே! இன்பமும் துன்பமும் மாறி மாறி வருமே!"

அவள்: "ஆமா! வரும் தான்!"

அவன்: "மாறி மாறி வந்தா, அதுல எப்படிடீ இன்பமா இருக்க முடியும்?"

அவள்: "வீட்டு வாசப் படியா மாறிடுவேன்! அப்படி மாறிட்டா என்னாளும் இன்பம் தான்!"

அவன்: "வாட்? என்ன உளற்றே? அது என்னா வாசப்படி? அது எப்படி நீ வாசப்படியா மாறுவே?"



சில சமயம் வீட்டை விட்டு வெளியே போனா மழை வரும், இடி-மின்னல் வரும்! அப்போ வீட்டுக்குள்ள வந்தா இன்பம்! அமைதி!
=> வெளியே = துன்பம்! உள்ளே = இன்பம்!

சில சமயம் வீட்டுக்கு உள்ளாறவே ஒரு சிலரோட இடி-மின்னல் கேட்கும்! :) அப்போ வீட்டை விட்டு வெளியே போனாத் தான் நிம்மதி! :)
=> உள்ளே = துன்பம்! வெளியே = இன்பம்!

ஆனால் வீட்டு வாசப்படி? = அது வீட்டுக்கு உள்ளேயும் இல்ல! வெளியேயும் இல்ல! அதனால் அதுக்கு என்னாளும் இன்பம் தான்!

வாசப்படியின் முக்கியமான குணம்...
* பலரும்/பலதும், உள்ளே வர இடம் கொடுத்துக் கொண்டு,
* பலரும்/பலதும், வெளியே போக இடம் கொடுத்துக் கொண்டு,
வாசப்படி வாசப்படியாய் இருக்கும்!

வாசப்படிக்கு வேறெதுவும் முக்கியம் இல்லை!
அது உள்ளேயும் வராது! வெளியேயும் போவாது!
அது "ஒன்றே ஒன்றை" மட்டும் பார்த்துக் கொண்டு என்னாளும் நிலைச்சி இருக்கும்! அதனால் அதுக்கு என்னாளும் இன்பம் தான்!

அப்படி என்னாத்த தான், இந்த வாசப்படி பார்த்துக்கிட்டு இருக்கும்?
= வாசல் "படி" யாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே!


முடிச் சோதியாய் உன் முகச் சோதி!
துய்ய தாமரைக் கண்கள்!
கோல நீள் கொடி மூக்கு!

சங்கினோடும், நேமியோடும்,
செங்கனி வாய் ஒன்றினோடும்,
துவர் இதழ்! பவழ வாய்!
மோவாயில் பொட்டு அழகு!
மை வண்ண நறுங் குஞ்சி குழல் பின் தாழ...
மகரம் சேர் குழை இருபால் இலங்கி ஆட...

மாயனார் திரு நன் மார்பும்...
மரகத உருவும் தோளும்...
ஆய சீர் முடியும் தேசும்...
அடியேற்கு அகலலாமே!

நெடியோனே! வேங்கடவா! உன் கோயிலின் "வாசல்",
"படி" யாய்க் கிடந்து, உன் பவள வாய் காண்பேனே!
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே!


காட்டுச்செடி போல என்னை வல் வினைகள் சுற்றிக் கொள்ளட்டும்! பரவாயில்லை! அதைத் தீர்க்கும் சாக்கிலாவது நீ என்னிடம் வருவாய் அல்லவா?

உனக்கு மிகவும் விருப்பமான அடியார்கள் என் மேல் அனுதினமும் ஏறிச் செல்வார்கள்!
உனக்கு விருப்பமானதைப் படி ஏற்றுவதே என் விருப்பமும் கூட!
= உன் உள்ள உகப்பே, என் உள்ள உகப்பு!

மண்ணவர் மட்டுமா? வானவரும் அரம்பையரும் கூட படியேறிச் செல்வார்கள்!
ஈசன் வானவர்க்கு அன்பன் எனில், அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு?
வானவரைக் கீழே இறக்கி, மண்ணவரை மேலே ஏற்றுகிறாய்!

எல்லாரும் உன்னைக் காண, என்னைக் கடந்து செல்வார்கள்!
அவர்கள் கிடந்து இயங்குவார்கள்! நானோ இயங்காமல் கிடப்பேன்!

அவர்கள் இயங்கும்படி, நானோ இயங்காப் படி!
அவர்களை இயங்கும் படிச் செய்யும் இயங்காப் படி!


* நடை சாத்தினாலும் சார்த்தா விட்டாலும்...
* எவ்வளவு கூட்டம் அலை மோதினாலும்...
* எத்தனை பெரிய அரசியல் தலைவர் வந்தாலும்...
* எவ்வளவு கருப்புப் பணம் கொட்டிய பணக்காரர் வந்தாலும்...
* அவர்கட்காகத் தரிசனத்தை நிறுத்தி வைத்தாலும்...
* சாஸ்திரம் சொல்லிற்றே என்று கிரகண காலத்தில் பூட்டினாலும்...
என்னை-உன்னிடம் இருந்து பூட்டி வைக்க முடியுமா?
இந்த "இயங்காத படி" அல்லவா உன்னிடம் இயங்கிக் கொண்டிருக்கும்?

படிமேல் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் பேச மாட்டேன்!
படியாய் உனக்கென்று வெறுமனே "கிடப்பேன்"! "கிடப்பேன்"!

செடியாய வல் வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியோனே வேங்கடவா! நின் கோயிலின் வாசல்,
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து, உன் பவழ வாய் காண்பேனே!


* ஒரு வேளை நான் மலராய்ப் பூத்து இருந்தால்? = உன்னை ஒரு நாள் மட்டும் அலங்கரித்து இருப்பேனோ?
* ஒரு வேளை என்னை உரித்துப் பட்டாய் நெய்து இருந்தால்? = உன்னை ஒரு வாரம் மட்டும் அலங்கரித்து இருப்பேனோ?
* ஒரு வேளை நான் தங்க வைர ஆபரணமாய் இருந்திருந்தால்? = உன்னை ஒரு வருஷம் மட்டும் அலங்கரித்து இருப்பேனோ?

* உன் திருமேனி சம்பந்தம் எனக்கு இல்லை போலும்! பரவாயில்லை! அதனால் என்ன?
* உன் இடையறாச் சம்பந்தம், உன்னைக் கண்களால் கைது செய்யும் "படி"யாய் வாய்த்ததே!

என் பால், நீ நோக்காயே ஆகிலும், உன் பற்றல்லால் பற்றில்லேன்!
உனக்கென்று படியாய்க் "கிடப்பேன்"!
என்னை நீ வேண்டாயே ஆயிடினும், மற்ற ஆரும் பற்றில்லேன்!
உனக்கென்று படியாய்க் "கிடப்பேன்"!

உயிரில்லாமல்-உயிருடன் "கிடப்பேன்"! உயிர்ப்புடன் "கிடப்பேன்"!
இயங்காமல் இயங்கி, உனக்கென்று "கிடப்பேன்"!
"கிடப்பேன்"! "கிடப்பேன்"! "கிடப்பேன்"! "கிடப்பேன்"!
உன் இதய-வாசல் படி-யாய்க் கிடந்து, உன் பவழ வாய் காண்பேனே!
அடியேன், குலசேகரன் படி, இரவிசங்கரன் படி, உன்னுடைய வாசப்படி!

45 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
    வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் !

    ReplyDelete
  3. krs happy birthday,udalnallam, neelayul,niraiselvam,uyarpukkal,miygaanam pettru valzka valamudan.

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  5. வாசப்படி-யை வைச்சு வசைபாடாம
    அழகா அருமையா ஒரு சிற்பமா செதுக்கியிருக்கீங்க. வாழத்துக்கள் எல்லாவற்றுக்கும்.

    ReplyDelete
  6. எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம்!!!

    நீவிர் பிறந்த இந்த நாள் முதல் எந்நாளும் வாழ்வில் இன்பம் பொங்க இறைவன் அருள்புரிவானாக!!

    முகிலரசி, தமிழரசன் மற்றும் இளமாறன்

    -முகில்தமிழ்

    ReplyDelete
  7. ஆடியில் உதித்த அண்ணா..
    பிறந்தநாளில் உங்க பாதம் பணிந்து நமஸ்கரிக்கிறேன்.. வாழ்த்துகளுடன்

    ReplyDelete
  8. Please visit the following link
    on your happy birthday
    All the Best.

    http://www.ranganatha.org/Portals/0/SRTFlyers/2009/Brahmotsavam/SRT-BRAHMOTSAVAM-SOUVENIR-2009.pdf

    subbu thatha

    ReplyDelete
  9. //உயிரில்லாமல்-உயிருடன் "கிடப்பேன்"! உயிர்ப்புடன் "கிடப்பேன்"!
    இயங்காமல் இயங்கி, உனக்கென்று "கிடப்பேன்"!
    "கிடப்பேன்"! "கிடப்பேன்"! "கிடப்பேன்"! "கிடப்பேன்"!//

    இப்படி ஒரு வேண்டுதலை எம்பெருமானே எதிர்பார்த்திருக்க மாட்டார்.. குலசேகராழ்வார் விட்டுக் கொடுப்பாரா என்று தெரியவில்லையே :)

    ReplyDelete
  10. திருப்புட்குழி விஜயராகவப் பெருமான் திருமுக மண்டலம் மனதைக் கவர்கிறது.
    தோழியின் வாழ்த்து வந்து சேர்ந்ததா?? தன் மனம் கவர் கள்வனுக்காக முப்பது பாடல் பாடியவள், உங்களுக்காக ஒரு மூன்று பாட்டாவது பாடி வாழ்த்தினாளா?

    ReplyDelete
  11. //வாசப் பொடி பூசும் நான், வாசப் படி ஆகிப் போனேன்!"//

    ஆஹா கவிதை கவிதை.. :)

    ReplyDelete
  12. இனியதொரு பதிவு.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. உம்...வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! :)

    தம்பி பாலாஜி! உங்களால கையும் காலும் வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாதா? :)
    இது என்ன பிறந்தநாள் பதிவா?
    எம்பெருமான் வாசப்படி பதிவு, இப்போ வாழ்த்தும் பதிவா மாறிடிச்சி பாருங்க! ஹைய்யோ! ஹைய்யோ! :)

    ReplyDelete
  14. //Raghav said...
    இப்படி ஒரு வேண்டுதலை எம்பெருமானே எதிர்பார்த்திருக்க மாட்டார்..//

    :)
    எம்பெருமான் எதிர்பாராத ஒன்றும் உண்டா ராகவ்? :)

    //குலசேகராழ்வார் விட்டுக் கொடுப்பாரா என்று தெரியவில்லையே :)//

    ஹா ஹா ஹா
    * கொல்லி காவலன் குலசேகரன் கொண்டது ஆனந்த நிலைய வாசல் படி!
    * அடியேன் கொண்டது இதய-வாசல் படி!

    குலசேகரன் படி = மேல் படி!
    அடியேன் விழைந்த படி, அதற்கும் கீழே கருவறைக் கழுநீர் ஓடுமே? = அந்த கீழ்ப்படி!

    அதனால் குலசேகராழ்வார், விட்டு சித்தன் பல்லாண்டைச் சொல்லி...
    என்னை விட்டுக் கொடுப்பார்! விட்டு-விடம் கொடுப்பார்! :)

    ReplyDelete
  15. அழகு :)

    பிறந்த நாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. அசத்தல்!

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் கே ஆர் எஸ்

    ReplyDelete
  17. தல..மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))

    பதிவுக்கு அப்புறம் வரேன் ;))

    ReplyDelete
  18. Happy birthday !!
    May you have pure love for your favorite Lord and always !! :-)

    ReplyDelete
  19. KRS,
    பிறந்த நாள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  20. நன்றி பாலாஜி!

    நன்றி ரிஷான், Mr. 201 :)

    நன்றி சக்திவேல்! எப்போ ப்ளாக்கர் கணக்கு எல்லாம் துவக்கனீங்க? :)

    ஆயில்ஸ் அண்ணாசி, நன்றி!

    இளமாறா, முகில், தமிழ் - இனிய அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  21. ஆடி சுவாதி தன்னில் உதித்த
    ஆன்மீகச்செம்மல் வாழி!
    அணியரங்கரைப்பற்றி
    அழகாய் பதிவுகள் இடும்
    அன்புத்தம்பி வாழி!

    ReplyDelete
  22. //
    "ஓ...அதுவாங்க! நீங்க பிரேசில் போகும் போது, காலை-ல ஷேவ் பண்ணீங்களே? அப்போ உங்க கழுத்தைப் பிடிச்சி முத்தம் கொடுத்தேனே? அதை முத்தம்-ன்னா நினைச்சீங்க? ஹிஹி!
    அப்போ உங்க கழுத்துச் செயின்-ல ஒரு காமிரா செட் பண்ணி அனுப்பிச்சேன்! அது தான் உங்கள சரியாக் காட்டிக் கொடுத்துரிச்சி! நீங்க ரியோ-ல அடிச்ச லூட்டி உட்பட இப்ப வந்து நின்ன எல்லாத்தையும்!" :)
    ..////

    :):) பாத்துரவி! கதைவசனம் கண்டு இயக்குநர்சங்கர் அழைச்சிடப்போறார்!

    ReplyDelete
  23. //
    எப்படிப் பிறக்கிறோம்? = எல்லாருக்கும் தெரியும்!
    எதுக்குப் பிறக்கிறோம்? = யாருக்குமே தெரியாது! :)

    * நாம் பிறந்தது நமக்கே ஞாபகம் இருக்கா? = சத்தியமா இல்லை! :)
    * இறைவனுடனான உறவு நமக்கு ஞாபகம் இருக்கா? = சத்தியமா இல்லை! :)
    அட நாம பொறந்ததே ஞாபகம் இல்லை! அப்பறம் தானே இதெல்லாம் ஞாபகம் இருக்கறதுக்கு///

    >>>>>>> உண்மைதான்.

    ReplyDelete
  24. //

    என் பால், நீ நோக்காயே ஆகிலும், உன் பற்றல்லால் பற்றில்லேன்!
    உனக்கென்று படியாய்க் "கிடப்பேன்"!
    என்னை நீ வேண்டாயே ஆயிடினும், மற்ற ஆரும் பற்றில்லேன்!
    உனக்கென்று படியாய்க் "கிடப்பேன்"!

    // எனக்கென்னவோ இந்த குலசேகரன்படிக்கு இப்படி நினைக்கத்தோணும் அதாவது ஆண்டவனின் பக்தர்களின் பாதம் தன் மேல் முதலில் படவேண்டுமென்றே படியாய் கிடக்கிறாரோ என்று.பகதியின் உச்சம் இதுவல்லவோ?
    பாகவத பாதசேவையை பகவான் மெச்சுவார் என்று இருக்கலாம்.

    ReplyDelete
  25. வாசப்படியின் முக்கியமான குணம்...
    * பலரும்/பலதும், உள்ளே வர இடம் கொடுத்துக் கொண்டு,
    * பலரும்/பலதும், வெளியே போக இடம் கொடுத்துக் கொண்டு,
    வாசப்படி வாசப்படியாய் இருக்கும்!

    வாசப்படிக்கு வேறெதுவும் முக்கியம் இல்லை!
    அது உள்ளேயும் வராது! வெளியேயும் போவாது!
    அது "ஒன்றே ஒன்றை" மட்டும் பார்த்துக் கொண்டு என்னாளும் நிலைச்சி இருக்கும்! அதனால் அதுக்கு என்னாளும் இன்பம் தான்!
    //
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>....தத்துவம் நல்லாருக்கே! கேஆராசனந்தா?:)

    ReplyDelete
  26. //Raghav said...
    ஆடியில் உதித்த அண்ணா..//

    ஆடியில் "உதித்தது" ஆண்டாள்!
    ஆடியில் "பிறந்தவன்" தான் நானு! :)

    //பிறந்தநாளில் உங்க பாதம் பணிந்து நமஸ்கரிக்கிறேன்.. வாழ்த்துகளுடன்//

    தோடா, ஆ-ன்னா, ஊ-ன்னா எதுக்குப்பா அம்மா கட்சிக் காரனாட்டம் கால்-ல வுழுகற? :)
    தொலைபேசி வாழ்த்துக்கும் நன்றி ராகவ்!

    ReplyDelete
  27. //வலசு - வேலணை said...
    அழகா அருமையா ஒரு சிற்பமா செதுக்கியிருக்கீங்க.//

    :))
    என்னால ஒன்னும் சொல்ல முடியாது வலசு - வேலணை!
    கொஞ்ச நாளா மனதில் பெருக்கெடுத்து வந்ததை அப்படியே எழுதிட்டேன்!

    ReplyDelete
  28. //sury said...
    Please visit the following link
    on your happy birthday
    All the Best//

    அன்பான பரிசுக்கு நன்றி சூரி சார்!
    மக்களே, அவசியம் பாருங்க பரிசை! :) நல்லா இருக்கு! இதோ க்ளிக் செய்யவல்ல சுட்டி...
    http://www.ranganatha.org/Portals/0/SRTFlyers/2009/Brahmotsavam/SRT-BRAHMOTSAVAM-SOUVENIR-2009.pdf

    ReplyDelete
  29. //முத்துலெட்சுமி/muthuletchumi said...
    அழகு :)//

    அவர் இருப்பதால் அழகு! :)

    //பிறந்த நாள் வாழ்த்துகள்//

    நன்றி-க்கோவ்! :)

    ReplyDelete
  30. //சென்ஷி said...
    அசத்தல்!//
    ஹிஹி! அவர் இருப்பதால் அசத்தல்! :)

    //பிறந்த நாள் வாழ்த்துக்கள் கே ஆர் எஸ்//
    நன்றி தல!

    //கோபிநாத் said...//
    மாப்பி, நீ எதுக்கு சென்ஷி பின்னாடியே வர ஒவ்வொரு வாட்டியும்? அவரு மீரா ஜாஸ்மின்-ன்னா அங்கேயும் நீயும் பின்னாடியே வர? வாட் இஸ் திஸ்? :)

    //தல..மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;))
    பதிவுக்கு அப்புறம் வரேன் ;))//

    நன்றி கோப்பி மாப்பி!

    ReplyDelete
  31. //Radha said...
    Happy birthday !!//
    நன்றி ராதா!

    //May you have pure love for your favorite Lord and always !! :-)//
    அடியேனுக்கு அவனிடத்தில் "always"/"எற்றைக்கும்" என்று நீங்க சொன்ன ஒரே சொல்லுக்காக, உங்களுக்கு நூறு தடா அக்கார அடிசல் சொல்லி வைக்கிறேன் ராதா! :)

    //சிவமுருகன் said...
    KRS,
    பிறந்த நாள் வாழ்த்துகள்!!!//
    நன்றி சிவா!

    ReplyDelete
  32. //Raghav said...
    திருப்புட்குழி விஜயராகவப் பெருமான் திருமுக மண்டலம் மனதைக் கவர்கிறது//

    அது எப்படியா கண்டு புடிச்ச? அது திருப்புட்குழி ராகவப் பெருமாள்-ன்னு? ஒங்க கள்ளழகரு, நாகை அழகியாரு எல்லாரையும் விட இவரு சூப்பரா இருப்பாரு!
    அந்தப் பச்சைக் கல் மகா மேரு போலவே திருமேனியும் கொஞ்சம் பச்சைக் கலராவே தான் இருக்கும்! கவசம் நீக்கிப் பாத்தாத் தெரியும்!

    //தோழியின் வாழ்த்து வந்து சேர்ந்ததா?? தன் மனம் கவர் கள்வனுக்காக முப்பது பாடல் பாடியவள், உங்களுக்காக ஒரு மூன்று பாட்டாவது பாடி வாழ்த்தினாளா?//

    தோழியைப் பத்தி என்னா நினைச்ச நீயி? மனங் கவர் கள்வனை வெறுப்பேத்த எனக்குன்னே முப்பது பாட்டு இல்ல, முன்னூறு பாட்டு பாடுவா! :)

    கார்த்திகைத் திங்கள் கதிர் நிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவாய் போதுமினோ கேஆரெஸ்
    சீர்மல்கும் பந்தல் ஆய்ப்பாடிச் சிறுமீர்காள்
    கூர்வேல் தமிழ்த் தொழிலன் சிவபாலன் குமரன்

    ஏரார்ந்த கண்ணி உமையவள் இளஞ்சிங்கம்
    மோர்மேனிச் செங்கண் முழுமதியம் போல் முகத்தான்
    மாரவேள் முருகப் பெருமானே எனைத் தருவான்
    பாரோர் புகழப் படிந்து ஏல்-ஓர் எம்பாவாய்! :))

    ReplyDelete
  33. //ஷைலஜா said...
    ஆடி சுவாதி தன்னில் உதித்த
    ஆன்மீகச்செம்மல் வாழி!
    அணியரங்கரைப்பற்றி
    அழகாய் பதிவுகள் இடும்
    அன்புத்தம்பி வாழி!//

    :))
    நன்றி-க்கா!

    பெரியாழ்வார் ஆனி சுவாதி!
    அவர் திருமகளோ ஆடிப் பூரம்!
    அடியேன் ஆடி சுவாதி!

    ReplyDelete
  34. //:):) பாத்துரவி! கதைவசனம் கண்டு இயக்குநர்சங்கர் அழைச்சிடப்போறார்!//

    இதெல்லாம் டூ டூ மச் :))

    யப்பா சாமீகளா!
    இத்தினி பேரும் பதிவைப் பத்தி பேசாம, வாழ்த்து சொல்லிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? ஏதோ பொறந்த நாளுக்கு நானே எனக்குப் பதிவு போட்டுக்குன்னாப் போல ஆயிரிச்சே! அவ்வ்வ் :((

    இது எம்பெருமான் சன்னிதியான ஆனந்த நிலையத்துத் திருப்பதிப் பதிவு! திருப்"படிப்" பதிவு! அதைப் பற்றிப் பேசுவோம்!

    ReplyDelete
  35. //எனக்கென்னவோ இந்த குலசேகரன்படிக்கு இப்படி நினைக்கத்தோணும் அதாவது ஆண்டவனின் பக்தர்களின் பாதம் தன் மேல் முதலில் படவேண்டுமென்றே படியாய் கிடக்கிறாரோ என்று//

    விப்ர நாராயணர் என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை தான் அப்படி-க்கா!

    தான் மதி மயங்கிச் செய்த பாவங்களுக்குக் கழுவாயாக சில காம்யார்த்த கர்மாக்களையும் பரிகார ஹோமங்களையும் பண்ணச் சொல்லுவாங்க அவரை! அவரோ சரணாகதன் அந்தச் சுயநலக் கர்மாக்களை எல்லாம் செய்ய மாட்டான் என்று சொல்லி விடுவார்!

    அதற்குப் பதிலாக, தவறுகளைக் கழுவிக் கொள்ள.....
    அரங்கன் சன்னிதியில், அடியவர் பாத தூளியை எடுத்து, அதைத் தன் மேல் பொடி போல் இட்டுக் கொண்டு, தொண்டர்-அடிப்-பொடி-ஆழ்வார் என்று ஆனார்!

    குலசேகரர் நிலை வேறு! அவர் படியாய் மட்டும் ஆசைப்படவில்லை!
    மீனாய், குருகாய், செண்பகமாய், தம்பகமாய் (ஸ்தம்பம்) என்று பல் வேறு நிலைகளை எடுத்தாவது, எம்பெருமான் அணுக்கத்தை வேண்டி நின்றார்! எம்பெருமான் பொன் மலை மேல் "ஏதேனும்" ஆவேனே என்று முடிக்கிறார்!

    படியில் பகவத் சம்பந்தம் மட்டுமல்லாது, பாகவத சம்பந்தமும் உண்டு!
    குலசேகரரும், அடியவர்களுக்காக, ஒரு கட்டத்தில் அரசாங்கத்தையே துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்! அடியவர்கள் மேல் வைக்க எண்ணிய அரசாங்க சோதனையைத் தன்மேல் இட்டுக் கொண்டு, பாம்புக் குடத்துக்குள் கை விட்டுப் பிரமாணம் செய்த நிகழ்வும் உண்டு!

    ReplyDelete
  36. KRS
    happy birth day

    மனித வாழ்க்கையை நடுக்கடலில் திசை தெரியாமல் பறக்கும் பறவைக்கு ஒப்பிடுவார் குலசேகர ஆழ்வார். அப்படிப்பட்ட நிலையில் ஒரு மரக்கலம் மட்டும் கிடைத்தால் உடனே ஒடிச் சென்று பற்றிவிடுமாம் அந்தப் பறவை. பிறகென்ன.. அந்த மரக்கலம் செல்லும் பாதையால் அதனால் எளிதாக செல்லமுடியும். அந்த மரக்கலம்தான் கண்ணன் என்பார் ஆழ்வார்.

    நல்ல பதிவு.. வாழ்க!

    திவாகர்

    ReplyDelete
  37. Divakar Sir,
    Thanks for reminding this beautiful pasuram of Kulasekara Azhwaar !!

    "வெங்கண் திண் களிறு அடர்த்தாய் ! வித்துவக்கோட்டு அம்மானே !
    எங்கு போய் உய்கேன் ? உன் இணையடியே அடையல் அல்லால்*
    எங்கும் போய் கரை காணாது எறிகடல்வாய் மீண்டேயும்*
    வங்கத்தின் கூம்பு ஏறும் மாப் பறவை போன்றேனே."


    Along exactly the same lines, here is a beautiful parable from the Gospel of Sri Ramakrishna.
    (The entire book is available online in Belur maths website)

    “A bird sat absent-mindedly on the mast of a ship. The ship was sailing on the Ganges until it finally reached the mighty ocean. The bird then came to its senses. It looked all around and could see no landmark or shore. It flew towards the north, hoping to reach land. Having flown a long distance, it grew tired, but could still see no landmark. What could it do? It returned to the ship and sat on the mast again.

    After some time the bird flew away again – this time towards the east. It couldn’t see anything in the east either – there was only a vast sheet of water. It became extremely tired and again returned to the mast of the ship and perched there. After resting for a long time, it went to the south and then to the west. When it found no sign of land anywhere, it sat on the mast again and flew no more."

    All great souls are saying the same thing ! For our benefit, they are even using same analogies !! :-)
    ~
    Radha

    ReplyDelete
  38. //"always"/"எற்றைக்கும்" என்று நீங்க சொன்ன ஒரே சொல்லுக்காக, உங்களுக்கு நூறு தடா அக்கார அடிசல் சொல்லி வைக்கிறேன் ராதா! :)
    //
    நன்றி ! என்னிடம் அக்காரக் கனி ஒன்று இருக்கிறது. உங்கள் நூறு தடாவையும் அதுவே அம்சயித்துவிடும். :-)

    ReplyDelete
  39. kannabiran, RAVI SHANKAR (KRS) said... ///

    யப்பா சாமீகளா!
    இத்தினி பேரும் பதிவைப் பத்தி பேசாம, வாழ்த்து சொல்லிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்? ஏதோ பொறந்த நாளுக்கு நானே எனக்குப் பதிவு போட்டுக்குன்னாப் போல ஆயிரிச்சே! அவ்வ்வ் :((

    இது எம்பெருமான் சன்னிதியான ஆனந்த நிலையத்துத் திருப்பதிப் பதிவு! திருப்"படிப்" பதிவு! அதைப் பற்றிப் பேசுவோம்!

    3:01 PM,
    >>>>>>


    ஓ அப்’படி’யா?:0 நாங்க பதிவின் ஆரம்பப்’படி’ல வந்த வார்த்தைகளைப்பார்த்து ஏதோ, அகபுறநானூறு குறுந்தொகையின் அகப்பாடல்கள், குறளின் கடசிப்பாலதிகாரம் போலமாதிரி ரவி 400னு ஏதும் ஆரம்பிச்சிடீங்களோன்னு நினச்சோமே! கதை இப்’படி’ப்போனதே பரவால்ல..திருப்’படி’சேவையை உங்க சொற்’படி’யில் கண்டோமே அதில் தப்’படி’ஏதும் இல்லை!
    ஆன்மீகச்சாரலில் நனைந்து அத்துப்’படி’உங்களுக்கு! நாங்களும் அதில் நனைந்த’படி’ நல்லா அனுபவிச்சோம்!

    ReplyDelete
  40. @ராதா
    //When it found no sign of land anywhere, it sat on the mast again and flew no more.//

    Flew no more - Thatz the essence and strongly typed phrase that needs to enter the benign soul! What a magic in just three words! Thatz why hez Parama Hamsa!
    We are just hamsa - flying!
    Hez Parama Hamsa - Flew no more!

    புகல் ஒன்று இல்லா அடியேன்
    உன் அடிக் கீழ் "அமர்ந்து", புகுந்தேனே!
    பறக்கக் கூடாது! அமரணும்!
    அமர்ந்தா புகலாம்!

    //All great souls are saying the same thing ! For our benefit, they are even using same analogies !! :-)//

    எந்தரோ மகானுபாவுலு
    அந்தரிகி வந்தனமுலு

    ReplyDelete
  41. //DHIVAKAR said...
    KRS
    happy birth day//

    நன்றி திவாகர் சார்! :)

    மனித வாழ்க்கையை நடுக்கடலில் திசை தெரியாமல் பறக்கும் பறவைக்கு ஒப்பிடுவார் குலசேகர ஆழ்வார்....
    .....
    பிறகென்ன.. அந்த மரக்கலம் செல்லும் பாதையால் அதனால் எளிதாக செல்லமுடியும். அந்த மரக்கலம்தான் கண்ணன் என்பார் ஆழ்வார்.//

    எங்கும் போய் கரை காணாது எறிகடல்வாய் மீண்டேயும்
    வங்கத்தின் கூம்பு ஏறும் மாபறவை போன்றேனே!

    என்னமா ஒரு National Geographic வீடியோ காட்டுறாரு பாருங்க ஆழ்வார்! அருமை! :)
    வங்கத்தின் கூம்பு = திருவடிகள்!

    வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று ஆண்டாளும் வங்கத்தைக் காட்டுகிறாள்!
    இது என்ன பாற்கடல் கடைதலா? இல்லை! பாற் கடலில் வங்கம் (கப்பல்) ஓடுமா என்ன? :)

    நம் மனம் என்னும் கப்பல்! அப்பர் சுவாமிகளும் மனம் எனும் தோணி பற்றி என்று பாடுகிறார்!

    அது உலகக் கடலில் மிதந்தும், அலைகழிந்தும் போகிறது! அந்தக் கடலை அல்லவோ கடைகிறான் எம்பெருமான்!
    அந்தக் கப்பலுக்கு கூம்பு = பகவத் சரணாரவிந்தம்! எம்பெருமான் திருவடிகள்! அந்த கூம்பு ஏறும் பறவை போல் ஆகி விட்டால்...

    வங்கத்தின் கூம்பு ஏறும் மாபறவை போன்றேனே!

    ReplyDelete
  42. @ஷைல்ஸ் அக்கா
    //ஓ அப்’படி’யா?:0 நாங்க பதிவின் ஆரம்பப்’படி’ல வந்த வார்த்தைகளைப்பார்த்து....//

    ஹிஹி!
    காதல் சீனைச் சொல்றீங்களாக்கா? :)
    காதல், ஆன்மீகம் - ரெண்டுத்துக்குமே அடிப்படை ஒன்னு தான்-க்கா! :)

    ரெண்டு பேருக்குள்ள நடக்கும் பர்சனல் விஷயம் தான் காதல்! ஆல்சோ ஆன்மீகம்! ஆனா சங்க காலம்-ல இருந்து இன்னிக்கி வரைக்கும் அது ரெண்டுத்தையும் ஒன்னுமே பண்ண முடியலை! போரடிக்காம உலகம் இன்னி வரை அந்த ரெண்டுத்தையும் பேசிக்கிட்டு தான் இருக்கு! :)

    //திருப்’படி’சேவையை உங்க சொற்’படி’யில் கண்டோமே அதில் தப்’படி’ஏதும் இல்லை!
    ஆன்மீகச்சாரலில் நனைந்து அத்துப்’படி’உங்களுக்கு!//

    ஹிஹி! எத்தன "படி" அரிசியில நீங்க கல்லு பொறுக்கனீங்களோ? "படிப் படியா" போட்டுத் தாக்குறீங்களே? :))

    ReplyDelete
  43. அருமையான பதிவு கண்ணா! தாமதமான வாழ்த்துகளும்.

    ReplyDelete
  44. Vanakkam sir,
    Sengan thirumugathu selva thirumalalengum thiruvarul petru inburuga.
    padi,padiyaga, valarga,vazhga.
    Sorry for the late.
    ARANGAN ARULVANAGA.
    anbudan,
    k.srinivasan.

    ReplyDelete
  45. அரிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு
    நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.

    தேவ்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP