Sunday, August 23, 2009

சிதம்பரத்தில் தமிழை நுழைத்த பிள்ளையார்!

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் மக்கா! இன்னிக்கி ஒரு நாளாச்சும் வீட்டுல, அண்ணி கையால் பூரிக்கட்டை பறக்காம, கொழுக்கட்டை பறக்க வாழ்த்துக்கள்! :))

விநாயகரைப் பற்றிப் பேசாமல் இந்திய மதங்களின் தத்துவத்தை முழுக்கப் பேச முடியாது!
அப்படி அனைத்திலும் "கலந்து" இருப்பவர் விநாயகர் = லோக்கல் பாஷையில் சொன்னாப் "பிள்ளையார்"! :)

பிள்ளைகளின் மனம் கவர்ந்த எளிமையான பிள்ளையார், அப்படி என்ன தமிழுக்குத் தொண்டு செய்து விட்டார்? அதுவும் சிதம்பரத்தில்-ன்னு கேட்கறீங்களா? ஹிஹி! படிங்க படிங்க! :)


* வரலாற்றில் பிள்ளையார் உண்டா, தமிழ் இலக்கியத்தில் பிள்ளையார் சொல்லப்பட்டு இருக்காரா என்ற ஆராய்ச்சி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்!
* வாதாபியில் இருந்து வந்தாரா? பரஞ்சோதி என்ற சிறுத்தொண்ட நாயனார் தான் விநாயகரைத் தமிழகத்துக்கு அறிமுகம் செய்ததா? என்பதெல்லாம் இன்னொரு பக்கம் இருக்கட்டும்!
ஆனால் இன்று, தெருவுக்குத் தெரு, குளத்துக்குக் குளம், தமிழகத்தில், பிள்ளையார் தான் இருக்காரு என்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை! :)

* அது சாஸ்திரம் படித்த பண்டித சிகாமணிகளாக இருக்கட்டும்! அவர்களும் பிள்ளையாரில் துவங்கியே துவங்குகிறார்கள்!
* சாஸ்திரம்-ன்னா என்னான்னே அறியாத சாமான்யனாக இருக்கட்டும்! அவனும் பிள்ளையார் குட்டு குட்டிக்கிட்டுத் தான் வேலையைத் துவங்கறான்! - ஏன்?


பிள்ளையார் ஓம்கார சொரூபம்! பிரணவ சொரூபம்!
எப்படி, எல்லாம் மந்திரங்களின் முன்னும் "ஓம்" சேர்க்கிறோமோ...
அப்படி, எல்லாம் வழிபாடுகளிலும் "பிள்ளையார்" சேர்க்கப்படுகிறார்!

அவரைச் சுற்றிலும் பல புராணக் கதைகள்! பல வரலாற்று நிகழ்வுகள்!
ஒரு தாய் தந்தையரின் திருமணத்தின் போது, அவர்களின் பிள்ளை இருக்க முடியுமா? = ஆனால் பிள்ளையார் சிவ-பார்வதி திருக்கல்யாணத்தில் இருந்தார்! அவர் ஆதி விநாயகர் என்று வாரியார் அடிக்கடி சொல்லுவார்!
பிள்ளையார் = அது புராணமோ, கதையோ, இல்லை குறியீடோ, எதுவாகிலும் பிள்ளையார் இல்லாமல் ஒரு விழாவோ, பூசனையோ இல்லை!

ரொம்பவும் புறம் தொழாமை பேசும் சில ஸ்ட்ரிக்ட்டான வைணவர்கள் கூட, "தும்பிக்கை ஆழ்வார்" பற்றிப் பேசுவார்கள்! :)
விஷ்வக்சேன கணங்களில் ஒருவராய், கஜமுகர் என்னும் கணநாதரும் அங்கு உண்டு :)

இப்படிப்பட்ட பிள்ளையார், அப்படி என்ன தமிழுக்குத் தொண்டு செய்து விட்டார்? அதுவும் சிதம்பரத்தில்? இனி கதையை மேலப் படிங்க! :)


திருநாரையூர் என்னும் ஊர்! வீராணம்/காட்டுமன்னார் கோயில்-க்கு கிட்டக்க! இந்தப் பக்கம், தில்லை-சிதம்பரத்துக்கும் கிட்டக்க தான்!

அங்கிட்டு அனந்தேசர், கல்யாணி என்னும் அன்பான பெற்றோருக்கு ஒரே மகன் நம்பி! பின்னாளில் நம்பியாண்டார் நம்பி!
அப்பா கோயில்ல வேலை பாக்குறவரு! அம்மா தினமும் பிரசாதம் பண்ணிக் கொடுத்து அனுப்புவாங்க! அதை நைவேத்தியம் பண்ணி, திரளும் மக்களுக்குக் கொடுக்கும் அனந்தேசன், பெரும்பாலும் வீட்டுக்கு வருவது வெறுங்கையுடன் தான்!

அப்பாவின் வருகையை விட, தின்பண்டம் வரும் என்று எதிர்நோக்கி இருக்கும் என்னையப் போல சின்னப் பிள்ளை நம்பி! அந்த நம்பி-கைக்கு பண்டம் வரும் என்ற நம்பிக்கை!

ஆனால் பண்டம் வராது! அப்பா என்ன சொல்ல முடியும்? "பிள்ளையார் சாப்ட்டாரு-ப்பா" என்று சொல்லிச் சமாளித்தார் அந்த அப்பாவிப் பிள்ளையின் அப்பா!
தும்பிக்கையால், நம்பி-கைக்கு வராமல் போனது நம்பிக்கை! :))

இன்னொன்னும் நல்லா கவனிச்சிக்கோங்க! திருநாரையூர் வேற! திருநறையூர் வேற!
அது பறவையான நாரையின் ஊர்! இது நறை=தேன், ஈக்களின் ஊர்!
முன்னது சைவத் தலம்! பின்னது விண்ணவத் தலம்!
அது சிதம்பரம் கிட்ட! இது குடந்தை-திருவாரூர் கிட்ட!
அது சம்பந்தரும் அப்பரும் பாடியது! இது திருமங்கை மன்னன் பாடியது!

திருநாரையூரில் உள்ள இறைவன் = செளந்திரநாதர் (எ) அழகப்பர்!
இறைவி = திரிபுர சுந்தரி (எ) முப்புரத்து எழிலி!
இங்கு இருக்கும் பிள்ளையாரின் பெயர் தான் பொள்ளாப் பிள்ளையார்! ஆனா இவரைப் "பொல்லாப்" பிள்ளையார்-ன்னு நம்ம மக்கள் பொல்லாதவர் ஆக்கீட்டாங்க! :))


பொள்ளுதல் = செதுக்குதல்! கல்லை உளியால் பொள்ளுவாய்ங்க! வீட்டில் கூட அம்மி பழசாயிருச்சுன்னா, ஆள் அனுப்பி அம்மியைக் கொஞ்சம் பொள்ளுவாய்ங்க!
இப்பல்லாம் மம்மியே வீட்டில் இருப்பதில்லை! அப்பறம் தானே அம்மி எல்லாம்? :)

பொள்ளாத பிள்ளையார் = உளியால் பொள்ளப்படாத பிள்ளையார்! அதாச்சும் முழுமையாகச் செதுக்கப்படாது, ஓரளவு வடிவம் மட்டுமே வடிக்கப்பட்ட பிள்ளையார்!

அதைத் தான் நம்ம தமிழ் "கூறும்" நல்லுலகம், கூறு கூறாக்கி, "பொள்ளாப்" பிள்ளையாரைப் "பொல்லாப்" பிள்ளையார்-ன்னு ஆக்கீருச்சி! நல்ல வேளை, பொல்லாதவர் என்பதுக்கு ஏதாச்சும் தல புராணக் கதை கட்டாம இருந்தாங்களே! சந்தோசம்! :)
பிள்ளையாரும் "பொல்லாத" பிள்ளையார் ஆயிட்டாரு! இவரு பண்ண ஒரே பொல்லாத செயல் = தமிழைத் தில்லைக்குள் நுழைக்க உதவியது தான்! :)) ஆகா! அப்படியா சேதி?! நாம மேக்கொண்டு கதையைப் பார்ப்போம், வாங்க!

ஒரு முறை, அப்பா வெளியூர் போக, சின்னப் பிள்ளை பூசைக்குப் போகிறான்!
பிள்ளையார் பூஜை தானே! ரொம்ப ஆச்சார அனுட்டானம் எல்லாம் இல்லையே! யாரு வேணும்-ன்னாலும் பண்ணலாமே!
அம்மா கட்டிக் கொடுத்த கொழுக்கட்டையை ரொம்ப சிரத்தையா நிவேதனம் பண்ணுது புள்ளை! இதே, நானா இருந்தாக்கா?...... லபக் லபக் :))



அப்பா இவ்வளவு நாள் சொல்லியதைக் கேட்டு, பிள்ளையார் நெசமாலுமே சாப்பிடுவாரு-ன்னு நினைச்சிக்கிட்டு, நம்பியாண்டான், பொள்ளாப் பிள்ளை கிட்ட மல்லு கட்டுது! :)
ஆனா அவரு இம்மி கூட அசையலை! பிள்ளைக்குப் பயம் வந்துருச்சி! அப்பா சொல்லிக் கொடுத்த படி, சாஸ்திரப் பிரகாரம் பூஜை பண்ணத் தவறிட்டோமோ? அதான் இப்படி ஆயிரிச்சோ? இப்போ ஊரே பார்க்க, ச்சே....நம்ம அம்மா-அப்பாவுக்குத் தானே அசிங்கம்?

பிள்ளையாரின் காலடியில் தன் தலையை வைத்து உருண்டு பிறண்டு, நம்பி தேம்பித் தேம்பி அழுகிறான்!
தனிமையில் சிந்தும் கண்ணீர் தூய்மையானது! ஆழ்ந்து அழுத ஆழ்-வார்களைப் போல ஆழமானது!

குழந்தைகள் எல்லார் முன்னாடியும் அழும் போது கூடப் பாருங்க! பலர் பார்க்க அழுகைச் சத்தம் மட்டுமே இருக்கும்! ஆனால் கண்களில் நீர் ரொம்பத் தளும்பாது! ஆனால் தனிமைக் கண்ணீரோ தனிமையானது! சத்தம் இல்லாதது! சித்தம் இரங்கியது!

* சாஸ்திரத்துக்கு வராத பிள்ளையார், கண்ணீருக்கு வருகிறார்!
* அன்று காதலுக்கு வந்த பிள்ளையார், இன்று கண்ணீருக்கு வருகிறார்!
* தும்பிக்கையால் நம்பி-கைக்கு ஆங்கே வந்தது நம்பிக்கை!

பிள்ளையார் சிலையில் தும்பிக்கை மட்டும் உயிர்ப்புடன் நிவேதனத்தை உண்ண, சிறுவன் நம்பியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! இந்தக் காலத்தில் பிள்ளையார் பால் குடித்த உடான்ஸ் கதை போல் இல்லாமல், திடப் பொருளும் உள்ளே செல்கின்றதே! இது என்ன விந்தை!

அப்பா அம்மாவிடம்......போய் சொன்ன பிள்ளையை, பொய் சொன்ன பிள்ளை என்றார்கள்! ஆனால் அப்பா மறுநாள் மறைந்திருந்து பார்க்க, தும்பிக்கை மட்டும் நீள்வதைக் கண்டார்! "சர்வ பூஜா நிபுணரான" அவருக்கு அன்று தான் நம்பிக்கையே வந்தது! கடவுள் நம்பிக்கையே வந்தது! :)



தமிழகத்தின் விடிவெள்ளி! மாமன்னன் இராஜராஜ சோழன்!
அருண்மொழி வர்மனாய் அரசுப் பட்டம் இல்லாமல் சுற்றிக் கொண்டிருந்த நேரம்! ஊரெங்கும் உத்தம சோழனின் ஆட்சி!
அது சிதம்பரத்தில் மலைநாட்டு தீட்சிதர்கள் கூட்டமாகக் குடியேறிய கால கட்டம்! உடையார்குடி என்னும் தில்லைக்குப் பக்கத்து ஊரில்! சைவ சித்தாந்த பூசைகளாக இல்லாமல், தாந்த்ரீக பூஜைகளாகச் செய்வது இவர் தம் வழக்கம்!
சைவ சித்தாந்த சிவாச்சாரியார்களான தில்லை வாழ் அந்தணர்களுடன் நயந்து சேர்ந்து கொண்டு, பின்பு தாங்கள் தான் மெய்யான தில்லை வாழ் அந்தணர்கள் என்று மாறிப் போனதாகவும் சில குறிப்புகள் வரலாற்று ஆய்வுகளில் உள்ளன!

இராஜராஜனுக்கு நெடுநாளைய ஆசை! தமிழ்த் திருமுறைகளான தேவாரங்களை ஒன்று திரட்டிப் படிக்க வேண்டும் என்று! அதன் செந்தமிழும், இசையும், சந்தமும் தான் எத்துணை இனிமை! எத்தனை கனிவு!
* வேத சப்தங்களுக்கு அதிர்வு என்றால்.....தேவாரச் சத்தங்களுக்கு அன்பு! கனிவு! குழைவு!
* வேத சப்தங்கள் மண்டையில் என்றால்.....தேவாரச் சத்தங்கள் இதயத்தில்!


ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தான் தேவாரப் பாடல்கள் கிடைக்கிறதே தவிர, முழுமையாகக் கிடைத்த பாடில்லை!
முதல் பத்தி கிடைக்கிறது! ஆனால் அடுத்த பத்தி இல்லாமல், வேறேதோ வருகிறது! இது இராஜராஜனுக்கு நெடுநாளைய உறுத்தல்!

பஞ்சவன் மாதேவி என்னும் தேவரடியார் தளிச்சேரிப் பெண்! தில்லையில் நடனம் பயில்பவள்! பின்னாளில் இராஜராஜன் மனைவியாகப் போகிறவள்! அவள் மூலமாகவே நம்பியாண்டார் நம்பியை அறிகிறான் இராஜராஜன்!

நம்பியாண்டார் நம்பியோ வளர்ந்து வாலிபனாகி விட்டார்! ஆனால் இன்றும் பொள்ளாப் பிள்ளையாரின் தும்பிக்கை அவர் தரும் உணவை மட்டும் வாங்கிக் கொள்கிறது!

நம்பியும் ஊர் ஊராகச் சென்று, கிடைக்கும் தேவாரச் சுவடிகளைத் திரட்டுவார்! அதைப் பிரதி எடுத்து, இசை அமைத்து, விருப்பம் உள்ளோர்க்கு ஆலயங்களில் படிக்கத் தருவார்! இதனால் அப்பவே தீட்சிதர்களுக்கும் நம்பிக்கும் கொஞ்சம் முட்டிக் கொண்டது! :)

அந்தப் பாடல்களுக்கு பஞ்சவன் மாதேவி ஆடவும் செய்வாள்! அவள் செய்த அறிமுகத்தால் இராஜராஜன் திருநாரையூர் வருகிறான்! மன்னன் அல்ல என்றாலும் அரச குலத்தவன் அல்லவா? படோபடங்கள் கூடவே வருகிறது!
பிள்ளையாருக்குப் பிடித்தமான பழங்கள், கரும்பு, தேன், அப்பம், அவல், பொரி, எள்ளுருண்டை ஆகியவற்றை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வருகிறான்!

நம்பியாண்டார் நம்பி அவை அத்தனையும் பொள்ளாப் பிள்ளைக்குக் காணிக்கை ஆக்குகிறார்!

இராஜராஜன் தன் நெடுநாளைய தேவாரத் தேடலைப் பற்றி அவரிடம் மனம் விட்டுப் பேசுகிறான்! அவரும் ஊர் ஊராகப் போய்த் தான் தேடியதை எல்லாம் அவனிடம் எடுத்துச் சொல்கிறார்! இருவருக்கும் நட்பு பூக்கிறது! அவன் அறியாத சில பதிகங்களையும் அவனுக்குப் பாடிக் காட்டுகிறார்! இராஜராஜன் மனம் கரைந்து போகிறான்! தேடல் தீவிரம் ஆகிறது!


அன்றிரவு நம்பிக்கும் உறக்கம் வரவில்லை! தன்னைப் போல் ஆர்வமுள்ள இன்னொருவனைக் கண்ட இன்பம்! இவ்வளவு நாள் பொள்ளாப் பிள்ளையாரிடம் தனக்கென்று எதுவும் வாய் விட்டுக் கேட்டதில்லை! அன்று கேட்டே விட்டார்!

நம்பீ......"தில்லையில், கை முத்திரை கூடிய அடையாளத்துடன் இருக்கும் ஓர் அறையில், தேவாரச் சுவடிகள் உள்ளன!"

கனவில் வந்து விழுகிறது பொள்ளா வார்த்தைகள்! பொங்குகிறது நம்பிக்கு! பொள்ளாப் பிள்ளையார் அன்று காட்டிக் கொடுத்தது தான்!
அன்று "பொள்ளாதவர்" காட்டிக் கொடுத்த வழி தான், தமிழ்ப் பதிகங்கள் அம்பலம் ஏறும் முயற்சியில், முதல் முயற்சி!

நம்பியாண்டார் நம்பி தில்லைக் கோயிலையே சுற்றிச் சுற்றி வருகிறார்! அவ்வளவு பெரிய கோயிலில் எங்கென்று போய்த் தேடுவது? அதுவும் அதிகார பலத்தை மீறி?
பல நாள் ஆலயத்தை வெறுமனே சுற்றச் சுற்ற, ஒரு நாள் கண்டே விட்டார்! ஒரு அறையில் புற்று எறும்புகள் சாரி சாரியாக ஓடுகின்றன! கணக்கில்லாமல் ஆயிரக் கணக்கில் ஓடுகின்றன! ஆகா!

பொள்ளாப் பிள்ளை சொன்ன கை முத்திரை அடையாளத்துடன் கூடிய அறை இது தானோ? அருகே சென்று ஒதுக்குப்புறமான அந்த அறையைப் பார்க்கிறார்!
அதே கை முத்திரை! - அய்யோ! புற்று எறும்புகள் ஓடுகின்றனவே!
கரையான் அரித்து விட்டதோ! வேதங்கள் எழுதாக் கிளவி என்றால் திருமுறைகள் எழுதிய கிளவி ஆயிற்றே! அதன் கதி இது தானா?

நம்பிகள், அந்த அறையைத் திறக்குமாறு தீட்சிதர்களை வேண்ட, உடனே மறுக்கப்படுகிறது! விரட்டப்படுகிறார்!
எங்கு பேச்சு நடக்கிறதோ, அது சாத்வீகமான பேச்சாக இருந்தாலும், அதான் பேச்சு-ன்னாலே பிடிக்கவே பிடிக்காதே! நம்பியாண்டார் நம்பி விரட்டப்படுகிறார்!

நம்பியாண்டார், பஞ்சவன் மாதேவிக்குச் சொல்லி, இராஜராஜனிடம் விஷயத்தைச் சொல்ல, அவன் அலறி அடித்துக் கொண்டு கிளம்பி வருகிறான்!
அவனுக்கும் மறுக்கப்படுகிறது! ஆனால் சற்றுப் பணிவாக! அரச பதவியில் இல்லையே! இருப்பினும் அரச குல வீரனைப் பகைத்துக் கொள்ள முடியுமா?

அரசன் அறையை உடைத்து உள்ளே நுழைந்தால்? அய்யோ! அது அபச்சாரம் என்றல்லவா ஆகி விடும்? நாளை ஊரில் மழை பொழியாவிட்டாலும், அதுக்கு இராஜராஜன் தான் காரணம் என்று சொல்லி விடுவார்களே!
கை முத்திரையுடன் கூடிய அடையாளத்தை முறிக்க வேண்டும் என்றால், எப்பவோ சமாதியான, தேவார மூவரே, முன் வர வேண்டும் என்று சாதுர்யம் பேசப்படுகிறது! மிகவும் "சமத்காரமான" தலைமைத் தீட்சிதர்! :)

* வேதங்களை ஒலிக்க யாக்ஞவல்கியரே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* சூத்திரங்களை விளக்க பதஞ்சலியே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* பாஷ்யத்தைப் பிரஸ்தாபிக்க சங்கரரே வர வேண்டும் என்று அதே வாய் பேசுமா?
* ஆனால் தேவார மூவர் வர வேண்டும் என்று அதே வாய் பேசியது!

தேவாரம் மூவரின் சொத்தாம்! சொத்துக்கு உரியவர் வர வேண்டும் என்று சட்டத்தைத் திட்டத்துடன், எட்ட நின்று பேசினர்!
மூவருக்கு மதிப்பு குறையக் கூடாது-ன்னு தான் இப்படிக் கெடுபிடி...என்றெல்லாம் வெல்லம் பூசிக் கள்ளம் பேசிய பான்மை!



மூவர் வந்தனரா? அறை திறந்ததா? தமிழ் பிறந்ததா?
இங்கே படித்துக் கொள்ளுங்கள்! என்னுடை நண்பன் முன்பிட்ட பதிவு!

மூவர் சிலையாகிச் சிலையாக வந்தனர்! அறை திறந்தது! சிறை திறந்தது! தமிழ் பிறந்தது! அருள் சுரந்தது!

நம்பியாண்டார் நம்பிகளின் கைவண்ணத்தில் தூசு தட்டப்பட்டு, திருமுறைகள் முதல் முறையாக வகைப்படுத்தப்பட்டன!
பதினெட்டாயிரம் பாடல்கள், முதன் முதலில் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டன!
* சம்பந்தர் = 1,2,3 = திருக்கடைக்காப்பு
* அப்பர் = 4,5,6 = தேவாரம்
* சுந்தரர் = 7 = திருப்பாட்டு

பின்னாளில் இன்னும் பல அடியவர்களின் பதிகங்களைச் சேர்த்து பன்னிரு திருமுறைகளாக வகுக்கப்பட்டன! ஆனால், ஆலயத்தில் தீட்சிதர்களே தேவாரத்தைப் பாடுவார்களா, கருவறையில்? உம்ம்ம்ம்...இராசராசனும் ரொம்ப நெருக்கவில்லை!

பிடிக்காதவர்களிடம் வற்புறுத்தி என்ன பயன்? என்று நினைத்து விட்டான் போலும்!
தேவாரத்தை ஆலயத்தில் பாட "பிடாரர்கள்" என்பவர்களைத் தனியாகவே நியமித்து விட்டான்! இவர்களே அந்நாளைய ஓதுவார்கள்!
இன்றும் ஓரமாய் இருந்து ஓதுகிறார்கள்! அம்மட்டில் மகிழ்ச்சியே! ஆனால் எங்கள் ஈசனின் கருவறைக்குள் தே-ஆரம் செல்லும் நாள் எந்த நாளோ? நாலயிரப் பாசுரம் போல், தென் தமிழ் ஓதி முன்னே வர, தென் நாடுடைய சிவன் பின் வரும் நாள் எந்த நாளோ??

இதில் வியப்பு என்னவென்றால்.....
* தொலைந்த சைவத் திருமுறைகளை மீட்டெடுத்த நம்பியாண்டார் நம்பியும் அதே ஊர் தான்!
* தொலைந்த ஆழ்வார் அருளிச் செயல்களை மீட்டெடுத்த நாதமுனிகளும் அதே ஊர் தான்!

இன்றும் தில்லையில் "திருமுறை காட்டிய விநாயகர்" என்று சின்னூண்டு சன்னிதி உண்டு! :)
இராசராசனும் "திருமுறை கண்ட சோழன்" ஆனான்! அவர் காட்டிய சோழன்! இவன் கண்ட சோழன்! திருமுறை கண்ட சோழன்!

தில்லை அம்பலத்தில்.....
தமிழை ஏற்ற.....
முதலில் வழிகாட்டிய "முதல்வன்" - பொள்ளாப் பிள்ளையார் திருவடிகளே சரணம்!
நம்பியாண்டார் நம்பிகள் திருவடிகளே சரணம்!

30 comments:

  1. அருமையான பதிவு. தெளிவான நடை. சூப்பர்

    ReplyDelete
  2. எங்கள் ஈசனின் கருவறைக்குள் தேவாரம் செல்லும் நாள் எந்த நாளோ?
    தங்கள் தமிழ் உணர்வினை மதிக்கிறேன்.

    ReplyDelete
  3. நாலுமுறை படிச்சேன், எளிதாக இருந்ததால்.

    அங்கங்கே நின்னு நிதானமா ரசிக்க நாலுமுறை பத்தாதோ!!!!

    அருமை.

    ReplyDelete
  4. நிறைவான பதிவு! இரசித்து வாசித்தேன். நன்றி!

    பாரதிதாசனின் மணக்குள விநாயகர் திருப்புகழ் (1926).

    இதுவரை சரியாக அச்சாகவில்லை.
    சீர்பிரித்தும், பதம் பிரித்தும் கொடுத்துள்ளேன்:

    http://nganesan.blogspot.com/2009/08/manakkula-ganapati.html

    நா. கணேசன்

    ReplyDelete
  5. எட்டிப்பார்த்தாச்சு!நிதானமாய் படிக்கணும்! அதற்குமுன் கொழுக்கட்டை பிடிக்கணும்!

    ReplyDelete
  6. அறிந்திராத செய்திகள்.

    அழகான படங்கள்.

    அருமையான விளக்கங்கள்.

    அற்புதம்.அற்புதம்.

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    பிள்ளையார், பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்.. http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_23.html

    ReplyDelete
  7. //ராஜா | KVR said...
    அருமையான பதிவு. தெளிவான நடை. சூப்பர்//

    வாங்க KVR!
    நன்றி! இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  8. //ஹரி ஓம் said...
    //எங்கள் ஈசனின் கருவறைக்குள் தேவாரம் செல்லும் நாள் எந்த நாளோ?//
    தங்கள் தமிழ் உணர்வினை மதிக்கிறேன்//

    :)
    கிராமத்தில் இருந்தே இது என்னுடைய நெடுநாள் கனவு-ங்க!

    அரங்கனின் கருவறைக்குள் சகஸ்ரநாமம் சொல்லப்படுவதோடு மட்டுமன்றி திருப்பல்லாண்டும் சொல்லப்படுகிறது!

    என் முருகனின் கருவறைக்குள் ஸ்கந்தார்ச்சனையோடு முருகாற்றுப்படை சொல்லப்படுமா? சொல்லப்படும் நாளை அந்தத் தமிழ்க் கடவுளே தர வேணும்!

    (இப்படியெல்லாம் ஒப்பு நோக்கிப் பார்ப்பதால், ஒரு பிறவிச் சைவன் "வைணவப்" பதிவன்-ன்னு பேரு வாங்கினாக் கூட, அதைப் பத்தியெல்லாம் கவலையில்லை! :) யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்! மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!)

    ReplyDelete
  9. //துளசி கோபால் said...
    நாலுமுறை படிச்சேன், எளிதாக இருந்ததால்//

    ஹிஹி! வாங்க டீச்சர்! யானை பிளிறி நீங்க வராம இருப்பீங்களா? :)

    //அங்கங்கே நின்னு நிதானமா ரசிக்க நாலுமுறை பத்தாதோ!!!!
    அருமை//

    நாலு முறை, நால்வருக்குப் போதாது தான்! நான்கு குரவர்களின் தமிழ் அப்படி!

    ReplyDelete
  10. //நா. கணேசன் said...
    நிறைவான பதிவு! இரசித்து வாசித்தேன். நன்றி!//

    வாங்க கணேசன் சார்! உங்களுக்குப் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சியே!

    //பாரதிதாசனின் மணக்குள விநாயகர் திருப்புகழ் (1926).
    இதுவரை சரியாக அச்சாகவில்லை.
    சீர்பிரித்தும், பதம் பிரித்தும் கொடுத்துள்ளேன்:
    //

    ஓ! படிச்சேனே! அருணகிரி ஸ்டைலில் பாவேந்தர் பாரதிதாசன் கலக்கி இருக்காரு! திடீர்-ன்னு முதல் நான்கு வரிகளை மட்டும் காட்டினா, திருப்புகழ்-ன்னே சொல்லீருவாங்க! அப்படி இருக்கு!

    ReplyDelete
  11. //ஷைலஜா said...
    எட்டிப்பார்த்தாச்சு!நிதானமாய் படிக்கணும்!//

    அதெல்லாம் அப்பறம் படிச்சிக்கலாம்-க்கா!

    //அதற்குமுன் கொழுக்கட்டை பிடிக்கணும்!//

    மொதல்ல, மொதல்ல, இதை மொதல்ல செய்யுங்க! :)
    ஒரு டஜன் கொழுக்கட்டை நியூயார்க்குக்கு பார்சேல்ல்ல்ல்!

    ReplyDelete
  12. :) romba nalla erundhadhu (vazhakkam pola) evlo information kuduakareenga appadi !!

    Adiyenukku oru chinna sandhegam, neengal dhaan theerthu vaikka vendum , pillyar suzhi mudhalla podradhu, ok - ellam nalla padiya nadakkanumnu, ana en adhukku "உ" symbol ??

    ReplyDelete
  13. //Srivats said...
    :) romba nalla erundhadhu (vazhakkam pola)//

    போச்சு! நீயும் "வழக்கம் போல" என்கிற கோஷ்டியில் சேர்ந்துட்டியா? :)

    //evlo information kuduakareenga appadi !!//

    என்னாது? குடுக்க"றீங்களா"???
    மரியாதை! மரியாதை! குடுக்க"ற"-ன்னு சொல்லணும்! :)

    //Adiyenukku oru chinna sandhegam//

    அடியேனா? நீயா? ஐயகோ! :)

    //neengal dhaan theerthu vaikka vendum//

    "நீங்களா"?
    நீ-ன்னு மரியாதையாகப் பேசணும் ஸ்ரீவத்ஸ்! என்ன இது கெட்ட பழக்கம்? :)

    //pillyar suzhi mudhalla podradhu, ok - ellam nalla padiya nadakkanumnu, ana en adhukku "உ" symbol ??//

    எங்கிருந்துப்பா இப்படி கேள்வி எல்லாம் புடிக்கறீங்க? எனக்கு கண்ணைக் கட்டுது! :))

    ReplyDelete
  14. //துபாய் ராஜா said...
    அறிந்திராத செய்திகள்.
    அழகான படங்கள்.
    அருமையான விளக்கங்கள்.
    அற்புதம்.அற்புதம்.//

    :)
    நன்றி துபாய் ராஜா! கொழுக்கட்டை சாப்டீங்களா?
    எவ்ளோ பெரிய பிள்ளையார் என்சைக்ளோபீடியா பதிவைப் போட்டிருக்கீயளே! கொழுக்கட்டை சாப்பிட நேரம் இருந்துச்சா உங்களுக்கு? :))

    ReplyDelete
  15. நம்பியாண்டார் நம்பி மற்றும் ராஜராஜ சோழனால் தான் திருமுறைகள் கிடைத்தன என்றும் தெரியும்.. நடுவில் அமைதியா பிடிச்சு வைச்ச பிள்ளையாராட்டம் ஒருத்தர் பார்த்த வேலை இன்னைக்கு தானே தெரியுது.. முக்குறுணி விநாயகனை வாழ்த்தி வணங்கிவிட்டு வந்ததால் இங்கு வரத்தாமதம் ஆகிவிட்டது.. :)

    ReplyDelete
  16. //Raghav said...
    நம்பியாண்டார் நம்பி மற்றும் ராஜராஜ சோழனால் தான் திருமுறைகள் கிடைத்தன என்றும் தெரியும்..//

    அதுவே கற்பனை-ன்னு சொல்றவங்களும் உண்டு! :)

    ஆனால் உமாபதி சிவம் என்ற தீட்சிதர் ஒருவரே உண்மையை எழுதி வச்சிட்டுப் போயிட்டார்! :) இதுக்காக அவரு வாங்கிக் கட்டிக்கிட்டது தனிக் கதை! :)

    உமாபதி சிவம் சந்தான குரவர்கள் நால்வரில் ஒருவர்! உயர்ந்த அந்தணர்! சிறந்த மகான்!

    //நடுவில் அமைதியா பிடிச்சு வைச்ச பிள்ளையாராட்டம் ஒருத்தர் பார்த்த வேலை இன்னைக்கு தானே தெரியுது..//

    ஹிஹி! அதுக்காக பிள்ளையார் கிட்டக்க எல்லாம் நம்ம வலையுலகப் பெரியவர்கள் கோச்சிக்க முடியுமா என்ன? :))

    //முக்குறுணி விநாயகனை வாழ்த்தி வணங்கிவிட்டு வந்ததால் இங்கு வரத்தாமதம் ஆகிவிட்டது.. :)//

    மதுரைக்கு முக்குறுணி விநாயகரைப் பாக்க மட்டுமேவா போனீக ராகவ்? :))

    ReplyDelete
  17. @Srivats
    //aana en adhukku "உ" symbol ??//

    Sri,
    Ganesha is more a geometrical and philosophical figurine in spirituality. Forgetting all other "so called" stories being spun around him...
    This "உ" symbol is considered to be Life's "Infinite Divisibility"!

    * It starts with a full circle = Ideal State of a soul
    * It curves around = Bending to life's deviations (Technically called "Spherical Aberration")
    * It subsides to a straight line at the bottom = Flatness at the end
    * And a dot is placed at the top = A plain single dot!!!

    Full Circle->Curvature->Linear->Dot!
    n-dimension->3d->2d->1d

    Thirumuruga Vaariar Swamigal will explain this on a different basis very very aptly (may be in youtube, search for it, sooooo good). He will relate it to formation of alphabets in any language.

    Though "உ" looks like Tamizh, it is not only written by tamizh people but also by many. Many alphabets in many languages evolve letters like this only. Circle, Curve, Line, Dot!

    Datz why this symbol is treated with grandeur in Yoga, Dhyana & Saadhana and spelt as "u" (as in us)

    And my thozhi Kothai talks abt this as "ugaaram"- The DNA!
    "ugaaram" is the center piece of "a-u-m" and defines the relationship like in a DNA strain!...and whatz that relationship? = here!

    I guess this primitive explanation should suffice, Sri! Naane everytime cholla koochamaa irunthuchi! Wait panni paathen! Yaarum chollala! So broke the ice for you :) Cheers :))

    ReplyDelete
  18. ரவி,
    ராகவ் என்னோட கோஷ்டின்னு முன்னாடி சொன்னதாலே ஒரு சின்ன தகவல் சொல்லிக்கறேன். ;-)
    ராகவ்,
    கீழே "ஓம் நமோ...." பதிவில் குமரனும் ரவியும் நிறைய பேசி இருக்காங்க, பார்த்தியா? உனக்கு முன்னாடி தோணின கேள்விக்கெல்லாம் பதில் தெரிஞ்சுக்கலாம். இல்லைனா இன்னும் நிறைய கேள்விகள் கேட்கலாம். :-)
    ~
    ராதா

    ReplyDelete
  19. //Radha said...
    ராகவ்,
    கீழே "ஓம் நமோ...." பதிவில் குமரனும் ரவியும் நிறைய பேசி இருக்காங்க, பார்த்தியா? உனக்கு முன்னாடி தோணின கேள்விக்கெல்லாம் பதில் தெரிஞ்சுக்கலாம். இல்லைனா இன்னும் நிறைய கேள்விகள் கேட்கலாம். :-)//

    யோவ் ராதா :))))
    நீரு எதுக்குய்யா சும்மா கெடக்குற பாஞ்ச சன்னியத்தை ஊதறீரு?
    எனக்கு ராகவ்-ன்னாலே பயம்! இதுல நீர் வேறயா?

    ராதா-ங்கிற பேருக்கு முன்னாடி ஒரு "நா" போட்டுக்குங்க! :))

    ReplyDelete
  20. appadi ennma erukku explanationm,onnu purila nee enga varum podhu kettukaren

    //என்னாது? குடுக்க"றீங்களா"???
    மரியாதை! மரியாதை! குடுக்க"ற"-ன்னு சொல்லணும்! :)
    //

    Sarida ,ok vada - double da :P

    ReplyDelete
  21. //Radha said...
    ராகவ்,
    கீழே "ஓம் நமோ...." பதிவில் குமரனும் ரவியும் நிறைய பேசி இருக்காங்க, பார்த்தியா? உனக்கு முன்னாடி தோணின கேள்விக்கெல்லாம் பதில் தெரிஞ்சுக்கலாம். இல்லைனா இன்னும் நிறைய கேள்விகள் கேட்கலாம். :-)//

    குருவே சரணம் !

    கேள்விகள் தயாரா இருக்கு.. அதை அவர் பதிவாகவே போடணும்னு நினைக்கிறேன்.. :).. கொஞ்சமாவது புரிஞ்சுகிட்டு கேள்விகளை கேட்கிறேன் :)

    ReplyDelete
  22. //Raghav said...
    குருவே சரணம் !//

    குமர-குருவே சரணம்-ன்னு சொல்லுங்க! :)

    //கேள்விகள் தயாரா இருக்கு.. அதை அவர் பதிவாகவே போடணும்னு நினைக்கிறேன்.. :)..//

    எங்கிருந்துய்யா இப்படி க்ரூப் க்ரூப்பா கெளம்பி வரீங்க? :)
    எல்லாம் இந்த "நா-ராதா" கெளப்பி விடுறது! :)

    யப்பா ராகவ், அந்தக் கேள்விகளை எல்லாம் பைண்டிங் பண்ணி, பிறைமகுடன் அண்ணா கிட்ட குடுப்பா! உனக்கு நல்ல பதிலா கெடைக்கும்! :)

    ReplyDelete
  23. விஷ்வக்சேனரான சேனை முதலியார் தான் கஜமுகர்/விக்னேசர்/தும்பிக்கையாழ்வார் எனப்படும் நித்யரா என்பதில் எனக்கு ஐயம் இரவி. விஷ்வக்சேனரின் படைத்தலைவர்களில் ஒருவர் தான் விக்னேசர் எனப்படும் தும்பிக்கையாழ்வார் என்றும் இவரும் பிள்ளையாரும் வெவ்வேறு தெய்வங்கள் என்றும் படித்த நினைவு.

    நீங்கள் சொல்வதைப் படித்தால் சிலர் 'பிள்ளையாருக்கு நாமத்தைப் போட்டு தும்பிக்கையாழ்வார்ன்னு ஆக்கிட்டாங்க வெறி பிடித்த வைணவர்கள்' என்று தாங்கள் அறியாமலும் புரியாமலும் சொல்லிவரும் அவதூறு உண்மை என்று எண்ணிக் கொள்வார்களே!

    //அது சிதம்பரத்தில் மலைநாட்டு தீட்சிதர்கள் குடியேறிய கால கட்டம்! சைவ சித்தாந்த சிவாச்சாரியார்களான தில்லை வாழ் அந்தணர்களுடன் நயந்து சேர்ந்து கொண்டு, பின்பு தீட்சிதர்கள் தான் மெய்யான தில்லை வாழ் அந்தணர்கள் என்று மாறிப் போன கால கட்டம்!//

    இது என்னவோ அவதூறாகத் தோன்றுகிறது இரவி. இந்த வரிகளுக்கு மறுக்க இயலாத தரவுகளும் சான்றுகளும் (இரண்டுமே ஒன்று தானோ? :-) ) உங்களிடம் கட்டாயம் இருக்கும்; அதனால் தான் தயக்கமே இன்றி இப்படி எழுதியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அவற்றைச் சொல்ல முடியுமா இரவி?

    ***
    இராகவன் ஏற்கனவே எழுதிவிட்டாரே. அதே நிகழ்வை (கதையை? :-) ) இவரும் எழுதினால் என் குரங்கு மனது 'அது இனிமையா இது இனிமையா' என்று துலா பிடிக்குமே என்று பயந்து கொண்டே படித்தேன். காப்பாற்றிவிட்டீர்கள். முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றைச் சொல்லி சரியான நேரத்தில் இராகவனின் இடுகைக்குச் சுட்டியைத் தந்தீர்கள்.

    ReplyDelete
  24. என்ன குமரன்,
    கொழுக்கட்டை எல்லாம் எப்பவோ தீர்ந்து போன பிறகு பிள்ளையார் பதிவுக்கு வந்திருக்கீங்க? :)

    //குமரன் (Kumaran) said...
    இராகவன் ஏற்கனவே எழுதிவிட்டாரே. அதே நிகழ்வை (கதையை? :-) )//

    எங்க இராகவனுக்கே உள்குத்தா? :)
    இது நிகழ்வு தான்! கதை இல்லை!
    இந்த நிகழ்வைச் சந்தான குரவருள் ஒருவரான உமாபதி சிவம் என்ற தீட்சிதரே எழுதி வைத்துள்ளார்! :)

    //இவரும் எழுதினால் என் குரங்கு மனது 'அது இனிமையா இது இனிமையா' என்று துலா பிடிக்குமே என்று பயந்து கொண்டே படித்தேன்//

    இதில் என்ன சந்தேகம்?
    "இனியது கேட்கின்" யாருதோ, அவங்களது தான் இனியது! :)

    //விஷ்வக்சேனரான சேனை முதலியார் தான் கஜமுகர்/விக்னேசர்/தும்பிக்கையாழ்வார் எனப்படும் நித்யரா என்பதில் எனக்கு ஐயம் இரவி.//

    நான் விஷ்வக்சேனர் = பிள்ளையார்-ன்னு சொல்லவே இல்லையே குமரன்!

    ***"தும்பிக்கை ஆழ்வார்" பற்றிப் பேசுவார்கள்! :)
    "கஜமுகர்" என்னும் விஷ்வக்சேனர் அம்சமாய் பிள்ளையார் அங்கும் உண்டு!*** என்று தானே சொல்லியுள்ளேன்?

    விஷ்வக்சேனர் = பெருமாளைப் போலவே உருவம்! சங்கு சக்கரமும் கொண்டு இருப்பவர்! நீல மேனி தான் கிடையாது! அவருக்கு யானை முகம் இல்லை!
    விஷ்வக்சேனரின் அம்சமாய், அவருடைய படைகளில் கணங் காப்பது, கஜமுகர் என்பவர்!
    இப்படி யானைமுகர் அங்கும் உண்டு என்று தானே பதிவில் சொல்லி உள்ளேன்?

    ReplyDelete
  25. @குமரன்
    //அது சிதம்பரத்தில் மலைநாட்டு தீட்சிதர்கள் குடியேறிய கால கட்டம்! சைவ சித்தாந்த சிவாச்சாரியார்களான தில்லை வாழ் அந்தணர்களுடன் நயந்து சேர்ந்து கொண்டு, பின்பு தீட்சிதர்கள் தான் மெய்யான தில்லை வாழ் அந்தணர்கள் என்று மாறிப் போன கால கட்டம்!//

    இது என்னவோ அவதூறாகத் தோன்றுகிறது இரவி//

    ஹா ஹா ஹா!
    எனக்கு அவதூறு செய்து பழக்கமில்லை குமரன்!
    பொய்யாகச் சொல்ல மாட்டேன்! பிழை என்று சொன்னால் திருத்திக் கொள்கிறேன்!

    //இந்த வரிகளுக்கு மறுக்க இயலாத தரவுகளும் சான்றுகளும் (இரண்டுமே ஒன்று தானோ? :-) ) உங்களிடம் கட்டாயம் இருக்கும்; அதனால் தான் தயக்கமே இன்றி இப்படி எழுதியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அவற்றைச் சொல்ல முடியுமா இரவி?//

    ஹா ஹா ஹா
    அது எப்படி அவ்வளவு நம்பிக்கையாச் சொல்றீங்க? சும்மா போகிற போக்கில் அடியேன் அடிச்சி விட்டுட்டும் போயிருக்கலாம் அல்லவா? :)

    சரி, இப்போ வேறு மாதிரி கேட்கிறேன்! எதை வைத்து தீட்சிதர்கள் = தில்லை வாழ் அந்தணர்கள் என்று சொல்லப்படுகிறது/சொல்கிறீர்கள்? :)
    அதற்கு ஏதேனும் மறுக்க இயலாத சான்றோ/தரவோ இருக்கா? அறியக் கிடைக்குமா?

    அட, பின்ன எத்தினி நாளுக்குத் தான் நான் மட்டும் தரவு கொடுத்துக்கிட்டு இருப்பது? Opposition Party-உம் இனி தரவு கொடுக்கட்டும்! :)

    ஹைய்யா, நானும் இனி கேள்விகள் மட்டுமே கேட்கப் போறேன்!

    ReplyDelete
  26. @குமரன்
    மேலோட்டமாச் சொல்லுறேன் குமரன்! விரிச்சி தரவுகளோடு சொன்னா, அப்பறம் "சில பேரோட கோபம், மனக்கசப்பு" எல்லாம் சம்பாரிச்சிக்க வேண்டி வரும்! :)
    வேறு ஒரு சமயம், இது பற்றிய முழுமையான ஆய்வினைப் பார்க்கலாம்! கீதாம்மா போன்ற தில்லைக் கோவிலை அதிகம் அறிந்த பதிவர்கள், மற்றும் வரலாறு.காம் ஆசிரியர்கள் இவர்கள் எல்லாரின் உதவியைப் பெற்ற ஆய்வாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்!

    இன்னொன்னும் சொல்லிக்க விரும்பறேன்! எனக்கு தீட்சிதர்கள் மேல் தனியான விருப்பு வெறுப்பும் எதுவும் கிடையாது! சொல்லப் போனா மகான் அப்பைய தீட்சிதர் பற்றியெல்லாம் நானே பதிவு போட்டிருக்கேன்!

    Here are the Bullet Points
    1. இப்போது தில்லையில் சிவாகம முறை வழிபாடு அல்ல! பதஞ்சலி வழியில் வழிபாடே!
    ஆனால் சம்பந்தர் வேத, வேதாங்க முறை வழிபாடுகளாகத் தான் தில்லை வாழ் அந்தணரைக் காட்டுகிறாரே - எப்படி?

    2. மாலிக் காபூர் படையெடுப்பின் போது, தில்லை நடராஜப் பெருமான் சிலையினை, தீட்சிதர்கள் மலைநாடான கேரளத்துக்கு எதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்? எத்தனையோ தப்பிக்கும் இடம் இருக்க, எதற்கு யாருமே செய்யாத வண்ணம், எதிர் கடற்கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்?

    3. தில்லைக்கு அருகில் உடையார்குடி என்னும் ஊர்! அங்கு உத்தம சோழன் காலத்தில், எதற்கு கேரளத்தில் இருந்து 500 கேரள அந்தணர்களைத் திடீர் என்று குடி பெயர்த்த வேண்டும்? சோழ நாட்டில் இல்லாத சைவ சித்தாந்த அந்தணப் பெருமக்களா?

    4. வழிபாடுகளில் பெரும்பாலும் கேரள தாந்த்ரீகமாகவே இருப்பது ஏன்? தமிழகச் சிவாலயங்களில் எந்தக் கருவறை முன்னும் தினமுமே ஹோமம் செய்ய மாட்டார்களே? இங்கு ஏன்?

    தெக்கத்திப் பக்கம் சுசீந்திரம், திருச்செந்தூர் இங்கெல்லாம் செய்கிறார்கள் என்றால் அது கேரள தாந்த்ரீகம் என்று வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்கள்! இங்கு ஒப்ப வில்லையே!

    5. கேரள ஆலய ஸ்ரீவெளி போல், சின்னூண்டு ரத்தின நடராஜர் (ரத்ன சபாபதி), சின்னூண்டு ஸ்படிக லிங்க பூஜைகள் ஏன்? தில்லை அக்கம் பக்கத்து ஏரியா சிவன் கோயில்கள் எதிலும் இப்படி இல்லையே?

    நடராஜர் வழிபாடு வேறு மாதிரியானது, அதைத் தீட்சிதர்கள் தான் செய்யணும் என்றால்...காஞ்சி மஹா ஸ்வாமிகள், உத்தர சிதம்பரம் ஆலயம் எடுப்பித்தாரே, சத்தாரா என்னும் இடத்தில் (கோலாப்பூர், மகாராஷ்ட்ரா அருகே)! அங்கு தீட்சிதர்களோ, இப்படியான முறைகளோ இல்லையே!

    இன்னும் பல கேள்விகள்!
    சம்பந்தர் காட்டும் தில்லை வாழ் அந்தணர் முறைமையும், தீட்சிதர்கள் முறைமையும் சற்று மாறித் தான் காணப்படுகிறது!

    நடன காசிநாதன், என்.சேதுராமன், குடவாயில் பாலசுப்ரமணியன் போன்றோரின் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தால், இன்னும் சில விடைகள் கிடைக்கும்-ன்னு நினைக்கிறேன்!

    ReplyDelete
  27. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மாதிரி சிதம்பரத்தில் தமிழை மீட்ட பொள்ளாப்பிள்ளையார்ன்னு தலைப்பு இருந்திருக்கணும்ன்னு தோணுது. :-)

    ReplyDelete
  28. பிள்ளையாரைப் பத்தி படிக்கிறதுக்கு நாள் நட்சத்திரம் பாக்கணுமா என்ன? கொழுக்கட்டை தீர்ந்தாலும் பரவாயில்லை நேரம் கிடைக்கறப்ப படிக்கலாம்ன்னு தான். :-)

    உமாபதி சிவம் தீட்சிதர் என்ன எழுதியிருக்காருன்னு சொல்லுங்க இரவி.

    மொழியின் குறையா என் புரிதல் குறையா எழுதிய முறையின் குறையான்னு தெரியலை இரவி. நீங்க எழுதியிருக்கிற சொற்றொடரைப் படித்தால் விஷ்வக்சேனர் = பிள்ளையார் என்றும் அங்கே இருப்பவரும் பிள்ளையார் தான் என்றும் சொல்வதாகத் தான் தோன்றுகிறது.

    குலசேகராழ்வார் பாடும் திருச்சித்ரகூடப் பாசுரங்களில் சொல்லப்படும் தில்லை மூவாயிரத்தார் யார் இரவி? அவர்களும் சைவ சித்தாந்த சிவாச்சாரியர்கள் தானா? அந்த சைவ சித்தாந்த சிவாச்சாரியார்கள் திருச்சித்ரகூடப் பெருமாளையும் பணிந்தார்களா? இல்லையெனில் குலசேகரர் பாசுரங்கள் அப்படி சொல்வதேன்?

    சைவ சித்தாந்தம் உருப்பெற்றது ஆழ்வார் காலத்திற்குப் பின்னரா முன்னரா? உமாபதி சிவம் என்னும் தீட்சிதர் மலை நாட்டவரா சைவ சித்தாந்தியா? இன்றைக்கு தீட்சிதர்கள் மட்டுமே தான் தில்லையில் இருக்கிறார்களா? சைவ சித்தாந்திகளான சிவாச்சாரியர்கள் இல்லையா? குலசேகரர் பாடும் தில்லை மூவாயிரத்தார் யார்?

    மாலிக் காபூர் / முஸ்லீம் படையெடுப்புகளின் போது மலை நாட்டிற்கு நடராஜப் பெருமானை எழுந்தருளிச் சென்றதற்காக தீட்சிதர்கள் மலைநாட்டார் என்று எப்படி சொல்ல இயலும்? ஊகம் தானே செய்ய இயலும்? உறுதியாகச் சொல்ல முடியுமா? திருவரங்கன் வடக்கும் தெற்குமாகச் சென்ற போது இவர்கள் மேற்கும் கிழக்குமாகச் சென்றிருக்கலாமே?! இவர்களும் வடக்கும் தெற்குமாகத் தான் செல்ல வேண்டும் என்று என்ன கட்டாயம்?

    சோழர் காலத்தில் மலை நாட்டு அந்தணர்கள் மட்டும் தான் குடியேறினார்களா? வடமரும் குடியேறினார்களே? சோழ நாட்டில் இல்லாத அந்தணர் தொகையா? ஏன் வடமரை வருந்தி அழைக்க வேண்டும்?

    எனக்கும் இப்படி நிறைய கேள்விகள் தான் இருக்கின்றன இரவி. இவ்வளவு கேள்விகளை வைத்துக் கொண்டு எப்படி இவ்வளவு உறுதியாக 'வந்து நயந்து கொண்டனர்; பின்னர் மாற்றிக் கொண்டனர்' என்று அறுதியிட்டுக் கூற இயலும்?

    வரலாற்றுக் கேள்விகளில் எப்போதுமே இந்த நிலை உண்டு. தில்லையந்தணர்களைப் பற்றி மட்டும் இல்லை - எதைப் பற்றியதாகவும் இருக்கலாம் - அதில் இந்த நிலை உண்டு. நாம் எதனைப் பார்க்க விரும்புகிறோமோ அதற்குத் தகுந்த தரவுகளைக் கண்டு கொள்வோம். எனக்கு என்னவோ இன்னும் ஆய்வுகள் நடக்க வேண்டியிருக்கின்றன; அதற்குள் அவக்கரப்பட்டு இறுதி முடிவாக இப்படி சொல்ல இயலாது என்று தோன்றுகிறது. அதனால் தான் அதனை அவதூறு என்றேன்.

    ReplyDelete
  29. //குமரன் (Kumaran) said...
    உமாபதி சிவம் தீட்சிதர் என்ன எழுதியிருக்காருன்னு சொல்லுங்க இரவி//

    இராஜராஜன் திருமுறைகளை மீட்ட நிகழ்ச்சி உண்மையே என்று அவர் எழுதிய திருமுறை கண்ட புராணத்தில் காணலாம்!

    //நீங்க எழுதியிருக்கிற சொற்றொடரைப் படித்தால் விஷ்வக்சேனர் = பிள்ளையார் என்றும் அங்கே இருப்பவரும் பிள்ளையார் தான் என்றும் சொல்வதாகத் தான் தோன்றுகிறது//

    :)
    **விஷ்வக்சேன கணங்களில் ஒருவராய், கஜமுகர் என்னும் கணநாதரும் அங்கு உண்டு!** என்று பதிவில் மாற்றி விடுகிறேன்! இது பொருந்தி வருகிறதா?

    //குலசேகராழ்வார் பாடும் திருச்சித்ரகூடப் பாசுரங்களில் சொல்லப்படும் தில்லை மூவாயிரத்தார் யார் இரவி?//

    அவர் தில்லை மூவாயிரவர் என்று பொதுவாகத் தான் குறிப்பிடுகிறாரே ஒழிய...தீட்சிதர்கள் என்று குறிப்பிடவில்லை! மூவாயிரவரே திருச்சித்ர கூடப் பெருமாளுக்கும் பணி புரிந்ததைப் பாடுகிறார்!

    தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
    அந்தணர்கள் ஒரு மூவா யிரவர் ஏத்த
    அணிமணி ஆசனத்திருந்த வம்மான் றானே

    சரி, இந்த தீட்சிதர் என்ற சொல் எங்குமே சைவ நூற்களிலோ, பிற சமய நூற்களிலோ காணப்படவில்லையே! எல்லா இடங்களிலும் தில்லை வாழ் அந்தணர் என்றே குறிக்கிறார்கள்!
    எப்போது தில்லை வாழ் அந்தணர் என்ற சொல் மறைந்து, இப்போது புழங்கும் தீட்சிதர் என்ற பெயர் இவர்களுக்கு வந்தது? யாரேனும் அறியத் தாருங்களேன்!

    //இன்றைக்கு தீட்சிதர்கள் மட்டுமே தான் தில்லையில் இருக்கிறார்களா? சைவ சித்தாந்திகளான சிவாச்சாரியர்கள் இல்லையா?//

    தில்லைக் கோயில், உப சன்னிதிகள் முழுதும் தீட்சிதர்கள் மட்டுமே!
    பெருமாள் கோயிலில் தீட்சிதர்கள் அல்லாத பட்டர்கள்!

    //திருவரங்கன் வடக்கும் தெற்குமாகச் சென்ற போது இவர்கள் மேற்கும் கிழக்குமாகச் சென்றிருக்கலாமே?! இவர்களும் வடக்கும் தெற்குமாகத் தான் செல்ல வேண்டும் என்று என்ன கட்டாயம்?//

    திருச்சிக்கு கீழேயும் மேலேயும் அரங்கன் சென்றான். எடுத்து செல்லும் ஆட்களின் புகலிடம் பொறுத்து அது!
    அப்படிப் பார்த்தால் தீட்சிதர்களின் பாதுகாப்பான புகலிடம் மலைநாட்டுக் கேரளம் அல்லவா?

    சரியான புகலிடம் இன்றி அரங்கன் மதுரை, திருப்பதி என்று ஊர் ஊராகச் சுற்ற வேண்டி இருந்தது!
    இங்கு சுற்ற வேண்டிய அவசியமே இல்லாமல், கேரளம் மட்டுமே தானே? அதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்! இது ஒரு வரலாற்றுப் பார்வை தான்! குறை கூறும் பார்வை அல்ல!

    //சோழர் காலத்தில் மலை நாட்டு அந்தணர்கள் மட்டும் தான் குடியேறினார்களா? வடமரும் குடியேறினார்களே? சோழ நாட்டில் இல்லாத அந்தணர் தொகையா? ஏன் வடமரை வருந்தி அழைக்க வேண்டும்?//

    உத்தம சோழன் காலத்தில் தில்லைக்கென்றே வரவழைக்கப்பட்டு, உடையார்குடியில் குடி அமர்த்தப்பட்ட சேரளர்கள் நிலை வேறு!
    வடமர்கள் ஒரு குறிப்பிட்ட ஆலயத்துக்காக குடி அமர்த்தப்படவில்லையே?

    //இவ்வளவு கேள்விகளை வைத்துக் கொண்டு எப்படி இவ்வளவு உறுதியாக 'வந்து நயந்து கொண்டனர்; பின்னர் மாற்றிக் கொண்டனர்' என்று அறுதியிட்டுக் கூற இயலும்?//

    உறுதியாகச் சொல்லவில்லை...
    சரி, இதையும் பதிவில் மாற்றி, இப்படியும் ஆய்வுகள் உண்டு என்று குறித்து வைக்கிறேன்! சரி தானே குமரன்?

    ReplyDelete
  30. திரு கன்னபிரான், நீங்கள் வேரு ஏதேனும் தொழில் சைகிரீர்கலா?
    எப்படி உங்களால் இத்தனை பதிஉகள் சைய்ய முடிகிரது ?
    எப்படியோ, எங்கலுக்கு கொண்டாட்டம் தான். வாழ்க நீடீழி !

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP